அதிகாரத்தின் சக்தியானது உலகையே கண் மூடச் செய்யலாம்; மக்களில் ஆகப் பெரும்பாலானோரை மயக்கத்தில் தள்ளலாம்; உருவாக்கப்படும் கும்பல் மனநிலையானது மூர்க்க கோஷங்களால் நாட்டையே மூழ்கடிக்கலாம்; இவ்வளவுக்கும் அப்பாற்பட்டும் சில குரல்கள் சத்தியத்தை உரத்து ஒலிக்கும்; ஆட்சியாளர்களோடு சேர்த்து மக்களையும் கேள்விக்குள்ளாக்கும்; அநீதி எத்தகு ராஜ உடையைத் தரித்து வந்தாலும் அதன் தோலையுரிக்கும். அறத்தின் குரல்தான் அவை; உரக்க இன்று முழங்குகின்றன: இது அநீதி, இது அநீதி, இது அநீதி!
இந்தியா 1947, ஆகஸ்ட் 15 அன்று ஒரு சுதந்திர நாடாக உருவாகி எழுந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இருந்தது. “ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்துக் கட்டப்பட்ட மசூதி அது” என்று உருவாக்கப்பட்ட கதையின் தொடர்ச்சியாக 1992 டிசம்பர் 6 அன்று ஆர்எஸ்எஸ் பரிவாரத்தால் அது தகர்க்கப்பட்டது. 2024 ஜனவரி 22 அன்று அங்கே ராமரின் பெயரால் ஓர் அரசியல் கட்டுமானம் திறக்கப்படுகிறது. ஆட்சியில் இருந்த பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் இதன் சூத்திரதாரிகளாக இருந்தார்கள். இது மட்டுமே நம் கண் முன் நடந்த உண்மை வரலாறு.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
தேசத்தின் போக்கைத் தீர்மானிக்கும் விவகாரங்களில் மக்கள் முடிவும் ஆட்சியாளர் நகர்வும் எப்படியானதாக அமைய வேண்டும் என்பதை தேசப் பிதா காந்தி பல சமயங்களில் சுட்டியிருக்கிறார். இந்த விவகாரமும் விதிவிலக்கு அல்ல. "எனது மதத்தில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பேன்; அதற்காக நான் உயிரையும் விடுவேன்; ஆனால், அது முற்றிலும் என்னுடைய சொந்த விஷயமாகும். அதற்கும் அரசாங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!" இன்றைக்கு மோடியும் அவர் வழி சரி என்று கூறுவோரும் இழைக்கும் குற்றம் என்னவென்பதை காந்தியின் கூற்று கொண்டு தீர்மானிக்கலாம்.
இதையும் வாசியுங்கள்... 2 நிமிட வாசிப்பு
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு
11 Jan 2024
அது புராணமோ, வரலாறோ எதுவாயினும் மக்கள் இடையே பிளவை உண்டாக்க ஓர் அரசுக்கு உலகில் ஒரேயொரு நியாயம்கூட இல்லை. ஆசியாவின் பெரும் காப்பியங்களில் ஒன்றான ராமாயணத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடிவங்கள் உண்டு. ஒவ்வொரு கதையிலும் எண்ணற்ற வேறுபாடுகள் உண்டு. எல்லாவற்றிலுமே சகோதரத்துவத்துக்கும் தியாகத்துக்குமான குறியீடு ராமன். இன்று தன்னுடைய அதிகாரவெறிக்கும் மேலாதிக்கத்துக்குமான குறியீடாக ராமனை உருமாற்றியிருக்கிறது பாஜக. எதன் மீது நவீன இந்தியா கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ அந்தப் பன்மைத்துவத்தின் மீது காலாகாலத்துக்குமான படுகாயத்தை பாஜக உருவாக்கிவிட்டிருக்கிறது. நமக்கு அரசமைப்பு வழிகாட்டும் மதச்சார்பின்மை விழுமியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு நாசப்படுத்திவிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் வலியோடு இதை மௌனமாகக் கடக்கலாம்; பெரும்பான்மை மக்கள் அவர்களுடைய பெயரால் நடத்தப்படும் இந்த அக்கிரமங்களுக்காகப் பொறுப்பேற்கத்தான் வேண்டும். தனிநபர்களாகவும், சமூகமாகவும் நம்மிடம் ஜனநாயக விழுமியங்கள் வளராமல், நம்முடைய தேசத்தை ஜனநாயக தேசமாக நம்மால் பராமரிக்க முடியாது. நம்முடைய முன்னோடிகள் நம்மிடம் அளித்த உயரிய அரசமைப்பு விழுமியங்கள் யாவும் நம்முடைய பலவீனங்களால் இன்று சிதைவுறுவதைப் பார்த்திருக்கிறோம்.
தேசம் நம் முன் சரிகிறது. ஆட்சியாளர்களும் அரசதிகாரமும் இந்தச் சரிவைத் திட்டமிட்டு பகாசுர பலத்தோடு நடத்துகையில், நீதி நாடும் சமானிய மக்கள் செய்யக் கூடியது என்ன? நம்முடைய சகோதரர்களை இறுக அணைத்துக்கொள்வோம். இதையும் கடந்து வரும் வலிமையைப் பெறுவோம். யதேச்சதிகாரத்துக்கு எதிரான நம்முடைய போராட்டங்களை வலுப்படுத்துவோம். அரசமைப்பு விழுமியங்களைச் சமூகத்தின் விழுமியங்களாக வளர்த்தெடுக்க மேலும் உழைப்போம். ஆளும் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் நாம் உறுதிபடச் சொல்ல ஒன்றுண்டு: காலம் முன்னோக்கித்தான் செல்லும்; சமூகத்தை ஒரு காலகட்டத்துக்குப் பின்னோக்கி நகர்த்தலாம், நிரந்தரமாகப் பின்னோக்கி அதை இயக்கிட முடியாது!
தொடர்புடைய கட்டுரைகள்
மோடி மந்திர்
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு
இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்
டிசம்பர் 6 சொல்லும் செய்தி என்ன?
13
4
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Jerald 8 months ago
உரத்து ஒலிக்கிற சத்தியத்தின் சில குரல்களில் உங்கள் குரல் ஒலிக்க, நாங்கள் கேட்டோம், வாசித்தோம். நன்றி
Reply 0 1
Login / Create an account to add a comment / reply.
Mohamed Kasim 9 months ago
அநீதியை ஆதரிக்கும் ஊடகங்களுக்கிடையில் நீதத்தை துணிச்சலாக கூறிய அண்ணனுக்கு அன்புகலந்த நன்றி
Reply 3 1
Login / Create an account to add a comment / reply.
Sundar Gopalakrishnan 9 months ago
அருமையான தலையங்கம் சமஸ். பாராட்டுகள்!
Reply 2 1
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 9 months ago
ஆம், இன்றைய தினம் வரலாற்றில் கருப்பு தினம்.
Reply 2 1
Login / Create an account to add a comment / reply.