பேட்டி, அரசியல், சமஸ் கட்டுரை, ஆளுமைகள், கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 4 நிமிட வாசிப்பு
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
பல வகைகளிலும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது 2024 பொதுத் தேர்தல். நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார் ஆசிரியர் சமஸ். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தக் கட்டுரை / பேட்டியையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
பால் சக்கரியா மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள், பத்திகள், பயணக் கட்டுரைகள், திரைக்கதைகள் என்று பல வடிவங்களிலும் எழுதித் தள்ளியவர். ‘பிடிஐ’, ‘இந்தியா டுடே’ நிறுவனங்களில் பணியாற்றிவர். ‘ஏசியாநெட்’ தொலைக்காட்சியை நிறுவிய குழுவில் முக்கியமான அங்கத்தினர். கல்வி, தொழில் நிமித்தம் தமிழ்நாடு, கர்நாடகம், புது டெல்லி எனக் கேரளத்துக்கு வெளியே 20 ஆண்டுக் காலத்துக்கு மேல் இருந்தவர். நல்ல ஊர்ச் சுற்றியான சக்கரியா சீனா, பிரிட்டன், ஆப்பிரிக்கா என்று பல நாடுகளுக்கும் சென்று பயண நூல்கள் எழுதியவர். ‘மாத்ருபூமி’ முதல் ‘தி இந்து’ வரை இந்தியாவின் முக்கியமான நாளிதழ்கள் எல்லாவற்றிலும் அவருடைய கட்டுரைகள் வருகின்றன. விரிந்த பார்வை கொண்ட சக்கரியா, கேரளத்தை முன்வைத்து தென்னகத்தின் குரலைப் பேசுகிறார்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இந்திய அரசியலில் ஆறு பிராந்தியங்களுக்கும் தனித்தனிக் கலாச்சாரம் உண்டு என்றால், வடக்கு – தெற்கு இடையே நேரெதிரான ஒரு போக்கு தென்படுவதைப் பார்த்தோம். 2019 மக்களவைத் தேர்தலில், டெல்லி போன்ற ஒரு மாநிலம் தன்னுடைய மக்களவைத் தொகுதிகள் அத்தனையும் பாஜகவுக்குக் கொடுத்ததென்றால், கேரளம் நேரெதிராக பாஜகவுக்கு ஒரு தொகுதியையும் கொடுக்காததோடு காங்கிரஸுக்கு 18/20 தொகுதிகளைக் கொடுத்தது. ஐந்தாண்டுகளுக்குப் பின்பு கேரளச் சூழல் எப்படி இருக்கிறது?
கேரளத்தின் கலாச்சாரச் சூழலில் நடந்துவந்த மாற்றங்கள் இப்போது அரசியலில் வீரியமாக ஊடுருவுகிறது. பாஜக மெல்ல முன்னகர்கிறது. இந்துத்துவத்தை எதிர்கொள்வதில் தமிழ்நாட்டில் திமுக அளவுக்குக்கூட இங்கே காங்கிரஸ், சிபிஎம் இரண்டுமே தீவிரமாக இல்லை. குறிப்பாக காங்கிரஸ் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொள்கிறது. ஒரு கலாச்சர உலுக்கல் இருக்கிறதென்று சொல்வேன்.
தமிழ்நாட்டில் பாஜக மேல் எழும்போது பிரமணர் – பிரணமரல்லாதோர் இரு தரப்பிடையே கடும் பிளவு ஏற்படுகிறது. கேரளத்தில் எப்படியான சமூக மாறுதல்கள் நிகழ்கின்றன?
உங்களுக்குத் தெரிந்திருக்கும், கேரளத்தில் பிராமணர்கள் அதிக என்ணிக்கையில் கிடையாது. நாயர்கள் – ஈழவர்கள் இரு தரப்பும் இந்துக்களில் வலுவான சமூகங்கள். இவர்களுக்கு இணையாக கிறிஸ்தவர்கள் + முஸ்லிம்கள் இருக்கிறார்கள். பொதுவாக ஈழவர்களிடம் சிபிஎம்முக்கும் நாயர்களிடம் காங்கிரஸுக்கும் செல்வாக்கு அதிகம். பாஜக தலையெடுக்கும்போது நாயர்கள் – ஈழவர்கள் இரு தரப்பிலிருந்தும் அது நோக்கிச் செல்கிறார்கள். இதில் காங்கிரஸின் ஓட்டு வங்கியைத்தைத்தான் மெல்ல பாஜக விழுங்குகிறது.
தென்னகத்தில், மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி கிறிஸ்வதர்கள், முஸ்லிம்கள் வாழும் மாநிலம் கேரளம். சிறுபான்மைச் சமூகங்களையும் உள்ளணைப்பதாகத் தன்னுடைய உத்தியை மாற்றிக்கொண்டு பாஜக இப்போது அவர்களைக் கட்சிக்குள் கொண்டுவருகிறது. இது எந்த மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும்?
தெரியவில்லை. இப்படி பாஜகவுடன் இணைபவர்களிடம் தனிப்பட்ட கணக்குகளே அதிகம் வெளிப்படுகிறது. ஓர் அதிர்வு இருக்கிறது. வீட்டுக்கு ரெய்டு வந்து அலைவதைத் தடுக்கவோ, காங்கிரஸில் கிடைக்காத வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளவோ பாஜகவில் இணைவது எளிய தேர்வாக இருக்கிறது, இல்லையா? நானும் இந்தத் தேர்தலை உன்னிப்பாக கவனிக்கிறேன்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகான இந்தப் பத்தாண்டுகளில், பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களிலும்கூட கோயில்கள் விரிவாக்கப் பணிகள் பிரமாண்டமான நடக்கின்றன. ஒடிஷாவின் பூரி ஜெந்கநாதர் கோயில் ஓர் உதாரணம். கேரளத்தில் எப்படி?
இங்கே வேறு விதமாகப் பணிகள் நடக்கின்றன. பெரிய கோயில்கள் கட்டுமானங்கள் இல்லை. ஆனால், பல நூற்றாண்டு பழமையோடு பாழ்பட்டுக் கிடந்த கோயில்கள் பல புனரமைத்துக் கட்டப்படுகின்றன. மக்களால் இப்படி கோயில்கள் பெருகுவதில் பிரச்சினை இல்லை. கோயில்களை அரசியலோடு இணைக்கும் சங்கிலியை எப்படிக் கையாள்வது என்பதில் யாருக்கும் தெளிந்த மாற்றுச் சிந்தனை இல்லை.
கேரள வரலாற்றில் ஓர் ஆச்சர்யமாக பினராயி விஜயன் தலைமையிலான இடது கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பினராயி விஜயன் காலத்தில் 'கேரள மாதிரி' என்று சொல்லாடல் உங்கள் மாநிலத்துக்கு வெளியிலும் உரக்கப் பேசப்படுகிறது. நீங்கள் பத்தாண்டுகளுக்கு முன்புகூட ‘தமிழ்நாடு அளவுக்குக் கேரளத்தின் வளர்ச்சி இல்லை’ என்று சாலை, பஸ் வசதிகளை எல்லாம் சுட்டிக்காட்டி எழுதினீர்கள். இப்போது இந்த அரசேனும் உங்களுடைய குறைகளைக் கொஞ்சமேனும் போக்கியிருக்கிறதா? கேரள மாதிரியின் பலம், பலவீனம் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?
கல்வி, சுகாதாரம் இந்த இரண்டிலும் எப்போதுமே கேரளம் முன்னே நிற்கக் கூடியது. சாலைப் போக்குவரத்து போன்ற ஏனைய அடிப்படைக் கட்டமைப்புகளில் பெரும் தொய்வு இருந்தது. அதேபோல, ஏழை எளிய மக்களுக்கான நலத் திட்டங்கள் போய்ச் சேர்வதிலும் தமிழகத்துடன் முன்பு ஒப்பிடும் சூழல் இல்லை.
இன்றைக்குக் கேரளீயர்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகள் மேம்பட்டிருக்கின்றன. பினராயி விஜயனின் அரசாங்கம் இதைச் சாதித்திருக்கிறது. கேரள மாதிரியில் எப்போதும் உள்ள பிரச்சினை என்பது, சுயாதீன தொழில்கள் இங்கு உருவாகவில்லை; இங்கு கொழிப்பது எல்லாம் வெளிநாட்டு காசு. கேரளத்தில் எந்தத் தொழிலும் உருவாகவில்லை. நீங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா எங்கு சென்றாலும் கேரள நர்ஸுகளைப் பார்ப்பீர்கள். அரேபிய நாடுகளில் கேரளத்து ஆண்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். இப்போது ஒரு புதிய கூட்டம் தகவல் தொழில்நுட்பத்தையோ, உயிரித் தொழில்நுட்பத்தையோ படித்து ஐரோப்பா செல்கிறது. அவர்கள் எல்லாம் அங்கிருந்து பணம் அனுப்புகிறார்கள். இங்கு அந்தப் பணம் ஹோட்டல்களாக மாறி சுற்றுலாத் துறையுடன் இணைந்து கொஞ்சம் பேருக்கு வேலையைக் கொடுக்கிறது. ஆனால், உள்ளூரிலிருந்து நாம் உருவெடுக்க முடியாது என்பது கேரளீயர்கள் மனதில் நிலைத்துவிட்டது. பள்ளிக்கூடம் முடித்த வேகத்தில் கல்லூரிக் கல்விக்குப் பிரிட்டனுக்குப் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் வசதியானவர்கள். வசதி குறைந்தவர்கள் கேரளத்துக்கு வெளியே கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். நல்ல மூளைகள் இப்படி கல்லூரி முடிக்கும் முன்பே மாநிலத்தைவிட்டு வெளியேறுவதை நான் கேரளத்தின் பேரிழப்பாக பார்க்கிறேன். எந்த ஆட்சியாளரும் இதில் கவனம் செலுத்தவில்லை.
இந்தியாவிலேயே அதிகம் வாசிப்பது கேரளச் சமூகம். இந்த செல்பேசி யுகத்தில் இந்தியாவில் எல்லாச் சமூகங்களிலும் வாசிப்பு வீழ்ச்சியை அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பத்திரிகைகளின் விற்பனை தொடர்ந்து சரிகிறது. புத்தகங்கள் 250 பிரதிகள் அச்சிடப்பட்டால் அது ஒரு பதிப்பு என்ற நிலை உருவாகிவிட்டிருக்கிறது. கேரளத்தில் நிலைமை எப்படி?
இங்கும் சரிவு இருக்கிறது. ஆனால், நீங்கள் சொல்லும் அளவுக்கான அபாயத்தைத் தொடவில்லை. இன்றும் நல்ல புத்தகங்கள் வருடத்துக்கு 5,000 பிரதிகள் விற்கின்றன. இளைஞர் இலக்கியம் வாசிப்பது குறைந்திருக்கிறது. ஆனால், அபுனைவுகள் வாசிப்பது தொடர்கிறது. எப்படியாயினும் வாசிப்பு குறைவது சமூகத்துக்குக் கேடு.
தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலுமே இந்தத் தேர்தல் கள அனைத்திலுமே வடக்கு – தெற்கு ஒப்பீடு ஒரு பிரச்சினையாகப் பேசப்படுகிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால் தென்னகம் பேரிழப்பைச் சந்திக்கும் என்பதும் நிதி பகிர்வில் ஏற்கெனவே தென்னகத்துக்கு குறைவாகவே கிடைக்கிறது பாஜகவுக்கு எதிரான முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்றாக காங்கிரஸாலும் ஏனைய கட்சிகளாலும் முன்வைக்கப்படுகின்றன. மறுபக்கம் பார்த்தால், எப்படியாயினும் பாஜக தென்னகத்தைத் தன்வசப்படுத்த ஆசைப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தென்னக மக்களைப் பொறுத்த அளவில், எல்லோருக்குமான பொருளாதார வளர்ச்சிதான் அரசியலின் மைய சக்தி. இந்தியாவில் இன்றைக்கு எல்லா பிஸினஸ்மேன்களைவிடவும் பெரிய பிஸினஸ்மென் மோடி-ஷா. பாஜக இதை சரியாகவே புரிந்துகொள்ளும் என்று எண்ணுகிறேன்; வடக்கு - தெற்கு முரண்பாட்டை அவர்கள் வளரவிட மாட்டார்கள்.
தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு நாடு முழுக்க இன்று பாஜகவின் கை ஓங்கி இருப்பதைப் பார்க்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகள் கடந்தும்கூட காங்கிரஸால் சூழலைத் தனதாக்க முடியவில்லை. ஏன்?
காங்கிரஸ் தன்னுடைய தவறுகளை இன்னமும் உணராததே காரணம். இன்றைக்கு எப்படி பாஜக இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தது? ஏன் அதன் எதிர்கள் அதற்கு ஈடுகொடுக்க தடுமாறுகிறார்கள்? ஏனென்றால், பாஜகவுக்கான நெடுஞ்சாலையை அமைத்தவர்கள் அதன் எதிரிகள். ராஜீவ் அண்ட் கோ கால்கோல் ஊன்றிய பாதையில்தான் மோடியின் பாஜக இன்று ராஜநடை போடுகிறது. எனக்குத் தெரிய பாஜவுக்கான மாற்று கண்ணுக்கு எட்டியவரை இல்லை. இந்தத் தேர்தல் நாட்டுக்கு மிக முக்கியமான தேர்தல். நான் அதை அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
- ‘குமுதம் ரிப்போர்ட்டர்’, மார்ச், 2024
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
7
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
P.Saravanan 5 months ago
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அன்றைய சொல்லாடல் இன்றைய நிலையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே!இதற்கான முக்கிய எடுத்துக்காட்டு இன்றைய ஒன்றிய அரசின் வரி பகிர்ந்தளிப்புக் கொள்கை. இதனால் தென் மாநிலங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதையும் மீறி தென் மாநிலங்கள் சமூக பண்பாட்டு ரீதியாக வளர்வதற்கு இங்கு பின்பற்றப்படும் சமூக நீதி கொள்கையும், கல்வி மற்றும் மனித வளர்ச்சிக்கு இங்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் ஆகும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.