கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 4 நிமிட வாசிப்பு

ததும்பும் மேற்கு

சமஸ் | Samas
17 May 2024, 5:00 am
0

நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

ஜெய்பூரின் பிரதான வீதிகளில் ஒன்றான ஜொஹாரி பஜார் பரபரவென்று இருந்தது. ஒன்றுபோல செந்நிறத்தில் உள்ள இருபுற கடைகளும் நகரத்தின் புராதன காலத்தை நினைவூட்டுகின்றன. “எமரால்ட், ரூபி… என்ன கற்கள் வேண்டும், சொல்லுங்கள்… ராஜஸ்தான் வந்துவிட்டு நீங்கள் கற்கள் வாங்காமல் போகக் கூடாது!” என்றார் ஒரு கடைக்காரர். வெளியூரிலிருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர் கண்டுபிடித்திருந்தார்.

நான் கடைகளை வேடிக்கை பார்த்தவாறே எதிரே கவனம் ஈர்த்தவர்களிடம் கருத்து கேட்டபடி கடந்தேன். ஆபரணங்களுக்கும், கற்களுக்கும் பேர் போன இடம் இது. ஜெய்பூரை மன்னராட்சிக் காலகட்ட நினைவுகளோடு பராமரிக்கிறார்கள். லெஸி கடை ஒன்றில் தாகம் தீர்த்துக்கொண்டு அங்குள்ளவர்களிடம் பேச்சு கொடுத்தேன். “ஜெய்பூர் அதே வண்ணத்தோடு இருந்தாலும், சாயம் வெளுத்துக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு நாள் பழைய வண்ணத்தைக் காட்டியே பிழைப்பை ஓட்டுவது?” என்று கேட்டார் ராஜேந்திர சிங் என்னைக் கவர்ந்தார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நகரத்துக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து அன்றாடம் வேலைக்கு வந்து செல்வதாகக் கூறினார். “ராஜஸ்தானுக்கு வியாபாரம்தான் வழி. விவசாயத்தை முழுமையாக நம்ப வழியில்லை. பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இங்கே இல்லை. வியாபாரம் செழிக்க அராசங்கம் ஏதாவது பண்ண வேண்டும்!” என்றார். 

மேற்கின் எந்த ஊரிலும் வியாபாரத்துக்கான குரலைக் கேட்க முடியும். மும்பையில், ஆமதாபாதில், பானாஜியில்… மேற்கை இணைப்பதில் அதன் வியாபார நாட்டத்துக்கு முக்கியமான இடம் உண்டு. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் சரி; இன்றைய அரசியலிலும் சரி; நாட்டில் புதிதாக உருவாகும் போக்குக்கு முன்னே நிற்கும் பிராந்தியம் இது. தீவிரமான கருத்தியல் போக்குகள் முட்டி மோதும் நிலமும்கூட. குஜராத் காந்தி பிறந்த மண். மஹாராஷ்டிரம் சாவர்க்கர் பிறந்த மண். ராஜஸ்தான் இன்றைய இந்துத்துவம் உருக்கொண்ட இடம் என்றால், கோவா நவீன தாராளப்போக்கு செழிக்கும் இடம்.

ராஜஸ்தான், மஹாராஷ்டிரம், குஜராத், கோவா இந்த நான்கு மாநிலங்களுக்கும் மக்களவையில் 101 இடங்கள் இருக்கின்றன. மோடி பிரதமராக இரு முறையும் நல்ல ஆதரவுக் களமாக இது இருந்தது. சென்ற தேர்தலில் பாஜக இங்கே 75 இடங்களை வென்றது; கூட்டணிக் கணக்கையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 93 ஆகும். நான்கு மாநிலங்களிலுமே பாஜக ஆட்சியில் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியின் இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. ராஜஸ்தானிலும் கோவாவிலும் காங்கிரஸ் கொஞ்சம் செல்வாக்குடனேயே இருக்கிறது. மஹாராஷ்டிரத்தில் நான்கு பிரதான கட்சிகளில் அதுவும் ஒன்று. குஜராத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது.

ராஜஸ்தானில் காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவர் அசோக் கெலாட். ராஜஸ்தானில் நலத்திட்ட அரசியலை உருவாக்கி வளர்த்தவர். சமீபத்தில்தான் ஆட்சியை பாஜகவிடம் இழந்தார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை காங்கிரஸ், பாஜகவை மாற்றி மாற்றி தேர்ந்தெடுக்கும் மாநிலம் இது. இரு கட்சிகளுக்கும் இடையே சட்டமன்றத் தேர்தலில் 2% அளவுக்குதான் வாக்கு வேறுபாடு என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையில் பெரிய வேறுபாட்டைப் பார்க்க முடிந்தது. “சட்டமன்றத்தில் கெலாத்துக்கு ஓட்டு போட்டேன். இந்த முறை ஜெயிக்க மாட்டார் என்று தெரிந்தாலும்கூட அவர் பக்கம் நிற்பது தர்மம் என்று எண்ணினேன். மக்களுக்கு நிறைய செய்தார். ஆனால், அமைச்சர்களைத் தட்டிவைக்காமல் விட்டார். அவர்கள் நிறைய ஊழல் செய்தார்கள். அதனால்தான் தோற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்குத்தான் ஓட்டு போடுவேன்” என்றார் புத்தகக்கடை வியாபாரியான கோபால்நாத். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

காங்கிரஸுக்கு ஓட்டு போட்டேன் என்று சொல்பவர்களிலேயே நூற்றுக்கு ஐம்பது பேர் இப்படிக் கூறினார்கள். “மோடி ஜி20 மாநாடு நடத்தியது இந்தியாவுக்கு உலகப் பெருமை கிடைக்கச் செய்தது” என்று சொன்னார் ரிக்‌ஷாகாரரான ஶ்ரீராம். “ராகுல் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், தவிர அவருக்கு வயது இன்னும் இருக்கிறது” என்பது இவர் கருத்து. தனிப்பட்ட வாழ்க்கையில் வருமானம் எந்த வகையிலும் ஏறவே இல்லை என்ற வருத்தம் அவரிடம் வெளிப்பட்டது.

காங்கிரஸ் இங்கே பெரிய கணக்குகளை வைத்திருக்கவில்லை. இரு தேர்தல்களில் 25/25 என்று இங்கே பாஜக வென்றது. இந்த முறை அப்படி விடக் கூடாது என்று எண்ணுகிறது. பத்து தொகுதிகளில் கடுமையான போட்டியை அது உருவாக்கியுள்ளது. நான்கைந்து தொகுதிகளில் பாஜகவை வெல்ல முடியும் என்று காங்கிரஸ்காரரான தினேஷ் கூறினார்.

குஜராத்திலும் காங்கிரஸார் இதே மனநிலையில்தான் இருக்கிறார்கள். ராஜஸ்தான் அளவுக்குக்கூட இங்கே கட்சி வலுவாக இல்லை. முப்பதாண்டுகளாக பாஜக ஆட்சி நிலவும் மாநிலம் இது. காங்கிரஸ், ஆஆக இரு கட்சிகளிலிருந்தும் முக்கியமான ஆட்களை பாஜக தன் பக்கம் தூக்கிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், பாஜகவுக்குள் மெல்ல விரிசல்கள் விழுவதை சமீபத்திய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

பாஜகவை வீழ்த்த கடும் உழைப்பு தேவை: சமஸ் பேட்டி

26 Apr 2024

மோடி-ஷா அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக சபர்கந்தா, வதோதரா, அம்ரேலி, ராஜ்கோட் தொகுதிகளில் வெடித்த போராட்டங்களும் மோதல்களும் பாஜக தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. இரு தொகுதிகளில் வேட்பாளர்களைக் கையோடு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. சமூகரீதியாக இதுவரை பாஜக பராமரித்த கணக்குகளிலும் ஓட்டைகள் விழ ஆரம்பித்துள்ளன.

பேராசிரியர் கவுரங் ஜானி முக்கியமான ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார். “இடஒதுக்கீட்டுக்கு எதிராக முற்பட்ட சாதியினர் போராட்டங்கள் நடத்திய இடம் இது. பாஜக முற்பட்ட சாதியினர் பக்கம் அப்போது நின்றது. பிராமணர்கள், படேல்கள், பனியாக்கள், சத்திரியர்கள் இவர்கள் அந்தக் காலகட்டத்தில் பாஜகவின் பலமாக இருந்தார்கள். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்களை காங்கிரஸ் நம்பியது. பிற்பாடு, இந்துத்துவக் குடைக்குள் இவர்களையும் கொண்டுவந்துவிட்டது பாஜக. காங்கிரஸால் அணி மாற்ற முடியவே இல்லை!”

ராஜஸ்தானிலும் கிட்டத்தட்ட இதே கதைதான். ஆனால், குஜராத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மையுள்ள  படேல்களுடைய நீடித்த ஆதரவு பாஜகவுக்குக் கிடைத்திருப்பது அதன் பெரிய பலம். ஆனால், மஹாராஷ்டிரத்தில் இதே காரணிதான் இந்த முறை பாஜகவை அச்சத்தில் தள்ளியிருக்கிறது. அங்கே பெரும்பான்மைச் சமூகமான மராத்தாக்கள் இந்த முறை என்ன முடிவெடுப்பார்கள் என்பதே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் என்கிறார்கள்.

மும்பையைச் சேர்ந்த பங்குச்சந்தை வணிகர் கிரீஷ் சொன்னார். “இரண்டு தவறுகளைத் தேவையில்லாமல் பாஜக செய்தது. சிவசேனையை உடைத்து ஆட்சியை வசப்படுத்தியது முதல் தவறு. தேசியவாத காங்கிரஸை உடைத்தது அதைக் காட்டிலும் பெரிய அடுத்த தவறு. சரத் பவார் மராத்தாக்களின் பெரிய தலைவர். அவர் மீதான தாக்குதலாகவே பலர் இதைப் பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகள் மீது ஒரு பச்சாதாபத்தை இது உருவாக்கிவிட்டிருக்கிறது. தவிர, மாநில அளவில் பாஜக மீது அதிருப்தியும் இருக்கிறது!”

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

மஹாராஷ்டிரத்தில் மராத்தாக்கள் முற்பட்ட சமூகம் என்றாலும், நிலவுடைமைச் சமூகமான இவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றனர். விவசாயத்தின் வீழ்ச்சி பெரும் நெருக்கடியில் இவர்களைத் தள்ளியிருக்கிறது. “பாஜக வெறும் ஆதரவு வார்த்தைகளைப் பேசினால் போதாது; எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்; வேளாண்மையோடு இணைந்த தொழிற்சாலைகள் வேண்டும்” என்ற குரல்களை கிராமங்களில் சகஜமாகக் கேட்க முடிகிறது. அதேசமயம், நகரங்களின் மனநிலை வேறுபட்டிருந்தது. “மோடி இந்திய பொருளாதாரத்துக்குப் பெரிய உத்வேகம் தந்திருக்கிறார். அரசாங்கம் என்ன செய்திருக்கிறதோ, இல்லையோ; பிரதமருடைய வார்த்தைகளே பெரிய உத்வேகம்தான்!”

கோவாவில் இரு தொகுதிகள். ஏற்கெனவே காங்கிரஸ் கையில் ஒன்றும் பாஜக கையில் ஒன்றும் இருக்கின்றன. “டெல்லியோடு ஒத்துப்போக வேண்டும். அவ்வளவுதான் இங்கே அரசியல். சுற்றுலாத் துறையைத் தாண்டி இங்கே என்ன பொருளாதாரம் இருக்கிறது? சுற்றுலாவை வளர்க்க வேண்டும். அவ்வளவுதான்” என்றார்கள் பனாஜியில்.

மும்பையில் தன்னுடைய யாத்திரையை ராகுல் காந்தி முடித்ததற்கான அர்த்தத்தைத் தேர்தலுக்குப் பின் பார்ப்பீர்கள் என்று பீடிகை போடுகிறார்கள் ‘இந்தியா’ கூட்டணியினர். சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் இரண்டு பிளவைச் சந்தித்திருப்பதால் அவர்களுக்கு இந்தத் தேர்தல் வாழ்வா, சாவா யுத்தம் ஆகியிருக்கிறது. உத்தர பிரதேசத்துக்கு அடுத்து நாட்டிலேயே அதிகமான தொகுதிகளைக் கொண்டுள்ள மஹாராஷ்டிரத்தின் முடிவு எதுவாயினும் அது டெல்லியில் தீவிரமாக எதிரொலிக்கும் என்பதை பாஜகவினருமே ஒப்புக்கொள்கின்றனர்!

-‘குமுதம் ரிப்போர்ட்டர்’, ஏப்ரல், 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி

மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்

பாஜகவை வீழ்த்த கடும் உழைப்பு தேவை: சமஸ் பேட்டி
வெற்றியைத் தர முடியாவிட்டால் மோடியை ஆர்.எஸ்.எஸ். நீடிக்க விடாது
ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
வடக்கு: மோடியை முந்தும் யோகி
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3






சண்முகநாதன் கலைஞர் பேட்டிநூல்கள்தேசியத்தின் அவமானம்ஆசாத் உமர்இயக்குநர் மணிரத்னம்முஸ்லிம்களுக்கு கிடைக்குமா அரசியல் அங்கீகாரம்?ஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத்தின் கண்டனம்லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரிமனநலம்துஷார் ஷாகதைசொல்லல்பிரிட்டன்அந்தரங்கம்sub nationalism in tamilகேரளாமாற்றங்கள் செய்வது எப்படி?கெசாரேகேரிங்திடீர் இறப்புஉழவர்சேவா பாரதிமிஸோரம்: தேசம் பேச வேண்டிய விவகாரம்அருணாசல பிரதேசம்oppositionசர்க்கரைதோள்பட்டை வலிவரலாற்றுப் புதினம்சாம் பித்ரோடா கட்டுரைஅரசு கலைக் கல்லூரிகள்முரசொலி கருணாநிதி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!