கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?

சமஸ் | Samas
28 Mar 2024, 5:00 am
1

ந்தியாவின் மேற்கில், மும்பையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை முடிக்கும் நாளில், கிழக்கில் கொல்கத்தாவில் நான் இருந்தேன். பிரதமர் மோடி அன்றைய தினத்தில் தெற்கில் கோவையில் பாஜக பேரணியில் பங்கேற்றிருந்தார். அதே மார்ச் 16 அன்றுதான் இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

அயோத்தியில் ஜனவரி 22 அன்று நடந்த ராமர் கோயில் திறப்பு விழா அன்றே தன்னுடைய அதிகாரபூர்வமற்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மோடி தொடங்கிவிட்டிருந்தார் என்று சொல்லலாம். ராமர் கோயில் திறப்பு நடந்த வேகத்தில் முன்கூட்டி தேர்தலை பாஜக கொண்டுவரலாம் என்ற எண்ணம்  பலரிடம் இருந்தது. அப்படி நடக்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான 28 கட்சிகளின் 'இந்தியா கூட்டணி'யை வெளியே பரிகசித்தாலும், அதன் பலத்தை மோடி அறிந்திருந்தார். எப்படி கூட்டி கழித்தாலும் பாஜக 200 தொகுதிகளைக் கடப்பது சவால் என்பதை எல்லோரைவிடவும் அவர் உணர்ந்திருந்தார்.

பாஜகவின் கோட்டையான இந்தி மாநிலங்களிலேயேகூட பிஹாரில் சென்ற தேர்தலில் மோடியோடு கை கோர்த்திருந்த நிதீஷ் அப்போது எதிரே நின்றிருந்தார். ஜார்கண்டில் முதல்வர் சோரனுக்கு செல்வாக்கு கூடியிருந்தது. அவரும் காங்கிரஸ் கூட்டணியின் அங்கம். இந்த இரு மாநிலங்களிலும் உள்ள 54 தொகுதிகளில் 51 தொகுதிகளை பாஜக கூட்டணி 2019 தேர்தலில் வென்றிருந்தது. மாறாக, இந்த முறை 15 தொகுதிகளை இங்கே பாஜக கூட்டணி வெல்வதே சிரமம் என்று அப்போதைய கணிப்புகள் கூறின. 

2019 தேர்தலில் பாஜக மொத்தமாக 303 இடங்களை வென்றது. ஆட்சி அமைக்க தேவையான 272 எனும் இடங்களைக் காட்டிலும் இது 31 இடங்களே அதிகம். அதாவது, பிஹார், ஜார்கண்டிலேயே இந்தப் பெரும்பான்மை எண்ணிக்கை சரிந்துவிடும் சூழல் இருந்தது.

கர்நாடகத்தில் 26/28, வங்கத்தில் 18/42, அஸாமில் 9/14 என்று இந்தி பேசாத சில மாநிலங்களில் அதுவரை இல்லாத வெற்றியை பாஜக கூட்டணி 2019இல் குவித்திருந்தது. இங்கெல்லாமும் சூழல் மாறியிருந்தது. சொல்லப்போனால், சிவசேனை உள்பட பாஜவின் நெருங்கிய கூட்டாளிகள் முழுக்க அதைக் கைவிட்டு எதிரே நின்றனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

காங்கிரஸுக்குப் பெரிய அறுவடை சாத்தியம் இல்லாவிட்டாலும், நாடு முழுக்க மாநிலக் கட்சிகள் இம்முறை பாஜகவுக்கு வலுவாக சவால் விடும் இடத்தில் இருந்தன.

காங்கிரஸ் தலைமை முன்பிருந்தது மூன்று பணிகள். கூட்டணியின் முகம், கூட்டணியின் முழக்கம், கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இவற்றை சுமுகமாக முடித்து மக்களை நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வளவுதான். இதைக் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பவார், மம்தா, நிதிஷ், ஸ்டாலின், உத்தவ், அகிலேஷ், தேஜஸ்வி முதல் கூட்டத்திலிருந்தே வலியுறுத்திவந்தனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் குரல்கள்

சமஸ் | Samas 15 Mar 2024

பிஹார் உடைவு

பிஹாரில் 2005 முதல் ஆட்சியில் இருப்பதால், மக்களிடம் நிதிஷ் மீது ஒரு சலிப்பு உருவாகியிருக்கிறது. லாலுவின் மகன் தேஜஸ்வி இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கான தலைவராக உருவெடுத்துவருகிறார். எழுபதுகளில் உள்ள நிதிஷ் உடல்நலம் சார்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். அடுத்தும் முதல்வர் வாய்ப்பை மக்கள் கொடுக்கும் சாத்தியம் குறைவு என்பதால், தேசிய அரசியல் நோக்கி அவர் நகர முற்பட்டார். அடுத்த முதல்வர் என்று தன்னுடைய கூட்டணியில் இருந்த தேஜஸ்வியை வெளிப்படையாகவே அறிவித்தார்.

பிரதமர் பதவி கனவு சாத்தியமாகாது என்றாலும், தேவ கௌடா - குஜ்ரால் காலத்து ஐக்கிய முன்னணியில் சந்திரபாபு நாயுடுவும், வாஜ்பாய் காலத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸும் செல்வாக்கோடு இருந்ததுபோல் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக,  கௌரவமாக இருக்கலாம் என்று நிதிஷ் எதிர்பார்த்தார். காங்கிரஸ் கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில் அவர் நடத்தியது பிஹாரைத் தாண்டி இந்தி பிராந்தியம் முழுக்க கவனத்தை ஈர்த்தது.

காங்கிரஸ் வழக்கம்போல எல்லாவற்றையும் அலட்சியம் செய்தது. எந்தப் பெரிய முன்னெடுப்புகளும் இல்லாமல் 'இந்தியா கூட்டணி' கூட்டங்கள் கூடிக் கலைந்தன. இதன் இடையே முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலமாக நிதிஷுக்குத் தொடர்ந்து தூது அனுப்பியபடி இருந்தார் மோடி. பிஹாரில் ஆளுநராக இருந்த காலத்தில் நிதிஷோடு நல்ல உறவு கோவிந்துக்கு இருந்தது. 'இந்தியா கூட்டணி'யின் ஒருங்கிணைப்பாளர் பதவிகூட தனக்கு கிடைக்காது என்பதை உணர்ந்தபோது, தான் அவமானப்படுத்தபட்டதாக உணர்ந்தார் நிதிஷ். பாஜக கூட்டணிக்கு அவர் மாறினார். அங்கே அவருக்கு எல்லாமும் சுமுகமாக நடந்தன.

இதற்குப் பிறகும், கூட்டணியின் சுமையைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராக மக்களிடம் சென்றார் தேஜஸ்வி. பிஹாரில் அவர் மேற்கொண்ட பயணத்துக்கு நல்ல கூட்டம். தொகுதிப் பங்கீட்டை இப்போதேனும் முடியுங்கள் என்று காங்கிரஸ் தலைமைக்குப் பல முறை செய்தி அனுப்பிவிட்டது ராஷ்டிரிய ஜனதா தளம். பிஹாரில் இன்னமும் காங்கிரஸ் கூட்டணி தன் தொகுதி பகிர்வை முடிக்கவில்லை. பாஜக வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

வங்க முட்டல்

பிஹார் மாற்றங்களுக்கு சில நாட்கள் முன்னரே வங்கத்தில் காங்கிரஸோடு உறவில்லை என்று பேசியிருந்தார் மம்தா. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதிர்ரஞ்சனுக்கும் மம்தாவுக்கும் இடையிலான முட்டலும் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இழுத்தடித்ததுமே காரணம்.

முழு நேரமும் கட்சியை ஒரு தேர்தல் இயந்திரம் போன்று இயக்கிவரும் மோடி - ஷா கால பாஜகவைக் களத்தில் எதிர்கொள்ளும் தீவிரத்தை காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை என்பதை மம்தா காட்டமாகவே வெளிப்படுத்தினார்.

ராகுல்தான் பிரச்சினைகளின் மையம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தென்னகம்: உறுதியான போராட்டம்

சமஸ் | Samas 19 Mar 2024

எப்போது எங்கே இருக்க வேண்டும்?

சென்ற ஆண்டில் தமிழகத்தில் தொடங்கி காஷ்மீரில் அவர் முடித்த தெற்கு - வடக்கு இடையிலான பாரத் ஜோடா யாத்திரையை எல்லோருமே வரவேற்றார்கள். 136 நாட்களில் 12 மாநிலங்கள், 2 ஒன்றிய பிரதேசங்களின் வழி 4081 கிமீ நடைப்பயணமாக அப்போது சென்றார் ராகுல். கூட்டணித் தலைவர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கூட்டணியைத் தாண்டி முன்னாள் ராணுவத் தலைவர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், நடிகர்கள் இப்படி தீபக் கபூர், ராம்தாஸ், ரகுராம் ராஜன், பெருமாள் முருகன், கமல்ஹாசன், பூஜா பட், ஸ்வரா பாஸ்கர் என்று பல தரப்பினரும் ராகுலோடு அப்போது கை கோத்தார்கள்.

இந்த ஆண்டு ஜனவரியில் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை மணிப்புரில் தொடங்கி மஹாராஷ்டிரத்தில் கிழக்கு - மேற்காக ராகுல் ஆரம்பிக்கிறார் என்று ராகுல் அறிவித்தபோதே பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்றிருந்த சூழல் அது. கூட்டணி சார்ந்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸுக்கு இருந்தது. 

இப்போது 6,700 கிமீ தொலைவை 15 மாநிலங்களின் வழி வேன் மூலம் இரு மாதங்களில் கடக்கும் வகையில் ராகுலுடைய பயணத் திட்டம் இருந்தது. அதாவது, இயல்பாக வாக்குபதிவு ஏப்ரலில் இருக்குமாறு  அறிவிக்கப்பட்டாலும்கூட தேர்தல் பிரச்சார நாட்கள் என்று அரசு அறிவிக்கும் நாட்கள் மட்டுமே ராகுலிடம் இருக்கும். ராகுலோடு சேர்ந்து காங்கிரஸின் முக்கியமான தலைவர்கள் கவனமும் பயணத்திலேயே குவிந்திருக்கும் என்பதால், இந்த இரு மாதங்களில் காங்கிரஸை முக்கிய முடிவுகளுக்கு அணுகுவது சிரமமாக இருக்கும் என்பதை சூசமாகக் கூட்டணித் தலைவர்கக் தெரிவித்தார்கள்.

சரியான நேரங்களில் தவறான முடிவுகளை எடுப்பதில் ராகுல் வல்லவர். அதில் முழு பிடிவாதத்தையும் அவர் காட்டுவார். இப்போதும் அப்படித்தான். எப்போதெல்லாம் மக்களிடம் நாடு முழுக்கப் பயணப்பட வேண்டுமோ, அப்போதெல்லாம் டெல்லியில் இருப்பார். எப்போது டெல்லியில் இருக்க வேண்டுமோ இப்போது ஊர்களில் மக்கள் இடையே பயணப்படலானார்.

இந்த இரு மாதங்களையும் மோடி - ஷா தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வங்கத்தில் காங்கிரஸிடமிருந்து பிரிந்து மம்தா தனித்துச் சென்றார். பிஹாரில் நிதிஷ் பாஜக கூட்டணியில் இணைந்தார். மகாராஷ்டிராத்தில் காங்கிரஸின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்வர் அசோக் சவான் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பிரதான கூட்டணிக் கட்சியான சிவசேனையின் தலைவர் உத்தவ் காங்கிரஸ் இன்னும் உடன்பாட்டை முடிக்காத காட்டத்தில் இருக்கிறார். இதனூடாக டெல்லியில் மட்டுமே கூட்டணி - பஞ்சாபில் தனித்துப் போட்டி என்று அறிவித்தார் கெஜ்ரிவால். ராகுலால் இவர்களோடு பேச முடிந்திருந்தால் முடிவுகள் வேறாக இருந்திருக்கும். ராகுலால் எதையும் தடுக்க முடியவில்லை.

தமிழ்நாட்டிலும், உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸுக்கான தொகுதிப் பகிர்வை முடித்திருந்தாலும் ஸ்டாலின், அகிலேஷ் இருவருமே மகிழ்ச்சியாக இல்லை; வெற்றி வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் பிடிவாதமாகக் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற்றிருக்கிறது காங்கிரஸ். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி

சமஸ் | Samas 23 Mar 2024

தோல்வியிலிருந்து கற்றது என்ன?

ந்தியா கூட்டணியில் 20+ கட்சிகள் இருக்கின்றன என்றாலும், ஐந்து பெரிய மாநிலங்களில்தான் கூட்டணிக் கட்சிகளைப் பெரிதும் நம்பியுள்ளது காங்கிரஸ். இந்த மாநிலங்களில் மட்டுமே 250 தொகுதிகள் இருக்கின்றன: புதுவையை உள்ளடக்கிய தமிழ்நாடு (40), பிஹார் (40), வங்கம் (42), மஹாராஷ்டிரம் (48), உத்தர பிரதேசம் (80).

இந்த மாநிலங்கள் அனைத்திலுமே கூட்டணிக் கட்சிகள் பாஜகவைத் தீவிரமாக எதிர்ப்பவை என்பதால், நம்பகமான கூட்டாளிகள் என்றும் சொல்லலாம். காங்கிரஸ் இந்த மாநிலங்கள் எதிலுமே தனித்து நிற்கும் வலுவுடன் இன்று இல்லை. தவிர, 2019 தேர்தலில் மொத்தமாகவே இந்த ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 14 இடங்களை மட்டுமே வென்றது.

இந்த மாநிலங்களில் சுமுகமாகப் பகிர்வைக் காலத்தே முடித்திருந்தால் நாடு முழுமைக்கும் இந்த மாநிலங்கள் கொடுக்கும் நம்பிக்கை காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும் மனபலம் தந்திருக்கும். ஆனால், இந்த மாநிலங்கள் ஒன்றில்கூட தேர்தல் அறிவிக்கப்படும் வரை காங்கிரஸ் நிற்கும் தொகுதிகள் இறுதிசெய்யப்படவில்லை. 

இடைப்பட்ட இதே இரு மாத காலகட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் தனக்கு கிடைக்க வாய்ப்புள்ள ஒரு தொகுதியைக்கூட விட்டுவிடக் கூடாது எனும் கணக்கோடு காற்றைத் தனதாக்கி விட்டிருக்கிறது பாஜக.

திரிபுராவில் ஒரு தொகுதியை உத்தரவாதப்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சியான பிரத்யோத் தேவ் வர்மாவுடனும் பேசும் அளவுக்கு  சென்றார் அமித் ஷா.

2019 தேர்தலில் 1.5 லட்சம் கிமீ பிரச்சாரப் பயணம் சென்ற மோடி இந்த முறை தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ஸ்ரீநகர் முதல் குமரி வரை ஒரு பெரும் பயணத்தை முடித்துவிட்டிருக்கிறார். போட்டியிடவுள்ள தொகுதிகளில் சரிபாதிக்கும் மேற்பட்ட இடங்களுக்கான வேட்பாளர்களையும் இதற்குள் பாஜக அறிவித்துவிட்டது. இப்போது களம் தனக்கு சாதகமாக இருப்பதாகப் பேச பாஜக வலுவான தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

பேசும் மதிப்பீடுகளுக்கும் நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு தனிப்பட்ட வாழ்க்கையைப் போன்றே அரசியலிலும் முக்கியமானது. 2014, 2019 இரு தேர்தல்களிலும் பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸின் - குறிப்பாக ராகுலின் விட்டேத்தியான செயல்பாடு முக்கியமான ஒரு காரணம். இம்முறை கண்ணுக்கு நேரே காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி தெரிந்தும் அதே அலட்சியத்தைத் தொடர்கிறது.

ராகுலும், காங்கிரஸும் முந்தைய தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகம்!

- ‘குமுதம்’, மார்ச், 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


6






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Raja   5 months ago

2014 தேர்தலில் ராகுல் அல்ல கடவுளே வந்து இருந்தாலும் ஒன்றும் ஆகி இருக்காது. அந்த அளவு எதிர்ப்பு மனநிலை நிலவியது. இதில் ராகுலை குற்றம்சாட்டி என்ன பயன்? 2019 தேர்தலில் முடிந்தவரை விட்டு கொடுத்தும் இன்று ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள் அன்று வரவில்லை. மாறாக மோடி என்ற மனிதரின் தனிப்பெரும் செல்வாக்கு, முக்கியமான மாநிலங்களில் வென்றது என பல காரணிகள். தொகுதி பங்கீட்டில் ஸ்டாலினும் தேஜஸ்வியும் மகிழ்ச்சி அடையவில்லை என்று சொல்வதை எப்படி புரிந்து கொள்வது? தொகுதி பங்கீட்டில் சொந்த கட்சி மக்களையே திருப்திப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் கடந்த தடவை கொடுத்த தொகுதிகளில் ஒன்றை தவிர எதிலும் காங்கிரஸ் தோற்கவில்லையே! திமுகவால் கூட்டணி இல்லாமல் முக்கியமாக காங்கிரஸ் இல்லாமல் வெற்றி பெற முடியுமா? சும்மா எதற்கு எடுத்தாலும் ராகுலை குறை சொல்ல கூடாது. வங்கத்தில் மம்தா நாகரிகம் அற்ற முறையில் எடுத்து எறிந்து பேசியும் ராகுல் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை. நிதிஷ்குமார் போன்றவர்களை வைத்து இருப்பதை விட ஆபத்து வேறு ஒன்றுமில்லை. பாரதிய ஜனதாவுக்கு நிதிஷை விட்டால் அங்கு வேறு வழியில்லை. காங்கிரஸுக்கு அப்படி இல்லையே. தேர்தல் பத்திரங்கள் வழியாக மிகப்பெரிய ஊழலை அதிகாரப்பூர்வப்படுத்திய பாரதிய ஜனதாவை பற்றி பேச ஊடகங்களுக்கு  துணிவு இல்லை. இத்தனை பணபலத்துடன் பிரச்சார பலத்துடன் இருக்கும் பாரதிய ஜனதாவை முக்கியமாக மோடி என்ற மிக பெரிய மையத்தை ராகுல் தன்னால் இயன்றவரையில் கார்கே என்ற மூத்த தலைவரின் பின்னின்று போராடி கொண்டுதான் இருக்கிறார். தமிழ்நாட்டில் மக்கள் ராகுலுக்காக தான் திமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்க போகின்றனரே தவிர ஸ்டாலினுக்கு அல்ல. அந்த அளவு மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள், சமஸ். 

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ஜனநாயக மையவாதம்பள்ளிகள்சமஸ் கி.ரா.விட்டாச்சியின் பரவசம்இரு உலகங்கள்வெற்றியின் சூத்திரம்தூயன்இளம் பிரதமர்ப்ளூ சிட்டிசெரிமானமின்மைகுடல் அழற்சிப் புண்கள்குதிகால் வலி பாமாகடல் வளப் பெருக்கம்படிப்புக்குப் பின் அரசியல்விஷ்ணுபுரம் விருதுவாழ்வெனும் கொடுமைவறுமைக் கோடுநியாயமாக நடக்காது 2024 தேர்தல்!நவ நாஜிகள்ஸ்டாலினின் வெற்றிஓய்வூதியக் காப்பீடுsamas aruncholபாலியல் சீண்டல்கள்மங்கை வரிசைச் சிற்பங்கள்ஏஐஎம்ஐஎம்ஒல்லியாக இருப்பது ஏன்?பிமாருகால்சியம் கற்கள்ஐரோப்பிய சினிமா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!