கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

நேர்மையாக, நியாயமாக நடக்குமா 2024 தேர்தல்?

யோகேந்திர யாதவ்
30 Mar 2024, 5:00 am
2

க்களவைத் தேர்தல் தொடர்பாக இப்போதே பாதுகாப்பான ஓர் எச்சரிக்கை: ‘சுதந்திர இந்தியாவில் நடைபெறும் 2024 தேர்தல், நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்காது’.

இந்தத் தேர்தலில் பல நடைமுறைகள் மாற்றப்பட்டு ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப நடத்தப்படுமா அல்லது முழுக்கவே கேலிக்கூத்தாகிவிடுமா என்பது இப்போதைக்குத் தெரியாது.

தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதுசெய்யப்பட்ட விவகாரத்திலிருந்து, ‘நம்பத்தகுந்த தேர்தல்’ என்ற நிலையிலிருந்து மாறிவிடும் என்பதற்கான ஆரம்பம் தெரிந்துவிட்டது. பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்தைப் போலவோ அல்லது தொலைவிலிருக்கும் ரஷ்யாவைப் போலவோ தேர்தல் நடைமுறைகளை கேலிக்கூத்தாக்கும் திசையில் ஓட்டி நடக்கத் தொடங்கியிருக்கிறோம்.

இப்படி எழுத மிகுந்த வேதனைப்படுகிறேன். இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்துக்கு என்னை நானே தூதுவனாகக் கருதி உலக அரங்கில் பேசியிருக்கிறேன். மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பாவை மையமாக வைத்த அவற்றின் தரக் குறியீடுகளையும் எதிர்கொண்டு பேசியபோது இந்தியத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதாக வாதிட்டது அல்லாமல் கொண்டாடியும் இருக்கிறேன்.

முதலாவது மக்களவைத் தேர்தலை 1951-52இல்  நடத்திய ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது உலகின் பிற நாடுகளிலிருந்து வந்த தேர்தல் ஆணையர்களிடையே உரையாற்ற இந்தியத் தேர்தல் ஆணையம் 2002இல் என்னை அழைத்திருந்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வலிமையையும், தேர்தலில் கட்சிகள் நிகழ்த்தும் போட்டியையும், கோடிக்கணக்கான மக்களை எளிதாக வாக்களிக்க வைக்கும் நிர்வாக ஆற்றலையும் விளக்கிப் பெருமிதம் பொங்கப் பேசினேன்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அவையெல்லாம் இப்போது என் மனசாட்சியை உறுத்துகின்றன. நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடைபெறாமல் போவது, இந்தியாவில் இது முதல் முறையும் அல்ல. இந்தியாவின் நெடும்பயணத்தில், தேர்தல் முறைகேடுகள் என்ற கரும்புள்ளி அவ்வப்போது தோன்றியுள்ளன. ஆனால், அவையெல்லாம் மாநில அளவில் அல்லது சில தொகுதிகளில் மட்டும் நடந்தவை. தேசிய அளவில் அப்படி இதுவரை நடந்ததில்லை.

வங்கத்தில் 1972இல் நடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல், அசாமில் 1983இல் நடந்த பேரவைத் தேர்தல், பஞ்சாபில் 1992இல் நடந்த பேரவைத் தேர்தல் போன்றவை, ‘நம்பகமான தேர்தல்’ என்பதற்கான குறைந்தபட்ச வரம்புகளைக்கூட மீறியவை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பெரும்பாலான சட்டப்பேரவைத் தேர்தல்கள் (1977, 2002 விதிவிலக்கு) மோசடியானவைதான். 1987இல் நடந்தது மிகவும் அவமானகரமான தேர்தல்.

இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலைக்குப் பிறகு நடந்த 1977 மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்சாரம், வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுவது எல்லாமே முறையாக நடந்தன. தேர்தல் முடிவே அதற்கு சாட்சி (காங்கிரஸ் தோற்றது, எதிர்க்கட்சி ஜனதா வென்று ஆட்சியைப் பிடித்தது). 2019 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவிடம் தொண்டர் பலம், பண பலம், ஊடக ஆதரவு பலம், அரசு நிர்வாக இயந்திர பலம், தேர்தல் ஆணையத்தின் அனுசரணை என்று எல்லாமே இருந்தும் - கட்சி சார்பான பெரிய செயல்பாட்டுக்கு, அது இடம் தரவில்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சர்வாதிகார நாடாகிறதா இந்தியா?

யோகேந்திர யாதவ் 05 Mar 2024

தொடர்ச்சியான வீழ்ச்சி

அந்த வரம்புகள் அனைத்துமே இந்த முறை மீறப்படுகின்றன. இந்தக் கட்டுரையை நான் எழுதும் நேரத்தில் தில்லியில் அமல்பிரிவு இயக்குநரக அதிகாரிகள் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஆஆக பிரமுகரின் வீட்டுக்குச் சோதனைக்காகப் போகிறார்கள். பத்திரிகைகளைப் புரட்டி, தலைப்புகளை மட்டும் பார்க்கிறேன். வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தொடர்ந்த வழக்கில், தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சித் தலைவர் கே.கவிதா கைதுசெய்யப்பட்டார்; கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆஆக தொண்டர்கள் தில்லியில் போராட்டம்; இமாச்சலத்தில் ஆளும் காங்கிரஸைச் சேர்ந்த 6 பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு - பாஜகவில் சேர்ந்தனர்; காங்கிரஸ் கட்சியை முடக்கும் அளவுக்கு, வருமான வரித் துறை மிகப் பெரிய தொகையை அபராதமாக விதிக்கிறது; ‘கொள்கை ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்புக்கு அரசு அளித்த உரிமம் ரத்துசெய்யப்பட்டதால் அதன் தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து யாமினி ஐயர் விடுவிக்கப்படுகிறார் – அன்னிய நாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றுச் சட்டப்படி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, வரி செலுத்துமாறு அதற்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது; நடிகை கங்கணா ரணாவத் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடேவுக்கு எதிராக நாடெங்கும் கண்டனக் குரல்கள் எழுகின்றன – அதுவும் அவர் மன்னிப்பு கேட்ட பிறகும்; வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த திலீப் கோஷுக்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கண்டனங்கள்.

அடுத்த நாள் காலை வாட்ஸப்பில் மேலும் பல தகவல்கள்: சிவசேனை (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே - யுபிடி) சார்பில் காலை 9 மணிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார்; காலை 10 மணிக்கு அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய விசாரணை தொடர்பாக அமல்பிரிவு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்புகிறது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, அரசியல் நிகழ்ச்சிகளை ‘டேன்ஸ் ஆஃப் டெமாக்ரசி’ என்று தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்களைக் கூறுவதும், பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளும் வலிமையான ஆதாரங்கள் இல்லைதான்; ஜனநாயகம் – தேர்தல் உதவிகள் தொடர்பாக சர்வதேச நிறுவனம் (ஐஐடிஇஏ) 173 நாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் தேர்தல், அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை மதிப்பிடுகிறது. 2014 முதல் 2022 வரையில் இந்தியாவின் மதிப்பெண் 71%லிருந்து 60% ஆக சரிந்துவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் மோசமான நாடுகள் வரிசையில் 50வது இடத்திலிருந்து 66வது இடத்துக்குக் கீழிறங்கிவிட்டது.

இதை மேற்கத்திய நாடுகளின் சதி என்று கூறக்கூடும். அதன் இணையதளத்தைப் பார்த்தால் அந்த அமைப்பில் இந்தியாவும் உறுப்பினர் என்பதும் அதன் நிர்வாகக் குழுவில் இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோராவும் இருக்கிறார் என்பதும் தெரியும். நேர்மையான தேர்தல் குறியீட்டெண் என்ற இன்னொரு சர்வதேச மதிப்பீட்டில், இந்தியாவுக்கு 59% மதிப்பெண்தான் தரப்பட்டுள்ளது. அத்துடன் மஞ்சள் நிற எல்லையில் இந்தியா இருக்கிறது. பிரேசில், கானா, நேபாளத்துக்குக் கீழே இருப்பது ஆறுதல்.

இப்படியே போனால் 2024 தேர்தலுக்குப் பிறகு ஆரஞ்சு வண்ணம் இந்தியாவுக்குத் தரப்படலாம். ‘இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடு அல்ல - தேர்தல் ஜனநாயக நாடு மட்டுமே’ என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். அந்த முடிவையும் அவர்கள் விரைவில் மாற்றிக்கொண்டுவிடக்கூடும். ரஷ்யாவில் நடந்ததைப் போல கேலிக்கூத்தோ, பாகிஸ்தானில் நடந்ததைப் போல மோசடியோ அல்ல என்றாலும் – ‘மோசமான ஜனநாயக நாடு’ என்ற நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். நியாயமாக தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கையை இழக்கும் வகையில், சுற்றி வளைப்புகள் தொடங்கியுள்ளன. இது தொடர்ந்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொத்தை அமுக்கும் சுதந்திரமும், வாக்குகளை எண்ணுவதில் நேர்மையும் மட்டும் நிகழலாம்.

அடையாளக் குறியீடுகள்

இந்தத் தேர்தல் நேர்மையாகவும் நடுநிலையாகவும் நடைபெறாது என்பதற்கு நான் ஐந்து அடையாளக் குறியீடுகளைப் பார்க்கிறேன்.  

முதலாவது குறியீடு:

டி.என்.சேஷன் தொடங்கிவைத்த சுதந்திரமான தேர்தல் ஆணையம் என்ற மரபின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஏன் திடீரென விலகினார் என்ற மர்மம் தீருவதற்கு முன்னால், காதும் காதும் வைத்தார்போல இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் ஆணையர்களைத் தேர்வுசெய்யும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இருக்க வேண்டும் என்ற அதன் தீர்ப்பு மதிக்கப்படவில்லை. அதை உச்ச நீதிமன்றம் கேள்விக் கேட்பதற்கு அவகாசம் தராமல், அவசரம் காட்டப்பட்டது கேலிக்கூத்தானது.

இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்று யாரும் குறையும் கூறவில்லை, பதவி விலகிய கோயலின் விசுவாசம் குறித்து யாரும் கேள்வியும் கேட்கவில்லை. இப்போதைய ஆட்சியாளர்களுக்கு விசுவாசிகளான இரண்டு உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட விதமானது, தேர்தல் ஆணையத்தில் இருந்தவர்கள், ஆளுங்கட்சியின் உத்தரவு எதற்காவது கட்டுப்பட விரும்பவில்லையா அல்லது விரும்பியும் செய்ய முடியாமல் போய்விட்டதா என்று புரியவில்லை.

வெளிப்படையாகச் சொல்வதென்றால், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் என்பது மக்களவைத் தலைவர், சட்டப்பேரவைகளின் தலைவர் ஆகியோருடைய சுதந்திரம் மாதிரிதான். தேர்தல் ஆணையர் என்பவர், தேர்தலை நடத்த வேண்டிய அதிகாரியாக மட்டும்தான் - சேஷன் காலத்துக்கு முன்னால் இருந்ததைப் போல - தொடர்கிறார். ஆளுங்கட்சி விரும்பும் வகையில் தேர்தலை நடத்தி முடிக்கும் அமைப்பாகக்கூட அது இனி மாறிவிடலாம்.

இரண்டாவது அறிகுறி:

தேர்தல் நடத்தை விதி நெறிமுறைகளைக் குப்பையில் போடும் அரசின் செயல்கள், இரண்டாவது அறிகுறியாகும். எந்தக் காலத்திலும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் முழுமையாக அமல்செய்யப்படுவதில்லை; ஆனால், காலம் செல்லச் செல்ல அதை நீர்த்துப்போக வைப்பது அதிகமாகிறது. தேர்தல் அட்டவணை அறிவிப்பும், நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக அறிவிப்பதும் ஆளுங்கட்சியை ஒரு கட்டுக்குள் வைக்கும் முயற்சிதான்.

நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் தில்லி முதல்வர் கைதுசெய்யப்பட்டிருப்பதும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் அமல் பிரிவு இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்துவதும் புதிய முன்மாதிரிகளாகும். நடத்தை நெறிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்குத்தான் ஆளுங்கட்சிக்கு இல்லை என்பதே இதன் பொருள். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதைத் தடுக்கவில்லை, எதிர்க்கட்சிகள் சட்ட விரோதமானவை என்று அறிவித்துவிடவில்லை, வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்படவில்லை, வாக்குகள் எண்ணிக்கையின்போது அப்பட்டமான மீறல்கள் இல்லை என்று வேண்டுமானால் திருப்திப்படலாம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பழைய குடியரசும் புதிய குடியரசும்

யோகேந்திர யாதவ் 30 Jan 2024

மூன்றாவது அறிகுறி:

எதிர்க்கட்சிகளுக்குத் தேர்தல் செலவுக்கு பணமே கிடைக்காமல் வற்றச் செய்துவிட்ட செயல். ஆளுங்கட்சிகள் எப்போதுமே தேர்தல் நிதியாக பெருந்தொகையைக் கைப்பற்ற விரும்பும், எதிர்க்கட்சிகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று புரவலர்களை எச்சரிக்கும். முதன்முறையாக, வரம்பின்றி பணம் பெறுவதில் திருப்தி அடைந்துவிடாமல் வேறு சில வேலைகளிலும் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது.

தேர்தல் நன்கொடை பத்திர விற்பனை என்பது மிகப் பெரிய ஊழலின் வெளியில் தெரியும் சிறிய முனைதான். எதிர்க்கட்சிகளுடைய வங்கிக் கணக்குகளைக்கூட வரி பாக்கிக்காக முடக்கிவைத்து அவற்றைச் செயலற்றதாக்குகிறது ஆளுங்கட்சி. இது ஆளுங்கட்சி மட்டும் போட்டி போடும் வலிமையுள்ள தேர்தலாக இருக்கப்போகிறது.

நான்காவது அறிகுறி:

சந்தேகத்துக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், அதில் பதிவாகும் வாக்குகளைச் சரிபார்ப்பதற்கான பதிவுச் சீட்டு துணை இயந்திரம் பற்றியது. இதைப் பற்றி வேறு கட்டுரைகளில் எழுதியிருப்பதால் இங்கே அதிகம் விளக்கப்போவதில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்ற சந்தேகம் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது, ஆனால், இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது தனது கடமை என்று தேர்தல் ஆணையம் கருதவில்லை. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் நேரம் ஒதுக்கக் கோரியும், அவர்களைச் சந்திக்க ஆணையம் மறுத்துவிட்டது.

இந்தியத் தேர்தல் ஏன் நம்பகமாக இருந்துவருகிறது என்றால் தோற்றவர்கள் முடிவை, நேர்மையானது என்று ஒப்புக்கொள்வதால்தான். இனி அந்த நம்பகத்தன்மையும் இந்தத் தேர்தலுக்குப் பிறகு இருக்காது.

ஐந்தாவது அறிகுறி:

அரசமைப்புச் சட்டம், தேர்தல் தொடர்பான சட்டக் கட்டமைப்புகள் ஆக்கிரமிக்கப்படுவது. தேர்தலுக்குச் சில நாள்களுக்கு முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விதிகளை ஒன்றிய அரசு அறிவிக்கிறது.

குடியுரிமை பெறுவதில் அனைவருக்கும் சம உரிமை என்பதைக் குலைக்கும் வகையில், ஒரு மதத்தவருக்கு மட்டும் அது மறுக்கப்படுகிறது. இந்தத் தேர்தலின் முடிவை மாற்றும் அளவுக்கு அது முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாரபட்சமான ஒரு விதியை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்யாமல் விட்டால், எதிர்காலத்தில் இதைவிட பாரபட்சமான விதியை அரசு கொண்டுவர தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். போலிச் செய்திகளை ரத்துசெய்யும் அதிகார விதிகளை உச்ச நீதிமன்றம் இந்த முறை நிறுத்திவைத்தாலும், எதிர்காலத்தில் செய்தித் தணிக்கைக்கான அச்சாரம் இப்போது போடப்பட்டிருக்கிறது. இது மோசமான அடுத்த அறிகுறியாகும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

இதுவரை நடந்ததில்லை என்று சொல்லும் இன்னொரு மோசமான உதாரணம், அசாமில் - மக்களவைத் தொகுதி எல்லை மறுவரையில் - நடந்திருக்கிறது. அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் எல்லைகளை விருப்பப்படி மாற்றிக்கொள்ளும் ஜெர்ரிமேன்டரிங் நடைமுறையை அசாம் அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக எல்லைகள் மாற்றப்பட்டதைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. எதிர்காலத்தில் மக்களவைத் தொகுதி எல்லைகள் மாற்றப்படுவதற்கு இதுவே முன்னுதாரணமாகிவிடும்.

1952இல், ‘வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை’ என்று இந்திய அரசு முடிவெடுத்தபோது மேற்கத்திய நாடுகள் நம்பமறுத்ததுடன் இழிவாகப் பேசின. இது சாத்தியம்தான் என்பதை நம்முடைய திறமையான வழிகள் மூலம் காட்டிவிட்டோம். பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற பல நாடுகளுக்கு நாம் ஜனநாயக நடைமுறைகளில் வழிகாட்டியாகத் திகழ்ந்துவருகிறோம். அந்த நம்பிக்கையை, நன்மதிப்பை நாம் இழந்துவிடக் கூடாது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சர்வாதிகார நாடாகிறதா இந்தியா?
வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்க சில யோசனைகள்
பழைய குடியரசும் புதிய குடியரசும்
இந்தியாவின் பெரிய கட்சி எது?
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   9 months ago

Fascist BJP will go to any low level to secure votes including manipulating the voting machine.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   9 months ago

சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய அரசியல் வரலாற்றில் எப்போதும் நிகழாத வண்ணம் தற்போது சுயாதீன நிறுவனங்கள் அரசியல்படுத்தப் பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் சில முன்னமேயே நடந்திருந்தாலும், தற்போது எந்தவித தயக்கமும் சங்கோஜமும் இல்லாமல் நடப்பது வேதனை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

வாழ்க்கையைச் சிதைக்கலாமா சட்டம்?எஸ். அப்துல் மஜீத்தமிழவன் தமிழவன்சமஸ் விபி சிங்மாமியார் மருமகள்பா.வெங்கடேசன்அணுக்கருகல்வியும்பண்பாடுஅச்சுத்திசை மாறுமியக்கம்அசல் மாமன்னன் கதைபொதுவிடம்பாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லைபாரம்பரிய விவசாயம்ஹிஜாப் தடைஏறுகோள் என்னும் ஜல்லிக்கட்டுஓம் பிர்லாமறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் சகோதசாதி – மத அடையாளம்ஜெர்மனிஇந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?வெறுப்பரசியல்அருந்ததி ராய்வட வேங்கடம்சமூகவியல்வேலூர்பா.வெங்கடேசன் - சமஸ்ஒரு மலையாளத் திரைப்படத்தின் தமிழ் வணக்கம்சட்டப்பூர்வ உரிமைஅம்ருத காலம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!