கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 5 நிமிட வாசிப்பு

அமேத்தி சொல்லும் செய்தி என்ன?

சமஸ் | Samas
25 May 2024, 5:00 am
0

நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். 

ந்திய நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கான நுழைவாயில் என்று உத்தர பிரதேசத்தைக் குறிப்பிடுவது உண்டு. நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளதோடு, இந்தி பிராந்தியத்தில் பெரும் அரசியல் தாக்கத்தை உருவாக்கும் மையமாகவும் அது இருப்பதுதான் காரணம். 

குஜராத் அடித்தளத்தில் உருவெடுத்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லி அரசியலை நோக்கி நகரும்போது ஏன் வாராணசியைத் தன்னுடைய தொகுதியாகத் தேர்ந்தெடுத்தார்? நாட்டின் அவர் வரையிலான 13 பிரதமர்களில் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாய் என்று 8 பிரதமர்கள் உத்தர பிரதேசப் பின்னணியிலிருந்துதான் வந்தார்கள். 

நாட்டின் முதல் பிரதமரான நேரு அவருக்கு இருந்த செல்வாக்குக்கு இந்தியாவின் எந்தத் தொகுதியில் நின்றிருந்தாலும் ஜெயித்திருக்கலாம்; உத்தர பிரதேசத்தின் புல்பர் தொகுதியையே அவர் தேர்ந்தெடுத்தார். 1952, 1957, 1962 மூன்று முறையும் அவர் நின்று வென்றதால் ‘நேரு தொகுதி’ என்றே அதற்கு ஒரு பெயர் உண்டு. நேருவின் மறைவுக்குப் பின் அவருடைய சகோதரி விஜயலட்சுமி பண்டிட் 1964இல் இங்கு நின்று வென்றார். அதற்குப் பின் காங்கிரஸின் முதல் குடும்பம் இங்கே எந்த விசேஷ அக்கறையும் காட்டவில்லை. புல்பரிலிருந்து வந்த இன்னொரு பிரதமர் வி.பி.சிங்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இந்திராவின் கணவர் ஃபெரோஸ் காந்தி மும்பைதான் பின்னணி என்றாலும், காங்கிரஸில் இணைந்து பணியாற்றலான பின்னர் நேரு குடும்பம் இருந்த உத்தர பிரதேசத்தின் அலகாபாத் நகரமே அவருடைய மையமானது. தாண்டன், லால் பகதூர் சாஸ்திரி உள்பட பல மூத்த தலைவர்கள் காங்கிரஸில் அலகாபாத்துக்கான பட்டியலில் இருந்ததால், தனக்கான ஒரு தொகுதியாக ஃபெரோஸ் காந்தி ராய்பரேலியைக் கண்டடைந்தார். 1952, 1957 இரு தேர்தல்களிலும் அவர் வென்றார். 1960இல் அவர் மறைந்த பிறகு, காங்கிரஸின் முதல் குடும்பம் மீண்டும் ராய்பரேலியை 1967இல் வந்தடைந்தது. அதுவரை மாநிலங்களவை உறுப்பினராகவே தேர்ந்தெடுக்கப்பட்டுவந்த இந்திரா முதல் முறையாக ராய்பரேலி வழியாகவே மக்களவையை வந்தடைந்தார்.

அதே 1967 தேர்தலில்தான் அமேத்தி தொகுதி உருவாக்கப்பட்டிருந்தது. அமேத்தியும், ராய்பரேலியும் ஒன்றையொன்று ஒட்டியுள்ள தொகுதிகள். அடுத்துவந்த 1971 தேர்தலிலும் ராய்பரேலியிலிருந்தே இந்திரா போட்டியிட்டு வென்றார். நெருக்கடிநிலைக்குப் பிறகு அவர் சந்தித்த 1977 தேர்தலில் ராய்பரேலி மக்கள் இந்திராவைப் புறக்கணித்தனர். ஜனதா கட்சியின் ராஜ் நாராயணன் வென்றார். 1980 தேர்தலில் ராய்பரேலி, மேடாக் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற இந்திரா மேடாக்கைத் தன்வசம் வைத்துக்கொண்டு ராய்பரேலியைக் கைவிட காரணம் இருந்தது. இன்றைய தெலங்கானாவில் உள்ள மேடாக்கின் உறுப்பினர் பதவி தெற்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று அவர் எண்ணினார். வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்த ஏற்கெனவே ராஜீவ் களத்தில் இறங்கியிருந்தார். 1980இல் அறிமுகமான ராஜீவை 82% வாக்குகளுடன் மக்களவைக்கு அனுப்பியிருந்தனர் அமேத்தி மக்கள்.

இந்திரா களத்திலிருந்து நகர்ந்தாலும், தொடர்ந்து காங்கிரஸ் கோட்டையாகவே இருந்தது ராய்பரேலி. 1996, 1998 தேர்தல்கள் விதிவிலக்கு. வாஜ்பாய் அலை இந்தத் தேர்தல்களில் பாஜகவுக்கு இங்கே வெற்றியைத் தந்தது. 1999 தேர்தலில் சோனியா காந்தி அரசியல் களத்துக்கு வந்திருந்தார். தன்னுடைய அறிமுகத்துக்குத் கணவர் ராஜீவின் அமேத்தியையே அவர் தேர்ந்தெடுத்து வென்றார் என்றாலும், அமேத்தியில் அவர் போட்டியிட்ட தாக்கம் ராய்பரேலியிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் வேட்பாளர் சதீஷ் சந்திரவைத் தேர்ந்தெடுத்து பாஜகவுக்கு விடை கொடுத்தது ராய்பரேலி. 2004 தேர்தலில் ராகுல் களத்துக்கு வந்தார். மகனுக்கு அமேத்தியைக் கையளித்துவிட்டு, ராய்பரேலிக்கு இந்தத் தேர்தலில் மாறினார். 2004, 2009, 2014, 2019 நான்கு தேர்தல்களிலும் சோனியாவைத் தேர்ந்தெடுத்தனர் ராய்பரேலி மக்கள். மூன்று முறை மட்டுமே இதுவரை காங்கிரஸுக்கு வெளியே ராய்பரேலி சென்றிருக்கிறது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்

சமஸ் | Samas 03 May 2024

அமேத்தியும் அப்படித்தான். நெருக்கடிநிலைக்குப் பிந்தைய 1977 தேர்தல், வாஜ்பாய் அலை சூழ்ந்த 1998 தேர்தல் நீங்கலாக காங்கிரஸின் கோட்டையாகவே இருந்தது. 2004, 2009, 2014 மூன்று தேர்தல்களிலும் ராகுலை அது தேர்ந்தெடுத்தது. 2019 தேர்தலில் ராகுல் அமேத்தியோடு, வயநாட்டிலும் போட்டியிட்ட சூழலில், பாஜகவின் ஸ்மிருதி இராணியை அது தேர்ந்தெடுத்தது. 

அதிகாரபூர்வமாக ராகுல் தலைமையில் காங்கிரஸ் சந்தித்த முதல் தேர்தல் 2019 எனும் பின்னணியில், வெறும் 52 இடங்களில் அது முடங்கியதைக் காட்டிலும், அமேத்தியில் அடைந்த தோல்விதான் ராகுலைப் பெரும் தாக்குதலுக்கு ஆளாக்கியது. பாஜகவும் ஊடகங்களும் அவரைக் குறிவைத்துத் தாக்கின. தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார்.

அப்போதே காங்கிரஸின் மூன்று முக்கியமான தவறுகளை அமேத்தி வெளிப்படுத்தியது. 

1. பிராந்தியத்துக்கான பிரத்யேக கற்பனை. 

ராகுல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் தன்னைப் பிரதிநிதியாகக் கருதினாரே தவிர, தனக்கான தொகுதியில் ஒரு பிரதிநிதியாக உரிய கவனம் செலுத்தவில்லை. 

அமேத்தியில் ராஜீவ் காலத்தில் நிறையப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்து, ராகுல் காலத்திலும் குறிப்பிடத்தக்க சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாலும், ராய்பரேலிக்கு சோனியா கொண்டுவந்த திட்டங்கள் அளவுக்குக்கூட அவை இணை நிற்கக்கூடியவை இல்லை. 

2014இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, அவருடைய தொகுதியான வாராணசிக்கு பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் ரூ.45,000 கோடி திட்டங்களும், பிரம்மாண்டமான மாற்றங்களும் பாஜகவால் உத்தர பிரதேச மக்களிடம் திரும்பத் திரும்பப் பேசப்படுகின்றன. 

அமேத்தியில் 2022இல்தான் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. “தன் தொகுதிக்காக ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட ராகுலால் பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் ஏன் உருவாக்க முடியவில்லை?” என்ற பாஜகவின் கேள்வியை உள்ளூர் காங்கிரஸாராலேயே எதிர்கொள்ள முடியவில்லை.

2. மக்களுடைய தேவைக்கான செவிசாய்ப்பு. 

டெல்லிக்கே ராஜாவானாலும், தொகுதி மக்கள் குறைகேட்க வர வேண்டும் என்கிறார்கள் மக்கள். 

2004-2014 பத்தாண்டுகளில் ராகுல் எத்தனை முறை அமேத்திக்கு வந்தார் என்பதை 2014 தேர்தலின்போது திரும்பத் திரும்ப கேட்டார் அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இராணி. 2014 தேர்தலில் வென்ற பிறகு, ராகுல் இந்த விஷயத்தில் அக்கறை காட்டினார் என்றாலும், மக்களிடம் அவருடைய மாற்றம் நெருக்கத்தை உண்டாக்கவில்லை. 2014-19 காலகட்டத்தில் அமேத்திக்கு ராகுல் 17 முறை வந்து சென்றார் என்றால், ஸ்மிருதி இராணி 21 முறை வந்து சென்றிருந்தார். 

2014 தேர்தலில் ராகுலோடு போட்டியிட்டு தோல்வியுற்றபோதும், மாநிலங்களவை வழியாக ஸ்மிருதி இராணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, அமைச்சராக்கி அமேத்தியில் தொடர்ந்து அவரைக் கவனம் செலுத்த வைத்தது பாஜக. 

2019 வெற்றியின் தொடர்ச்சியாக, அமேத்தியில் சொந்த வீடு கட்டிவிட்டார் ஸ்மிருதி இராணி. 2019-2024 காலகட்டத்தில் ராகுல் மூன்று நான்கு முறைதான் அமேத்திக்கு வந்து சென்றார் என்கிறார்கள் தொகுதி மக்கள். தொகுதியில் ராகுல் சார்பில் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளும் இந்த இடைவெளியைப் போக்கவில்லை.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

3. வியூகத் தவறுகள். 

2019 தேர்தலில் தெற்குக்கு காங்கிரஸ் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், “அமேத்தியோடு, வயநாட்டிலும் ராகுல் போட்டியிடுவார்” என்று காங்கிரஸ் அறிவித்தபோது, “ராகுல் வென்றாலும் இங்கிருந்து வெளியேறிவிடுவார்; ஸ்மிருதி இராணி தோற்றாலும் உங்களோடு  இருப்பார்” என்ற பாஜகவின் சொற்களை அமேத்தி மக்கள் ஆழ்ந்து பரிசீலித்தனர். கூடவே, “ராகுலுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது; அதனால்தான் பாதுகாப்புக்காக கேரளம் செல்கிறார்” என பாஜக பேசலானது. ராகுலின் இந்த முடிவு உத்தர பிரதேசம் மீதான நம்பிக்கையை நேரு குடும்பம் இழந்துவிட்டது என்ற பிரச்சாரத்துக்கும் வழிவகுத்தது. மாநிலத்தில் கட்சியின் மோசமான தோல்விக்கு இதுவும் சேர்ந்தே பங்களித்தது.

இந்தப் புள்ளிகள் யாவற்றின் பின்னணியிலும் யோசித்தால், 2024 தேர்தலில் காங்கிரஸும் ராகுலும் எடுத்திருக்கும் முடிவை எப்படி மதிப்பிடுவது? 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

வடக்கு: மோடியை முந்தும் யோகி

சமஸ் | Samas 12 May 2024

ராகுல் இந்த முறை மீண்டும் துணிச்சலாக அமேதிக்குத் திரும்பியிருக்க வேண்டும். உத்தர பிரதேசத்தோடு ஒட்டுமொத்த நாட்டுக்கும் அது புத்தெழுச்சி தந்திருக்கும். அல்லது வயநாட்டில் அவரும், ராய்பரேலியில் பிரியங்காவும் நின்றிருக்க வேண்டும். வடக்கு - தெற்கு வியூகத்துக்கு இந்த முடிவு வலு சேர்த்திருக்கும். அல்லது வயநாட்டிலும், அமேத்தியிலும் ராகுல் நிற்கும் முடிவை எடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் அதுவும்கூட தற்காப்புடன் கூடிய முன்னகர்வாக இருந்திருக்கும். இதையெல்லாம் விட்டுவிட்டு வயநாட்டிலும் ராய்பரேலியிலும் நிற்பது; அமேத்தியில் தன் குடும்பத்தைச் சேராத ஒருவரை நிறுத்துவது என்ற அவரது முடிவு எந்த வகையிலும் கட்சிக்கோ, கூட்டணிக்கோ வலு சேர்க்கும் முடிவாக அமையாது. ஏன் ராகுலால் மீண்டும் அமேத்தியைச் சிந்திக்க முடியவில்லை? காரணம் இதுதான். தொகுதியில் கட்சியின் முந்தைய தவறுகள் எதுவும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில்கூட திருத்தப்படவில்லை.

காங்கிரஸுடைய இந்த முடிவை ‘ராகுலின் பாதுகாப்பான ஆட்டம்’ என்று சிலர் வர்ணிக்கின்றனர். அர்த்தமே இல்லாத வாதம் இது. ஏனென்றால், மக்களைவைக்குச் செல்வதற்கான வாய்ப்பாகக் கருதி ராய்பரேலியில் ராகுல் நிற்கவில்லை. வயநாட்டில் அவருக்கு ஏற்கெனவே வெற்றி காத்திருக்கிறது. இரு தொகுதிகளிலும் வென்றால், ஒன்றை ராஜினாமா செய்துதான் ஆக வேண்டும் என்பதால், எண்ணிக்கை அளவில் இந்த வெற்றி காங்கிரஸுக்கு எந்த முன்னகர்வையும் கொடுக்கப்போவதில்லை. ஆனால், வியூகரீதியாக “ராகுல் பயந்துவிட்டார்” எனும் பாஜகவின் பிரச்சாரத்துக்கு ஏதோ ஒரு வகையில் வலு சேர்த்துவிட்டது காங்கிரஸின் இந்த முடிவு. மேலும், அரசியலில் தடுப்பாட்டம் ஆடுபவர்களைவிட மோதலாட்டம் ஆடுபவர்களுக்கே மக்கள் அள்ளித் தருகிறார்கள்!

-‘குமுதம் ரிப்போர்ட்டர்’, மே, 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொர்புடைய கட்டுரைகள்

வடக்கு: மோடியை முந்தும் யோகி
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
ததும்பும் மேற்கு
வேலைவாய்ப்பின்மை, வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிவுகள்
வடகிழக்கு: புதிய அபிலாஷைகள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

1

நக்ஸலைட்இந்திய சாட்சியச் சட்டம்சோடாஎஸ்எஃப்ஐஓவாக்குப்பதிவு இயந்திரத்தை நம்பவைக்க சில யோசனைகள்தேர்தல்கள்அம்பேத்கரின் இறுதி நாள்இல்லியிஸம் பாமாகென்னெத் கவுண்டாகூடாதாஇரட்டை என்ஜின் அரசுகலப்படம்தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இந்தியில் பேச முற்பட வேகுறைந்தபட்ச ஆதரவு விலை: சட்ட உத்தரவாதம் உண்மையில் விவசாயம்சர்வதேச வர்த்தகம்வைக்கம்P.Chidambaram article in tamilவெகுஜன எழுத்தாளர்பிரச்சினைபாஇஞ்சித் திருவிழாஏழைகள் எங்கே இருக்கிறார்கள்?குஜராத் பின்தங்குகிறதுநடப்புக் கணக்கு பற்றாக்குறைவன்கொடுமைமஹா விஹாஸ் அகாடிசட்ட நிர்ணய சபைதேர்தல் நடைமுறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!