கட்டுரை, கல்வி 10 நிமிட வாசிப்பு

இந்தியக் கல்வி அமைப்பில் பைஜுஸ் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது?

எஸ்.அப்துல் ஹமீது
02 Jan 2022, 5:00 am
19

ந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸியில் என்ன பிராண்டின் விளம்பரம் இடம்பெற்றிருந்தது என்று கவனித்தீர்களா? பைஜுஸ். 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் வரையில் இந்திய அணிக்கான ஸ்பான்ஸர், ஆன்லைன் கோச்சிங் நிறுவனமான பைஜுஸ்தான். ஷாருக் கான் பைஜுஸின் விளம்பரத் தூதுவர்.

2011ல், சில லட்சங்கள் முதலீட்டில் போட்டித் தேர்வுகளுக்கு கோச்சிங் வழங்கும் நிறுவனமாக தொடங்கப்பட்ட பைஜுஸின் இன்றைய சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர். 5 கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் பைஜுஸில் தங்களைப் பதிவுசெய்திருக்கின்றனர். இதில் 55 லட்சம் மாணவர்கள் கட்டணம் செலுத்திப் படித்துவருகின்றனர். ஆண்டுக்கு ரூ.3000 கோடி அளவில் வருவாய் ஈட்டுகிறது பைஜுஸ்.

கடந்த ஓராண்டில் மட்டும் ‘ஆகாஷ் அகாடமி’ (950 மில்லியன் டாலர்), ‘கிரேட் லேர்னிங்’ (600 மில்லியன் டாலர்), ‘எபிக்’ (500 மில்லியன் டாலர்), ‘வொயிட்ஹேட்ஜூனியர்’ (300 மில்லியன் டாலர்) உட்பட 8 நிறுவனங்களை பைஜுஸ் வாங்கியிருக்கிறது.

பைஜுஸின் வளர்ச்சி என்பது இந்தியக் கல்வித் துறையின் வீழ்ச்சியைக் குறிக்கிறது என்று சொல்லலாம். ஏன்? அதைப் பார்ப்பதற்கு முன்னால், பள்ளி மாணவர்களுக்கு, நுழைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோச்சிங் வழங்கும் ஒரு நிறுவனம், எப்படி இந்த அளவுக்கு வளர்ந்தது என்பதைப் பார்த்துவிடலாம்.

பைஜுஸ் பிறந்த கதை

பைஜுஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரன், கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள அழிக்கோடு கிராமத்தில் 1981ம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். தாய்மொழியான மலையாளத்திலே பள்ளிப்படிப்பைக் கற்றார் ரவீந்திரன். கல்லூரிப் படிப்பையும் கண்ணூரிலேயே முடித்துக்கொண்டார் - இயந்திரவியல் பொறியியல். கல்லூரி முடித்ததும் அவருக்கு ஒரு பன்னாட்டு ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.

பாடங்களைப் புரிந்துகொள்வதிலும் கற்றுக்கொடுப்பதிலும் அபாரமான திறமை ரவீந்திரனிடம் இருந்தது. அதனால், ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்க நுழைவுத் தேர்வு எழுதும் ரவீந்திரனின் நண்பர்கள், அவரை நாடி வருவார்கள். அப்படி அவர் சொல்லிக்கொடுத்த நண்பர்கள், அந்த நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சிப் பெற்றனர். பைஜு ரவீந்திரனே தன்னுடைய திறமையைச் சோதித்துப்பார்க்க விளையாட்டாக ஐஐஎம் நுழைவுத்தேர்வு எழுதியபோது, அதில் 100 பெர்சன்டைல் பெற்று முதலிடம் பிடித்தார்.

இப்படிப்பட்டவர் மேற்படிப்புக்குச் செல்லவில்லை. ஷிப்பிங் நிறுவன  வேலையிலே தொடர்ந்தார். விடுப்பு கிடைக்கும்போது பெங்களூர் வந்து நண்பர்களுடன் தங்குவார். அந்தச் சமயங்களில், பலர் நுழைவுத் தேர்வு கோச்சிங்குக்காக அவரைத் தேடி வருவார்கள். நண்பர் வீட்டு மாடியில் வைத்து வகுப்பு எடுக்க ஆரம்பிக்கிறார். இதெல்லாம் 2005ம் ஆண்டு வாக்கில் நடக்கிறது. அப்போதே அவரது வகுப்புகள் பைஜுஸ் என்று மாணவர்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கிவிட்டது.

ரவீந்திரனின் கற்பித்தல் திறமை டெல்லி, மும்பை, புனே, சென்னை மாணவர்களிடமும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. வார இறுதி நாட்களில் ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்று வகுப்பு எடுக்கிறார். ஒரு கட்டத்தில் முழுநேரமாக கோச்சிங் பணியில் ஈடுபடலாம் என்று வேலையை விடுகிறார்.

காதல் மணமும், புது நிறுவனமும்

பைஜு ரவீந்திரனும், அவரது மனைவி திவ்யா கோகுல்நாத்தும் (கோச்சிங் வகுப்பின்போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர்) இணைந்து 2011-ம் ஆண்டு பைஜுஸை ‘திங்க் அண்டு லேர்ன்’ என்ற பெயரில் நிறுவனமாக மாற்றுகின்றனர். ரவீந்திரன் மூலமாக ஐஐஎம் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று அங்குப் படித்து முடித்த மாணவர்கள் ரவீந்திரனுடன் இணைகின்றனர்.

நுழைவுத் தேர்வுக்கான கோச்சிங் தவிர, பள்ளி மாணவர்களுக்கான டியூஷன் வகுப்புகளை எடுக்கும் நிறுவனமாகவும் பைஜுஸ் விரிவடைகிறது. தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து, வகுப்புகளை டிஜிட்டல் நோக்கி நகர்த்துகிறார் ரவீந்திரன். பயிற்சி வகுப்புகள் காணொளியாகப்  பதிவுசெய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது; தொடர்ச்சியாக 2015ல் பைஜுஸ் செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. அது பைஜுஸ் நிறுவனத்துக்கு பெரும் சந்தையைத் திறந்தது.

செயலி திறந்த வாசல்

அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே ஆண்டில் 55 லட்சம் பேர் பைஜுஸ் செயலியைத் தரவிறக்கம் செய்தனர். 2.5 லட்சம் மாணவர்கள் ஆண்டு சந்தா செலுத்தினார்கள்.  

பைஜுஸ் கைவைத்திருக்கும் சந்தை உலக கவனத்தை ஈர்த்தது. பைஜுஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட மறு ஆண்டிலேயே ‘செக்யுயா கேபிடல்’ (Sequoia Capital), ‘ஸோபினா’ (Sofina) ஆகிய இரு நிறுவனங்கள் 75 மில்லியன் டாலர் அளவில் பைஜுஸில் முதலீடு செய்கின்றன, ஃபேஸ்புக் நிறுவனத்தின் அமைப்பான  ‘சான் ஸூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ்’ (chan zuckerberg initiative) பைஜுஸில் 50 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்தபோது உலகம் உற்று அதை நோக்கியது. தற்போது, ‘சில்வேர் லேக்’, ‘பாண்ட்’, ‘பிளாக் ராக்’, ‘சேண்ட் கேபிடல்’, ‘டென்சென்ட்’, ‘ஜெனரல் அட்லான்டிக்’, ‘டைகர் குளோபல்’ என இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் பைஜுஸில் முதலீடு செய்துள்ளன.  

கரோனாவுக்குப் பிறகு இந்தியக் கல்வித் துறையே ஆன்லைனை நோக்கிய நகரலானது, பைஜுஸ் நிறுவனத்துக்கு மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பைஜுஸ் நிறுவனம் வருவாய் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

நன்றாகத்தானே இருக்கிறது, திறமை கொண்ட சாமானியர் ஒருவர் கல்வித் துறையில் உச்சம் தொட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே என்றுதானே கேட்கிறீர்கள்? ஆமாம், தன் திறமையை மூலதனமாகக் கொண்டு ரவீந்திரன் எட்டிய வளர்ச்சி உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், ஒரு நிறுவனமாக பைஜுஸ், சமூகத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம் வரவேற்கத்தக்க ஒன்று அல்ல. இந்தியக் கல்வி அமைப்பில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனநிலையில் பெரும் சிதைவை பைஜுஸ் ஏற்படுத்திவருகிறது. எப்படி?

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இயல்பான கல்வியமைப்புக்கான எமன்

பைஜுஸ் நிறுவனம் தற்போது தொடக்க வகுப்புகளில் தொடங்கி பள்ளியிறுதி வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும்,  நீட், ஐஏஎஸ் தொடங்கி வங்கித் தேர்வுகள் வரையில் கோச்சிங் வழங்கிவருகிறது. வகுப்புகளை  காணொலியாக மாணவர்களுக்கு வழங்குகிறது. பைஜுஸில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான கட்டணம் எவ்வளவு தெரியுமா? மாதம் ரூ.3,333. ஐந்தாம் வகுப்பிலிருந்து பத்து வரையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கட்டணம் மட்டும் ரூ.26,000. ஐஏஎஸ் கோச்சிங்குக்கான கட்டணம் ரூ.1.5 லட்சம் வரை செல்கிறது.

பள்ளி வகுப்பு முடிந்து டியூசனுக்கு என்று செலவிடத்தானே செய்கிறோம்!  எனில், பைஜுஸுடம் என்ன தவறு இருக்கிறது? ‘ஓலா வளர்கிறது, பேடிஎம் வளர்கிறது, அமேசான் பிளிப்கார்ட், மீஸோ வளர்கிறது, பைஜு’ஸ் ஏன் வளரக் கூடாது?’ என்று கேட்கலாம்.

நாம் பைஜுஸை ஏனைய துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது. பைஜுஸ் கை வைத்திருக்கும் இடம் கல்வி. அது ஒரு சமூகத்தின் போக்கிலேயே பெரும் விளைவுகளை  செலுத்துக் கூடியது. பைஜுஸ் அதனை விளம்பரப்படுத்தும் முறையிலிருந்தே அதன் மோசமான தன்மை ஆரம்பமாகிறது. சமீபத்தில் பைஜுஸ் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் ஒன்று சர்சையானது.  சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் மொத்தமுள்ள 761 ரேங்குகளில் 281 பேரும்,  ஐஏஎஸ்-க்குத் தேர்வாகியுள்ள முதல் 100 பேரில் 36 பேரும் பைஜுஸில் பயிற்சி பெற்றவர்கள் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் முழுப் பக்கத்துக்கு விளம்பரம் கொடுத்திருந்தது. அந்த விளம்பரம் வெளியான சில மணி நேரங்களிலே அந்த விளம்பரத்தில் இடம்பெற்ற மாணவர்கள், தாங்கள் பைஜுஸில் கோச்சிங் பெறவில்லை என்றும், அது அறிவித்த இலவச பயிற்சி வகுப்புகளில் அரைமணி நேரம் அளவில் மட்டுமே கலந்துகொண்டவர்கள் என்றும் விளக்கம் அளித்தனர். பிரச்சினை இது மட்டும் அல்ல. ‘உங்களுக்குப் பள்ளிக்கூடங்களில் சொல்லிக்கொடுக்கும் பாடங்களைப் பத்து நிமிஷங்களில் எங்கள் ஆசிரியர்கள் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்துவிடுவார்கள்’ என்ற பாணியிலான ஆள்பிடிக்கும் வேலையையும், இப்படிப்பட்ட வகுப்புகளில் பிள்ளைகள் சேராவிட்டால், அவர்களால் உருத்தேறவே முடியாது எனும் புற அழுத்தச் சூழலையும் அது உருவாக்கத் தொடங்கியிருப்பதுதான்!

பைஜுஸின் முதன்மை இலக்கு நடுத்தர வர்க்கமும், பிள்ளைகளின் கல்வியை நம்பிக்கையிருக்கும் ஏழை பெற்றோர்களும்தான். பைஜுஸில் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வெளியேறிவிட்ட ஒருவரிடம், "அவர்கள் எப்படி பெற்றோர்களிடம் பேசி பிள்ளைகளை பைஜுஸில் சேர்க்கச் செய்கிறார்கள்?" என்பது தொடர்பாக பேசினேன். அவர் சொன்னார், “பிற பொருட்களை விற்பதுபோல் அல்ல கல்வியை விற்பது. பிற பொருட்களை நீங்கள் விற்க வேண்டுமென்றால், நீங்கள் ஆசையைத் தூண்ட வேண்டும். ஆனால், நீங்கள் இந்தியாவில் கல்வியை விற்க வேண்டுமென்றால் பெற்றோர்களின் உணர்ச்சியைத் தூண்ட வேண்டும்.”

எப்படியெல்லாம் இலக்காக்குகிறார்கள்?

முக்கியமாக, இப்படியான கோச்சிங் சென்டர் வியாபாரத்துக்கு பைஜுஸ் ஒரு முன்னுதாரணமாகிவருகிறது. தற்போது கிராமப்புறப் பெற்றோர்களிடமும்கூட ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கும் யூடியூப் வீடியோக்களிலும், கேம்களிலும் பைஜுஸ் விளம்பரம் வருகிறது. கைதவறி பைஜுஸ் செயலியை டவுன்லோட் செய்துவிட்டால்கூட அவர்கள் இந்நிறுவனத்தின் இலக்குப் பட்டியலில் வந்துவிடுவதை அதன் பிரநிதிகளுடன் பேசுகையில் புரிந்துகொள்ள முடிகிறது. பெற்றோர்களின் தொடர்பு எண்களை இத்தகு நிறுவனங்கள் வேட்டையாடுகிறார்கள்.  அவர்களைத் தொடர்புகொண்டு வீட்டில் படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்களா, என்ன படிக்கிறார்கள், எத்தனை மதிப்பெண் பெறுகிறார்கள் என்று ஆரம்பித்து தற்போதைய காலகட்டத்தில் உங்கள் பிள்ளை கூடுதலாக கற்றுக்கொள்ளாவிட்டால் அவரது எதிர்காலம் கேள்விக்குறிதான் என்ற இடம் நோக்கி நகர்த்துகிறார்கள். அதாவது அச்சுறுத்துவதுதான் இங்கே வியாபாரத்துக்கான தூண்டில்!

அதன் பிறகு, ‘கவலைப்படாதீர்கள் நாங்கள் உங்கள் பிள்ளைக்குப் கோச்சிங் வழங்குகிறோம்.  சேருங்கள். இலவசமாக சில நாட்கள் பயன்படுத்திப்பாருங்கள். அதன் பிறகு முடிவுசெய்துகொள்ளுங்கள்’ என்றெல்லாம் தூண்டில்கள் வீசப்படுகின்றன.ஒருகட்டத்தில் நிறுவனத்தில் சேர்க்காவிட்டால் அது நம் பிள்ளைக்குச் செய்யும் துரோகம்’ என்று எண்ணும் அளவுக்குப் பெற்றோர்கள் கரைக்கப்படுகிறார்கள்.

குடிசைப் பகுதிகளிலும்கூட கடன் வாங்கி வகுப்புகளில் சேர்க்கும் நெருக்கடிநிலையை இத்தகு நிறுவனங்கள் உருவாக்கிவருகின்றன என்கிறார்கள். 

ஏன் இது ஒரு முக்கியமான பிரச்சினை?

ஏனைய துறைகளுக்கும் கல்வித் துறைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. அடிப்படையில் கல்வி என்பது சேவை. பைஜுஸுக்கு முன்பே கல்வி சந்தைப் பண்டமாக மாறிவிட்டது. நாமக்கல் பள்ளிகளைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், தனியார் பள்ளிகள் கல்வியை அணுகுவதற்கும் பைஜுஸ் போன்ற நிறுவனங்கள் அணுகுவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.  

தனியார் பள்ளிகள் அரசின் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட முடியும். அதன் கட்டண முறைகள் அரசின் விதிமுறைக்கு உட்பட்ட இருக்க வேண்டும். ஆனால், பைஜுஸ் மாதிரி நிறுவனங்கள் அப்படி அல்ல. அது பெற்றோர் மனதிலும் மாணவர்களில் மனதிலும் விளம்பரரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்திய அதன் ஒரு விளம்பரம் இது: – ‘Double the teachers double the learning!’ அதாவது, ஆசிரியர்களை இரட்டிப்பாக்கி, கற்றலையும் இரட்டிப்பாக்குங்கள்!

இந்தப் போக்கு மிக ஆபத்தானது. ஏற்கெனவே கல்விரீதியாக பெரும் ஏற்றத்தாழ்வை சந்தித்துவரும் இந்திய சமூக அமைப்பில் மிகப் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தக்கூடியதாக அமைவதோடு, கல்வியின் உண்மையான தரத்தையும் கீழே தள்ளக்கூடியது.

ஆன்லைன் கோச்சிங் நிறுவனங்களின் இத்தகையப் போக்கு இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் உண்டு. டிஜிட்டல் கோச்சிங் நிறுவனங்களில் கல்விரீதியாக சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவருகிறது என்பதை உணர்ந்த சீன அரசு தற்போது, இத்தகைய நிறுவனங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது. இந்தியா கவனம் அளித்துப் பார்க்க வேண்டிய உதாரணம் அது.

கல்வி கற்றல் முறை காலத்துக்கு ஏற்ப பரிணாமம் கொள்ளும். தற்போது ஆன்லைன் கல்வி அப்படியான ஒரு பரிணாமம்தான். நாம் ஆன்லைன் கல்வியையையும், பைஜுஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் கோச்சிங்கையும் ஒன்றாகக் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆன்லைன் கல்வி என்பது கல்வி கற்றலில் புதிய சாத்தியத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்று சொல்லலாம். ஹார்வார்ட் பல்கலைக்கழத்தில் உள்ள ஒரு பேராசிரியரின் பாடத்தை தமிழகத்தில் கடலூரில் உள்ள ஒரு மாணவன் பார்க்க முடியும். தற்போது பள்ளிக் கல்லூரி மாணவர்கள் தங்கள் பள்ளி வகுப்புப் போக யூடியூப்பில் பாடங்களைப் பாற்றுக் கூடுதலாக கற்று வருகின்றனர். பள்ளி வகுப்புகளிலும் ஆன்லைன் கல்வி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது.

பள்ளி தொடர்புடைய ஆன்லைன் கல்வி முறையில் பல்வேறு குறைபாடுகள் பிரச்சினைகள் இருக்கின்றன. ஸ்மார்ட் போன், இணையம் இன்னும் பல மக்களுக்கு - குறிப்பாக கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களுக்கு சென்று சேரவில்லை. ஆனால், இந்தப் பிரச்சினைகள் அரசால் நிவரத்தி செய்யப்படக் கூடியவை.  

ஆனால், பைஜுஸ் போன்ற நிறுவனங்களின் விவகாரம் இத்தகையது அல்ல. அவை கல்வியை சந்தைப் பண்டமாக அணுகுவதன் வழியே கல்வி அமைப்பிலே பெரும் தாக்கம் செலுத்துகின்றன. கல்வி என்பது குடிமகனின் அடிப்படை உரிமை; சமூக முன்னேற்றத்துக்கான ஊன்றுகோல் என்ற கட்டமைப்பையே  அவை தகர்க்கின்றன. இந்திய மக்கள் இதைத் தீவிரமாக எடுத்துச் செயலாற்ற வேண்டும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

20

20




3

பின்னூட்டம் (19)

Login / Create an account to add a comment / reply.

Tamil   1 year ago

சமூகம் மீதான உங்கள் அக்கறை ஒவ்வவொரு வரியுலும்...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Dr. S. Ezhilan   2 years ago

வரிமுறைகேட்டில் பைஜூஸ் 43 கோடியளவுக்கு ஈடுபட்டதாக வழக்கு நடக்கிறது. இதுபோன்ற புகார்கள் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கமுடியும்? வசதியுள்ளவர்கள் மட்டும் இதுபோன்ற குறுக்குவழியில் படிப்பதை புதியக்கல்விமுறை ஊக்குவிக்கிறதா? B. Ed கல்லூரிகள் அஞ்சல்வழிக்கல்வி நிறுவனங்களாக செயல்படுவதை NCTE கண்டுகொள்வதில்லை. உரிய பயிற்சியில்லாத ஆசிரியர்கள் முறையாகப் பாடம் எடுப்பதில்லை. அதன் விளைவு தான் இதுபோன்ற Tuition எடுக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி. அண்மைக்காலமாக நிரந்திரமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. பணியனுபவம் இல்லாத ஒப்பந்த ஆசிரியர்கள் திறமையாகப் பாடம் எடுப்பதில்லை. பாடங்கள் புரிவதும் இல்லை. Byjus ல் படிக்கும் மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களை மதிப்பதும் இல்லை. சிலகல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை நியமிக்காமல் செயலிகளைக் கொண்டே பாடம் நடத்துகின்றன. இதுபோன்ற கருப்பு நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கவனம் செலுத்தி முறைப்படுத்திட வேண்டும். எளியவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் சமூகநீதியை உறுதிப்படுத்திட வேண்டும்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Neya Puthuraja   2 years ago

Byjus app ல் நான்கு வருடத்திற்கான பணமாக 85000 தை கொடுத்து 15நாள் ட்ரையல் பீரியடில் கிடைத்த மோசமான பிரச்சினைகளால் 14வது நாள் கேன்ஷல் பண்ண மெயில் அனுப்பினேன் மற்றும் மென்டார் ஹெல்ப் லைனுக்கும் தெரிவித்தேன்... பல நாட்கள் தொடர்ந்து கால் பண்ணியும் இப்போதுவரை சரியான பதில் இல்லை...சுத்த ஏமாற்று பேர்வழிகள்...

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Arul Mani   3 years ago

Government should buy all coaching material from BYJUS and give it all school in the country by free of cost.

Reply 10 5

Selvaraj   2 years ago

அதானி வாங்க வேண்டும் என்கிறீர்களா

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Shankaran   3 years ago

முதலில் இந்த கட்டுரையில் சொல்ல வருவது என்ன என்று புரியவில்லை. பைஜூஸின் தொழில்முறை சரி அல்லது தவறு அல்லது பயனற்றது என்று சொன்னால் சரி . பைஜூஸ் அளிக்கும் சேவைக்கு அது கேட்கும் கட்டணம் மிக அதிகப்படியானது அல்லது நியாயமானது என்று விவாதித்தால் சரி. பொதுவாக எந்த சந்தையும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் கிடைக்கும் சேவையையே ஆதரிக்கும். பைஜூஸ் என்னளவில் செலவேறிய தேவையற்ற ஒன்று. ஆனால் பைஜூஸ் கல்வித்துறையை சந்தைப்பண்டமாக்குகிறது, சமநிலையின்மையை அதிகப்படுத்துகிறது என்றால் மற்றவர்கள் எல்லாம் என்ன கல்விச்சேவையா செய்து கொண்டிருக்கிறார்கள்? தனியார் பள்ளிகள் அனுமதிக்கப்பட்ட அன்றே இந்த சமநிலையின்மை தொடங்கிவிட்டது. உண்மையில் பைஜூஸ் குறித்து சொன்ன அனைத்தும் இங்கு தனியார் மற்றும் பெருநிறுவன பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகள் எந்த கேள்வியும் இல்லாமல் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பல தனியார் பள்ளிகளின் விளம்பரங்களைப் பார்த்தால் நாமே சிரித்து விடுவோம். மழலையர் வகுப்பில் சேர்ப்பதற்கே ஐம்பதாயிரம் முதல் லட்சம் வரை நன்கொடை மட்டுமே வாங்கும் பள்ளிகள் உள்ளன. ஒரு குழந்தைக்கு சராசரியாக ஆண்டுக்கு லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த கட்டண முறைப்படுத்துதலில் அரசு நடவடிக்கை எடுத்ததா? எடுத்திருந்தால் ஏன் இப்போது பெற்றோர் கொரோனா முடக்கத்தினால் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சென்று சேர்க்கிறார்கள்? எனவே தயவுசெய்து எல்லா விஷயத்திலும் சமூகநீதி முகமூடியை அணிய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். ஒரு நிறுவனத்தை விமர்சிப்பதென்றால் அதை மட்டும் செய்யவும். இறுதியாக, இந்த அன்னிய தனியார் முதலீட்டு நிறுவனங்கள் ( private equity) செலுத்தும் ஆயிரக்கணக்கான கோடிகளை குறித்து பெருமைப்பட எதுவுமில்லை. அவை முதன்மையாக சூதாடிகள். ஒரு நிறுவனத்தை மிகக் குறைந்த சாத்தியமற்ற விலையில் பொருட்களை சேவைகளை வழங்கி , சந்தையில் தனது சதவிகிதம் அதிகமானவுடன் லாபத்துடன் விற்க மட்டுமே குறியாக இருப்பார்கள். நிறுவனம் லாபம் சம்பாதிப்பது குறித்து பேச்சே இருக்காது. சந்தேகமிருந்தால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியாவின் சென்ற ஆண்டு லாபம் என்ன என்று விசாரித்து பார்க்கலாம். உண்மையான தொழில்முனைவோர் இந்த வலையில் சிக்கி தனது நிறுவனத்தை இழக்க மாட்டார்கள்.

Reply 50 7

Login / Create an account to add a comment / reply.

Sivasankaran somaskanthan   3 years ago

பைஜூஸ்சின் துணை நிறுவனமான WhiteHat Juniorஇன் விளம்பரங்களை சகிக்க முடியவில்லை . அவர்கள் கற்றுக்கொடுப்பதாக சொல்லப்படும் programming skills ஐ https://scratch.mit.edu/ போன்ற தளங்களிலும் வேறு பல tutorialகள் கொண்டும் எளிதாக கற்றுக்கொள்ளக் கூடியது. அத்துடன் programming skills-ஐ அவர்கள் இன்றியமையாத திறன் போல விளம்பரப்படுத்துகின்றனர் . WhiteHat Juniorஇன் பயிற்றுனர்களின் மூன்றாம் தர அறிவு குறித்தும் , விளம்பரங்களின் நம்ப முடியாத அளவுக்கு , மிகைப்படுத்தப்பட்ட பொய்யான கூற்றுகளும் சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சைக்கு உட்பட்டது பலரும் அறிந்திருக்கக் கூடும் . --------------------------------------------------------------- திறமையான சந்தைப்படுத்தல் கொண்டு அவர்களின் சேவைக்கு அதன் உண்மை மதிப்புக்கு அதிக விலை வைத்து விற்கின்றனர். அவர்கள் உள்ளடக்க உருவாக்கத்திற்கோ , அதற்கான ஆராய்ச்சிக்கோ (R & D ) செலவழிப்பதை விட பன்மடங்கு சந்தைப்படுத்துதலுக்கும் விளம்பரத்துக்கு தான் செலவு செய்கிறார்கள் . அவர்களின் மார்க்கெட்டிங் பிரிவு உச்சக்கட்ட சம்பளம் அளிக்கின்றனர் . Byju's is not an Ed-Tech company. it is a marketing company. Read this in social media

Reply 14 1

Login / Create an account to add a comment / reply.

M A Nijamudeen   3 years ago

விளங்கி செயல்பட வேண்டிய கட்டுரை

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Amaipaidhiralvom   3 years ago

The Free coaching academy " KHAN ACADEMY" is most better than Byjus

Reply 16 0

Sivasankaran somaskanthan   3 years ago

முற்றிலும் உண்மை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Narayanasami V   3 years ago

சில ஆண்டுகளுக்கு முன்னர், என் மகளுக்காக பைஜூஸ் நிறுவன ஆட்கள் எங்க வீட்டிற்கு வந்து, வீடியோ பயிற்சி சாம்பிள்களைக் காட்டினர். எனக்கு எதுவும் பிடிக்கவில்லை. வீடியோவில் பல தகவல்கள் விளக்கப்பட்டாலும், மாணவனுக்குப் புரியும் அளவில் இல்லை எனத் தோன்றியது. ஆகவே, அதில் சேரவில்லை. இலவசமாகக் கிடைக்கும் கான் அகாடமியின் வீடியோக்கள், பலமடங்கு சிறப்பு.

Reply 24 1

Jayaraj M   3 years ago

Well said!! Best videos are available at free of cost

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

ஏழைகளுக்கு ஏதாவது சலுகைகள் கொடுத்து சமாளித்துவிடுவார்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Jayaraj M   3 years ago

நான் ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். எங்கள் பள்ளியில் கொரானா பேரிடருக்கு பிறகு சென்ற கல்வி ஆண்டில் தனியார் பள்ளி மாணவர்கள் 20 பேரும் இந்த கல்வி ஆண்டில் 30 பேரும் சேர்ந்துள்ளார்கள். இலகுவாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை சந்தித்து பேச முடிவது, குழந்தைகளுக்கு அவர்தம் திறமைக்கு ஏற்ற வகையில் ஊக்க மட்டும் வர்த்தைகளோடு கற்பித்தல் பணி செய்யும் அனுபவம் வாய்ந்த திறமையான ஆசிரியர்கள், தனியார் பள்ளி விளம்பரங்களில் மட்டும் காட்டப்படும் ஸ்மார்ட் வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் செயல்படுவது, அனைத்து குழந்தைகளும் கனிணியை கையாள ஏதுவாக ஹை டெக் லேப், தரமான மதிய உணவு, கற்றல் சார்ந்த அனைத்து வகையான பொருட்களும் தரமாக இலவசமாக வழங்கப்படுவது என பல விசயங்கள் பெற்றோரை பெரிதாக கவர்ந்துள்ளது. இதுநாள் வரை அரசு பள்ளிகள் பற்றி அவர்கள் எண்ணி வந்தது தவறு என புரிந்து கொண்டுள்ளனர். மேலும் படிப்பில் மட்டுமே கவனம் நன்றாக படிப்போருக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றில்லாமல் அனைத்து வகை குழந்தைகளையும் உள்ளடக்கி கொண்டு போக ஏதுவாக கல்வி இணை செயல் பாடுகள், பாடம் சாரா செயல்பாடுகள், பசுமைப் படை, சாரண சாரணியர் இயக்கம், நுகர்வோர் மன்றம், இலக்கிய மன்றங்கள், பாடம் சார் கிளப் கள், என்று எல்லா கிளைகளும் ஒரு குழந்தை பாக்கி இன்றி முக்கியத்துவம் பெறும் படியான கட்டமைப்பு தான் அரசுப் பள்ளிகள் என்பவை. சில வருடங்களுக்கு முன் நான் பைஜூஸை தரவிறக்கம் செய்து சில பல டெஸ்ட் களை முயற்சித்தேன். உடனே பதிவு செய்த எண்ணுக்கு கால் செய்து மிகவும் கனிவுடன் "உங்க பையன் சிறப்பாக படிக்கிறார். கடினமான டெஸ்ட்களை கூட சிறப்பாக செய்கிறார் நீங்க பைஜூஸ் டிவைஸ் வாங்கி தம்பிக்கு கொடுத்தா இன்னும் சிறப்பா படிப்பார்" என்று தூண்டில் போட்டார்கள். பைஜூஸ் மாதிரியான ஆன்லைன் கோச்சிங் நிறுவனங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளிருக்கும் வசதி படைத்தோருக்கும் ஏற்கனவே இருக்கும் இடைவெளியை இன்னும் அகலப்படுத்திவிடும் ஆபத்து உள்ளது.

Reply 36 1

Login / Create an account to add a comment / reply.

Badri Seshadri   3 years ago

//பைஜு ரவீந்திரனே தன்னுடைய திறமையைச் சோதித்துப்பார்க்க விளையாட்டாக நுழைவுத் தேர்வு எழுதியபோது, அதில் 100% பெற்று முதலிடம் இடம்பிடித்தார்.// எந்த நுழைவுத்தேர்வு? ஐஐடியா, ஐஐஎம்மா, ஐஏஎஸ்ஸா, வேறு எதேனுமா?

Reply 8 0

Tamilan   3 years ago

ஐஐஎம்

Reply 0 0

Badri Seshadri   3 years ago

அப்படியானால், 100% என்று எழுதாமல், 100 பெர்செண்டைல் என்று எழுதவேண்டும். தேடிப் பார்த்தேன். இரண்டுமுறை அவ்வாறு அவர் ஐஐஎம் கேட் பரீட்சை எழுதியுள்ளதாகவும் இரண்டு முறையும் 100 பெர்செண்டைல் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருமுறையும் அவர் எந்த ஐ.ஐ.எம்மிலும் சேரவில்லை.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

A M KHAN   3 years ago

இன்றைய கல்வி சூழல் சார்ந்த முக்கியமான கட்டுரை.. நீட் தேர்விற்காக ஆன்லைன் கோச்சிங் சார்ந்த பிரபலமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருந்தோம். கோவிட் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.ஆனால் அந்நிறுவனமோ தேர்வு வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனில் ஒப்பந்தம் மேலும் ஓராண்டு நீடிக்க வேண்டும் என அடம்பிடித்தது.நாங்கள் இந்த மாணவர்கள் தேர்வு எழுதும்வரையாவது பயிற்சி அளிப்பது தானே முறை என்றோம்.. அந்த நிறுவனமோ மாணவர்களை ஒரு சந்தை பொருளாக மட்டுமே பார்த்தார்கள் பணத்தை மட்டுமே குறியாக கொண்டு பயிற்ச்சியினை நிறுத்தி விட்டார்கள். அவர்களை பொருத்தவரை நிதியாண்டு மட்டுமே கணக்கில் வரும்.

Reply 9 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   3 years ago

நிட்சயமாக இந்த கருத்தை ஏற்று கொள்கிறேன்.... தூண்டில் போட்டு பிடித்து, கல்வியை வியாபார ஆக்க ம் தந்திரம்

Reply 16 0

Login / Create an account to add a comment / reply.

சாராயம்அரசியல் எழுச்சியுடர்ன்திருவாவடுதுறை ஆதீனம்கர்ப்பப்பைக் கட்டிகள்இந்து தேசியம்முடியாதா?எருமைகள் மீது வாரிசுரிமை வரி!ஜிஎஸ்டி தொடர்பான தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?தமிழ் வாசகர்கள்டிஜிட்டல் ஆயுதம்மாயக் குடமுருட்டி: வெற்றிடத்தின் பாடல்கள்வேலைவாய்ப்புப் பயிற்சிசனாதனம்தொழிலாளர்கள் உரிமைரிக்‌ஷாதேசத் துரோகச் சட்டம்அணு உலைகுறைந்தபட்ச உத்தரவாத வருமானச் சட்டம்ராஜ விசுவாசம்ஜர்னலிஸம்காந்தி எழுத்துகள் தொகுப்புமின் கட்டண உயர்வுசாஸ்திரங்கள்புகைப்பழக்கம்கும்பல்malcolm adiseshiahசர்வாதிகாரிவிலை6வது அட்டவணை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!