கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!

ப.சிதம்பரம்
29 Apr 2024, 5:00 am
0

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை இருந்திராத நல்லெண்ணம் - ஒத்துழைப்பு பொங்கி வழிய, காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கையைத் திருத்தி எழுதி - மக்களிடையே பிரபலப்படுத்திவருகிறார்; அதில் தன்னுடைய ஆழ்மன அரசியல் ஆசைகளையும் சிந்தனைகளையும் சேர்த்து, அரசியல் விவாதங்களுக்கு செறிவூட்டிக்கொண்டுவருகிறார். கடந்த வார அரசியல் நிகழ்வுகள் குறித்து அதிகபட்சம் என்னால் அப்படித்தான் விமர்சிக்க முடியும்.

இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக, எவராலும் புரிந்துகொள்ள முடியாத ஒரு நிகழ்வு அரங்கேறி முடிந்தது. அரசியல் அப்பாவியான பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயாரித்த பாஜகவின் தேர்தல் அறிக்கை, ஏப்ரல் 14இல் வெளியான பிறகு பிரதமர் மோடிக்கு அது உற்சாகத்தையோ மகிழ்ச்சியையோ தரவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அது அரசியல் அறிக்கையே அல்ல, கட்சிக்கே மையமாக விளங்கும் மிகப் பெரிய அரசியல் மேதைக்கு அளிக்கப்படும் புகழாரம் என்றே அதைத் தயாரித்த குழுவும் அறிக்கையில் ஒப்புக்கொண்டும்விட்டது.

தேர்தல் அறிக்கைக்கே, ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பும் இட்டுவிட்டது. அந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களுக்கெல்லாம், அதைப் பற்றி அதிகம் பேர் விவாதிக்காமலேயே அது காற்றில் கரைந்துவிட்டது என்பதை மோடிதான் சரியாக உணர்ந்தார்; பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து யாருமே பேசுவதில்லை - மோடியும்கூட!

மோடியின் உத்தரவாத அறிக்கை அமைதியாக ‘நல்லடக்கம்’ செய்யப்பட்டுவிட்டது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மூலத்துக்குப் புது விளக்கவுரை!

மோடியின் உத்தரவாத அறிக்கையை அவரால் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசவும் முடியாது, உப்புச் சப்பில்லாத அந்த அறிக்கைக்கு அதைத் தயாரித்தவர்களின் திறமைக் குறைவுதான் காரணம் என்று கூறிவிடவும் முடியாது. அந்த அறிக்கையைத் தயாரித்தவர்களுக்கு (மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற) உள்நோக்கம் இருந்தது என்று பழியும் போட்டுவிட முடியாது.

இதையடுத்தே காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை விவாதப் பொருளாக்கி, அதன் உட்கூறுகளைப் பல்லாயிரவர் மீண்டும் படிக்கவும் அதற்குப் புதிய பொருள் காணவும் அதற்குத் தன்னுடைய பாணியில் விளக்கவுரை எழுதிவிடுவது என்று தீர்மானித்தார் மோடி. ‘மூல நூ’லைவிட ‘வியாக்கியான உரைகள்’ பெரும் புகழை அடையும் இந்திய இலக்கிய – ஆன்மிக மரபுகளை ஒட்டியே இந்த முடிவையும் அவர் எடுத்திருக்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை

ப.சிதம்பரம் 15 Apr 2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மோடி அளித்துள்ள விளக்கத்தில் பின்வரும் ‘ரத்தினங்கள்’ ஒளிவீசுகின்றன:

  • மக்களிடமிருந்து நிலம், தங்கம் மற்றும் இதர செல்வங்களைப் பறித்து அதை இந்திய முஸ்லிம்களுக்கு விநியோகித்துவிடும்.
  • தனிநபர்களின் சொத்து, பெண்கள் வைத்திருக்கும் தங்கம், பழங்குடிகளுக்குச் சொந்தமான வெள்ளி ஆகியவற்றை அரசு கணக்கெடுத்து அவற்றை அவர்களிடமிருந்து பறித்துக்கொள்ளும்.
  • அரசு ஊழியர்களுக்குச் சொந்தமான நிலங்களையும் ரொக்கத்தையும் அரசு பறிமுதல் செய்து விநியோகித்துவிடும்.
  • இந்தியாவின் அரிய வளங்களைப் பெறும் முதல் உரிமை முஸ்லிம்களுக்கே தரப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார் (அப்போது நான் குஜராத் முதல்வராக இருந்தேன்).
  • இந்திய மகளிரின் மங்கலசூத்திரங்களையும் (தாலி), சீதனமாகத் திருமணத்தின்போது பெற்றவற்றையும் காங்கிரஸ் கட்சி பறித்து, ‘அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெறுவோ’ருக்கு விநியோகித்துவிடும்.
  • உங்களுடைய கிராமத்தில் வீடு வைத்திருந்தாலோ, நகரில் சிறிய அடுக்ககம் வாங்கினாலோ காங்கிரஸ் அவற்றைப் பறிமுதல் செய்து வேறு யாருக்கோ வழங்கிவிடும்.

சகாக்களிடையே போட்டி

மோடியின் நம்பிக்கைக்குரிய தளபதியும் ஆலோசகருமான அமித் ஷா இதில் மேலும் சிலவற்றைச் சேர்த்திருக்கிறார்:

இந்து ஆலயங்களின் சொத்துகளை காங்கிரஸ் கைப்பற்றி விநியோகித்துவிடும்.

மக்களுடைய சொத்துகளைக் காங்கிரஸ் கைப்பற்றி, ‘சட்ட விரோதமாக இந்த நாட்டுக்குள் குடியேறி’ வாழ்ந்துகொண்டிருப்பவர்களிடையே விநியோகித்துவிடும் என்று பேசியிருக்கிறார் ராஜ்நாத் சிங். அடுத்த நாள் அவர் மேலும் ஒரு முத்தை உதிர்த்திருக்கிறார்: இந்திய ராணுவத்தில் மத அடிப்படையில் படைப்பிரிவுகளை உருவாக்க காங்கிரஸ் சிந்தித்துவருகிறது.

இப்படிக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இல்லாத பல அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து அதைப் பல மடங்காக ஊதிப் பெரிதாக்கி ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பேசத் தொடங்கிய பிறகு, ‘வாரிசுரிமை வரி’ (Inheritance Tax) என்ற ஒன்றை புதிதாகக் கொண்டுவந்து, மக்கள் சேமித்தவற்றை அவர்களுடைய இறப்புக்குப் பிறகு குடும்ப வாரிசுகளுக்குக் கிடைக்காமல் அதில் பாதிக்கும் மேல் அரசே எடுத்துக்கொண்டுவிடும் ‘வாரிசுரிமை வரி’யை அமல்படுத்தப்போகிறது என்று மோடியே கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸின் புதிய பாதை!

பாலசுப்ரமணியம் முத்துசாமி 09 Apr 2024

வாரிசுரிமை வரி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனக்குள்ள ‘ஞான’த்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘எஸ்டேட் வரி’ என்ற, வாரிசுகள் பெறும் சொத்துகள் மீதான வரியைக் காங்கிரஸ் அரசு 1985இல் ரத்துசெய்ததையும் , இதேபோன்ற ‘செல்வ வரி’யை (Wealth Tax) 2015இல் பாஜக அரசு ரத்துசெய்ததையும் அறியாமைக்காக அவரை மன்னித்துவிடலாம்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீது ஏன் இப்படி நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வார்த்தைப் போரை பாஜக தலைவர்கள் தொடங்கினார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமே அல்ல. ஏப்ரல் 19இல் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன், மக்களின் ஆதரவு குறைந்துவிட்டது என்ற அச்சம் பிரதமர் அலுவலகத்துக்கும் பாஜக தலைமையக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தின் ஜலோர் நகரில் ஏப்ரல் 21இல் தொடங்கிய இத்தாக்குதலை மோடி நிறுத்தவில்லை.

அவர் கற்பனையாக சித்தரிக்கும் இலக்குகள் குழப்பத்தையே தருபவை. அவருடைய அமைச்சரவை சகாக்களும் இலக்கில்லாமல் எங்கெங்கோ குறிவைத்துத் தாக்குகின்றனர். இந்த முட்டாள்தனத்தை நிறுத்துமாறு கூற வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. ஆனால், அவையோ இந்தத் தாக்குதல்களுக்கு மூலமான உரைகளையும் பேட்டிகளையும் தேடித்தேடி கண்டுபிடித்து வெளியிடுகின்றன.

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துகள் குறித்து தலையங்கங்களையும் பெட்டிச் செய்திகளையும் வெளியிடுகின்றன. மின்னணு ஊடகங்களோ அரசியல் – வரி நிபுணர்களை வரவழைத்து தொலைக்காட்சிகளில் சிறப்பு விவாதங்களைத் தொடங்கிவிட்டன. இவ்வாறாக மோடி தொடங்கிய போலி யுத்தம் பல மடங்காக பல தளங்களில் பெருக்கலடைந்துவிட்டது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

எதை எதிர்பார்க்கலாம்

ஏப்ரல் 5 முதல் 19 வரையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் நாட்டிலேயே அதிகம் பேசப்பட்ட அரசியல் விஷயமாகிவிட்டது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் மக்களுடைய மனங்களில் ஆழமான சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக:

  • சாதி, சமூக - பொருளாதாரப் பின்னணியோடு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்,
  • கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு 50% என்பது நீக்கப்படும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வழங்கப்படும் அன்றாட ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.
  • ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் சேர்க்கும் ‘மகா லட்சுமி’ திட்டம் அமல்படுத்தப்படும்.
  • வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச விலை திட்டம் தொடரும் என்று சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும்,
  • வேளாண் நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து ஆராய்ந்து பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கப்படும்,
  • இளைஞர்கள் தொழில் பயிற்சி பெறுவது கட்டாய உரிமையாக்கப்படும்,
  • ராணுவத்தில் குறுகிய காலம் மட்டுமே வேலைக்கு ஆள் எடுக்கும் ‘அக்னிவீர்’ திட்டம் ரத்துசெய்யப்படும்,
  • கல்விக்காக வாங்கிய கடன் வாராக்கடன் ஆகிவிட்டால் அவற்றை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,
  • ஒன்றிய அரசின் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் - ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.

“இந்த மக்களவைத் தேர்தலின் கதாநாயகன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான்” என்று கூறி, இதை மிகச் சரியாகக் கணித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனால் சினமடைந்து, இது கதாநாயகன் அல்ல – வில்லன்தான் என்று சித்தரிக்கத் தீர்மானித்திருக்கிறார் மோடி. அவருடைய துரதிருஷ்டம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் எந்தப் பகுதியுமே தவறு என்று அவரால் சுட்டிக்காட்ட முடியவில்லை. எனவே, கற்பனையாக ஒரு தேர்தல் அறிக்கையை உருவாக்கி, அதைப் பெரிதுபடுத்திப் பேசி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு மிகச் சிறந்த பாராட்டை பிரதமர் இந்த வகையில் வழங்கியிருக்கிறார் என்பதே என்னுடைய கருத்து.

“பாஜக இன்னொரு முறை நாட்டை ஆளும் வாய்ப்பை அளித்தால், உண்மைகள் எந்த வகையில் சிதைக்கப்படும், பொய்கள் பரப்பப்படும், பழிச்சொல்கள் சுமத்தப்படும், களங்கம் கற்பிக்கப்படும் என்பதையெல்லாம் மக்கள் உணரும் வகையில் பேசியதற்காக மிக்க நன்றி பிரதமர் அவர்களே” என்றே காங்கிரஸ் கட்சி எதிர்வினையாற்ற வேண்டும்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை இப்படி ஏகமாகப் புகழ்ந்து திருத்தி எழுதியிருக்கும் பிரதமர் மோடி, இதே பாணியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் புதிதாக திருத்தி எழுதவே முற்படுவார்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை
பாஜக: அரசியல் கட்சியா, தனிமனித வழிபாட்டு மன்றமா?
காங்கிரஸின் புதிய பாதை!
இரண்டாம் கட்டம்: பாஜகவுக்குப் பிரச்சினைகள்
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
மீண்டும் மோடி: மக்களிடையே அச்சம், விரக்தி
இந்தியாவின் பெரிய கட்சி எது?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஆளுங்கட்சிகிறிஸ்தோஃப் ஜாப்ஃரிலாகூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர்சமூக மாற்றம்விஜயலட்சுமி பண்டிட்ஊரடங்குக் கால கல்வி நிறுவனங்கள்இளையோருக்கு வாய்ப்புசவுக்கு சங்கர் சமஸ்பேரழிவுபர்தாஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்வினோத் கே.ஜோஸ் பேட்டிநேரு கட்டுரைத் தொடர்மொழிபெயர்ப்புக் கலைதை முதல் நாள்நகர்ப்புற நக்ஸலைட்நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?அரசாங்கம்எழுத்து என்றொரு வைத்தியம்மனிதவளத் துறைநிகில் டே கட்டுரைநிகழ்நேரப் பதிவுகள்சடலம்ஐரோப்பிய ஒன்றியம்மகளிர் மேம்பாடுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி காட்சி ஊடகமும்உலகிலேயே பரிதாபமானவன் ராமன்: சாரு பேட்டிபேராசிரியர்மாய பிம்பங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!