கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
ஆர்எஸ்எஸ் கண்டனத்தின் முக்கியத்துவம்
ஆந்திர பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.டி.ராமராவ், ஹரியாணாவின் மூத்த அரசியல் தலைவர் சௌத்ரி தேவிலால் இடையிலான ஓர் அரசியல் உரையாடல், மிகப் பெரிய அரசியல் கூட்டணிக்கு வழிவகுத்தது என்பார்கள். “உங்களுடைய சாதி கம்மா என்கிறார்களே, கம்மா என்றால் என்ன பொருள்?” என்று என்டிஆரைக் கேட்டாராம் தேவி லால். “நாங்கள் ஆந்திர மாநிலத்தின் ஜாட்டுகள்” என்று பதில் அளித்தாராம் என்டிஆர். உடனே தேவிலால் அவரையும் அவருடைய சமூகத்தையும் இந்திய சாதிய அடுக்கில் யாரென்று புரிந்துகொண்டு, தங்களுடைய அரசியல் கூட்டணியில் சேர்த்துக்கொண்டுவிட்டார்.
மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேசிய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்க விரும்பும்போது, தங்களுக்கு உகந்த மேடை எது என்று ஆராய்ந்து தேர்வுசெய்கிறார்கள். அப்படி ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் தேர்ந்தெடுத்த ‘இந்துத்துவா’ என்ற மேடை, அனைத்திந்திய அளவிலும் விரும்பப்படுவதாக இல்லாமல் பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கொண்டது.
இரண்டே குழுக்கள்
அப்படியானால் இந்தியாவின் தேசியத்தன்மையில் ஊடும்–பாவுமாக மக்கள் அனைவரையும் பிணைப்பது எது? நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் இருக்கும் சமூகக் குழு, இன்னொரு பகுதியில் இருக்கும் சமூகக் குழுவுக்குச் சமூக அடுக்கில் தனக்குரிய இடம் எது என்றும், பண்பாட்டளவில் தன்னுடையது எது என்றும் எப்படிப் புரியவைப்பது?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றியவரும் மிகச் சிறந்த அறிஞருமான பேராசிரியர் ரஷிதுதீன் கான் அடிக்கடி சொல்வார், “இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் இரண்டே குழுக்கள் பிராமணர்களும் முஸ்லிம்களும் மட்டுமே!” அவர் சொல்வதில் உண்மை இருந்தாலும், இரண்டு குழுக்களிலுமே பல பிரிவுகளும் உண்டு; பிராமணர்களில் சைவர்கள் – வைணவர்கள், முஸ்லிம்களில் சன்னிகள் – ஷியாக்கள் என்று பல. ஆனால், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பிராமணர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பிராமணரைச் சந்திக்கும்போதும், பெஷாவரைச் சேர்ந்த முஸ்லிம் டாக்காவைச் சேர்ந்த முஸ்லிமைச் சந்திக்கும்போதும் சமூகரீதியாக ‘தங்களவர்’ ஆகி ஒன்றிவிடுகின்றனர்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ரஷீதுதீன் கானின் கருத்து என்னவென்றால் நாடு பிரிவினை அடையும் வரையில், இந்திய துணைக் கண்டத்தை ஒருங்கிணைக்கும் சமூகங்களாக பிராமணர்களும் முஸ்லிம்களும் இருந்தார்கள். இந்த நோக்கில் பார்த்தால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று கருதுகிறவர்களில் பெரும்பான்மையோர் பிராமணர்களாக இருக்கின்றனர்.
பாஜக சார்பில் முதலில் பிரதமராகப் பதவியேற்ற வாஜ்பாய், ‘பிராமணர்’ என்பது தற்செயலாக அமைந்துவிட்ட ஒன்றல்ல. இதே சிந்தனை அடிப்படையில்தான், இந்தி பேசும் பகுதியில் குடியிருக்கச் சென்றுவிட்ட காஷ்மீர பிராமண சமூகத்தவரான நேருவை, இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி வகிக்க காந்தி தேர்வுசெய்திருக்கலாம்.
பாகவத்தின் கேள்வி…
மோடி தன்னுடைய அரசியல் ஆதரவை விரிவுபடுத்த சாதிகளுக்கு இடையிலான பிளவுகளைப் பயன்படுத்திக்கொண்டதுடன், தன்னை ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவ’ராக (ஓபிசி) அடையாளப்படுத்திக்கொண்டார், சமூகங்களுக்கிடையில் பிளவை வளர்க்க, முஸ்லிம்களைத் தனது பேச்சில் இலக்காக வைத்துக்கொண்டார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், சிறுபான்மைச் சமூக மக்களையும் தன் பக்கம் ஈர்க்கத் தொடர்ந்து முயல்கிறது, அதற்காகவே ‘இந்துவா’ – ‘பாரதீயதா’ என்ற கருத்துகளை இடைவிடாமல் பேசுகிறது.
சிறுபான்மைச் சமூகத்தவர் இப்போது வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும் அவர்களுடைய மூதாதையர்கள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தொடர்ந்து நினைவுபடுத்துகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த வகை தேசிய ஒருமைப்பாடும், அது ஏற்படுத்த விரும்பும் சட்டகமும் நிச்சயம் கேள்விக்குறியதாக இருந்தாலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பாகவத்தின் சமீபத்திய அரசியல் விமர்சனம் முக்கியத்துவம் வாய்ந்தது, அதன் கருத்துகளை அடியொற்றியது.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடக்கும் அரசியல் போராட்டங்களில் மக்களைப் பிளவுபடுத்தும் முழக்கங்களையும் கருத்துகளையும் செயல்திட்டங்களையும் அரசியல் தலைவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதையே மோகன் பாகவத் வலியுறுத்துகிறார்.
“ஆளுங்கூட்டணியும் எதிர்க் கட்சிகளின் கூட்டணியும் நாட்டின் ஜனநாயகத்துக்கு இரண்டு பக்கங்கள். நம்முடைய பாரம்பரியமே கருத்தொற்றுமை மூலம் முடிவுகளை எடுப்பதுதான். நாடாளுமன்றத்தில் இருக்கைகளையே ஆளுங்கூட்டணி தரப்பு, எதிர்க்கட்சி கூட்டணி தரப்பு என்று இரண்டாகப் பிரித்திருப்பதே இரண்டும் சேர்ந்தால்தான் நாடாளுமன்றம் முழுமையடையும் என்பதை உணர்த்தவே. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பரப்புரையிலும் விவாதங்களிலும் கண்ணியமும் பண்பாடும் காக்கப்பட வேண்டும். இந்த முறை தேர்தல் பிரச்சாரம், கண்ணியக் குறைவாக இருந்தது. அதனால் அரசியல் சூழல் விஷம் தோய்ந்ததாகிவிட்டது. நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு போலியான நிகழ்வுகளும் பொய்யான தகவல்களும், உண்மையைப் போலவே மக்களிடையே பரப்பப்பட்டன, இதுதானா நம்முடைய பண்பாடு?” என்று வினவுகிறார் பாகவத்.
மோடியின் குடும்பம்
மோகன் பாகவத் இதை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே பேசியிருக்க வேண்டும், இருந்தாலும் இது மோடிக்கு வைக்கப்பட்ட குட்டு என்றே கருத வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் அமைப்பில் பலரும், பிளவுகளை ஏற்படுத்துவது, தன்னுடைய ஆளுமையை வளர்ப்பது போன்ற மோடியின் செயல்கள் குறித்துக் கவலை அடைந்தனர். ‘மோடியின் பரிவாரம்’ (குடும்பம்) என்ற முழக்கம் மூலம் தனக்கென்று கட்சிக்குள் ஆதரவுக் கூட்டத்தை வளர்த்துக்கொண்டு ஆர்எஸ்எஸ்ஸின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுவிட மோடி விரும்பியிருக்கலாம்.
‘மோடியின் குடும்பம்’ என்ற புதிய கருத்து, தனிப்பட்ட முறையில் அவரைத் துதிபாடவும் அவருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் அதிகாரத்தையும் உரிமைகளையும் வழங்கவும் தொடங்கப்பட்ட உத்தி. பாஜக அமைச்சர்கள் நாள்கள் செல்லச் செல்ல ஆணவம் மிக்கவர்களாகவும் தங்களுடைய ஆதரவாளர்களை விட்டு விலகியவர்களாகவும் மாறியதுடன் ஊழலிலும் ஈடுபட்டனர், தனி மனித வழிபாட்டிலும் தோய்ந்தனர்.
‘இந்தியாவின் அதிகார மேட்டுக்குடிகள்: சாதி, வர்க்கம், பண்பாட்டுப் புரட்சி 2021’ (India’s Power Elite: Caste, Class and a cultural Revolution) என்ற என்னுடைய புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாசேதுங்கைப் போல, விசுவாசமான ஊடகம் பின்தொடர, தனக்கென்று தனி வழிபாட்டு மன்றத்தை ஊக்குவித்தார், கட்சியைவிட தன்னைப் பெரியவராக காட்டிக்கொள்ள முயன்றார் மோடி.
‘சங்க பரிவாரத்தில் நீங்களும் ஒரு தலைவர் – அவ்வளவுதான்’ என்று தன்னுடைய பேச்சின் மூலம் அவருக்கு நினைவூட்டியிருக்கிறார் பாகவத். ‘மோடியின் குடும்பம்’ என்ற பின்னொட்டை அமைச்சர்கள்கூட வெட்கமின்றி தங்களுடைய அடையாளமாக பதிவிட்டது குமட்டலையே ஏற்படுத்தியது. சங்கப் பரிவாரம் நாட்டுக்கு சேவை செய்கிறது, மோடியின் பரிவாரம் மோடிக்கு மட்டுமே அடிமை போலச் செயல்படுகிறது!
வாஜ்பாயும் ஆர்எஸ்எஸும்
தேர்தல் முடிவுக்குப் பிறகு இப்படியொரு பேச்சை நிகழ்த்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது இருக்கும் பொதுவான மதிப்பு குலைந்துவிடாமல் காப்பாற்ற முயன்றிருக்கிறார் பாகவத், அதேசமயம் சேதமடைந்திருக்கும் பாஜக தலைமையிலிருந்து விலகியும் நிற்கிறார். அப்படிக் கண்டித்ததன் மூலம், தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பதில் - மோடியைவிடவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார் பாகவத்.
அரசியல்ரீதியாக அடிபட்டிருக்கும் மோடியின் கொள்கைகளும் அரசியல் உத்திகளும் இனி என்னவாக இருக்கும் என்று உலகமும் இந்தியாவும் ஆராய்ந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தச் சேவையைச் செய்திருக்கிறார்.
வாஜ்பாய்கூட ஆர்எஸ்எஸ்ஸின் செல்வாக்கு வட்டத்திலிருந்து வெளியேற முயன்றிருக்கிறார். அப்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கே.எஸ்.சுதர்சனுடன் அவருக்கு இணக்கமான உறவு இல்லை. ஆனால், சுதர்சனைவிட வாஜ்பாயால் மேலே உயர்வதற்கு அவருடைய சுமூகமான சுபாவமும் அனைவரையும் அரவணைத்துச் சென்ற பெரும்போக்கும் காரணங்களாக இருந்தன.
ஆர்எஸ்எஸ் அவருக்கு அளித்துவந்த ஆதரவை 2004 தேர்தலின்போது விலக்கிக்கொண்டு மீண்டும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முடியாமல் அரசியல்ரீதியாக அவரைக் காயப்படுத்தினாலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு அடையாளமாகத் திகழ்ந்தார் வாஜ்பாய்.
மோடியின் சரிவு
தேர்தல் வெற்றிக்காக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசாமலும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்துவதாகக் கருதி, ‘தான்’ என்ற அகந்தையை வளர்த்துக்கொள்ளாமலும் இருந்திருந்தால், தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக உருவெடுத்திருந்தால் இப்படிப் பொதுவெளியில் பாகவத்தால் கண்டிக்கப்பட்டிருக்க மாட்டார் மோடி. ராமஜன்ம பூமி இயக்கத்தின் மைய நகரமான அயோத்தியிலும், மோடியே போட்டியிட்ட காசியிலும் கட்சிக்கு ஆதரவு வாக்குகள் இந்த அளவுக்குக் குறைந்துவிட்டதிலிருந்தே சங்க பரிவாரங்களுக்கிடையே சுமுகமான உறவும் ஒத்துழைப்பும் இல்லை என்பது புரிகிறது.
மோடியின் அரசியல் சரிவுக்குக் காரணங்கள் இவை என்று அரசியல் நோக்கர்கள் பல காரணங்களை வரிசையாகப் பட்டியலிட்டுள்ளனர், அவை ஒவ்வொன்றுமே தங்கள் பங்குக்கு மோடிக்கு எதிராக வேலை செய்துள்ளன.
மோடியின் செல்வாக்கு என்ன?
ராகுல் காந்தி மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ’ யாத்திரை, சமாஜ்வாதி – காங்கிரஸ் இடையிலான உத்தர பிரதேச கூட்டணி, தேச செயல்திட்டங்களைவிட தங்களுடைய மாநில செயல்திட்டங்கள் பெரியது என்று ஆங்காங்கே மாநில சக்திகளின் எழுச்சிகள் பெரிதானது என்று பல காரணங்கள் மோடிக்கு எதிராக வேலை செய்தன. தேர்தல் முடிவைப் பார்க்கும்போது மோடியின் உண்மையான செல்வாக்கு என்ன என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பும் கட்சியுமே தெளிவாக உணர்த்தியிருக்கின்றன.
பாரதிய ஜனசங்கம், பாஜக இரண்டுமே ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்டவைதான் என்றாலும் ஆர்எஸ்எஸ் அமைப்பானது அவ்வப்போது தான் உருவாக்கிய அரசியல் கட்சியிடமிருந்தே விலகி நிற்பதும், பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தருவதும் தொடர்கிறது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைவிட தேச ஒற்றுமையைக் காப்பது முக்கியம் என்ற நிலை வரும்போதெல்லாம் ஆர்எஸ்எஸ் இப்படிச் செயல்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரம் என்பதை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஒரு கருவியாகக் கருதுகிறதே தவிர, அதையே அடைய வேண்டிய இறுதி லட்சியமாகக் கருதுவதில்லை. மோடிக்கோ அதுதான் இறுதி லட்சியமாகத் தெரிகிறது, அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது.
தொடர்புடைய கட்டுரைகள்
அடுத்த ஆர்எஸ்எஸ் தலைவரும் பிராமணர்தானா?
அயோத்தி: தேசத்தின் சரிவு
இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்
இந்துத்துவத்தின் இத்தாலிய தொடர்பு
பாஜகவின் புலப்படாத கரம்
பாசிஸம்: அருந்ததி ராய் முழுப் பேட்டி
தமிழில்: வ.ரங்காசாரி
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
M. Balasubramaniam 6 months ago
ஆர்.எஸ்.எஸின் இலக்கு இந்து ராஷ்ட்ரம். அதன் நூற்றாண்டு கால வரலாற்றில், முழுமையாக அதிகாரத்தைக் கைப்பற்றி ஏதேச்சதிகார ஆட்சி நடந்தது 2014-2024 காலகட்டத்தில் தான். மோதி+அமித் ஷா போன்ற ஒரு வெற்றிகர கூட்டணி, ஆர்.எஸ்.எஸின் நூற்றாண்டு கால வரலாற்றில் இருந்ததில்லை. இவர்களைத் தவிர்த்து இன்று எந்த பாஜக தலைவரும் தேசிய அளவில் மக்களால் ஒப்புக் கொள்ளக் கூடியவர்களாக இல்லை. எனவே, மோகன் பகவத்தின் இந்தக் கண்டிப்பு என்பது வெறும் நாடகமே.. இதையெல்லாம் நம்பிக் கொண்டிராமல், ஆர்.எஸ்.எஸ் போன்ற சனாதனச் சித்தாந்தத்தை அரசியல் தளத்தில் இருந்து அகற்ற என்ன செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் பன்மைத்துவத்தை, மனித சமத்துவத்தை நம்புபவர்கள் யோசிக்க வேண்டிய விஷயம்.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.