கட்டுரை, ஆளுமைகள் 9 நிமிட வாசிப்பு
நேருவின் நினைவை பாஜகவால் அகற்றிவிட முடியுமா?
ஜவாஹர்லால் நேரு மீது தொடர்ச்சியாக அவதூறுகளைப் பரப்பி அவர் மீதான கண்ணோட்டத்தையே மாற்ற சைபர் தளத்தில் திட்டமிட்டு நடக்கும் வேலைகள் தொடர்பில், அமுல்யா கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்த கட்டுரை நினைவுக்குவருகிறது. பாஜக ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலப் பள்ளிக்கூடப் பாடபுத்தகத்தில் நேரு பற்றிய பாடம் நீக்கப்பட்டது. இப்படியெல்லாம் மெலிதான பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் கை வைப்பது அரசுக்கு எளிது. அதேசமயம், நேருவைப் பற்றி உண்மையாகவே விமர்சனங்களைத் தடியான புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றால் பக்கம் பக்கமாக வரலாற்றைத் தயாரிக்க வேண்டும், அவை சரிபார்க்கப்பட்டதாக இருக்க வேண்டும், நியாயமாகத்தான் எழுதுகிறோம் என்பதை உறுதிசெய்ய அடிக்குறிப்புகளைத் தர வேண்டும், வரலாற்றை எழுதுவதில் அனுபவமுள்ள மற்றவர்கள் அவற்றைப் படித்து சரியென்று ஏற்க வேண்டும். இது சாத்தியமில்லை என்பதாலேயே எளிய வேலைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்.
நேரு இல்லாமலிருந்திருந்தால்?
நேரு இல்லாமலிருந்திருந்தால், இந்தியா என்னவாக இருந்திருக்கும்?
இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட மாபெரும் தியாகிகளில் எவரேனும் ஒருவரை விலக்கிவிட்டு மற்றவர்களைக் கொண்டு வரலாற்றை இப்படிக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், குறிப்பிட்ட சில விவகாரங்களில் ஆளுமை மிக்க அத்தலைவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்களுடைய முத்திரை விழுமாறு செயல்பட்டிருக்கிறார்கள். அப்படித்தான் நேருவின் வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கிறது. நேரு இல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் - அல்லது தலைமை வகித்திருந்தால் என்னாகும் என்று பேசுவதற்கு முன்னால், எட்டு முக்கியமான அம்சங்களைப் பரிசீலிப்பது நல்லது.
1. பிரஸ்ஸல்ஸ் நகரில் 1927-ல் நடந்த, ஒடுக்கப்பட்ட நாடுகளின் மாநாட்டில் இந்தியா சார்பில் நேரு கலந்துகொண்டார். அங்கே அவர் கலந்துகொண்டது இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு சர்வதேச கண்ணோட்டத்தை அளித்தது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அவருடைய பன்மைத்துவ கலாச்சார கண்ணோட்டம், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கே நவீன மேல்பூச்சை அளித்தது.
2. இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தரலாம் என்று மகாத்மா காந்தி உத்தேச யோசனையாக 1928-ல் கூறினார். அது கூடாது - பூரண சுதந்திரம் வேண்டும் என்று உறுதியாக வலியுறுத்தினார் நேரு. இந்த அடிப்படையில்தான், பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் அமல்படுத்திய இந்திய அரசு நிர்வாகச் சட்டம் 1935-ஐக் கடுமையாக எதிர்த்தார் நேரு. மகாராணியின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்ட டொமினியன் நாடாகவே இந்தியாவைத் தொடர்ந்து தக்கவைக்க விரும்பிய பிரிட்டிஷாரின் முயற்சிகளுக்கு முரணாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் நோக்கம், இறையாண்மை மிக்க சுதந்திர இந்தியக் குடியரசு நாடு என்று காங்கிரஸ் கட்சிக்குள் 1946 டிசம்பர் 13-ல் தீர்மானம் கொண்டுவந்து வெளிப்படையாக அறிவிக்க வைத்தார் நேரு.
3. மவுன்ட்பேட்டன் பிரபு 1947 மே மாதம், பம்பாய், மதறாஸ், ஐக்கிய மாகாணம் (உத்தர பிரதேசம்), வங்காளம் ஆகியவற்றுக்கு சுய நிர்வாக அதிகாரங்களை அளிக்கும் புதிய திட்டத்தை நேருவின் பார்வைக்கு அளித்தார். இப்படி இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பை ஏற்படுத்திய பிறகு இந்தியாவுக்கு எல்லா அதிகாரங்களையும் மாற்றித் தருவதே தங்களுடைய நோக்கம் என்றார். நேரு இதை அடியோடு எதிர்த்தார். பிரிட்டிஷார் இந்த நாட்டைவிட்டுப் போகும்போது அவர்களுக்கு ஒரு வாரிசு அல்ல பல வாரிசுகள் ஏற்பட்டு நாட்டின் ஒற்றுமை குலைந்து உள்நாட்டுப் போரும் கலகமும் மூளட்டும் என்பதே பிரிட்டிஷாரின் திட்டம். மவுன்ட்பேட்டனின் இந்த குயுக்தியான திட்டத்தை பிரிட்டிஷ் அமைச்சரவை ஏற்று, அமல்படுத்துங்கள் என்று அவருக்கே 1947 மே மாதம் திருப்பி அனுப்பிவிட்டது. இந்தியத் தலைவர்களுக்கு அறிவிப்பதற்கு முன்னால், சிம்லாவில் தன்னுடைய இல்லத்தில் விருந்தினராகத் தங்கியிருந்த நேருவிடம் காட்டினார் மவுண்ட்பேட்டன். அதிர்ச்சியடைந்த நேரு, “காங்கிரஸ் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த யோசனையை ஏற்காது, இது இந்தியாவையே துண்டுதுண்டாக கூறுபோடுவதற்கான சதி” என்று கண்டித்து மிக நீண்ட கடிதத்தை வைஸ்ராய்க்கு எழுதினார். இந்தக் கடிதத்தில் பிரிட்டிஷ் அரசின் பல யோசனைகளைக் கடுமையாகத் தாக்கியிருந்தார். அவற்றில் ஒன்று, பலுசிஸ்தானுக்கு சுயாட்சி வழங்கும் திட்டம். விளைவாக, மவுன்ட்பேட்டன் தனது முடிவைத் தள்ளிப்போட்டார். பிறகு இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரித்து சுதந்திரம் வழங்கும் திட்டம், வி.பி. மேனன் தயாரித்தளித்த வகையில் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்தியாவைப் பல துண்டுகளாகப் பிளவுபடுத்தியிருக்கக் கூடிய முந்தைய திட்டத்தைத் தடுத்து நிறுத்தியதன் முழுப் பங்கும் நேருவுடையதே. இதை ‘டிரான்ஸ்ஃபர் ஆஃப் பவர்’ (Transfer of Power) என்ற தன்னுடைய நூலில் மேனன் விவரித்திருக்கிறார்.
4. நாட்டின் பிரதமர் என்ற வகையில் அரசமைப்புச் சட்டத்தை வகுக்கும் பணியில் நேருவால் பெரிய பங்கை ஆற்ற முடியவில்லை. ஆனால், ஒன்றிய அரசின் அரசியல் சட்டக் குழுத் தலைவர், மத்திய அதிகாரங்களுக்கான குழுவின் தலைவர் ஆகிய பதவிகள் மூலம் மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றினார். எல்லா அம்சங்களிலும் ஒவ்வொரு பிராந்தியமும் மற்றதிலிருந்து மாறுபட்டிருந்த இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காக்க ஒன்றிய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கேற்ப அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்தார். அவருடைய பரந்துபட்ட அரசியல் கண்ணோட்டம், சித்தாந்தம், ஜனநாயகத்தின் மீது அவருக்கிருந்த மாபெரும் நம்பிக்கை ஆகியவை காரணமாக, அரசியல் சட்டத்தின் முகப்பு வாக்கியத்தில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தை அப்போது இடம்பெறவில்லை. தனிநபரான இந்தியர்களின் உரிமைகள் மீது அதிகக் கவனம் செலுத்தியதால் சாதி, மதம், சமூகம் பற்றிய கவனம் அதிகமாகவில்லை.
5. ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை நேரு சரியாகக் கையாளவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். நேரு மட்டும் பிரதமராக இருந்திருக்காவிட்டால், ஷேக் அப்துல்லாவுடன் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லாமலிருந்திருந்தால், காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்து வைத்திருந்திருக்கவே முடியாது. 1952-ல் திடீரென நடந்த காஷ்மீர் ஆக்கிரமிப்பு முயற்சி இதைத்தான் உணர்த்துகிறது.
6. தனியார் துறைக்கும், அரசுத் துறைக்கும் சமநிலை இருக்கும்படியான பொருளாதார அமைப்பையே நேரு பரிந்துரைத்தார். பம்பாய் திட்டத்தில் இந்தியத் தொழிலதிபர்கள் தெரிவித்திருந்ததும் இதையேதான். அவரை சோஷலிச சார்புள்ளவர் என்று குற்றஞ்சாட்டுவோர், அப்போது நாட்டின் பெரிய எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட்டுகள்தான் இருந்தார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவகையில், சோஷலிஸ கொள்கைகளை நேரு சார்ந்து நின்றதும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபடக் காரணம்; மக்களிடம் பெரிய செல்வாக்கு அதற்கு இல்லாமல்போகக் காரணம்.
7. இந்து மதத்தைச் சீர்திருத்தவும் நவீனப்படுத்தவும் நான்கு மசோதாக்களை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியதில், அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. இவையெல்லாம் அரசமைப்புச் சட்டம் தயாரானபோதே அந்த அவையில் யோசனைகளாகப் பரிந்துரைக்கப்பட்டு வலதுசாரிகளின் கடுமையான எதிர்ப்பால் விலக்கிக்கொள்ளப்பட்டவை. இந்து மதத்தை ஏற்க மறுத்தவரான பி.ஆர்.அம்பேத்கர்தான் இந்து மதச் சீர்திருத்த மசோதாக்களுக்குப் பின்னணியில் இருந்தார். நேருவின் ஆதரவு காரணமாக, இந்த மசோதாக்கள் நாட்டின் முதலாவது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையர் ஆதரவுடன் நிறைவேறின. இந்துக்களை முன்னேறவிடாமல் பின்னிழுத்த அம்சங்களை நீக்குவதுடன், மதத்தை நவீனப்படுத்தும் வேலையையும் மசோதாக்கள் செய்தன. பலதார மணம் தடை செய்யப்பட்டது, சாதி மறுப்புத் திருமணங்கள் செல்லும் என்றது, விவாகரத்து நடைமுறைகளை எளிமைப்படுத்தியது, சொத்துரிமையில் ஆண் வாரிசுகளுக்கு இணையாகப் பெண் வாரிசுகளையும் நிறுத்தியது.
8. இந்தியாவின் அணுசக்தித் துறையிலும் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களிலும் நேருஜியின் தனிப்பட்ட முத்திரை தெரிகிறது. பிரிட்டனிலிருந்து 1939-ல் திரும்பியபோது, பிற்காலத்தில் இந்திய அணு அறிவியலின் தந்தை என்று கொண்டாடப்பட்ட ஹோமி பாபாவைச் சந்தித்த நேரு, இந்தியாவில் அணுசக்தித் துறையின் அவசியம் குறித்து அவருடன் நீண்ட விவாதம் நடத்தினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அணுசக்தித் துறைக்குத் தலைவராக ஹோமி பாபாவை நியமித்த நேரு, துறை தொடர்பாக தன்னிடமே நேராகப் பேசலாம் என்று அனுமதி வழங்கினார். இருவரும் வாழ்நாள் முழுக்க நெருங்கிய நண்பர்களாகவும் திகழ்ந்தார்கள். அரசியல் சட்ட நிர்ணய சபையிலேயே அணுசக்திச் சட்டம் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் நேரு. பிறகு பிரதமர் தலைமையில் அணுசக்தி ஆணையம் ஏற்பட்டுவிட்டது.
தவறுகளும் உண்டு
1. நேருவின் நிர்வாகத்தில் தவறுகளும் நிகழ்ந்தன. காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்குக் கொண்டுசென்றது, சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை அலட்சியப்படுத்தியது ஆகியன அவருடைய இரு பெரும் தவறுகள்.
2. நேரு இல்லாமல் வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால் வேறு முடிவுகள்கூட கிடைத்திருக்கலாம். ஆனால், அதுவும் இந்தியாவுக்குச் சாதகமாகத்தான் இருந்திருக்கும் என்று கூறிவிட முடியாது. சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக வேறு எந்தப் பிரதமர் இருந்திருந்தாலும் ராணுவ நடவடிக்கையைக் கையாண்டிருக்கவே முடியாது. திபெத்தை சீனா திடீரென்று ஆக்கிரமித்தபோது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் கரியப்பாவை ஆலோசனை கலந்த நேரு, ‘நாம் இதில் தலையிடலாமா?’ என்று கேட்டார். ‘இந்திய ராணுவம் அவ்வளவு வலிமையாக இப்போது இல்லை; திபெத் மலைப்பாங்கான பகுதி; நம்மால் முடியவும் முடியாது!’ என்று கரியப்பா தெளிவாக பதில் அளித்துவிட்டார்.
ராணுவத்தை நேரு கையாண்ட விதமே அவருக்கு எதிராகப் போய்விட்டது. நேரு சமாதான விரும்பி, போரே இல்லாமல் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். எனவே ராணுவத் தலைவராக அவரால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. அரசின் முக்கியமான அங்கமான ராணுவத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல் பலவீனப்படுத்திவிட்டார், அதற்கு தேவைப்பட்ட கவனத்தை அவர் செலுத்தவில்லை. ராணுவத் தளபதிகளுடன் உரசி அவர்களைக் காயப்படுத்திய கிருஷ்ண மேனனின் செயல்களை அவர் கண்டும் காணாமல் இருந்துவிட்டார்.
அதனால் என்ன?
எப்படியாயினும், இந்தியாவுடன் நேருவுக்கிருந்த தொடர்புகளை அறுத்து எறிவது கடினமான வேலை; காரணம், நவீன இந்தியாவின் ஒவ்வொரு மரபணுவிலும் நேரு இருக்கிறார். அவற்றிலிருந்து நேருவைத் தூர விலக்குவதென்றால் இந்தியாவையே மட்டமல்லாக்க வீழ்த்தினால்தான் முடியும்!
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
அறிவன் 3 years ago
இத்தனை பட்டியலிட வேண்டிய தேவையே இல்லை. காந்தி மற்றும் நேரு இருவர்களையும் கருதும்போது ஒருவர் சறுக்கிய இடத்தில் இன்னொருவர் தூணாய் தாங்கிய கூட்டணி அது. சுதந்திர இந்தியாவில் ஒரு வருடத்திக்குள காந்தி கொல்லப்பட்ட போது படேலுடன் இணைந்து இந்தியாவை ஒரு நாடாகக் கட்டி எழுப்பியவர் நேரு. பற்பல முரண்கள், இல்லாத நிதி, மாநிலக்குழப்பங்கள் என்று அனைத்தையும் சமாளித்து மக்களாட்சி மற்றும் நிலைத்த மத அமைதியோடு இந்தியாவை நிலைநிறுத்தியவர் அவர். காந்தியைக் கொன்றுவிட்டு மதக்கிறுக்குத்தனத்தை மேலெடுத்து விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்த கூட்டத்தைத் ஒறுத்ததன் மூலம் மேலும் நாட்டுக்கு நல்லதைச் செய்தார். இல்லாவிட்டால் 60 களின் இறுதிக்குள் மத அடிப்படை வாதம் நிரம்பிய இன்னொரு பாகிஸ்தானாக இந்தியா மாறு இந்துஸ்தான் ஆகியருக்கும். தன்னுடைய 2.0 ஆண்டு தளராத உழைப்பின் மூலம் அக்கேட்டை 70 ஆண்டுகள் தாமதிக்கச்செய்த அருந்தொண்டு அவரது. இப்போது கேடு சூழ்ந்து விட்டது. இயன்றவரெல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி அமர்நதுகொள்கிறர்கள். இன்றைய ஜோக்கர்கள் எல்லாம் அவரது சுண்டுவிரலுக்குக் கூட ஈடாக மாட்டார்கள்.
Reply 16 0
Login / Create an account to add a comment / reply.
குணசேகரன் 3 years ago
ஏன் முழு கட்டுரையும் வெளியாகவில்லை காரணம் என்ன?
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Piku 3 years ago
முழு கட்டுரையும் வெளியாகவில்லையா? அல்லது சந்தா செலுத்தினால் தான் முழுவதுமாக படிக்க இயலுமா?
Reply 2 1
Login / Create an account to add a comment / reply.