கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, இந்தியாவின் குரல்கள் 4 நிமிட வாசிப்பு

மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி

சமஸ் | Samas
23 Mar 2024, 5:00 am
1

லகின் மிகப் பெரிய தேர்தலாகக் கருதப்படுகிறது 2024 பொதுத் தேர்தல். நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக  தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார் ஆசிரியர் சமஸ். 'இந்தியாவின் குரல்' தொடரானது அச்சில் 'குமுதம் ரிப்போர்ட்டர்' இதழிலும் இணையத்தில் 'அருஞ்சொல்' இதழிலும் வெளியாகிறது. இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தக் கட்டுரையையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். 

போபால் முன்னேறிவிட்டால் இந்தியா முழுமையும் முன்னேறிவிடும்!

ராம்தாஸ் கண்களில் விரக்தி வெளிப்பட சிரித்தார். “மத்திய இந்தியாவில் எந்த மாற்றமும் உருவாவது அவ்வளவு சுலபம் இல்லை. சமூக அமைப்பு அப்படி” என்றார் அவர். கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார். உயர்கல்விக்கு குடும்பச் சூழல் அனுமதிக்கவில்லை. கிடைத்த வேலைகளைச் செய்தபடி அடுத்த கட்ட படிப்புக்கு முயற்சிக்கிறார்.

மன்னராட்சியும் சாதிய ஆதிக்கமும்

ந்தியாவைத் தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு இப்படி பிரிப்பது போன்று ‘மத்தி’ என்று தனியாகப் பிரித்துப் பார்க்க முடியுமா என்று பலருக்கு ஆச்சரியம் இருக்கலாம். அப்படி பிரித்துப் பார்ப்பது முக்கியம். இன்றைய சூழலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் இரு மாநிலங்களையும் கொண்டதாக நாம் பகுத்துக்கொள்ளும் ‘மத்திய இந்தியா’வானது, பண்பாட்டு அடிப்படையில் ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், ஒடிஷா என்று அதை ஒட்டியுள்ள ஆறு மாநிலங்களின் பிராந்தியங்களோடும் ஆழமான பிணைப்பைக் கொண்டது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சுதந்திர இந்தியாவில் 565 சமஸ்தானங்கள் இணைந்தன என்றால், அவற்றில் நாம் பேசும் மத்திய இந்தியாவில் மட்டும் 70 சமஸ்தானங்கள் இருந்தன. அதைச் சுற்றியுள்ள மாநிலங்களிலும் பல இடங்களில் 1947 வரை மன்னராட்சி நீடித்தது; சுதந்திரத்துக்குப் பிறகு இந்த ராஜ்ஜியங்களில் எல்லாம் முன்னுரிமை பெற்றிருந்த முற்பட்ட சாதிகளுடைய செல்வாக்கு ஜனநாயகத்திலும் தொடர்ந்தது. 

குவாலியர் அரசக் குடும்பக் கதையை எடுத்துக்கொள்வோம். சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்ட சமஸ்தானங்களில் பெரிய, செல்வம் மிக்க சமஸ்தானங்களில் ஒன்று இது. அதன் கடைசி மன்னர் ஜீவாஜிராவ் சிந்தியா வாரிசுகள் இன்னமும் அரசியலில் கோலோச்சுகிறார்கள். மனைவி விஜய ராஜே சிந்தியா தனித்து நின்றபோதும் வென்றார்; காங்கிரஸில் நின்றபோதும் வென்றார்; சுதந்திரா கட்சியில் நின்றபோதும் வென்றார்; பாஜகவில் நின்றபோதும் வென்றார்.

பாஜகவின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர் விஜய ராஜே சிந்தியா. எப்போதுமே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஊர் ‘குவாலியர் ராஜ மாதா’ என்றது. மகன் மாதவராவ் சிந்தியா காங்கிரஸின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர்; மகள் வசுந்தரா பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவர்; ராஜஸ்தான் மாநிலத்தில் இருமுறை முதல்வராக இருந்தவர். இருவருடைய மகன்களும் பாஜகவில் இளந்தலைவர்கள்.

உத்தர பிரதேசம், பிஹாரில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுத்த மண்டல் அரசியலுக்குப் பின்னரும்கூட மத்திய இந்தியாவில் பெரிய மாற்றங்கள் இல்லை. முற்பட்ட சமூகமான ராஜபுத்திரப் பின்னணி கொண்ட திக்விஜய் சிங் கைகளிலேயே மாநில காங்கிரஸ் இருந்தது. பத்தாண்டுகள் (1993-2003) முதல்வராக அவர் கோலோச்சிய காலகட்டத்தில், மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளில் பாதிக்கும் மேல் முற்பட்ட சாதியினராக இருந்தார்கள் என்கிறார்கள்.

காங்கிரஸ் நிலையே இப்படி என்றால், ‘பிராமண – பனியா கட்சி’ என்றழைக்கப்பட்ட பாஜகவின் நிலையை விவரிக்க வேண்டியது இல்லை. இத்தனைக்கும் மத்திய இந்தியாவின் மக்கள்தொகையில் 83% பேர் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடிகள். 

நாங்கள் இதற்குப் பழகிவிட்டிருக்கிறோம் என்று சொன்னார் ராம்தாஸ். அரசாட்சியின் எச்சம், நிலவுடைமைத்தனம், சாதிய ஆதிக்கம் எல்லாமும் இணைந்து இங்கே சமூகத்தை இருக்கி வைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். 

வேளாண்மையைத்தான் பெரும் பகுதி மக்கள் நம்பியிருக்கிறார்கள். பிராந்தியத்தில் எங்கே சென்றாலும் வறுமை ஒட்டிக்கொண்டிருக்கிறது. பழங்குடிகள் நிலைமை இன்னும் மோசம். 

இந்தி மாநிலங்கள் என்றாலும்கூட உத்தர பிரதேசம், பிஹாருடன் இந்த பிராந்தியத்தை ஒப்பிட முடியாது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் இப்படி மாநிலக் கட்சிகள் எதுவும் இங்கே முளைக்காததும் இதற்கு ஒரு காரணம். 

மக்களிடம் ஓர் அழுத்தம் உருவாகிவந்ததை பாஜக உணர்ந்தது. 2003இல் பாஜக ஆட்சி வந்த பிறகு அது முதல்வராகத் தேர்ந்தெடுத்த உமா பாரதி, பாபு லால் கௌர், சிவராஜ் சிங் சௌகான் மூவரும் பிற்படுத்தப்பட்டோர். 2000இல் மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டது. அங்கே மூவரில் ஒருவர் பழங்குடி. ஆனாலும், 2023இல்தான் ஒரு பழங்குடி முதல்வர் ஆகியிருக்கிறார். “இதெல்லாமும்கூட புரட்டிப்போடும் மாற்றங்களை உண்டாக்கவில்லை. இன்னமும் சிந்தியாவை ராஜா என்றுதான் அழைக்க வேண்டும்.”

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் குரல்கள்

சமஸ் | Samas 15 Mar 2024

நிர்வாக அலட்சியம்

பரந்து விரிந்த பிராந்தியம் இது. இந்தியாவிலேயே பெரிய மாநிலமாக மத்திய பிரதேசம்தான் இருந்தது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குக்கு மேல் வனம். கனிம வளங்களும் அதிகம். கேடுகெட்ட நிர்வாகம்தான் முதன்மைப் பிரச்சினை. எவ்வளவு அலட்சியமாக இதை நம் அரசுகள் நிர்வகித்தன என்பதற்கு இன்று மாவோயிஸ்ட்டுகளுடன் அடையாளம் காணப்படும் பஸ்தர் பிராந்தியத்தை ஓர் உதாரணமாகக் கூறலாம். வரலாற்றுரீதியாகவே தீவிரமான படையெடுப்புகளுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளான பிராந்தியம் இது. 

இப்போது பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் பஸ்தர், இந்திய அரசால் ஒருகாலத்தில் ஒரே மாவட்டமாக நிர்வகிக்கப்பட்டபோது அதன் பரப்பளவு 39,114 ச.கி.மீ. அதாவது, கேரளத்தைக் காட்டிலும் – நாடுகளோடு ஒப்பிட வேண்டும் என்றால் பெல்ஜியம், இஸ்ரேலைக் காட்டிலும் – பெரியதாக இருந்தது. பழங்குடி மக்கள் அங்கே பத்துக் குடும்பங்கள், இங்கே இருபது குடும்பங்கள் என்று சிதறியிருப்பார்கள். என்ன லட்சணத்தில் நிர்வாகம் நடந்திருக்கும் என்று பாருங்கள். கொள்ளையர்கள், துப்பாக்கிச் சூடுகளோடு சம்பல் பிராந்தியம் அடையாளப்படுத்தப்படவும் மாவோயிஸ்ட்டுகளுடன் பஸ்தர் அடையாளப்படுத்தப்படவும் முக்கியமான காரணம் வறுமை.

பாஜக மிகத் தீவிரமான அடித்தளக் கட்டமைப்பைக் கொண்டுள்ள பிராந்தியம்; சுதந்திரத்துக்கு முன்பே இங்கே இந்துத்துவத்தின் வீச்சு அதிகம். இன்று மஹாராஷ்டிர எல்லைக்குள் உள்ள - ஆர்எஸ்எஸ் தொடக்கப் புள்ளியான - நாக்பூருக்கும் மத்திய பிரதேச தலைநகரான போபாலுக்கும் இடையே 352 கி.மீ. தொலைவுதான். அதாவது, மஹாராஷ்டிர தலைநகர் மும்பைக்கு நாக்பூரிலிருந்து செல்ல இதுபோல இரண்டு மடங்கு தூரம் பயணிக்க வேண்டும். தவிர, வெவ்வேறு மன்னராட்சிகளில் இந்தப் பிராந்தியத்தின் ஓர் அங்கமாக நாக்பூரும் நாக்பூரின் ஓர் அங்கமாகவும் இருந்தன. 

தலையெடுத்த சௌகான், சிங்

மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங் நடத்தியது மோசமான ஆட்சி. அதேபோல சத்தீஸ்கரில் அஜித் ஜோகி. பாஜக இதைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தது.

பாஜக சமூக நலத் திட்ட அரசியலை அறிமுகப்படுத்திக்கொண்ட பிராந்தியம் என்று இதைச் சொல்லலாம். உத்தர பிரதேசம், குஜராத் போல அல்லாமல் இங்கே நலத்திட்ட உதவிகளைக் கொடுக்கும் முதல்வர்களாக சிவராஜ் சௌகானும், ரமண் சிங்கும் செயல்பட்டார்கள். இருவரும் உண்டாக்கிய அரசியல் ஸ்திரத்தன்மை இரு மாநிலங்களிலுமே சின்ன முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது. இருவருமே பெண்கள் ஆதரவைப் பெற்றார்கள்.

தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால் மக்களிடம் உருவான சலிப்பு எதிர்வரும் தேர்தலில் தனக்கு அதிருப்தியாகிவிடக் கூடாது என்று கணக்கிட்ட பாஜக தலைமை சௌகான், சிங் இருவரையுமே  ஓரங்கட்டிவிட்டது. தன்னுடைய ஆட்சி நடந்த சென்ற 20 ஆண்டுகளில் இரு மாநிலங்களிலுமே கட்சியின்  கட்டமைப்பை பாஜக மேலும் வலிமையாக்கிக்கொண்டிருக்கிறது. அடர் வனங்களில் வசிக்கும் பழங்குடிகள் மத்தியிலும்கூட சங்க பரிவாரங்கள் பல்வேறு அமைப்புகளின் வழியே சென்றடைந்திருக்கின்றன.

ஆட்சி மாறினாலும்கூட இங்கே இந்துத்துவ வீச்சை மாற்றிவிடுவது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை இடையில் காங்கிரஸ் அரசுகள் வந்தபோது நிரூபித்தன. பாஜகவின் ராமர் கோயிலுக்குப் போட்டியாக மத்திய பிரதேச முதல்வரான கமல்நாத் அனுமனுக்குக் கோயில் கட்டினார்; சத்தீஸ்கர் முதல்வரான புபேஷ் பெகல் யசோதைக்குக் கோயில் கட்டினார். ராகுல் காந்தியைக் கோயில் கோயிலாகத் தேர்தல் சமயத்தில் கூட்டிச் சென்றார்கள். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தென்னகம்: உறுதியான போராட்டம்

சமஸ் | Samas 19 Mar 2024

காங்கிரஸின் நம்பிக்கை பெஹல்

காங்கிரஸில் இங்கு பெஹல் ஒரு வலுவான தலைவராக உருவெடுத்திருக்கிறார். சத்தீஸ்கரில் சமூக நீதியையும் எளிய மக்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் உரக்கப் பேசுபவராக அவர் இருக்கிறார். பெஹலுடைய ஆட்சி நிர்வாகம் மேம்பட்ட ஒன்றாக இருந்தது. பழங்குடிகளின் பகுதிகளில் அரசு உருவாக்கிய வாராந்திர சந்தை அமைப்பும், இப்படி சந்தை நடக்கும் இடங்களையே மையமாக ஆக்கி அவர்களுக்கான மருத்துவ சேவையைத் தேடிச் சென்று வழங்கும் வகையில் உருவாக்கிய மருத்துவத் திட்டமும் அவருடைய ஆட்சி எளியோரிடத்தில் காட்டிய அக்கறைக்கான வெளிப்பாடு.  

சுமார் 43% அளவுக்கு பிற்படுத்தப்பட்டோர் வாழும் சத்தீஸ்கரில் 14% இடஒதுக்கீடே அவர்களுக்கு இருக்கிறது. இதைத் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்கினார் பெஹல். பிற்படுத்தப்பட்டோர் பெஹலுக்குக் கீழ் அணிதிரள இது வழிவகுத்தது. ஏனென்றால், முன்பு பாஜக முகமாக இருந்த ரமண் சிங் முற்பட்ட தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

பாஜக இதற்குப் பின் ஆட்டத்தை மாற்றியது. பிற்படுத்தப்பட்டவர்களில் குர்மி, சாஹு இரண்டு சாதிகளும் இங்கே பெரியவை. மாநில மக்கள்தொகையில் 35% அளவுக்கு இந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் பெஹல்.  சாஹு சமூகத்தைச் சேர்ந்த அருண் சாஹுவை மாநிலத் தலைவராக்கி பெஹலை வீழ்த்தியது பாஜக. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் உருவான 'மஹாதேவ் செயலி ஊழல்' அவருடைய ஆட்சியை பாஜக காலி செய்ய காரணமானது. என்றாலும், சித்தந்த அடிப்படை வலு கொண்ட ஒரு தலைவராகப் பார்க்கப்படும் பெஹல் பிராந்தியத்தின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக உருவெடுக்கிறார்.

மோடிக்குத் தனித்த செல்வாக்கு

இரு மாநிலங்களுமே மோடிக்குத் தனித்த செல்வாக்கு இருக்கிறது. 2014, 2019 இரு மக்களவைத் தேர்தல்களிலும் 37/40 தொகுதிகளை பாஜகவுக்கு அளித்தது இந்த பிராந்தியம். 2018 சட்டமன்றத் தேர்தலில் இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் வென்றும்கூட 2019இல் பாஜக பெரும் வெற்றியைக் குவித்ததற்கு மோடிக்கு இங்குள்ள செல்வாக்குதான் காரணம். “நான் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஓட்டு போட்டேன்; 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குத்தான் ஓட்டு போடுவேன்” என்கிறார் டீக்கடை நடத்தும் இளைஞரான விஷ்வநாத். “மோடி உலக நாடுகளில் இந்தியாவுக்கு மதிப்பை உருவாக்கியிருக்கிறார்” என்கிறார். அடுத்து வரும் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டால், இங்கே தொழிற்சாலைகளையும் வேலைகளையும் உருவாக்க வேண்டும் என்கிறார். ராகுல் காந்தி தொடர்பாக கருத்து கேட்டால், அவருக்கு விவரம் போதாது என்கிறார். அதேசமயம், புபேஷ் பெஹல் ஒரு நல்ல தலைவர் என்கிறார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஜான்சி ராணி, “இந்த முறை காங்கிரஸும் ஜெயிக்கும்” என்கிறார். தனக்கு ராகுல் காந்தியைப் பிடிக்கும் என்று கூறும் அவர், “ராகுல் காந்தி ஜெயித்தால்தான் அரசு வேலைகள் அதிகரித்து, மக்கள் நிலை மேம்படும்” என்கிறார். தள்ளுவண்டி ஓட்டும் ரஷீத்திடம் பேசினேன். மிகுந்த தயக்கத்துடன், “எதாவது பிரச்சினை இல்லாமல் இருந்தாலே நாடு நல்லாயிருக்கும்” என்கிறார்.

பாஜக இம்முறையும் இந்த பிராந்தியத்தில் பெரும் வெற்றி பெறும் என்றாலும், நிச்சயம் சென்ற முறை போன்று அப்படியே இங்கே எல்லா இடங்களையும் பாஜக அள்ள முடியாது என்கிறார்கள். பாஜகவுக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் ஒரு காரணம். குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் சௌகான் ஓரங்கட்டப்பட்டது புகைச்சலை உண்டாக்கியுள்ளது. 

முன்னாள் முதல்வரும் சட்டமன்ற உறுப்பினருமான சௌகான் இந்த மக்களவைத் தேர்தலில் விதிஷா தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார். "மோடிக்கு இணையான அந்தஸ்தில் இருந்தவர் சௌகான். தேசிய அரசியலில் சௌகானுக்கு விருப்பம் இல்லை. அதேசமயம், அவருக்கு ஓய்வு பெறும் வயதும் இல்லை. 75 நெருங்கும் மோடிக்கே ஆசை விடாதபோது, 65 வயதான சௌகான் எப்படி ஆட்டத்தை விடுவார்? பொறுத்திருந்து பாருங்கள்!" என்கிறார்கள்.

ஆங்காங்கே ராமர் படம் போட்ட காவிக் கொடிகள் வீட்டில் பறக்கின்றன. சில வீடுகளில் காங்கிரஸ் கொடியும் காவிக் கொடியும் இணைந்து பறக்கின்றன!

- ‘குமுதம் ரிப்போர்ட்டர்’, மார்ச், 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

1

உடல் உழைப்புபொருளாதாரச் சுதந்திரம்கடுமையான தலைவர்மோடி அரசுஜூலியன் அசாஞ்சேவாக்காளர்தென் இந்தியாபூரி ஜெகந்நாதர்இ.பி.உன்னிகாந்தி கொலை வழக்குமக்களவைத் தேர்தல் முடிவு: 10 அம்சங்கள்திரிபுராபிறகுஇந்திய எல்லைகாதில் இரைச்சல் ஏற்படுவது ஏன்?மக்களின் மனவெளிமதச்சார்பற்ற கொள்கைசாரு பேட்டிதேசிய ஜனநாயகக் கூட்டணிஇந்து அடையாளம்பருக்கைக் கண்நான்காவது படலம்அருஞ்சொல் யோகேந்திர யாதவ்குழந்தைகளுக்குத் தடுப்பாற்றல் குறைந்திருப்பதுஎழுத்துச் செயல்பாடுராஜீவ் மீதான வெறுப்புதி டான்அரசியலதிகாரமே வலிய ஆயுதம் - திருமாவளவன்வர்கீஸ் குரியன்சண்முகநாதன் பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!