கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 4 நிமிட வாசிப்பு
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தக் கட்டுரையையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
என் வாசகர்களுக்குத் தெரியும்!
தேர்தலில் யார் வெல்வார்கள், எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என்றெல்லாம் நான் இதுவரை எழுதியதே கிடையாது. ஏனென்றால், சூதாட்டம் நடத்துவதற்காக நடத்தப்படும் மல்யுத்தம் கிடையாது தேர்தல். அது ஜனநாயகத்தின் அற்புதமான முகிழ்வு.
மக்களுடைய அபிலாஷைகளை அறிந்துகொள்வதற்காகவே தேர்தல் சமயத்தில் பயணம் செய்கிறேன். தேர்தலை எப்படிப் பார்க்கிறார்கள்; எந்தெந்த இடங்களில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; பல விஷயங்களும் முட்டி அலைமோதும் சமயத்தில் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதே என்னுடைய அக்கறை.
விலை போன ஊடகங்கள்
விதிவிலக்காக இந்த முறை சில கட்டுரைகளை இப்படி எழுதுகிறேன். ஏன்?
இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்கள் இன்று விலை போய்விட்டன அல்லது அச்சுறுத்தலுக்குப் பணிந்துவிட்டன. நாடாளுமன்றத்தை மூன்றில் இரு பங்கு பலத்தில் பாஜக வெல்லும்; எதிர்க்கட்சிகள் நிலைக்குலைந்துள்ளன என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. சமூகத்தில் ஒரு கும்பல் பைத்தியச் சூழலை உருவாக்குகின்றன.
மக்களுடைய எந்தப் பிரச்சினைகளுக்கும் இந்தத் தேர்தல் சமயத்தில் ஊடகங்கள் காது கொடுப்பதில்லை. எதிர்க்கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை. நியாயமான களச் சூழலைச் சொல்வதில்லை. மாறாக, தேர்தலை ஒரு மல்யுத்தப் போட்டி போன்று மாற்றியிருக்கின்றன.
தோல்வி பயத்தில் மோடி அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் கோழைத்தனமான அநீதி நடவடிக்கைகள் எல்லாவற்றையுமே அவை பாஜகவின் வியூக உத்திகள் போன்று மக்களிடம் பேசுகின்றன.
எந்த மொழியாயினும் பெரும்பான்மை பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் மோடி, மோடி, மோடி… எல்லா செய்தித் தொலைக்காட்சிகளிலும் ‘பிரைம் டைம்’ என்று சொல்லப்படும் இரவு 08-10 மணிக்கு மோடி, மோடி, மோடி…
இதுவரை பத்திரிகையாளர் சந்திப்பையே நடத்தாத பிரதமர் மோடிக்கு இந்தத் தேர்தல் சமயத்தில் எத்தனை பிரத்யேகப் பேட்டிகள் வெளியாகியுள்ளன; எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு எத்தனை பிரத்யேகப் பேட்டிகள் வெளியாகியுள்ளன என்று பாருங்கள். இந்திய ஊடகங்கள் எவ்வளவு கேவலமான தார்மிகச் சரிவை இன்று சந்தித்துள்ளன என்பது உங்களுக்குப் புலப்படும்.
வேலையும் வளர்ச்சியுமே ஏக்கங்கள்
பிரதமரும் பெரும்பான்மை தேசிய ஊடகங்களும் சித்திரிக்கிறபடி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பாஜக பெறும் என்றால், நாடு முழுவதும் மோடி அலை வீச வேண்டும்; சென்ற இரு தேர்தல்களைக் காட்டிலும் எதிர்க்கட்சிகள் கீழான நிலையை அடைய வேண்டும். சூழல் அப்படித்தான் உள்ளதா?
நாட்டின் நான்கு முனைகளையும் சுற்றி வரும்போது நான் அத்தகைய சூழலைப் பார்க்கவில்லை.
நாட்டின் கணிசமான பகுதிகளில் பாஜக வலுவோடு உள்ளது. ஆனால், மக்களுடைய சாய்வு உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தால், பக்கத்து மாநிலமான பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு ஆதரவாக இருக்கிறது. கேரளத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தால், காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது.
முன்னரே இந்தத் தொடர் கட்டுரைகளில் நான் குறிப்பிட்டபடி, நாடு முழுக்க மக்களிடம் வேலைவாய்ப்பு, வருமான உயர்வு, பிராந்திய வளர்ச்சி மேம்பாடு இவற்றுக்கான ஏக்கமே பிரதானமாக உள்ளது. விலைவாசி உயர்வு அவர்களை அழுத்தும் பிரச்சினையாக உள்ளது. எதிர்காலம் குறித்த கவலை சூழ்ந்திருக்கிறது.
மோடிக்கும் பாஜகவுக்கும் ஆதரவாகப் பேசுபவர்களும்கூட இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சாலைகள் - பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், ரேஷனில் வழங்கப்படும் 35 கிலோ விலையில்லா தானியம், விவசாயிகளுக்கான நிதியுதவி இவற்றையெல்லாம்தான் முக்கியமானதாகக் குறிப்பிட்டு பேசுகிறார்கள்.
இந்துத்துவச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அரசு மேற்கொண்ட ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிப்பு, அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில், அடுத்து மெல்ல நகர்த்தப்படும் பொது சிவில் சட்டம் இவையெல்லாம் மக்களுடைய பேச்சில் கடைசி வரிசையில் உள்ளன. சொல்லப்போனால், 'ஜி 20' மாநாடு குறித்து குறிப்பிட்டவர்களுடைய எண்ணிக்கை இந்த விவகாரங்களைக் குறிப்பிட்டவர்களைவிட அதிகம்.
மக்களிடம் பிரதமர் மோடிக்கு என்று தனித்த செல்வாக்கு உள்ளது. ஆனால், ஆட்சி மீது சலிப்பும் வெளிப்படுகிறது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
நம்பிக்கை இழக்க ஏதுமில்லை
முக்கியமாக நான் சொல்ல விழைவது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு முன்னைக் காட்டிலும் உயர்ந்துள்ளது. நிச்சயம் பிரதமர் மோடியும் பெரும்பான்மை ஊடகங்களும் சொல்வது போன்று 2014, 2019 தேர்தல்களைவிட பெரிய வெற்றியை பாஜக பெறும் சூழல் இல்லை. நம்பிக்கை இழக்கும்படி ஏதுமில்லை.
எனக்குத் தெரிந்த இந்த உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பது கடமை என்று எண்ணுகிறேன். விரிவாகச் சொல்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவருக்கான வெற்றிடம்
மோடியின் வருகைக்குப் பிந்தைய 2014, 2019 இரு தேர்தல் முடிவுகளும் நாட்டு மக்களுக்குத் தந்த பெரிய ஏமாற்றம், மக்களவையில் வலுவான எதிர்க்கட்சிக்கான இடம் இல்லாமல் போனது ஆகும்.
உலகளாவிய அளவில் நாடாளுமன்றங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ‘நிழல் பிரதமர்’ என்றே அழைக்கப்படுவார். ஏனென்றால், ஆட்சியில் உள்ள ஓர் அரசு சரியும்போது அந்த இடத்துக்கு அடுத்து நகரக் கூடியவராக அவரே இருக்கிறார். தவிர, பிரதமரைத் தொடர்ந்து விமர்சிப்பதன் மூலம் அரசின் போக்கை எதிர்க்கட்சித் தலைவரும் மறைமுகமாகக் கட்டுப்படுத்துகிறார்.
ஆளுங்கட்சிக்கு அடுத்த நிலையில் வரும் பெரிய கட்சி யாரை தன்னுடைய தலைவராக அவையில் தேர்ந்தெடுக்கிறதோ, அவரை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிப்பது மரபு. இப்படி அங்கீகரிக்கப்படும் ‘எதிர்க்கட்சித் தலைவர்’ கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்துகள், சலுகைகளைப் பெறுவார்.
தேர்தலில் வென்று நாடாளுமன்றத்துக்கு வரும் கட்சிகளை சபாநாயகர் அங்கீகரிப்பதற்கு என்று நம்முடைய நாடாளுமன்றத்தில் சில நடைமுறைகள் உண்டு. அதன்படி அவையின் மொத்த இடங்களில் 10% அளவுக்கு மேலே பெறுபவர்கள் ‘கட்சிகள்’ என்ற வரையறைக்குள்ளும், அதற்குக் கீழான எண்ணிக்கையில் வெல்பவர்கள் ‘குழுக்கள்’ என்ற வரையறைக்குள்ளும் கொண்டுவரப்பட்டனர்.
ஆயினும், எதிர்க்கட்சித் தலைவராக ஒருவர் சபாநாயகரால் அங்கீகரிப்பட அவர் சம்பந்தப்பட்ட கட்சி குறைந்தது 10% இடங்களை வென்றிருக்க வேண்டும் என்று எந்த விதியும் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியின் தாராள மனமும், சபாநாயகரின் முடிவுமே இறுதியானது.
டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றிய ஆம்ஆத்மி கட்சி எஞ்சிய 3 இடங்களை மட்டுமே வென்ற பாஜகவின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளித்ததை இங்கே உதாரணமாகச் சொல்லலாம்.
நம்முடைய மக்களவையில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 543. சென்ற இரு தேர்தல்களிலும் பாஜகவுக்கு அடுத்து பெரிய கட்சியாக வந்த காங்கிரஸ் வென்ற இடங்கள் முறையே 44, 52. அதாவது, மக்களவையில் 10% இடமான 55 எனும் எண்ணிக்கையை அது எட்டவில்லை. இதையே ஒரு காரணமாக காட்டி சென்ற இரு அவைகளிலுமே ‘எதிர்க்கட்சித் தலைவர்’ எனும் இடத்தை பாஜக அங்கீகரிக்கவில்லை.
இதையன்றி, சென்ற இரு தேர்தல்களிலும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அதிகமான இடங்களையும் வெல்லவில்லை. 2014 தேர்தலில் பாஜக 282 இடங்களையும், கூட்டணியாக 336 இடங்களையும் வெல்ல, காங்கிரஸ் 44 இடங்களையும் கூட்டணியாக 59 இடங்களையும் மட்டுமே வென்றது. அதேபோல, 2019 தேர்தலில் பாஜக 303 இடங்களையும் கூட்டணியாக 353 இடங்களையும் வெல்ல, காங்கிரஸ் 52 இடங்களையும் கூட்டணியாக 91 இடங்களையும் வென்றது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் அதன் கூட்டணிக் கடைகளும் 100 இடங்களைக்கூட சென்ற இரு தேர்தல்களிலும் வெல்லவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், அவையில் எப்போதும் ஆளுங்கட்சியின் ஆதிக்கமே நிலவியது.
முன்னகரும் காங்கிரஸ்
வரவிருக்கும் 2024 தேர்தல் களத்தில் காங்கிரஸுக்குள்ள பெரிய நம்பிக்கை, அது 2014 தேர்தலில் ஒட்டுமொத்த நாட்டிலும் வென்ற 44 இடங்களைத் தென்னகத்தில் மட்டுமே வென்றிட முடியும் என்பதாகும். புதுவை, தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் இந்த ஆறு மாநிலங்களிலும் 130 இடங்கள் உள்ளன.
கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் ஆட்சியைக் கையில் வைத்திருப்பதோடு, தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் முந்தைய தேர்தலைப் போன்றே காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவான சூழலே நிலவுவதால் காங்கிரஸின் தென்னக நம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை.
அடுத்து, தனக்குச் சாதகமான களமாக காங்கிரஸ் பார்ப்பது, மேற்கே மஹாராஷ்டிரமும் கிழக்கே பிஹார், ஜார்கண்டும். இந்த மூன்று மாநிலங்களிலும் 102 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. சென்ற தேர்தலில் 92 இடங்களை இங்கே பாஜக கூட்டணி கைப்பற்றியது; காங்கிரஸுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த முறை மூன்று மாநிலங்களிலும் சூழல் மாறியிருப்பதை நம்பிக்கையோடு பார்க்கிறது காங்கிரஸ். மூன்று மாநிலங்களிலுமாக 30 இடங்களில் போட்டியிடுகிறது.
அடுத்து, காங்கிரஸின் நம்பிக்கைக் களம் பஞ்சாப், டெல்லி, ஹரியாணா. மூன்று மாநிலங்களிலுமே பாஜகவுக்கு உருவாகியிருக்கும் அதிருப்தியை அது வெளியிட்டிருக்கும் வேட்பாளர் பட்டியலே வெளிப்படுத்துகிறது. ஹரியாணாவில் முதல்வரையே மாற்றியதோடு, சென்ற முறை வென்ற பத்தில் ஆறு பேருக்கு வாய்ப்பு மறுத்து, வெளிக் கட்சிகளிலிருந்து வந்த புதியவர்கள் ஆறு பேருக்கு வாய்ப்பளித்திருக்கிறது பாஜக. டெல்லியிலும் கிட்டத்தட்ட அதே நிலை. ஏழில் நால்வருக்கு இங்கே வாய்ப்பு மறுக்கப்பட்டது. பஞ்சாபைப் பொறுத்த அளவில் பாஜக அங்கே பெரிய சக்தி இல்லை. இந்த முறை சிரோன்மணி அகாலி தளமும் பாஜகவுடனான கூட்டணிக்குத் தயாரில்லை என்று அறிவித்துவிட்டதால் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்த மூன்று மாநிலங்களிலும் 30 தொகுதிகள் உள்ளன. சென்ற தேர்தலில் இங்கே 21 தொகுதிகளை பாஜக கூட்டணி வென்றிருந்தது. இந்த முறை பாஜக பலவீனப்பட்டிருப்பதோடு, ஆம்ஆத்மி கட்சியுடனும் கை கோத்திருப்பதால் காங்கிரஸ் பலப்பட்டிருக்கிறது. மூன்று மாநிலங்களிலுமாக 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அடுத்து, காங்கிரஸுக்கு சவாலான பாஜகவின் கோட்டைகள். இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், குஜராத் இங்குள்ள 60 தொகுதிகளையும் மொத்தமாக சென்ற தேர்தலில் பாஜக வென்றது. மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு 37 இடங்களை பாஜக வென்றது. உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கே 62 இடங்களை பாஜக வென்றது.
ஆக, இந்த 180 தொகுதிகளில் 159 பாஜக வசம் உள்ளன. காங்கிரஸ் 4 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இங்கெல்லாம் பாஜகவின் வலு பெரிய அளவில் குறையவில்லை என்றாலும், நிச்சயம் 10% இடங்களையேனும் வெல்ல முடியும் என்று நம்புகிறது.
வட கிழக்கு மாநிலங்களில் உள்ள 25 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை காங்கிரஸ் குறிவைக்கிறது.
காங்கிரஸின் கணக்குகளைப் பார்த்தால், குறைந்தது 100 இடங்களையொட்டி வெல்லும் அதன் கணக்கை எவரும் பெரியதெனச் சொல்ல மாட்டார்கள்.
மாநிலக் கட்சிகளின் வலு
திமுக, ராஷ்டீரிய ஜனதா தளம் இரண்டும் தமிழ்நாடு, பிஹாரில் முன்வரிசையில் உள்ளன. வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ்; மஹாராஷ்டிரத்தில் சிவசேனை; பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சி இவையெல்லாம் தாம் போட்டியிடும் இடங்களில் சரிபாதி இடங்களிலேனும் முன்னகர்வைக் கொண்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் சென்ற முறைபோல குறைந்தது ஐந்தில் ஒரு பங்கு வெற்றியையேனும் கூட்டணிக்குப் பெற்றிட வேண்டும் என்று போராடுகிறது சமாஜ்வாதி கட்சி.
இப்படியாக 'இந்தியா கூட்டணி'யில் இருந்தபடி சேர்ந்தும் பிரிந்தும் போட்டியிடும் மாநிலக் கட்சிகள் 100-125 இடங்கள் வரை வெல்ல முடியும் என்று நம்புகின்றன.
பாஜக, காங்கிரஸ் இரண்டின் கூட்டணியிலும் சேராத சில கட்சிகள் உள்ளன. 46 இடங்களைக் கொண்ட ஆந்திரம், ஒடிஷாவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் இவற்றில் முக்கியமானவை. டெல்லியில் நாற்காலியை நெருங்கும் கட்சியை இவை ஆதரிக்கும் சாத்தியம் கொண்டவை என்பதால், இம்முறை மாநிலக் கட்சிகளின் வலுவும் அதிகமாக இருக்கும்.
பாஜக எதிர்கொள்ளும் சவால்
நாட்டின் தனிப் பெரும் கட்சி என்ற இடம் தனக்கு உறுதியானது என்ற பாஜகவின் நம்பிக்கையில் பிழை ஏதும் இல்லை. ஆனால், அது சொல்கிறபடி 370 எனும் மக்களவையில் மூன்றில் இரு பங்கு இடம் தரும் எண்ணிக்கையை மட்டும் அல்லாது, தனிப் பெரும்பான்மைக்கான 272 எனும் எண்ணிக்கையைக் கடப்பதே இம்முறை அதற்குப் பெரும் சவாலாகத்தான் இருக்கும்.
சென்ற முறை அது வென்ற 303 இடங்கள் என்பது தனிப் பெரும்பான்மைக்கான எண்ணிக்கையைக் காட்டிலும் 31 இடங்கள் மட்டுமே அதிகம். இந்த 303 இடங்களில் 202 அதற்குப் பின்வரும் 13 மாநிலங்களிலும் ஒன்றிய பிரதேசங்களிலும் கிடைத்தவை. குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, டெல்லி, உத்தராகண்ட், இமாசல பிரதேசம், மஹாராஷ்டிரம், பிஹார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகம், கோவா. சில மாநிலங்களில் 100%; சில மாநிலங்களில் 90% என இங்கே பாஜகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 93% வெற்றி கிடைத்தது.
கிழக்கும் மேற்கும் தரும் அச்சுறுத்தல்
இந்த அளவுக்கான வெற்றி இம்முறை கஷ்டம் என்பதை பாஜக உணர்ந்திருக்கிறது. உதாரணமாக, மஹாராஷ்டிரம், பிஹார், ஜார்கண்ட் இந்த மூன்று மாநிலங்களிலும் உள்ள 102 தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி இடங்களை இழந்தால்கூட அது கடந்த முறை வென்ற தனிப் பெரும்பான்மை பலமான ‘31’ எனும் எண்ணிக்கை தகர்ந்துவிடும். கர்நாடகத்தில் 10; ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் 10; டெல்லி, பஞ்சாப், ஹரியாணாவில் 10 என்று வெறும் 30 தொகுதிகளை இழந்தால் பாஜகவின் எண்ணிக்கை 250க்குக் கீழே சென்றுவிடும்.
இந்த மாநிலங்களில் எல்லாம் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க பாஜகவுக்கு வாய்ப்பு இல்லை. ஆகையால்தான் சென்ற தேர்தலில் அது மிகக் குறைந்த எண்ணிக்கையைப் பெற்ற ஐந்து மாநிலங்களில் இம்முறை அதிகக் கவனம் செலுத்துகிறது. புதுவை, தமிழகம், ஆந்திரம், கேரளம், பஞ்சாப்.
இங்கே 97 தொகுதிகள் உள்ளன. இவற்றில் சென்ற முறை 5 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. இம்முறை தனக்குப் பலமான இடங்களில் நேரும் இழப்பைப் பலவீனமான இடங்களில் கொடுக்கும் உழைப்பின் வழி ஈடுகட்ட பாஜக முற்படுகிறது.
எப்படியாயினும் உறுதியான எதிரிடம்
ஆக, கூட்டணியாக காங்கிரஸ் இலக்கிடும் இடங்களைப் பார்த்தாலும் சரி, பாஜக இலக்கிடும் இலக்கிடும் இடங்களைப் பார்த்தாலும் சரி; யார் கணக்கு வென்றாலும் சரி, பிசகினாலும் சரி; ஆளுங்கட்சியாக யார் அமர்ந்தாலும், எதிர்க்கட்சிக்கான இடம் வரவிருக்கும் தேர்தலில் வலுவாக இருக்கும் என்பது உத்தரவாதம். ஆக, மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஆட்சி யாருக்கும் சாத்தியம் இல்லை என்பதும் உத்தரவாதம்.
களத்தில் அடுத்த ஒன்றரை மாதங்களில் என்னவும் நடக்கலாம். ஆனால், களம் இன்று இரு தரப்புக்கும் நம்பிக்கை தரும் வகையிலேயே இருக்கிறது; அதில் 'இந்தியா கூட்டணி' ஒரு அடி முன்னே உள்ளது.
நினைவில் கொள்ளுங்கள், காங்கிரஸ் 125 வென்றாலே கூட்டணியின் துணையோடு ஆட்சிக்கு வந்துவிடும்; பாஜக 250 வென்றாலும் அரசமைப்பது சிரமம்!
- ‘குமுதம் ரிப்போர்ட்டர்’, ஏப்ரல், 2024
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
10
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Nathan 5 months ago
You are right . Even in Tamil Nadu, there is an image created as BJP will win around 4 to 5 seats. Will it be possible?
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.