பேட்டி, கலை, அரசியல், சமஸ் கட்டுரை, இலக்கியம் 10 நிமிட வாசிப்பு

தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: சாரு

சமஸ் | Samas
26 Feb 2023, 5:00 am
7

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

எங்கோ விஷயத்தை நீங்கள் பொதுமைப்படுத்த முற்படுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். எழுத்தாளர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதிலோ, தமிழ்ச் சமூகம் இந்த விஷயத்தில் கேவலமான இடத்தில் இருக்கிறது என்பதிலோ எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வாசகர்களால் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றால், அவர்களுடைய உலகத்துக்குள் இவர்கள் இருக்க வேண்டும். ஜெயகாந்தன் போன்ற ஒருவரின் எழுத்துகள் - பேச்சுகளையும் அவருக்குக் கிடைத்த சமூக அங்கீகாரத்தையும் ‘வெகுஜன எழுத்தாளர்’ என்ற சிமிழுக்குள் அவரை அடைத்துக் கடந்துவிட முடியுமா? இதே சொற்களைக் கேரளத்தில் யாரோ ஒருவர் உங்களை நோக்கிக் குறிப்பிடலாம்தானே? தமிழ்நாட்டில் இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணக்கு; சினிமா அடைந்த பெரும் செல்வாக்கு இரண்டுமே திராவிட இயக்க எழுச்சியோடும் பிணைந்திருக்கிறது. நான் இந்த விஷயத்தில் எந்த ஒரு தரப்பையும் சார்ந்தோ, குற்றஞ்சாட்டியோ பேசவில்லை. இதில் இரு தரப்புத் தவறுகளும் பேசப்பட வேண்டும்; ஆக்கபூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். நீங்கள் முற்றுமுதலாக இந்த விஷயத்தைப் புறக்கணிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. தான் உண்டு; தன்னுடைய இசை உண்டு என்று ஞானி தியாகராஜர் செல்வதை எவரும் குறை கூற முடியாது. ஆனால், ‘என்னை ஏன் ஒட்டுமொத்த சமூகமும் கொண்டாடவில்லை?’ என்று அவர் அரற்றவும் இல்லை. யாரையெல்லாம் கர்நாடக இசை அறிவு எட்டியதோ, எட்டுகிறதோ அவர்கள் எல்லாம் அவரைக் கொண்டாடுவார்கள்; அவ்வளவுதானே! மேலும், நீங்கள் தமிழ் சினிமாவின் சமூகத் தாக்கத்தைத் துளியும் அங்கீகரிக்க மறுக்கிறீர்களோ என்றும் தோன்றுகிறது. எல்லாக் காலகட்டங்களின் ஏக்கங்கள் அபிலாஷைகளையும் தமிழில் சினிமாவால் மக்களிடம் கொண்டுசேர்க்க முடிந்திருக்கிறது. ஆச்சர்யமூட்டும் வகையில் அரசியலோடு சினிமா இங்கே இணைந்து பங்காற்றியும் இருக்கிறது. நாம் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தானே வேண்டும்! நாம் இதை விவாதம் ஆக்காமல் உரையாடலாகக் கொண்டுசெல்லலாம் என்று எண்ணுகிறேன். எப்படி இந்தச் சூழலைச் சீரமைப்பது? 

அதிர்ஷ்டவசமாக நம் நேர்காணல் அப்படி ஓர் உரையாடலாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது சமஸ். நீங்கள் பாதாளக் கொலுசு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கொலுசு போன்ற வடிவத்தில் பல கொக்கிகள் ஒரு இரும்பு வளையத்தில் இணைக்கப்பட்டிருக்கும். கிணற்றில் விழுந்துவிட்ட சொம்பு, குடம் போன்றவற்றை எடுக்க அதைப் பயன்படுத்துவார்கள். அப்போது எதைத் தேடுகிறார்களோ அதோடு, அதற்கு முன் கிணற்றில் விழுந்து கிடக்கும் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு வரும். அப்படி என்னிடமிருந்து இதுகாறும் வெளிவராத பல விஷயங்களை உங்களின் பாதாளக் கொலுசு கேள்விகள் இந்த நேர்காணலில் வெளிகொண்டு வருகின்றன. கிட்டத்தட்ட நூறு மணி நேரம் விவாதிக்கக்கூடிய தரவுகளை வேண்டி நிற்கின்றன உங்கள் கேள்விகள்.

நீங்கள் சொன்னதுபோல், ஜெயகாந்தனுக்கு ஒரு தனித்துவமான இடம் இங்கே இருந்திருக்கிறது. காமராஜரோடு ஜெயகாந்தன் நெருக்கமான உறவில் இருந்தார் என்றால், கருணாநிதி, எம்ஜிஆர் போன்று ஜெயகாந்தனால் விமர்சிக்கப்பட்ட தலைவர்களும் அவர் மீது மதிப்புடன்தான் இருந்தார்கள். நானே இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன். 

கருணாநிதியும் ஜெயகாந்தனும் ஜெயகாந்தன் நடத்திய கல்பனா பத்திரிகைக்காக உரையாடுகிறார்கள். கீழே வருவது உரையாடல்:

மு.க.: காமராஜரைப் போன்ற பெரிய தலைவர்கள் வற்புறுத்தியதனால், அதற்காக திமுகவின் மீது அபவாதங்களைக் கூறி மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்பை உருவாக்கியதனால், நான் மதுவிலக்கை மறுபடியும் கொணர நேர்ந்த்து. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தாமல் ஓரிரு மாநிலங்களில் மட்டும் அமல்படுத்துவது வெற்றி தராது என்பது என் கருத்து. 

ஜெ.கா.: நான் அது விஷயத்தில் காமராஜரின் விமர்சனங்களை அப்போதே ஏற்கவில்லை… நீங்கள் சட்டம் போட்டுவிட்டீர்கள் என்பதற்காக, தண்டித்துவிடுவீர்கள் என்பதற்காக பயந்து கொண்டு ஒரு கோழைபோல நான் குடிக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களா? என்னைப் போன்றவர்களைக் குற்றவாளியாக்குவதும், கோழையாக்குவதும்தான் சட்டத்தின் நோக்கமா?

மு.க.: (வாய் விட்டுச் சிரிக்கிறார்) ஜெயகாந்தனின் வாதங்கள் சுவையானவை. சிந்திக்கத் தூண்டுபவை. ஆனாலும் அவற்றோடு என் கருத்துகளை இணைத்துவிட வேண்டாம். 

கருணாநிதியாவது சமகால இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்டவர். எம்ஜிஆர் இலக்கியத்துக்கு வெளியே இருந்தவர். ஜெயகாந்தன் தான் கஞ்சா அடிப்பதை மறைத்தவர் அல்ல. மிக வெளிப்படையாக கூட்டங்களிலும் கஞ்சா அடித்தவர். எம்ஜிஆரோ இதுபோன்ற போதைப் பொருட்களுக்கு மிகவும் எதிரானவர். ஜேகே பொது இடங்களில் கஞ்ஜா புகைப்பது பற்றி எம்ஜிஆரிடம் சிலர் புகார் செய்தபோது “கலைஞர்களை நாம் தொந்தரவு செய்யக் கூடாது” என்று சொன்னார். 

நம்முடைய இந்த நீண்ட உரையாடல் முழுவதுமே நான் சொல்ல விரும்பியது இதைத்தான். கருணாநிதி முதல்வர். ஜேகே எழுத்தாளர். ஆனால், ஜெயகாந்தனின் செருக்கைப் பாருங்கள். பாரதியிடம் இருந்த அதே செருக்கு. நீங்கள் சொல்வதுபோல், ஜெயகாந்தனுக்கு தனித்துவமான ஓர் இடம் இங்கே இருந்திருக்கிறது. ஆனால், அது ஜெயகாந்தனுக்கு மட்டுமே இருந்த இடம் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி ஒரு பாவனையோடும் செருக்கோடும் எந்த ஒரு தமிழ் எழுத்தாளனும் எந்த ஒரு முதல்வரிடமும் பேசிவிட முடியுமா?

முதல்வர் எனும் சுட்டல் இங்கே ஓர் உதாரணம். ஒட்டுமொத்த சமூகமும் அப்படித்தான் இருக்கிறது. எழுத்தாளன் இந்தச் சமூகத்தின் உலகத்துக்கு வெளியே ஒரு தனித்த உலகத்துக்குள் இருக்கிறான்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி

சமஸ் | Samas 25 Dec 2022

சரி, இந்த இரண்டு உலகங்களையும் எப்படி இணைப்பது? 

போராட்டம்தான் வழி என்று நினைக்கிறேன். மக்களுக்கே எதிரான போராட்டம். இதுவும் இந்தச் சமூகத்துக்குத் தேவையான ஒரு போராட்டம்தான். நான் தமிழ்நாட்டில் மக்களுக்காகப் போராடவில்லை, மக்களை எதிர்த்துப் போராடுகிறேன்; என் எழுத்தின் மூலம்.

படம்: பிரபு காளிதாஸ்

ஏன் என்று சொல்கிறேன். தமிழ் மக்கள் என்றால் யார்? அவர்களுடைய இப்போதைய குணாம்சம் என்ன? இதற்கு முன்னர் அவர்கள் எப்படி இருந்தார்கள்? இப்போது எப்படி இருக்கிறார்கள்? நடந்தது ஒரு சீரழிவு என்றால் அதற்குக் காரணமாக இருந்தது எது?

சுதந்திரப் போராட்டக் காலத்தில் கொடைக்கானலிலிருந்து ஒருவர் வயதுக்கு வந்த தன் மகளைத் தனியாக சென்னைக்கு அனுப்புகிறார். இரவு நேரம். தந்தைக்கு பயம். ஆனால், அந்தப் பெட்டியில் நாலைந்து காந்தி தொப்பிக்காரர்களைப் பார்த்ததும் அவருக்கு பயம் தீர்ந்துவிட்டது. அவர்களும் அந்தப் பெண்ணை சென்னையில் நல்ல முறையில் கொண்டுசேர்த்துவிடுகிறோம் என்கிறார்கள். 

எண்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். இப்போது ரயிலில் குறைந்தது அரசியல் தலைவர்களை நம்பியேனும் அப்படி நாம் செய்யும் நிலை இருக்கிறதா? நான் அரசியல் செயல்பாட்டாளர்களை மட்டும் குற்றம் சொல்லவில்லை. அரசியல் செயல்பாட்டாளரும் நம் வீட்டிலிருந்துதானே செல்கிறார்? என்ன சொல்ல வருகிறேன் என்றால், காற்றும் நீரும் மாசு அடைந்ததுபோலவே நம் மதிப்பீடுகளும் சீரழிந்துவிட்டன. வனங்களை அழித்ததால் யானைகளுக்குக் குடிக்க நீரின்றி அவை ஊருக்குள்ளே வந்ததை நான் ஸ்ரீவில்லிபுத்தூர் காட்டழகர் கோயிலுக்குச் சென்றபோது கண்டேன். மனிதனின் பேராசை யானைகளையும் புலிகளையும்கூட வனங்களிலிருந்து துரத்திவிட்டது. 

பள்ளிகளில் ஆசிரியை குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். மாணவ மணிகளும் சேர்ந்து ஆடுகிறார்கள். வலைத்தளங்களைத் திறந்தாலே இந்தக் கண்மணிகளின் குத்துப்பாட்டுதான் காணக் கிடைக்கிறது. 

ஆனால், எங்கள் மாணவப் பருவத்தில் நாங்கள் ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்டு வளர்ந்தோம். அவர் பேசாத கல்லூரியே அவர் காலத்தில் இல்லை. கல்லூரி விழாக்களில் அப்போது ஜெயகாந்தனை அழைத்தார்கள். இப்போது சினிமா நடிகர்களை அழைக்கிறார்கள். ஒன்று தெரியுமா உங்களுக்கு? நான் தமிழ்நாட்டில் எந்தக் கல்விக்கூடத்திலும் பேச அழைக்கப்பட்டது இல்லை. ஒரே ஒரு முறை சென்னைப் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத் துறை மட்டுமே பேச அழைத்தது. முழுக்கவும் பிரெஞ்ச் இலக்கியம் பற்றியும் பிரெஞ்ச் தத்துவவாதிகள் பற்றியும்தான் பேசினேன். அங்கே இருந்த தமிழ்த் துறையினருக்கு என் பெயர்கூடத் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்குத் தெரிந்த கடைசித் தமிழ் எழுத்தாளர் பாரதியாராக இருந்தார். இப்போது புதுமைப்பித்தனையும் அவர்கள் சேர்த்திருக்கலாம். என் பெயர் வர இன்னும் நூறு ஆண்டுகள் ஆகும். 

சில ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பரின் பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு கட்டை விரல் பார்சல் வந்தது. நடிகர் விஜயிடம் கொடுத்துவிடச் சொல்லி அதில் ஒரு துண்டுச் சீட்டு. சமீபத்தில் ஒரு சினிமாவின் முதல் நாள் காட்சியை நடிகரின் ரசிகர் லாரியில் ஏறிக் கொண்டாடியபோது கீழே விழுந்து செத்தார். பிரபல நடிகர்களின் படம் வெளிவரும்போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சியை அதிகாலை மூன்று மணிக்கு மூவாயிரம் ரூபாய் வரை கொடுத்துப் பார்க்கிறது மக்கள் கூட்டம். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு

சமஸ் | Samas 01 Jan 2023

இந்த மக்களை எதிர்த்துத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன், என் எழுத்தின் மூலம். இவர்களைத்தான் ஃபிலிஸ்டைன் சமூகம் என்று குற்றம் சாட்டுகிறேன்.

நடிகர் தனுஷ் தன் பட வெளியீட்டில் பேசுகிறார். அவர் படிக்கும்போது டியூஷனுக்குப் போகாமல் கட் அடித்துவிட்டு பைக்கில் அமர்ந்துகொண்டு தன் கேர்ள் ஃப்ரெண்டுக்குக் கேட்கும் விதத்தில் பைக்கிலிருந்து தொடர்ந்து ஹாரன் அடிப்பாராம். அதனால் வகுப்பு நடத்த முடியாமல் போகும் ஆசிரியை ‘அவன் (தனுஷ்) உருப்படாமல் கூத்தாடியாகத்தான் போவான்’ என்று சபிப்பாராம். அவர் சபித்தபடியே தனுஷ் இன்று கூத்தாடியாகிவிட்டாராம். இதைக் கேட்டு கை தட்டுகிறது சமூகம்! என்ன ஓர் அறிவார்ந்த சமூகம் இது! சரி, அந்தக் கூத்தாடியின் சம்பளம் எவ்வளவு என்று பார்த்தால் அம்பது கோடி ரூபாய்!

இந்தப் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் இந்த நடிகர்களைப் பின்பற்றுகிறார்கள் இளைஞர்கள். ஆனால், லட்சத்தில் ஒரு நடிகர்தான் அப்படி வருகிறார். அம்பது கோடி ஊதியமும் பெறுகிறார். அவரை முன்மாதிரியாகக் கொள்ளும் இளைஞர்களோ கொலை கேஸில் மாட்டிச் சாகிறார்கள். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டுத் தானும் இறந்த ஒரு இளைஞனை வேறு எப்படிப் பார்ப்பது? ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திலும் இன்றைய காதல் தனுஷ் சொன்ன நிஜக் கதை மாதிரிதான் இருக்கிறது. நுங்கம்பாக்கம் இளைஞனின் கதை. அவன் படிக்க மாட்டான். பதினாறு வயதிலேயே சிகரெட் குடிப்பான். தண்ணி அடிப்பான். அவன் ஒரு அழகான பெண்ணைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு ஐ லவ் யூ சொல்வான். அவளும் சொல்ல வேண்டும். சொல்லாவிட்டால் கொன்றுவிடுவான். 

தமிழில் வருகின்ற பெரும்பாலான கதைகளில் வேறு என்ன மாதிரியான காதல் வருகிறது சொல்லுங்கள்? 

இங்கே உள்ள பூங்காக்களுக்குக் காலை பத்து மணி அளவில் சென்று பாருங்கள். தமிழ் சினிமாவையே மிஞ்சும் காட்சிகளைக் காணலாம். நான் காதலுக்கு எதிரி அல்ல. ஒன்பதாம் வகுப்பு மாணவியும் அவள் கூடவே ஒரு லும்பனும் அமர்ந்திருக்கிறார்கள். அந்தக் காதலுக்கு நான் எதிரி. என் நண்பர் ஒருவர் அப்படி ஒரு ஜோடியைப் பார்த்து கண்டிக்கப் போக, அந்தப் பதினைந்து வயதுப் பெண் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொல்லி என் நண்பரைத் திட்டினாளாம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

புரிகிறது… ‘லும்பன்’ என்ற சொல்லை நீங்கள் இங்கே கொஞ்சம் விளக்கவிட வேண்டும் என்று எண்ணுகிறேன்… 

கல்வியையும் உழைப்பையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அடுத்தவர் உழைப்பில் வாழும் சமூக ஒட்டுண்ணிகளையே நான் லும்பன் என்று அழைக்கிறேனே தவிர, நிச்சயமாக சமூகத்தில் பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை அல்ல. சமூக ஒட்டுண்ணி லும்பன்களை நாம் சோஷியோபேத் (sociopath) என்று சொல்லலாம். தன்னுடைய மகிழ்ச்சிக்காக கொலை உட்பட எதையும் செய்யத் துணிபவரே சோஷியோபேத் எனப்படுவர். அதைப் பெரிய அளவில் செய்தவன் பாப்லோ எஸ்கோபார். 

இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம்: என் நண்பரும் எழுத்தாளருமான அபிலாஷ் சந்திரன் பெங்களூரில் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். அவர் வகுப்பில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உண்டு. அன்றைய தினம் மொழிபெயர்ப்பு வகுப்பு. அபிலாஷ் அவர்களிடம் தங்கள் மொழிகளிலிருந்து ஒரு எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்து அவர் கதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்கிறார். கன்னட மாணவர்கள் பைரப்பா, காரந்த் போன்றவர்களையும், மலையாள மாணவர்கள் பஷீர், ஸக்கரியா போன்றவர்களையும், இந்தி மாணவர்கள் நிர்மல் வர்மா போன்றவர்களையும் மொழிபெயர்க்க, தமிழ் மாணவர்கள் மட்டும் ஒன்றும் தெரியாமல் முழித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். வெகுஜன எழுத்தாளரான சுஜாதாவின் பெயர்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒட்டுமொத்த சமூகமே ஃபிலிஸ்டைனாக மாறிவிட்டதன் அடையாளமே இது. 

நம் உரையாடலை வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு வாசகர் ‘சாரு ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்டாரா?’ என்று கேட்டிருக்கிறார். கலந்துகொண்டால் அடித்துக் கொன்றிருப்பார்கள். ஏனென்றால், போலீஸ்காரருக்கு என்னை யாரென்று தெரியாது. இந்தியாவில் ஒரு சராசரி மனிதன் என்பவன் கொசுவுக்குச் சமானம். ஸ்டெர்லைட்டை விடுங்கள். என் வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறது மெரினா கடற்கரை. அங்கே நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். அதுபற்றி எழுதினேன். தமிழிலும் ஆங்கிலப் பத்திரிகையிலும் எழுதினேன். நேரில் போய் வேடிக்கை பார்த்தேன். அவர்களில் யாருக்குமே என்னைத் தெரியாது. நான் சினிமா நடிகன் இல்லையே? அவர்களோ தம் வாழ்நாளில் ஓர் இலக்கிய நூலையும் படித்திராதவர்கள். படிப்பதை விடுங்கள். இன்றைய தினம் தமிழ்நாட்டிலேயே தமிழ் வெறும் பேச்சுமொழியாக ஆகிக்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் பலருக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும். எழுதத் தெரியாது. எழுதத் தெரிந்தவர்களுக்கும் பிழையில்லாமல் எழுதத் தெரியாது. 

நான் ஒரு தினசரியில் நடக்கும் சிறுகதைப் போட்டிகளுக்கு பல ஆண்டுகள் நடுவராக இருந்திருக்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ‘ஒரு உரில் ஒரு ரஜா இருந்தன்…’ என்றுதான் கதையையே ஆரம்பிப்பார்கள். ஆயிரம் கதையில் ஐந்து கதைகள் தேறும். அந்த ஐவரும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருப்பார்கள். ஆக, 'ஒரு உரில் ஒரு ரஜா இருந்தன்' என்று எழுதுபவர்கள்தான் ஜல்லிக்கட்டு தமிழனின் அடையாளம் என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இளைஞர்களை விடுங்கள். இளம் தலைமுறை எழுத்தாளர்களில் பலருக்குமே தமிழைப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. சகிக்கவே முடியாத அளவுக்கு இலக்கணக் கொலையாக இருக்கிறது அவர்கள் எழுதும் தமிழ். ‘வாழ்கை’ என்றும் ‘நிர்பந்தம்’ என்றும் எழுதுகிறார்கள். நிர்ப்பந்தத்தைக்கூட விடுங்கள், வாழ்கையைத்தான் என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. 

இப்படியானவர்கள் சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்திலும் உட்காரும்போது அங்கே என்ன நடக்கிறது? சொல்கிறேன்.

எழுத்தாளர் தி.ஜ.ரங்கநாதன் என்ன மாதிரியான பணிகளை ஆற்றியவர் என்று உங்களுக்குத் தெரியும். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். அதற்காகவே லௌகீக வாழ்வைப் புறக்கணித்தவர். அவர் இளைஞனாக இருக்கும்போது ஒருமுறை சென்னையில் ஒரு பெரிய காங்கிரஸ் மாநாடு ஏற்பாடாகியிருந்தது. சுதந்திரத்துக்கு முன்னே. மூன்று நாள் மாநாடு. காந்தியும் வந்திருக்கிறார். மூன்று நாட்களும் பம்பரமாய்ச் சுழன்று வேலை செய்த தி.ஜ.ர. மூன்றாவது நாள் மாநாடு முடிந்த கையோடு அரக்கப் பரக்கக் கிளம்பப் பார்க்கிறார். மாநாட்டுத் தலைவர் ‘எல்லாம்தான் முடிந்துவிட்டதே, கொஞ்சம் இருந்து ஆற அமர சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாமே?’ என்கிறார். அதற்கு இளைஞர் சொன்னார், ‘என் பத்து மாதக் குழந்தை காலையில் இறந்துவிட்டது, நான் போய்த்தான் காரியம் செய்ய வேண்டும்!’ தலைவர் கேட்டார், ‘அடப்பாவி, நீ மனுஷன்தானா?’ தி.ஜ.ர. சொன்னார், ‘இல்லை, நான் தொண்டன்.’ 

பிற்காலத்தில் நல்ல எழுத்தாளராகவும் திகழ்ந்தார் தி.ஜ.ரங்கநாதன். ஆனால், தமிழ்நாட்டில் ஓசியில்தானே எழுத வேண்டும்? குடும்பம் பட்டினி கிடந்தது. காந்திய மதிப்பீடுகளில் வாழ்ந்தவர். யாரிடமும் யாசகம் கேட்க மாட்டார். சாரு நிவேதிதாவைப் போல் அரற்ற மாட்டார். கடைசியில் அவர் மனைவி இங்கே மைலாப்பூரில் வீடுகளில் பாத்திரம் தேய்த்து வாழ்ந்தார். இருக்க இடம் இல்லை. அரசாங்கத்தில் யாரோ சொல்லி, மைலாப்பூரில் உள்ள குயில் தோப்பு என்ற சேரிப் பகுதியில், குடிசையைவிட மட்டமான ஒரு சிறிய வீட்டை அளித்தது அரசு. அது முக்கியம் இல்லை. அந்த வீட்டைக் கொடுத்ததற்கான அரசு ஆணையின் எண்ணை சிலேட்டில் எழுதி அந்த சிலேட்டை தி.ஜ.ரங்கநாதனைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி புகைப்படம் எடுத்துக்கொண்டது அரசு. உலகம் பூராவும் சிறைக் கைதிகளுக்குத்தான் அப்படி நம்பர் அட்டை கொடுத்து புகைப்படம் எடுப்பது வழக்கம். எவ்வளவு பெரிய வெட்கக்கேடு இது! 

கையில் சிலேட்டுடன் எழுத்தாளர் தி.ஜ.ர.

நம் தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின், தமிழ்ச் சமூகத்தின் சீரழிவின் குறியீடாக அந்தப் புகைப்படத்தைப் பார்க்கிறேன். 

தி.ஜ.ரங்கநாதனின் குழந்தை இறந்த சம்பவத்தைப் போலவே எனக்கும் அப்படி நடந்தது. ஜூன் 25, 2009. ‘உயிர்மை’ பத்திரிகையில் தொடர்ந்து நான் கட்டுரைகள் எழுதிவந்தேன். அன்றைய தினம்தான் மைக்கேல் ஜாக்ஸன் இறந்திருந்தார். அதனால் அந்த மாதம் நான் எழுதியிருந்த கட்டுரைக்குப் பதிலாக மைக்கேல் ஜாக்ஸன் பற்றி ஒரு இரங்கல் கட்டுரை தர முடியுமா என்று கேட்டார் உயிர்மை ஆசிரியர் மனுஷ்ய புத்திரன். மைக்கேல் ஜாக்ஸன் என் ஆதர்ச நாயகன். இரண்டே நாட்களில் கட்டுரை வேண்டும். மாதக் கடைசி என்பதால் தாமதம் கூடாது. பத்திரிகை அச்சுக்குப் போக வேண்டும். என் கட்டுரைக்கான இடத்தை விட்டுவிட்டு பத்திரிகை தயாராகிவிட்டது. கட்டுரையை மதியம் கொடுக்க வேண்டும். காலையில் என் தந்தை இறந்துவிட்டார். என்னை ஒரு பேரரசனைப் போல் வளர்த்தவர். யோசிக்கவே இல்லை. ‘பிரேதத்தை எடுத்துவிடுங்கள், நான் எழுதிக் கொடுத்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டேன். நான் வீட்டுக்கு மூத்த மகன்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி

சமஸ் | Samas 29 Jan 2023

கட்டுரையை எழுதிக் கொடுத்துவிட்டு மனுஷ்ய புத்திரனிடம், ‘கட்டுரையில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் என்னால் தொலைபேசியை எடுக்க முடியாது, ஏதும் நினைக்க வேண்டாம்’ என்று சொல்லி விஷயத்தைச் சொன்னேன். மனுஷ்ய புத்திரன் அதே கேள்வியைச் சொல்லிவைத்தாற்போல என்னிடம் கேட்டார், ‘நீங்கள் மனுஷன்தானா?’ நான் சொன்னேன், ‘இல்லை, எழுத்தாளன்!’

இது எல்லாம் போராட்டத்தில் சேர்த்தியா, இல்லையா?

சென்ற நாற்பது ஆண்டுகளாக நான் லத்தீன் அமெரிக்க அரசியல், சினிமா, இலக்கியம் ஆகிய மூன்றிலும் பங்களித்தவர்கள் பற்றித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழ் மொழியில் சே குவேரா என்ற பெயர் முதல் முதலாக என் கட்டுரையின் வழியாகத்தான் அச்சில் வந்திருக்க வேண்டும். எண்பதுகளின் தொடக்கத்தில் வந்த படிகள் என்ற பத்திரிகையில் சே குவேரா பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதுதான் தமிழில் சே பற்றிய முதல் பதிவு. அடுத்த புத்தகமே லத்தீன் அமெரிக்க சினிமா. இன்று மாற்று சினிமாவை முன்வைக்கும் பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் சாரு நிவேதிதா எழுதிய சினிமா புத்தகங்களிலிருந்து கற்றுக்கொண்டோம் என்று சொல்கிறபோது நான் செய்திருப்பதும் ஒரு நுணுக்கமான (micro) அரசியல் செயல்பாடுதான் இல்லையா?

சென்ற 30 ஆண்டுகளாக அரபி இலக்கியத்திலிருந்து எத்தனையோ எழுத்தாளர்களை மொழிபெயர்த்திருக்கிறேன், அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நான் அறிமுகப்படுத்திய பிறகு அதைப் படித்துத்தான் அரபி எழுத்தாளர்களான தாஹர் பென் ஜெலோனையும், அப்துர்ரஹ்மான் முனிஃபையும் லெபனியப் பெண் எழுத்தாளர்கள் பலரையும் இன்று மொழிபெயர்க்கிறார்கள். இதை நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்தது தொடர்பான குறிப்புகள்கூட இன்றைய நூல்களில் இல்லை. அந்த அங்கீகாரம் எனக்குத் தேவையும் இல்லை. நான் ஒரு கர்ம யோகி. வேலை நடந்தால் மகிழ்ச்சி. யாரைப் பற்றி எழுதவும், மொழிபெயர்க்கவும், அறிமுகப்படுத்தவும் செய்கிறேன் என்ற தேர்ந்தெடுப்பிலேயே என் அரசியல் செயல்பாடு அடங்கியிருக்கிறது என்பதுதான் நான் வலியுறுத்துகின்ற விஷயம். ஆனால், இத்தனை கோடி மக்களில் எத்தனை பேருக்கு இந்த உழைப்பு சென்றடைகிறது என்ற கேள்வி எழும்போதுதான் அரற்றல் உண்டாகிறது.

தியாகராஜர் எதற்காகவும் அரற்றவில்லை. அவர் வாழ்நாள் பூராவும் ராமனைக் குறித்துத்தான் அரற்றினார்; ராமன் பௌதிக ரூபத்தில் தனக்குக் காட்சியளிக்கவில்லையே என்றுதான் அரற்றினார். மற்றபடி சமூகம் அவரை வெகுவாகக் கொண்டாடியது. சரஃபோஜி மகாராஜா அவரைத் தன் அரண்மனையில் வைத்துக்கொள்கிறேன் என்று கெஞ்சினார். தியாகராஜரின் தந்தை சர்ஃபோஜி மன்னரின் அரண்மனையில் அரசவைக் கவிஞராக இருந்தவர். தியாகராஜர் உஞ்சவிருத்தியைத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்போதைய பிராமணர்கள் – குறிப்பாக ஆசிரியர்கள் - தமக்கென்று அடுத்த நாளுக்குக்கூட அரிசியோ பருப்போ எதுவும் வைத்துக்கொள்ளலாகாது என்பது விதி. அரிசி பருப்புக்கே அப்படியென்றால் பணம் காசு பற்றிச் சொல்லவே வேண்டாம். மாற்று உடையைத் தவிர வீட்டில் எதுவுமே இருக்கலாகாது. பிச்சை எடுத்துத்தான் உண்ண வேண்டும். தியாகராஜரின் தந்தை சாகும்போது உஞ்சவிருத்தி செய்வதற்கான பாத்திரத்தைத்தான் ஆஸ்தியாகத் தன் பிள்ளையிடம் கொடுத்தார். 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி

சமஸ் | Samas 05 Feb 2023

தியாகராஜர் ஒரு இசை மேதை என்பது சர்ஃபோஜி மன்னருக்குத் தெரியும். அப்படிப்பட்ட மேதை தன் ஆட்சியில் இப்படி பிச்சை எடுத்து வாழ்வதா என்று வருந்தி ஒருநாள் பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பினார். அதை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார் தியாகராஜர். அதனால் மன்னர் தியாகராஜர் பாடிக்கொண்டே உஞ்சவிருத்தி செய்துகொண்டிருந்த வேளையில் அவரது பையில் தங்கத்தைப் போடச் சொல்லி சேவகனை அனுப்பினார். வீட்டுக்கு வந்து பார்த்த தியாகராஜர் அந்தத் தங்கத்தை எடுத்து வந்து தெருவில் போட்டுவிட்டார். அப்போது அதுபற்றி ஒரு கீர்த்தனையும் பாடினார். 

அது மட்டும் அல்ல, தியாகராஜரின் சங்கீதத்தைக் கேள்விப்பட்டு திருவனந்தபுரம் ராஜா ஸ்வாதித் திருநாள் தன் அரசவையில் இருந்த இசையறிஞரைத் திருவையாறுக்கு அனுப்பி தியாகராஜரைத் தன் அரசவைக்கு அழைத்து வரச் சொல்லி அனுப்பினார். அங்கே போனால் அரச மரபுப்படி அரசரைப் புகழ்ந்து பாட வேண்டும். அதனால், ‘நான் ராமனைத் தவிர மானுடர் யாரையும் பாட மாட்டேன்’ என்று சொல்லி வந்தவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். 

ஆக, தியாகராஜர் உஞ்சவிருத்தி செய்தார் என்பது அவருடைய விருப்பத் தேர்வு. ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பது சமூகம் அவர்கள் மீது திணித்திருப்பது! 

தமிழ் எழுத்தாளர்கள் பிழைப்புக்காக வேறு வேலைக்குச் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. எந்நேரமும் எழுத்தும் படிப்புமாக இருக்க வேண்டிய எழுத்தாளர்கள் அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டும், சினிமாவுக்கு வசனம் எழுதிக்கொண்டும் இருப்பதை வேறு என்னவென்று சொல்வீர்கள்? ஒரு மருத்துவர் மருத்துவம் செய்கிறார். இன்ஜினியர் அந்தப் பணியைத்தான் செய்கிறார். நடிகர் நடிக்கிறார். நடிப்புதான் அவருக்கு சோறு போடுகிறது. நீங்கள் பத்திரிகையாளர். அந்தப் பணிதான் உங்கள் வாழ்வாதாரம். நான் குறிப்பிட்ட யாருமே வயிற்றுக்காக வேறு வேலை செய்யவில்லையே? எழுத்தாளன் மட்டும்தான் சோற்றுக்காக வேறு வேலை செய்கிறான். இப்படி நடப்பது இந்த உலகத்திலேயே தமிழ் மொழியில் மட்டும்தான். அதிலும் நாம் எட்டரை கோடி! 2000 ஆண்டுகளாகப் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறான் தமிழ் எழுத்தாளன் என்று இந்த 2000 ஆண்டுகளில் முதல் குரல் கொடுத்தவன் நான். எழுத்துக்கும் என் ரத்துக்கும் கூலி கொடுங்கள் என்று சொல்லி பூனைக்கு மணி கட்டிய முதல் ஆள் நான். ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் ஒரு இரவு முழுவதும் வீணாகிறது என்று சொல்லி அதற்கு சன்மானமாக வெறும் ரூ.5,000 பணம் கேட்டேன். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு அங்கே தடை போட்டுவிட்டார்கள். அவர்களின் வாதம், ஒரு எழுத்தாளருக்கு இலவச விளம்பரம் தருகிறோம் என்பது ஆகும். ஆனால், நான் தினந்தோறும் தொலைக்காட்சியில் தோன்றினாலும் என் புத்தகம் 200 பிரதிகளுக்கு மேல் விற்காது.

தமிழ் சினிமாவின் சமூகப் பங்களிப்பைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். எனக்கும் அதில் உடன்பாடு உண்டு. இன்றைய தினம் பிஹாரில் ஒரு அரசு அதிகாரிக்கு அவர் கீழ் உள்ள பணியாளர் கால் அமுக்கிவிட வேண்டும். இதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். பிஹார், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் நிலப்பிரபுத்துவம் இன்னும் நீங்கவில்லை. தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இங்கே நிலப்பிரபுத்துவம் ஓரளவு ஒழிந்துவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது தமிழ் சினிமா. ஆனால் அந்தக் காலகட்டம் அண்ணாதுரை, கருணாநிதி காலத்திலிருந்து தொடங்கி எம்ஜிஆர், சிவாஜியோடு முடிந்துவிட்டது. ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்ஜிஆர் சொல்லும் ‘என் ஆட்சியில் உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்’ போன்ற வசனங்கள் கண்ணதாசனுடையவை. அவர் கார்ல் மார்க்ஸை அறிந்தவர். ஆனால் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிந்தைய ரஜினி பாணி சினிமாவுக்கு நாம் அந்த இடத்தைக் கொடுக்க முடியாது என்று எண்ணுகிறேன். நீங்கள் கேட்ட லும்பன் வரையறைக்கு சரியான வடிவமாக திரையில் காட்டப்படும் ரஜினி பாத்திரத்தையே சொல்வேன்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு

சமஸ் | Samas 12 Feb 2023

அப்படியென்றால், தமிழ்நாட்டின் லும்பனிஸ முன்னோடி என்று ரஜினியைக் குறிப்பிடுகிறீர்களா?

சரியாகச் சொல்வது என்றால், தமிழ் சினிமாவிலும் சமூகத்திலும் லும்பனிஸத்தை ஒரு பெரும் போக்காகப் புகுத்தியவர்; பிதாமகன் என்றே ரஜினியைச் சொல்லலாம். அதை ரஜினிக்குப் பிறகு விஸ்தரித்தவர் விஜய். விஜயோடு போட்டி போடுவதற்காக அதை முன்னெடுத்தவர் அஜித். இப்போது தனுஷ் வரை அந்த லும்பனிஸம் வளர்ந்திருக்கிறது. இந்த லும்பன் கலாச்சாரத்தில் சேராத ஒரே நடிகர் கமல்ஹாசன். இதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்லலாம். 

ஆக, இப்படி லும்பனிஸத்தில் கிடந்து உழலும் மக்களுக்கும் மக்களின் நாயகர்களுக்கும் எதிராகவே நான் போராடுகிறேன். இந்தப் போராட்டத்தின் காரணமாகத்தான் மக்கள் என்னை எதிர்க்கிறார்கள். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகை கேட்டுக்கொண்டதற்கு இணங்க வாரம் ஒரு தமிழ் சினிமாவைக் காணொலி மூலம் விமர்சிக்க ஆரம்பித்தேன். அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் என் விமர்சனத்துக்கு இட்ட ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். எல்லாமே கொலை மிரட்டல். சில போன் மிரட்டல்களும் வந்தன. பின்னூட்டங்களில் ரசிகர்கள் என் வீட்டுப் பெண்களை மதக் கலவரத்தின்போது பெண்களை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத்துவார்களோ அப்படியெல்லாம் செய்யப்போவதாகச் சொன்னார்கள். என் வீட்டுப் பெண்களின் ஜனன உறுப்பைக் கிழிப்பேன் என்பதுதான் அவர்கள் எல்லோருடைய கூச்சலாகவும் இருந்தது. 

இப்படி ஒன்று இரண்டு அல்ல, ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள். எல்லாம் விஜய், அஜித் ரசிகர்கள். இந்த சமூகமே பெரும் மனநோய்க் கூடாரமாக ஆகியிருக்கிறது. இங்கே யாருக்காகப் போய் நான் போராடுவது சொல்லுங்கள்? முதலில் இந்தப் பைத்தியக்காரக் கும்பலின் மனநோயைக் குணப்படுத்த வேண்டும். இவர்களை மாற்ற வேண்டும். இவர்களுக்குத் தேவை போராட்டம் அல்ல, சிசுருக்ஷை. அந்த சிசுருக்ஷையை சினிமா விமர்சனத்தின் மூலம் செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன். ஏனென்றால், தமிழ்நாட்டில் சினிமா மதம். அதுவும் லும்பன்களின் மதம். எந்த மதத்தில் கை வைத்தாலும் எழுத்தாளன் தலை போய்விடும். 

பொதுவாகவே எழுத்தாளர்களுக்கு எதிரான மனநிலை நம்முடைய சமூகத்தில் இருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் ஃபிலிஸ்டைன் மதிப்பீடுகளையும் லும்பன் கலாச்சாரத்தையும் எழுத்தாளர்கள் எதிர்ப்பதால் சமூகம் அவர்கள் மீது எந்த அளவு வன்மம் பாராட்டுகிறது என்று எண்ணுகிறேன். உதாரணமாக ஜெயமோகனுக்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். ஒருநாள் அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு இட்லி மாவு வாங்கப் போகிறார். வீட்டுக்கு வந்து பார்த்தால் மாவு புளித்துப்போய் இருப்பது தெரிகிறது. மாவை எடுத்துக்கொண்டு போய் திரும்பக் கொடுக்கிறார். உபயோகிக்கக்கூடிய நிலையில் இல்லாத ஒரு பண்டத்தை வாங்கிச் செல்பவருக்கு இருக்கக்கூடிய எரிச்சலை நாம் புரிந்துகொள்ளலாம். இதற்கு அந்த மளிகைக்கடை அம்மாள் என்ன செய்திருக்க வேண்டும்? தெரியாமல் நடந்துவிட்டது, மாற்றித் தருகிறேன் என்று சொல்லலாம். இல்லாவிட்டால் காசைத் திருப்பிக் கொடுக்கலாம். ஆனால் கடைக்கார அம்மாளும் பதிலுக்குக் கத்த ஜெயமோகனும் கத்த அந்த அம்மாளின் கணவர் ஜெயமோகனை அடித்துவிட்டார். ஜெயமோகன் காவல் துறையில் புகார் கொடுத்தார். காவல் துறை அந்த ஆள் மீது நடவடிக்கை எடுத்தது. இதுவரைகூட நாம் சகித்துக்கொள்ளலாம்.

நம்முடைய சமூகம் இதை எப்படி எதிர்கொண்டது? ஜெயமோகனை சக எழுத்தாளர்களும், பத்திரிகைகளும், சமூக வலைத்தளங்களில் போராளிகளாகத் திரிபவர்களும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து தாக்கினார்கள். ‘புளிச்ச மாவு’ என்று பட்டப் பெயர் வைத்தார்கள். எப்பேர்ப்பட்ட அவலம் இது! ஜெயமோகனுக்காக அப்போது எழுதியவர்களில் நான்தான் முன்னே நின்றேன்.  ஒரு கவுன்சிலரிடம்கூட அந்த மளிகைக்கடைக்காரர் அப்படி நடந்துகொண்டிருக்க மாட்டார் இல்லையா? இதுவே ஜெயமோகனின் இடத்தில் ஒரு தொலைக்காட்சி சீரியல் நடிகர் இருந்திருந்தால் ‘ஈ ஈ’ என்று இளித்துக்கொண்டு அல்லவா பேசியிருப்பார் கடைக்காரர்? 

நான் கொஞ்ச நாள் ‘நீயா நானா?’வில் பேசிக்கொண்டிருந்தபோது என் தெருமுனை கறிக்கடைக்காரர் ‘விஜய் டீவி சார்’ என்று என்னை அழைத்து நெஞ்செலும்பாகத் தந்தார். ஆனால் ஒரு எழுத்தாளன் என்றால் மட்டும் ஒட்டு மொத்த சமூகமும் ஒன்று சேர்ந்து தாக்குகிறது. 

அந்த மளிகைக்கடை சம்பவத்தின்போது நான் நண்பர்களிடம் நகைச்சுவையாக சொல்லிக்கொண்டிருந்தேன், ‘நல்லவேளை, எனக்கு இது  நடக்கவில்லை. ஜெயமோகனுக்குப் பதிலாக சம்பவம் எனக்கு நடந்திருந்தால் ‘இவன் அந்த அம்மாளின் கையைப் பிடித்து இழுத்தான், அதனால்தான் கடைக்காரர் அடித்தார்’ என்றே திரித்திருப்பார்கள்.’

இவ்வளவுக்கு நடுவிலும் நல்ல வாசகர்களும் இருக்கிறார்கள் இல்லையா?

நிச்சயமாக. அவர்களால்தான் இயங்குகிறேன். என் உயிரையே என் வாசகர்கள் காப்பாற்றினார்கள். உண்மையாகவே சமஸ்… எனக்கு சக எழுத்தாளர்கள் மீதுகூட பெரிய பிடிமானங்கள் இருந்தது இல்லை; அவர்களிடமிருந்துகூட நான் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்தது இல்லை. என் சக எழுத்தாளர்களே பலர் என்னை இன்னமும் திருடன் என்றும், செக்ஸ் ரைட்டர் என்றும் சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? 

எனக்குத் தமிழ்ச் சமூகத்தின் அங்கீகாரம் தேவையே இல்லை. நான் இந்தியா முழுதும் அறியப்பட்டிருக்கிறேன். நான்கு ஆண்டுகள் ‘ஏஷியன் ஏஜ்’ தினசரியில் வாரா வாரம் பத்தி எழுதியிருக்கிறேன் (லண்டனிலும் வெளியாகும் அதன் தென்னிந்தியப் பதிப்புதான் ‘டெக்கான் கிரானிகிள்’ நாளிதழ்).

இந்த ஆங்கில தினசரியின் அகில இந்தியப் பதிப்பில் எழுதியது என் வாழ்வில் நடந்த ருசிகரமான சம்பவங்களில் ஒன்று. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் மதுபான விருந்து ஒன்றின்போது ஏஷியன் ஏஜ் தில்லிப் பதிப்பின் ஆசிரியர் அந்த தினசரியில் வாராவாரம் என்னை ஒரு தொடர் எழுதச் சொன்னார். அவர் என் வாசகி. வரும் புத்தாண்டிலிருந்து தொடங்கலாம் என்றார். அது டிசம்பர் மாதம். உடனடியாக எழுதி சென்னை பதிப்பின் ஆசிரியருக்கு அனுப்பிவிடச் சொன்னார். அனுப்பினேன். எதுவும் பதிலே இல்லை. சென்னை அலுவலகத்தில் கேட்டதற்கு ஆசிரியருக்கு உடம்பு சரியில்லை என்று பதில் வந்தது. அதோடு விட்டுவிட்டேன். 

சில மாதங்கள் சென்று தில்லி எடிட்டரை மீண்டும் சந்தித்தபோது, ‘நான் தொடர் கேட்டதை விளையாட்டாக எடுத்துக்கொண்டீர்களா?’ என்று கேட்டார். நடந்ததைச் சொன்னேன். சதி வேலை நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். அகில இந்தியப் பதிப்பில் நான் எழுதுவதை சென்னை எடிட்டர் விரும்பவில்லை. காரணம், நான் எழுத ஆரம்பித்த உடனேயே தமிழ் இலக்கியத்தின் வழிபாட்டு பிம்பத்தை உடைத்துவிட்டேன். ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ ஒரு போலிப் படைப்பு என்று எழுதிவிட்டதால் அந்த சென்னை எடிட்டருக்கு என் மீது கோபம். பிறகு தில்லி எடிட்டரின் ஆலோசனையின்பேரில் கட்டுரைகளை தில்லிக்கே அனுப்பினேன். நான்கு ஆண்டுகள் தொடர்ந்து வந்தது. ஆனால் பாருங்கள், கடைசியில் சென்னைப் பதிப்பில் என் கட்டுரைகள் வருவது நின்று போயிற்று. ஏன் என்று கேட்டேன். அலுவலகம் பொதுமக்களால் தாக்கப்படும் என்று அஞ்சுவதாக தில்லி எடிட்டர் சொன்னார். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த ஃபிலிஸ்டைன் சமூகத்தின் மனநோய்க்கு எதிராக எழுதிக்கொண்டிருந்தேன். ‘அதுதான் அகில இந்தியப் பதிப்பிலும் லண்டன் பதிப்பிலும் வருகிறதே, தொடர்ந்து எழுதுங்கள்’ என்றார்கள். எனக்குத்தான் கொஞ்சம் அலுத்துவிட்டது.

சொந்த மண்ணிலேயே எழுத முடியாமல் என்னடா வாழ்க்கை என்ற வருத்தத்தில் இருந்தபோது ஓர் அதிசயம் நடந்தது. ‘ஆர்ட் ரிவ்யூ ஏஷியா’ என்று லண்டனிலிருந்து ஓர் ஓவியப் பத்திரிகை வந்துகொண்டிருக்கிறது. அந்தப் பத்திரிகையிலிருந்து தொடர் எழுத அழைப்பு வந்தது. எனக்கு ஓவியம் தெரியாதே என்றேன். என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் என்றார் அதன் ஆசிரியர். அரைப் பக்கம் கொடுத்தார். இரண்டு பக்கத்துக்கு அனுப்பி, ஒன்றரைப் பக்கத்தை வெட்டிக்கொள்ளுங்கள் என்றேன். தொடர்ந்து இரண்டு பக்கமே எழுதுங்கள் என்று சொல்லிவிட்டார். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவே என்னுடைய தீவிர வாசகர்களாகிவிட்டார்கள். அதனால்தான் என் மண்ணிலேயே நான் ஒரு நாடு கடத்தப்பட்டவனாக வாழ்வதாகச் சொல்கிறேன். அதனால்தான் ‘எக்ஸைல்’ (நாடு கடத்தப்பட்டவன்) என்ற பெயரில் நாவல் எழுதினேன். அநேகமாக உலகிலேயே ‘சொந்த மண்ணில் நாடு கடத்தப்பட்ட எழுத்தாளன்’ நான் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக ‘ஆர்ட் ரிவ்யு ஏஷியா’வில் எழுதிக்கொண்டிருக்கிறேன். 

சென்ற ஆண்டு ப்ரதா (Miuccia Prada) என்ற பெண்மணியிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. என் எழுத்து எவ்வளவு தூரம் அவருக்குப் பிடித்திருக்கிறது என்பதை விளக்கிவிட்டு அவர்களுடைய நிறுவனத்துக்கு ஒரு சிறுகதை வேண்டும் என்று கேட்டிருந்தார். ஒன்றரை லட்சம் ரூபாய் சன்மானம். ஆயிரம் வார்த்தை கதை. கதை போனதும் பணம் வந்தது. அந்த ப்ராதா பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். அலங்காரக் கலைச் சாதனங்கள் செய்வதில் பிரபலமான நிறுவனம் ப்ராதா. 

என் சொந்த மண்ணில் நாடுகடத்தப்பட்டவன் என்று சொன்னாலும், எல்லாவிதமான கல்ட்டுகளுக்கும் எதிரானவன் என்றாலும் எனக்கென்று தமிழ்நாட்டில் ஒரு கல்ட் ஃபாலோயிங் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் நான் இங்கே ஒரு ராப்பர் (rapper) போன்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!

(உரையாடல் தொடர்கிறது, அடுத்த வாரம்…)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய பேட்டிகள் 

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு
சர்தாஜிக்களின் கைகளில் இரண்டு கோப்பைகள்: சாரு பேட்டி
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு
எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

8


1



பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

இ.பு.ஞானப்பிரகாசன்   10 months ago

ஒவ்வொரு வரியும் சம்மட்டி அடி!! சாரு நிவேதிதா அவர்கள் பற்றிய இப்படி ஓர் அறிமுகத்துக்காக உங்களுக்கும் தமிழ் சமுகம் பற்றிய இப்படி ஓர் அறிமுகத்துக்காகச் சாரு அவர்களுக்கும் நனி நன்றி!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Lakshmi narayanan   2 years ago

It's a very delicate and deliberate interview..

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

சாருவுக்கு உரிய மரியாதையைச் செய்கிறீர்கள் சமஸ். இவை வெற்று சமாளிப்புகளல்ல, லும்பன் எனும் வார்த்தையை அவர் விரித்தெடுக்கும் அழகைப்பாருங்கள்! எழுத்தாளன் எந்தச் சொல்லையும் சிந்திக்காமல் உதிர்ப்பதில்லைபோலும். என்ன ஒரு சரளம், மனம் எவ்வளவு வெதும்பியிருத்தால் இவை இப்படிக் கொட்டும். பணிந்த வணக்கங்கள் சாரு.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

WriterVivek.com   2 years ago

சாருவிடம் இந்தக் கேள்வியை கேட்டே ஆக வேண்டும் . சாருவையோ அவர் சொல்லும் எழுத்துக்களை படிக்காதவர் எல்லாம் லும்பன் என்று முத்திரை இடுவது பாசிசம் போலவே தெரிகிறது . ஒரு வேலை மக்கள் " வேல்பாறி" போன்ற நாவல்களை கொண்டாடிவிட்டால் அது இலக்கியமே இல்லை என்று மட்டம் தட்டுவது ( சாருவின் உதாரணம் பொன்னியின் செல்வன் - அவர் தளத்தில் அவர் அதை நைய புடைத்து எழுதியிருக்கிறார்) , அதே போல சுஜாதா வையும் தான் . நான் சொன்ன இலக்கியத்தை, ஆளுமைகளை பிடிக்கவில்லை என்றால் நீ ஃபிலிஸ்டைன், லும்பன் என்றெல்லாம் வசை பொழிந்தால் மட்டும் வாசகன் உருவாகி விடுவானா ? இதே தமிழ்நாட்டில் தானே கோடிகணக்கில் புத்தகங்கள் விற்கின்றன? இவன் HTTPS://Writervivek.com

Reply 7 3

Login / Create an account to add a comment / reply.

Anbu Chezhian. S   2 years ago

இதில் சொல்லியிருக்கும் அவ்வளவும் நிஜம், வாசிக்க வாசிக்க எனக்கே மனசு பிசைகிறது… என்ன ஒரு கையாலாகா தனம்…

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Thillai Govindan R   2 years ago

சாரு விடம் காணும் உங்களின் நேர்காணல் மிக அற்புதமாக இருக்கிறது. இதுவரை இப்படி ஒரு விரிவான நேர்காணல் -உரையாடல்- தமிழில் நான் அறிந்த வரையில் இல்லை. சாரு எந்த கேள்விக்கும் மழுப்பலான பதில் தந்ததே இல்லை. இது மாதிரி நிறைய நேர்காணலை இல்லை உரையாடலை எதிர்பார்க்கிறேன்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

SENTHIL KUMAR P   2 years ago

கடந்த சில வாரங்களாக ஞாயிறன்று முகநூலில் சமஸ் அவர்கள் வழங்கும் பின்னூட்டத்தை சுடுக்கி சாருவின் பேட்டிகளை படித்து வந்தேன் ஆனால் இன்று அதிகாலை எழுந்து முதல் முறையாக நேரடியாக அருஞ்சொல் தளத்தில் சாருவின் பேட்டியை வாசித்தேன். எனது வாசிப்பு சிறு வயது முதலே ஆரம்பித்தது அந்தந்த வயதுகளுக்குரிய வெகுஜன பத்திரிகைகளின் வாயிலாக சிறுவர் மலர் அம்புலி மாமா கோகுலம் கதிர் ராணி காமிக்ஸ் இப்படி ஆரம்பித்து கிரைம் நாவல்கள் மாலை மதி கண்மணி போன்ற சமூக நாவல்கள் ஆக வளர்ச்சி அடைந்து பத்தாம் வகுப்பு படிக்கையில் கல்கியின் பொன்னியின் செல்வனை வாசித்தேன் பின்னர் கல்லூரி காலங்களில் சான்டில்யன் பாலகுமாரன் கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் எனது ஊரில் அமைந்துள்ள நூலகத்தின் வாயிலாக தேவன் ஜானகிராமன் தகழி சிவசங்கரன் பிள்ளை போன்றவர்களின் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன் அதன் பின்னர் ஜெயகாந்தன் சாருவை வாரமலர் வாயிலாக அறிந்து வாசிக்க ஆரம்பித்தேன் அவரது ஜீரோ டிகிரி நாவல் வெளிவந்தவுடன் வாங்கி வாசித்து மிரட்சி அடைந்தேன் அவரது எழுத்துக்களை கண்டு . இன்று எனது 43 வயதில் மீளவும் அவரது எழுத்துக்களை வாசிக்க‌ முற்படுகிறேன் சாருவின் எழுத்துக்கள் ஒரு தனித்துவமான நடையில் அமைந்துள்ளது அவரை தமிழக எழுத்தாளர்களின் வரிசையில் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது நன்றி சமஸ் ஓர் சமகால தனித்துவமான இலக்கிய ஆளுமையை என் போன்ற சாமானியனுக்கும் அறிமுகப்படுத்தியதில் நன்றி அருஞ்சொல் தளத்திற்கு

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

வெள்ளியங்கிரி மலைமடாதிபதிராகுல் சமஸ்ராஜன் குறை கிருஷ்ணன் கட்டுரைஎல்லாலலாய் சிங்தான்சானியாவின் முக்கிய நகரங்கள்ஒரே பாடத்திட்டம்உருவக்கேலிவிலக்கப்பட்ட ஆறுகள்இந்திய ரிசர்வ் வங்கிகாங்கிரஸ் வானொலிப.திருமாவேலன்உள்ளமையதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்சிக்கனமான நுகர்வுநேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுவது எப்படி?சோழர்களின் கலை முதலீடு நமக்குப் பாடம்: ட்ராட்ஸ்கி அசோகர் அருஞ்சொல் மருதன்யோகியை வீழ்த்துவது எளிதல்ல!முதலாவது பொதுத் தேர்தல்புகழ்ச்சிக்குரியவர் இயான் ஜேக்லிடியா டேவிஸ்நிர்வாகிபுதிய சட்டங்கள்செக்ஸை எப்படி அணுகுவது சாரு பேட்டிமக்கள் வதைஓம் பிர்லாஒகேனக்கல்சித்தப்பா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!