ஆளுமைகள் 13 நிமிட வாசிப்பு

நாத்திகர் நேருவின் ஆன்மிகம்

ராமச்சந்திர குஹா
19 Nov 2021, 5:00 am
3

நேரு மத நம்பிக்கையில்லாத அரசியல் தலைவர். ஆனால், ஆழ்ந்த தார்மிக உணர்வுமிக்கவர். மதம் சாராத தார்மிக அறவுணர்வை வளர்த்துக்கொள்ள, அதிகாரத்தைக் கையாள வேண்டிய நெருக்கடியில் அவர் முயற்சிகளைச் செய்தார் என்று சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய முக்கியமான கட்டுரையில் விவாதித்திருக்கிறார் சுநீல் கில்னானி.

மதம் என்ற அமைப்பை நேரு சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார் என்றே அனைவரும் நம்புகின்றனர். தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக, காந்திஜிக்கு நேருஜி 1933இல் எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி தொடங்குகிறார் கில்னானி. “மதம் எனக்கு நன்கு பழக்கமான துறையல்ல. வயது ஏற ஏற, நிச்சயமாக அதிலிருந்து விலகியே வந்திருக்கிறேன்” என்று நேரு அதில் குறிப்பிட்டிருக்கிறார். பிறகு 1936இல் பிரசுரமான நேருவின் சுயசரிதையிலிருந்தும் மேற்கோள் காட்டுகிறார் கில்னானி. அதிலே, “அமைப்புரீதியாக நிறுவனப்படுத்தப்பட்ட மதம் என்றாலே, எனக்கு பயங்கரத்தைச் சந்திக்கும் உணர்வே ஏற்படுகிறது. கண்மூடித்தனமான நம்பிக்கை – மாற்றாருடைய கருத்துகளை ஏற்காமல் எதிர்வினையாற்றுவது, வறட்டுக் கொள்கை, பிற மதங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி, மூடநம்பிக்கை, சுரண்டல் ஆகியவற்றைத் தாங்கி நிற்பதே மதம் என்று கருதுகிறேன்” என்று நேரு குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான நாகரிகங்களிலும் கலாச்சாரங்களிலும் அற விழுமியங்களுக்கான மூல ஊற்றாக மதம் பார்க்கப்படுகிறது. நேரு அற விழுமியங்கள் கொண்டவர், ஆனால் அதை மதத்தின் அடிப்படையில் அவர் பெறவில்லை. நேருவின் மத நம்பிக்கையைப் பற்றி கில்னானி கூறுகிறார்: “பகுத்தறிவு, பகுத்தறியும் நடைமுறை ஆகிய இரண்டும் நம்முடைய அறம் சார்ந்த நினைவுகளை உருவாக்கவும் தொடரவும் நமக்கான பெரிய ஆதாரங்கள்” என்பதே நேருவின் நிலை.

நேரு வாசித்த மத நூல்கள்

சமீபத்தில் நான் இரண்டு தனித்துவமான கடிதங்களைக் கண்டுபிடித்தேன். அவை 1922 தொடக்கத்தில் காந்திக்கு நேரு எழுதியவை. இந்தக் கடிதங்கள் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், கடிதங்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை, நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களாலும் மேற்கோள் காட்டப்பட்டதில்லை.  சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பிரசுரித்த கடிதங்களைக் கொண்ட புத்தகத்திலும் இவை இடம்பெறவில்லை.

புதுதில்லியில் கிடைத்த நேரு தொடர்பான ஆவணங்களில் இல்லையென்பதால், அறிஞர்கள் பார்வைக்குப் படாமலேயே போயிருக்கலாம். ஆனால், அவை ஆமதாபாதில், காந்தியின் ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் இந்தக் கடிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காரணம், மதம் தொடர்பாக நேருவின் அணுகுமுறை என்ன என்ற நம்முடைய புரிதலை மேலும் சிக்கலாக்கும் தகவல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

காந்திக்கு இந்த இரு கடிதங்களுமே நேருவின் கையால் எழுதப்பட்டவை. இரண்டும் ஒரே முகவரியிலிருந்து – ஆக்ரா மாவட்ட சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டவை. முதல் கடிதத்தில், 9 ஜனவரி 1922 என்று தேதியிடப்பட்டுள்ளது. இதிலே, சிறையில் இருக்கும்போது தான் எதைப் படித்துக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார் – பெரும்பாலும் மதம் தொடர்பான புத்தகங்கள்.

நேரு எழுதுகிறார்: “குளோவர் எழுதிய வரலாற்றின் ஏசு என்ற புத்தகத்தைப் படித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால் பைபிளையும் அதிகம் வாசிக்க முடிந்தது. துளசிதாசரின் ராமாயணம், கபீர் தாசரின் பஜனைப் பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கிறேன். காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சியின்போது பகவத் கீதையிலிருந்து சுலோகங்களை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்கொள்கிறேன் - நினைவாற்றல் பெருகுவதற்காக. அன்றாடம் குறிப்பிட்ட நேரங்களில் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் அறிவுறுத்தியபடி இரவிலும் குறிப்பிட்ட நேரத்தில் படுத்துத் தூங்குகிறேன். அதேசமயம், குரு நானக் கூறிய, ‘சொர்க்கத்திலிருந்து அமுதம் பொழியும் நேரத்தில்’ உறக்கத்திலிருந்து விழித்துவிடுகிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

அதே கடிதத்தில் நேரு மேலும் குறிப்பிடுகிறார்: “ஞானிகளுடனே என்னுடைய நாள்கள் கடக்கின்றன. வெகு விரைவாக அனைத்து நூல்களையும் படித்து முடிக்க விரும்புகிறேன். பைபிள், ஞானிகளின் போதனை (கிறித்துவ ஞானிகளையும் சேர்த்து), ராமாயணம், மகாபாரதம் (பகவத் கீதையையும்தான்) படிக்கிறேன். மதச்சார்பற்ற இலக்கிய நூல்களும் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு இப்போது இரண்டாவது இடம்தான். பாடல்களையும் வெண்பாக்களையும் மனப்பாடம் செய்வது மிகப் பெரிய சாதனை. நம் நாட்டு ஆடவரும் பெண்டிரும் அனைத்து மத, மெய்யியல் புராணங்களையும் இலக்கியங்களையும் எவராலும் தகர்க்க முடியாத நினைவுக் கோட்டைகளிலேயே சேமித்து வைத்திருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

இரண்டாவது கடிதம், நான்கு வாரங்களுக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கிறது. 19 பிப்ரவரி 1922. “சமீபத்தில் அலிகட் என்ற ஊரிலிருந்து, குவாஜா சாஹேப் என்று மரியாதையுடன் அழைக்கப்படும் பெரியவர் சிறைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். அவரிடம் உருது கற்றுக்கொள்வது எனக்குக் கிடைத்த பேறு. மிகவும் கம்பீரமான நடை கொண்டது உருது மொழி. முஸல்மான்களின் அலங்காரமான ரசனைமிக்க வாழ்க்கைக்கு அது மிகச் சிறந்த அடையாளம்” என்று குறிப்பிட்டுள்ளார் நேரு.

உருது மொழியை மட்டும் பயிற்றுவிக்காமல், உருதுக் கவிதைகளிலிருந்து அன்றாடம் சில வரிகளையும், திருக்குரானிலிருந்து முக்கியமான பகுதிகளையும் நேருவுக்கு விளக்கினார் குவாஜா சாஹேப். "நானும் பதிலுக்கு அவருக்கு உபநிஷத்துகளிலிருந்து சில கருத்துகளையும் பகவத் கீதையிலிருந்து சிலவற்றையும் விளக்கினேன்" என்று எழுதியிருக்கிறார் நேரு.

உடனிருந்த இன்னொரு கைதி ராம் நரேஷ்ஜியுடன் சேர்ந்து ராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்யா காண்டம் ஆகியவற்றை வாசித்து முடித்திருக்கிறார். “எஞ்சிய பகுதிகளை இருபது நாள்களில முடித்துவிட விரும்புகிறேன்.  நைனியில் (சிறை) இருந்தபோது சுந்தர காண்டம் படித்து முடித்துவிட்டதால் இதர காண்டங்களைப் படிப்பது எளிதாக இருக்கிறது. தினந்தோறும் அதிகாலையில் ராமாயணத்தைப் பாராயணம் செய்வது உற்சாகமாக இருக்கிறது. அதிகாலைப் பொழுதைத் தேர்ந்தெடுத்து துளசிதாசரின் ராமாயணத்தைப் படிக்கும் ஒருவரால் துளசிதாசரின் அன்பெனும் பக்தியில் அப்படியே உருகவே தோன்றும். ராமாயணம் ஆன்மிக சுயவரலாறே தவிர ராமரின் காவிய வரலாறு அல்ல” என்று கடிதத்தில் பரவசப்பட்டிருக்கிறார் நேரு.

நேருவின் கடித வர்ணனைகளே கவித்துவ நயத்தோடு இருக்கிறது. சிறையில் இருந்தபோது அனைத்து மதப் புனித நூல்களையும் விருப்பத்தோடு படித்திருக்கிறார். அப்போது அவருக்கு மதச்சார்பற்ற இலக்கிய நூல்கள் இரண்டாம்பட்சமாகக்கூட இருந்திருக்கிறது. இந்திய ஆடவரும் மகளிரும் மத, மெய்யியல் கருத்துகளை நினைவென்ற தகர்க்க முடியாத கோட்டைகளில் பாதுகாத்து வைத்ததைப் புகழ்கிறார்.

ஏன் மதத்திடமிருந்து விலகினார்?

இந்தக் கடிதங்கள் எழுதப்பட்டபோது, நேரு அவருடைய முப்பதாவது வயதுகளின் ஆரம்பத்தில் இருந்திருக்கிறார். மிக தாமதமாகத்தான் அவர் மோகன் தாஸ் காந்தியின் மோக வலையில் சிக்கினார். காந்தியின் ஆன்மிகமும் பல்வேறு மதங்களிலிருந்தும் கோட்பாடுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவைதான். காந்தி அடிக்கடி மேற்கோள் காட்டிய மும்மத சிந்தனையாளர்கள் வைணவக் கவிஞர் நரசிங் மேத்தா, ஜைன மெய்யியலாளர் ராய்சந்த்பாய், புறக்கோட்பாடுகளை நேசித்த கிறிஸ்தவரான லியோ டால்ஸ்டாய். காந்தியின் ஆளுமையால் கவரப்பட்டதால்தான் சிறையில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் ஆகிய அனைத்து மதங்களின் நூல்களையும் பாரம்பரியங்களையும் ஆழ்ந்து படித்தார் நேரு.

இந்தக் கடிதங்களை எழுதிய பத்தாண்டுகளுக்குள் மதங்கள் மீதான காதலிலிருந்து விடுபட்டுவிட்டார் நேரு. ஏன்? ஒத்துழையாமை இயக்கத்தின்போது இந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் சேர்ந்து போராடினர். அடுத்த பத்தாண்டுகளில் இரு சமூகத்தாரும் விலகிச் செல்லத் தொடங்கினர், வட இந்தியாவில் அடுத்தடுத்து மதக் கலவரங்கள் மூண்டன. இந்திய அரசியலில் மதம் என்பது ஆபத்தானது, பிளவு சக்தியாகச் செயல்படுவது என்று நம்பியதால், அவற்றை தன்னுடைய விவாதங்களிலிருந்தே ஒதுக்கலானார் நேரு.

மேற்கத்திய சிந்தனையின் செல்வாக்கு

1930களில், மேற்கத்திய சோஷலிச சித்தாந்தம் நேருவை மிகவும் ஈர்த்தது. மதச்சார்பின்மை, அறிவியல் நோக்கு, அற விழுமியங்கள், மத நம்பிக்கைகளுக்கு எதிரான நிலை ஆகிய அம்சங்களால் சோஷலிசம் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றிருந்தது. 1921-22 காலத்தில் சிறையில் இருந்தபோது மதச்சார்பற்ற இலக்கியங்களுக்கு அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை, 1930களிலோ அவற்றைத்தான் அவர் முழுக்க முழுக்கப் படித்தார்.

1947இல் மூண்ட தேசப் பிரிவினை தொடர்பான வகுப்புக் கலவரங்களை அடுத்து, நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களை மிகவும் வெறுத்தார் நேரு. முஸ்லிம் லீகின் செயல்பாடுகளும், எதிர்ப்புறமிருந்த ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் தீவிர எதிர்நிலையும், மதம் சார்ந்த அடையாளங்களால் நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்து என்ற திட்டவட்டமான முடிவுக்கு வந்தார்.

1952 டிசம்பரில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் எழுதிய கடிதத்தில் இதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மாநிலவியம், மதவியம், சாதியம் உள்ளிட்ட அனைத்து பிளவுப் போக்குகளையும் பிரிவினை எண்ணங்களையும் வளரவிடக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

1940கள் 1950களில் - நாட்டு மக்களிடையே அறிவியல் நோக்கு வளர வேண்டும் என்று விரும்பினார். தேச வளர்ச்சியில் மதத்துக்கு இடமே கிடையாது என்று கருதினார். இந்தியா எப்போதுமே, இந்துக்களால் நிரம்பிய பாகிஸ்தானாகிவிடக் கூடாது என்று கவலைப்பட்டார்.

வயது ஏற ஏற முதிர்ச்சி காரணமாக, அரசியலிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட வேண்டியதுதான் மதம் என்றாலும் எது உண்மை, எதில் அமைதி என்ற தனி மனிதத் தேடலுக்கு, மத நம்பிக்கையின் பங்களிப்பும் அவசியம் என்பதை உணர்ந்தார்.

ஆனந்தமயி டனான சந்திப்பு

தன்னுடைய வாழ்நாளின் கடைசி கட்டத்தில், நேரு அடிக்கடி என்னுடைய சொந்த ஊரான டேராடூனுக்கு வந்திருக்கிறார். அங்கு தெரியும் இமயமலைக் காட்சிகளை ரசிப்பதற்காகவும் டேராடூன் – ராஜ்பூர் இடையில் வசித்த அவருடைய ஆன்மிக குருவைச் சந்திப்பதற்காகவும் வந்திருக்கிறார். அவருடைய பெயர் ஆனந்தமயி மா. பிறப்பில் வங்காளி இந்து. ஆனால், அவர் அனைத்து மதங்களையும் சமமாகக் கருதும் பரந்த நோக்கம் கொண்டவர். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், இந்துக்கள் என்று அனைவரிடமும் பேதமில்லாமல் பழகியவர்.

ஆனந்தமயி மாதாவை நேரு வந்து பார்ப்பது பொதுமக்களுக்கு அதிகம் தெரியாமல் ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டது. ஆனால் நான் சிறுவனாக இருந்தபோது பெரியவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் எனக்கு அறிமுகமானவருமான பி.ஆர். நந்தா பிற்காலத்தில் இதை என்னிடம் உறுதிப்படுத்தினார். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் ஆனந்த மயியுடன் நேரு அடிக்கடி பேசியிருக்கிறார்.

இளைஞராக இருந்தபோது புனிதர்களைப் பற்றிய புத்தகங்களைப் படித்த நேரு, வயதான காலத்தில் அவர்களில் ஒருவருடன் உரையாடி அமைதியை நாடியிருக்கிறார்.

இந்து மதத்தின் பிரபலமான மடாதிபதிகளை நாடாமல், யாருக்கும் அதிகம் அறிமுகமாகாமல் இருந்த ஆன்மிகரை அவர் சந்தித்தது கவனிக்கத்தக்கது. சங்கராச்சாரியார்களைப் பார்க்க அவர் நேரம் கேட்கவில்லை, ஆனந்த மயியுடன் உரையாட நிறைய நேரம் எடுத்துக்கொண்டார். எந்த ஒரு தனி மதமோ, மத நூலோ மட்டும் கடவுளை அடைவதற்கான வழியைக் காட்டிவிடப் போதாது என்று தன்னுடைய வழிகாட்டி காந்தியைப் போலவே நேருவும் நம்பினார்.

நேருவும் ஆனந்தமயியும் டேராடூனில் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியாது. அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள் என்ற தகவல் நேருவின் மத நம்பிக்கை குறித்து நமக்கிருந்த புரிதலை மேலும் சிக்கலாக்கிவிட்டது. நேருவின் நெருங்கிய சீடர்களும், அவரைக் கட்டோடு பிடிக்காத எதிரிகளும் கூறியதைப்போல அவர் தீவிரமான நாத்திகர் அல்லர்.

இருபதுகளிலும் முப்பதுகளிலும் பகவத் கீதை, துளசிதாசரின் ராமாயணம், கிறிஸ்தவ நூல்கள் ஆகியவற்றை வாசித்து உருகியிருக்கிறார் நேரு. தன்னுடைய பொது வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த 1940களிலும் 1950களிலும் உலகத்தைப் புரிந்துகொள்ள பகுத்தறிவால் மட்டுமே முடியும் என்று நம்பினார். அதற்கும் பிறகு தன்னுடைய எழுபதாவது வயதில், உடல் நலம் குன்றத் தொடங்கியபோது மறுபடியும் மதம் அளிக்கக்கூடிய நிம்மதியை நாடியிருக்கிறார் நேரு!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

தமிழில்: வ.ரங்காசாரி

1






பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

ஆத்திகத்தையோ அல்லது நாத்திகத்தையோ முழு வரையறை செய்வது கடினம். தனிப்பட்ட முறையில் அவரவர் வசதிக்கேற்ற வகையில் அவர்களே வகைப்படுத்திக் கொள்ளலாம். நல்ல குணம் மட்டுமே தேவையானது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   3 years ago

நேரு இல்லாமல் ஹிந்து மதத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்திருக்க முதியாது. படேல் இறந்துவிட, மிச்சமுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்களான பந்த், பிரசாத், முதலியோர் எந்த விதமான மாற்றங்களையும் எதிர்த்தனர். சங்கராச்சாரிகளை பற்றி கேட்கவே வேண்டாம். காஞ்சி காந்தியை சந்தித்து ஆலய பிரவேசத்திற்கு எதிர்த்து வாதாடியது எல்லோருக்கும் தெரிந்ததே. வேத வழி அந்தணர்களும் எதிர்த்தனர். நேருவாளல் மட்டும் தான் இவற்றை எல்லாம் கடந்து, சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்ற முடிந்தது. இதற்கு மட்டுமே இந்து சமுதாயமும், பிரத்தயேகமாக பெண்கள், நேருவிற்கு கடன் பட்டிருக்கிறது. நேரு ஒரு தீவர மதத்தை பின்பற்றுவாரானால் இது மாதிரி செய்யமுடியாது. ஒரு அஞ்ஞானவாதி (agnostic) மட்டுமே இதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

அற்புதமான கட்டுரை. குஹாவின் தேடலும், ஆய்வும் வணக்கத்தக்கது.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

ஏளனம்பூர்வாஞ்சல்பிளாக் லைவ்ஸ் மேட்டர்சம்ஸ்கிருதமயம்ஆவணப்படுத்துவதில் அலட்சியம்ஆழி செந்தில்நாதன் கட்டுரைகாவல் நிலையம்சமஸ் நயன்தாரா குஹாகணினிஜெர்மனிஅருஞ்சொல் யோகேந்திர யாதவ்பெரும் மதிப்புபதிப்புத் துறைரோ எதிர் வேட்வினைச்சொல்என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?புறநகர்ப் பகுதிகல்கத்தாஅந்நியன்இந்திய ஜனநாயகம்ஐரோப்பிய நாடுகள்நெடில்பாஜக வெல்ல இன்னொரு காரணம்பி.டி.டி.ஆசாரி கட்டுரைசிறப்புச் சட்டம்தேச நலன்ஆர்எஸ்எஸ் இயக்கம்ஹிஜாப் விவாதம் அருஞ்சொல்சுழல் பந்து வீச்சாளர்கடல் வாணிபக் கப்பல்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!