கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, இந்தியாவின் குரல்கள் 4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் குரல்கள்

சமஸ் | Samas
15 Mar 2024, 5:00 am
1

லகின் எல்லாப் போக்குகளையும் அணைத்தபடி, மூன்று புறங்களிலிருந்தும் ஆவேசத்துடன் தன் காலடியைத் தழுவும் முக்கடலில் வேரூன்றியபடி நீல வானுக்கு முகம் கொடுத்து நிற்கிறாள் குமரியம்மன். அவளுடைய அடிநிலத்திலிருந்துதான் இந்த நாடு ஆரம்பிக்கிறது. தமிழ் முனை என்றும் அதைச் சொல்லலாம், இந்திய முகனை என்றும் அதைச் சொல்லலாம். 

தேசத்தைப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த வழி பயணங்கள் என்றால், ஜனநாயகத்தைப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த தருணம், தேர்தல் காலத்தில் மக்களுடன் நடத்தப்படும் உரையாடல்கள். ஏறத்தாழ 32.87 லட்சம் சதுர கிமீக்கு விரிந்திருக்கும் 28 மாநிலங்கள், 8 ஒன்றியப் பிரதேசங்கள்; 7,935 நகரங்கள், 6,64,369 சொச்ச கிராமங்களில் வாழும் 142 கோடி மக்களுடைய அரசியல் அபிலாஷையைப் பிரதிபலிக்கும் இந்திய மக்களவைத் தேர்தல் களம் எப்போதையும்விட பல தரப்பு வேட்கைகளால் ததும்புகிறது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தமிழர்கள் வரலாற்றில் தொன்மைக்குப் பேர் போன குமரி, பிரமிப்பூட்டும் தொலையுணர்வைப் புதைத்து வைத்துள்ள நகரம். டெல்லியை இங்கிருந்து நாடி பிடிக்க முடியும். தமிழகத்தின் பெரும் சக்திகளான திமுக, அதிமுகவோடு நாடு தழுவிய பெரும் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்டுகளும் பலத்தோடு செயல்படும் களம். அரசியல் பண்பாடு சார்ந்து எல்லா கருத்தியல்களும் முட்டி மோதி சீறும் கொந்தளிப்பான தளம். குமரியின் கடல் நீரைக் கையில் ஏந்தி வணங்கினேன்.

கன்னியாகுமரி 

இந்திய நாடாளுமன்றத்தை நோக்கி நரேந்திர மோடி அடியெடுத்து வைத்த 2014 பொதுத் தேர்தல் சமயத்தில் இப்படி நாடு தழுவிய ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். குமரியிலிருந்தே பயணத்தை ஆரம்பித்தேன். “நாடு ஒரு புதிய போக்குக்குத் தயாராகிட்டிருக்கு, பார்த்தியளா?” என்று அப்போது கேட்டார், கொடிக்கால் ஷேக் அப்துல்லா. நூற்றாண்டை நோக்கி நடைபோடும் மூத்த அரசியல் செயல்பாட்டளாரான அவருக்கு சாமானிய மக்களுடைய உளப்போக்கு நன்கு தெரியும்.

பிறப்பினால் ஒரு தலித்; தன்னுடைய வாழ்வின் மத்திய வயதில் முஸ்லிமாக மாறியவர். சாதிரீதியிலான, மதரீதியிலான ஒடுக்குமுறைகளைத் தாங்கியவர். ஏனையோரைவிட ஒடுக்கப்படும் சமூகங்கள் இந்த ஜனநாயகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறவர். நெடிய போராட்ட அனுபவங்கள் கொண்டவர். தமிழ்நாடு எல்லைப் போராட்ட தியாகி. ஐம்பதாண்டு கள அரசியல் அனுபவம் உறைந்தவர். கருணாநிதி முதல் கன்ஷிராம் வரை பல தளங்களின் தலைவர்களோடும் தனிப்பட்ட உறவு பாரட்டியவர். “நாம கொஞ்சம் கொஞ்சமா அதிபர் முறைக்குத் தயாராகிட்டிருக்கோம், அப்படித்தானே!” என்கிறார் இப்போது!

பத்தாண்டுகளில் நாட்டில் நிறைய மாறிவிட்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்திய அரசின் குவிமையமாக  பிரதமர் ஆகியிருக்கிறார். ஒன்றிய அரசு தன்னை முழு அளவிலான மத்திய அரசாக உருமாறுகிறது. மாநிலங்களின் அதிகாரம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையை காட்டிலும் வலிமை மிக்கதாக பிரதமர் அலுவலகம் ஆகியுள்ளது. பாஜக மத்திய அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் அனைவரின் அதிகாரங்களும் மோடி - ஷா இருக்கைகளின் காலடியில் கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கான செயல்பாட்டு சுதந்திர எல்லை குறுக்கப்பட்டுள்ளது. கட்சிகள் உடைக்கப்படுகின்றன; செல்வாக்கான தலைவர்கள் வளைக்கப்படுகின்றனர். பாஜகவோடு மல்லுக்கு நிற்க முற்படும் கட்சிகள் அரசின் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. 

அரசுத் துறைகள் தங்களுடைய சுயாதீனத்தையும் நடுநிலைத்தன்மையையும் மேலும் பல மடங்கு இழந்து நிற்கின்றன. அரசு அதிகாரிகளின் மாண்பு ஆவியாகிறது. அரசின் விசாரணை அமைப்புகள் ஆளுங்கட்சியின் ஏவல் பிரிவுகள் போன்று ஆக்கப்பட்டுள்ளன. 



சமூகங்களிடையே பிளவுகள் மேலும் கூர்மையாக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் - குறிப்பாக முஸ்லிம்கள் - அதிகாரம் அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர். சாதியடுக்கில் மேலுள்ள சமூகங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும்  செல்வாக்கும் முடிவெடுக்கும் இடங்களில் அதிகரிக்க அதிகரிக்க, கீழேயுள்ள சமூகங்களைச் சேர்ந்தவர்களின் உரிமைகளும் நலன்களும் மேலும் மேலும் வீழ்கின்றன. 



நாட்டின் பொருளாதாரத்தில் குறுங்குழு முதலாளித்துவத்தின் ஆதிக்கம் மேலோங்குகிறது. பத்தாண்டுகளில் நடந்த அதானி, அம்பானி உள்ளிட்ட பெருநிறுவனங்களின் வளர்ச்சிக் கதையும் ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொது நிறுவனங்களின் வீழ்ச்சிக் கதையும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. பெரும்பான்மைப் பணிகள் எந்த உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தாததால், கூலிகளாக ஆக்கப்பட்டுள்ளது தொழிலாளர் சமூகம்.

அரசை நோக்கி கேள்வியெழுப்புவோர் எவர் மீதும் தேச விரோத முத்திரை குத்தப்படுகிறது. பத்தாண்டுகளில் அதிகம் நிலைக்குலைவுள்ளாகியிருக்கிறது ஜனநாயகம்.

ஆட்சியதிகாரத்தில் ஏராளமான மாற்றங்கள். அரசியல் களத்தில் பத்தாண்டுகளில் எனக்கு மாறாததாகத் தெரிவது, அதன் மையமாக வீற்றிருக்கும் நரேந்திர மோடி. 2014இல் நான் பயணம் புறப்படுகையில் இதுதான் கேள்வியாக இருந்தது, “மோடி வேண்டுமா, வேண்டாமா?” 

மோடியேதான் அதை உருவாக்கினார்; கூட்டத்தைப் பார்த்து அவர் கேட்டார், “மாற்றம் வேண்டுமா, வேண்டுமா? மாற்றம் வரக்கூடாது என்பவர்கள்தான் மோடி வரக்கூடாது என்கிறார்கள்!” பத்தாண்டுகளுக்குப் பிறகும் அதே விஷயம்தான் மையமாக இருக்கிறது. வார்த்தைகளை மட்டும் பாஜக மாற்றியிருக்கிறது, “மீண்டும் மோடி, வேண்டும் மோடி!”

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடிக்கு சரியான போட்டி கார்கே

சமஸ் | Samas 17 Jan 2024

பத்தாண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தது என்றாலும், மோடியை மையமிட்டே தேர்தல் களம் அமைந்திருந்தது. அன்று பாஜகவுக்கு எதிராக காங்கிரஸும் பெரும்பான்மை பிரதான கட்சிகள் தனித்து நின்றன. இன்று பாஜகவுக்கு எதிராகப் பெரும்பான்மையோர் இணைந்து நிற்கின்றனர்.

இந்தப் பத்தாண்டுகளில் 2014 மக்களவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல் தவிர, 60 சட்டமன்றத் தேர்தல்கள், பல ஆயிரம் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நாடு எதிர்கொண்டிருக்கிறது. மக்களுடைய உளப்போக்கு பல வகைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஆயினும் வியூகத்தில் பெரிய மாற்றம் ஏதும் வெளிப்படவில்லை. 

மோடியிடம் கனவு இருக்கிறது. இந்து ராஷ்டிர கனவு. தன் கனவை நனவாக்கும் தெளிவான செயல்திட்டம் இருக்கிறது. அசாதாரண உழைப்பு இருக்கிறது, அவரோடு இணைந்து ஓட அர்ப்பணிப்புள்ள கூட்டம் இருக்கிறது. இதையெல்லாம் மனதில் கொண்டவராகத்தான் கொடிக்கால் ஷேக் அப்துல்லா “இந்த முறையும் மோடிக்கு எதிரே நிறுத்தப்படுற பிரதமர் முகம் யாருன்னு அறிவிக்காமலே தேர்தலை எதிர்க்கட்சிகள் சந்திக்கிறாங்களே, இது எடுபடுமா?”

சன்னமான தொனியில் ஆழமான கருத்துகளை முன்வைப்பதில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா வல்லவர். பல கோடி மக்களின் மனதையும் தீர்க்கமாக அறிந்தது போன்று பேசும் அபத்தத்தை அவர் ஒருபோதும் செய்ய மாட்டார். பிரதமர் முகம் என்பது ஒரு வலுவான செய்தி. கூட்டணி, கட்சி எல்லாவற்றையும் தாண்டி தனிமனிதர்கள் முக்கியமான தாக்கத்தைச் செலுத்துகிறார்கள். காந்தி கட்சி என்பதுதானே காங்கிரஸுக்கு அடையாளம்!

 

கொடிக்கால் ஷேக் அப்துல்லா

மோடியை எவ்வளவு நம்பிக்கையோடு பாஜக கூட்டணி முன்னிறுத்துகிறதோ அப்படி எதிரேயுள்ள காங்கிரஸ் கூட்டணியும் ஒருவரையும் நிறுத்தும்போதுதான் மக்களிடம் கூட்டணியின் நம்பிக்கையை எடுத்துச் செல்ல முடியும் என்பதையே கொடிக்கால் ஷேக் அப்துல்லா தொட்டுக்காட்டினார். “இந்திய வரலாற்றில் இதுவரைக்கும் கிடைக்காத பெருவெற்றி; நேருவுக்கும், இந்திராவுக்கும்கூட கிடைக்காதது ராஜீவுக்கு 1984 தேர்தலிலே கிடைச்சுது; 414 இடங்கள்ல காங்கிரஸ் ஜெயிச்சுது; 42.86% ஓட்டு வாங்கினாங்க. அடுத்து வந்த 1989 தேர்தல்ல ராஜீவ் வீழ்த்தப்பட்டார். எப்படி? வி.பி.சிங் தன் முகத்தை முன்னே கொண்டுவந்தார். இன்னைக்கு மோடி வலிய சக்தி. பாஜக பாதி பலம்னா, மோடி பாதி பலம். மோடிகிட்ட பெரிய கனவு இருக்கு. அப்படி மோடி ஒரு கனவை முன்வைக்கிறார்னா, எதிரே நிற்கிறவரும் ஒரு பெரிய கனவை முன்வைக்கணும். மோடியை எதிர்க்கிறதே மக்களுக்கு கனவா இருக்க முடியாது, புரியணும்லா?”

ஜனநாயகம் வலுவாக நிற்க எதிர்க்கட்சிகள் வலுவாக நிற்பதும் அவசியம். மோடியின் இரு அரசிலும் எதிர்க்கட்சித் தலைவர் எனும் இடத்துக்குக்கூட ஒருவர் முன்னகர முடியாமல் போனதற்கு, இந்தப் பின்வாங்கலும் ஸ்தம்பிப்பும் முக்கியமான காரணம். பெருமூச்சு விட்டார். “அரசியலுக்குப் புது ரத்தம் வேண்டிக் கிடக்கு! அடியும் தேவைதான். அப்பம்தான் வலுவா எழுந்து நிற்க முடியும். காங்கிரஸ் இப்பம் எழுந்திருக்கும், இல்லாட்டி இன்னொன்ணு!”

மக்களுடைய இரு தரப்புக் குரல்களையும் அவர் ஒருசேர பிரதிபலிப்பது போன்று எனக்குத் தோன்றியது. குமரியிலிருந்து புறப்படுகிறேன்; மாநிலங்கள் வாயிலாக தெற்கு, மேற்கு, மத்தி, கிழக்கு, வடகிழக்கு, வடக்கு என்று நாட்டின் ஆறு முனைகளின் மக்களுடைய குரலையும் இந்தப் பயணத்தின் மூலம் கேட்கவிருக்கிறோம்.  

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சமூகக் குழுக்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், எண்ணிலடங்கா சிந்தனைகள் என்று குறுக்கும் நெடுக்குமாக இழைகள் செல்லும் இந்திய சமூகங்களை அரசியல்ரீதியாக இணைப்பதில் மாநிலங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் அந்தந்தச் சமூகங்களின் போக்குக்கு ஏற்ப முன்னகர்கின்றன.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?

சமஸ் | Samas 19 Dec 2023

பன்மைத்துவத்தைச் சிதைக்கும் இந்துத்துவம், கூட்டாட்சியை முறிக்கும் மூர்க்கம், மோடியின் யதேச்சதிகாரம்… இவையே பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா கூட்டணி’யால் பேசப்படும் பிரச்சினைகள்; கூட்டாட்சியை வலுப்படுத்தும் மக்கள் நல அரசு என்பதே அவர்களுடைய முழக்கம். எதிர்க்கட்சிகள் மீது குடும்ப அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்குகிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. 

இந்த 2024 தேர்தலில் வென்றால், உலக அரங்கில் தனித்துவமாக நிற்கும் வகையில் நாட்டின் போக்கில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முடிவுகளைச் செயலாக்கவுள்ளதாக பாஜக கூட்டணி கூறுகிறது. ஜனநாயகத்தையே தலைகீழாக்கும் முடிவுகளாக அவை இருக்கப்போகின்றன என்று எச்சரிக்கிறது காங்கிரஸ் கூட்டணி. விஸ்தரிக்கப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், வளர்ந்திருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 2026இல் செய்யப்படலாம் என்று கூறப்படும் தொகுதிகள் மறுவரையறை, அடுத்து கொண்டுவரப்படலாம் என்று கருதப்படும் ஒரே நாடு - ஒரே தேர்தல் நடைமுறை இவை மூன்றையும் இணைத்துப் பார்ப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். 

மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அடுத்த இரு மாதங்களுக்கு மாநிலங்களினூடாக வழி மக்களின் குரலை நாம் கேட்கலாம்!

(பயணம் தொடரும்…)

- ‘குமுதம் ரிப்போர்ட்டர்’, மார்ச், 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்
2024 பாஜக வெற்றி நிச்சயமில்லை
பாஜக வெல்ல இன்னொரு காரணம்
பாஜக எப்படி வெல்கிறது? முதல்வர்களைக் கவனியுங்கள்!
மோடிக்கு சரியான போட்டி கார்கே
மோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்
இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?
தேர்தல்களை பாஜக எப்படி வெல்கிறது? மேலும் ஒரு காரணம்!
ஏன் கூடாது ஒரே தேர்தல்?
ஒரே சமயத்தில் தேர்தல்: மோசமான முடிவு
ஏன் கூடாது ஒரே நாடு ஒரே தேர்தல்?
உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியா

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

1





அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

எழுத்து என்றொரு வைத்தியம்மாதவ் காட்கில்நாவலர் நெடுஞ்செழியன்ஹண்டே சமஸ் பேட்டிசித்திரை புத்தாண்டுஆன்மீகம்தமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன?அப்பாவின் சைக்கிள்சாதிரீதியிலான அவமதிப்புவிஷ்ணுபுரம் விருதுமூக்கு ஒழுகுதல்அயோத்தி பிரதேசம்சிறுநீரகம்சமந்தாஒலிப்பியல்மாணவர்கள்உதவாதக் கதைகள்சோஷலிஸ்டுகள்9 நீதிபதிகளின் ராஜதந்திரம்பகுத்தறிவியம்சீரழிவை நோக்கிச் செல்லும் இந்தியக் கட்சிகள்!வினையூக்கிவேளாங்கண்ணிமீண்டும் கறுப்பு நாள்ஐ.ஏ.எஸ்.இந்தியா டுடேஜெயலலிதா – தமிழிசைகருப்புச் சட்டைசிவில் உரிமைகளுக்கான மையம்கலகக் குரல்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!