ஆளுமைகள் 14 நிமிட வாசிப்பு

நேரு என்னவாக எஞ்சியிருக்கிறார்?

ராமச்சந்திர குஹா
15 Nov 2021, 5:00 am
0

பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1949ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். பயணத்துக்கு முன்னால், வழக்கத்துக்கு மாறாக சற்றே பதற்றம் அடைந்தவர்போலக் காணப்பட்டார். “எந்த மனோபாவத்துடன் நான் அமெரிக்காவில் உரையாற்ற வேண்டும்?” என்று தங்கை விஜயலட்சுமி பண்டிட்டிடம் கேட்டார். “மக்களிடம் எப்படிப் பேச வேண்டும்? அரசாங்கத்திடமும் தொழிலதிபர்களிடமும் மற்றவர்களிடமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அமெரிக்க மக்களிடம் நான் யாராகக் காட்சி தர வேண்டும்? இந்தியனாகவா, நாகரிகமிக்க ஐரோப்பியக் கனவானாகவா? அமெரிக்க மக்களுடன் நண்பனாக இருக்க விரும்புகிறேன், அதேவேளையில் நம்முடைய லட்சியங்கள் என்ன என்பதைத் தெளிவாக உணர்த்தவும் விரும்புகிறேன்”

கடைசியாகக் குறிப்பிட்ட நோக்கத்தை, நேரு நன்றாகவே நிறைவேற்றினார். அமெரிக்காவிலிருந்த மூன்று வாரங்களிலும் அவர் அந்தக் கண்டம் முழுவதும் சுற்றி வந்தார். ஒவ்வொரு நாளும் ஓரிடத்தில் முக்கிய உரையை நிகழ்த்தினார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல், சிகாகோ தேவாலயத்துக்கு வரும் அன்றாட வழிபாட்டாளர்கள் வரையில் பலதரப்பட்டவர்களையும் சந்தித்தார்.

கொலம்பியா பல்கலைக்கழகம் நேருவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர் உரையை மிகவும் கவனமுடன் கேட்டனர். பாஸ்டன் நகரில் டாக்ஸி டிரைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, சாமானியர்களுடைய மனங்களிலும் இடம் பிடித்தார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டனைச் சந்தித்ததன் மூலம், மேட்டுக்குடியில் பிறந்த அறிவுஜீவி என்பதையும் மற்றவர்களுக்கு உணர்த்தினார்.

மகிழ்ச்சியடையாதவர்கள்!

அந்த அமெரிக்கப் பயணத்தின்போது நேருவை தொழிலாளர்களும் – தொழிலதிபர்களும், குடியரசுக் கட்சியினரும் – ஜனநாயகக் கட்சியினரும், ஆண்களும் – பெண்களும் பாராட்டினர். அவருடைய பயணத்தின்போது மகிழ்ச்சியடையாத ஒரே வர்க்கம் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள்தான்.

சுதந்திர உலகின் தலைமை நாடு அமெரிக்கா என்று நேரு வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை என்பது அவர்களுடைய மனக்குறை. அதிகார வர்க்கமல்லாத அமெரிக்காவோ, அவருக்குத் தன்னுடைய இதயங்களிலே இடம் கொடுத்தது. ‘உலக ஜாம்பவான்’ என்று ‘கிறிஸ்டியன் சயன்ஸ் மானிட்டர்’ பத்திரிகை அவரை வர்ணித்தது. “நேரு நம்மிடமிருந்து விடைபெற்றார், ஏராளமான பெண்கள் கண்களில் கண்ணீர் கசியப் பார்த்திருக்கும்போது” என்று ‘செயின்ட் லூயி போஸ்ட்’ என்ற பத்திரிகையில் ஒருவர் கட்டுரையை முடித்திருந்தார். இந்தப் பெண்களும் சில ஆண்களும் அவரைப் பற்றியே தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தனர் – நியூயார்க் நகரின் முன்னணி புத்தக நிறுவனம் அவருடைய அமெரிக்க உரைகளைத் தொகுத்துப் பிரசுரித்ததைப் படித்ததன் மூலம்.

சோவியத் பயணம்

அமெரிக்கப் பயணம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்துக்கு சென்றார் நேரு. அதற்கும் முன் 1927லும் – ஒரு சுற்றுலாப் பயணியாக - அந்நாட்டைப் பற்றி அறியச் சென்றார். இந்த முறையோ, உலக ராஜதந்திரிகளில் ஒருவராகப் புகழ்பெற்ற பிறகு செல்கிறார். அவருக்கு சோவியத் ஒன்றியத்தில் கிடைத்த வரவேற்பு அனைத்து எதிர்பார்ப்புகளையும் மிஞ்சிவிட்டது.

சோவியத் நாட்டில் நேரு எங்கு சென்றாலும் அவரை வரவேற்க, தானாகவே சேர்ந்த கூட்டம் ஆயிரக்கணக்கானோரைக் கொண்டிருந்தது. அவர் எப்படி இருப்பார் என்று நேரில் பார்த்துவிடும் ஆவலில் எல்லா ஆலைகளிலும் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை நிறுத்திவிட்டு வந்தனர். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள், தங்களுடைய வகுப்புகளுக்குக்கூடச் செல்லாமல் நேரு வருவதைப் பார்க்கச் சென்று, உற்சாகமாகக் குரல் எழுப்பியும் பலத்த கரகோஷம் செய்தும் வரவேற்றனர்.

இப்படி நேருவைக் காண வந்தவர்களில் ஒருவர்தான் மிகையீல் கொர்பச்சேவ். பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது நினைவுக் குறிப்புகளை எழுதிய கொர்பச்சேவ், நேருவைப் பார்த்தபோது தனக்குள் எழுந்த உணர்ச்சி அலைகளை விவரித்துவிட்டு, தார்மிகம் சார்ந்த அவருடைய அரசியல் தன்னை மிகவும் ஈர்த்தது என்று பதிவுசெய்திருக்கிறார்.

நேருவின் ஆளுமை உலக அரங்கில் எப்படியிருந்தது என்பதைப் பறைசாற்றும் கடைசி அடையாளமாக நான் குறிப்பிட விரும்புவது, இத்தாலியின் மிலன் நகரிலிருந்து புத்தகங்களைப் பதிப்பித்த உலகப் புகழ்பெற்ற நிறுவனம் ‘ஃபெல்டிரினெல்லி’யின் தேர்வுதான். 1955இல் முதன்முறையாக பதிப்புப் பணியைத் தொடங்கிய அந்த நிறுவனம் வெளியிட்ட முதல் இரண்டு புத்தகங்களில் ஒன்று நேருவின் சுயசரிதை. “தொடர்ச்சியாகவும் கோவையாகவும் பாசிஸத்துக்கு எதிராக அவர் பின்பற்றிய கொள்கைகளையும், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் உலக அரசியல் முறைமையில் தங்களுக்குரிய இடத்தை மிக்க உரிமையுடன் பெற அவருடைய குரல் உறுதியோடு ஒலித்த நிலையையும் சுட்டிக்காட்டி சுயசரிதையை அது பதிப்பித்தது.

இதயத்தில் இடம்பெற்ற இளவரசர்

1950களின் நடுப்பகுதியில் உள்நாட்டில் அவருக்கிருந்த செல்வாக்கு, உலக நாடுகளில் அவர் பெற்ற புகழுக்கு ஈடாக இருந்தது. இந்திய மக்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்துவிட்ட இளவரசராக அல்லது அதற்கு இணையான நிலையை அவர் பிடித்துவிட்டார். அவர் காந்திஜியால் தேர்வுசெய்யப்பட்ட அரசியல் வாரிசு, சுதந்திர இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பிரதம மந்திரி.

1950இல் வல்லபபாய் படேல் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் சகாக்களிடையே, அவர் முதன்மையானவராகத் திகழ்ந்தார். உருக்காலைகளையும் மாபெரும் நீர்த் தேக்க அணைகளையும் உருவாக்கிய அவருடைய தொலைநோக்குப் பார்வை அனைவராலும் ஏற்கப்பட்டது. பேரினவாதிகளை எதிர்த்துப் போரிட்ட நெஞ்சுரம் மிக்கத் தலைவராக அவரைப் பார்த்தனர்.

நாட்டின் சுதந்திரத்துக்காக, சுயநலம் கருதாமல் ஆண்டுக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்தவராக நேரு பார்க்கப்பட்டார். எல்லாவற்றையும்விட, அவர் நல்லவர் என்ற எண்ணமே அனைவருக்கும் இருந்தது. உயர் சாதி மக்களையும் – சமூகப் படிநிலையில் கீழ்த்தட்டில் இருந்தவர்களையும் ஒருசேர ஈர்த்தார். இந்துக்கள் – முஸ்லிம்கள், வட இந்தியர்கள் – தென் இந்தியர்கள் என்று எல்லாத் தரப்பினரும் அவரை ஏற்றனர்.

புது தில்லியில் 1950களில் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய தமிழர், “புதுதில்லியின் மையத்தில் ஒளிரும் தங்கத் தட்டாகவே நேருவை நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.

மௌன்ட் பேட்டன் கருத்து

நேரு பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய வரலாற்றாசிரியர் எஸ்.கோபால், 1970களின் தொடக்கத்தில் முதலில் பேட்டி கண்டது மௌன்ட்பேட்டன் பிரபுவைத்தான். “நேரு மட்டும் 1958இல் இயற்கை எய்தியிருந்தால் இருபதாவது நூற்றாண்டின் மிகப் பெரிய ராஜதந்திரியாக – உலகத் தலைவராக அவர் நினைவில் நின்றிருப்பார்” என்றார். இப்போதைய இந்தியர்கள், நேருவை 1958க்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகளுக்காகவே அவரைப் பெரும்பாலும் நினைவில் வைத்துள்ளனர் என்பது துயரகரமானது.

கேரளத்தில் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த முதலாவது கம்யூனிஸ்ட் அரசை, 1959இல் மத்திய அரசு நேருவின் ஒப்புதலுடனே ஆட்சியிலிருந்து அகற்றியது. அதே ஆண்டு தலாய் லாமா இந்தியாவில் அரசியல் புகலிடம் தேடி ஓடிவந்தார்; சீனத்துடனான இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டது. பிறகு பங்குச் சந்தையில் மிகப் பெரிய ஊழல் நடந்து, அதன் காரணமாக நேருவின் நம்பிக்கைக்குரிய நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக நேர்ந்தது.

இதைவிட மோசமான அதிர்ச்சி சம்பவங்கள் அடுத்து நடந்தன. மிகவும் கண்ணியமான நடத்தைக்காகப் புகழப்பட்ட நேரு, அந்த கண்ணியம் காரணமாகவே, தவறிழைக்கும் தன்னுடைய கட்சி சகாக்களைத் தட்டிக்கேட்கும் திராணி இல்லாதவராகப் பார்க்கப்பட்டார்.

ராணுவ அமைச்சராக இருந்துகொண்டு அரசுக்கு தர்மசங்கடம் அளிக்கும் வகையில் பேசிவந்த கிருஷ்ண மேனன், ஒடிசாவிலும் பஞ்சாபிலும் ஆட்சி செய்த ஊழல் முதல்வர்கள் அவருக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துத் தந்தனர்.

காஷ்மீர் பிரச்சினை தீரவில்லை, நாகாலாந்திலும் அமைதி ஏற்படவில்லை. முதல் பத்தாண்டுகளில் நிலவிய சமூக ஒற்றுமை, வட இந்தியாவில் அடுத்தடுத்து நடந்த வகுப்புக் கலவரங்களால் குலைந்தது. 1961இல் கோவா மாநிலத்தைப் போர்த்துகீசியர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற எடுத்த ராணுவ நடவடிக்கையானது, சர்வதேச அரங்கில் நேருவுக்கிருந்த புகழைச் சற்றே மங்கச் செய்தது. 1962 அக்டோபரில் நடந்த சீனப் படையெடுப்பு, உள்நாட்டில் அவருக்கிருந்த செல்வாக்கைச் சீர்குலைத்தது. “தன்னுடைய நம்பிக்கைகள் அனைத்தும் அடுக்கடுக்காக சீர்குலைந்து போகும் காட்சியையே வாழ்நாளின் கடைசி கட்டத்தில் கண்டார் நேரு; ஆண்டுக்கணக்காக அசைத்தே பார்க்க முடியாத அவருடைய செல்வாக்கு, அடுத்தடுத்த சம்பவங்களால் அடுக்கடுக்கான சிதைவுகளாக உயர்ந்தன” என்று எழுதியிருக்கிறார் ஆஸ்திரேலிய ராஜீயத் துறை அதிகாரி வால்டர் கிராக்கர்.

இடது, வலது சாடல்

இது 1963இல் இருந்த கண்ணோட்டம்; 2003-ல் நிலைமை மேலும் மோசமாகியது.  நேரு இறந்த பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அவருக்கிருந்த புகழ் மேலும் மேலும் சரிந்தே வந்திருக்கிறது. சுதந்திரச் சந்தையை ஆதரித்தவர்கள் அவரை ‘பர்மிட்-லைசென்ஸ்-கோட்டா’ அரசின் பிதாமகன் என்றே சாடினர். புதியவற்றைக் கண்டுபிடிப்பதையும் சுதந்திரமாகத் தொழில்களைத் தொடங்குவதையும் கட்டிப்போட்டவர் என்றே பார்க்கப்படுகிறார். பொருளாதாரத்தின் எதிர்ப்பக்கத்திலிருந்து பார்க்கும் மார்க்சிஸ்ட்டுகளோ, “வலுவான நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தத் தவறிவிட்டார், தொழிற்சாலைகளை தேசியமயமாக்குவதில் முழு ஈடுபாட்டோடு செய்யாமல் அரைகுறையாகச் செய்தார்” என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேருவை மிகவும் கடுமையாக விமர்சிப்பவர்கள் யார் என்றால் இந்துத்துவா ஆதரவாளர்கள்தான். அவருடைய சமூகக் கொள்கையை, முஸ்லிம்களை  தாஜாசெய்யும் கொள்கையாகவே அவர்கள் பார்க்கின்றனர். அவருடைய வெளியுறவுக் கொள்கையும் அப்படியே பாகிஸ்தான், சீனா, சோவியத் ஒன்றிய நாடுகளுக்குக் கோபம் வராமல் பார்த்துக்கொள்வதை லட்சியமாகக் கொண்டிருந்தது என்கின்றனர். இந்தியாவின் பாரம்பரியமான சிந்தனைகளின் சாரத்துக்கு நேர்முரணாகச் சிந்தித்தவர் நேரு என்பது அவர்களுடைய கண்ணோட்டம்.

எஞ்சியிருப்பது என்ன?

நேரு இவ்வளவுதானா? இப்போது நேருவுடையது என்று காட்ட எஞ்சியிருப்பது என்ன? இன்றைய இந்தியாவுக்குப் பொருத்தமாக அவர் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்தவையோ, அரசியல் நடைமுறைகளோ ஏதாவது பாக்கி இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை அளிப்பதற்கு முன்னால், பிரதமர் பதவிக்கு அவருக்குப் பிறகு வந்த அவருடைய மகள், பேரன் ஆகியோருடைய செயலுக்காகவும் அவரை விமர்சிக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என்று முதலிலேயே கூற விரும்புகிறேன். பின்னால் வந்த இருவரின் தோல்விகளும் குற்றங்களும் அவரவர்களுடையது. காலத்தைப் பின்னோக்க வைத்து அவற்றுக்காக நேரு மீது குற்றம் சுமத்த வேண்டாம்.

‘நேருவிய இந்தியன்’ என்றே என்னை அழைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக அவர் சொன்ன அல்லது செய்த எல்லாவற்றையுமே சரி என்று நான் ஏற்றுக்கொள்வதாகப் பொருள் இல்லை என்றும் உடனடியாகக் கூறிவிட விரும்புகிறேன்.

நேருவுடைய பொருளாதாரக் கொள்கை மிதமான அளவுக்குக் குறைபாடுகள் உள்ளவை. இந்தியத் தொழில் துறையினரே ஒப்புக்கொள்வதைப் போல, நாடு சுதந்திரமடைந்த காலத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசின் ஆதரவும் வழிகாட்டலும் மிகவும் அவசியமாகவே இருந்தது. இருந்தாலும், வியாபாரிகளை வெறுக்கும் பிராமணியக் கண்ணோட்டத்தை அவர் தவிர்த்திருக்கலாம். நிலச் சீர்திருத்தங்களை அவர் மேலும் வலுவாக அமல்படுத்தியிருக்க வேண்டும். கேரளத்தில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசைப் பதவியிலிருந்து அகற்றியது விவேகமற்ற செயல். பின்வரும் காலங்களில், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு அதுவே முன்னோடியாக அமைந்தது. சீன நாட்டையும் சீனத் தலைவர்களையும் அவர் குறைத்து மதிப்பிட்டது முதிர்ச்சியற்ற செயல். இந்த விஷயத்தில் அவர் அதிகம் கிருஷ்ண மேனனின் பேச்சை நம்பியதற்குப் பதில், வல்லபபாய் படேலின் ஆலோசனையைக் கேட்டிருக்கலாம்.

தொடக்கக் கல்வியை நேரு புறக்கணித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஐஐடி என்றழைக்கப்படும் உயர் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களை அவர் தொடங்கியிருக்கலாம். அதேசமயம், அனைவருக்கும் எழுத்தறிவு இயக்கத்தையும் தொடங்கியிருக்க வேண்டும். 1947-களில் நம் நாட்டில் தன்னலம் கருதாத நற்சிந்தனையுள்ள அரசியல் தலைவர்களும், சுதந்திர இந்தியாவுக்காகப் பணியாற்றும் அர்ப்பணிப்புள்ள மூத்த அதிகாரிகளும் இருந்தனர்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டுவிட்டு நாடு சுதந்திரமடைந்த பிறகு பெரிய பொறுப்புகளின்றி ஆயிரக்கணக்கில் காங்கிரஸ் தொண்டர்களும் இருந்தனர். அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், காங்கிரஸ் தொண்டர்கள் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டிருந்தால் அடுத்த பத்தாண்டில் இந்தியாவில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கும். அது அனைத்திலும் அனைவருக்கும் சம வாய்ப்பை அளித்திருக்கும், சமீப காலங்களில் தலைதூக்கியிருக்கும் சாதிச் சண்டைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கும். நேருவின் அணுகுமுறையில் அதை மிகப் பெரிய குறையாகவேப் பார்க்கிறேன்.

ஆயினும் என்னை நான் நேருவிய இந்தியன் என்றே அழைத்துக்கொள்கிறேன். முக்கியமான பல விஷயங்களில் நான் நேருவின் நிலையையே ஆதரிக்கிறேன். அவர் காட்டிய சமூக சகிப்புத்தன்மையைப் பாராட்டுகிறேன், பன்மைத்துவத்துக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் அவர் தந்த மரியாதையைப் போற்றுகிறேன். இந்தியத்துவம் என்பதை, பெரும்பான்மை மதம் சார்ந்ததாக மாற்றுவதற்கு அவர் உடன்படவில்லை. மொழி விஷயத்திலும் அவர் நேர்மையாகவே நடந்துகொண்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நேருவுக்கும் படேலுக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைவிட வேறெங்கும் இவை நன்கு வெளிப்படவில்லை.

மேற்கு பஞ்சாபிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருந்த இந்து அகதிகளுக்கு நேரிட்ட கொடுமைகளுக்காக, இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அந்தக் குரல்கள் ஒருகட்டத்தில் உரக்க கேட்கத் தொடங்கியது, பலர் அது கட்டாயம் என்றுகூட நினைத்தனர். இந்தக் குரல்களை ஒடுக்கியே தீர வேண்டும் என்று அன்றைய உள்துறை அமைச்சருக்கும் தன்னுடைய நெருங்கிய சகாவுக்கும் தீர்மானமாகத் தெரிவித்தார் நேரு.

இந்த விஷயத்தில், "இது பாகிஸ்தானில்லை... இந்தியா" என்று கூறிவிட்டார். "பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினரை அவர்கள் சமமாக நடத்தாமல் இருக்கலாம், துன்புறுத்தலாம், அதற்காக இந்தியாவிலும் நாமும் அப்படியே நடந்துகொள்ளத் தேவையில்லை" என்றார் நேரு. சிறுபான்மையினருக்கு நாம் மரியாதை தர வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார். “பாகிஸ்தானில் இந்துக்களைத் தண்டிக்கிறார்கள் என்பதற்காக இந்தியாவில் முஸ்லிம்களை நாமும் பதிலடியாகத் தண்டிக்க வேண்டும் என்ற கூக்குரல் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கிறது. இந்த வாதம் எனக்குச் சிறிதளவும் உடன்பாடானதல்ல. இந்தியா என்ற நாடு பாகிஸ்தான் என்ற நாட்டின், கண்ணாடியில் தெரியும் எதிர்ப்பிம்பம் அல்ல. நம்முடைய மதச்சார்பின்மை லட்சியங்கள், இந்திய முஸ்லிம்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் தர வேண்டிய பொறுப்பை நமக்கு வழங்கியிருக்கிறது” என்று படேலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார் நேரு.

நேருவுக்கு மத நம்பிக்கை இருந்தது என்பதைவிட அவர் உலகளாவிய சிந்தனை உடையவராக, அனைவருக்கும் பொதுவானவராக இருந்தார் என்பதே சரி. அரசியல் தலைவர்களிலேயே பேரினவாத உணர்வு மிக மிகக் குறைவாகப் பெற்றிருந்தார். காந்தியைப் போலவே இனம், மதம், சாதி, வர்க்கம், பாலினம், புவியியல் இருப்பிடம் ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்டவராகத் திகழ்ந்தார்.

நேரு இந்து - ஆனால் முஸ்லிம்களின் சிறந்த நண்பர். பிராமணர் - ஆனால் சாதி விதித்த கட்டுப்பாடுகளையெல்லாம் கடந்தவர். வட இந்தியர் - ஆனால் தென்னிந்தியர்கள் மீது இந்தியைத் திணிக்க வேண்டும் என்ற சிந்தை இல்லாதவர். பெண்களால் நம்பிக்கை வைக்கப்பட்ட, மதிக்கப்பட்ட ஆண்.

உலக வரலாற்றில் இரக்கமும் கருணையும் கொண்ட, மிகச் சில ஆட்சியாளர்களின் வரிசையில் வைத்து எண்ணத் தகுந்தவர் நேரு என்று அவருடைய சம காலத்து எழுத்தாளர் எழுதியதைப்போல, அவர் பெற்றிருந்த செல்வாக்கு இணையற்றது. நலிவுற்றவர்கள், துரதிருஷ்டசாலிகள், மற்றவர்களால் மறக்கப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள் மீது தயையும் இரக்கமும் கொண்டவராக இருந்தார்.

இக்கால நடுத்தர வர்க்கத்தினர் அரசியல்வாதிகள் பற்றி கருத்துச் சொல்லும்போது மிகவும் கறாராக கணிக்கின்றனர். “நேரு நிகழ்த்தியுள்ள சாதனைகள் அரியவை, எனவே பிரதமர் பதவிக்கு வருகிற மற்றவர்களைக் கணிப்பதைப்போல அவரைக் கணித்துவிடக் கூடாது, நம்முடைய சமகால எதிர்பார்ப்புகளோடு கணிக்கும்போது ஏமாற்றமே மிஞ்சும்” என்கிறார் வரலாற்றாய்வாளர் கோபால்.

நேரு ஜனநாயகத்தை மட்டும் உருவாக்கவில்லை, நாட்டின் பன்மைத்துவத்துக்கும் வலு சேர்த்தார். ஜனநாயகமும் பன்மைத்துவமும் இந்தியாவின் சிறப்புகள். பன்மைத்துவம் கொண்ட இந்திய ஜனநாயகமே, நேரு நமக்கு விட்டுச்சென்ற பாரம்பரியம். கடைசி மூச்சு வரை நாம் அதைப் பாதுகாத்தே ஆக வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி







பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அசோக் வர்தன் ஷெட்டிபிசிசிஐநீதி போதனைபேராசிரியர் விரும்பாதவர்களுக்கும் போட்டிகேம்பிரிட்ஜ் சமரசம்பேரண்டப் பெரும் போட்டியூதர்கள்நாளிதழ்சாத்தானிக் வெர்சஸ்நம்பிக்கைமாணவர்கள் போராட்டம்மேற்கு வங்க அரசுதனித் தொகுதிகள்பொருளியல் துறைதமிழ்த் திரைப்படம்நீதிபதி சந்துருடெல்லி லாபிபயத்திலிருந்து விடுதலைவதந்திதேர்தல் நன்கொடைஇன அழிப்புகள்ஸ்மிருதி இரானிசிறுநீரகம் செயலிழப்பது ஏன்?முகமதி நபிஸ்டேட்டிஸ்டிக்ஸ்சென்னை போக்குவரத்து நெரிசல்தெலுங்கு தேசம்பாரீஸ் நகரம்ஜெயிலர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!