கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
ஒரே நாடு – ஒரே தேர்தல்: எதிர்ப்பது ஏன்?
மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்ற கருத்தை விருப்பு-வெறுப்பு இல்லாமலும் கட்சி சார்பு இல்லாமலும் ஆராய வேண்டும்.
தேர்தல் நடைமுறை தொடர்பான எந்த விவாதமாக இருந்தாலும் அதில் அரசியல் இல்லாமல் இருக்காது, சில தனிநபர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் நலன் கருதிய வாதங்கள் இல்லாமல் போகாது. இந்த யோசனையே சந்தேகத்துக்குரியது (அது உண்மையாகவே இருந்தாலும்) என்று கூறி முழுதாக நிராகரிப்பது அறிவுடைமை அல்ல.
ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடந்த கடந்தகால வரலாற்றையும், அந்த நடைமுறை செயல்பட்ட விதத்தையும் அதிலிருந்து நியாயத்தன்மையையும் பரிசீலிக்க வேண்டும். தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக இதைத் திசைத்திருப்பும் முயற்சியாக மேற்கொள்கிறது என்பதுதான் எதிர்ப்பவர்களின் முக்கிய குற்றச்சாட்டு.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான அதிருப்தியைக் கருத்தில்கொண்டு ஹரியாணா, மஹாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் முன்னர் ஒரே சமயத்தில் நடந்த தேர்தல், இப்போது வெவ்வேறு கட்டங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. தேர்தலில் வெற்றிபெறுவது மட்டும்தான் அரசியல் கட்சிகளின் இலக்கு என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
தேர்தல் ஒரே சமயத்தில் நடக்கிறதோ, வெவ்வேறு கட்டங்களில் நடக்கிறதோ - வெற்றி மட்டுமே இறுதி இலக்கு. ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்பது திசைத்திருப்பும் முயற்சி மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய நிறுவனங்களின் வீழ்ச்சி என்று கூறி, முக்கியமான இதர பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
பண்பாட்டு தேசியம்
பாஜக இந்தக் கருத்தை வலியுறுத்தக் காரணம் அரசியல்ரீதியாகக் கிடைக்கும் லாபத்தைவிட, பேரினவாத பண்பாட்டு தேசியத்துக்கு உரமூட்டுவதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வளரும் சமூகங்களைப் பற்றிய ஆய்வு மையத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார், ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்றங்களுக்கு இந்தியாவில் இதற்கு முன்னால் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்திருக்கிறார். 31 முறை நடந்த தேர்தல்களில் 24 முறை பெரிய தேசிய அரசியல் கட்சிகளுக்கு (காங்கிரஸ், சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில) மக்களவைக்குக் கிடைத்த அதே விகிதத்தில் சட்டமன்றங்களுக்கும் வாக்குகள் கிடைத்தன என்று கூறுகிறார்.
இதிலிருந்து பெறப்படும் பொருள் என்னவென்றால், ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் மாநிலக் கட்சிகளுக்கு வாக்காளர்களிடையே ஆதரவு சரியும், கூட்டாட்சி ஜனநாயக அமைப்புக்கு முக்கியத்துவம் இருக்காது என்பது. அதேசமயம் அந்த ஆய்வு இன்னொன்றையும் தெரிவிக்கிறது. தேசியக் கட்சிகளுக்கு வாக்காளர்களின் ஆதரவு தேர்தலுக்குத் தேர்தல் குறைந்துகொண்டேவருகிறது. 1951இல் தேசிய கட்சிக்கு (காங்கிரஸ் உள்ளிட்டவை) பதிவான வாக்குகளில் 76% ஆதரவு கிடைத்தது அதுவே 2019 மக்களவை பொதுத் தேர்தலில் 68.70% ஆகக் குறைந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் மாநிலக் கட்சிகளுக்கான ஆதரவு 8%லிருந்து 23% ஆக உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்தாததுதான் என்கிறார். இது உண்மை கலவாத அனுமானம்.
இதுபோன்ற ஆய்வுகளைக் கொண்டுதான், ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் அது தேசியக் கட்சிக்குத்தான் – அதுவும் – பாஜகவுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது தேசியக் கட்சிகளுக்கு சாதகம் என்றால் அது ஏன் காங்கிரஸுக்கும் சாதகமாக அமையக் கூடாது? காங்கிரஸ் இப்போது தேசியக் கட்சியாக இல்லாமல் மாநிலக் கட்சியாக சுருங்கிவிட்டதா? இந்த வாதங்கள் அனைத்தும் குறுகிய கண்ணோட்டத்தில் முன்வைக்கப்படுபவை.
ஜனநாயகம், கூட்டாட்சி முறை, மக்களுடைய சமூக நல்வாழ்வு ஆகியவற்றைப் பரிசீலிக்காமல், தேர்தல் நடத்தும் நேரம் அல்லது விதத்தை மட்டுமே மனதில்கொண்டு வாக்காளர்கள் வாக்களித்துவிடுவார்கள் என்பதுதான் உண்மையிலேயே மக்களுடைய கவனத்தைத் திசைத்திருப்பும் வாதமாகும்; ஆட்சியில் இருக்கும் கட்சி, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் என்ன, அவற்றில் எத்தனை நிறைவேற்றப்பட்டன, தலைவர்களுடைய நம்பகத்தன்மை எப்படி இருக்கிறது, கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை, வாக்காளர்களைச் சாதி, மதம், இன அடிப்படையில் பிரித்தாள என்னவெல்லாம் தேர்தலில் பேசப்படுகிறது என்பதையும் பரிசீலித்துத்தான் வாக்களிப்பார்கள்.
1967 வரையில்…
1967ஆம் ஆண்டு வரையில் மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் சேர்ந்தேதான் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி நினைத்தபோதெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆண்ட அரசுகளையும், சில வேளைகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசுகளையும் மாநிலங்களில் கலைத்துக்கொண்டே இருந்ததால்தான் சேர்ந்தே தேர்தல் நடத்த முடியாமல் போனது. ஒரே சமயத்தில் நடந்த பொதுத் தேர்தல் இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு வேட்டுவைக்கவில்லை, அரசமைப்புச் சட்டத்தின் 356 பயன்படுத்தப்பட்ட விதம்தான் அந்த வேலையைச் செய்தது.
ஒரே நேரத்தில் தேர்தல் கூடாது என்பவர்களுடைய வாதம் சரியென்று ஒப்புக்கொண்டால், இந்தியாவில் 1960களின் நடுப்பகுதி வரையில் கூட்டாட்சி முறை சேதப்பட்டுக்கொண்டேவந்தது, மாநிலங்களின் ஆசைகள் ஒடுக்கப்பட்டன, மதச்சார்பற்ற கொள்கை தியாகம் செய்யப்பட்டது – அப்படித்தானே? இது சிக்கலான அரசியல் பிரச்சினையை, மிக மோசமாக ஆராய்ந்து கூறப்படும் தவறான முடிவு.
தொடர் தேர்தல்தான் நல்லதா?
ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தினால் அது ஜனநாயகத்தைச் சீர்குலைத்துவிடும், கூட்டாட்சி தத்துவத்துக்கு உலை வைக்கும், மாநில மக்களுடைய விருப்பங்களைப் புதைத்துவிடும் என்றால், அவ்வப்போது மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்துகொண்டே இருந்தால் இவையெல்லாம் நல்ல நிலைக்கு வந்துவிடுமா? மக்கள் நல்ல கட்சியைத் தேர்ந்தெடுக்க அடிக்கடி தேர்தல் நடத்துவதுதான் சரியா? சமூக – பொருளாதார வளர்ச்சியே அப்போதுதான் சாத்தியமா? கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகளை அப்போதுதான் நிறைவேற்ற முடியுமா?
ஆண்டுக்கு 4-5 மாநிலத் தேர்தல்
ஆண்டுக்கு 4 அல்லது 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. ஒன்றிய அரசின் புதிய வளர்ச்சி திட்டங்களும் நல்வாழ்வு நடைமுறைகளும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடைமுறைக் கட்டுப்பாடுகள் காரணமாக மாதக்கணக்கில் நிறுத்தப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்படுகின்றன. அடிக்கடி நடைபெறும் தேர்தல்களின்போது வெற்றிக்காக அரசியல் கட்சிகள் மக்களுடைய மொழி, இன, மதப் பிரிவினைகளைப் பிரச்சாரத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்வதால், சமூகத்தில் அமைதியின்மையும் பதற்றமும் தொடர்கின்றன.
தேர்தல்களால் ஏற்படும் நேர, பண விரயங்கள் போக சமீப காலமாக தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் தேர்தல் பிரச்சாரமும் கருத்துக் கணிப்புகளும் கட்டுப்பாடு இல்லாமல் பெருகிவருகின்றன. தேர்தல் நடைபெறுவது சில மாநிலங்களில்தான் என்றாலும், செய்தி – சமூக ஊடகங்களால் நாடு முழுவதுமே தேர்தல் பிரமையில் ஆழ்ந்துவிடுகிறது.
விவசாயிகள், வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள், பட்டியல் இன மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள், நலிவுற்ற பிரிவினர் குறித்து தொடர்ந்து மேடைகளில் பேசப்படுகிறதே தவிர செயலில் யாருக்கும் எதுவும் நடப்பதில்லை.
செயல்படுத்த முடியுமா?
ஒரே நேரத்தில் மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் எதிர்காலத்தில் தேர்தல் நடத்திவிட முடியுமா? இது ஏற்கெனவே நடந்ததுதான் என்பதுடன் இது ஒரு தனிநபர் அல்லது தனியொரு கட்சி மட்டுமே முன்வைக்கும் யோசனையும் அல்ல என்பதும் முக்கியம். மக்களவைக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்ற யோசனையை இந்தியத் தேர்தல் ஆணையம்தான் 1983இல் முதலில் கூறியது. அரசின் வளர்ச்சி திட்டங்களைத் தடங்கலின்றித் தொடரலாம் என்பதிலிருந்து தேர்தலுக்காகும் செலவைக் குறைக்கலாம் என்பதுவரை பல காரணங்கள் அதற்குக் கூறப்பட்டன.
அதற்குப் பிறகு, இந்திய சட்ட ஆணையம் 1999லும், நாடாளுமன்ற நிலைக்குழு 2015லும் இந்த யோசனைகளைத் தெரிவித்தன. அனைத்து சட்டமன்றங்களின் பதவிக்காலமும் ஒரே நாளில் முடியவில்லை என்பதால், அருகருகில் பதவிக்காலம் முடியும் சட்டமன்றங்களை இரண்டு தொகுப்புகளாகப் பிரித்து முதல் தொகுப்புக்கு தேர்தல் நடத்திவிட்டு, ஆறு மாதத்துக்கெல்லாம் அடுத்த தொகுப்புக்கு நடத்தி - பிறகு இரண்டையும் ஒரே நேரத்தில் பின்னாளில் நடத்திவிடலாம் என்றொரு யோசனை கூறப்பட்டது. இதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம்கூட அவசியமில்லை, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் சில பிரிவுகளே இதற்கு இடம்கொடுக்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
2018 சட்ட ஆணையம்
இந்திய சட்ட ஆணையம் 2018இல் ஒரு வரைவு அறிக்கையை இது தொடர்பாகத் தயாரித்தது. அது மூன்று வழிகளில் இதை அமல்படுத்த யோசனை தெரிவித்தது.
(அ) மக்களவை பொதுத் தேர்தல் நாளை ஒட்டி சில மாநிலங்களின் தேர்தல் நாளை முன்கூட்டியே நடத்துவது அல்லது தள்ளிவைப்பது.
(ஆ) முதலில் 2019இல் மக்களவைத் தேர்தலுடன் 13 மாநிலங்களுக்கும் பிறகு 2021இல் 16 மாநிலங்களுக்கும் தேர்தலை நடத்துவது
(இ) ஒரே ஆண்டில் பதவிக்காலம் முடியும் எல்லாச் சட்டமன்றங்களுக்கும் ஒரே நாளில் மக்களவை பொதுத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்துவது.
2022ஆம் ஆண்டில் 22வது சட்ட ஆணையம், முந்தைய சட்ட ஆணையங்களின் யோசனைகளுக்கு மேலும் உரமூட்டியது. அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவையுடன் சேர்த்து தேர்தல் நடத்துவது என்பது நிபந்தனைக்கு உள்பட்டது, அதை எப்படி நடத்துவது என்பது விவாதத்துக்கு உரியது. ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதால் ஜனநாயகம் வலுவிழக்கும், கூட்டாட்சி முறை தகர்ந்துவிடும், மதச்சார்பின்மை மறைந்துவிடும் என்பதெல்லாம் ஏற்கக்கூடிய கருத்துகள் அல்ல. ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த அரசமைப்புச் சட்டத்துக்குத் திருத்தம் செய்வதைவிட மேலே சொன்ன கருத்துகளுக்கு விடை காண்பதுதான் முக்கியம்.
தொடர்ச்சியாக ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது சில மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தும் நடைமுறையைக் கட்டுப்படுத்துவதே முறையானது. இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த நோக்கில் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தத் தேவையில்லை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி சில மாற்றங்களைச் செய்துகொண்டாலே போதும். தேர்தல் நடத்தும் நாளோ - நேரமோ, தேர்தல் சீர்திருத்தங்களைவிட முக்கியமானவை அல்ல.
நேர்மையும் செயலாற்றலும் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும், தேர்தல் செலவுகள் மிதமிஞ்சிப் போகக் கூடாது, தேர்தல் வாக்குறுதிகள் என்ற பெயரில் இலவசங்களை அள்ளித்தெளிக்கும் அற்பங்கள் கூடாது, மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும், மக்களைப் பிளவுபடுத்தும் பேச்சுகளும் உத்திகளும் கூடாது. ஜனநாயகம் வலுப்படவும் கூட்டாட்சி முறை ஓங்கவும் இவையெல்லாம்தான் அடிப்படைகளே தவிர, தேர்தல் நடக்கும் மாதமோ, வருடமோ அல்ல.
மக்களவையின் பதவிக்காலத்துடன் சட்டமன்றங்களுக்கும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஒரேயொரு முறையாக, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு பதவிக்காலத்தை வளர்த்தோ குறைத்தோ நடைமுறைப்படுத்தலாம். அதற்குப் பிறகு சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டாலோ, முதல்வர் விலக நேர்ந்தாலோ, வேறு பிரச்சினை என்றாலோ எப்படித் தேர்தலை நடத்துவது அல்லது மாற்று ஏற்பாடுகளை எப்படிச் செய்வது என்பதையும் விவாதித்து புதிய சட்டங்களை நிறைவேற்றலாம்.
இவை எல்லாவற்றுக்கும் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் விவாதித்து கருத்தொற்றுமை காண்பது அவசியம். ஆனால், அப்படியொரு கருத்தொற்றுமை எளிதில் ஏற்பட்டுவிடாது என்பதே உண்மை.
© த வயர்
தொடர்புடைய கட்டுரைகள்
ஒரே நாடு ஒரே தேர்தல்: வாய்ப்பே இல்லை!
ஒரே சமயத்தில் தேர்தல்: மோசமான முடிவு
ஒரே நாடு, ஒரே துருவம்!
ஏன் கூடாது ஒரே தேர்தல்?
ஏன் கூடாது ஒரே நாடு ஒரே தேர்தல்?
தமிழில்: வ.ரங்காசாரி
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.