கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 3 நிமிட வாசிப்பு
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தக் கட்டுரையையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
நாடு முழுக்கச் சுற்றுகையில், பாஜக தன்னுடைய ஆட்சி இல்லாத மாநிலங்களைக் காட்டிலும் ஆட்சியில் உள்ள மாநிலங்களையே பதற்றத்தோடு அணுகுவதைப் பார்க்க முடிகிறது. இங்கே நடக்கும் சின்ன இழப்புகளும்கூட பெரிய சேதாரத்தை உருவாக்கிவிடும் என்பதே இதற்கான காரணம்.
இன்றைக்கு நாட்டின் 12 மாநிலங்களில் பாஜக தலைமையிலான ஆட்சி இருக்கிறது (ஒன்றிய பிரதேசங்கள் தனி). தவிர, இரு பெரிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் முதல்வர்களாக இருந்தாலும், அங்கு சட்டமன்றங்களில் தனிப் பெரும் கட்சியாக பாஜக இருக்கிறது.
இந்த 14 மாநிலங்களில் மட்டும் 296 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில் நாடு முழுக்க 437 இடங்களில் போட்டியிட்ட பாஜக, மொத்தமாக 303 இடங்களை வென்றது. இவற்றில் 71% இடங்கள் (219 தொகுதிகள்) இந்த மாநிலங்களிலிருந்தே அதற்குக் கிடைத்தது.
ஹரியாணா (10/10), உத்தராகண்ட் (5/5), உத்தர பிரதேசம் (62/80), ராஜஸ்தான் (24/25), குஜராத் (26/26), மஹாராஷ்டிரம் (23/48), கோவா (1/2), மத்திய பிரதேசம் (28/29), சத்தீஸ்கர் (9/11), அஸ்ஸாம் (9/14), அருணாசல பிரதேசம் (2/2), திரிபுரா (2/2), மணிப்பூர் (1/2). இவற்றோடு பிஹார் (17/40), மஹாராஷ்டிரம் (23/48). இந்த மாநிலங்கள் அனைத்திலுமே பதிவான ஓட்டுகளில் 50%க்கும் அதிகமாக பாஜக கூட்டணி பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
யோகியால் மட்டுமே பலன்
அனைத்திலுமே பாஜக இன்று ஆட்சியில் இருப்பதற்கு பிரதமர் மோடியின் செல்வாக்கு முக்கியமான காரணம். இங்கு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பெற்ற ஓட்டுகளைக் காட்டிலும் 2014, 2019 இரு மக்களவைத் தேர்தல்களிலும் பாஜகவுக்குக் கிடைத்த ஓட்டுகள் அதிகம்.
சட்டமன்றத் தேர்தல்களில், “மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக அரசு இருந்தால், ‘டபுள் என்ஜின் ரயில்’ வேகத்தில் வளர்ச்சி வரும்” என்று சொல்வதை ஒரு பிரச்சார உத்தியாக மோடி கையாண்டார். பல மாநிலங்களில் இது பாஜகவுக்கு வெற்றியையும் கொடுத்தது.
இப்போது பல இடங்களிலும் இந்த ‘இரண்டாவது என்ஜின்’தான் ‘முதல் என்ஜின்’ எதிர்கொள்ளும் சிக்கல் ஆகியிருக்கிறது. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில், உத்தர பிரதேசத்தில் மட்டுமே மாநில அரசால் மத்திய தலைமைக்குப் பலன் எனும் சூழல் உள்ளது. இங்கு மோடிக்கு இணையாக யோகியின் செல்வாக்கும் உயர்ந்திருப்பதால், சென்ற முறை 62 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 75 எனும் இலக்கோடு பணியாற்றுகிறது. எப்படியும் சென்ற முறைக்கு இணையாக இம்முறையும் வெல்லும்.
சுதாரிக்கும் பாஜக
பாஜக தலைமையில் உள்ள ஏனைய 11 மாநிலங்களிலும் கட்சி இன்னும் வலுவான நிலையில் இருந்தாலும், சென்ற முறை வென்ற அதே எண்ணிக்கையை வெல்ல முடியுமா எனும் கேள்வி அதன் முன் நிற்கிறது.
குஜராத்தில் 26/26 தொகுதிகளையும் சென்ற முறை பாஜக வென்றது. இந்த முறை இங்கே காங்கிரஸும் ஆம்ஆத்மி கட்சியும் இணைந்து நிற்கின்றன. பாஜகவுக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு உட்கட்சி அதிருப்தி வெளிப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இங்கே ஐந்தாறு தொகுதிகளையேனும் வெல்ல வேண்டும் என்று எதிரணி எண்ணுகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் இந்த மூன்று மாநிலங்களிலும் 62/65 தொகுதிகளை சென்ற முறை பாஜக வென்றது. இந்த முறை மூன்று மாநிலங்களிலும் சேர்த்து குறைந்தது 15 தொகுதிகளையேனும் வெல்ல முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
சென்ற முறை 10/10 தொகுதிகளை பாஜகவுக்குக் கொடுத்த ஹரியாணாவில், மாநில அரசுக்கு எதிராகக் கடும் அதிருப்தி நிலவுகிறது. இங்குள்ள 10 தொகுதிகளின் முடிவுகளுமே எப்படியும் மாறலாம் எனும் நிலை உள்ளது.
பாஜக தலைமை இந்தக் கள நிலவரத்தைத் துல்லியமாக உணர்ந்துள்ளதால் சுதாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஹரியாணாவில் முதல்வர் மனோகர் கால் கட்டார் நீக்கப்பட்டு நயாப் சிங் சைனி நியமிக்கப்பட்டதற்கு இதுவே காரணம். சென்ற முறை பதிவான வாக்குகளில் 58% வாக்குகளை பாஜக பெற்ற மாநிலம் இது. ஆனாலும், இந்த முறை தன்னுடைய மக்களவை உறுப்பினர்களில் 6 பேருக்கு வாய்ப்பை மறுத்ததோடு, நவீன் ஜிண்டால் போன்று வெவ்வேறு கட்சிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 6 பேரை இங்கே களம் இறக்கியுள்ளது.
இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கே நான்கு தொகுதிகள், இங்கே மூன்று தொகுதிகள் என்று சில்லறையாகக் குறைந்தாலே பாஜக தனிப் பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை இங்கே இழந்துவிடும் என்பதே அதன் பதற்றத்துக்குக் காரணம்.
தனிப் பெரும்பான்மைக்கான 272 எனும் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக 31 இடங்களை மட்டுமே பாஜக சென்ற தேர்தலில் வென்றது.
முடிவைத் தீர்மானிக்கும் இரு மாநிலங்கள்
பாஜகவுக்குப் பெரும் தலைவலி ஆகியிருக்கும் இரு மாநிலங்கள் மஹாராஷ்டிரமும் பிஹாரும். இந்த இரு மாநிலங்களில் 88 தொகுதிகள் உள்ளன.
சென்ற முறை இவற்றில் பாஜக 40 இடங்களில்தான் வென்றது என்றாலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 40 இடங்களை வென்றன. அதாவது, தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமாக வென்ற 353 தொகுதிகளில், பாஜக வென்ற 303 போக அதன் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த 50 இடங்களில் 40 இந்த இரு மாநிலங்களிலிருந்தே கிடைத்தது.
மஹாராஷ்டிரம், பிஹார் இரண்டிலுமே மாநில அரசுகள் மீது சலிப்பைப் பார்க்க முடிகிறது. கூடவே இரு மாநிலங்களிலும் எதிரணி வலுவாக நிற்பதைக் களத்தில் பார்க்க முடிகிறது. பிஹாரில் மூத்த தலைவர் சுஷீல் குமார் மோடி களத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டிருப்பதும், மஹாராஷ்டிரத்தில் பாஜகவின் முகமாகத் திகழும் தேவேந்திர ஃபட்னவிஸின் அரசியல் எதிரினான ஏக்நாத் கட்சே மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதும் பாஜக உள்ளுக்குள் உணரும் பலவீனத்தை வெளிப்படுத்தும் முக்கியமான சமிக்ஞைகள்.
இதனால்தான் இதுவரை பாஜக தடம் பதிக்காத தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னக மாநிலங்களில் இந்த முறை தீவிர கவனம் செலுத்துகிறது பாஜக. ஆனால், வாக்குவீதம் அதிகரிப்பதைத் தாண்டி பெரிய பலன்கள் வடக்கு - தெற்கில் கிடைப்பது சிரமம் என்றாகிவிட்ட நிலையில், கிழக்கிலும் மேற்கிலும் பாஜக மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளது. வரவிருக்கும் ஆட்சியைத் தீர்மானிப்பதில் கிழக்கும் மேற்குமே முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகின்றன!
-‘குமுதம் ரிப்போர்ட்டர்’, ஏப்ரல், 2024
தொடர்புடைய கட்டுரைகள்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
5
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Ramasubbu 8 months ago
நீங்கள் இந்தியா முழுவதும் குருக்கும் நெடுக்குமாய் சென்று கள நிலவரத்தை, அதாவது பா. ஜ. க. வுக்கு எதிராக நிலையில் எழுதுகிறீர்கள். தேர்தல் முடிவுகள் தங்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருந்தால்...
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.