கட்டுரை, ஆளுமைகள் 6 நிமிட வாசிப்பு
அம்பேத்கரையும் சண்முகம் செட்டியையும் ஏன் அமைச்சரவைக்கு அழைத்தார் நேரு?
பல ஆண்டுகளுக்கு முன் புதுடெல்லி அருங்காட்சியகத்தில் நான் வேலை செய்தபோது, சி.ராஜகோபாலாச்சாரிக்கு ஜவஹர்லால் நேரு தன் கைப்பட எழுதிய சிறு கடிதத்தைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. 30 ஜூலை, 1947 என்று அதில் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள ராஜாஜி,
சண்முகம் செட்டியை நீங்கள் அணுக வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்காக இக்கடிதம் - இதை வெகு விரைவாக செய்ய வேண்டும்.
நான் அம்பேத்கரைப் பார்த்துப் பேசினேன், அவர் ஒப்புக்கொண்டுவிட்டார்.
உங்கள் அன்புமிக்க,
ஜவஹர்லால்.
--
என்ன முக்கியத்துவம்?
இந்நாளைய வாசகர்களுக்கு, இக்கடிதம் என்ன சொல்கிறது என்பதை விளக்கியாக வேண்டும். ‘30 ஜூலை 1947’ என்பது - நாடு சுதந்திரம் அடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால். பிரதமர் ஜவஹர்லால் நேரு, மத்திய அமைச்சரவைக்குத் தகுந்தவர்களை தேடி அழைத்துக்கொண்டிருக்கிறார். வல்லபபாய் படேலின் பெயர், அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படுவதற்காக பட்டியலில் முதல் இடத்தில் பென்சிலால் எழுதப்பட்டிருக்கிறது.
நேருவின் வார்த்தையில் சொல்வதானால் - அமைச்சரவையின் மிகவும் வலுவான தூண் அவர். அவருக்கு அடுத்தபடியாக கட்சியின் பிற மூத்த தலைவர்களான மௌலானா அபுல் கலாம் ஆசாத், ராஜேந்திர பிரசாத், ராஜ்குமாரி அம்ரித் கௌர் ஆகியோர் இயல்பாக இடம்பிடித்துவிடுகின்றனர்.
இருப்பினும் படேலிடம் ஆலோசனை கலந்துகொண்டு, தங்களுடைய பொது வழிகாட்டியான காந்தியின் ஆலோசனைப்படி, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க வேண்டும், இந்தியாவின் அறிவாளிகள் இடம் பெற வேண்டும், காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார் நேரு.
புதிய அமைச்சரவைக்கான உரு
பிரிட்டிஷார் விட்டுச் சென்ற இந்தியா நல்ல வடிவத்தில் இல்லை என்பது நேரு, படேல் இருவருக்குமே தெரியும். புதிய அமைச்சரவையானது மத மோதல்கள், அகதிகளின் துயரங்கள், உணவு தானியப் பற்றாக்குறை, அடங்க மறுத்த சுதேச சமஸ்தானங்கள் ஆகிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புதிய அரசமைப்புச் சட்டம் உருவாவதை மேற்பார்வையிட வேண்டிய கடமையும் இருந்தது. பலவகைப்பட்ட, மிகவும் சிக்கலான இந்தக் கடமைகளை நிறைவேற்ற அமைச்சரவை சகாக்களை அடையாளம் காண்பதில், குறுகிய கட்சிக் கண்ணோட்டம் தங்களுடைய கைகளைக் கட்டிப்போட்டுவிடக் கூடாது என்பதில் நேரு, படேல் இருவருமே அக்கறை காட்டினர்.
1930கள், 1940களில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வந்தார் பி.ஆர்.அம்பேத்கர். 1946 வரையிலும்கூட அவர் காங்கிரஸையும் அதன் தலைவரையும் கடுமையாக சாடியதுடன், தீண்டத்தகாதவர்களுக்கு காந்தியும் காங்கிரஸும் செய்தவை என்ன என்று விவரிக்கும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார்.
தேசம் அதனுடைய துண்டுகளையெல்லாம் ஒரு சேர சேர்த்து முழு வடிவம் பெற வேண்டும் என்பதால், காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை அணுகி, நாட்டின் முதல் சட்ட அமைச்சராகப் பதவி வகிக்கும்படி கேட்டுக்கொண்டது. அம்பேத்கர் அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.
ஏன் அம்பேத்கர், சண்முகம் செட்டி?
அடுத்து, சக தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியாரை புதிய அரசில் நிதியமைச்சராகப் பதவியேற்க அணுகுமாறு ராஜாஜிக்கு கடிதம் மூலம் நினைவூட்டியிருக்கிறார் நேரு.
நீதிக் கட்சியின் தலைவர் என்ற வகையில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தவர் சண்முகம் செட்டி. ஆனால் நிதி நிர்வாகத்தில் மிகச் சிறந்த நிபுணர் (அம்பேத்கர் எப்படி சட்டத்தில் மேதையோ அப்படி). பழைய அரசியல் மாச்சரியங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய அமைச்சரவையில் அவர்களும் சேர்ந்தனர். சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சரானார் ஆர்.கே.சண்முகம் செட்டி.
முதல் அமைச்சரவையில் இந்து மகாசபையின் சியாமா பிரசாத் முகர்ஜி, அகாலி தளத்தின் பல்தேவ் சிங் ஆகியோரும் இணைந்தனர். காங்கிரஸ் தலைமையிலான வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர் முகர்ஜி. தொழிலதிபர் சி.எச்.பாபா, அரசு அதிகாரி என்.கோபாலசாமி ஐயங்கார் ஆகியோரும் இடம்பெற்றனர். இருவரும் எந்த அரசியல் கட்சியிலும் இருந்ததில்லை.
இன்னொரு பாடம்
கடந்த காலத்திலிருந்து கற்ற இன்னொரு பாடத்தையும் இங்கே குறிப்பிடப்படுவது பொருத்தமாக இருக்கும். 1930களிலும் 1940களிலும் நேருவும் படேலும் காலனி ஆட்சியில் பிரிட்டிஷாருக்குச் சேவை செய்த இந்திய அதிகாரிகளைக் கண்டாலே வெறுத்தனர்.
சுதந்திர இயக்கத்தை ஒடுக்குவதிலும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை சதா சிறையில் தள்ளுவதிலும் இந்த அதிகாரிகள் பிரிட்டிஷாருக்கு உதவியாகவே இருந்தனர். இருந்தும், சுதந்திரத்துக்குப் பிறகு இவர்களில் ஆகச் சிறந்தவர்களை நேருவும் படேலும் தேர்ந்தெடுத்து இந்தியாவுக்கு நல்ல ஜனநாயக அடித்தளம் ஏற்படப் பயன்படுத்திக்கொண்டனர்.
பிரிட்டிஷ் வைஸ்ராய்களுக்கு மிகுந்த பணிவோடு சேவை புரிந்த நான்கு உயர் அதிகாரிகள், இந்தியக் குடியரசு உருவாகவும் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்களில் பி.என்.ராவ் அரசியல் சட்டத்தை வரைவதற்குப் பேருதவி புரிந்தார்; வி.பி.மேனன், சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார்; சுகுமார் சென், முதலாவது இந்திய நாடாளுமன்ற – சட்டமன்ற பொதுத் தேர்தலை மிகத் திறமையாக நடத்திக்கொடுத்தார்; மேற்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்திய அகதிகளை புதிய இடங்களில் சுமூகமாகக் குடியமர்த்தினார் தர்லோக் சிங்.
காந்தியைக் கடுமையாக விமர்சித்தார் என்பதற்காக அம்பேத்கரை அமைச்சரவையில் சேர்க்க முடியாது என்று நேருவும் படேலும் மறுத்திருந்தால் என்னவாகியிருக்கும்? பி.என்.ராவையும் வி.பி.மேனனையும் அவர்களுடைய பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே கட்டாயப்படுத்தி ஓய்வுபெற வைத்திருந்தால் என்னவாகியிருக்கும்?
நேருவும் படேலும் வெஞ்சிறையில் வாடியபோது இவ்விருவரும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு தாசர்களாக இருந்தார்கள் அல்லவா? நேருவும் படேலும் குறுகிய எண்ணம் கொண்டவர்களாக இருந்து, மேற்சொன்னவர்களை அமைச்சரவையில் சேர்க்காமல் விட்டிருந்தால் பிரிவினையால் நாட்டுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் மேலும் பல மடங்காகியிருக்கும். அதற்குப் பிறகு இந்தியா ஒரு குடியரசாகக்கூட இருந்திருக்காது.
பழைய கதை ஏன்?
எதற்காக இந்தப் பழைய கதையைப் பேசுகிறேன்? காரணம், இது இப்போதைய காலத்துக்கு நேரடியாகப் பொருத்தமாக இருக்கிறது. தேசப் பிரிவினைக்குப் பிறகு நாடு சந்திக்கும் மிகப் பெரிய நெருக்கடி ‘கோவிட்-19’ நோய் பாதிப்புதான். இந்த வைரஸ் தாக்குதலுக்கு முன்னதாகவே நம்முடைய நாட்டுப் பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.
இன்றைய நெருக்கடிச் சூழ்நிலையில், சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை ஊட்டவும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்கவும் ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரு தனிமனிதராலோ அவரைச் சுற்றியுள்ள சிறு கும்பலாலோ இது சாத்தியம் இல்லை. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான இந்த நெருக்கடி காலத்திலேனும் மோடி – ஷா அரசு, நேரு – படேல் ஜோடி முன்னர் செய்தவை என்ன என்பதிலிருந்து நல்ல முன்மாதிரிகளைக் கற்றுக்கொள்வார்களா?
(கரோனா பரவிய காலகட்டத்தில் குஹா எழுதிய கட்டுரை இது. ஆயினும் தேசத் தலைவர்கள் எப்படி பரந்துபட்ட பார்வையைக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கும், நேரு எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதற்கும் என்றும் பொருத்தமாக இருக்கும் கட்டுரை. எனவே, நேரு நினைவுத் தொடரின் ஒரு பகுதியாகச் சுருக்கித் தரப்பட்டிருக்கிறது).
3
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Vishal 3 years ago
அரசியலில் நமது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றால், நாம் அனேகமாக அறிந்து இருக்க வேண்டும்.... அதற்கு இச் செயலி பயன் உள்ளதாக இருக்கும்...
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Vishal 3 years ago
இன்று தன் நான் முதன் முதலில் இந்த தளத்தை எனது கல்லூரி பேராசிரியர் ஒருவர் மூலம் அறிந்தேன், இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.....
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.