கட்டுரை, புதையல், புத்தகங்கள் 28 நிமிட வாசிப்பு

அம்பேத்கரின் 10 கடிதங்கள்

பி.ஆர்.அம்பேத்கர்
17 Apr 2022, 5:00 am
2

அம்பேத்கரின் உரைகள், கட்டுரைகளில் அறிந்துகொள்ள தவறவிடும் அம்பேத்கரை அவருடைய கடிதங்கள் வழி புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், எத்தகைய சூழலிலிருந்து அவருடைய பார்வையும், சிந்தனையும், உரைகளும், எழுத்துகளும் வெளிவந்தன என்பதை அவருடைய தனிப்பட்ட வாழ்வுக்கு அருகில் சென்று பார்க்கும் சாத்தியங்களைத் தருபவை இந்தக் கடிதங்கள். 

அம்பேத்கரின் கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பை வெளிக்கொணர்ந்தார் சுரேந்திர அஜ்நாத். அ.கெஜநாதனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இந்தத் தொகுப்பு தமிழில் வெளியாகியிருக்கிறது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் சிவசங்கர் எஸ்.ஜே. சமீபத்தில் வெளியான நூல்களில் கவனிக்க வேண்டிய ஒன்று என இந்நூலைக் கூறிட முடியும். இந்தக் கடிதங்களின் வழி அம்பேத்கரின் வாழ்வுக்குள் மட்டும் அல்ல; உருவாகிவந்த நவீன இந்தியாவுக்குள்ளும் எட்டிப் பார்த்து வர முடிகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்நூலிலிருந்து 10 கடிதங்களைத் தன்னுடைய வாசகர்களுக்கு இங்கே ‘அருஞ்சொல்’ தருகிறது.

      கடிதம் 1

தாமோதர் ஹால்,
பரேல், 
பம்பாய்- 12,
18-2-33

அன்புள்ள சாவர்க்கர், 

ரத்னகிரிக் கோட்டையில் தீண்டப்படாதவர்களுக்கான கோயிலைத் திறக்க எனக்கு அழைப்பு விடுத்த உங்கள் கடிதத்திற்கு மிகுந்த நன்றி. ஏற்கெனவே ஒத்துக்கொண்ட சில நிகழ்ச்சிகள் இருப்பதால் உங்கள் அழைப்பை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறேன். எனினும், சமூகச் சீர்த்திருத்தப் பாதையில் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளுக்கு என்னுடைய பாராட்டைத் தெரிவிக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன். தீண்டப்படாதவர்களின் பிரச்சினை என்று நான் பார்க்கும் விஷயங்களை, உண்மையில் இந்து மதத்தை மறுகட்டமைப்புச் செய்வதோடு தொடர்புடைய கேள்விகளாகவே உணர்கிறேன். தீண்டப்படாதவர்கள் இந்துச் சமூகத்தில் ஒருங்கிணைய வேண்டுமென்றால், வெறுமனே தீண்டாமையை மட்டும் ஒழித்தால் போதாது, சதுர்வர்ணக் கோட்பாட்டையே ஒழிக்க வேண்டும். அல்லாமல் அவர்கள் இந்துச் சமூகத்தின் வெறும் பின்னிணைப்பாகவே இருப்பார்களென்றால் கோயிலைப் பொறுத்தவரை தீண்டாமை தொடரவே செய்யும். இதை உணர்ந்துகொண்ட வெகுசிலரில் நீங்களும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தகுதி அடிப்படையில் சதுர்வர்ண உளறலை இன்னமும் போற்றும் உங்கள் தன்மை துரதிர்ஷ்டவசமானது. இருந்தும் சிறிது காலங்களுக்குப் பிறகு தேவையற்ற சேட்டையான இந்தப் பிதற்றலை நீங்கள் கைவிடுவீர்கள் என நம்புகிறேன்.

வாழ்த்துகள், உங்களை மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்.

உண்மையுள்ள,
பி.ஆர். அம்பேத்கர்.

 கடிதம் 2

பாட்னா,
ஏப்ரல் 9, 1934.

அன்புள்ள டாக்டர் அம்பேத்கர்,

தங்கள் 29-3-1934 தேதியிலான கடிதத்திற்குப் பதில் எழுதத் தாமதித்ததற்காக மன்னிக்கவும். தொடர்ப் பயணங்களினால் முன்னமே பதில் எழுத இயலவில்லை.

மாகாணங்கள் ஒத்துக்கொண்டதால், தங்கள் திட்டத்திற்கு நான் செவிசாய்க்கலாம். ஆனாலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்காக மற்ற மாகாணங்கள் ஒப்பந்தத்தை மறுசீரமைப்புச் செய்யச் சொல்லும் கோரிக்கைக்கு என்னால் அழுத்தம் கொடுத்துப் பாரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாது.

வங்காளத்தில் என்னால் முடிந்தவரை சமாதானம் செய்தும் பலனில்லை. ஒப்பந்தத்தின் போதான வங்காள ஹரிஜனங்களின் மக்கள் தொகை, நம்பிய அளவு இருந்திருந்தால் புகார் சொல்ல அவர்களுக்கு ஒன்றுமில்லை. உண்மையாக, எண்ணிக்கை மிகக்குறைவாக நிச்சயிக்கப்பட்டிருப்பதால், எண்ணிக்கை குறித்துத் திருத்தம் செய்து சரியான எண்ணிகையை முன்வைக்கும் உங்கள் கோரிக்கையில் எனக்கு மறுப்பேதும் இல்லை.

உண்மையுள்ள,
மோ.க. காந்தி.

டிதம் 3

ராஜகிரஹா,
இந்து காலனி,
தாதர்,
பம்பாய்-14,
ஏப்ரல் 15, 1934.

அன்பான மகாத்மா ஜி,

தங்கள் 9ஆம் தேதியின் கடிதம் பெற்றேன். எனது திட்டத்தை முன்வைத்ததன் நோக்கம் அது என்னைவிடத் தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றே. ஏனென்றால் வங்காளி இந்துக்களைச் சாந்தப்படுத்த உங்களுக்கு அது ஏதுவாக இருக்கும். ஆகவே அதை அந்தரங்கமான திட்டம் என்று குறிப்பிட்டேன். ஈடுசெய்யும் விஷயத்தில் மற்ற மாகாணங்களின் விஷயங்களில் பொறுப்பேற்க நீங்கள் தயாராக இல்லாததால் விஷயங்களை அவ்வண்ணமே நடக்க நான் விட்டுவிடுகிறேன். ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் நீங்கள் மறுபடியும் இடங்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யலாம் என நம்பினால், மிக வெளிப்படையாகச் சொல்கிறேன், கடுமையான எதிர்ப்பை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். பூனா ஒப்பந்தம் கையெழுத்தானபோது மற்ற மாகாணங்களிலும் வங்காளத்திலும் சர்ச்சைகளைத் தீர்க்கும் பொருட்டு ஒடுக்கப்பட்டோரின் மொத்த மக்கள்தொகை குறித்த சர்ச்சையில் அவர்களின் உண்மையான மக்கள்தொகையின் அடிப்படையைவிட ஒப்பீட்டளவில் மிகச்சிறிய அளவேயான இடங்களே எங்களுக்கு வழங்கப்பட்டதை திரு. தக்கார் உங்களுக்குச் சொல்வார். இனி இந்தத் திசையில் எதுவும் செய்ய முடியாது. இந்தப் பிரச்சினை இத்தோடு என்றென்றைக்குமாய் முடிவுக்கு வருவது நல்லது.

உண்மையுள்ள,
பி.ஆர். அம்பேத்கர்.

கடிதம் 4

பீம்ராவ் ஆர். அம்பேத்கர்
எம்.ஏ., பி.எச்.டி., டிஎஸ்சி., பாரிஸ்டர்-அட்-லா,
உறுப்பினர், கவர்னர் ஜெனரலின் நிர்வாகச¢ சபை 
22, பிருத்விராஜ் சாலை,
புதுடில்லி,
தேதி: 14 மே, 1946

அன்பார்ந்த திரு. அலெக்ஸாண்டர் அவர்களுக்கு,

காங்கிரக்கும் முஸ்லிம் லீகுக்கும் இடையில் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது குறித்து வருந்துகிறேன். உங்களுக்குப் பரிவும் நன்றியும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். அதே சமயத்தில் உடன்பாடு ஏற்படுத்துவதற்காகத் தூதுக்குழு மேற்கொண்ட முயற்சியானது ஒரு முதிய பனியா தனது சொத்துக்கு வாரிசு இல்லாத நிலையில், ஒரு வாரிசைப் பெறுவதற்காக ஓர் இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட சம்பவமே எனக்கு நினைவூட்டுகிறது என்று என்னால் கூறாமலிருக்க முடியவில்லை. மணமகள் கருவுற்றாள். ஆனால் மணமகன் கடும் நோய்வாய்ப்பட்டான். ஆயினும் குழந்தையைப் பார்க்காமல் தான் மரணமடையப் போவதில்லை என்று உறுதிபூண்ட அவன் பிரசவமாகும் வரையில் காத்திருக்க விரும்பவில்லை. பிரசவமாவதற்கான காலமோ நீண்டிருந்தது. மிகவும் பொறுமை இழந்த அவன் மருத்துவரை அழைத்து, மனைவியின் வயிற்றை அறுத்து, பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தனக்குக் காட்டும்படிக¢ கூறினான். அறுவைச் சிக¤க்சையின் விளைவாகக் குழந்தை, தாய் இருவருமே மரணமடைந்தனர். அந்தப் பனியா செய்ததைப் போலவே தூதுக்குழுவும் செய்ய விரும்பியது என்று கூறுவேன். உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் கர்ப்பம் முதிர்ச்சியடைவதற்கு இயற்கையாகத் தேவைப்படும் காலத்திற்கும¢ முன்பாகவே வலுக்கட்டாயமாகப் பிரசவத்தை ஏற்படுத்தும் பணியில் தூதுக்குழு இறங்கியது என்று என்னைப் போலவே பலர் நினைக்கிறார்கள்.

2. இந்துக்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டின் வருங்காலத்தைப் பற்றி முடிவு செய்வதற்கு இயன்ற மனரீதியில் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுவது சரியே என்று எனக்குத் தோன்றுகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் வெறும் கும்பல்கள். ஒரு கும்பல் கூட்டுமுறையில் பகிர்ந்து கொள்ளும் ஓர் ஆவேசத்தைக் காட்டிலும் பொருளாயத ஆதாயத்தினால் அவ்வளவாகக் கவரப்படுவதில்லை என்று உங்களுடைய அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். ஏற்படவிருக்கும் அனுகூலங்களை நிதானமாக மதிப்பீடு செய்து அதனடிப்படையில் செயல்படுவதைக் காட்டிலும் ஒரு மக்கள் திரளைக் கூட்டாகத் தியாகம் செய்யும்படி இணங்கவைப்பது எளிதாகும். ஒரு கூட்டம் லாப, நட்டம் பற்றிய உணர்வை இலகுவாக இழந்துவிடுகிறது. அது உயர்வான அல்லது தாழ்ந்த, அன்பான அல்லது மிராண்டித்தனமான, கருணையான அல்லது கொடூரமான நோக்கங்களால், உந்துதல்களால் நெகிழ்ந்துவிடுகிறது. ஆனால் எப்போதும் விவேகத்துக்கு அப்பாற்பட்டதாகவோ கீழானதாகவோ இருக்கிறது. அனைவரின் ஆவேச உணர்ச்சியில் ஒவ்வொருவரின் பகுத்தறிவும் இழக்கப்படுகிறது. மரபுரிமைப் பண்பை ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் தற்கொலை செய்துகொள்ளும்படி ஒரு கூட்டத்தை இணங்கவைப்பது எளிதானதாகும். நீங்கள் எவ்வாறு முன்செல்ல வேண்டும் என்று உங்களுக்கு ஆலோசனை கூற வேண்டியது என்னுடைய பொறுப்பல்ல. பங்கிபஸ்தியிலும் 10, அவுரங்கசீப் சாலையிலும் தூதுக்குழு கூடுதல் அறிவொளியையும் உயர்வான உத்வேகத்தையும் பெற்றுள்ளது. அத்தகைய அறிவொளியையும் உத்வேகத்தையும் மட்டுப்படுத்தும் வகையில் நான் எதையும் கூறமாட்டேன். ஆனால் அதே சமயத்தில், அவசரப்பட்டுச் செயல்பட்ட முதியவரைப் போன்ற ஒரு பரிதாபகரமான காட்சியைத் தூதுக்குழு வெளிப்படுத்தாமலிருக்க வேண்டுமெனில் (அயர்லாந்தின் சுயாட்சிக்கான தனது பிரச்சாரத்தில் கிளாட்ஸ்டன் ஈடுபட்ட முறையை வர்ணிப்பதற்கு சேம்பர்லேன் உபயோகப்படுத்திய சொற்றொடர்) ராஜதந்திரத்தில் ‘நிதானமடைவதற்கான காலகட்டம்’ என்று அழைக்கப்படுவதை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிலைமைக்குப் பரிகாரம் காண்பது அவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்று நிச்சயமாகக் கருதுகிறேன்.

3. தூதுக்குழு, பெரிய கட்சிகள், பெரிய கட்சிகளிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட விஷயம் இது. தீண்டப்படாதவர்களின் பிரச்சினைக்கும் அரசியல் சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைக்கும் நீங்கள் எவ்வாறு பரிகாரம் காணப்போகிறீர்கள் என்று தெரிந்துகொள்வதில் நான் அக்கறை உடையவனாக இருக்கிறேன். சிம்லா பேச்சுவார்த்தைகளின் கடைசி நாளன்று தூதுக்குழு வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் டில்லிக்குத் திரும்பியபின், ஒரு சில நாட்களுக்குள், தாங்கள் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிக்கப்போவதாகக் கூறப்பட்டிருந்தது. அனைத்துப் பட்டியல் சாதியினரும் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது தெளிவு. தூதுக்குழு அடுத்து செய்யப்போவது இறுதியாக அவர்களது எதிர்காலத்தை முடிவுசெய்யும். தூதுக்குழுவின் முடிவு, ஒன்று தீண்டப்படாதவர்களுக்கு வாழ்க்கை, விடுதலை, மகிழ்ச்சிக்கான பாதையைத் திறக்கும் அல்லது அது அவர்களது சவப்பெட்டியில் ஓர் ஆணியை அறையும். பிரச்சினை வாழ்வா, சாவா என்றிருப்பதனால், தீண்டப்படாதவர்களின் பிரச்சினையை ஒரு சில நிமிடங்கள் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவருவது தவறாகாது என்று நினைக்கிறேன்.

4. தீண்டப்படாதவர்களின் பிரச்சினையானது அவர்களை எதிர்நோக்கும் மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாகக் கீழ்வரும் உண்மைகளை மனத்தில் பதிய வைத்துக்கொண்டால், அதைப் புரிந்துகொள்வது எளிதாகும். தீண்டப்படாதவர்கள் மிகப்பரந்த இந்து மக்கள் திரளினால் சூழப்பட்டுள்ளார்கள். அவர்கள் பகை உணர்ச்சி கொண்டவர்களாக இருக்கிறார்கள். தீண்டப்படாதவர்களுக்கு எதிராக எத்தகைய அநீதியையும் அட்டூழியத்தையும் இழைப்பதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. அன்றாடம் நிகழ்ந்து வருகின்ற இந்தக் கொடுமைகளை நிவர்த்தி செய்வதற்குத் தீண்டப்படாதவர்கள் அரசாங்கத்தின் உதவியைக் கோர வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்த நிர்வாகத்தின், அரசின் தன்மையும் இயைபும் என்னென்ன? சுருங்கக்கூறின், இந்தியாவிலுள்ள அரசு நிர்வாகம் முற்றிலும் இந்துக்களின் கைகளில் உள்ளது. அது அவர்களின் ஏகபோகமாகும். மேலிருந்து கீழ்வரை அது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் ஆதிக்கம் செலுத்தாத இலாகாவே இல்லை. காவல்துறை, நீதித்துறை, வருவாய்த் துறை. உண்மையில் அரச நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நினைவில்கொள்ள வேண்டிய அடுத்த விஷயம் என்னவெனில், நிர்வாகத்தில் உள்ள இந்துக்கள் சமூக - நேசமற்றவர்களாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் சமூக - விரோதிகளாகவும், தீண்டப்படாதவர்களின் பகைவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் தீண்டப்படாதவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதும், அவர்களுக்குச் சட்டத்தின் அனுகூலங்கள் கிடைக்காமல் பறிப்பதும் மறுப்பதும் மட்டுமன்றி, கொடுங்கோன்மையிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் சட்டத்தின் பாதுகாப்பை அவர்களுக்கு மறுப்பதுமாகும். இதன் விளைவாக, தீண்டப்படாதவர்கள் இந்து மக்களுக்கும் இந்துக்கள் நிரம்பிய நிர்வாகத்திற்கும் இடையில் வைக்கப்படுகிறார்கள். இவற்றில் ஒருவர் அவர்களுக்கு எதிராக அநியாயங்கள் புரிகிறார்; மற்றொருவர் பாதிக்கப்படுவோரைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக அநீதி இழைப்போரைப் பாதுகாக்கிறார்.

5. இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தன்மைகொண்ட சுயராஜ்யம் தீண்டப்படாதவர்களுக்கு என்ன அர்த்தத்தைத் தரமுடியும்? அதன் பொருள் ஒன்றே ஒன்றுதான்: அதாவது, இன்று நிர்வாகம் மட்டும்தான் இந்துக்களின் கைகளில் உள்ளது; சுயராஜ்யத்தின் கீழ் சட்டப்பேரவையும் அரசும்கூட இந்துக்களால் நிரப்பப்பட்டுவிடும். சுயராஜ்யம் தீண்டப்படாதவர்களின் துன்பதுயரங்களை உக்கிரமாக்கப் போவதைக் கூறத் தேவையில்லை. ஏனெனில், பகைமை உணர்வுகொண்ட நிர்வாகத்தை எதிர்கொள்வதோடு கூட, தீண்டப்படாதவர்கள் தமக்குப் பகைமையான அல்லது அசட்டையான சட்டப் பேரவையையும், சொரணையற்ற அரசையும், தீண்டப்படாதவர்கள்பால் கட்டுப்பாடற்ற-கடிவாளமில்லாத நச்சு மனப்பாங்கையும், கொடுமையையும், அநீதியான போக்கையும் கொண்ட ஒரு நிர்வாகத்தையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேறுவிதமாக இதைக் கூறவேண்டுமெனில், காங்கிரஸ் வகைப்பட்ட சுயராஜ்யத்தின் கீழ் தீண்டப்படாதவர்களுக்கு இந்துக்களும் இந்து மதமும் நிர்ணயித்துள்ள இழிவார்ந்த எதிர்காலத்திலிருந்து தப்பிச்செல்வதற்கு வழியே இருக்காது.

6. இந்தச் சுயராஜ்யம் தங்களுக்கு ஒரு பேரழிவாவதிலிருந்து தடுப்பதற்கான ஒரே வழி, சட்டப்பேரவையில் தங்களுடைய பிரதிநிதிகள் இடம்பெறுவதுதான் என்று தீண்டப்படாதவர்கள் வலியுறுத்தி வருவதற்கான காரணத்தை இது ஓரளவு உங்களுக்குப் புரியவைக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதுதான், இந்துக்களினால் இழைக்கப்படும் கொடுமைகளையும் அநீதிகளையும் எதிர்த்து அவர்களால் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்க முடியும். அரசில் தங்களுடைய பிரதிநிதிகள் இருப்பதன் வாயிலாக அவர்கள் தங்களுடைய மேம்பாட்டுக்கான திட்டங்களை உருவாக்க முடியும். அரசுப் பணிகளில் பிரதிநிதிகள் இருப்பதன் வாயிலாக, அரசு நிர்வாகம் முற்றிலும் தங்களுக்குப் பகைமையாக இல்லாமற் செய்ய முடியும். சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் வேண்டுமென்ற தீண்டப்படாதவர்களின் கோரிக்கையின் நியாயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால், தீண்டப்படாதவர்கள் ஏன் தனித் தொகுதிகளை விரும்புகிறார்கள் என்று புரிந்துகொள்வதில் எவ்வித சிரமமும் இருக்காது. சட்டப்பேரவையில் தீண்டப்படாதவர்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள். அவர்கள் சிறுபான்மையாக இருக்குமாறு விதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பெரும்பான்மையினரைச் சமாளிக்க முடியாது. இந்தப் பெரும்பான்மையினர் வகுப்புவாதிகளாக இருப்பது நிலையானது, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது என்றுதான் கூற வேண்டும். பெரும்பான்மையினருடன் எந்த அடிப்படையில் தங்களால் ஒத்துழைத்துப் பணியாற்ற முடியும் என்ற நிபந்தனைகளை நிர்ணயிக்கும் நிலையில் தங்களை வைத்துக்கொள்வது மட்டுமே அவர்களால் செய்ய முடியும். பெரும்பான்மையினர் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை நிர்ப்பந்தப்படுத்தக்கூடாது. இரண்டாவதாக, பெரும்பான்மையினர் தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு மறுத்து, தங்களுடைய அநீதிகளைப் போக்குவதற்கு இணங்காவிடில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையினருக்கு எதிராகக் குறைந்தபட்சம் தங்களுடைய கண்டனத்தைத் தெரிவிப்பதற்காவது அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கும். கண்டனத்தைத் தெரிவிப்பதற்கான தங்களுடைய சுதந்திரத்தைத் தீண்டப்படாதவர்கள் எவ்வாறு நிலைநாட்டுவது? சட்டப்பேரவைகளில் உள்ள தங்களது பிரதிநிதிகள், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பெரும்பான்மையினரின் வாக்கு காரணமாயில்லாமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். தனித் தொகுதிகள் வேண்டுமென்ற அவர்களுடைய கோரிக்கைக்கு இதுதான் அடிப்படை.

7. தனித் தொகுதி கிடைத்தாலன்றி தீண்டப்படாதவர்களுக்கு தகுந்தப் பாதுகாப்புகளும் தகுந்த மதிப்புகளும் கிடைக்கப் போவதில்லை. தனித் தொகுதிதான் பிரச்சினையின் மையமான அம்சமாகும். 1946 ஏப்ரல் 9ஆம் தேதியன்று, தூதுக்குழுவினர் பேட்டிகண்ட மூன்று காங்கிரஸ் ஹரிஜனங்கள் அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் சமர்ப்பித்த மனுவின் ஒரு நகல் எனக்கு முன்னால் இருக்கிறது. அவர்கள், “இங்கிலாந்தின் மக்களாகிய நாங்கள்” என்று கூறி, நாடாளுமன்றத்திற்கு ஒரு மனுவைச் சமர்ப்பிப்பதற்குத் துணிவுகொண்ட டூலி தெருவின் மூன்று தையற்காரர்களைக் காட்டிலும் எவ்விதத்திலும் மேம்பட்டவர்கள் அல்லர். இதைத் தவிர, பட்டியல் சாதியினரின் சம்மேளனத்தின் சார்பில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் இந்தக் காங்கிரஸ் ஹரிஜனங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் எத்தகைய வேறுபாடும் இல்லையென்று உணர்வது உசிதமாகும். இதிலுள்ள ஒரே வேறுபாடு, தேர்தல் தொகுதிகளின் பிரச்சினை சம்பந்தமானதேயாகும். காங்கிரஸ் ஹரிஜனங்களின் கோரிக்கைகளை நீங்கள் எவ்வாறு வியாக்கியானம் செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அவை உண்மையில் கோரிக்கைகள் அல்ல. அரசியல் பாதுகாப்புகள் என்ற வகையில் பட்டியல் சாதியினருக்கு காங்கிரஸ் என்ன கொடுப்பதற்குத் தயாராயிருக்கிறது என்பதையே அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இது நான் புரிந்துகொண்டிருக்கும் விஷயம் மட்டுமல்ல. இதுதான் நான் அறிந்துகொண்டது. கூட்டுத் தொகுதிகளை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராயிருந்தால், காங்கிரஸ் அதனுடைய பங்குக்கு, என்னுடைய இதர கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதற்குத் தயாராயிருக்கும் என்று காங்கிரசின் மனநிலையை அறிந்த நபர்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். பட்டியல் சாதியினரின் இதர எல்லாக் கோரிக்கைகளையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கும் காங்கிரஸ் ஒரே ஒரு கோரிக்கையை, அதாவது தனித் தொகுதிகளை மட்டும் ஆட்சேபிப்பது ஏன் என்று நீங்கள் வியப்படைவீர்கள். காங்கிரஸ் என்ன சூழ்ச்சியைக் கையாள்கிறதென்று நீங்கள் அறிந்தால் வியப்படையமாட்டீர்கள். அது மிகவும் ஆழமான சூழ்ச்சியாகும். தீண்டப்படாதவர்களுக்குச் சில பாதுகாப்புகள் வழங்குவதினின்றும் தப்பித்துக்கொள்வதற்கு வழி இல்லாததை உணர்ந்துள்ளதனால் காங்கிரஸ், அந்தப் பாதுகாப்புகளைப் பயனற்றவையாக ஆக்குவதற்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு விரும்புகிறது. கூட்டுத் தொகுதிகள் ஏற்பாட்டில் பாதுகாப்புகளைப் பயனற்றதாகச் செய்யும் கருவி அடங்கியுள்ளதாகக் காங்கிரஸ் கருதுகிறது. அதனால்தான் காங்கிரஸ் கூட்டுத் தொகுதிகளை வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் கூட்டுத் தொகுதிகள் என்றால், தீண்டப்படாதவர்களுக்கு அதிகாரமில்லாத பதவியைக் கொடுப்பது என்று பொருள். அதிகாரத்துடன் கூடிய பதவியையே தீண்டப்படாதவர்கள் விரும்புகிறார்கள். தனித் தொகுதிகள் மூலமாகத்தான் அவர்கள் இதைப் பெற முடியும். அதனால்தான் அவர்கள் அதை வலியுறுத்தி வருகின்றனர்.

8. பட்டியல் சாதியினருக்குத் தனித் தொகுதித் தேவை எனும் வாதம் மிகவும் உறுதியான வாதமாகும். காங்கிரசைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் அதை ஏற்றுக்கொள்கின்றன. தனித் தொகுதிகளுக்கு ஆதரவான வாதங்களை, 1946, மே 3ஆம் தேதியன்று வேவல் பிரபுவுக்கு நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை அவர்கள் உங்களுக்குக் காண்பித்திருப்பார். எனவே அவற்றை மீண்டும் இங்கே எடுத்துக் கூறுவது அவசியமில்லை. பட்டியல் சாதியினரின் இந்தக் கோரிக்கை சம்பந்தமாகத் தூதுக்குழு என்ன செய்யப்போகிறது என்பதே கேள்வி. தீண்டப்படாதவர்களை இந்துக்களின் அரசியல் நுகத்தடியின் கீழிருந்து அவர்கள் விடுவிக்கப்போகிறார்களா? அல்லது காங்கிரசையும் அது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்துப் பெரும்பான்மையோரையும் நண்பர்களாக்குவதற்காகக் கூட்டுத்தொகுதிகளுக்கு இரையாக்கப் போகிறார்களா? பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிச் செல்வதற்கு முன்னதாகச் சுயராஜ்யம் பட்டியல் சாதியினருக்கு ஒரு கழுத்துச் சுருக்காக மாறாமல் இருப்பதை மன்னர்பிரான் அரசாங்கம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மன்னர்பிரான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதற்குப் பட்டியல் சாதியினருக்கு உரிமை இருக்கிறது.

9. பட்டியல் சாதியினரின்பால் பிரிட்டிஷாருக்கு ஒரு தார்மிகப் பொறுப்பு இருக்கிறது என்று கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள். எல்லாச் சிறுபான்மையோர்பாலும் அவர்களுக்குத் தார்மிகப் பொறுப்பு இருக்கக்கூடும். ஆனால் அது ஒருபோதும் பட்டியல் சாதியினர்பால் அவர்கள் சார்ந்துள்ள பொறுப்பைக் கடந்து அப்பால் செல்ல முடியாது. மிகச் சொற்பமான பிரிட்டிஷ்காரர்களே இதை உணர்ந்துள்ளதும் மிகக் குறைவான பிரிட்டிஷ்காரர்களே இதை நிறைவேற்றத் தயாராயிருப்பதும் பரிதாபத்துக்குரிய விஷயமாகும். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருப்பதற்குத் தீண்டப்படாதவர்கள் நல்கிய உதவிதான் காரணமாகும். கிளைவ்கள், ஹேஸ்டிங்குகள், கூட்ஸ்கள் முதலியோரால் இந்தியா வெல்லப்பட்டது என்று பல பிரிட்டிஷ்காரர்கள் நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் பெரிய தவறு வேறொன்றும் இருக்க முடியாது. இந்தியா, இந்தியர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தால் வெல்லப்பட்டது. அந்த ராணுவத்தில் இருந்த இந்தியர்கள் அனைவரும் தீண்டப்படாதவர்கள். இந்தியாவை வெல்வதற்கு பிரிட்டிஷ்காரர்களுக்குத் தீண்டப்படாதவர்கள் உதவி செய்யாமலிருந்திருந்தால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி சாத்தியமாயிருக்காது. பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கத்திற்கு அஸ்திவாரம் அமைத்த பிளாசி சண்டையை, இந்தியாவை வெல்வதைப் பூர்த்திசெய்த கிர்கி போரை எடுத்துப் பாருங்கள். விதியை நிர்ணயித்த இந்த இரண்டுபோர்களிலும் பிரிட்டிஷ்காரர்களுக்காகப் போரிட்ட படைவீரர்கள் அனைவரும் தீண்டப்படாதவர்களே.

10. தங்களுக்காகப் போரிட்ட இந்தத் தீண்டப்படாதவர்களுக்காகப் பிரிட்டிஷ்காரர்கள் என்ன செய்தார்கள்? அது ஓர் அவமானகரமான வரலாறு. அவர்கள் செய்த முதல் காரியம் அவர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்தியதுதான். இதைக் காட்டிலும் ஈவு இரக்கமற்ற, கருணையற்ற, நன்றியற்ற, கொடூரத்திலும் கொடூரமான செயலை வரலாற்றில் எங்கும் காணமுடியாது. தீண்டப்படாதோருக்கு ராணுவத்தின் கதவை மூடியதில் அவர்களின் ஆட்சியை இங்கு நிறுவுவதற்குத் தீண்டப்படாதவர்கள் அவர்களுக்கு உதவி செய்ததையும், 1857ஆம் வருடக் கலகத்தின்போது சுதேசிப் படைகளின் ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியினால் பேராபத்துக்குள்ளானபோது அவர்களைப் பாதுகாத்து நின்றதையும் பிரிட்டிஷ்காரர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் தீண்டப்படாதோர் எவ்வளவு பாதிப்புக்குள்ளானார்கள் என்பது குறித்து பிரிட்டிஷ்காரர்கள் எவ்விதக் கவலையும் படவில்லை; அதற்கு மாறாக ஒரே ஒரு வரி எழுதி அவர்களின் வாழ்க்கை ஆதாரத்தைப் பறித்துவிட்டு, அவர்களுடைய முந்திய இழிவு நிலைக்குள் மீண்டும் விழும்படிச் செய்தார்கள். அவர்களைச் சமூக இழிவுகளிலிருந்து மீட்பதற்கு எவ்வகையிலாவது பிரிட்டிஷ்காரர்கள் உதவி செய்தார்களா? மீண்டும் இதற்குப் பதில் “இல்லை” என்பதுதான். பள்ளிக்கூடங்கள், கிணறுகள், பொது இடங்கள் முதலியவை தீண்டப்படாதோருக்கு மூடப்பட்டன. பொதுநிதிகளிலிருந்து நிர்வகிக்கப்படும் எல்லா நிலையங்களிலும் அனுமதிக்கப்படுவதற்கு, குடிமக்கள் என்ற வகையில் தீண்டப்படாதவர்கள் தகுதி பெறும்படிச் செய்வதற்கு உதவுவது பிரிட்டிஷ்காரர்களின் கடமையாகும். ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் அது எதையும் செய்யவில்லை. இன்னும் மோசமானது என்னவென்றால் தீண்டாமையைத் தாங்கள் தோற்றுவிக்கவில்லை என்று கூறுவதன் மூலம் தங்களுடைய செயலற்ற தன்மையை அவர்கள் நியாயப்படுத்தினர். தீண்டாமை, பிரிட்டிஷ்காரர்களால் தோற்றுவிக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அன்று ஆட்சிபுரிந்த அரசு என்ற முறையில், தீண்டாமையை அகற்றுவது நிச்சயமாக அவர்களின் பொறுப்புத்தான். ஓர் அரசின் செயல்பாடுகள், கடமைகள் குறித்தான உணர்வுள்ள எந்த அரசும் அதைத் தவிர்த்திருக்க முடியாது. பிரிட்டிஷ் அரசு என்ன செய்தது? இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்தம் செய்வது சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையையும் எந்த வகையிலும் தொடுவதற்கு அது மறுத்தது. சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட மட்டிலும் தீண்டப்படாதவர்களுக்கு இக்காலத்திய அரசு, அவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து, துன்புற்று, வாழ்ந்து, மரணமடைந்துவந்த, மறக்கப்பட்ட வரலாற்றுக் காலத்தியச் சுதேச மன்னராட்சிகளிலிருந்தும் எந்த ஜீவாதார அம்சத்திலும் வேறுபட்டிருக்கவில்லை. அரசியல் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது, மாற்றம் பெயரளவானதேயாகும். இந்துக்களின் கொடுங்கோன்மை எப்போதும்போலவே தொடர்ந்து நீடித்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அது தடை செய்யப்படுவதற்கும் மாறாக, அது தட்டிக்கொடுத்து வளர்க்கப்பட்டது. சமூகக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது பிரிட்டிஷ்காரர்கள், ஏற்கெனவே இருந்து வந்த ஏற்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றைப் பேணிக் காத்தனர். இதற்கு உதாரணமாக ஒரு சீனத் தையற்காரர் செய்ததைத்தான் கூறமுடியும். பழைய கோட்டு ஒன்று அவரிடம் மாதிரிக்காகக் கொடுக்கப்பட்டது. அவர் அதிலிருந்ததைப் போன்றே கிழிசல்களையும், ஒட்டுத் தையல் துண்டுகளையும் கொண்ட, அப்பழையக் கோட்டை போன்றதொரு புதிய கோட்டைத் தைத்துப் பெருமிதத்துடன் கொடுத்தாராம்! இதன் விளைவு என்ன? இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டு இருநூறு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தீண்டப்படாதவர்கள் தீண்டப்படாதவர்களாகவே இருந்துவருகின்றனர். அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குப் பரிகாரம் காணப்படவில்லை. அவர்களது முன்னேற்றம் ஒவ்வொரு கட்டத்திலும் தடுக்கப்பட்டு வருகிறது. உண்மையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி எதையாவது சாதித்திருக்கிறதென்றால் அது, தீண்டப்படாதவர்களின் நிலையான விரோதியாக இருந்து வருவதும், தொன்றுதொட்டுத் தீண்டப்படாதவர்கள் அனுபவித்துவரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிதாமகராக இருந்து வருவதுமான பிராமணியத்தை வலுப்படுத்தி, அதற்குப் புத்துயிர் ஊட்டியதேயாகும்.

11. பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் அதிகாரத்தைக் கைவிட்டுப் போகப்போகிறார்கள் என்று அறிவிப்பதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். “ஆட்சியையும் அதிகாரத்தையும் நீங்கள் யார் கையில் கொடுத்துவிட்டுப் போகப் போகிறீர்கள்?” என்று ஒரு தீண்டப்படாதவர் கேட்டால், அது தவறல்ல. பிராமணியத்தின் ஆதரவாளர்களின் கையிலா? அவ்வாறாயின் இதன் பொருள் என்ன? வன்னெஞ்சக் கொடுங்கோலர்களின், தீண்டப்படாதவர்களைக் கொடூரமாக ஒடுக்குகின்றவர்களின் கைகளில் அதிகாரம் தரப்படுகிறது என்றுதான் இதற்குப் பொருள். இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒழித்துக் கட்டுவதானது பிற கட்சிகளின் உறுப்பினர்களிடையே எத்தகை மையான மனச்சாட்சி உறுத்தல்களையும் ஏற்படுத்தத் தேவையில்லை. ஆனால் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் நிலைப்பாடு என்ன? உரிமைகளற்றவர்களுக்காகவும் சமூகத்தின் அடித்தட்டிலுள்ளவர்களுக்காகவும் நிற்பதாகத் தொழிற்கட்சி உரிமை கொண்டாடுகிறது. அது தன் மனச்சாட்சிக்கு உண்மையாக நடந்துகொள்வதென்றால், இந்தியாவின் ஆறு கோடி1 தீண்டப்படாதவர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்பதிலும், அவர்களின் நிலையைப் பாதுகாப்பதற்குத் தேவையான யாவற்றையும் செய்யுமென்பதிலும், தமது மதத்தினாலும் தமது வாழ்க்கைத் தத்துவத்தினாலும் நிர்வாகம் செய்வதற்குத் தகுதியற்றவர்களாக உள்ள, உண்மையில் தீண்டப்படாதவர்களின் பகைவர்களாக உள்ளவர்கள் கைகளில் அதிகாரம் போய்ச் சேர்வதற்கு அது அனுமதிக்காது என்பதிலும் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. பட்டியல் சாதியினரின் தர்மகர்த்தாக்கள் என்று எப்போதும் தங்களைக் கூறிவரும் பிரிட்டிஷ்காரர்கள், அந்தப் பட்டியல் சாதியினரைப் புறக்கணித்ததற்குப் பிராயச்சித்தமான ஒரு நடவடிக்கையாக இது இருக்கும் என்பதைத் தவிர வேறல்ல.

12. இவ்வளவு விரிவாக இதைப்பற்றி நான் கூறுவதற்கு, தீண்டப்படாதவர்கள் எழுப்பிய சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் என்ற பிரச்சினை சம்பந்தமாக தூதுக் குழுவினர் சாதித்துவரும் மௌனத்தினால் எழுந்துள்ள கவலையே காரணமாகும். தீண்டப்படாதவர்களுக்கும் சிறுபான்மையோருக்கும் மன்னர்பிரான் அரசினால் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் சம்பந்தமாகத் தூதுக்குழு கடைப்பிடித்துவரும் கண்ணோட்டத்தினால் இந்தக் கவலை ஆழமாகியுள்ளது. இந்த உறுதிமொழிகள் குறித்த தூதுக்குழுவின் கண்ணோட்டம் பால்மர்ஸ்டன் பிரபுவை எனக்கு நினைவுப்படுத்துகிறது. “எங்களுக்கு நிரந்தரமான விரோதிகள் இல்லை; நிரந்தரமான நண்பர்களும் இல்லை. நிரந்தரமான நலன்கள் மட்டுமே உண்டு” என்று அவர் கூறியிருந்தார். இந்தப் பால்மர்ஸ்டனின் கோட்பாட்டைத் தனது வழிகாட்டியாகத் தூதுக்குழு ஏற்றிருக்கிறது என்ற எண்ணம் உருவாகுமேயானால், தீண்டப்படாதவர்களுக்கு இது எவ்வளவு பயங்கரமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். பிரிட்டனின் உரிமைகளற்ற வர்க்கங்களிலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள். எனவே இந்தியாவின் உரிமைகளற்ற ஆறு கோடி மக்களுக்கும் செய்யப்படவிருக்கும் உத்தேசத் துரோகத்தைத் தடுப்பதற்கு உங்களாலான எல்லாவற்றையும் நீங்கள் செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் அவர்களின் கோரிக்கையை உங்கள்முன் வைப்பதற்கு எண்ணினேன். தூதுக்குழுவில் உங்களைக் காட்டிலும் மேலான நண்பர் தங்களுக்கு இல்லை என்று தீண்டப்படாதவர்கள் கருதுகிறார்கள் என்று உங்களிடம் கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள்.”

தங்கள் உண்மையுள்ள,
பி.ஆர். அம்பேத்கர்.

பெறுநர்:
ரைட் ஹானரபிள் திரு.ஏ.வி. அலெக்சாண்டர்,
சி.எச்.எம்.பி., உறுப்பினர், அமைச்சரவைத் தூதுக்குழு,
வைஸ்ராய் மாளிகை,
புதுடில்லி.

கடிதம் 5

அன்புள்ள அம்பேத்கர்,

பத்திரிகைச் செய்திகள் மூலம் தங்கள் திருமணம் இன்று நடைபெற உள்ளதாக அறிந்தேன். என்னுடைய பேரன்பின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லறம் சிறக்க நல்வாழ்த்துகள். பாபு உயிரோடு இருந்திருந்தால் அவருடைய ஆசிகளைத் தந்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

அன்பின் வாழ்த்துகள்.

தங்கள் உண்மையுள்ள,
வல்லபாய் பட்டேல்.

புது தில்லி,
15 ஏப்ரல் 1948.

கடிதம் 6

அன்புள்ள சர்தார் பட்டேல்,

எங்கள் திருமண நிகழ்வுக்கு வாழ்த்துத் தெரிவித்த தங்களுக்கு நானும் என் மனைவியும் இணைந்து எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உண்மைதான். காந்திஜி உயிரோடு இருந்திருந்தால் ஆசி வழங்கியிருப்பார்.

நீங்கள் முழுவதும் குணமாகிவிட்டீர்கள் என நம்புகிறேன்.

17 ஏப்ரல் 1948                                                                                                                            

தங்கள் உண்மையுள்ள,
பி.ஆர். அம்பேத்கர்

கடிதம் 7

(27 செப்டம்பர் 1951 அன்று டாக்டர் அம்பேத்கர் இந்திய பிரதமர் நேருவிற்கு அனுப்பிய பதிவுத் தபால்.)

நீண்ட நாட்களாக அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும் எனச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். தற்போதைய நாடாளுமன்ற அமர்வு முடியும் முன் இந்துத் தொகுப்புச் சட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் என் விருப்பத்தைச் செயல்படுத்தாமல் இருந்துவந்தேன். அந்த மசோதா திருமணம், விவாகரத்துச் சம்பந்தமான மசோதாவாக உடைத்துத் தடுக்கப்பட்டது. எனினும் நமது உழைப்புக்குக் கிடைத்த குறைந்தபட்ச பலனாக இது இருக்கட்டும் என அதற்கும் நான் ஒத்துக்கொண்டேன். மசோதாவின் இந்தப் பகுதியும் இப்போது ஒழிக்கப்பட்டுவிட்டது. இனி தொடர்ந்து உங்கள் அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக இருப்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எனது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் என் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில் தடையாக இருக்கக்கூடியவை என் பெயரில் இன்னும் நிறைவேறாமல் இருக்கும் மசோதாக்களும் தீர்மானங்களும்தான். நான் இல்லாமலிருப்பது எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் உங்கள் அமைச்சரவையில் உள்ள எந்த அமைச்சரும் இந்த மசோதாக்களையும் தீர்மானங்களையும் வழிநடத்திச்செல்ல முடியும். இருப்பினும் என்னுடைய பதவிவிலகலுக்கும் முன்னமே இவற்றை நானே கவனிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை முடிக்கும்வரை நான் இருப்பதற்குத் தயாராக உள்ளேன். ஆனால் முடியும் வரை மட்டுமே. உங்களுக்கும் அமைச்சரவைக்கும் தீர்க்க வேண்டிய கடப்பாட்டை நான் மறுக்கவில்லை. அப்படியானால் என் பெயரில் உள்ள மசோதாக்களுக்கும் தீர்மானங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பி.ஆர். அம்பேத்கர்.

கடிதம் 8

அதே நாளில், செப்டம்பர் 27, 1951 திரு. நேரு டாக்டர் அம்பேத்கருக்கு எழுதிய கடிதம்: 

செப்டம்பர் 27 நாளிட்ட தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். இரண்டு நாட்களுக்கும் முன்பு உங்கள் பதவி விலகல் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் காணக்கிடைத்தது. அச்செய்தி எனக்கு மர்மமாகத் தெரிந்தது. இந்தக் கூட்டத் தொடரின் துவக்கத்தில் உங்கள் உடலநலக் குறைவைப்பற்றி என்னிடம் கூறியிருந்தீர்கள். நீங்கள் சீரான உடல்நிலையில் இல்லையென்பதை நன்கு அறிவேன்.

உங்கள் உடல் நலமின்மையையும் அமைச்சரவையிலிருந்து நீங்கள் பதவிவிலக விரும்புவதையும் கருத்தில் கொண்டு நீங்கள் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என நான் வற்புறுத்த முடியாது. அமைச்சரவையில் கடந்த வருடங்களில் நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றிய நேரத்தில் நமக்கிடையேயான தோழமையை நான் மெச்சுவதை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். சில நேரங்களில் நாம் கருத்துவேறுபாடுகள் கொண்டிருந்தோம். ஆனால் நீங்கள் ஆற்றியிருக்கும் சிறந்த பணிகளைப் பாராட்டுவதற்கு அவை தடையல்ல. நீங்கள் விலகுவது குறித்து உண்மையில் நான் வருந்துகிறேன்.

இந்தக் கூட்டத்தொடரில் இந்துத் தொகுப்புச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமைக்கும், திருமணம், விவாகரத்து என்ற அதன் பகுதியைக்கூட ஒத்திவைக்க நேர்ந்தமைக்கும் நீங்கள் அடைந்த பெருத்த ஏமாற்றத்தைப் புரிந்துகொள்கிறேன். அதை உருவாக்குவதில் உங்களுடைய கடின உழைப்பையும் அதில் நீங்கள் கொண்டிருந்த உணர்வுபூர்வமான ஒன்றுதலையும் நன்கு அறிவேன். அந்த மசோதாவின் பணிகளில் நான் நெருக்கமாகத் தொடர்புகொண்டிருக்காவிட்டாலும் அதன் அவசியத்தை நான் வெகுகாலமாகவே உணர்ந்து அது நிறைவேற்றப்படுவதில் ஆர்வமாக இருந்துள்ளேன். என்னால் இயன்ற அளவு முயன்றேன். ஆனால் நாடாளுமன்ற விதிகளும் சட்டங்களும் நமக்கு எதிராக இருந்தன. இந்தக் கூட்டத்தொடரில் நாம் செய்யக்கூடிய எதையும் செய்யமுடியாது எனத் தெளிவாகத் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் நான் இந்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை. ஏனெனில் நாம் விரும்பும் பலமுனை முன்னேற்றத்துடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது அது.

உங்களுடைய பதவிவிலகல் உடனடியாகச் செயலுக்கு வர வேண்டும் என்று கோரியுள்ளீர்கள். ஆனால் உங்கள் பெயரிலுள்ள மசோதாக்களும் தீர்மானங்களும் முடிவடையும் வரை தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியும் என்று நற்பண்போடு கூறியுள்ளீர்கள். இதுகுறித்து நான் கவனம் செலுத்துகிறேன். எப்பிடியிருப்பினும் இந்தக் கூட்டத்தொடர் அக்டோபர் 6ஆம் தேதிவரை மட்டுமே நடைபெறும். அதாவது இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குக் கொஞ்சம் அதிகம். இந்தச் சில நாட்களில் முன்னுரிமை அளிப்பதற்கான முகாந்திரங்கள் கிடையாது. முடிந்த அளவு உங்கள் பெயரிலுள்ள மசோதாக்களையும் தீர்மானங்களையும் விரைவில் முடிவு செய்ய முயற்சி செய்வோம். எனவே இந்தக் கூட்டத்தொடரின் இறுதிவரை நீங்கள் பதவியில் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.

நல்வாழ்த்துகளுடன்,
ஜவஹர்லால் நேரு.

கடிதம் 9

26, அலிப்பூர் சாலை,
தில்லி,
தேதி: 14 செப் 1956.

அன்புக்குரிய பண்டிட் ஜி,

நான் இப்போது எழுதி முடித்த ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலின் உள்ளடக்கப் பகுதியின் அச்சிடப்பட்ட இரண்டு கையேட்டு நகல்களை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். புத்தகம் அச்சகத்தில் உள்ளது. உள்ளடக்கத்தைப் பார்க்கையிலேயே இது எவ்வளவு கடுமையான உழைப்பைக் கோரும் பணி என்று உங்களுக்குப் புரியும். 1956 செப்டெம்பரில் புத்தகம் விற்பனைக்கு வந்துவிடும். ஐந்து வருடங்கள் இந்தப் புத்தகத்திற்காக உழைத்துள்ளேன். புத்தகத்தின் தரத்தை உள்ளடக்கக் கையேடு சொல்லும்.

அச்சிடுவதற்கு மிகவும் அதிகமாகக் கிட்டத்தட்ட ரூ. 20,000/- வரை செலவாகும். இது என்னுடைய சக்திக்கு மிஞ்சியது. எனவே எல்லாத் தரப்பினரிடமும் விளம்பரம் செய்துகொண்டிருக்கிறேன். புத்தரின் 2500 வருட நினைவைக் கொண்டாடும் இந்த வருடத்தில், அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஆய்வாளர்களுக்கும் எல்லா நூலகங்களுக்கும் வழங்கும் விதமாக இந்திய அரசு ஐந்நூறு பிரதிகளை வாங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பௌத்தத்தின்மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிவேன். எனவேதான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
பி.ஆர். அம்பேத்கர்.

ஸ்ரீ.ஜவஹர்லால் நேரு
இந்தியப் பிரதமர்
புது தில்லி

கடிதம் 10

எண்:2196-றிவிபி/56,
புதுதில்லி,
செப்டம்பர் 15, 1956.

அன்பான அம்பேத்கர்,

தங்கள் 14ஆம் தேதிக் கடிதத்திற்கு.

நீங்கள் கேட்டுக்கொண்டபடி அதிக அளவு உங்கள் புத்தகத்தின் பிரதிகளை வாங்க இயலுமா என்பது சந்தேகமே. புத்த ஜெயந்தியில் வெளியீடுகளுக்கென ஒரு தொகையை ஒதுக்கியிருந்தோம். அந்தத் தொகை தற்போது பூர்த்தியாகிவிட்டது. உண்மையில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகிவிட்டது. எங்களால் நிதி அளிக்கப்பட வேண்டிய பௌத்தம் குறித்த சில நூல்கள் இதனால் மறுக்கப்பட்டது. இருந்தும் தங்கள் கடிதத்தைப் புத்த ஜெயந்தி கமிட்டியின் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

புத்த ஜெயந்தியின்போது வெளிநாட்டினர் பலரும் வருவார்கள். தில்லியிலோ மற்றெங்கோ விற்பனைக்கு வைப்பீர்களென்றால் அதிக அளவில் புத்தகம் விற்பனையாக வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
ஜவஹர்லால் நேரு.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். எம்.பி
26, அலிப்பூர் சாலை
சிவில் லைன்ஸ்
தில்லி.

 

நூல் விவரம் 

அம்பேத்கர் கடிதங்கள் 
      தொகுப்பாசிரியர்: சுரேந்திர அஜ்நாத்      
பதிப்பாசிரியர்: அ. ஜெகநாதன்
தமிழில்: சிவசங்கர் எஸ்.ஜே
விலை: 495   
பதிப்பகம்: காலச்சுவடு வெளியீடு 
தொடர்புக்கு: 04652 278525, sales@kalachuvadu.com

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: சிவசங்கர் எஸ்.ஜே


3





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   2 years ago

நல்ல முயற்சி.... நல்வாழ்த்துகள்.... அம்பேத்கருடன் நேரடியாக கலப்பது போன்ற பிரமை ஏற்பட்டது.... இந்தியாவின் ஆகச் சிறந்த தலைவர் அம்பேத்கர்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   3 years ago

Simply superb.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

கச்சேரிகள்உள்கட்சி ஜனநாயகம்நேரு எதிர் படேல் விவாதம் மோசடியானதுமயிர்தான் பிரச்சனையா?தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்அப்புஏக்நாத் ஷிண்டேபஜாஜ் ஸ்கூட்டர்கள்சூரிய ஒளி மின்சாரம்நினைவுச் சின்னம்விலையில்லா மின்சாரம் அன்றும் இன்றும்நவீன தொழில்நுட்பம்பகல் கொள்ளைஜியோ முனையுசிசிசுயசார்புதிருநாவுக்கரசர் சமஸ் பேட்டிஆவின் நிறுவனம்கடவுளர்கள்வன்கொடுமையல்ல 2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுராகுல் காந்தி பேச்சுஅறம் எழுக!நிதி ஆயோக்the wireகச்சேரிபெல் பாட்டம்ராஜஸ்தானின் முன்னோடி தொழிலாளர் சட்டம்தயாரிப்புவிற்கன்ஸ்ரைன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!