கட்டுரை, அரசியல், வரலாறு, கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
நேரு எப்படி மூன்றாவது முறை பிரதமரானார்?
இந்திய நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் நடைபெற்ற 1962வது ஆண்டு மூன்றாவது பொதுத் தேர்தலின்போது, தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளிலும் விதிகளிலும் வெகு நுணுக்கமான சிறு மாற்றங்களைச் செய்து முடித்திருந்தது இந்தியத் தேர்தல் ஆணையம். அதற்கு முன்னர் இருந்திராத வகையில், அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் வாக்களித்தனர். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி உறுதியான வெற்றியைப் பெற்றபோதிலும் முதல் முறையாக அந்தக் கட்சி மீது வலிமையான அரசியல் விமர்சனங்கள் வரத் தொடங்கின.
இரண்டாவது பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்ற பிறகு, கோவா, டாமன், டையூ பகுதிகளை போர்த்துகீசியர்களின் 400 ஆண்டுக்கால ஆதிக்கத்திலிருந்து விடுவித்து மிகப் பெரிய அரசியல் சாதனையை நிகழ்த்தியிருந்தபோதிலும், நேரு மீதான அரசியல் விமர்சனங்கள் வலுக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்
இந்திய நாட்டின் முதலாவது தலைமைத் தேர்தல் ஆணையர் சுகுமார் சென் 1958இல் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார், கே.வி.கே.சுந்தரம் அடுத்து அந்தப் பதவிக்கு வந்தார். 1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் எதுவென்றால் ‘இரட்டைத் தொகுதி முறை’ ஒழிக்கப்பட்டதாகும். பட்டியல் இனத்தவர் – பழங்குடிகளுக்கென்று ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் அந்த வேட்பாளர்களுடன், பொதுப் பிரிவுகளைச் சேர்ந்த இன்னொரு வேட்பாளரும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதே இரட்டைத் தொகுதி முறை.
முதல் இரண்டு பொதுத் தேர்தல்களில் நேரு போட்டியிட்ட புல்பூர், அவருடைய மருமகன் பெரோஸ் காந்தி போட்டியிட்ட ராய்பரேலி உள்பட பல தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாகத்தான் இருந்தன. மேற்கு வங்கத்தின் ஒரு தொகுதி மூன்று உறுப்பினர் தொகுதியாகவும் இருந்தது. 1957இல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், பின்னாளில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான வி.வி.கிரி, ஆந்திர மாநிலத்தின் பார்வதிபுரம் இரட்டை உறுப்பினர் தொகுதியில் மூன்றாவது இடத்தில்தான் வந்தார். அந்தத் தொகுதியிலிருந்து பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். அந்தக் காலத்தில் ஒற்றை உறுப்பினர் ‘பொதுத் தொகுதிகள்’ ஒன்பதிலிருந்து பழங்குடி – பட்டியல் இன வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
பார்வதிபுரத்தில் இரண்டாவது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடி வேட்பாளர் திப்பால சூரி தொராவின் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் வி.வி.கிரி. ஆனால், தீர்ப்பு அவருக்குச் சாதகமாக வரவில்லை. ஒற்றை உறுப்பினர் தொகுதிகளிலும் பட்டியல் இனத்தவர் – பழங்குடிகளுக்கு ஒதுக்கீடு செய்வதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்தே ‘இரட்டை உறுப்பினர் தொகுதிகள் (ரத்து) சட்டம், 1961’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த மாற்றம், 1960இல் மஹாராஷ்டிரத்தை, மஹாராஷ்டிரம் – குஜராத் என்று இரண்டாகப் பிரித்ததாலும், கோவா – டாமன் - டையூ, மற்றும் தாத்ரா –நாகர் ஹவேலி ஆகியவற்றை தில்லியின் நேரடி ஆட்சிப்பகுதிகளாக (யூனியன் பிரதேசம்) பிரித்ததாலும் 1962 தேர்தலில் ஏற்பட்டது.
வாக்களிக்க 10 நாள்கள், வாக்கு எண்ண 3 வாரங்கள்!
இந்தியாவின் மூன்றாவது மக்களவையை தேர்ந்தெடுக்க, 21 கோடி வாக்காளர்கள் பிப்ரவரி 16 முதல் 25 வரையில் பத்து நாள்களுக்கு வாக்களித்தனர். 1,985 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 21.63 கோடி வாக்காளர்களில் 55.43% வாக்களித்தனர், 1957 தேர்தலில் பதிவான 47.54% என்ற சராசரியைவிட இது அதிகம். 1962இல் வாக்குப்பதிவில் உச்சம் தொட்ட தொகுதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் 80.66%, மிக மிகக் குறைவாக வாக்குகள் பதிவான தொகுதி ஒடிஷா மாநிலத்தின் பாஞ்ச்நகர் 12.04%.
மக்களவைக்கு 387 பொதுத் தொகுதிகள், 76 பட்டியல் இனத் தொகுதிகள், 31 பழங்குடித் தொகுதிகளிலும், மாநில சட்டப்பேரவைகளுக்கு 693 தனித் தொகுதிகள் உள்பட மொத்தம் 3,121 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைத் தவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, பாரதிய ஜன சங்கம் ஆகியவை முக்கிய பிற கட்சிகள். பாரதிய ஜன சங்கம்தான் பின்னாளில் உருவான பாஜகவுக்கு தாய் கட்சி.
வாக்காளரின் கைவிரலில் அழியாத மையை அடையாளத்துக்கு வைக்கும் நடைமுறை முதல் இரண்டு பொதுத் தேர்தல்களைப் போல 1962லும் தொடர்ந்தது. வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முறை தெற்கு கல்கத்தா மக்களவைத் தொகுதியில் துணைத் தேர்தலின்போது (இடைத் தேர்தல்) தொடங்கப்பட்டது, ஆனால் அதை அந்த ஒரு தொகுதியில்கூட வெற்றிகரமாக அமல்படுத்த முடியவில்லை.
வாக்குச் சீட்டுகளை எண்ணி முடிக்க, வாக்குப் பதிவு நாள்களைவிட அதிகம் பிடித்தது. 1962 பிப்ரவரி 25இல் தொடங்கிய பணி மார்ச் 18 வரையில் நீடித்தது. உத்தர பிரதேசத்தின் கோண்டா, பல்ராம்பூர் தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி பல முறை கோரிக்கைகள் விடப்பட்டன. அப்படி மறு வாக்கு எண்ணிக்கை நடத்திய பிறகு, மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். முடிக்க வேண்டிய அவசியமான பணிகளை முடிக்க இரண்டாவது மக்களவைக்கு மேலும் சில நாள்கள் அவகாசம் அளித்த பிறகே, 1962 ஏப்ரல் 2இல் புதிய மக்களவை அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக நேரு பிரதமர்
தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றார் ஜவாஹர்லால் நேரு. நேருவின் இரண்டாவது பதவிக் காலத்தின் நடுப்பகுதியிலேயே அவருடைய அரசின் மீதான விமர்சனங்கள் உரத்து ஒலிக்கத் தொடங்கின. கூட்டுப் பண்ணை முறை தொடர்பான காங்கிரஸின் தீர்மானத்தை விமர்சித்து, நாகபுரியில் 1959இல் நடந்த அனைத்திந்திய காங்கிரஸ் பேரவை (ஏஐசிசி) மாநாட்டில் சௌத்ரி சரண் சிங் பேசினார். அவர் அப்போது காங்கிரஸ் கட்சியில்தான் உறுப்பினராக இருந்தார். வேளாண்மையில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமலேயே, கூட்டுப் பண்ணை முயற்சி வெற்றிபெறாது என்று சரண் சிங் வாதிட்டார்.
இதில் 1962 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ‘இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ்’ என்ற தன்னுடைய கட்சியையும் வேறு சில கட்சிகளையும் இணைத்து ‘சுதந்திரா’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் ராஜாஜி. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில தலைவர்கள் தொடங்கிய ‘காங்கிரஸ் சீர்திருத்தக் குழு’ என்ற அமைப்பே பிறகு இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸானது; பிஹார், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் பல சிறிய அரசியல் குழுக்களுடன் இணைந்து ‘சுதந்திரா’ உருவானது. ஆறு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றது சுதந்திரா.
இத்தனைக்குப் பிறகும் எந்த அரசியல் கட்சியாலும் 1962 தேர்தலில் காங்கிரஸுக்குப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை. மக்களவையில் 361 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது; அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியாக உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 29 தொகுதிகள் கிடைத்தன, பாரதிய ஜன சங்கம் 14 தொகுதிகளில் வென்றது. 35 பெண்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த பொதுத் தேர்தலில் கேரளத்தைத் தவிர பிற மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பேரவையில் அதற்குப் பெரும்பான்மை வலு கிடைக்கவில்லை. சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ராம் மனோகர் லோகியா, புல்பூர் தொகுதியில் பிரதமர் நேருவிடம் தோற்றார். காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட விஜயராஜ சிந்தியா குவாலியர் தொகுதியில் வென்றார்.
எதிர்க்கட்சித் தலைவர்களில் பம்பாய் வடக்கு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜே.பி.கிருபளானி தோற்றார். பல்ராம்பூர், லக்னௌ ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜன சங்கத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் இரண்டிலும் தோற்றார். (பிறகு மாநிலங்களவை உறுப்பினரானார்.) வாஜ்பாயின் சக தலைவர் பால்ராஜ் மதோக், புதுதில்லியில் தோற்றார்.
அந்தத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா நகரில் 1962 மே 24இல் நடந்த பாரதிய ஜன சங்க தேசிய செயற்குழு, தேர்தலின்போது மத்திய, மாநில அரசு இயந்திரங்களை அமைச்சர்கள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக தவறாகப் பயன்படுத்தியதாக தீர்மானம் நிறைவேற்றிக் கண்டித்தது. தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் போட்டியில் சமமான வலிமை இருக்க வேண்டும் என்றால் பொதுத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் அரசுகள் பதவி விலகிவிட வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரியது.
சீன ஆக்கிரமிப்பு, பிற பிரச்சினைகள்
1962 ஏப்ரல் 10இல் பிரதமர் நேரு (73) மூன்றாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒலித்த பிரிவினை கோரிக்கைகள் அவரை வெகுவாக பாதித்தன. தேர்தல் பிரச்சாரத்தின்போது சில எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியது தனக்கு மிகுந்த மன வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்ததாக மக்களவையில் மார்ச் 19இல் பேசும்போது குறிப்பிட்டார்.
“இந்தத் தேர்தலில் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான எல்லாவித போக்குகளும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களில் வெளிப்பட்டன. சாதிய ஆதரவுப் போக்கு, மதவாத ஊக்குவிப்புப் போக்கு, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையிலான கோரிக்கைகள் என்று அனைத்துமே வெளிப்பட்டன… தேர்தல் என்று வந்துவிட்டால் நம்முடைய சிந்தனை கட்டு மீறுகிறது, இப்படி நடவாமல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானத்துடன் பேசுவது அவசியம். போராக இருந்தால் - சரி போர்க்காலம் என்று விட்டுவிடலாம்; நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதற்கான தேர்தல் இது. வெவ்வேறு விதமான பிரிவினை எண்ணங்களைச் சிலர் பேசியதையும் - வேறு சிலர் அதை ஊக்குவித்ததையும் பார்த்தேன்; எல்லோருடைய சிந்தனையிலும் ஏதோ தவறு நிகழ்ந்துவருவதாகவே பார்க்கிறேன்…” என்றார் நேரு.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரம் குறித்துத்தான் நேரு அப்படிப் பேசினார். மதறாஸ் மாகாணத்தில் ஏழு மக்களவைத் தொகுதிகளில் வென்ற திமுக, பிறகு பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்தது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னால் 1961இல் ‘தேசிய ஒருமைப்பாட்டு பேரவை’ (கவுன்சில்) நிறுவப்பட்டது. வகுப்புவாதம், சாதியவாதம், பிராந்தியவாதம், மொழி வெறி, இதர பிரிவினை எண்ணங்களுக்கு எதிராக நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க இந்த அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியது.
மொழி அடிப்படையிலான துணை தேசியவாதம், பிராந்திய அடிப்படையிலான விருப்பங்கள் ஆகியவை மாநிலங்களில் பெருகின; அத்துடன் உணவு தானிய பற்றாக்குறையும் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டின, இதனால் சமூகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. 1962 அக்டோபர் 20ஆம் நாள் இந்தியாவுக்குள் சீனப் படைகள் நுழைந்தன. ‘இந்தி-சீனி பாய் பாய்’ என்ற நேருவின் ஒற்றுமை முழுக்கத்துக்கும் நேரு கடைப்பிடித்த ‘அணி சாரா’ நடுநிலைக் கொள்கைக்கும் பெரிய அடி விழுந்தது. ஒரு மாத சண்டைக்குப் பிறகு, போரை நிறுத்திக்கொள்வதாக சீனா தானாகவே அறிவித்தாலும் நேருவாலும் காங்கிரஸாலும் சீனப் போர் ஏற்படுத்திய பின்னடைவிலிருந்து மீளவே முடியவில்லை.
இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
20 Apr 2024
1962 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பின்னிருந்து 1963 ஜூலை வரையில் மக்களவைக்கு நடைபெற்ற 10 இடைத் தேர்தல்களில், நான்கில் மட்டுமே காங்கிரஸால் வெற்றிபெற முடிந்தது. ஃபரூக்காபாத் தொகுதியிலிருந்து லோகியாவும், அம்ரோஹா தொகுதியிலிருந்து கிருபளானியும் மக்களவைக்கு இடைத் தேர்தல் வெற்றி மூலம் வந்தனர். 1963 ஆகஸ்டில் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக, ‘முதல் முறை’யாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
எதிர்க்கட்சிகள் படிப்படியாக மக்களிடம் செல்வாக்குப் பெற்று வலிமையடைந்தது 1967 தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. 1964 மே 27இல் ஏற்பட்ட மாரடைப்பில் நேரு இயற்கை எய்தினார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 16 ஆண்டுகள் 286 நாள்கள் தொடர்ந்து பிரதமராக இருந்தார். அவரைப் போல இதுவரை வேறு எந்த இந்தியரும் தொடர்ந்து அவ்வளவு காலம் பிரதமராகப் பதவி வகிக்கவில்லை. நேருவின் காலத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி படிப்படியாக மக்களிடையே செல்வாக்கு இழந்து சரிந்துவிட்டது.
தொடர்புடைய கட்டுரைகள்
நேருவின் நினைவை பாஜகவால் அகற்றிவிட முடியுமா?
நாத்திகர் நேருவின் ஆன்மிகம்
அம்பேத்கரையும் சண்முகம் செட்டியையும் ஏன் அமைச்சரவைக்கு அழைத்தார் நேரு?
நேரு: அன்றைய இந்தியர்களின் பார்வையில்!
நேரு என்னவாக எஞ்சியிருக்கிறார்?
இந்தியாவால் மறக்கவே முடியாதவர் நேரு
நேரு எதிர் படேல் விவாதம் மோசடியானது, ஏன்?
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
தமிழில்: வ.ரங்காசாரி
5
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.