கட்டுரை, அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கூட்டாட்சி 2 நிமிட வாசிப்பு
சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழல்!
தேர்தல் பத்திரங்களில் பல்வேறு கட்சிகளும் பயன்பெற்று இருக்கின்றன. கட்சி பேதமில்லாமல் பலரும் பெற்றிருக்கும் அந்த நிதி, பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.
இந்தியத் தேர்தல்களில், கறுப்புப் பணத்தின் பங்கு மிக அதிகம். ஆனால், இதை மாற்றப்போகிறோம். எல்லாமே சட்டப்படி நடக்கும் எனச் சொல்லி, கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திர முறை மிகப் பெரும் தில்லுமுல்லுகளை சட்டப்பூர்வமாக்க உதவியிருக்கிறது என்பதே உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வழியே வெளியான தரவுகள் மூலம் நாம் அறிந்துகொள்ளும் உண்மை.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மோசடித் திருத்தம்
தேர்தல் பத்திர முறையின் மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தம் மிகப் பெரிய மோசடியாகும். இதற்கு முந்தைய முறையில், நிறுவனங்கள் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி அளிக்க வேண்டுமெனில், அவை குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் லாபமீட்டும் நிறுவனமாக இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் அந்த நிறுவனம் ஈட்டிய சராசரி லாபத்தில், 7.5% மட்டுமே கொடுக்க முடியும் என்பதே விதி.
ஆனால், பாஜக கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில், இந்த விதிமுறைகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டன. இதனால், பல நிறுவனங்கள் தாங்கள் ஈட்டிய லாபத்தைவிடப் பல மடங்கு அளவை தேர்தல் நிதியாகக் கொடுத்துள்ளன.
எடுத்துக்காட்டாக, இந்தத் தேர்தல் பத்திரங்களில் மிக அதிகமாக நன்கொடை கொடுத்த ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம், 2019-2020 முதல் 2022-2023 வரையிலான மூன்று ஆண்டுகளில் ஈட்டிய மொத்த லாபம் ரூ.215 கோடி. இதே காலகட்டத்தில் இவர்கள் திமுக, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்குக் கொடுத்த நன்கொடை ரூ.1,368 கோடி.
கெவண்டர் ஃபுட் பார்க் என்னும் நிறுவனம், இந்தக் காலகட்டத்தில் ரூ.12 லட்சம்தான் லாபம் ஈட்டியிருக்கிறது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் வழியே ரூ.195 கோடி கொடுத்திருக்கிறது. அதே குழுமத்தைச் சேர்ந்த மதன்லால் லிமிடெட், மூன்று ஆண்டுகளில் ரூ.13 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறது. கொடுத்த தேர்தல் நன்கொடை ரூ.185 கோடி. இது எப்படிச் சாத்தியம் என்னும் கேள்விக்கு நாம் யூகிக்கக்கூடிய பதில் ஒன்றுதான். கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் (Money laundering). இதைக் கட்சி பேதமில்லாமல் அனைவரும் செய்திருக்கிறார்கள்.
சந்தி சிரிக்கும் நிலை
இந்தத் தேர்தல் பத்திரங்களில், இன்னும் ஒரு முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “172 அரசு ஒப்பந்தங்களைப் பெற்ற 33 நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன” என்று உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடுத்துள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ளார். ரூ.3.7 லட்சம் கோடி ஒப்பந்தங்களைப் பெற்ற இந்த நிறுவனங்கள், ஆளும் பாஜகவுக்கு ரூ.1,751 கோடி ரூபாய்களைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கியுள்ளன என அவர் மேலும் குற்றஞ்சாட்டுகிறார்.
இதைவிட ஊழலுக்கு ஒரு சிறந்த உதாரணம் இருந்துவிட முடியாது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்துமே இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் தாண்டிச் செல்கின்றன.
‘நான் ஊழல் செய்ய மாட்டேன்: மற்றவர்களையும் செய்யவிட மாட்டேன்’ (நா காவூங்கா… நா கானே தூங்கா!) எனப் பீற்றிக்கொண்ட பிரதமர் மோடியின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது.
தொடர்புடைய கட்டுரைகள்
எண்ணும் – எழுத்துமாக எத்தனை வகை கஞ்சிகள்!
தேர்தலில் கிடைக்குமா சுதந்திரமும் வளர்ச்சியும்?
தேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.