கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை

ப.சிதம்பரம்
15 Apr 2024, 5:00 am
0

ரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது அதன் நோக்கங்களையும் கருத்துகளையும் இலக்குகளையும் மக்களுக்குத் தெளிவாக அறிவிக்கும் எழுத்துப்பூர்வமான அறிவிக்கை.

உலக வரலாற்றில் அழியாத இடம்பெற்றுவிட்ட அப்படிப்பட்ட சில அறிவிக்கைகள் உடனே நினைவுக்கு வருகின்றன; அமெரிக்க நாட்டில் 1776இல் வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடன அறிவிக்கை, இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 14-15 இரவில் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நிகழ்த்திய ‘விதியுடன் ஒரு பயணம்’ என்ற உரை, ‘தனக்கான காலத்தில் உதித்துவிட்ட ஒரு சிந்தனையை உலகில் உள்ள எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது’ என்று 1991 ஜூலை 24இல், விக்டர் ஹியூகோவின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி இந்தியாவின் ‘தாராளமயக் கொள்கை’யை அறிவித்த டாக்டர் மன்மோகன் சிங்கின் உரை அவற்றில் சில; சிங்கின் அந்த அறிவித்தலுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் திசைவழி மாறியது. அந்த அறிக்கைகளும் உரைகளும் புதிய ஆட்சியாளர்களின் உள்ளத்தில் இருப்பதை உரத்தும் தெளிவாகவும் அறிவித்தன. 

சில அறிவிக்கைகள் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தாமல் பூடகமாகவும் மறைத்துவிடலாம்; தவறான மனிதர்கள், போலியான அறிக்கைகளைத்தான் வெளியிடுவார்கள். பிரதமர் நரேந்திர மோடியை இன்றளவும் துரத்தும் அவருடைய முந்தைய அறிவித்தல்கள் பல; ‘நான் பிரதமரானால் கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டுவந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாயைப் போடுவேன்’, ‘ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்’, ‘விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காகப் பெருக்குவேன்’ என்பவை அதில் சில. அவருடைய கட்சியைச் சேர்ந்த தளபதிகளே அவையெல்லாம், ‘தேர்தல் காலத்து வெற்று வாக்குறுதிகள்’ என்று நகைத்துப் புறந்தள்ளிவிட்டார்கள். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நாடு முழுக்கப் பரவியிருக்கும் இரண்டு பெரிய தேசியக் கட்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி), பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) மட்டுமே. தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க குழு ஒன்றை பாஜக மார்ச் 30இல் நியமித்தது; காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 5இல் வெளியிட்டுவிட்டது.

இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் ஒப்பிட்டு எழுதத்தான் ஆசை, ஆனால் காங்கிரஸ் கட்சி அறிக்கை மட்டுமே இந்தக் கட்டுரை தயாரான நாள் வரையில் கிடைத்தது. எனவே, இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்களும் வாக்காளர்களும் இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக, காங்கிரஸின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறேன்.

இந்திய அரசமைப்புச் சட்டம்

“இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமே, முடிவுறாத எங்களுடைய அரசியல் பயணத்தின் ஒரே துணையாகவும் வழிகாட்டியாகவும் தொடரும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்” என்று காங்கிரஸ் அறிக்கை கூறுகிறது. பாஜக இந்திய அரசமைப்புச் சட்டத்தை அப்படியே ஏற்று நடத்துமா அல்லது தீவிரமான மாற்றங்களை அதில் ஏற்படுத்திவிடுமா என்று அறிந்துகொள்ள மக்கள் படபடப்பான மனநிலையில் இருக்கின்றனர்.

‘ஒரே நாடு – ஒரே (சமயத்தில்) தேர்தல்’, ‘அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம்’, ‘குடிமக்கள் சட்டத்துக்குத் திருத்தம்’ (உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது) என்பன போன்ற ஆளுங்கட்சியின் முழக்கங்கள் காரணமாக இந்தப் படபடப்பு நிலவுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ நாடாளுமன்ற ஜனநாயக முறையை பாஜக தொடர்ந்து பின்பற்றுமா என்பதை அது தெளிவுபடுத்த வேண்டும்.

சமூக - பொருளாதார, சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெளிவாக அறிவித்துவிட்டது, காங்கிரஸ் தலைமயிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரியாகவும் சமூக - பொருளாதார பின்புலத் தரவுகளைச் சேர்த்தும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க இப்போதுள்ள 50% என்ற உச்ச வரம்பை நீக்க அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும். பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு, அனைத்து சாதியினருக்கும் சமூகங்களுக்கும் திறந்துவிடப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

சிறுபான்மையினர்

பலதரப்பட்ட மதச் சிறுபான்மையினர், மொழிச் சிறுபான்மையினர் இந்தியாவில் வாழ்கின்றனர். மனித உரிமைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் பெற அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமை இருக்கிறது, பெரும்பான்மைவாதத்துக்கோ, எதேச்சாதிகாரமான கட்டுப்பாடுகளுக்கோ இடமில்லை என்பதில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பன்மைத்தன்மையும் வேறுபட்ட தன்மையும் இந்தியாவின் பாரம்பரியமாகத் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சி சிறுபான்மைச் சமூகங்களைத் தொடர்ந்து ‘திருப்திப்படுத்தும் செயல்க’ளிலேயே ஈடுபடுகிறது என்று பாஜக குற்றஞ்சாட்டுகிறது. ‘திருப்திப்படுத்தும் செயல்’ என்பதை ‘தாஜா செய்யும் செயல்கள்’ என்று பொடி வைத்து ரகசியக் குறியீடாகவே தொடர்ந்து பயன்படுத்துகிறது.

இதன் மூலம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான தனது உணர்வு நிலையை அது வெளிப்படுத்துகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும், அனைத்து மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் இயற்றப்படும் என்ற அறிவிப்புகளை பாஜக மீண்டும் இந்தத் தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுமா? இந்த இரு சட்டங்களும் பாரபட்சமானவை என்று கருதுவதால், பாஜக தேர்தல் அறிக்கை இவை பற்றி என்ன சொல்ல வருகிறது என்று அறிய சிறுபான்மைச் சமூகத்தவர்கள் பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸின் புதிய பாதை!

பாலசுப்ரமணியம் முத்துசாமி 09 Apr 2024

இளைஞர்களும் வேலைவாய்ப்பும்

இந்திய மக்கள்தொகை அமைப்பு தந்துள்ள அரிய வாய்ப்பு (வேலை செய்யும் வயதில் அதிகம் பேர்) பயன்படுத்தப்படாமல் வீணாக்கப்படுகிறது; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வளர்ச்சி 5.9% (சராசரிக்கும் குறைவு), உற்பத்தித் துறையில் தேக்கநிலையிலான வளர்ச்சி (ஜிடிபியில் 14%), புதிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளில் குறைந்த அளவே பங்கேற்பு (50%), புதிதாக படித்துவிட்டு வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்காத நிலை அதிகரிப்பு (பட்டதாரிகளிடையே 42% வேலைவாய்ப்பின்மை) என்பதே இன்றைய நிலை.

மத்திய அரசின் துறைகளில் மட்டுமே 30 லட்சம் வேலைவாய்ப்புகளுக்கு ஆள்கள் எடுக்கப்படுவார்கள், படித்து முடிக்கும் அனைத்து பட்டதாரி, பட்டயத் தொழில்நுட்ப மாணவர்களுக்கும் தொழில் பழகுநர் சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் கட்டாய வேலைவாய்ப்பு, புதிதாக அதிகம் பேரை வேலைக்கு எடுக்கும் தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஊக்குவிப்பு அளித்து வேலைவாய்ப்புகளைப் பெருக்க தேர்தல் அறிக்கை உத்தரவாதம் அளிக்கிறது.

இந்த அறிவிப்புகள் இளைஞர்களிடையே இப்போதே உற்சாகத்தை அளித்திருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விஷயத்தில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணியிடம் நம்பகமான வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஏதுமில்லை; பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இதைப் போல பயனுள்ள வேலைவாய்ப்பு திட்டம் எதையாவது அறிவிக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மட்டும்தான் தயாராக உள்ளது

ப.சிதம்பரம் 01 Apr 2024

மகளிர்

தேர்தல் நடைமுறைகளில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பவர்கள் மகளிர். தேர்தல் பிரச்சாரங்களை மிகவும் கவனமுடன் கேட்டு அது குறித்துத் தங்களுக்குள் ஆர்வமாக விவாதிக்கின்றனர்.

‘மகாலட்சுமி திட்டம்’ என்ற பெயரில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ஒருமுறை ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஒருநாள் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும், மகளிருக்கான வங்கிகள் மீண்டும் திறக்கப்படும், மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 50% மகளிருக்கு ஒதுக்கப்படும் என்ற அறிவிப்புகளை இளம் பெண்களும் மகளிரும் நன்றாக உள்வாங்கியுள்ளனர்.

இந்துத்துவ கொள்கை அறிவிப்புகளைத் தாண்டி மக்களுடைய வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய இவை போன்ற அறிவிப்புகளுடனும் உறுதியான வளர்ச்சி திட்டங்களுடனும் பாஜகவால் தேர்தல் அறிக்கை வெளியிட முடியுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

கூட்டாட்சி முறைமை

அனைவராலும் அதிகம் கண்டித்துப் பேசப்படுவது பாஜகவின் சர்வாதிகாரப் போக்கு. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற கூட்டாட்சிக் கொள்கையைச் சிறிதும் மதிக்காமல் செயல்படுகிறது ஒன்றிய பாஜக அரசு. ‘ஒரே நாடு – ஒரே (சமயத்தில்) தேர்தல்’ என்பது ஆழ்ந்த சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது; அது நாளடைவில் ‘ஒரே அரசியல் கட்சி - ஒரே தலைவர்’ என்ற நிலைக்கு இட்டுச் சென்றுவிடும்.

கூட்டாட்சி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மட்டும் 12 அம்சங்கள் கூறப்பட்டுள்ளன; அதில் சிலவற்றையாவது பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அதில் மிகவும் முக்கியமான ஒரு வாக்குறுதி, பொது அதிகாரப் பட்டியலில் இருந்து மாநிலங்களுக்கு மட்டும் உரித்தான அதிகாரப் பட்டியலுக்குச் சிலவற்றைப் பிரித்துத் தருவது பற்றியது. பாஜக எப்படிப்பட்ட அரசியல் கட்சி என்பதை, இந்த 12 அம்சங்கள் தொடர்பாக அதன் எதிர்வினை என்ன என்பதிலிருந்து தெரிந்துகொண்டுவிடலாம்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் - இந்திய அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயக முறை, மனித உரிமைகள், சுதந்திரம், தனிமனித உரிமைகள், அரசமைப்புச் சட்ட முறைமை – ஆகியவற்றைக் காக்க எந்த அளவுக்கு முன்னுரிமை தருகின்றன என்பதே முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும். இந்தக் கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கு – இவற்றைப் பின்பற்றி நடப்பேன் என்று உறுதி கூறுகிறவர்களுக்கே, என்னுடைய வாக்கு.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காங்கிரஸின் புதிய பாதை!
தமிழ்நாடு மட்டும்தான் தயாராக உள்ளது
நேர்மையாக, நியாயமாக நடக்குமா 2024 தேர்தல்?
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒன்று திரண்ட மாணவர்கள்சைமாரோநாத்திகர்குழந்தைகளைக் கையேந்த விடாதீர்!அன்ஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்பட்டியல் சாதியினர்அடிப்படைச் செயலிகள்எரிபொருள்பாரத ஒற்றுமை யாத்திரைமுளைஉருவாக்கம்வி.பி.சிங் சமஸ்பாரசீக மொழிமரிக்கோமாரடைப்புகுறைவான அவகாசம்ஞானவேல் சமஸ் பேட்டிபிரஷாந்த் கிஷோருக்கு பிஹார் வசப்படுமா?பேருந்துகள்புதிய முன்னுதாரணம்25 ஆண்டுகளில் ஒரு பிரச்சினையைக்கூட தீர்க்கவில்லை: பிரதீப்கையூட்டுஆபெர் காம்யுநடைப்பயணம்ஏர்முனைபன்னாட்டுத் தேர்வு முறைகள்நாட்டுப்பற்றுராகுல் நடைப்பயணம் இதுவரை சாதித்தது என்ன?சட்டம் தடுமாறலாம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!