அருஞ்சொல் பற்றி...
அருஞ்சொல்
தமிழின் தொன்மையான வார்த்தைகளில் ஒன்று ‘சொல்’ ஆகும். சிறப்புக்குரியதும்கூட. சொல் என்பதற்கு ‘மொழி - பேச்சு - உறுதிமொழி - புகழ் - மந்திரம் - கட்டளை - புத்திமதி - பேச்சின் கடவுளாகிய நாமகள்’ என்று பல அர்த்தங்கள் உண்டு. ‘அருமை’ என்ற வார்த்தையும் அப்படியானதே ஆகும். ‘அபூர்வம் - மகத்துவம் - கிடைப்பதற்கரிய’ என்று பல அர்த்தங்களை உள்ளடக்கியது அது.
அருமையான சொல் எனும் இரு சொற்களின் சேர்க்கையான ‘அருஞ்சொல்’ என்பதை நம்முடைய ஊடகத்துக்கான பெயராக நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்போது, அபூர்வமான, கிடைப்பதற்கரியதான, மகத்துவம் மிக்க விஷயங்களை வாசகர்களுக்குச் சொல்லுவதே நம்முடைய ஊடகத்தின் கடமை என்று நாம் வரையறுத்துக்கொள்கிறோம். காந்தியின் மொழியில் கூறுவது என்றால், நாட்டின் மனதைப் படிப்பதும், அந்த மனதுக்குத் திட்டவட்டமான அச்சமற்ற வெளிப்பாட்டை வழங்குவதுமான தனித்துவம் மிக்க ஊடகத்தின் பணியை ‘அருஞ்சொல்’ மேற்கொள்ளும். தமிழ் மக்களுக்கான சேவையே அதன் ஆதாரமான நோக்கம்.
உலகின் நிகழ்வுகளைத் தமிழ்ப் பார்வையிலிருந்து அணுகும் ஊடகமாக ‘அருஞ்சொல்’ செயல்படும். பொருளாதாரம், கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், சுற்றுச்சூழல் என்று பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்த முற்பட்டாலும், அரசியலுக்கும், அரசு நிர்வாகத்துக்கும் பிரதான கவனம் அளிப்பதாக ‘அருஞ்சொல்’ பணியாற்றும்; காந்தி சொன்ன சுயராஜ்ஜியமே அதன் லட்சியம்; இந்தியாவில் சமத்துவத்துக்கான கூட்டாட்சிப் பாதைகளாக சமூக நீதியையும், ராஜ்ஜிய நீதியையும் அது நம்புகிறது; வெறுப்பரசியலை ஒருபோதும் அது அனுமதிக்காது; சாமானிய மக்களின் குரலாக ‘அருஞ்சொல்’ செயல்படும்.
அறிவுப் பாலம்
சுயாதீன ஊடகமாகப் பத்திரிகையாளர் சமஸ் இந்த ஊடகத்தைத் தொடங்கியிருக்கிறார். ஊடகம் மற்றும் பதிப்புத் துறையில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்; தமிழின் முன்னணி ஊடகங்களான ‘தினமணி’, ‘விகடன்’ பத்திரிகைகளின் ஆசிரியர் இலாகாக்களில் பணியாற்றியவர்; நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமம் தன்னுடைய தமிழ் நாளிதழைத் தொடங்கியபோது அதன் உருவாக்க அணியினராகத் தேர்ந்தெடுத்த ஐவரில் ஒருவர்; அந்தப் பத்திரிகையின் தூண்களில் ஒருவராகவும், வாசகர்களால் கொண்டாடப்பட்ட நடுப்பக்க ஆசிரியராகவும் பணியாற்றியவர் சமஸ். அவருடன் இணைந்து மதிப்பு மிக்க ஊடக ஆளுமைகளைக் கொண்ட ஒரு அணி ‘அருஞ்சொல்’ இதழை அன்றாடம் உருவாக்குகிறது.
உலகின் பல பகுதிகளிலும் வசிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அபிலாஷைகளை ‘அருஞ்சொல்’ பேசும். தமிழுக்கு வெளியே செயலாற்றும் முக்கியமான அறிவாளுமைகளின் பார்வைகளை மொழிபெயர்த்து, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையை மேலும் செழுமைப்படுத்தும். திறந்த விமர்சனங்களை முன்வைக்கும் இடமாகவும், ஆள்வோருக்கும் ஆளப்படுவோருக்கும் இடையேயான அறிவுப் பாலமாகவும் ‘அருஞ்சொல்’ பணியாற்றும்.
உங்கள் கடமை
ஜனநாயகம் செழிக்கவும், எளியோர் அதிகாரம் பெறவும் ஊடகங்களின் பணி முக்கியமானது. ஊடகங்கள் மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்; மாறாக, அவை பெருநிறுவனங்களின் கருவிகளாகவும், அரசின் கைப்பாவையாகவும் ஆகிவிடும் காலகட்டத்தில் இருக்கிறோம்.
பத்திரிகையாளர்களின் சுதந்திரம் குறுகிக்கொண்டேவருவதன் விளைவாக ஊடகத் துறையும் முழு வணிகமாக, மக்களுக்கான பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக உருமாற்றப்படுகிறது. மக்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் அவர்கள் பார்வையிலிருந்து இருட்டடிக்கப்பட்டு, சமூகத்தின் கவனம் சிதறடிக்கப்படுகிறது. இந்தப் போக்கிலிருந்து விடுபட்டு மக்களுக்கான ஊடகமாகச் செயலாற்ற அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறது ‘அருஞ்சொல்’. ஆகவே, இத்தகைய சுயாதீன ஊடகங்களையும், நல்ல இதழியலையும் ஆதரிப்பது சமூகத்தின் கடமை ஆகிறது.
மக்களுக்காக உழைக்கும் ஊடகர்களும், நல்ல சிந்தனைகளைத் தரும் கருத்தாளர்களும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால், உங்களைப் போன்ற நல்ல மனிதர்களின் ஆதரவு அதற்கு அவசியம். நல்ல இதழியல் உயிர்த்திருக்க வேண்டும் என்றால், சுதந்திரமான ஆசிரியர் குழு அதற்கு முக்கியம். இந்தச் சுதந்திரமானது ஊடகத்தின் நிதிச் சுதந்திரத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.
அன்றாடம் அரை மணி நேரம் எங்கள் தளத்துக்கு வாருங்கள்; உங்களுடைய மதிப்புமிக்க அறிவை மேலும் செறிவூட்டிக்கொள்ள உதவுகிறோம் என்ற உத்தரவாதத்தை நாங்கள் தருகிறோம்; தமிழ்ச் சமூகத்தின் மதிப்பார்ந்த அறிவியக்கமாக ‘அருஞ்சொல்’ உயிர்த்திருக்க நீங்கள் ஆதரவு தாருங்கள்.
தமிழ் மக்கள் மீது ‘அருஞ்சொல்’ நம்பிக்கை வைக்கிறது. ஆகையால், தளத்தைப் பூட்டிவைத்து சந்தா வசூலித்த பிறகு வாசிக்க அனுமதிக்கும் முறையைக் கையாள அது விரும்பவில்லை. நீங்கள் வாசியுங்கள்; சுற்றத்தாரிடமும் சமூக வலைதளங்களிலும் ‘அருஞ்சொல்’ பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். கூடவே தவறாது உங்கள் சந்தாவையும் செலுத்திடுங்கள். வெறும் ஒரு நிமிஷத்தில் நீங்கள் சந்தா செலுத்திட முடியும்.
வாருங்கள், தமிழ்ச் சமூகத்தின் அறிவுத் தளத்தையும், இந்த நாட்டின் ஜனநாயகத்தையும் இணைந்து விரிவாக்குவோம்!







பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Rajarajacholan 1 year ago
வாழ்த்துகள்... தொடரந்து அருஞ்சொல்லோடு இணைந்தே இருக்கிறோம்... வளர்க ... நன்றி... மகா.இராஜராஜசோழன்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
nimirtamizh 1 year ago
வாழ்த்துக்கள் ...!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Prabhukumar Subramaniyam 1 year ago
அருஞ்சொல் - சமஸ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்… “ கூடவே தவறாது உங்கள் சந்தாவையும் செலுத்திடுங்கள். வெறும் ஒரு நிமிஷத்தில் நீங்கள் சந்தா செலுத்திட முடியும்.” - இதற்கான லிங்க் அல்லது வழிமுறை ஏதேனும் தரப்பட்டுள்ளதா?
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Rama ramanathan 1 year ago
அருஞ்சொல் அற்புதமான பதிவுகளைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.. சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் சமரசமற்ற முறையில் ஆனித்தரமாக கருத்துக்களை முன்வைத்து நம்முடன் உரையாடல் செய்கிறது அருஞ்சொல். மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். மிகச் சிறந்த பத்திரிகையாளர் அன்புத் தோழர் சமஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.