கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 3 நிமிட வாசிப்பு
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தக் கட்டுரையையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
தேர்தல் சமயத்தில்தான் நம்மூரில் மக்கள் அதிகம் வெளிப்படையாகப் பேசுவார்கள். மக்களுடைய பிரச்சினைகள், அபிலாஷைகளைக் கேட்கத்தான் தேர்தல் சமயத்தில் நாடு முழுக்கச் சுற்றுகிறேன்.
முன்பெல்லாம் பயண நாட்களின்போது செல்பேசியில் என்னை அழைக்கும் நண்பர்கள், “அங்கெல்லாம் ஊர் எப்படி இருக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்னவெல்லாம் சாப்பிடுகிறார்கள்?” என்றெல்லாம் கேட்பார்கள். இப்போதெல்லாம் சொல்லிவைத்தாற்போல ஒரே கேள்விதான் எடுத்தவுடன் வருகிறது. “பாஜக எத்தனை இடங்களைப் பெறும்?”
உளவியல் தாக்குதல்
பிரதமர் மோடி இந்த முறை பாஜக 370 இடங்களைப் பெறும் என்று திரும்பத் திரும்பப் பேசுவது, பாஜகவின் உளவியல்ரீதியான பெரும் தாக்குதல் உத்தி என்றே சொல்ல வேண்டும். பிரதான ஊடகங்கள் பெருமளவில் பாஜகவுக்கு அடிபணிந்துவிட்டன.
பாஜக அதன் வரலாற்றிலேயே பெற்ற பெரும் வெற்றியான 2019 தேர்தல் முடிவுகளை மக்களிடம் பேசி “பாஜக கூட்டணி 400 இடங்களை வெல்வது சாத்தியம்தான்” எனும் மனநிலையை ஊடகங்களும் உருவாக்குவதால், மக்கள் கலக்கத்தோடு பார்க்கிறார்கள்.
எதிர்க்கட்சிக்காரர்களில் பலரிடமேகூட பாஜகவை வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸின் பலம் மிகவும் குறைத்து மதிப்பிடப்படுகிறது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
உண்மைத் தரவும் கள நிலவரமும்
பிரதான ஊடகங்கள் பாஜகவின் பலத்தைப் பேச எடுத்துக்கொள்ளும் 2019 தேர்தல் தரவுகளின் அடிப்படையிலேயே இதற்கான பதிலை அளிக்கிறேன். பிரதமர் மோடி சொல்வதுபோல, 2024 தேர்தலில் 370 இடங்களை அல்ல; 2019 தேர்தலில் பாஜக வென்ற 303 இடங்களைக்கூட அது வெல்வது சாத்தியம் இல்லை. ஏன்?
01. கடைசி நேரத்தில் உருவான புல்வாமா தாக்குதல் பெரும் தேசியவாத அலையை உருவாக்கியிருந்தது. முந்தைய தேர்தலில் உருவாகியிருந்த மோடி அலைக்கு உருவான சேதத்தை இது தாங்கிப் பிடித்தது.
இந்த முறையும் பாஜக வலுவாக உள்ள பெருவாரியான மாநிலங்களில் மக்களிடம் மோடி மீது பெரிய அதிருப்தி வெளிப்படவில்லை என்றாலும், மக்களிடம் சலிப்பை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, பாஜக கையில் வைத்துள்ள 12 மாநிலங்களிலும் கூட்டணியில் அது பெரும்பான்மை இடங்களை வைத்திருக்கும் 2 மாநிலங்களிலும் இந்தச் சலிப்பு மிகுதியாக வெளிப்படுகிறது.
பாஜக வென்ற 303 இடங்களில் மூன்றில் இரு பங்குக்கும் மேற்பட்ட இடங்கள் (219) இந்த மாநிலங்களில் உள்ளன. சின்ன சேதங்கள் இங்கு நிகழ்ந்தாலும், மக்களவையில் தனிப் பெரும்பான்மைக்கான 272 இடங்கள் எனும் எண்ணிக்கையைத் தொடுவதே சிரமம்; புதிதாக பாஜக வெல்வதற்குச் சாத்தியமான இடங்கள் இல்லை.
02. எதிரணி உருவாக்கும் சின்ன சேதங்கள்கூட பாஜகவுக்குப் பெரிய இழப்புகளை உருவாக்கும் என்று எப்படிச் சொல்கிறேன்?
சென்ற தேர்தலில் காங்கிரஸும் பிராந்திய கட்சிகளும் பல மாநிலங்களில் பூஜ்ஜியத்தைச் சந்தித்தன. குறிப்பாக, காங்கிரஸ் 17 மாநிலங்கள் - ஒன்றிய பிரதேசங்களில் ஒரு இடத்தைக்கூட பெறவில்லை. இந்த அளவு மோசமாக காங்கிரஸ் தோல்வியைத் தழுவியும்கூட பாஜகவால் 303 இடங்களையே பெற முடிந்தது. அதாவது, மக்களவையில் தனிப் பெரும்பான்மைக்கான 272 எனும் எண்ணிக்கையைக் காட்டிலும் 31 இடங்களே அதிகம்.
இந்த முறை காங்கிரஸ் பல மாநிலங்களிலும் சின்ன அளவிலேனும் மீண்டெழுந்திருக்கிறது. பல இடங்களில் காங்கிரஸின் மூத்த தலைவர்களை பாஜக தன் பக்கம் தூக்கியிருப்பது காங்கிரஸைக் கொஞ்சம் சுத்திகரித்திருக்கிறது. குறைந்தபட்சம் உத்தேசமாக இந்த 17 பிராந்தியங்களுக்கும் தலா 2 இடம் என்று பாஜகவிடமிருந்து காங்கிரஸ் பறிப்பதாக வைத்துக்கொண்டால்கூட பாஜக பெரும்பான்மையை இழந்துவிடும்.
03. சென்ற தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே வென்றதால், ஏனைய தொகுதிகள் அனைத்திலுமே எதிரே நின்ற பாஜகதான் வலுவோடு இருக்கிறது என்று அர்த்தம் இல்லை.
காங்கிரஸ் 17 இடங்களை வெறும் 5% ஓட்டுகள் வித்தியாசத்தில் இழந்தது; 15% ஓட்டுகள் வித்தியாசத்தில் 54 தொகுதிகளை இழந்தது. இந்த 70+ இடங்களிலுமே காங்கிரஸின் நிலை மேம்பட்டிருக்கிறது. அதாவது, காங்கிரஸ் இம்முறை திட்டமிட்டு போராடினால் குறைந்தது 120+ இடங்களை வெல்லும் வலுவுடனே இருக்கிறது.
04. பெருமளவில் இந்தியத் தேர்தல் களத்தில், 2 லட்சம் வாக்குகள் வித்தியாசம் என்பது மாற்ற சாத்தியம் கொண்டவை எனலாம்.
2019இல் 164 இடங்களில் பாஜக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தை ஒட்டி வென்றது. இந்த இடங்களில் பாஜகவும் காங்கிரஸும் நேரடியாக மோதும் தொகுதிகளில் வெறும் 2.5% ஓட்டுகளை எதிரே நிற்பவரிடமிருந்து தன் பக்கம் மாற்றினால்கூட 69 இடங்கள் காங்கிரஸுக்குக் கூடுதலாக கிடைக்கும்; 8% ஓட்டுகளைத் திசை திருப்பினால் இந்த எண்ணிக்கை 106 ஆக உயரும்.
இங்கெல்லாம், காங்கிரஸின் எண்ணிக்கை எவ்வளவு உயர்கிறதோ அதே அளவுக்கு பாஜகவின் எண்ணிக்கை குறையும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
04 Apr 2024
05. நான் சொல்ல வருவது என்னவென்றால், பாஜக பெரிய தோல்வியை அடையும் என்பதோ, காங்கிரஸ் பெரிய வெற்றியை அடையும் என்பதோ அல்ல; சின்ன திசை மாற்றமேகூட ஆட்சியின் திசையைத் திருப்பிவிடும் என்பதையே சுட்டுகிறேன்.
மக்களிடம் களத்தில் வெளிப்படும் சலிப்பு அதற்குக் கட்டியம் கூறுகிறது.
சென்ற இரு தேர்தல்களிலும் காங்கிரஸை 50 எனும் எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்தியதாலேயே பாஜகவால் 300 எனும் எண்ணிக்கையை ஒட்டி வர முடிந்தது. காங்கிரஸ் இம்முறை 50 இடங்களைத் தெற்கிலேயே நெருங்கிவிடும். கூடுதலாக 50-75 இடங்களை காங்கிரஸ் நெருங்குமானால், பாஜக இணையான இடங்களை இழப்பது தவிர்க்க முடியாதது. தவிர, பிராந்திய கட்சிகள் இம்முறை பெரும் வலு பெற்றுள்ளன.
பாஜக எதிர்கொள்ளும் சிக்கல்
பாஜக குறிப்பிடும் 370 அல்ல; தனிப் பெரும்பான்மைக்கான 272 கிடைப்பதே சிக்கல்.
மூன்று மாதங்கள் முன் ஐந்து மாநிலத் தேர்தலை ஒட்டி களத்துக்குச் சென்றபோது, பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலில் 225 இடங்கள் கிடைக்கலாம் என்று எழுதினேன். நாட்டின் நான்கு முனைகளையும் தொட்டு மக்களிடம் பேசிய பின் இன்றும் சூழல் மேலும் இறுகியிருப்பதையே களத்தில் காண்கிறேன்!
இன்னும் ஒன்றரை மாத கால அவகாசம் இருக்கிறது. பாஜகவுக்கும் சரி; காங்கிரஸுக்கும் சரி. இரு கட்சிகளுமே தத்தமது நிலையை உயர்த்திக்கொள்ள நடத்தும் போராட்டம் மேலும் தீவிரமாகும்போது நான் குறிப்பிடும் எண்ணிக்கையில் கொஞ்சம் கீழே மேலே போகலாம். ஒருபோதும் 2019 தேர்தலைத் தாண்டிய எண்கள் பாஜகவுக்குச் சாத்தியமே இல்லை!
(அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் கட்டுரைகளைத் தவறவிடாதீர்கள்!)
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?
5
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Ramasubbu 8 months ago
அடித்து சொல்கிறேன் பா.ஜ. க. கூட்டணி 400தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக பா.ஜ. க.கால் வைக்கவே முடியாது என்று சொல்லப்படுகிற கேரளத்திலும் கால் பதிக்கிறது. தமிழ்நாட்டில் ஒரிலக்கத்தில் அதாவது 09 எண்ணிக்கைக்குள் தொகுதிகளை கைபற்றுகிறது. பஞ்சாப்பிலும் சில தொகுதிகளை பிடிக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ்க்கு இரண்டு இடங்கள் கிடைக்கும் என்று சில கருத்து கணிப்புகள் சொல்கின்றன. முற்றிலும் தவறு. கர்நாடகத்தில் பத்து நாள்களுக்கு முன்பு ஒரு வாரகாலம் பயணம் செய்யும் போது ஒரு உண்மை தெரிந்தது. ஆளும் காங்கிரஸ் மீது கடும் வெறுப்பு உள்ளது.. ஒரு இடம் கூட கிடைக்காது. இந்த உண்மையை தேர்தல் முடிவுகளின் போது தெரிய வரும். ராகுல் வயனாட்டில் வெற்றி பெறுவார். உண்மையான போட்டியின் மூலம் அல்ல. கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகளின் மறைமுகமான ஒரு ஒப்பந்தம் மூலம் வாய்ப்பு வழங்கப்படும். இதற்காகவே கம்யூனிஸ்ட் வேட்பாளராக திருமதி. ஆனி ராஜா நிறுத்த படுகிறார். மேற்கு வங்கத்தில் 10 க்குள்மட்டுமே திரி நமூல் காங்கிரஸ்க்கு கிடைக்கும். ராஜஸ்தானில் காங்கிரஸ்க்கு ஒரு இடம் கூட கிடைக்காது. தமிழ் நாட்டில் பா. ஜ. க வுக்கு 5 கிடைக்கும். வாக்கு வீதம் 23க்கு மேல் வாய்ப்பு உள்ளது. அ. தி. மு. க. படு வீழ்ச்சியை நோக்கி செல்லும்.. தி. மு. க. வெற்றி பெறும் தொகுதிகளின் வாக்கு வித்தியாசம் மிக.. மிக. குறைவாக இருக்கும்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.