பேட்டி, அரசியல், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு

பாஜகவை வீழ்த்த கடும் உழைப்பு தேவை: சமஸ் பேட்டி

26 Apr 2024, 5:00 am
1
நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். அந்த வகையில் ‘ஜீவா டுடே’ யூடியூப் சேனலுக்கு, அதன் செய்தியாசிரியர் ஜீவா அவர்களுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவத்தை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.

மக்களவைத் தேர்தல் 2024 பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் சென்று வந்திருக்கிறீர்கள். முன்னதாக 2014 பயணச் சூழலோடு ஒப்பிடுகையில், இப்போது களம் எப்படி உள்ளது? 

அதாவது, 2014இல் இருந்து இந்தியாவின் தேர்தல் களம் மாறியிருக்கிறது. இது நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். நரேந்திர மோடி பிரதமரானதற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு அதிபர் தேர்தலைப் போல் மக்களவைத் தேர்தல்கள் பாஜகவால் மாற்றப்பட்டுள்ளன.

நம் அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டின்படி இவர்தான் பிரதமர் வேட்பாளர் அல்லது முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்வது கிடையாது என்றாலும், இவர்கள்தான் எங்கள் முதல்வர் முகம் அல்லது பிரதமர் முகம் என்று முன்னிறுத்தி தேர்தல்களைச் சந்திப்பதை  நீண்ட காலமாக செய்துகொண்டுதான் இருக்கிறோம். இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலான 1951 -1952இலேயே காங்கிரஸின் பிரதமர் முகம் நேரு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, இல்லையா!

துரதிஷ்டவசமாக 2014, 2019 இரண்டு தேர்தல்களிலுமே காங்கிரஸ் பிரதமர் முகம் என யாரையும் முன்னிறுத்தவில்லை. இந்த 2024 தேர்தலிலும் அப்படி யாரையும் முன்னிறுத்தாமல் மக்களைச் சந்திப்பது காங்கிரஸுக்கு ஒரு பலவீனம். இது காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு பின்னடைவுதான் என்பதைப் பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. அதேசமயம், கடந்த முறை போல நாடு தழுவிய ஒரு கதையாடலை பாஜகவால் இம்முறை உருவாக்க முடியவில்லை.

2014 தேர்தலில், அன்றைய மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக உருவாகியிருந்த ஓர் அதிருப்தி; மன்மோகன் சிங் எவ்வளவோ சாதனைகளைச் செய்திருந்த பிரதமர் என்றாலும்கூட பத்தாண்டுகளுக்குப் பிறகு ஓர் அதிருப்தி உருவாகியிருந்தது. ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் அந்த அரசின் மீது இருந்தன. இதை 'மாற்றம் வேண்டும்; வளர்ச்சி வேண்டும்; மோடி வேண்டும்' என்று தேசிய அளவிலான ஒரு கதையாடலாக பாஜகவாலும், மோடியாலும் உருமாற்ற முடிந்தது. 2019இல் புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய சூழலை அப்படி தேசியவாத அலையை உருவாக்கப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த முறை அயோத்தி ராமர் கோயில் மூலமாக ஒரு நாடு தழுவிய அலையை உருவாக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால், அது அப்படி மாறவில்லை. ஆகையால், களத்தில் எந்த அசைவையும் காண முடியவில்லை. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பாஜக இதை முன்னரே உணர்ந்திருக்கிறது. அதனால்தான் ராமர் கோயிலை அப்படியான ஒரு கதையாடல்  உருவாக்கத்துக்கு அவர்கள் பயன்படுத்த முற்பட்டுள்ளனர். அது தேசிய அளவில் ஒருமித்த இந்துத்துவக் கதையாடலை உருவாக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அப்படி நடக்கவில்லை.

சொல்லப்போனால், ஒவ்வொரு தொகுதியும் அந்தந்தத் தொகுதிக்கு ஏற்ற பிரத்யேகமான பிரச்சினைகளையே பிரதானமாகப் பேசுகிறது. ஓரளவில் நாம் மக்களிடம் ஒரு  போக்கைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அந்தந்த மாநிலங்கள் சார்ந்ததாக போக்கு இருக்கிறது என்று சொல்லலாம். இதிலுமே சில மாநிலங்களில், அந்தந்த பிராந்தியங்கள் சார்ந்து மக்கள் பேச்சில் ஒரு போக்கைக் காண முடிகிறது.

பாரம்பரியமாகப் பல தேர்தல்களில் நாடு இப்படித்தான் இருந்துள்ளது. கர்நாடகத்தை எடுத்துக்கொண்டால், அங்கு கடலோர பிராந்தியம் எப்போதுமே பாஜகவின் வலுவான கோட்டையாகத் திகழக் கூடியது. அதேபோல, மேற்கு உத்தர பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் அது எப்போதும் பாஜகவுக்கு பலகீனமான பகுதி. இந்த வழக்கமான வரையறைகளைக் கடந்து நாடு தழுவிய ஒரு போக்கை 2014, 2019இல் பாஜகவால் உருவாக்க முடிந்தது. ஆனால், இந்த முறை அது தவறுவதாகப் பார்க்கிறேன்.

மக்கள் எந்த விஷயத்தை மையமாகப் பேசுகிறார்கள்?

நான் கடந்த இரு மாதங்களாக ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் ‘அருஞ்சொல்’ இதழிலும் தொடர்ச்சியாக எழுதிவரும் கட்டுரைகளில் எல்லாம் இதைக் குறிப்பிட்டுவருகிறேன். இந்த முறை நான் மக்களிடம் மையமாக நான் பார்க்கக்கூடிய பிரச்சினை என்பது, அவர்கள் ‘தனக்கு என்ன கிடைக்கிறது’ என்பதைப் பற்றியே பேசுகிறார்கள்.

பாஜகவுக்கு ஓட்டு போடுவேன் என்று சொல்பவர்களும் சரி, பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டேன் என்று சொல்பவர்களும் சரி; இப்போது வளர்ச்சி என்று சொன்னால், தன்னுடைய பிராந்தியத்துக்கும் தன்னுடைய வீட்டுக்கும் என்ன கிடைத்துள்ளது, கிடைக்கவில்லை என்பதைப் பேசுகிறார்கள். வேலைவாய்ப்புகள்,  விலைவாசிக்கும் வருமானத்துக்கும் இடையேயான இடைவெளி இவையெல்லாம் அதிகம் பேசப்படுகின்றன.

நாட்டின் வளர்ச்சி,  மாநிலத்தின் வளர்ச்சி இந்தச் சொற்களைத் தாண்டி தன்னுடைய ஊருக்கான வளர்ச்சியைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஒரே மாநிலத்தின் ஒரு பகுதிக்குச் செய்திருக்கிறீர்கள், இன்னொரு பகுதிக்குச் செய்யவில்லை என்ற கேள்வியை எல்லாம்கூட களத்தில் பார்க்க முடிகிறது.

பஞ்சாபில், அமிர்தசரஸில் நான் சந்தித்த உயர் வர்க்கத்தினர் பலர் விமான நிலையம் எவ்வளவு மோசமாக உள்ளது என்று  குறிப்பிட்டுப் பேசினார்கள். ‘ஒரு நாளுக்கு 1.5 லட்சம் பேர் பொற்கோயிலுக்கு வருகிறார்கள், இதைப் பார்த்தால் சர்வதேச விமான நிலையம் மாதிரியாகவா இருக்கிறது. இதே பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த மாநிலத்தை எப்படி மாற்றியிருக்கிறார்கள் பார்த்தீர்களா? அப்படியானால் இவர்களுக்கு வாக்களிக்காதவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்று கேட்டார்கள். தாங்கள் ஓட்டு போட்ட கட்சி ஆட்சிக்கு வராததால்தான் இந்நிலை, ஓட்டை மாற்றிப்போட்டிருக்கலாமோ என்றுகூட தோன்றுகிறது என ஒருவர் கூறினார்.

இமாச்சல பிரதேசத்தில், அங்கு சாலை கட்டுமானத்தில் பாஜக அரசு செய்திருக்கும் காரியங்களை மக்கள் மெச்சிப் பேசினார்கள். பாஜக அரசு அங்கு நன்றாகவே நிறைய சாலைகள், பாலங்கள், குறிப்பாக மலைப் பாதைகளைச் செய்திருக்கிறார்கள். நல்ல சுரங்கப் பாதைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கே சில தொகுதிகளில் அதுகுறித்து நல்லபடி பேசுகிறார்கள்.

உத்தர பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் அங்கு பல்லாயிரம் கோடிகளை பாஜக அரசு இறக்கியிருக்கிறார்கள். இங்கே தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துக்குமே ரூ.1.92 லட்சம் கோடிக்குள் மத்திய நிதிப் பகிர்வை முடித்துவிட்ட பாஜக, உத்தர பிரதேசத்துக்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கியதை எல்லோருமே பேசினோம் இல்லையா, அப்படியான ஒதுக்கீட்டில் ஏராளமான பணிகள் அங்கே நடந்திருக்கின்றன. ஏராளமான சாலைகள், பாலங்கள்... மாநில அரசு மீதும் அங்கே மக்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. யோகியைப் பற்றி உயர்வாகப் பேசுகிறார்கள்.

ஆக, இந்த விஷயங்கள்தான் தேர்தல் முடிவில் பெரும் தாக்கம் செலுத்தப்போகின்றன.

பாஜகவிடம் ஒரு பதற்றத்தைக் காண முடிகிறது, ஏன்?

உள்ளூர்த்தன்மையைத் தேர்தல் கொண்டிருப்பதே காரணம். மக்கள் இப்படி நிர்வாகத்தை மையமாக வைத்துப் பேசும்போது, உள்ளூரில் பாஜக அரசு செயல்படும் விதமும் தாக்கத்தை உண்டாக்கும் என்பது தெரிகிறது இல்லையா, அதுதான் பாஜகவின் காரணத்துக்குக் காரணம். பாஜக கூட்டணி 14 முக்கியமான மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது, இல்லையா? உத்தர பிரதேசத்தில் ஆட்சி திருப்தியாக இருந்தால் அது பலன் தரும் என்றால், ஹரியாணாவில் ஆட்சி அதிருப்தியாக இருக்கும்போது அதுவும் எதிர்பலனைத் தரும் இல்லையா?

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சூழல் என்ற நிலைமையை பாஜகவால் கட்டுப்படுத்த முடியாது. 300 இடங்கள், 370 இடங்கள் என்று அவர்கள் பேசும்போது, இந்த எண்களை அவர்கள் கட்டுக்கோப்பாக வளைத்துக் கொண்டுவர தேசிய அளவிலான அலை முக்கியம். களத்தில் அப்படி ஓர் அலை இல்லையென்பதால்தான் புதுப்புது விஷயங்களை நோக்கி பாஜக நகர்ந்துகொண்டே இருக்கிறது. பதற்றத்தில் கண்டபடி மோடி பேசுகிறார்.

இந்தி மாநிலங்களில் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளதா? பாஜகவை வீழ்த்துவதில் இந்தி மாநிலங்களின் பங்கு என்னவாக இருக்கும்?

எல்லோருமே, இந்தி மாநிலங்களில் பாஜக ஒரு பெரிய சரிவைக் காணுமா என்று கேட்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அங்கு மக்களிடம் ஒரு சலிப்பு இருக்கிறது. பெரும் அதிருப்தி அலை எதையும் நான் காணவில்லை.

தவிர, இந்தி மாநிலங்களில் பாஜகவை அப்படியெல்லாம் கடும் வீழ்ச்சிக்குள் உடனே தள்ளிவிடவும் முடியாது.  இங்கே டிவி அறையில் உட்கார்ந்துகொண்டு, தன்னுடைய கட்சி ஈடுபாட்டுக்கு ஏற்ப பேசுபவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். கள யதார்த்தம் வேறு.

நாம் ராஜஸ்தானை எடுத்துக்கொள்வோம். அங்கே 2014, 2019 இரண்டு தேர்தல்களிலுமே 25/25 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியது. 2014 தேர்தலைக் காட்டிலும் 2019 தேர்தலில் கூடுதலாக வாக்கு விகிதத்தைப் பெற்றதோடு, பதிவான ஒட்டுமொத்த வாக்குகளில் 61% வாக்குகளைப் பெற்றார்கள். என் நினைவு சரியானால், எந்தத் தொகுதியிலும் பாஜகவுக்கும் அடுத்து வந்த காங்கிரஸுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 7 புள்ளிகளுக்குக் குறைவு இல்லை. இந்த எண்ணிக்கை ஒரு கட்சி எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துவது ஆகும். 2018இல் அங்கே சட்டமன்றத்தை காங்கிரஸ் கைப்பற்றியும் 2019இல் பாஜகவால் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முடிந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மோடிக்கு என்று தனி செல்வாக்கு இருக்கிறது. மக்கள் தெளிவாகவே சட்டமன்றத்துக்கு ஒரு மாதிரியும், நாடாளுமன்றத்துக்கு வேறு மாதிரியும்  வாக்களிக்கிறார்கள். மேலும், பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கி எவ்வளவோ அதற்கு இணையான வாக்கு வங்கி மோடிக்கு இருக்கிறது என்பது என் கருத்து. மோடி என்றைக்கு அரசியலில் இருந்து விலகுகிறாரோ அன்று பாஜகவின் வாக்கு வங்கி சரி பாதியாகக் குறையும் என்பதுதான் யதார்த்தம்.

இன்று காங்கிரஸ் எவ்வளவோ சிறுத்துப்போயிருக்கலாம்; ஆனாலும், 19.5% வாக்கு வங்கியை அது  வைத்திருக்கிறது. ஆனால், பாஜகவின் வாக்கு வங்கி என்பது மோடிக்கு முன் அத்வானி காலகட்டத்தில் இதே 19%தான் இருந்தது. அதேபோல், 1998இல் வாஜ்பாய் பெற்ற பெரிய வெற்றியின்போது பாஜக 182 இடங்களில்தான் வென்றது; 25.5% வாக்குகளைத்தான் பெற்றது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

காங்கிரஸ் அதனுடைய உச்சத்தைத் தொட்ட தேர்தல் எதுவென்றால், 1984 தேர்தல். அப்போது 414 இடங்களை வென்றார்கள்; கிட்டத்தட்ட 47% வாக்குகளைப் பெற்றார்கள். அதற்குப் பிறகு, காங்கிரஸ் சரிந்துகொண்டேதான் வருகிறது. ஆனாலும், கடைசியாக காங்கிரஸ் வென்ற 2009 தேர்தலில் அது 202 இடங்களை வென்றதோடு,  28% வாக்குகளையும் குவித்தது. இது நமக்கு உணர்த்துவது என்ன?

காங்கிரஸ் 1984இல் தொடங்கி சரிவைச் சந்தித்துவந்தாலும் 2019 வரை குறைந்தபட்சம் 20% வாக்குகளை வைத்திருக்கிறது; பல மாநிலங்களில் அதனால் ஆட்சி அமைக்கவும் முடிகிறது. அதேபோல் பாஜகவும் உடனே வீழ்ச்சி நிலைக்குச் சென்றுவிட மாட்டார்கள். அதுவொரு பெரிய கட்சி, கூடவே சிந்தாந்த அடிப்படையில் ஆக்டோபஸ் போன்று பல முனை அமைப்புகளை உடன் கொண்டிருக்கும் கட்சி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

பாஜக வலுவாக இருக்கும் பகுதிகளில் அவர்கள்தான் அதிக இடங்கள் வருவார்கள்; ஆனால் ஆங்காங்கே சிறு சிறு சரிவுகள் ஏற்படும். உதாரணமாக, ராஜஸ்தானில் பாஜக 20 இடங்களில் வென்று, காங்கிரஸ் 5 இடங்களில் வெல்கிறது என்று வைத்துக்கொள்வோமே, இப்படிச் சில இடங்களை இந்தி மாநிலங்களில் இழந்தாலே பாஜக பெரும் சரிவைச் சந்திக்கும்.

இப்போது பாஜக 303 இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள், தனிப் பெரும்பான்மைக்கான 272 எனும் எண்ணிக்கையைக் காட்டிலும் இது 31 இடங்கள் மட்டுமே அதிகம். ஆக, பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது சிரமம்.  

போகட்டும், நான் பேச நினைப்பது இதுதான்; அரசியல் கட்சிகள் தேர்தல் களத்துக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்க வேண்டும். நீங்கள் ஒரு சித்தாந்தத்தைப் பேசுகிறீர்கள் என்றால் அதற்கு அமைப்புரீதியாக என்ன செய்கிறீர்கள் என்பதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு அதை பாஜக மட்டும்தான் எல்லா முனைகளோடும் இணைத்து செய்துவருகிறது.

இந்த இடத்தில், "அப்படியென்றால் இடதுசாரிகள்?" என்று ஒரு கேள்வி வரலாம். சித்தாந்த அரசியலை வெகுஜனத் தலைமையோடு இணைப்பதன் வழியாகத்தான் வலிமையான ஓர் அமைப்பைத் தேர்தல் அரசியலில் உருவாக்க முடியும்; இடதுசாரிகள் வெகுஜனத் தலைமை எனும் விஷயத்தில் கவனம் செலுத்துவது இல்லை.

ஆக, எல்லா முனைகளையும் பாஜக தொட்டுச் செல்கிறார்கள். 2014 தேர்தலுக்குப் பிறகான பத்தாண்டுகளிலேனும்  காங்கிரஸ் தன்னை எங்கோ ஓரிடத்தில் சித்தாந்தரீதியாக வலுப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அது நடந்ததா என்றால் இல்லை.

இன்றைக்கு எல்லோரும் ஆர்எஸ்எஸ் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹெட்கேவார் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். காரணம், 2025ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு. பலரும் பேச மறந்த ஒரு விஷயம் 2024ஆம் ஆண்டு, சேவா தளத்தின் நூற்றாண்டு. ஹெட்கேவாரைப் பற்றிப் பேசுபவர்கள் ஹரிகரைப் பற்றிப் பேச மறந்துவிட்டார்கள்.

ஹெட்காவார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நிறுவினார் என்றால், அதற்கு முன் சேவா தளம் அமைப்பை நிறுவியவர் ஹரிகர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு முன்னோடியாக, அதற்குப் பதிலடி கொடுக்க காங்கிரஸிடமே ஓர் அமைப்பு உண்டு என்றால், அதுதான் சேவா தளம்.

காந்திய அடிப்படையில் வேர் மட்டத்திலிருந்து வரும் ஆட்களை சித்தாந்தரீதியில் வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. அதன் முதல் தலைவர் ஜவஹர்லால் நேரு. சேவா தளத்துக்கு நேரு காலம் வரை வலுவும் செல்வாக்கும் இருந்தது. நேரு பிரதமராக இருக்கும்போது, சேவா தளம் நடத்தும் ஒரு கூட்டத்துக்கு வருகிறார், அப்போது ஒரு சேவா தளத் தொண்டர் வழிமறித்து அவரை நிற்கச் சொல்கிறார். அதற்கு நேரு ‘நான் யாருன்னு தெரியலையா? நான் நேரு…’ என்கிறார். அதற்கு அந்தத் தொண்டர் சொல்கிறார், ‘தெரிகிறது, ஆனால் நீங்கள் அமைப்பின் பேட்ஜ் இல்லாமல் உள்ளே போக முடியாது!’ சிரித்தபடி நேரு சட்டைப் பையிலிருந்து பேட்ஜை எடுத்து அணிந்துகொண்டுதான் உள்ளே சென்றார்.

ஆக, சித்தாந்தரீதியாக ஆட்களைத் தயார் செய்ய வேண்டும் என்பதில், பாஜகவுக்கு காங்கிரஸ் முன்னோடியாகத்தான் இருந்தது. பின்னாட்களில் சறுக்கிவிட்டது. அதற்கு முக்கியமான காரணம், சித்தாந்தத் தளத்தில் உழைப்பவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க காங்கிரஸ் தவறியது...  

ஒவ்வோர் இயக்கத்துக்கும் ஒரு கருத்தியல் இருக்கிறது. பாஜக என்றால், இந்துத்துவ நாட்டை அது கற்பனை செய்கிறது; குறிப்பாக முற்பட்ட சாதிகளின் நலன்களை அது பேணுகிறது. திமுக என்றால், தமிழ்நாட்டை அது கற்பனை செய்கிறது; தமிழர்களின் - குறிப்பாக பிராமணரல்லாதோரின் நலன்களை அது பேணுகிறது; காங்கிரஸுக்கு அப்படி நிலையான ஒரு கருத்தியல் இருக்கிறதா? அதற்கென்று ஒரு குழுமம் இருக்கிறதா? 

எல்லோரையும் இணைக்கும் 'இந்தியா'தான் காங்கிரஸின் சித்தாந்தம், நலன் எல்லாமே, இல்லையா? காங்கிரஸைச் சிமிழுக்குள் அடக்க முடியாது. மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். கால மாற்றத்துக்கேற்ப எந்த ஒரு வெகுஜன கட்சியும் தன்னை மாற்றிக்கொள்ளும். அப்படித்தான் காங்கிரஸும் மாறிவந்திருக்கிறது.

இந்த நாட்டின் உருவாக்கமே காங்கிரஸின் கனவோடு இணைந்தது. 1920களில் காந்தி காலத்தில் சுதேசியத்தைக் கொண்டுவந்ததும் காங்கிரஸ்தான்; 1950களில் நேருவின் காலத்தில் சோஷலிஸத்தைக் கொண்டுவந்ததும் காங்கிரஸ்தான்; 1990களில் ராவ் காலத்தில் லிபரலைசேஷனைக் கொண்டுவந்ததும் காங்கிரஸ்தான்; இல்லையா?

அடிப்படையில் காந்திதான் காங்கிரஸ். இன்றைக்கும் காங்கிரஸுக்கு வாக்களிக்கும் ஒருவர் காந்தியையும் நேருவையும் மறக்கவே இல்லை. தமிழ்நாட்டில் 10 மக்களவை உறுப்பினர்களைப் பெறும் அளவுக்கு காங்கிரஸ் இருக்கிறதே, இது எந்தத் தலைவரின் பலத்தில் என்று நினைக்கிறீர்கள்? இன்று காங்கிரஸிலுள்ள  ஒரு தலைவருக்கேனும் தனியாக அவர்கள் தொகுதியில் நின்று வெல்லும் தெம்பு இருக்கிறதா? இல்லை. இப்படிப்பட்ட நிலையிலுள்ள ஒரு கட்சி, ஆட்சியை இழந்து அரை நூற்றாண்டுக்குப் பின்னரும் மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் நிலையில் நிரந்தரமான ஒரு வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் யார்?  காந்தி - நேரு கணக்கில்தானே இதை எழுத வேண்டும்!  

சித்தாந்தரீதியான வலு என்பது எந்தக் கட்சிக்கும் முக்கியமான ஒன்று. அப்படியான சித்தாந்ததப் படையை எப்படி நீங்கள் பராமரிக்கிறீர்கள் என்பதும் முக்கியம்.

தமிழ்நாட்டை ஒரு பேச்சுக்காக எடுத்துக்கொள்வோம்; "திமுகவுக்கு நாங்கள்தான் தூசிப் படை; திராவிடர் கழகம்தான் சித்தாந்த வழிகாட்டி" என்று திக தலைவர் கி.வீரமணி அடிக்கடி சொல்வார். சரி, பாஜக ஆர்எஸ்எஸ்ஸை எந்த இடத்தில் வைத்திருக்கிறது; திகவைத் திமுக எந்த இடத்தில் வைத்திருக்கிறது? இதுவரையிலான தேர்தல்களில் எத்தனை திகவினருக்குத் திமுக சீட் கொடுத்துள்ளது? 234 சட்டமன்றத் தொகுதிகளில் நீங்கள் ஆட்களை நிறுத்தும்போது ஏன் சித்தாந்தரீதியாக உழைக்கும் நான்கைந்து பேருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது? இது நாமாக ஒரு சுய ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் ஒரு கேள்விதான்.

காங்கிரஸ் இப்படித்தான் வீழ்ந்தது என்று சொல்வதற்காக இதைக் கூறுகிறேன். பாஜகவைப் பொருத்தவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலிருந்து வருபவர்களை முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் அது வைத்திருக்கிறது.  ஏனைய கட்சிகள் தங்களுடைய பிரச்சார அணியினரைப் போன்று சித்தாந்திகளை நடத்துகின்றன.

நாமே சுய ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்வோம். இது ஒருவரோடு மற்றவரை ஒப்பிடுவதற்காக அல்ல. ஒரு அமைப்பில் சித்தாந்தரீதியான பிரிவுக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். 

ராகுல் சில முயற்சிகளை மேற்கொண்டார், இல்லையா?

ராகுல் இந்த விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டார். ஆனால், காரியம் ஒன்றும் கதை சேரவில்லை.  காங்கிரஸில் ராகுல் காந்தி எப்போது நுழைந்தாரோ, அப்போதிலிருந்து அவர் இளைஞரணியைக் கட்டுவதில் தீவிரமாகச் செயல்பட்டார். சித்தாந்தரீதியான கட்டமைப்பை உருவாக்கவும் முயன்றார்; ஆனால், எதுவுமே ஒருகட்டத்துக்கு மேல் போகவில்லை.

தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்பவர்கள் இல்லாமல் எந்த அமைப்பும் தலையெடுக்க முடியாது. நீங்கள் ஒரு அமைப்பை உருவாக்க விரும்புகிறீர்கள் என்றால், சில ஆண்டுகளேனும் அதுவே கதி என்று கிடக்க வேண்டும். சம்பாரண் போராட்டத்துக்காக தன் வாழ்க்கை முழுவதையுமே கொடுக்க தயாராக இருந்தார் காந்தி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்த அளவில் இங்கு தேர்தலில் யார் வெல்கிறார்கள், ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் தாண்டி, எது செல்வாக்கு செலுத்தும் கதையாடலாக இருக்கிறது என்பதுதான் முக்கியமான  விஷயம். இதற்கு சித்தாந்த வலு முக்கியம்.

இன்றைக்கு பிரதமர் மோடி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள், விளிம்புநிலை மக்களின் இடஒதுக்கீடு போய்விடும்!" உடனே காங்கிரஸ் பதறி இதற்குப் பதில் அளிக்கிறது, "ஐய்யய்யோ, அப்படியெல்லாம் இல்லை!"

ஐயா, நீங்கள் மோடிக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும்? ஆதி காலத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பு, சமூகநீதிக்கான விரோதி ஆர்.எஸ்.எஸ். என்பதையல்லவா பேச வேண்டும்? கோல்வால்கர் காலம் தொடங்கி மோகன் பகவத் காலம் வரை எப்படியெல்லாம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையல்லவா பேச வேண்டும்?

தேர்தல் காலத்தில் சித்தாந்த அரசியலைப் பேச முடியாமல் போகலாம். தேர்தல் அல்லாத காலங்களிலேனும் நீங்கள் நம்பும் சமூகநீதி, மத நல்லிண்ணக்கம் இதையெல்லாம் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். காங்கிரஸார் தேர்தல் அல்லாத காலத்தில் என்ன வேலை செய்கிறார்கள்? 

தமிழ்நாட்டில் இன்றுள்ள பரவலான வளர்ச்சிக்கு இங்கே அமலில் உள்ள 'இடஒதுக்கீடு முறை' அவ்வலவு பெரிய பங்கு வகித்துள்ளது. நீங்கள் என்னோடு வாருங்கள், எந்தக் கல்லூரிக்குள்ளும் நாம் செல்வோம். யாரெல்லாம் இந்த இடஒதுக்கீட்டால் பெரும் பலனைப் பெற்றுள்ளனரோ அதே சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பான்மையினர் "இடஒதுக்கீடு மோசம், வேண்டாம்" என்று சொல்வதை நீங்கள் கேட்கலாம்,. அப்படியென்றால், ஆட்சி உங்கள் வசம் இருந்து என்ன பிரயோஜனம்? அடிப்படையான சமூகநீதி அம்சத்தையே அடுத்த தலைமுறையிடம் நீங்கள் கொண்டுசெல்லவில்லையே!

காங்கிரஸிடம் மட்டும் அல்ல; பாஜகவை எதிர்க்கும் ஒவ்வொரு கட்சியிடமுமே நாம் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

ராகுல் காந்தி இன்றைக்கு சமூகநீதி, கூட்டாட்சி விஷயங்களில் பெரிய ஈடுபாட்டைக் கொண்டிருக்கிறாரே? காங்கிரஸில் இது ஒரு மாற்றத்தைப் பிரதிபலிக்கவில்லையா?  

ஆம், ராஜீவ் போன்று இல்லை ராகுல்; கிட்டத்தட்ட வி.பி.சிங் மாதிரி பேசுகிறார்.

ஆனால், நீங்கள் ஒரு கட்சித் தலைவர் என்றால், நீங்கள் மட்டும் மாறி பிரயோஜனம் இல்லை; உங்கள் கட்சியை மாற்ற வேண்டும். தொண்டர்களுக்கு முன் கட்சித் தலைவர்களிடம் அவசியம் மாற்றத்தைக் கொண்டுசேர்க்க வேண்டும்.

தெலுங்கானாவில், மாநில சுயாட்சியை வலியுறுத்தி ஓராண்டுக்கு முன் பேசினார் அப்போது முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ். எதிரே காங்கிரஸ் தலைவராக இருந்த ரேவந்த் ரெட்டி இதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார் தெரியுமா? ராவைப் பிரிவினைவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டும் என்று பேசினார். இன்றைக்கு அங்கே அவர்தான் காங்கிரஸ் முதல்வர்.

சனாதனம் தொடர்பாக உதயநிதி தெரிவித்த கருத்துகளுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் பேசியிருப்பவரும் இதே ரேவந்த் ரெட்டிதான். அப்படியென்றால், காங்கிரஸில் என்ன சித்தாந்தத் தெளிவை ராகுல் உண்டாக்கியிருக்கிறார் என்று என்னை நம்பச் சொல்கிறீர்கள்?

எனக்கு ராகுல் மீது பெரிய அன்பும் மதிப்பும் உண்டு. இதெல்லாம் அவருடைய தவறு இல்லை. பாட்டிக் காலத்து, அப்பா காலத்து, அம்மா காலத்துச் சுமை என்று குறைந்தது அரை நூற்றாண்டு சுமை அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. வேறு வழியில்லை; அவர்தான் இன்னமும் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார் என்பதால், அவர்தான் மாற்றத்துக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; கடுமையாக உழைக்க வேண்டும்!   

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

7






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ramasubbu   19 days ago

பா. ஜ. க. வளர்ச்சிக்கு காரணம் அதனுடைய உறுதியான சித்தாந்த அடிப்படை. மட்டுமே. யார் வேண்டுமானாலும் கட்சிக்காக உழைத்து தலைமையிடத்துக்கு வரலாம்.. காங்கிரஸ்சில் அப்படியில்லை. நேரு குடும்ப நிர்வாகத்திற்கு உட்பட்டுதான் எதுவுமே. அனைவரும் கடுமையாக உழைத்து, அதிகப்படியான இடங்களில் வெற்றி கிட்டும் நிலையில் தலைமை பொறுப்புக்கு, அதாவது கிரீடம் சூட்டிக்கொள்வோவதற்கு அவர்கள் வருவாரகள். உண்மையில், இதய சுத்தியோடு கடந்த கால காங்கிரஸ் ஆட்சிகாலத்தை ஆய்வோமானால், நரசிம்ம ராவ் ஆட்சிகாலம் பாராட்ட தக்கது. காங்கிரஸ் சில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை.. திறமையான இரண்டாம் நிலை தலைவர்கள் முடிவெடுக்கும் தலைமை இடத்துக்கு வரமுடிவதில்லை. (தமிழ் நாட்டில் பா. ஜ. க. வில் எல். முருகன், அண்ணாமலை போன்றவர்கள் மாநில அளவில் தலைமைக்கு வந்தது, அவர்களுக்கு திறமை உள்ளது என்ற அடிப்படையிலதான் )ஓரளவுக்கு இன்றைய நிகழகால அரசியல் தெரிந்த ஒருவரால் மல்லிகாஅர்ஜுன காரக்கே எந்த அளவுக்கு திறமையானவர் என்பதை தெரிந்து கொள்வார். ஜெய் ராம் ரமேஷ், சசி தரூர் போன்றோர் தலைமைக்கு ஜால்ரா அடிக்க வாய்ப்புகள் மிக குறைவு. இந்த பாராலு மன்ற தேர்தலில் காங்கிரஸ் எதிர் கட்சி அந்தஸ்தை எட்டவில்லை என்றால் நேரு பரம்பரையை ஒதுக்கி வைக்க வேண்டும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒரு செய்திஇந்திய அரசு சட்டம்குஜ்ரன்வாலாக்யூஆர் குறியீடுஆர்.எஸ்.எஸ்இயக்கக் கோட்பாடுபுத்தகங்கள்தபாசிலி சங்கல்ப்ஆழ்ந்த அரசியல் ஈடுபாடுபாரபட்சம்பாஜகவின் அச்சம்ஒரு கடல்பிரதமரின் மௌனம்மகிழ்ச்சி சரிஇந்திய ஆட்சிப் பணியாளர்களின் மேட்டிமை மனநிலை!வேதியியலர்கள்ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்இந்தியா - ஆவணமும் அலட்சியமும் பிறகுஇலக்கியப் பிரதிசீனத்தின் சதுரங்கப் பாய்ச்சல்ஃபருக்காபாத்பூச்சிக்கொல்லிஅடக்கம் அவசியம்அமி்த் ஷாதமிழ்நாடுசாந்தன்2019 ஆகஸ்ட் 5மறை ரத்தம்the wire

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!