நேருவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் பற்றியும் அவர் இந்தியாவின் பிரதமராக இருந்து நாட்டை 17 ஆண்டுகள் வழிநடத்தி, மக்களாட்சிக்கு வலுவான அடித்தளம் இட்டதைப் பற்றியும் பலமுறை பலர் எழுதிவிட்டார்கள். நான் நேரு என்ற மனிதனைப் பற்றி, அவர் காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் என்ன நினைத்தார்கள் என்பதைப் பற்றி இங்கே எழுதவிழைகிறேன். நேரு இருந்த காலத்தில் அவருக்கும் நண்பர்களும் பலர் இருந்தார்கள். அவரை எதிர்த்தவர்களும் இருந்தார்கள். எதிரிகள் என்று யாரும் இருந்ததாகத் தெரியவில்லை – இந்துத்துவர்களைத் தவிர. இன்றைக்குப் போல யாரும் அன்றைக்கு நேருவைத் தரக் குறைவாகப் பேசவில்லை.
அரசியலில் எதிர்த்தவர்கள்
நேருவோடு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்களில் பலர் நேருவின் அரசியலுக்கு எதிராக இயங்கியிருக்கிறார்கள். ஆனாலும் அவருடைய அன்பையும் மனிதத்தன்மையும் வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார்கள். அவருடைய கோபம் உடனே கரைந்து விடக் கூடிய ஒன்று என்றும் சொல்லியிருக்கிறார்கள். ராஜாஜி, கிருபளானி போன்றவர்கள் அவரோடு இணைந்து போரிட்டவர்கள். பின்னால் நேருவைக் கடுமையாக விமர்சனம் செய்தவர்கள். ஆனால், அவர்களுக்கு நேரு மீது தனிப்பட்ட முறையில் இருந்த அன்பு மாறவே இல்லை.
கம்யூனிஸ்ட்டுகள் நேருவை உழைக்கும் மக்களுக்குத் துரோகம் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தார்கள். “எங்கள் கூட நின்று போராடுவார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் கம்யூனிஸ எதிர்ப்பு ராணுவத்தின் தளபதியாக அவர் மாறிவிட்டார்” என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் சொன்னார். மறுபுறம் வலதுசாரிகள் அவரை, “கம்யூனிஸ்டுகளை மயிலிறகு கொண்டு வருடுகிறார்” என்று சொன்னார்கள். உதாரணமாக தீவிர வலதுசாரி பத்திரிகையாளரான டி.எஃப். கரகா இவ்வாறு சொன்னார்: “நேருவின் மெத்தனம் கவலை அளிக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் மிகவும் சாமர்த்தியமாக யாருக்கும் தெரியாமல் அரசைக் கைப்பற்றக் கூடியவர்கள். ஆனால் நேரு எல்லா அறிந்தவர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாதான் இதற்கு விலை கொடுக்கப்போகிறது.”
இவர்களில் யாரும் நேருவைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாகத் தெரியவில்லை. இன்றையக் காளான்கள் முளைத்த பின்பே, அவதூறுகள் வரத் துவங்கின.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ராம் மனோகர் லோஹியா
சோஷலிஸ கட்சித் தலைவரான லோகியா, நேருவைவிட 21 வயது இளையவர். அவருடைய அரசியல் வாழ்க்கை நேருவின் மேற்பார்வையில்தான் தொடங்கியது. நேருவின் இல்லமான ஆனந்த பவனில் சில வருடங்கள் இருந்தவர். ஆனாலும் சுதந்திரத்திற்கு பின் நேருவைக் கடுமையாக விமர்சித்தவர். “நேருவைப் பற்றி நல்லதாகச் சொல்ல ஒன்றுமில்லையா?” என்ற கேள்விக்கு, “நிறைய இருக்கிறது. ஆனால், அவர் பதவியை விட்டு இறங்கட்டும்” என்று சொன்னவர். 1949-ல் அவர் ஒரு மாதம் சிறையில் இருந்தார். அவருக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு கூடை மாம்பழத்தை சிறைக்கு அனுப்புவித்தார் நேரு.
படேல் மிகவும் கோபமடைந்து நேருவிற்கு கடிதம் எழுதினார். “அரசு கைது செய்து சிறையில் இருப்பவருக்கு பிரதமர் மாம்பழங்களை அனுப்புவது எவ்வாறு சரியாகும்?” என்று அக்கடிதத்தில் கேட்டிருந்தார். “அரசியல் வேறு; தனிப்பட்ட நட்பு வேறு” என்று பதில் எழுதினார் நேரு. 1962 மக்களவைத் தேர்தலில், நேருவை எதிர்த்து லோகியா போட்டியிட்டபோது, “உங்களைப் போன்ற தெளிவானவர் என்னை எதிர்த்துப் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் நிச்சயம் அங்கு பிரச்சாரம் செய்ய வரமாட்டேன்.” என்று லோகியாவிற்கு எழுதினார். லோகியா 1962-ல் தோற்றுப்போனாலும், 1963-ல் ஃபருக்காபாத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்றார். அவர் பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு நேரு வந்திருந்தார்.
மக்களுடன் மக்களாக!
நேரு என்றாலே ஆனந்தபவன், தீன் மூர்த்தி பவன் மாளிகைகளில் இருந்தவர் என்றுதான் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவர் மக்களோடு மக்களாக இயங்கிக் கொண்டிருந்தவர். பல நாட்கள் கிராமங்களில் அவர்களோடு புழங்கியவர். நேருவோடு சென்ற பி.என்.பாண்டே, அவருடைய அனுபவங்களைப் பற்றிச் சொல்லும்போது நேரு கிராம மக்களைப் போன்றே காலைக் கடன்களை வயல்வெளியில் கழிக்க வேண்டும், கிணற்று நீர் எடுத்துக் குளிக்க வேண்டும் என்று விரும்பினார் என்கிறார். ஒரே நாள்தான். அவர் காலைக்கடன்களைக் கழிக்கச் சென்றபோது நேருவைப் பார்க்க விரும்பிய கிராம மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. குளிக்கும்போதும் அதே கதைதான். எனவே நேருவிற்கு கூடாரத்தின் தனி வசதி செய்து தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்களோடு இருந்தபோது மக்களைப் போலவே சப்பாத்தியும் உருளைக்கிழங்கையும்தான் அவர் தினமும் உண்டார் என்கிறார் பாண்டே.
நம் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், நேருவோடு பல கூட்டங்களுக்குச் சென்றவர். ஒருசமயம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மேடையிலிருந்து கீழே குதித்தார் நேரு என்கிறார். குதித்தவர் தரையில் இறங்கவில்லை. மக்கள் தலைகளுக்கு மேல் இருந்தார். அவ்வளவு கூட்டம். கட்டுப்படுத்துவதற்கு வேறுவழியே இல்லை. பின்னால் சாஸ்திரியிடம் காலணியோடு குதித்ததற்கு மிகவும் வருத்தப்பட்டார்.
கூட்டம் முடிந்ததும் நேருவிற்கு ஒரே பசி. சுற்றிலும் ஏதும் கிடைக்கவில்லை. கடைசியில் ரயில்வே உணவு விடுதி ஒன்றில் டீயும் காய்ந்த ரொட்டிகளும் கிடைத்தன. பில் இரண்டு ரூபாய் எட்டணா. நேருவிடம் இருந்தது ஒரு ரூபாயும் நான்கணாக்களும். கூட வந்தவரிடம் ஒரு ரூபாய். நல்லவேளையாக என்னிடம் நான்கணா காசு இருந்தது என்கிறார் சாஸ்திரி.
கதை இதோடு ஓயவில்லை. அலகாபாத் செல்லும் வரை தானே காரோட்டுவேன் என்று நேரு பிடிவாதம் பிடித்து காரை ஓட்டினார். குறுகிய சாலை ஒன்றில் பசுமாடு ஒன்று குறுக்கே வந்து, காரில் இடிபட்டு, லேசான காயம் ஏற்பட்டது. நேரு இறங்கி மாட்டின் சொந்தக்காரரைத் தேடினார். கூட்டம் கூடினாலும் இடித்தவர் நேரு என்று தெரிந்ததும் கிராம மக்களும் மாட்டிற்குச் சொந்தக்காரரும் மாட்டிற்குக் காயம் அதிகம் இல்லை, நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றார்கள். கேட்டாலும் கொடுப்பதற்கு யாரிடமும் காசு இல்லை. நேரு ஆனந்த பவன் திரும்பியதும் மாட்டின் சொந்தக்காரருக்கு முப்பது ரூபாய் அனுப்பினார் என்று சாஸ்திரி சொல்கிறார்.
நேருவின் கோபம்
நேருவின் கோபம், குணம் என்னும் குன்றேறி நின்றவரின் கோபம். இதை காந்தி நன்கு அறிந்திருந்தார் என்று நேருவின் மந்திரி சபையில் இருந்த ராஜ்குமாரி அம்ரித் கௌர் குறிப்பிடுகிறார். ஒருமுறை மிகவும் கடுமையாக காந்தியிடம் பேசிவிட்டு, அறையை விட்டு வெளியில் சென்றார் நேரு. அறையில் இருந்த கௌர் காந்தியை நேரு அவமதித்ததாக நினைத்து, “இதை எப்படிப் பொறுத்துக் கொள்கிறீர்கள்?” என்று காந்தியிடம் கேட்டார். காந்தி சொன்னார்: “எனக்கு நேருவைத் தெரிந்த அளவிற்கு உனக்குத் தெரியாது. அவருடைய கோபம் என்னை என்றும் பாதிக்காது. ஏனென்றால் அதில் பொய் இருக்காது. அவர் கோபக்காரராக இருக்கலாம்;. பொறுமையில்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் ஜவகர் – ரத்தினம்.”
ஓய்வறியாதவர்
நேருவின் கீழ் பணி செய்த உயர் அதிகாரிகள் அனைவரும் அவருடைய கடினமான உழைப்பைக் குறிப்பிடுகிறார்கள். எச்.வி.ஆர். ஐயங்கார், அவருடன் சுதந்திரம் கிடைத்து பத்தே நாட்களில் லாகூர் சென்றதைக் குறிப்பிடுகிறார்: ஒரு நாள் முழுவதும் அகதிகள் முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டோம். மிகவும் அசதியாக இருந்தது. மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கு இன்னொரு இடத்திற்குச் செல்ல வேண்டும். ஒரு மணி நேரப் பயணம். நாங்கள் இளைப்பாறாலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது, நேருவின் கையில் புத்தகம். ‘என்ன புத்தகம்?’ என்று கேட்டேன். ‘என் சகோதரியின் கணவர் சூத்ரகரின் மிருச்சகடிகத்தை சிறையில் இருக்கும்போது மொழிபெயர்த்தார். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அதற்கு இன்னொரு மொழிபெயர்ப்பு இருக்கிறது என்று சொன்னார். அதுதான் இது’ என்றார்.
நேருவிடம் பணியாற்றிய குன்தேவியா நேருவின் கடைசி நாட்களை பற்றி அவர் எழுதிய ‘ஆவணங்களுக்கு அப்பால்’ புத்தகத்தில் பேசுகிறார்: “நேரு அலுவலகத்திற்கு வருகிறார் என்ற செய்தி வந்ததும் எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பக்கவாதம் வந்து சிறிது குணமடைந்திருக்கிறார். இருந்தாலும் ஓய்வெடுக்க விரும்பவில்லை. அவர் கார் வந்ததும் அவருக்குத் தெரியாமலே அவர் பின்தொடர்ந்தேன். மெதுவாக நடந்தார். சௌத் ப்ளாக்கிற்குள் நுழைந்து வலப்புறம் சென்றார் - இந்தியாவின் பிரதமர் பதினெட்டு ஆண்டுகளில் முதன்முறையாக படிகளைப் பயன்படுத்தாமல் மின் தூக்கியைப் பயன்படுத்துகிறார். நான் வேகமாக படிகளில் ஏறிச் சென்றேன். அவர் தன் அறைக்குச் செல்லும்வரை காத்திருந்து பின் நான் உள்ளே சென்றேன். என்னை ஏறிட்டுப் பார்த்தார். மெல்லிய புன்னகை. ‘வெல். ஹியர் ஐயாம்!’ என்றார்.”
நேருவும் மொழிப் பிரச்சினையும்
நேரு மொழிப் பிரச்சினையை எவ்வளவு திறமையோடு கையாண்டார் என்பதை ஆங்கிலோ-இந்திய உறுப்பினரான ஃப்ராங்க் அந்தோனி சொல்கிறார்: “நான் அலுவலக மொழி கமிட்டியின் உறுப்பினராக இருந்தேன். நான் ஒருவன் தான் ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினேன். மற்றைய அனைவரும் ஆங்கிலம் அகற்றப்பட வேண்டும். இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். நான் நேருவிடம் சென்றேன். அவர் என்னை முழுவதும் ஆதரித்தார். 7 ஆகஸ்டு 1959 அன்று நாடாளுமன்றத்தில் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் அலுவல்மொழியாக நீடிக்கும் என்ற வாக்குறுதியை அளித்தார்.”
ராஜாஜியும், "ஆங்கில மொழி சரஸ்வதி இந்தியாவிற்கு அளித்த கொடை" என்று சொல்லியிருக்கிறார். ஆங்கிலத்தால்தான் நாம் அறிவியல் துறையில் முன்னேற முடிந்தது.
அசாதாரணமான தைரியத்தைக் கொண்டவர்
"நான் இந்து இந்தியாவின் பிரதமராக இருக்க மாட்டேன்" என்று நேரு தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இந்தியா பன்முகத்தன்மை கொண்டது, மதச்சார்பற்றது. இந்தியாவைத் தாய்நாடாக ஏற்றுக்கொண்ட இஸ்லாமியருக்கு இந்துக்களுக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் இருக்கின்றன என்பதை அவர் இந்திய அரசமைப்புச் சட்டம் வரும் முன்பே தொடர்ந்து சொல்லிக்கொண்டு வந்ததும் அல்லாமல் செயலிலும் காட்டினார். அவருடனேயே இருந்த முஹம்மது யூனஸ் 1947 அனுபவங்களைப் பற்றிச் சொல்கிறார்:
“தில்லியின் அருகில் இருக்கும் சோனிபத் நகரில் இஸ்லாமியர்கள் பெரும் கும்பல் ஒன்றால் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வந்த்தும். நேரு அங்கு விரைந்தார். நானும்கூடச் சென்றேன். பெரிய கூட்டம். நேருவைப் பார்த்ததும், ‘இன்குலாப் ஜிந்தாபாத், ஜவகர்லால் நேருவிற்கு ஜெய்’ என்ற கோஷங்களுடன் காரைச் சூழ்ந்து கொண்டார்கள். கைகளில் இரத்தம் தோய்ந்த ஆயுதங்கள். நேரு காரின் மீது ஏறி அவர்களிடம் உரையாற்றினார். ‘நீங்கள் இப்போது எழுப்பிய கோஷங்கள் நம் விடுதலைப் போரின் கோஷங்கள். கொலை செய்வதற்கான கோஷங்கள் அல்ல’ என்றார். உடனே கூட்டம், ‘இந்து - முஸ்லிம் ஒற்றுமை ஓங்குக!’ என்று குரலெழுப்பத் துவங்கியது. இதுதான் நேருவின் மாயம்.”
இதே போன்று தில்லியின் ஜாமியா மில்லியாவில் பின்னாளில் நம் குடியரசுத் தலைவராக இருந்த சாகீர் ஹுசைனின் உயிருக்கே ஆபத்து என்ற செய்தி நள்ளிரவில் வந்தபோது, நேரு உடனே அங்கே சென்று அவருக்கும் மற்றவர்களுக்கும் ஏதும் நடக்காமல் பார்த்துக்கொண்டார் என்பதையும் யூனஸ் குறிப்பிடுகிறார்.
சர்தார் படேல்
நேருவிற்கும் சர்தார் படேலுக்கும் இடையே இருந்த உறவு இன்று பலரால் கொச்சைப் படுத்தப்படுகிறது. நேருவிற்கும் அவருக்கும் கருத்து வேற்றுமைகள் இருந்தன. ஆனால் நேரு என்றும், சர்தாரிடம் மரியாதைக் குறைவாக நடந்ததே இல்லை. யூனஸ் 1940ல் ராம்கர் காங்கிரஸ் மாநாடு முடிந்தவுடன் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிச் சொல்கிறார்:
“நேருவும் நானும் ராம்கரிலிருந்து ப்ரயாக் ரயில் நிலையத்தில் இறங்கி ஆனந்தபவன் செல்லும்போது நேருவிற்கு நினைவு வந்தது. ‘சர்தார் படேல் அலகாபாத்தில் இறங்குவார். பம்பாய் ரயிலுக்கு பல மணி நேரம் இருக்கிறது. அவர் ரயில் நிலையத்தில் தங்க வேண்டாம். உடனே ஆனந்த பவனுக்கு அழைத்து வா’ என்றார். சர்தாரும் அவருடைய மகளான மணிபென்னும் ஆனந்தபவனத்தில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்குச் சென்றனர். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம். காந்தி சொன்னாரா என்று யூனஸிடம் கேட்டாராம். சர்தார் திரும்பிச் சென்றதும் நேரு யூனஸிடம் சொன்னார்: ‘சர்தார் பலதடவைகள் ஆனந்த பவன் வந்திருக்கிறார். கட்சிக் கூட்டங்களுக்காக. ஒரு தடவைகூட ஓய்வெடுக்க வந்ததில்லை. அதனால்தான் இன்று அழைத்தேன். இது போன்ற வாய்ப்புகள் அரிதாகத்தான் வரும்.’”
நேருவும் நாடாளுமன்றமும்
நாடாளுமன்றத்தின் வழிமுறைகளை மீறாமல் அதற்குத் தர வேண்டிய மரியாதையைத் தவறாமல் அவர் உயிரோடு இருக்கும் வரை தந்து கொண்டிருந்தவர் நேரு. அவர் காலத்தை நாடாளுமன்றத்தின் பொற்காலம் என்று அதன் தலைமைச் செயலராக இருந்த சுபாஷ் காஷ்யப் சொல்கிறார். அவருடைய புத்தகத்தில் பல சம்பவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நான் இரு சம்பவங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
திரு மாவலங்கர் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர். அவருக்கு கொடுக்கப்படும் மரியாதை மக்களாட்சிக்குக் கொடுக்கப்படும் மரியாதை என்பதை நேரு நன்கு அறிந்திருந்தார். ஒரு முறை மாவலங்கர் நேருவைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். நேரு உடனே, "நான்தான் உங்களைச் சந்திக்க வேண்டும். நீங்கள் வா என்று சொன்னால நான் வரத் தயாராக இருக்கிறேன். அதுதான் முறை" என்றார்.
இன்னொரு சமயம் மாநிலங்களின் அவையில் பின்னாளில் நம் குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் அவைத்தலைவராக விவாதம் ஒன்றை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அவையில் இருந்த நேரு திடீரென்று எழுந்து சென்று இன்னொரு அமைச்சரிடம் ஏதோ பேசத் துவங்கினார். “பிரதமர் அவர்களே, நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்?” என்று ராதாகிருஷ்ணன் கேட்டார். நேரு உடனே பதில் அளித்தார், “தவறு செய்து விட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன். இது போன்று இனிமேல் நடவாது என்று உறுதியளிக்கிறேன்!”
நேருவும் உச்சநீதிமன்றமும்
நேருவிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால், அவர் உச்சநீதி மன்றத்தின் உன்னதத்திற்கு எந்தக் களங்கமும் ஏற்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். முந்திரா ஊழல் விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலகிய விவகாரம் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்திய அரசு மற்றவர்கள் எவரேனும் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை விசாரிக்க கமிஷன் ஒன்றை அமைத்தது. அன்று உச்சநீதி மன்றத்தின் தற்காலிக நீதிபதியாக இருந்த விவியன் போஸ் கமிஷனுக்குத் தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய அறிக்கையில் முந்திரா உத்தர பிரதேச காங்கிரஸுக்கு 1.5 லட்ச ரூபாயும், காங்கிரஸுக்கு ஒரு லட்ச ரூபாயும் நன்கொடை அளித்ததால் அவர் நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு கார்ப்பரேஷன் முதலீடு செய்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
நேருவிற்கு மிகுந்த கோபம். 10 ஜூன் 1959ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “இதைச் சொன்னவருக்கு அறிவுக்குறை அவர் பெரிய நீதிபதியாக இருந்தாலும்!” என்றார். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.
கல்கத்தா பார் அசோசியேஷன் நேரு சொன்னதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றி அவருக்கு அனுப்பியது. நேரு தவறுசெய்துவிட்டோம் என்பதை உணர்ந்தார். உடனடியாக விவியன் போசிற்குக் கடிதம் எழுதினார்: “இந்த மாத ஆரம்பத்தில் தில்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நான் சொன்னவற்றிற்கு, என் வருத்தங்களை உங்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்க விரும்புகிறேன். நான் அப்படிப் பேசியது முறையாகாது என்பதை அறிகிறேன். அவ்வாறு பேச எனக்கு நானே அனுமதி அளித்திருக்கக் கூடாது. என்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதைப் பற்றி புரிதல் இல்லாமல் பேசிவிட்டேன் – வேறு பலவற்றை நினைத்துக் கொண்டிருந்ததால். என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.”
இதே போன்ற கடிதத்தை தலைமை நீதிபதிக்கும் எழுதினார். விவியன் போஸ் நேருவிற்கு உடனே அவரை மிகவும் பாராட்டிக் கடிதம் எழுதினார். தலைமை நீதிபதியும், 'Deeply appreciated' என்று எழுதினார்.
நம்மில் நாகரீகம் மிக்கவர் நேருதான் என்று ராஜாஜி ஒருமுறை சொன்னார். நேரு இறந்து 57 ஆண்டுகள் ஆகின்றன. இன்றுவரை அவரைப் போன்ற நயத்தக்க நாகரீகம் மிக்கவர் பிறக்கவில்லை.
1
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Subash Raja Mahalingam 3 years ago
நேருவின் சுயசரிதையை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் உணர்ந்த அம்மனிதரின் ஆச்சரியங்கள், இப்பதிவிலும் உணரமுடிகிறது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Rathan Chandrasekar 3 years ago
ARUMAI
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 3 years ago
சுவாரசியமான தொகுப்பு.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.