கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 3 நிமிட வாசிப்பு

மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்

சமஸ் | Samas
30 Apr 2024, 5:00 am
0

நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். 

பிரதமர் நரேந்திர மோடி 2024 தேர்தல் பிரச்சாரத்தில் எடுத்துள்ள அவதாரம் அவருடைய ஆதரவாளர்களிலேயே ஏராளமானோரை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இந்துத்துவத்தின் அடிப்படையில் மோடியை ஆதரிப்பதற்கு இணையாக வளர்ச்சி, நிர்வாகத்தின் பெயரால் அவரை ஆதரிக்கும் பெரும் கூட்டம் உண்டு.

தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் பாஜகவின் பத்தாண்டு ஆட்சிக் காலப் பணிகளை முன்வைத்து முன்பு பேசிக்கொண்டிருந்தவர், திடீரென்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பக்கம் இப்போது திரும்பியிருக்கிறார். சமத்துவம் என்ற பெயரில் காங்கிரஸ் கையில் வைத்திருக்கும் திட்டம் அபாயகரமானது என்பதே மோடி பேச்சின் மையம். “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்களுடைய செல்வம், சொத்து, வீடுகள், கடைகள், நிலங்கள் எல்லாமும் உங்களைவிட்டு போய்விடும்… பழங்குடிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைக் குறைத்து, மத அடிப்படையில் 15% இடஒதுக்கீட்டை அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது” என்று திரும்பத் திரும்பப் பேசுகிறார்.

மக்கள் இடையே பிளவை உண்டாக்கும் வகையிலும், எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இல்லாத கதைகளையெல்லாம் இட்டுக்கட்டி பதவியில் உள்ள ஒரு பிரதமர் பேசுவதும் இந்தியாவைத் தாண்டியும் அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

2002 முதலாக இதுதான் மோடியின் தேர்தல் வரலாறு என்றாலும், நாளுக்கு நாள் தன்னுடைய பிம்பத்தை மாற்றிக்கொண்டேவந்த மோடி இப்போது மீண்டும் தன்னுடைய பழைய பாதைக்கே திரும்பிவிட்டிருப்பதை அவருடைய பேச்சு உணர்த்துகிறது. மோடி ஏன் இப்படி பேசுகிறார், தேர்தல் தோல்வி பயம் அவருக்கு வந்துவிட்டதா என்றெல்லாம் விவாதிப்பதைவிடவும், இந்தியத் தேர்தல் களம் இன்று எவ்வளவு கீழே தரம் இறக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவுகூர்வது இன்று  பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!

ப.சிதம்பரம் 29 Apr 2024

நெறியை உடைக்கிறதா தேர்தல்?

தவிர்க்கவே முடியாமல் நாட்டின் முதல் பிரதமரான நேருவின் நினைவு இப்போது வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் மூன்று தேர்தல்களை காங்கிரஸின் தளகர்த்தராக நின்று நேரு எதிர்கொண்டார்.

முதல் தேர்தலில் ஏகோபித்த செல்வாக்கு நேருவுக்கு இருந்தது. மூன்றாவது தேர்தலில் அப்படி இல்லை. கட்சிக்குள்ளேயே அதிருப்திக் குரல்கள் உருவாகியிருந்தன. தேர்தல் பிரச்சாரத்தில் கடும் விமர்சனங்களை நேரு எதிர்கொண்டார். சுதந்திரா கட்சியைக் கட்டியிருந்த ராஜாஜி, நேருவுக்குத் தீவிரமான விமர்சகர் ஆகியிருந்தார். ஒருகாலத்தில் காங்கிரஸின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் ஒருவராக அவரால் பார்க்கப்பட்ட ராம் மனோகர் லோகியாவைத் தன்னுடைய சொந்த தொகுதியான புல்பூரில் நேரு எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 

எப்படியும் நேருவும் காங்கிரஸும் வென்றார்கள். 1962 தேர்தலில் 44.72% ஓட்டுகளுடன் 361 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற நேரு, நாடாளுமன்றத்தில் மிகுந்த கவலையோடு குறிப்பிட்டார், “சாதியப் போக்கு, மதவியப் போக்கு, நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் போக்கு… இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தில் எல்லாமே வெளிப்பட்டன. தேர்தல் என்று வந்துவிட்டாலே நம்முடைய சிந்தனை கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது… எல்லோருடைய சிந்தனையிலுமே ஏதோ தவறு நிகழ்ந்துவருவதாகக் கருதுகிறேன்!”

அனைவருக்குமான உரிமை

மூன்று தேர்தல்களிலுமே நாட்டுக்குத் தேர்தல் ஜனநாயகத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் பொறுப்போடுதான் நேரு அணுகினார் என்று சொல்ல முடியும். 

பல மேலை நாடுகளைப் போன்று அல்லாமல், சுதந்திர இந்தியா வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். “பணம் படைத்தோருக்கும் படித்தவர்களுக்கும்  மட்டுமே வாக்குரிமை; எழுத்தறிவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஓட்டு கிடையாது என்ற சிந்தனையையே என்னால் தாங்கிக்கொள்ள முடியாது!” என்று ‘யங் இந்தியா’ இதழில் 1931இல் எழுதினார் காந்தி.

நேருவும் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை 1930கள் முதலாகவே பேசிவந்தார். ஆனால், 1951இல் முதல் தேர்தலை எதிர்கொண்டபோது சூழல் இந்தச் சிந்தனைக்கு எவ்வளவு எதிராக இருந்தது என்பதை வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பல சந்தர்ப்பங்களில் எழுதியுள்ளார்.

உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் - 17 கோடி பேர் - அதன் அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்தத் தேர்தலின் மூலம் பெறவிருந்தனர். அவர்களில் 80% பேர் எழுத்தறிவற்றவர்கள். வெறும் 14% பேர் மட்டுமே இதற்கு முன் தேர்தல் அனுபவத்தைப் பெற்றிருந்தனர்.

பிரிட்டிஷார் முன்னதாக நடத்திய தேர்தல்களில் வரி செலுத்தக்கூடிய செல்வந்தர்களும், படித்தவர்களும் மட்டுமே வாக்குரிமையைப் பெற்றிருந்தனர். தவிர, தொகுதிகள், வேட்பாளர்கள், வாக்காளர்களை மதத்தின் அடிப்படையில் பிரிட்டிஷார் பகுத்திருந்தனர். உதாரணமாக, முஸ்லிம்களுக்கான தொகுதியில் முஸ்லிம்களே வேட்பாளராக நிற்பார்கள்; முஸ்லிம் வாக்காளர்களே வாக்களிப்பார்கள். மக்களைப் பிரிப்பதாக இந்தத் தேர்தல் ஏற்பாடு இருந்தது. சுதந்திர இந்தியாவின் தேர்தல் மக்களை இணைப்பதாக இருக்க வேண்டும் என்று நேரு விரும்பினார்.

புதிய நாட்டின் சவால்கள்

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக சுதந்திர  இந்தியாவின் இந்தப் பார்வை தீவிரமான விமர்சனங்களை எதிர்கொண்டது. படிப்படியாக மக்களைத் தயார்படுத்துவதற்குப் பதிலாக இப்படி எல்லோருக்குமாகத் திறந்துவிடுவது முதிர்ச்சியற்ற முடிவு என்றார்கள்.

ஜனநாயகத்தின் பெருமை பேசுவோர் அடிக்கடி சுட்டும் பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த பிரான்ஸே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை 1944இல்தான் கொடுத்தது என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். மாறாக, எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமையை அளித்த இந்தியாவின் முடிவை நியாயப்படுத்த நேரு அதிகமாகவே உழைக்க வேண்டியிருந்தது.

பிரிவினைத் துயரத்தின் ஊடாகப் பல லட்சம் உயிர்களைப் பறிகொடுத்தே புதிய நாடு பிறந்திருந்தது; சாதியவாதம், மதவாதம், பிராந்தியவாதக் குரல்கள் மேலோங்கியிருந்த காலம் அது என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

ஜனநாயக ஆசிரியர் நேரு

பஞ்சாபின் லூதியானாவில் தனது முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்த நேரு, “வகுப்புவாதத்திற்கு எதிரான முழுமையான போர்” என்பதையே தேர்தல் அறைகூவலாக விடுத்தார். வகுப்புவாதமானது நாட்டுக்கு அழிவையே கொண்டுவரும் என்றார். “மனதின் ஜன்னல்களை மக்கள் திறந்துவைத்திருக்க வேண்டும்; உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் புதிய காற்றைப் பெற தயாராக இருக்க வேண்டும்” என்று வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். 

நேருவின் தேர்தல் உரைகளை வாசிக்கும்போது, ‘ஒரு தேசமாக நாம் முன்னகர சமூக ஒற்றுமை எவ்வளவு முக்கியம்’ என்பதைச் சொல்வதாகவே ஒவ்வொரு இடத்திலும் அவருடைய பேச்சு அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தியாவின் பெரும் சவாலாக இங்குள்ள வெவ்வேறு அரசியல் அபிலாஷைகளையும் பல தரப்புக் குரல்களையும் பலரும் பார்த்தார்கள் என்றால், நேரு இந்த மாறுபாடுகள்தான் பன்மைத்துவம் என்று மக்களுக்குக் கற்பிக்க விரும்பினார். பல கோடி பேருமாகச் சேர்ந்து ஒரு நாட்டின் எதிர்காலத்தைச் சிந்திக்கும் வகையில் மக்களைத் தூண்ட தேர்தல் தருணத்தைப் பெரும் வாய்ப்பாகப் பார்த்தார்.

கூட்டங்களில் நேரு மேடை ஏறுகையில், “பண்டிட் நேரு ஜி ஜிந்தாபாத்” என்று மக்கள் முழக்கம் எழுப்பினால், “நயா இந்துஸ்தான் ஜிந்தாபாத்!” என்பதாக அந்த முழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தூண்டுகிறார் நேரு. அடுத்த சில நாட்களில் ஓர் எதிர்க்கட்சித் தலைவர் அதே பிராந்தியத்துக்கு வருவதாகத் தெரிந்தால், அவருடைய கூட்டத்துக்கும் சென்று அவர் பேச்சைக் கேட்குமாறு மக்களிடம் கூறுகிறார் நேரு. எதிர்க்கட்சிகள் மீதும் அத்தனை மதிப்பு!

1951இல் இருந்து 2024க்கு வந்தால், எவ்வளவு பெரிய சரிவு!

தொடர்ந்து மூன்று முறை பிரதமர் எனும் இடத்தை அடைந்துவிட்டால், வரலாற்றில் நேருவுக்கு சமமாகத் தன்னை இருத்திக்கொள்ளலாம் என்று எண்ணும் பிரதமர் மோடியின் பேச்சையும் செயல்பாட்டையும் பார்க்கும்போது, நேரு வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதைத்தான் மோடிக்கு நினைவூட்டத் தோன்றுகிறது: “காலம் என்பது கடந்து செல்லும் ஆண்டுகளின் மூலம் கணக்கிடப்படுவதில்லை; ஒருவர் என்ன செய்கிறார், ஒருவர் என்ன உணர்கிறார், எதை அடைகிறார் என்பதாலேயே அது தீர்மானிக்கப்படுகிறது!”

- ‘குமுதம் ரிப்போர்ட்டர்’, ஏப்ரல், 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

நேரு எப்படி மூன்றாவது முறை பிரதமரானார்?
நேருவின் நினைவை பாஜகவால் அகற்றிவிட முடியுமா?
நாத்திகர் நேருவின் ஆன்மிகம்
அம்பேத்கரையும் சண்முகம் செட்டியையும் ஏன் அமைச்சரவைக்கு அழைத்தார் நேரு?
நேரு: அன்றைய இந்தியர்களின் பார்வையில்!
நேரு என்னவாக எஞ்சியிருக்கிறார்?
இந்தியாவால் மறக்கவே முடியாதவர் நேரு
1920: இந்தியத் தேர்தல் நடைமுறையின் தொடக்கம்
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை
பாஜக: அரசியல் கட்சியா, தனிமனித வழிபாட்டு மன்றமா?
காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

2





பா வகைகம்பராமாயணம்முற்காலச் சோழர்கள்செய்திபிடிஆர்வருவாய் வசூல்குழந்தைத் திருமணம்அட்டிஸ் 2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுதிருக்குமரன் கணேசன் புத்தகம்மாபெரும் பொறுப்புசெந்தில் முருகன் பேட்டிமீண்டும் சோழர்கள் காலச் செழுமைக்குக் கொண்டுசெல்ல மபிரதமர் நரேந்திர மோடிஅருந்ததியர்நுகர்பொருள்மாநில மொழிவழிக் கல்விஷோலா லவால் கட்டுரைசார்புநிலைமுன் தயார்நிலைசங்கம் புகழும் செங்கோல்மாநில நிதிநிலை அறிக்கைஉலக ஆசான்இடைத்தேர்தல்சிந்தனைத் தளம்ஜீன் டிரேஸ் கட்டுரைஇணையச் சேவைஸ்டென்ட்பீடிகைமுதலுறு விரைவு ஈனுலை: கேள்விகளும் பதில்களும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!