கட்டுரை, அரசியல், வரலாறு 7 நிமிட வாசிப்பு
நேரு எதிர் படேல் விவாதம் மோசடியானது, ஏன்?
ஜவாஹர்லால் நேருவுக்குப் பதில் சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராகியிருந்தால், காஷ்மீர் பிரச்சினை இருந்திருக்கவே இருக்காது என்பது போன்ற மோசடியான விவாதங்கள் அரசியல் களத்தில் இன்றளவும் நடைபெறுகின்றன. இப்படி எதையாவது பேசி படேலின் வாரிசைப் போல பாஜக அவருக்கு சொந்தம் கொண்டாடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் அவரை மீட்டே ஆக வேண்டும்.
காங்கிரஸிடமிருந்து வல்லபபாய் படேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களைக் கைப்பற்றி, தங்களால் மதிக்கப்படும் தேசியத் தலைவர்களாக மக்கள் மனதில் பதியவைக்கும் திட்டத்தில் மோடியின் பாஜக முன்னெடுத்துவருவது வெளிப்படையானது. விஷயம் என்னவென்றால், இந்த இரு தலைவர்களும் இப்போது உயிரோடு இருந்திருந்தால், நாட்டில் இப்போது நிலவும் பெரும்பான்மையின தேசியத்தைக் கடுமையாகக் கண்டித்திருப்பார்கள். ஆனால், தனது முயற்சியில் பாஜக வென்றிருக்கிறது என்றே கூற வேண்டும். படேலும் போஸும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் என்று நம்பும் தலைமுறை இப்போது உருவாகியிருக்கிறது.
படேல் பிரதமராகி இருந்தால்?
குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட படேல் சிலை மீண்டும் அந்தக் கேள்விக்கு புத்துயிர் கொடுத்துள்ளது: ஜவாஹர்லால் நேருவுக்குப் பதிலாக வல்லபபாய் படேல் பிரதமராகியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?
உண்மைக்கு மாறான இந்தக் கற்பனை எப்போதுமே மறைய மறுக்கிறது - குறிப்பாக குஜராத்தில்; நேருவைவிட திறமைசாலியான, தேசியவாதியான, முதலாளித்துவத்துக்கு ஆதரவான படேல் பிரதமராக முடியாமல் தடுக்கப்பட்டு பெரிய அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாக குஜராத்திகள் கருதுகின்றனர்.
நேரு பிரதமராகாமல் படேல் ஆகியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்போர், மூன்று விஷயங்கள் இப்படித்தான் தொடர்ந்திருக்கும் என்ற அடிப்படையில் அந்த ஊகங்களை முன்வைக்கின்றனர்.
முதலாவது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நேரு பதவியேற்றதை வல்லபபாய் படேல் விரும்பவில்லை என்ற ஊகம். இரண்டாவது, நேருதான் பிரதமராக வேண்டும் என்று வலியுறுத்தியதன் மூலம், சக குஜராத்தியரான படேலைக் கைவிட்டுவிட்டார் காந்தி. மூன்றாவது, நாடு சுதந்திரம் அடைந்த ஆரம்பக் கட்டத்தில் பிரதமராக படேல் இருந்திருந்தால் பல விஷயங்கள் மாறி நடந்திருக்கும்; சரி, எப்படி? இதை யாராலும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
காஷ்மீர் பிரச்சினை தீர்ந்திருக்குமா?
காஷ்மீரில் நமக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்காமல் பாகிஸ்தானை உரிய வகையில் கையாண்டிருப்பார் படேல் என்ற நம்பிக்கை பலரிடமும் இருக்கிறது. இப்படி நினைப்பதற்குக் காரணம் அடிப்படையையே சரியாகப் புரிந்துகொள்ளாததுதான். காஷ்மீர் பிரச்சினையின் மையம் ஸ்ரீநகரில் அல்ல - இஸ்லாமாபாதில்தான் இருக்கிறது. பாகிஸ்தானுடன் சரியான முறையில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்த முடிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை, 1972-ல் சிம்லா ஒப்பந்தம் மூலம் அது ஏற்பட்டது. அப்படியும் பிரச்சினை தீராமல் தொடர்வதற்குக் காரணம், பிரச்சினை ஸ்ரீநகர் அல்ல வேறிடம்தான்.
படேல் இருந்திருந்தால் இது நடந்திருக்கும், அது தடுக்கப்பட்டிருக்கும் என்ற ஊக விவாதங்கள் அனைத்துமே பயனற்றவை. காரணம், இந்திய நாடாளுமன்றத்துக்கு முதல் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, அதாவது 1950 டிசம்பரிலேயே மரணம் அடைந்துவிட்டார் படேல். அப்படியே அவர் பிரதமராகப் பதவி வகித்திருந்தாலும் அர்த்தமுள்ள வகையில் மக்களின் எண்ணங்கள் மீது செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்திருக்க மாட்டார்.
அப்போது அவருக்கு வயது 75, நேருவைவிட 15 ஆண்டுகள் மூத்தவர். நேருவுக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்; ஜின்னா, காந்தி ஆகியோருக்கு அடுத்தபடியாக, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மரணம் அடைந்துவிட்டார் படேல். 1948 ஜனவரியில் முதலில் காந்தி, பிறகு செப்டம்பரில் ஜின்னா - நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட பிறகு - மரணத்தைத் தழுவினர்.
இப்படி நோய்வாய்ப்பட்டிருந்தாலும் பெரிய பதவியில் அமர்ந்ததால் ஆயுளை நீட்டித்துக்கொண்டவர்கள் (பி.வி. நரசிம்ம ராவ்) உதாரணமும் நம்மிடம் இருக்கிறது. "அதிகாரம் ஒருவருக்குப் புத்துயிர்ப்பை அளித்து, ஆற்றலைப் பெருக்கிவிடுகிறது" என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரும் இதையே கூறியிருக்கிறார். படேல் திடீரென்று மரணித்துவிடவில்லை, உடல்நிலை படிப்படியாக மோசமடைந்துதான் இறந்தார். 1950 டிசம்பரில் மாரடைப்பால் காலமானார் படேல்.
அன்றைய சுதேச சமஸ்தானங்களை இந்திய அரசுடன் இணைத்ததுதான் படேலின் பெரிய சாதனை. இதனால்தான் நர்மதை நதியைப் பார்த்த நிலையில் வடிக்கப்பட்டிருக்கும் அவருடைய பிரம்மாண்ட திருவுருவச் சிலைக்கு ‘ஐக்கிய சிலை’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சுதேச சமஸ்தானங்கள் இந்திய அரசுடன் சேருவது, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே நடந்து முடிந்துவிட்டது. ஜூனாகட், ஹைதராபாத், ஜம்மு-காஷ்மீர் ஆகியவை மட்டுமே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அரசில் இணையாமல் தனித்திருந்தன. உண்மை என்னவென்றால், படேலின் சிறந்த பங்களிப்பு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே நடந்து முடிந்துவிட்டது.
ஆகையால், விரும்பியபடி செயல்படும் செல்வாக்கில் இருந்தார் படேல் என்று, அவருக்கு உண்மையில் இருந்திராத செல்வாக்கைக் கற்பனையாக ஏற்றிச் சொல்வது சரியான வாதமாக இருக்க முடியாது.
மதச்சார்பற்றவர் படேல்
காந்தியும் நேருவும் சேர்ந்து பிரதமர் பதவியை படேலுக்கு மறுக்காமல் இருந்திருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும், காஷ்மீரில் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது என்றெல்லாம் பேசுவதற்குக் காரணம்தான் என்ன?
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த சில சம்பவங்கள் நாம் விரும்பியபடி இல்லாமல் போனதால், படேல் இருந்திருந்தால் இது நடந்திருக்காது, இப்படியிப்படி நடந்திருக்கும் என்று இன்றைக்கு காணப்படும் சூழலைக் கொண்டு பேசிக்கொண்டிருக்கிறோம். அதிக இந்துத்துவம், அதிக முஸ்லிம் எதிர்ப்புணர்வு கொண்ட சூழலில் வாழ்கிறோம். நாம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று விரும்பும் இந்துத்துவர்கள், படேலை அந்த இடத்துக்குக் கொண்டுபோய் வைக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால் அவர்கள் படேலைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். படேல் எந்த அளவுக்கு மதச்சார்பற்றவர் என்பதை ரஃபீக் ஜக்கரியா தான் எழுதிய புத்தகத்தில் விவரித்திருக்கிறார். அரசமைப்புச் சட்ட நிரண்ய சபையில் இந்துக்களுக்காக படேல் ஆற்றிய உரையைப் படித்தால் இது புரியும். “நாட்டு மக்களில் பெரும்பான்மையினராக இருக்கும் நாம் (இந்துக்கள்), சிறுபான்மையின மக்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிறுபான்மையினரை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும், நாம் சிறுபான்மையினராக இருந்து இப்படி நடத்தப்பட்டிருந்தால் அதைப் பற்றி என்ன நினைப்போம்!” என்று பேசியிருக்கிறார் படேல்.
மற்றவர்களை மதம் மாற்றவும் - குறிப்பாக இந்துக்களை முஸ்லிம்களாக மதம் மாற்றவும் - முஸ்லிம்களுக்கு மதச் சுதந்திர உரிமையைக் கொடுத்ததற்குக் காரணமே படேல்தான் என்கிறார் ஜக்கரியா. இதுதான் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து இந்தியா தனித்துவமானது என்பதைக் காட்டுகிறது, இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் மிகவும் நாகரிகமானதாக இருப்பதற்கும் அதுவே காரணம்.
தங்களுடைய நிறுவனங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொள்வதற்கான உரிமையை சிறுபான்மை மக்களுக்கு வழங்கியதும் படேல்தான். படேல் இப்படி சிறுபான்மையினருக்குத் தனியுரிமைகளை வாங்கித் தந்திருப்பார் என்று நம்மால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்களை படேல் சந்தேகக் கண்ணோடு பார்த்தார் என்பதும் உண்மை. ஆனால் இந்த உணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தன்னை ஒரு தேசியத் தலைவராகவே கடைசிவரை நிலைநிறுத்திக் கொண்டவர் படேல்.
அம்பேத்கர் விரும்பியதற்கும் மாறாக, தங்களுக்கென்று தனித் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் சட்ட நிர்ணய சபையிலிருந்தே விலக்கிக்கொள்ள முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்தவர் படேல். முஸ்லிம்களும் இதை விரும்புவார்கள் என்று நம்பியே சீக்கியர்கள் முதலில் தங்களுக்கென்று தனித் தொகுதிகளைக் கேட்டனர். படேலின் இந்த பெருந்தன்மையான செயல்பாடு காரணமாக, ‘முஸ்லிம்கள் எப்போதுமே பிரிவினையர்கள்தான்’ என்ற அவச்சொல் அவர்களுக்கு நேராமல் போனது.
படேலைப் பற்றி காந்தி இப்படிக் கூறியிருக்கிறார்: “சர்தாரைப் பற்றி எனக்குத் தெரியும். இந்து - முஸ்லிம்கள் பிரச்சினை தொடர்பாகவும் வேறு சில விஷயங்களிலும் அவருடைய அணுகுமுறை என்னுடைய, ஜவாஹர்லால் நேருவுடைய அணுகுமுறைகளைவிட மாறுபட்டது. அவையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரானவை என்று கூறுவது உண்மையைக் கேலிக்குரியதாக்கும் செயல்கள். அனைத்து சமுதாய மக்களுக்கும் இடம்தரும் வகையில் மிகவும் விசாலாமானது சர்தாரின் பரந்து விரிந்த இதயம்.”
எதிர்த்தரப்பு முழுதாக, தவறாக, படேலைத் தங்களுடையவராக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்குக் காங்கிரஸ் அவரைத் தங்களுடையவர் என்று உரிமை கொண்டாடத் தவறிவிட்டது என்பதும் உண்மை. படேலை மீண்டும் தங்களுக்கு உரியவராக மீட்பது காங்கிரஸின் வரலாற்றுக் கடமை!
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Seeni Mohan 3 years ago
காந்தி கொல்லப்பட்டது ஜனவரி 30, 1948. இவ்வளவு தெளிவான கட்டுரையை எழுதிய ஆகார் படேல் மார்ச் 1948 என்று குறிப்பிடுவது ஆச்சரியம் அளிக்கிறது.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
SABARINATHAN NAGARAJ 3 years ago
1948 ஜனவரி 30 காந்தியடிகள் மறைந்த தினம் . தவறுதலாக மார்ச் என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையான வரலாற்றை எவ்வித சார்ப்புமின்றி பதிவு செய்திருந்தால் தலைவர்களின் கொள்கைகளுக்கு நேர்முரணான கட்சிகள் , இயக்கங்கள் உரிமைகோருகிற அவலம் நிகழாது.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Satheesh Kumar 3 years ago
ஓஹோ..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.