கட்டுரை, அரசியல், வரலாறு, சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ்
29 Mar 2024, 5:00 am
1

ளுங்கட்சிக்கு இவ்வளவு சாதகமாக தேசிய ஊடகங்கள் பேசும் ஒரு பொதுத் தேர்தலை நான் பார்த்ததில்லை. ஆட்சிக் காலகட்டத்தில் எப்படியோ, தேர்தல் நெருங்கும் ஆறு மாத காலத்திலாவது ஆளுங்கட்சியின் மீதான விமர்சனங்களுக்கும், எதிர்க்கட்சிகள் தங்களது தரப்பைப் பேசுவதற்கும் உரிய இடம் அளிப்பதே இதுவரையிலான வரலாறாக இருந்திருக்கிறது. இந்த 2024 தேர்தலுக்கு முந்தைய 2019 தேர்தலிலும்கூட இந்த வழக்கம் இருந்தது. இப்போது முழுமையாக பாஜக பக்கம் சாய்ந்திருக்கின்றன ஊடகங்கள்; இத்தனைக்கும் 2019 தேர்தலைவிடவும் வலுவான இடத்தில் இன்று எதிர்கட்சிகள் உள்ளன.

பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் இன்று போகிறபோக்கில் ஒரு கதையாடலை உருவாக்குகின்றன: ‘மோடி 2024 தேர்தலைப் பற்றி கவலைப்படவில்லை; அவருடைய எல்லா நகர்வுகளும் 2034 தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்துவதிலேயே இருக்கிறது. பாஜக அசைக்க முடியாத அளவுக்கு நாட்டின் பெரிய சக்தியாக இருக்கிறது!’ 

இது எந்த அளவுக்கு உண்மை?

பாஜகவைத் தீவிரமாக விமர்சிப்பவன் என்றபோதிலும், கட்சியை மக்களிடம் கொண்டுசெல்ல அக்கட்சியினர் துடிப்பாகச் செயல்படுவதைக் குறிப்பிட்டுப் பேச ஒருபோதும் நான் தவறியதில்லை என்பதை என் வாசகர்கள் அறிவார்கள். பாஜக இன்று பெரும் பலம் கொண்ட கட்சி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும், நாட்டின் பெரிய கட்சி பாஜக என்பதை எப்போதும் மறுத்துவருகிறேன்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தலைவர் பாதி, கட்சி பாதி

மோடியின் பலம் எவ்வளவு?

இன்றைய பாஜகவின் பலத்தில் மோடியின் பலம் எவ்வளவு? 

பாஜகவின் எதிரிகளும்கூட இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வார்கள், ‘பாஜகவின் பலத்தில் சரிபாதி பலம் மோடி!’

பாஜக தன்னுடைய வரலாற்றிலேயே பெரும் வெற்றியை 2019 தேர்தலில் அடைந்தது. மக்களவையில் 303 இடங்களை வென்ற அகு 37.4% ஓட்டுகளை அப்போது பெற்றது. மோடி களத்துக்கு வராத 2009 தேர்தலில் அத்வானி தலைமையிலான பாஜக பெற்ற 18.8% ஓட்டுகளோடு ஒப்பிட இது 18.6% அதிகம்.

மக்களவைத் தேர்தலைத் தாண்டி எல்லா மாநிலத் தேர்தல்களிலும் அங்குள்ள தலைவர்களுடைய செல்வாக்குக்கு அப்பாற்பட்டு, மோடியின் செல்வாக்கு பிரதிபலிப்பதை ‘சிஎஸ்டிஎஸ்’ போன்ற மதிப்புக்குரிய ஆய்வு நிறுவனங்களின் 'லோக்நீதி' ஆய்வுகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளன.

2014இல் பாஜக பெற்ற ஓட்டுகளை ஆய்வுசெய்தால், முந்தைய 2009 தேர்தலைக் காட்டிலும் 127 தொகுதிகளில் குறைந்தது 20% வாக்குகளை அது கூடுதலாகப் பெற்றது தெரியவரும். 2019இல் சிஎஸ்டிஎஸ் மேற்கொண்ட ஒரு கருத்தாய்வில், பாஜகவுக்கு வாக்களிக்கவுள்ளதாகச் சொன்ன இளையோரில் 24.5% பேர், "பிரதமர் முகமாக மோடி இல்லை என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்றார்கள். 2019இல் மக்களவைத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்ட மாநிலங்கள்  மோடியின் செல்வாக்கைத் தனித்துக் காட்டின. ராஜஸ்தானில் சட்டமன்றத்தைக் கைப்பற்ற முடிந்த பாஜகவால் மக்களவையில் ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியவில்லை. சட்டமன்றத் தேர்தலில் பெற்றதைக் காட்டிலும் குறைந்தது 20% ஓட்டுகளைக் கூடுதலாக மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்றது.

பாஜகவின் வரலாற்றிலேயே அந்தக் கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பையும் தன்னுடைய அதிகாரத்துக்குள் வைத்து நகர்த்திய ஒருவர் இல்லை. மக்களிடத்தில் தனக்குள்ள செல்வாக்கின் வழியாகவே மோடி இதைச் செய்திருக்கிறார். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் குரல்கள்

சமஸ் 15 Mar 2024

ஜன சங்க வரலாறு

இன்றைய பாஜகவின் முன்னோடியான ஜன சங்கம் 1951இல் சியாமா பிரசாத் முகர்ஜியால் ஆரம்பிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அடித்தளத்தில் அப்போதே நாட்டின் எல்லா முனைகளிலும் அது கால் பதித்தது. தமிழ்நாட்டிலேயேகூட வி.கே.ஜான் தலைமையில் அது கால் பதித்தது. ஆயினும், சின்ன வட்டத்தைத் தாண்டி ஜன சங்கத்தால் நகர முடியவில்லை. 1977இல் எல்.கே.அத்வானி தலைமையில் செயல்பட்ட அது, காங்கிரஸை எதிர்கொள்வதற்காகப் பல்வேறு கட்சிகளின் கூட்டு சேர்க்கையாக உருவாக்கப்பட்ட ஜனதா கட்சியுடன் இணைக்கப்பட்டது. 

ஜன சங்கத்தின் கால் நூற்றாண்டு காலத் தேர்தல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், 1951, 1957, 1962, 1967, 1971 என்று ஐந்து மக்களவைத் தேர்தல்களில் அது போட்டியிட்டிருக்கிறது. முதல் தேர்தலில் 3.06% ஓட்டுகளை அது வாங்கியது என்றால், கடைசித் தேர்தலில் 7.35% தேர்தலை வாங்கியது. 1967 தேர்தலில் சுதந்திரா கட்சியுடன் இணைந்து போட்டியிட்டபோது அது வாங்கிய 9.31% ஓட்டுகள்தான் அதன் உச்சம்.

ஜெயப்ரகாஷ் நாராயண் முன்னெடுப்பில் நடந்த ஜனதா மோர்ச்சா, சரண் சிங்கின் பாரதீய லோக் தளம், ராஜாஜி முன்பு நடத்திவந்த சுதந்திரா கட்சி, ராஜ் நாராயணன் - ஜார்ஜ் பெர்னாண்டஸின் சோஷலிஸ்ட் கட்சி என்று பல கட்சிகளின் கூட்டாக உருப்பெற்ற ஜனதா கட்சியின் முக்கியமான ஓர் அங்கமாக ஜன சங்கம் இருந்தது. நெருக்கடிநிலைக்குப் பின் இந்திராவுக்குப் பெரும் எதிர்ப்பு எழுந்து காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தபோது, ஜனதா கட்சி 1977 தேர்தலில் மொத்தமாக 41.3% ஓட்டுகளைப் பெற்றது. இந்திய வரலாற்றில் காங்கிரஸுக்கு எதிராக எதிர்க்கட்சி ஒன்று பெற்ற அதிகபட்ச ஓட்டு விகிதம் இது. அடுத்து வந்த 1980 தேர்தலில் இந்த எண்ணிக்கை 18.9% ஆகச் சரிந்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தென்னகம்: உறுதியான போராட்டம்

சமஸ் 19 Mar 2024

பாஜக வரலாறு

ஜனதாவிலிருந்து பிரிந்து வந்த ஜன சங்கத்தினர் பாஜகவை உருவாக்கிய பின் 1984இல் தன்னுடைய முதல் மக்களவைத் தேர்தலை வாஜ்பாய் தலைமையில் சந்தித்தது. 543 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களை வென்றது; வாங்கிய மொத்த ஓட்டுகள் 7.7%.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை அத்வானி கையில் எடுத்த பிறகுதான் பாஜக மேல் எழுந்தது. 1989 தேர்தலில் 83 இடங்களை அது வென்றது; இப்போது நாடு முழுக்க வாங்கிய ஓட்டுகள் 11.3%.

பாஜக தேசிய அளவில் காங்கிரஸுக்கு அடுத்த இடத்தை 1991 தேர்தலில் உறுதியாகப் பிடித்தது. உத்தர பிரதேசத்தில் மட்டுமே 51 இடங்களை வென்றதன் மூலம் மொத்தமாக 120 இடங்களை வென்றது; பெற்ற ஓட்டுகள் 20.1%. இந்த எண்ணிக்கையையே பாஜகவின் உத்தரவாதமான ஓட்டு வங்கியாகக் கருதலாம். காரணம், இதைத் தாண்டி அதன் ஓட்டு விகிதம் அதிகரிக்கும்போதெல்லாம் காங்கிரஸ் மிக மோசமான சூழலில் இருக்க வேண்டியிருப்பதோடு, பாஜகவுக்கு அதன் கட்சிப் பலத்தைக் காட்டிலும் அதிகமான செல்வாக்கு கொண்ட ஒரு தலைவர் தேவைப்படுகிறார் என்பதே வரலாறு.

வாஜ்பாயும் மோடியும்

ராஜீவ் மறைவுக்குப் பிந்தைய பத்தாண்டுகள் காங்கிரஸ் மிக பலவீனமான இடத்தில் இருந்தது. எதிரே 1996, 1998, 1999 இந்த மூன்று தேர்தல்களுடன் 2004 தேர்தலையும் வாஜ்பாய் தலைமையில் பாஜக எதிர்கொண்டது. 

பாஜகவாலும் வலுவான கூட்டணியை அமைக்க முடியும்; காங்கிரஸ் அல்லாத ஓர் அரசாலும் முழுமையாக ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வாஜ்பாய்தான் உருவாக்கினார். செல்வாக்கு மிக்க வாஜ்பாய் தலைமையில், இந்த நான்கு தேர்தல்களிலும் பாஜக வென்ற இடங்கள்: 161; 182; 182; 138. வாக்குகள்: 20.2%; 25.5%; 23.7%; 22.1%.

மோடியின் காலத்தில் பாஜக அதன் உச்சத்தை அடைந்தது. 2014 தேர்தலில் 282 இடங்களையும் 2019 தேர்தலில் 303 இடங்களையும் அது வென்றது. பெற்ற வாக்குகள்: 31.2%, 37.4%.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி

சமஸ் 23 Mar 2024

காங்கிரஸுடன் ஒப்பிட முடியுமா?

நேரு தலைமையில் முதல் மூன்று தேர்தல்களைச் சந்தித்தது காங்கிரஸ். 1951இல் அது வென்ற இடங்கள் 364; பெற்ற வாக்குகள் 45%. 1957இல் 371 இடங்களையும் 47.8% ஓட்டுகளையும் வென்றது. 1962இல் 361 இடங்களையும் 44.7% ஓட்டுகளையும் பெற்றது.

நேருவின் மறைவுக்குப் பின் இந்திரா தலைமையில் நான்கு தேர்தல்களை எதிர்கொண்டது காங்கிரஸ். 1967இல் 283 இடங்களையும் 40.8% ஓட்டுகளையும் வென்றது. 1971இல் 362 இடங்களையும் 43.7% ஓட்டுகளையும் பெற்றது. 1977இல் ஜனதா கட்சியிடம் ஆட்சியை இழந்தபோதுகூட 154 இடங்களையும் 34.5% ஓட்டுகளையும் பெற்றது. 1980இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபோது 353 இடங்களையும் 42.7% ஓட்டுகளையும் பெற்றிருந்தது.

இந்திராவின் மறைவுக்குப் பின் ராஜீவ் தலைமையில் காங்கிரஸ் எதிர்கொண்ட 1984 தேர்தல் அதற்கு உச்ச வெற்றி கொடுத்ததாகும். 415 இடங்களையும் 48.1% ஓட்டுகளையும் இந்தத் தேர்தலில் வென்றது காங்கிரஸ். இதற்குப் பின்னரே காங்கிரஸின் சரிவு ஆரம்பமானது. 1989 தேர்தலில் 197 இடங்களையும் 39.5% ஓட்டுகளையும் பெற்றது. 1991 தேர்தலில் 244 இடங்களையும் 36.4% ஓட்டுகளையும் பெற்றது.

ராஜீவ் மறைவுக்குப் பிந்தைய 1996, 1998, 1999 தேர்தல்களில் காங்கிரஸ் முறையே 140, 141, 114 இடங்களையும் 28.8%, 25.8%, 28.3%, ஓட்டுகளையும் பெற்றது. சோனியா தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்த 2004, 2009 தேர்தல்களில் கட்சி முறையே 145; 206 இடங்களையும் 26.65%; 28.6% ஓட்டுகளையும் பெற்றது.

ராகுல் காலம்

ராகுல் களத்துக்கு வந்த பிறகான 2014, 2019 தேர்தல்களின் கதை எல்லோருக்கும் தெரிந்தது. முந்தைய தேர்தலில் 44 இடங்களையும் பிந்தைய தேர்தலில் 52 இடங்களையும் வென்றாலும், காங்கிரஸ் பெற்ற ஓட்டுகளில் பெரிய வேறுபாடு இல்லை: 19.6%. இன்றைய காங்கிரஸின் உத்தரவாதமான வாக்கு வங்கியாக இதைக் கருதலாம்தானே? 

காங்கிரஸுடைய மோசமான இரு தேர்தல்கள் இவை என்பதையும், ஏற்கனெவே பலகீனமாக இருந்த காங்கிரஸின் உட்கட்சி அமைப்பை சென்ற பத்தாண்டுகளில் துவம்சம் செய்துவிட்டிருக்கிறது பாஜக என்பதையும் எல்லோருமே அறிவார்கள். 

இத்தனைக்குப் பிறகும், நாட்டின் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் உள்ள 4,032 இடங்களில், பாஜகவுக்கு 1,455 பேர் இருக்கிறார்கள் என்றால், காங்கிரஸுக்கு 684 பேர் இருக்கிறார்கள். அதாவது, மூன்றில் ஒருவர் பாஜக என்றால், ஆறில் ஒருவர் காங்கிரஸ். 

பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் இந்தி பிராந்தியத்தில் உபி, பிஹார், ஜார்கண்ட் நீங்கலாக ஏனைய எல்லா மாநிலங்களிலும் பாஜகவுக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸே இருக்கிறது. ராஜஸ்தானில் இன்னமும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் 2% ஓட்டு இடைவெளியே இருக்கிறது. சென்ற 20 ஆண்டுகளில் இரண்டாண்டுகள்கூட அது ஆட்சியில் இல்லாததும், வலுவான சங்க பரிவார அடித்தளத்தைக் கொண்டதுமான மத்திய பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தில் பாஜகவுடன் இன்றும் தலைக்குத் தலை முட்டும் இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. 

கட்சித் தலைமையின் பலம், கட்சி இயந்திரத்தின் பலம், உள்ளூர் தலைவர்களின் பலம் எல்லாம் சிதைந்த பிறகும் காங்கிரஸுக்கு மக்களிடம் உள்ள பலமாகவே அதன் இடத்தையும் 19.5% ஓட்டு வங்கியையும் கருத வேண்டும். அந்த வகையில் பாஜக 37.4% ஓட்டு வங்கியில், மோடியின் சரி பாதி பங்கைக் கழித்துவிட்டால் அதன் இன்றைய அசல் பலம் 18.7%. 

வரவிருக்கும் தேர்தலில் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 என்ற எண்ணிக்கைக்குச் சற்று குறைவாக 250 இடங்களை ஜெயித்தாலும்கூட பாஜக ஆட்சிக்கு வருவது உத்தரவாதம் இல்லை. ஆனால், 125 இடங்களை வென்றாலே காங்கிரஸை ஏனைய கட்சிகள் கூடி ஆதரித்து ஆட்சியில் அமர்த்திவிடும் என்பதே நிதர்சனம். ஒரு கட்சியின் உண்மையான பலம் அது தன்னுடைய சொந்த வட்டத்துக்கு வெளியில் மக்களிடத்தில் எத்தகைய வலுவைக் கொண்டிருக்கிறது என்பதிலேயே இருக்கிறது என்றால் இந்தியாவின் பெரிய கட்சி காங்கிரஸ்தான்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   19 days ago

Congress Party needs a strong leader. Of course, Rahul Gandhi is a good leader, but Congress needs a strong leader too. In my opinion Priyanka Gandhi should come to the front and lead the Party. In politics It is not enough to be good only, but also to be strong in commitment and action.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சோறுஅல்லிகூடங்குளம்தமிழக ஆளுநரின் அதிகார மீறல்உத்தர பிரதேசம்எழுத்தாளர்கள்4ஜி சேவைடூட்ஸிசென்டரிஸம்சிந்தனைகள்பெருமாள் முருகன் கட்டுரைபெருநகரங்கள்சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரிசிதம்பரம் அருஞ்சொல் கட்டுரைவேலையின்மைஇங்கிலாந்துகடவுச்சொல்மாமாஜிஉணவுஅன்வர் ராஜா பேட்டிஅரசின் கொள்கைஎருமை பால்சிபாப்அமெரிக்க அதிபர் தேர்தல்பாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லைகருத்துச் சுதந்திரத்தை அணுகுவதில் இரு பாதைகள் இல்லபருவநிலை மாற்றம்குறைந்தபட்ச உத்தரவாத வருமானச் சட்டம்அசாஞ்சேஇந்துக்கள் எப்படியும் யோசிக்கலாம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!