கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 5 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்

சமஸ் | Samas
03 May 2024, 5:00 am
1

நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். 

டுத்து டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யாராக இருந்தாலும், தனிப் பெரும் கட்சியாக பாஜக வரும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. பாஜக இம்முறை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடுவதும், எதிரே காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதும்கூட இந்தச் சூழலை உத்தரவாதப்படுத்தும் காரணிகளில் ஒன்றாகி இருக்கிறது.  

மக்களவைக்கு மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பாஜக 413இல் போட்டியிடுகிறது; காங்கிரஸ் 294 இடங்களில் போட்டியிடுகிறது; எஞ்சிய இடங்களை இரு கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளோடு பகிர்ந்துகொண்டிருக்கின்றன. ஒப்பீட்டுக்காக சரிபாதி இடங்களில் வெற்றி எனும் வாய்ப்பை இரு கட்சிகளுக்கும் கொடுத்தாலேகூட காங்கிரஸ் 150 இடங்களைத் தொடுவது கஷ்டம்; பாஜக 200 இடங்களைக் கடந்துவிட முடியும். 150 எனும் எண்ணிக்கையை பாஜக கடந்துவிட்டாலே தனிப் பெரும் கட்சி எனும் இடத்துக்கு அது வந்துவிட முடியும்.

சரி, பத்தாண்டுகள் ஆட்சிக்குப் பின்னரும், பாஜகவுக்கு ‘தனிப் பெரும் கட்சி’ எனும் சூழல் நீடிக்க காரணமாக அமைந்திருப்பது எது? அயோத்தி ராமர் கோயில் கட்டுமானமா; காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கமா; குடியுரிமைச் சட்டமா?

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மக்களிடம் பேசுகையில், பாஜக வாக்களிப்பேன் என்றோ, மோடி வேண்டும் என்றோ சொன்னவர்களில் ஆகப் பெரும்பாலானோர் சொன்ன முதல் 3 விஷயங்கள் என்ன தெரியுமா? சாலைகள் - சுரங்கப் பாதைகள் - பாலங்கள், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் விலையில்லா கோதுமை - அரிசி, குடிநீர் இணைப்புகள். அடுத்த நிலையிலும்கூட, மருத்துவக் காப்பீடு திட்டம், வீடு கட்ட அளிக்கப்படும் நிதி, கழிப்பறைகள், மருத்துவக் கல்லூரிகள் கட்டுமானம் இவற்றையெல்லாம்தான் மக்கள் சொன்னார்கள். ஆம், மக்கள் நலத் திட்டங்கள்தான் பாஜக ஆதரவாளர்களிடமும்கூட முன்னுரிமை வகித்தன.

அப்படியென்றால், பாஜகவின் இந்துத்துவத் திட்டங்கள் அல்லது தேசியத்துவத் திட்டங்கள் உண்டாக்கியிருக்கும் விளைவுகள் என்ன? நிச்சயம் அவை சமூகத்தில் தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன. நாட்டின் எந்த மாநிலத்திலும், நான் ராமர் கொடியைப் பார்த்தேன். 

முக்கோணக் காவிக் கொடி. அதில் சீதையோ, அனுமனோ வேறு யாரும் உடன் இல்லாமல் வில்லுடன் தனித்து நிற்கும் ராமர். பின்னணியில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோயில். இந்தி மாநிலங்களில் பயணிக்கையில் பெரும்பாலான ஊர்களில் வீடுகளிலும், கடைகளிலும் ராமர் கொடியைப் பார்த்தேன். பெருநகரங்களில், பெங்களூருவில்தான் கொடி அதிகம்; வீதிக்கு வீதி எல்லா வணிக நிறுவனங்களிலும் பறந்தது. தமிழ்நாட்டில்தான் கொடி குறைவு. கேரளத்தில்கூட கொடி ஆங்காங்கே தென்பட்டது. 

2024, ஜனவரியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. நான் அதற்கு இரண்டு மாதங்கள் பின்னர் பயணித்த இடங்களிலும் கொடியைக் கண்டேன் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். “இந்துக்கள் ராமர் ஜனித்த இடம் என்று அயோத்தியை நம்புகிறார்கள். முஸ்லிம்களுக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை ஏதும் அயோத்தியோடு இல்லாத சூழலில், ஏற்கெனவே மசூதி இருந்த இடத்தில் ஒரு பகுதியை ராமர் கோயிலுக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். உத்தர பிரதேசத்தில் காசி உள்பட எத்தனையோ இடங்களில் கோயிலும் மசூதியும் இப்படி அருகருகே இருக்கின்றன. பொதுஜனமாக உள்ள முஸ்லிம்களுக்கு இப்படி இடத்தைச் சமுகமாகப் பகிர்ந்துகொள்வதில் ஆட்சேபணை ஏதும் இருந்ததுபோல அவர்களுடைய பேச்சில் தெரியவில்லை. மசூதியை இடித்து அங்கே கோயில் எழுப்ப வேண்டும் என்று பொதுஜனமாக உள்ள இந்து மக்களும் நினைக்கவில்லை. இரண்டு தரப்பு மத அமைப்புகளும் முரண்டுச் சூழலை உருவாக்கிவிட்டன. எனக்கெல்லாம் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை. ஆனால், இப்போது ராமருக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளபோது அதை நான் கொண்டாடினேன்!” என்று அமேத்தியில் நான் சந்தித்த பெரியவர் ஒருவர் தெரிவித்தார். கொல்கத்தாவில் நான் சந்தித்த இளம்பெண்ணுடைய குரல் தீவிரமாக வேறுபட்டது. “இந்த நாட்டில் இந்துக்கள் ஒன்றும் இரண்டாம்தர குடிமக்கள் கிடையாது. ராமருக்கு கோயில் கட்ட சின்ன இடத்தைக் கொடுக்காதவர்களுக்கு மோடிதான் சரியான பதிலடி கொடுத்தார்” என்றார் அவர். இரு துருவ எண்ணங்கள். இருவருமே மோடியைத் தேர்ந்தெடுக்க முதன்மைக் காரணமாக நலத் திட்டங்களையே சொன்னார்கள்.

மக்கள் அதிகம் குறிப்பிட்ட விஷயங்களின் பட்டியலில் - கடைசி வரிசையில்தான் என்றாலும் - ‘ஜி20 மாநாடு’ இடம்பெற்றது எனக்கு ஆச்சரியம் தந்தது. நாட்டின் பெருமையை இது உயர்த்துவதாகப் பலரும் சொன்னார்கள். நாட்டின் 50 ஊர்களில் இந்த மாநாட்டை மோடி அரசு திட்டமிட்டு நடத்தியது இந்த வகையில் அதற்கு வெற்றியைக் கொடுத்திருப்பதாகவே எண்ணுகிறேன். மும்பையில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் இதுபற்றி பெருமிதமாக ஐந்து நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார். பாஜகவின் தேசியத்துவக் கணக்குகளும் சமூகத்தில் தாக்கத்தை உண்டாக்கவே செய்கின்றன. அவரும் மோடியைத் தேர்ந்தெடுக்க மக்கள் நலத் திட்டங்களையே முதன்மைக் காரணங்களாகச் சொன்னார்.

கட்டுமானங்கள் உருவாக்கம் பலரிடமும் ஆழமான தாக்கத்தை உருவாக்கியிருப்பதை இந்தப் பயணத்தின்போது கண்டேன். “புதிய ரயில்கள் ஓட்டத்தை முன்பெல்லாம் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது ரயில்வே அதிகாரியோ ஆரம்பித்து வைப்பார்கள். இப்போதுதான் ஒரு பிரதமர் இதற்கெல்லாம்கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து நிற்கிறார்” என்ற கிண்டல்களைச் சமூக வலைதளங்களில் சகஜமாகப் பார்த்திருப்போம். ஆனால், புதிய சாலைகளையோ, பாலங்களையோ, சுரங்கப் பாதைகளையோ திறந்து வைப்பதும், ரயில்கள் ஓட்டத்தைக் கொடியசைத்து ஆரம்பித்து வைப்பதும் மக்கள் நினைவுகளில் தீவிரமாக உறைகின்றன.

உத்தர பிரதேசத்தின் பச்ரவா பகுதியில், வயலில் நின்றிருந்த விவசாயிகள் சொன்னது இது, “இந்த நெடுஞ்சாலைகளில் செல்ல எங்களிடம் கார்கள் இல்லை. ஆனால், எங்களுடைய அடுத்த தலைமுறையினர் கார்கள் வாங்க இந்தச் சாலைகள் உதவும். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள் முன்பைக் காட்டிலும் இப்போது சீக்கிரமாக வீடு திரும்புகிறார்கள். அவர்களுடைய சைக்கிள்களுக்கு இந்தச் சாலைகள் வசதிதானே!”

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

மோடி அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு கொடுத்த கவனம் வெளிப்படை. சாலைப் போக்குவரத்துத் துறைக்கான பட்ஜெட் மட்டும் இந்த அரசின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட பத்து மடங்கு அளவுக்கு அதிகரித்தது. சென்ற பத்தாண்டுகளில் பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3.7 லட்சம் கி.மீ. அளவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன; இதேபோன்று 55,000 கி.மீ. அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன; 1300 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன; துறைமுகங்கள் - விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன என்று பாஜக சொல்கிறது. உள்ளூரில் மட்டும் அல்லாது, நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குப் பயணிக்கும் எவரிடமும் இது தாக்கத்தை உண்டாக்க வல்லது; இயல்பான வளர்ச்சிப் பணிகள் என்று ஏனைய அரசுகளைப் போல அல்லாமல், மோடி அரசு இந்தப் பணிகளை வியூகரீதியாகவும் கையாளுகிறது.

தன்னுடைய ஆளுகைக்கு உள்பட்டதும், கட்சிக்கு நிதியாதார நம்பிக்கையுமான மஹாராஷ்டிரத்தில் மட்டும் 12,000+ கி.மீ. அளவுக்கான சாலைகளை தேசிய நெடுஞ்சாலை வலைக்குள் மோடி அரசு கொண்டுவந்திருக்கிறது. அடுத்து, பாஜக ஆட்சி அமைக்கப் பெரும் எண்ணிக்கைகளை அள்ளி வழங்கிய உத்தர பிரதேசம். இங்கே கிட்டத்தட்ட 8,000 கி.மீ. அளவுக்கு நெடுஞ்சாலைப் பணிகள் நடந்திருக்கின்றன. அடுத்து, பாஜகவுக்கு இரு தசாப்தங்களுக்கு மேல் கோட்டையாகத் திகழும் மத்திய பிரதேசம். இங்கு கிட்டத்தட்ட 4,000 கி.மீ. அளவுக்கு நெடுஞ்சாலைப் பணிகள் நடந்திருக்கின்றன. அடுத்து, பிரதமர் மோடியை வழங்கிய குஜராத். இங்கே கிட்டத்தட்ட 3,200  கி.மீ. அளவுக்கு நெடுஞ்சாலைப் பணிகள் நடந்திருக்கின்றன. அடுத்து, சென்ற இரு முறையும் மாநிலத்தில் உள்ள அத்தனை இடங்களை பாஜக கூட்டணிக்குக் கொடுத்த ராஜஸ்தான். இங்கும், 3,000 கி.மீ. அளவுக்கு நெடுஞ்சாலைப் பணிகள் நடந்திருக்கின்றன. பத்தாண்டுகளில் அதிகமான சாலைப் பணிகள் நடைபெற்றதில் முன்னணி வகிக்கும் இந்த 5  மாநிலங்களில் மட்டுமே 208 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பதையும் சென்ற முறை 90% இடங்களை இங்கே பாஜக கூட்டணி கைப்பற்றியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

மோடி அரசின் சாலைக் கட்டுமானத்துக்குக் கொடுத்துள்ள விசேஷமான பிராந்தியம், எல்லைப்புறப் பகுதிகள். நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில், ராணுவரீதியாக கவனம் அளிக்கப்படும் கவனம் இதுவென்றாலும், வெகுதொலைவில் உள்ள விளிம்போர ஊர்களும் இதனால் பலன் அடைகின்றன. ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், அருணாசல பிரதேசம் இங்கெல்லாம் குறிப்பிடத்தக்க சாலைப் பணிகள் இந்தப் பத்தாண்டுகளில் நடந்துள்ளன. தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களுக்குக் கிட்டத்தட்ட இணையாக அருணாசல பிரதேசத்தில் 2,250 கி.மீ. அளவுக்கு நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு பிராந்தியத்துடன் இணைக்கும் ‘செனானி - நஷ்ரி’ 9 கி.மீ. நீள சுரங்கப் பாதை குறிப்பிடத்தக்க ஒரு பொறியியல் சாதனை. 

அதுபோலவே, உலகிலேயே உயரமானதான ரோஹ்தாங்க் அடல் சுரங்கப் பாதையும். இமாசல பிரதேசத்தில், 10,000 அடி உயரத்திலுள்ள மலை முகடுகளைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 9 கி.மீ. சுரங்கப் பாதை மாணாலி நகரத்தை லாஹுல் ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைப்பது ஆகும். ஆண்டில் 6 மாத காலம் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்களுக்கு வெளியுலகத் தொடர்பே சாத்தியம் இல்லை. பனி அப்போது பிராந்தியத்தை முழுமையாகச் சூழ்ந்திருக்கும். பனி விலகும் கோடை நாட்களில் பள்ளத்தாக்கை விட்டு வெளியே வருவதும் எளிதான பயணம் இல்லை. “புதிதாக உருவாக்கப்படும் இத்தகைய சுரங்கப்பாதைகள் இங்கு வாழும் மக்களுக்குக் கொடுக்கும் நிம்மதியை அளவிட வார்த்தைகளே இல்லை” என்றார் பள்ளத்தாக்கைச் சேர்ந்த ஓர் இளம்தாய். 

முன்னதாக ஐந்து மணி நேரத்துக்கு, 45 கி.மீ. அபாயகரமான மலையைச் சுற்றிச் சுற்றி பயணம் மேற்கொள்ள வேண்டும். இப்போது கால் மணியில் 9 கி.மீ. பயணத்தில் அதே தொலைவைக் கடந்துவிட முடிகிறது. தன்னுடைய தந்தை கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு நாளில் மணாலி மருத்துவமனையை அடைய ரோஹ்தாங்க் சுரங்கப் பாதையானது, உயிர்ப் பாதையாக இருந்தது என்று அவர் நினைவுகூர்ந்தார். ‘ரோஹ்தாங்’ என்றால் பாரசீகத்தில், ‘இறந்த உடல்களின் குவியல்’ என்று அர்த்தம். இந்தப் பாதையைக் கடக்கும்போது எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும் என்பதை இந்தச் சொல் நினைவூட்டுகிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

பிரதமர் மோடி இதைத் திறந்து வைத்துக் கையசத்த படம் வெகு பிரபலம். இப்போது மோடியுடன் இணைத்தே எல்லோரும் இந்தச் சுரங்கப் பாதையைப் பேசுகிறார்கள். ஆனால், 2002இல் இந்தப் பாதைக்குத் திட்டமிட்டு அடிக்கல் நாட்டியவர் அன்றைய பிரதமராக இருந்த வாஜ்பாய். தொடர்ந்து உரிய நிதியை ஒதுக்கி பணிகளை முடுக்கிவிட்டவர் அடுத்த பிரதமரான மன்மோகன் சிங். சுரங்கப் பாதைக்காக  பாறைகளைத் தகர்க்கும் முதல் குண்டு அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் 2010இல் வெடிக்கப்பட்டது; கடைசி குண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில் 2017இல் வெடிக்கப்பட்டது. “தொடர்ந்து நிதி ஒதுக்கியதுதான் மோடி அரசு செய்த வேலை. அப்படிப் பார்த்தால் மன்மோகன் அரசும் தொடர்ந்து நிதி ஒதுக்கியது. ஆனால், ஏதோ தன் ஆட்சியில்தான் எல்லாமுமே விதைக்கப்பட்டு நடந்தது போன்ற தோற்றத்தை மோடி உருவாக்கிவிடுகிறார். இது வாஜ்பாய் காலத் திட்டம் என்று இங்குள்ள உள்ளூர் மக்களுக்கே தெரியும், ஏனென்றால், அவர் இந்தப் பகுதிக்கு வந்து சென்றவர். அதனால், பாதைக்கு என்னவோ வாஜ்பாய் நினைவாகப் பெயர் சூட்டுகிறேன் என்று சொல்லிவிட்டார் மோடி. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருபவர்கள் மோடியுடன் இணைத்தே இதைப் பேசியபடி கார்களில் கடக்கின்றனர். ஏன்? வாஜ்பாய் பெயரை வாஜ்பாய் என்றே நாடு அறிந்திருக்கிறது; அடல் என்று இல்லை; மோடி ஏன் அடல் என்று பெயர் சூட்டினார் என்று உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டார் மணாலியைச் சேர்ந்த உள்ளூர் காங்கிரஸ்காரர் ஒருவர்.

எல்லாக் கதைகளுக்கும் இப்படிப் பல பின்கதைகள் இருக்கின்றன. வெளியே அரசியல் தலைவர்கள் தங்களுடைய வெற்றிக்கான காரணங்களை எப்படிச் சித்திரிக்கிறார்கள் என்பது தனிக் கதை. மக்களுடைய முன்னுரிமையில் நலத் திட்டங்களே முன்னணி வகிக்கின்றன. எது எப்படியாயினும், இந்தத் தேர்தலில் மோடியை நினைவுகூர்வதிலும் பாஜகவுக்கு ஓட்டுகளைச் சேர்ப்பதிலும் சாலைகள் முக்கியமான பங்கை வகிக்கின்றன!

- ‘குமுதம் ரிப்போர்ட்டர்’, மே, 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ramasubbu   15 days ago

பா. ஜ. க. வை தீவிரமாக எதிர்க்கும் உங்களின் கட்டுரை உண்மை தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. எதிர்க்கும் பிரிவை சேர்ந்த உங்களால் உண்மையை மறைக்க இயலவில்லை. காங்கிரஸ் மட்டும் தற்போது ஆட்சியில் இருந்து இருந்தால் இந்த அளவு வளர்ச்சியை நாடு கண்டிருக்காது. தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உட்டோப்பியாஃபேட்டி லிவர்முத்துசாமி ஸ்கூல்மாநிலப் பாடல்தமிழ் வம்சாவளிநுகர்பொருள்ப்ராஸ்டேட் சுரப்பிடி.வி.பரத்வாஜ் பேட்டிதேனுகாதூயன் கட்டுரைஅதிகார மிடுக்குஆர்மரி ஸ்கொயர்பின்நவீனத்துவம்வர்ணமற்றவர்களும்தகவல் தொடர்புத் துறைஒயிட்டனிங் கிட்ஸ்வாந்தே பேபுவுக்கான நோபல் ஏன் முக்கியமானதாகிறது?பேரூட் டு வாஷிங்டன்குற்றம்மருத்துவர் ஜீவாதீர்ப்பின் பொன்விழாவும் தீர்க்கமான பாதையும்சாதனை நிறுவனம் அமுல்சீக்கியர்கள்காந்திய சிந்தனைஇலக்கியவாதிதொகுதிப் பங்கீடுஅரசியல் – பொருளாதாரம்ஒரு தேசம் ஈராட்சி முறைவாசகர்கள் கடிதம்திருவொற்றியூர் விபத்து

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!