கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ், பாஜக உள்ளுக்குள் எதிர்கொள்ளும் எதிர்க்குரல்கள்

சமஸ் | Samas
31 May 2024, 5:00 am
1

நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். 

ந்தத் தேர்தலில், நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் கட்சிக்குள் எதிர்கொள்ளும் குரல்களை இங்கே எழுதுவது அவசியம் என்று எண்ணுகிறேன். உள்கட்சி விவகாரம் என்று நாம் ஒதுக்கிவிட முடியாத - ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் போக்கோடு பொருத்திப் பார்த்து, நாம் விவாதிக்க வேண்டிய விவகாரம் இது.

நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். தேர்தலை ஒட்டிய இந்தச் சில மாதங்களில் மட்டும் கட்சியிலிருந்து நாடு முழுவதும் எவ்வளவு பேர் விலகியிருப்பார்கள் என்று எண்ணுகிறீர்கள்? “குறைந்தது ஒரு லட்சம் பேர் விலகியிருப்பார்கள். எல்லோருமே செயல்பாட்டாளர்கள்தான். ஆட்சி அதிகாரத்தைவிட்டு வெகுவாக விலகியிருப்பதோடு, கடுமையான எதிர்ப்புகளையும் உள்ளூரில் கட்சி எதிர்கொண்டிருக்கும் இந்த நாட்களில், ‘காங்கிரஸ் காரியகர்த்தா’ என்று சொல்லிக்கொள்பவர் எவருமே முக்கியமானவர். குறைந்தபட்சம் மாநில அளவில் முக்கியமான பொறுப்புகளில் இருந்தவர்கள் கட்சியிலிருந்து விலகி இன்னோர் கட்சியில் சேரும்போது தேசிய ஊடகங்களில் அது சின்னச் செய்தியாகவேனும் வெளியாகிறது. அவ்வளவாக பிரபலம் ஆகாதவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளூருக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன. நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்தால், இதை உறுதி செய்யலாம்!”

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

டெல்லியில் காங்கிரஸ் செயல்பாட்டாளர் ஒருவர் இதைச் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படி ஓர் ஆய்வைச் செய்யும் நோக்கமோ, ஒவ்வொரு மாவட்டமாகச் செல்லும் சாத்தியமோ எனக்கு இல்லாதபோதும், பல மாநிலங்களுக்கும் இந்தப் பயணத்தின் ஊடாக நான் சென்றபோது அங்கு கிடைத்த தகவல்கள் அவர் சொன்ன எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தையே உருவாக்கியது. 

காங்கிரஸில் நடந்திருக்கும் வெளியேற்றத்துக்குப் பல காரணங்களையும் கட்சியினர் சொல்கிறார்கள். கட்சியின் அறிவுஜீவிகள் வட்டத்தில் பேசினால், “அதிகாரத்தோடு இருந்தே பெரும்பாலானோர் பழகிவிட்டார்கள்; எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட அனுபவம் பலருக்கு இல்லை. நரசிம்ம ராவ் ஆட்சிக்கும் மன்மோகன் சிங் ஆட்சிக்கும் இடையில் எட்டாண்டுகள் ஆட்சியதிகாரத்தில் கட்சி இல்லை என்றாலும்கூட, இப்படிப்பட்ட ஒடுக்குமுறையை ஆளும்கட்சியிடமிருந்து அப்போதெல்லாம் காங்கிரஸார் எதிர்கொண்டதில்லை. தவிர, இந்த அளவுக்கு கட்சி கீழே சென்றதும் இல்லை. இந்தப் பத்தாண்டுகள் முற்றிலும் புதிய அனுபவம். இதை எதிர்கொள்ளும் ஆற்றல் பலருக்கு இல்லை. இந்த ஆற்றலை இனியேனும் உருவாக்கும் வகையில் கட்சியைச் சித்தாந்தரீதியாக வளர்க்கும் நடவடிக்கைகளும் சென்ற பத்தாண்டுகளில் கரை சேரவில்லை.”

குஜராத்தில் கொத்துக் கொத்தாக காங்கிரஸார் வெளியேறியிருக்கிறார்கள். கட்சியின் ஆன்மாவாக இன்றும் நீடிக்கும் காந்தி பிறந்த போர்பந்தரின் சட்டமன்ற உறுப்பினரான அர்ஜுன் மோத்வாடியாவின் கதை ஒவ்வொரு வெளியேற்றமும் உண்டாக்கும் இழப்பின் ஆழத்தை உணர்த்தவல்லது. குஜராத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நுழையும் சமயத்தில் அவர் விலகினார். அர்ஜுன் மோத்வாடியாவுக்கு 67 வயதாகிறது. “நான் மூச்சுத்திணறிலில் இருந்தேன். இந்த ராஜிநாமாதான் எனக்கு நிவாரணம் தருகிறது” என்று அவர் சொன்னார். “குஜராத்தில் சமகால காங்கிரஸில் கட்சிக்காக அதிக அளவில் பயணம் செய்த அல்லது கட்சிக்காக அதிக  நிகழ்ச்சிகளை நடத்திய தலைவர் என்று யாரையாவது குறிப்பிட வேண்டும் என்றால், என் பெயரைத்தான் குறிப்பிட வேண்டும். அப்படிப்பட்ட நான் கிட்டத்தட்ட ஐம்பதாண்டு கட்சி பந்தத்தை இன்று முறித்துக்கொள்கிறேன்? இது ஒரு நிர்ப்பந்தம். இதற்காகக் கட்சித் தலைமைதான் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார். ராமர் கோயில் திறப்பு நிகழ்வைப் புறக்கணித்தது தவறு என்பது அவரது நிலைப்பாடு.

குஜராத்தில் 1995 முதலாக பாஜக ஆட்சியே இருக்கிறது. பாஜகவின் கடுமையான விமர்சகராக இருந்ததோடு, கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் முகமாகவும் இருந்தவர் அர்ஜுன் மோத்வாடியா. காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். அடிப்படையில் அவர் ஒரு பொறியாளர். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். “பாஜகவின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அவரது புத்தகங்கள் துணிச்சலான வெளிப்பாடுகள்” என்கிறார்கள். 

சரி, இப்படிப்பட்ட ஒருவரே ராமர் கோயில் திறப்பு தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை எதிர்க்கிறார் என்றால், இந்துத்துவத்தை எதிர்கொள்வதில் இந்த அளவுக்குத்தான் அவருக்குத் தெளிவு இருக்கிறது என்றால், கட்சி இவ்வளவு காலமும் குஜராத்தில் என்னவாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது? ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பும் பாஜக முதல்வராகவும் இருந்த சங்கர் சிங் வகேலாவை இங்கே தலைமைப் பொறுப்பில் காங்கிரஸ் கொஞ்ச காலம் வைத்திருந்ததையும் நினைவுகூரலாம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

அமேத்தி சொல்லும் செய்தி என்ன?

சமஸ் | Samas 25 May 2024

இப்படி வெளியேறும் எவருடனும் ராகுல் காந்தி பேசுவதே இல்லை என்று ஒரு தலைவர் சொன்னார். “யார் வேண்டுமானாலும் வெளியேறட்டும் என்பதுபோலவே அவருடைய அணுகுமுறை இருக்கிறது. பல்வேறு நெருக்கடிகளின் கீழ்தான் கட்சித் தலைவர்கள் இப்போது பணியாற்ற வேண்டியிருக்கிறது. மேலிருந்து அழைத்துப் பேசினால் அது அவர்களுக்கு உற்சாகம் தரும். மேலிடத் தலைவர்களை ஒரு உள்ளூர் தலைவர் பார்ப்பதோ, பேசுவதோ காங்கிரஸில் சாத்தியமே இல்லாமல் ஆகிவிட்டது. இடையில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படும்போது அடுத்தடுத்த மட்டங்களில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏதோ வருத்தத்தோடு இருப்பவர்களை அழைத்துப் பேசினாலே பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும். அப்படி நடப்பதே இல்லை. மேலிடத்தில் உள்ள இதே அணுகுமுறைதான் கட்சியில் ஒவ்வொரு மட்டத்திலும் நீடிக்கிறது. ஏனைய கட்சிகள் இவர்களை உள்ளிழுத்துவிடுகின்றன. குறிப்பாக, பாஜக. காங்கிரஸைப் பலவீனப்படுத்துவதே அவர்கள் நோக்கம்.”

தேர்தலுக்கு முந்தைய மூன்று மாதங்களில் மத்திய பிரதேசத்தில் மட்டும் 2.58 லட்சம் பேர் கட்சியில் சேர்ந்திருப்பதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸார் என்றும் பாஜக அறிவித்தது. இவர்களில் 336 தலைவர்களின் பெயர்களையும் அது வெளியிட்டது. “பாஜக பூதாகரமான எண்ணிக்கையை அறிவித்து மக்களைக் குழப்புகிறது. 2.58 லட்சம் பேருடைய பெயர் பட்டியலையும் வெளியிட முடியுமா?” என்று காங்கிரஸ் இதற்கு எதிர்வினை ஆற்றினாலும், மாநிலத்தில் கணிசமான கட்சி செயல்பாட்டாளர்களை அது இழந்துவிட்டிருப்பதைக் கட்சியினர் சொல்கிறார்கள்.

சூரத்திலும், இந்தூரிலும் காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேறி பாஜக வெற்றிக்கு வழிவகுத்ததை நாடு அதிர்ச்சியோடு பார்த்தது. கட்சியின் பல பகுதிகள் இப்படித்தான் புரையோடிவிட்டிருக்கின்றன என்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், காங்கிரஸாரிடம் பேசுகையில் திரும்பத் திரும்பப் பலரும் சுட்டிக்காட்டிய விஷயம், “சித்தாந்தரீதியாகக் கட்சி பலப்படுத்தப்பட வேண்டும். பிராந்தியத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தேசியத் தலைமையோடு தொடர்புகொள்ளும் சூழல் எளிதாக்கப்பட வேண்டும்.”

காங்கிரஸுடைய பிரச்சினை அப்படியே பாஜகவில் தலைகீழாக எதிரொலித்தது. தேர்தல் வெற்றி ஒன்றே பிரதானம் என்றாக்கி, மோடி - ஷா இருவரும் கட்சியை வெகுவாக பலவீனப்படுத்திவிட்டார்கள் என்ற குரலைப் பரவலாக பாஜகவினரிடம் கேட்க முடிந்தது. “நாட்டின் பல்வேறு முனைகளுக்கும் கட்சி இன்று இவர்களால் கிளை பரப்பியிருக்கலாம்; ஆனால், கட்சியின் பலமான வேர்கள் செல்லரிப்பு ஆளாகியிருக்கின்றன!”

மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரம், பிஹார், கர்நாடகம் இப்படி கட்சிக்கு வலுவான கோட்டைகளாக இருந்த பல மாநிலங்களில் இன்று கோஷ்டி பூசல்கள் உச்சத்தில் இருக்கின்றன. யாரெல்லாம் கட்சியை வளர்த்தெடுத்தார்களோ அவர்கள் பெரும் வேதனையைச் சுமந்தபடி இருக்கிறார்கள். குறைந்தது 100 தொகுதிகளில் கட்சிக்குள் நிலவும் பூசல்கள் பாதிப்பை உண்டாக்கும் நிலை இருக்கிறது என்று பாஜகவினர் தெரிவித்தனர்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

வடகிழக்கு: புதிய அபிலாஷைகள்

சமஸ் | Samas 24 May 2024

காங்கிரஸ் போன்று பாஜக வெகுமக்கள் சார்ந்த இயக்கம் இல்லை என்பதையும், தொண்டர்கள் சார்ந்த இயக்கம் என்பதையும் திரும்பத் திரும்ப பலரும் சுட்டிக்காட்டினர். “தேர்தல் வெற்றி ஒன்றே மதிப்புக்குரியது என்று கட்சி முடிவெடுத்துவிட்டால், இவ்வளவு காலமும் கட்சிக்காக தியாகங்களைச் செய்தவர்களை எங்கே கொண்டு தள்ளுவது? நாளை அரசாங்கமும் அதிகாரமும் போய்விட்டால், புதியவர்கள் வந்த வழியே திரும்ப ஓடிவிடுவார்கள். பழையவர்களும் இருக்கப்போவதில்லை.” 

பாஜகவுக்குள் மோடி - ஷாவுக்கு நீருபூத்த நெருப்பாக எதிர்ப்பு கனன்றுகொண்டிருக்கிறது. மேலே உள்ளவர்கள் ஆட்சியைப் பாதுகாக்கும் வகையில், கீழே பலரைப் பலியிடுவதைக் கட்சித் தலைமை ஒரு தொடர் உத்தியாகக் கையாள்வதைக் கட்சி நிர்வாகிகள் ரசிக்கவில்லை. “சென்ற முறை மக்களவைத் தேர்தலில் வென்ற 303 பேரில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினருக்கு இம்முறை போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பு கட்சியிலேயே நீண்ட காலமாகப் பணியாற்றும் வேறு தரப்பாருக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஆட்சியதிகாரத்துக்கு கட்சி வந்த பிறகு, இங்கு ஏனைய கட்சிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு போய் சேருகிறது என்றால், கட்சி எப்படி உருப்படும்?”

பாஜக சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் 435 வேட்பாளர்களில் 106 பேர் சென்ற பத்தாண்டுகளில் கட்சிக்குள் வந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால், இவர்களில் 90 பேர் கடந்த ஐந்தாண்டுகளில் கட்சிக்கு வந்தவர்கள். பஞ்சாபில் கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்துக்குள் ஒருவர் வாய்ப்பைப் பெறுகிறார்; ஹரியாணாவில் கட்சியில் சேர்ந்த ஒரு நாளைக்குள் ஒருவர் வாய்ப்பைப் பெறுகிறார். ஆந்திரத்தில் கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் 6 பேருமே வெளியிலிருந்து வந்தவர்கள். உத்தர பிரதேசத்தில் 74 பேரில் 23 பேர் வெளியிலிருந்து வந்தவர்கள். “தெலங்கானா போன்ற கட்சிக்கு அவ்வளவு பாரம்பரிய வலு இல்லாத மாநிலத்தில் 11/17 பேர் வெளியிலிருந்து வந்தவர்கள் என்றால்கூட அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஹரியாணாவில் 6/10 பேர் வெளியிலிருந்து வந்தவர்கள் என்றால், இது என்ன நியாயம்?”

பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தக் குரல்களின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. “கட்சிக்குள் பல மாநிலங்களில் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்; இளைய தலைமுறையினரில் தனித்த அடையாளத்துடன் செல்வாக்கு பெறுவோரும் கட்டம் கட்டப்படுகின்றனர்; பல மாநிலங்களில் முதல்வர்கள் கைகளில் அவர்களுக்கான அதிகாரம் இல்லை; முக்கியமான முடிவுகள் டெல்லியிலிருந்தே எடுக்கப்படுகின்றன; இந்தக் கட்சி முன்பு இப்படி இருந்ததில்லை; இதெல்லாம் நீண்ட கால நோக்கில் கட்சிக்குப் பெரும் சிதைவைக் கொண்டுவரும்.”

காங்கிரஸில் இந்திரா காலத்தில் நடந்த சிதைவுகள் பாஜகவுக்குள் மோடி காலத்தில் நடப்பதான எண்ணம் கட்சியின் நீண்ட கால அங்கத்தினர் பலரிடம் வெளிப்படுகிறது. “யதேச்சதிகாரம் சொந்தமாக வைத்துக்கொள்ளும் சூனியம். கட்சி பழையபடி கூட்டுத் தலைமைக்கு மாற வேண்டும்” என்றார் ஒருவர்.

வரவிருக்கும் தேர்தல் முடிவுகளில் இதெல்லாமும் பிரதிபலிக்கும்!

-‘குமுதம் ரிப்போர்ட்டர்’, மே, 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொர்புடைய கட்டுரைகள்

வடக்கு: மோடியை முந்தும் யோகி
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
வடகிழக்கு: புதிய அபிலாஷைகள்
ததும்பும் மேற்கு
வேலைவாய்ப்பின்மை, வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிவுகள்
அமேத்தி சொல்லும் செய்தி என்ன?
பிராந்திய கட்சிகளின் குடையாக வேண்டும் காங்கிரஸ்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ramasubbu   1 month ago

இன்று காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால், காங்கிரசை இரண்டே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தும் தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. கொடுமை என்னவென்றால் ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமிப்பால் நலி வடைந்து வருகிறது. பிஜேபி க்கு மிகப்பெரிய பலமே நேரு குடும்பம் தான். சோனியா, ராகுல், ப்ரியங்கா இவர்களை சுற்றிதான் உச்ச அமைப்பு உள்ளது. கார்கே எல்லாம் சும்மா என்பது மிக சாதாரண மக்களுக்கே தெரியும். எப்படியாவது ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட வேண்டும். கட்சி அமைப்பில் கடை நிலையில் என்ன நடக்கிறது,? இந்த தொடர் சரிவுகளுக்கு என்ன காரணம்? மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி காங்கிரஸ் க்கு கடுகளவும் எண்ணமில்லை. மாநிலங்கள் நிலையில் சில வெற்றி கிடைப்பது மாநிலதலைவர்களின் தனிப்பட்ட முயற்சிகள். உதாரணம், தமிழக பா. ஜ. க.. மிக குறைந்த வாக்கு வங்கியோடு இருந்த பா. ஜ. க. அசுரதனமாக வளர்ந்துஉள்ளது. அதே போல் தெலங்கானாவை காங்கிரஸ் க்கு சொல்லலாம். மேல் மட்டத் திலிருந்து மாவட்ட நிலை வரை வாரிசு அரசியலால் காணாமல் போய் கொண்டு இருக்கிறது காங்கிரஸ்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?ராஜ்பவனங்கள் காரியபவனங்களாக மாறிவிட்டன?அரசியல் விழிப்புணர்வுகாட்டுக்கோழிபஜாஜ் கதைகூத்தப்பாடிஅமைச்சரவை மாற்றம்மேலாதிக்கமா – ஜனநாயகமா?சாதிப் பிரச்சினைவிபி சிங் சமஸ்ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்?உதயசந்திரன்வேலைப் பட்டியல்பத்திரிகையாளர்களுக்கு யார் எஜமானர்?பொதிகைச் சோலைநிதிச் சீர்திருத்தம்ஊடக தர்மம்மாநிலத் தலைகள்: சிவராஜ் சிங் சௌஹான்உயிர்ப்பின் அடையாளம்மாதாந்திர அறிக்கைகாது கேளாமை ஏன்?பெருந்தன்மைசுகந்த மஜும்தார்உக்ரைனின் பொருளாதாரம்கீழடிகி. ராஜாநாராயணன்கருப்பை வாய்சருமநலம்டிராகன்நெடுங்கவிதை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!