கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 5 நிமிட வாசிப்பு

வடக்கு: மோடியை முந்தும் யோகி

சமஸ் | Samas
12 May 2024, 5:00 am
1
நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். 

வாராணசியின் படித்துறைகள் காசி ரயில் நிலையத்தில் இருந்து பார்க்கும்போதே ஜொலித்தன. இரவைப் பகலாக்கும் பிரமாண்ட மின் விளக்குகளில் ஒளிர்ந்தது நகரம். புராதனமான வாராணசி இப்போது பிரதமர் மோடியின் தொகுதி. பத்தாண்டுகளில் ஐம்பதாயிரம் கோடிகளுக்கு மேல் மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்து கொட்டியிருக்கின்றன என்றார்கள்.

உத்தர பிரதேசத்தை அரசியல்ரீதியாக எப்படிக் கையாள வேண்டும் என்பதை மோடிதான் துல்லியமாக அறிந்திருக்கிறார் என்று சொன்னார் வாராணசியின் ராஜு பையா. “இந்துக்களுடைய புனித நகரங்களில் ஒன்று என்பதோடு, இந்தி பிராந்தியங்களில் ஒருவர் உயிர்விடும் முன்பு வந்தடைய வேண்டிய இடமாகவும் பார்க்கப்படுவது இது. இங்கே சிதையிட்டு எரித்தால்தான் புண்ணியம் என்று சொல்லி ஒவ்வொரு நாளும் கொண்டுவரப்படும் நூற்றுக்கணக்கான பிணங்களால் வாராணசியின் கரைகளில் உள்ள சுடுகாடுகள் எப்போதும் தீயோடு இருக்கும். குஜராத்திலிருந்து வந்த மோடி இங்கே நின்று ஜெயித்ததால் தன்னை முதலில் இந்துக்களின் பிரதிநிதி போன்று ஆக்கிக்கொண்டார். ஆண்டுக்கு ஆறு கோடி பேர் வந்து செல்லும் ஊர் இது. ஒரு நாளைக்கு இருநூறு ரயில்கள் வாராணசி ரயில் நிலையத்தைக் கடக்கின்றன. நகரத்தை மீளக் கட்டியெழுப்பியதன் மூலம் இந்த ஊரைக் கடக்கும் ஒவ்வொருவரும் மலைத்துப் பேசும் கதையாடலை உருவாக்கினார்.”

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அது சரிதான்.

முதலாவது ஆட்சிக் காலத்தில் வாராணசி என்றால், இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அயோத்தி.

ஃபைசாபாத் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சின்ன நகரமான அயோத்தி இன்று மாநகராட்சி ஆக்கப்பட்டு, மாவட்டத்தின் பெயராகவும் மாறிவிட்டிருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ராமர் கோயிலோடு, ரூ.20,000 கோடி அளவுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நகரத்தின் அடையாளமே மாற்றப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த உத்தர பிரதேசத்தின் முகமுமே நிறைய மாறியிருந்தது. அகல விரிந்த சாலைகள்; பெரிய பெரிய பாலங்கள்; இந்தியாவிலேயே அதிகமான கிராமங்களைக் கொண்ட உத்தர பிரதேசத்தில்தான் மோடியின் ஆட்சியில் அதிகமான விமான நிலையங்களும் மெட்ரோ ரயில் நிலையங்களும் உருவாக்கப்படுகின்றன.

உத்தர பிரதேசத்தைப் பொறுத்த அளவில் ஒரு தலைமுறைத் தாவலை பிரதமர் மோடி, முதல்வர் யோகியின் பாஜக ஆட்சிகள் கொடுத்துள்ளன என்று தாராளமாகச் சொல்லலாம். “ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களுக்கான வரிப் பகிர்வைவிட உத்தர பிரதேசத்துக்கு அதிகமான நிதியை  ஒதுக்கியிருக்கிறார்கள் என்று நம்மாட்கள் புலம்புகிறார்களே… அதெல்லாம் இப்படித்தான் சாலைகளாகவும் பாலங்களாகவும் மாறியிருக்கின்றன!” என்று கிண்டலாகச் சொன்னார் என்னுடன் வந்த தமிழ் நண்பர். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

நிதி ஒதுக்கீடெல்லாம் சரி; மாநிலத்தில் ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது? “சமூக நீதி, மத நல்லிணக்கம், ஜனநாயகம் இப்படியெல்லாம் பேசும் உங்களைப் போன்றவர்களுக்குச் சொல்ல நல்ல சேதி இல்லை. ஆனால், சாதாரண மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிர்வாகத்தின் செயல்பாடு பல மடங்கு மேம்பட்டிருக்கிறது” என்றார். 

நான் பெண்களிடம் நிறையப் பேச விரும்பினேன். “ஊர்ப்புறங்களில் மட்டும் அல்ல; புறநகர்களிலும்கூட சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் பெண்கள் வெளியே செல்ல முடியாது. இன்றைக்கு அந்த நிலை யோகியால் மாறியிருக்கிறது.” என்றார்கள். யோகி ஆட்சிக்கு வந்த 2017 தொடங்கி 2023 வரையிலான 6 ஆண்டுகளில் 10,900 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டிருப்பதாக உத்தர பிரதேச காவல் துறையின் அறிக்கை சொல்கிறது. 183 பேர் இதில் கொல்லப்பட்டிருக்கின்றனர்; 23,300 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அடுத்து, "எல்லா வீடுகளுக்கும் குழாயில் நல்ல தண்ணீர் வருகிறது; தண்ணீருக்கான அலைச்சல் குறைந்திருக்கிறது" என்பதை அதிகமான பெண்கள் சொன்னார்கள். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ரேஷன் கடைகளின் சேவை மேம்பட்டிருப்பதையும் பல தரப்பு மக்களும் சொல்கிறார்கள்.

ஜனநாயகத்தின் வெளி வெகுவாகச் சுருங்கியிருப்பதை உள்ளூர் பத்திரிகை நண்பர் சுட்டிக்காட்டினார். “சிறுபான்மையினர், விளிம்புநிலையினர் அதிகாரமற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றன. போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. ஊடகங்கள் ஆள்வோரை எதிர்த்து எழுதும் சூழல் எல்லாம் அருகிக்கொண்டிருக்கிறது!”

மக்கள் இதற்கெல்லாம் பெரிய கவனம் கொடுப்பதுபோலத் தெரியவில்லை. அத்தியாவசியமான அரசு சேவைகள் திருப்திகரமாகக் கிடைப்பதும், வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து குவிவதும் அரசுக்கான ஆதரவாக வெளிப்படுகிறது. மூன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு இந்த வகையில்தான் 2022இல் யோகி அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலுள்ள 75/80 தொகுதிகளை வெல்ல பாஜக இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அயோத்தி ராமரும் கோயிலும் இடம்பெற்றுள்ள காவிக் கொடிகள் செல்லும் இடம் எல்லாம் பறக்கின்றன.

பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி இம்முறை காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இயல்பான கூட்டணி என்று சொல்லலாம். “மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளைக் கைப்பற்றினாலே எங்களுக்குப் பெரிய வெற்றிதான்” என்று என்னிடம் சொன்னார் காங்கிரஸ் தலைவர் ஒருவர். பாஜக அவ்வளவு பலத்துடன் இருக்கிறது. அதேசமயம், அவர்கள் நினைப்பதுபோல, சென்ற முறை எண்ணிக்கையைக் கடப்பது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை என்றார்.

பகுஜன் சமாஜ் தனித்து நிற்கும் என்று அறிவித்திருக்கிறார் மாயாவதி. ஆனால், “பாஜகவின் நிழல் கூட்டணி” என்று அவரை சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணியினர் அழைக்கிறார்கள். பாஜக ஆட்சி வந்த பிறகு மாயாவதியின் செயல்பாடுகள் வெகுவாக முடங்கிவிட்டன.

நாட்டிலேயே செல்வாக்கு மிக்க முதல்வராகப் பேசப்படும் யோகிக்கு, பிரதமர் மோடியைவிடவும் அதிகப் பெயர் இருக்கிறது. மோடி - ஷா இதை விரும்பவில்லை. இன்னமும் பல முக்கிய முடிவுகள் டெல்லியிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்கிறார்கள். “மக்களால் முதல்வரைச் சந்திக்க முடிகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் ‘ஜன தர்ஷன்’ மூலம் மக்களை நேரடியாகச் சந்தித்து மனுக்களைப் பெறுகிறார் முதல்வர். எளிமையாக இருக்கிறார். கண்டிப்பாக நடந்துகொள்கிறார்…” இவையெல்லாம் முதல்வர் யோகி தொடர்பாக அதிகம் உச்சரிக்கப்படும் சொற்கள். “அதிகாரத்தில் அவர் சார்ந்த தாக்கூர் சமூகத்தினர் உச்சத்தில் இருக்கிறார்கள். சுவர்ண ஜாதிகள் என்றழைக்கப்படும் முற்பட்ட சமூகத்தினரே எல்லா இடங்களிலும் கொழிக்கிறார்கள்…” இது அவர் மீது அதிகம் சொல்லப்படும் குற்றச்சாட்டு.

ஏனைய மாநிலத்தவர்கள் நாடாளுமன்றத்தைக் கனவு காண முதலில் டெல்லிக்கு வர வேண்டும். உத்தர பிரதேசக்காரர்களுக்கோ தலைநகர் லக்னோவிலிருந்து நேரடியாக நாடாளுமன்றத்துக்குத் தனிப் பாதை இருக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு.

இந்தியாவின் சரிபாதிக்கும் மேற்பட்ட பிரதமர்கள் இங்கிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். வடக்கின் மையம் என்று கருதப்படும் உத்தர பிரதேசம் நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிப்பதாகத் திகழ இரு காரணங்கள். முதலாவது, அதன் பிரம்மாண்டமான அளவு; தனி நாடு அளவுக்கு 24 கோடி பேர் வாழும் பெரிய மாநிலம்; நாடாளுமன்றத்தில் இதற்கேற்ற பிரதிநிதித்துவம். இரண்டாவது, வெவ்வேறு அரசியல் போக்குகளின் எழுச்சிப் புள்ளி அது; இந்தி பிராந்தியங்கள் முழுக்க அதன் தாக்கம் எதிரொலிக்கும்.

சுதந்திர போராட்டக் காலகட்டத்தில் அலகாபாத்தில் உள்ள நேருவின் பூர்வீக வீடான ஆனந்த நிலையம்தான் காங்கிரஸின் அதிகாரப்பூர்வமற்ற தலைமையகமாக இருந்தது. அடுத்த கட்டத்தில் காங்கிரஸின் வீழ்ச்சியும் பாஜகவின் எழுச்சியும் வாஜ்பாய் - அத்வானி - மோடி காலத்தில் அங்கே ஒருசேர நடந்தது. ஊடாகவே முலாயம் சிங், மாயாவதி மூலம் சோஷலிஸ்ட்டுகள், பகுஜன்களின் பரிட்சார்த்த நிலமாகவும் அது மாறியது.

நாட்டிலேயே முற்பட்ட சாதியினரின் ஆதிக்கம் அதிகம் நிலவுவது இங்கேதான்; நாட்டிலேயே தலித்துகள் மையக் கட்சி ஒன்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் இங்கேதான். எவ்வளவு வளர்ச்சி மாற்றங்களைக் கண்டாலும், கிராமப்புற இந்தியாவின் மரபார்ந்த குரலைப் பிரதிபலிப்பதாகவே உத்தர பிரதேசத்தின் பண்பு வெளிப்படுகிறது. அதுவே வடக்கின் மையம். 

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

திசை வழியாக மட்டுமல்லாமல், பண்பாட்டு வழியாகவும் பிராந்தியங்களை இங்கே நான் பிரிப்பதால், வடக்ககம் என்பது எந்தெந்த மாநிலங்களை எல்லாம் குறிக்கிறது? உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், காஷ்மீர். ஜம்முவிலும் லக்னௌவிலும் மக்களுடைய பேச்சில் பல ஓர்மைகளை இன்று பார்க்க முடிகிறது.

மக்களவையில் 119 (22%) இடங்களைக் கொண்டிருக்கும் இந்தப் பிராந்தியம் இந்தியாவின் ஆட்சியைத் தீர்மானிப்பதில் மிகுந்த முக்கியத்துவம் வகிப்பதாகும். நேரு, இந்திரா, ராஜீவ், சோனியாவுக்குப் பலம் கொடுத்ததும் இந்த பிராந்தியம்தான்; காங்கிரஸை வீழ்த்திய மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், நரேந்திர மோடி இவர்களுக்குப் பலம் கொடுத்ததும் இந்த பிராந்தியம்தான்.

உத்தராகண்ட், ஹரியாணாவிலும் பாஜகதான் ஆளும் கட்சி. உத்தராகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆட்சி மீது அதிருப்தி இருந்தாலும், பிரதமர் மோடி மீது பெரிய அதிருப்தி குரல்களைக் கேட்க முடியவில்லை. ஹரியாணாவில் இரு அரசுகள் மீதுமே கடும் அதிருப்தி நிலவுகிறது. விவசாயிகள் போராட்டத்தை பாஜக அணுகிய விதம் இங்கு பெரும்பான்மைச் சமூகமான ஜாட்டுகளிடம் கடும் கோபத்தை உருவாக்கியிருக்கிறது. அதிருப்தியை சமாளிக்க முதல்வர் பதவியிலிருந்து மனோகர் சிங் கட்டாரை நீக்கிவிட்டு, நயாப் சிங் சைனியை அந்த இடத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது பாஜக. மக்களிடம் இது பெரிய தாக்கத்தை உண்டாக்குமா என்று தெரியவில்லை. காங்கிரஸ் கை ஓங்கியிருக்கிறது.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி சென்ற பத்தாண்டுகளில் தனக்கென்று ஒரு அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது. முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தன்னுடைய செல்வாக்கு குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சாமானிய மக்கள் வாழ்வில் தொடர் அக்கறையை அவருடைய அரசு செலுத்துவதை டெல்லி மக்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அதேசமயம், ஒவ்வொரு தேர்தலையும் ஒவ்வொரு விதமாக அணுகுவதான பேச்சை டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் நான் கேட்கிறேன். “நான் சட்டமன்றத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஓட்டு போட்டேன். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடுவேன்” என்று நான் முன்பு சந்தித்த நான்கில் இருவர் சொன்னார்கள். அர்விந்த் கெஜ்ரிவால் கைது இந்தப் பேச்சை வெகுவாக மாற்றியிருக்கிறது. "ஜனநாயகத்தில் ஒரு தலைவர் இன்னொரு தலைவரை தண்டிப்பதை அனுமதிக்கவே முடியாது. மோடி பயந்துகொண்டுதான் கெஜ்ரிவாலைக் கைதுசெய்திருக்கிறார். நான் இந்த முறை ஆஆகவுக்குத்தான் ஓட்டு போடுவேன்" என்று நான்கில் இருவர் சொன்னார்கள். 

காங்கிரஸ் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியோடும், பஞ்சாபில் தனித்தும் போட்டியிடுகிறது. 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

பஞ்சாபில் இப்போது ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்போடு வந்த முதல்வர் பகவாத் மான் சிங் தலைமையிலான அரசு கொஞ்சம் அதிருப்தியைச் சந்தித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்தில், ஊழலையும் போதையையும் ஒழிப்பேன் என்று சொன்னார்கள். போதைப் புழக்கமும் குறையவில்லை; ஊழலும் ஒழியவில்லை என்று பலரும் சொல்கிறார்கள். போதைப் பொருள் பயன்பாடு பஞ்சாபில் முக்கியமான ஒரு விவகாரம்.  

ஒரு கட்சி தன்னைத்தானே எவ்வளவு நாசப்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு பஞ்சாபில் காங்கிரஸ் உள்ள சூழலை உதாரணமாகச் சொல்லலாம். 2014, 2019 இரு தேர்தல்களிலும் மோடி அலைக்கு அப்பால் கட்சி வலுவாக வென்ற மாநிலம் இது. இடையே சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் டெல்லி மேலிடம் இங்கு மேற்கொண்ட மாற்றங்கள் கட்சியைப் படுகுழியில் தள்ளியிருக்கிறது.

பாஜக இங்கே பெரிய சக்தி கிடையாது. கட்சி மேலிட அடாவடியால் கடுப்பாகி வெளியேறிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுனில் ஜாக்கரை பாஜக இப்போது தன்னுடைய மாநிலத் தலைவராக்கிவிட்டது. இரண்டாண்டுகளில் கவனிக்கத்தக்க ஓர் இடத்துக்கு அவர் பாஜகவைக் கொண்டுவந்திருக்கிறார். காங்கிரஸிலிருந்தும், ஆஆகவிலிருந்தும் பல முக்கியமான ஆட்களை அவர் உள்ளே கொண்டுவந்திருப்பதும் தேர்தலில் நிறுத்தியிருப்பதும் இப்போது காங்கிரஸுக்குத் தலைவலி ஆகியிருக்கிறது. பஞ்சாபியர்களின் இயல்பான கட்சியான சிரோண்மணி அகாலி தளம் பழைய பலத்தை இழந்திருக்கிறது. பாஜகவோடு மீண்டும் கூட்டணியில் செல்லலாம் என்றிருந்த அதன் முடிவை சமீபத்திய விவசாயிகள் போராட்டத்தை பாஜக எதிர்கொண்ட விதமும், மக்களிடம் பாஜக மீது ஏற்பட்டிருக்கும் கோபமும் மாற்றிவிட்டிருக்கிறது. தனித்து நிற்கும் அகாலிகள் தீவிரமான தேர்தல் பணியில் இறங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் குழப்பத்தோடுதான் பஞ்சாபியர்கள் இந்தத் தேர்தலை அணுகுகிறார்கள்.

காஷ்மீரைப் பற்றி விரிவாகத் தனித்து எழுத வேண்டும். அச்சம், ஏமாற்றம், துயரம். இந்த உணர்வுகளை மட்டும்தான் காஷ்மீரில் இருந்த நாட்களில் மக்களிடம் நான் பெற்றேன். தங்களுடைய பிராந்தியம் ஒரு மாநில அந்தஸ்தில்கூட இன்று இல்லை; ஏதாவது ஓர் அநீதி என்றால், அணுகுவதற்குத் தங்களுடைய அரசியல் பிரதிநிதிகளுக்கு எந்த அரசியல் அந்தஸ்தும் இல்லை என்பதை காஷ்மீரிகளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்திய அரசு இதுவரை சம்பாதித்திருந்த கொஞ்ச நஞ்ச நல்லெண்ணங்களையும் முழுமையாக மோடி அரசு நாசப்படுத்திவிட்டிருக்கிறது என்ற எண்ணமே அங்கு பேசியோரிடம் வெளிப்பட்ட உணர்வுகளிலிருந்து ஏற்பட்டது. ஜம்முகாரர்களிடம்கூட பேச்சில் ஏமாற்றத்தைப் பார்க்க முடிகிறது. இப்போது தனி பிராந்தியம் ஆக்கப்பட்டுவிட்ட லடாக்கிலும் மக்களிடம் திருப்தி இல்லை. எல்லோருமே அதிகாரம் பறிக்கப்பட்டவர்களாக நினைக்கிறார்கள். மாநில அந்தஸ்தைத் தராமல், எங்களுக்கான சட்டமன்றத் தேர்தலை நடத்தாமல், நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி என்ன பிரயோஜனம் என்ற கேள்வியைப் பலர் கேட்டார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வடக்கில் நான் சுற்றியிருக்கிறேன். அப்போது காங்கிரஸ் மீது கடும் வெறுப்பு இருந்ததைப் பார்த்தேன்; மோடி மீதான தீவிரமான ஈர்ப்பாகவும் அது மாறிவிட்டிருப்பதையும் பார்த்தேன். காங்கிரஸ் மீதான வெறுப்பு மட்டுப்பட்டிருக்கிறது; பாஜகவுக்கு எதிராக இன்று கணிசமான குரல்களைக் கேட்க முடிந்தது!

‘குமுதம் ரிப்போர்ட்டர்’, மார்ச், 2024 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


8






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ramasubbu   7 months ago

பா. ஜ. க. மீது குறைந்த பட்சமாக வெறுப்பு ஏற்பட்டிருந்தாலும், காங்கிரஸ் மீதான ஆதரவு மனப்பான்மை பெருக குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். மோடிக்கு பிறகு யோகிதான் வரட்டுமே அது பெருமைக்குரிய விஷயம்தானே. " இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு வாழும் மக்கள் அனைவரும் சமம். யாரும் பிரதமர் /குடியரசு தலைவர் /மாநில. முதல்வர் ஆகலாம் என சும்மா. பேசிக்கொண்டு திரி வதில் என்ன இருக்கிறது. முலயா முக்கு பிறகு அகிலஷதான் உ. பி முதல்வராக வேண்டுமா?. ஜனநாயகத்தில் 90% வாரிசு அரசியல் ஒழிக்க படவேண்டும்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

மின் உற்பத்திஇந்தி மொழிமார்க்ஸிஸ்ட் கட்சிமைய அதிகாரக் குவிப்புக்கு மகத்தான அடிவாழைரஅ பாதித்தால் பக்கவாதம் வரலாம்: சமாளிப்பது எப்படி?இரண்டாம் உலகப் போர்மது தண்டவடேதினக்கூலிதையல் வகுப்புமேனேஜர்சரிதானா இந்தத் திட்டம்?தொற்றுநோய்கள்எம்.ஐ.டி.எஸ். வரலாறுவிளம்பர வருவாய்விக்டோரியா ஏரிஅமுல் நிறுவனத்தின் சவால்கள்தான்சானியாவில் என் முதல் மாதம்கொலஸ்ட்டிரால்மகா சிவராத்திரிதமிழ்நாடு வக்ஃப் வாரியம்அல் அக்ஸாநெல்லி பிளைபொதுப் பயண அட்டைவெறுப்பரசியல் என்னும் தொற்றுநோய்என்எஃப்டிஆபத்துமூன்று மாநில தேர்தல்பக்கங்களுக்குள் சிக்கித் திணறாத வரலாற்றுப் பெட்டகமமீன் வளம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!