கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

மாநிலக் கட்சிகளின் வாரிசுத் தலைமைகளுக்கு ஒரு சேதி

சமஸ்
04 Aug 2023, 5:00 am
0

நிலைகுலைந்திருக்கிறார் சரத் பவார். இது எதிர்பாராதது என்று சொல்ல முடியாது. கட்சி எந்நேரமும் உடைக்கப்படலாம் என்ற அச்சம் அவருக்கு எப்போதுமே இருந்தது. ஆனால், 82 வயதில் ஒரு யுத்தத்தை எதிர்கொள்வது எவருக்கும் சவாலானது.

இந்தியாவின் பிராந்தியத் தலைவர்களில் மூத்தவரான சரத் பவாருடைய தேசியவாத காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட செங்குத்தாகப் பிளக்கப்பட்டிருப்பது மஹாராஷ்டிரத்துக்கு அப்பாலும் எல்லா மாநிலக் கட்சிகள் இடையிலும் அதிர்வை உண்டாக்கியிருக்கிறது.

மஹாராஷ்டிரத்தின் சக்தி வாய்ந்த தலைவர் சரத் பவார். மஹாராஷ்டிரத்தின் அரசியல் இரு பிளவுகளைக் கொண்டது; ஒன்று மும்பை போன்ற தொழில்மயமாக்கல் பின்னணி கொண்ட நகர்ப்புற அரசியலின் திரட்சி; மற்றொன்று பாராமதி போன்ற விவசாயப் பின்னணி கொண்ட கிராமப்புற அரசியலின் திரட்சி.

சரத் பவார் பாராமதியிலிருந்து வந்து மும்பையில் அமர்ந்தவர். சரத் பவாருடைய தந்தை கோவிந்தராவ் பவார் காலத்திலேயே விவசாய சங்கச் செயல்பாடுகளோடு மிக நெருக்கமான உறவை சரத் பவாருடைய குடும்பம் கொண்டிருந்தது. மஹாராஷ்டிர கிராமப்புற அரசியல் திரட்சியில் விவசாய சங்கங்களும், அவை சார்ந்த கூட்டுறவு அமைப்புகளும் மிகுந்த செல்வாக்கு கொண்டவை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்துத்துவம் ஒரே இந்துத்துவம்தான்

சமஸ் 26 Jul 2022

பள்ளி நாட்களிலேயே அரசியல் ஆர்வத்தோடு வளர்ந்த சரத் பவார் காங்கிரஸில் மிக வேகமாக வளர அவருடைய சாதிப் பின்னணியும் முக்கியமான பங்கு வகித்தது. மஹாராஷ்டிரத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர் பவார். பிராமணர்கள் செல்வாக்கு நிரம்பிய மஹாராஷ்டிர அரசியலில், பிராமணரல்லாதோர் அரசியலின் பிரதிநிதியாகவும் அவர்  பார்க்கப்பட்டார். 1978இல் ‘மஹாராஷ்டிரத்தின் இளம் முதல்வர்’ ஆகியிருந்தார் பவார். 1991இல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, அடுத்த பிரதமருக்கான போட்டி காங்கிரஸில் உருவானபோது, பவார் வெளிப்படையாக உரிமை கோரினார்.

எதையும் வெட்கமின்றிச் செய்யும் பாஜக மீண்டும் அதன் பழைய உத்திகளில் ஒன்றைக் கையில் எடுத்திருப்பதையே மஹாராஷ்டிரத்தின் இன்றைய அரசியல் சூழல் மாற்றம் சுட்டுகிறது.

இதையன்றி நாம் கேள்வி கேட்டுக்கொள்ள சில புள்ளிகள் இந்த விவகாரத்தில் இருக்கின்றன. அவை சரத் பவார் – தேசியவாத காங்கிரஸ் கட்சி எனும் எல்லையைத் தாண்டி மாநிலக் கட்சிகளின் எதிர்காலம் தொடர்பானவை. அது சிவசேனையோ, தேசியவாத காங்கிரஸோ; தம்முடைய கட்சியைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் குடும்ப / வாரிசு அரசியலைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. சிவசேனையின் உத்தவ் தாக்கரே தன்னுடைய மகன் ஆதித்ய தாக்கரேவை நம்பியிருக்கிறார் என்றால், சரத் பவார் தன்னுடைய மகள் சுப்ரியா சுலேவை நம்பியிருக்கிறார். ஏன் குடும்ப / வாரிசு அரசியலைத் தாண்டி மாநிலக் கட்சிகளின் எதிர்காலத்தைச் சிந்திக்க முடியவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்; இப்படிக் கொண்டுவரப்படும் குடும்ப / வாரிசு அரசியல் பிரதிநிதிகள் குறைந்தபட்சம் தங்களை எந்த அளவுக்குக் கட்சியோடும் செயல்பாட்டோடும் அடித்தள அளவில் ஐக்கியப்படுத்திக்கொள்கின்றனர் என்ற கேள்வி இங்கே முக்கியமானது. ஏனென்றால், சிவசேனை உடைபட்டபோதும் ஆதித்ய தாக்கரே பெயர் அடிபட்டது; தேசியவாத காங்கிரஸ் உடைபடும்போதும் சுப்ரியா சுலே பெயர் அடிபடுகிறது. நெடுநாள் அதிருப்திகள் உரக்கப் பேசப்படுகின்றன. 

இந்தியாவில் குடும்ப அரசியலுக்கு வெகுமக்கள் இடையே உருவாக்கப்பட்டிருக்கும் ஏற்பின் காரணமாக வாரிசுரிமையின் பெயரால் தன்னியல்பாகக் கட்சித் தலைமை நோக்கி நகரும் வாரிசுகள் எந்த அளவுக்குத் தன்னை கள அரசியலின் சூட்டுக்குத் தயாராக்கிக்கொள்கின்றனர் என்பது முக்கியமான ஒரு கேள்வி. நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் சரிவைச் சந்தித்துள்ள மாநிலக் கட்சிகள் / சிறப்பாகச் செயல்படும் மாநிலக் கட்சிகள் இரண்டின் செயல்பாட்டிலுமே வாரிசுத் தலைமைகளின் செயல்திறன் முக்கியமான பங்கு வகிக்கிறது.  

இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க பாஜகவை எதிர்ப்பது என்பது ஒரு நீண்ட பயணம். அடுத்து வரும் சில தேர்தல்களுக்கு எதிர்க்கட்சிகள்  அரசியல் ஒருங்கிணைப்பு சார்ந்து பாஜகவை எதிர்கொள்ளலாமே தவிர, நீண்ட காலத்தில் அதை எதிர்கொள்ள பண்பாட்டு அளவில் தம்மைக் கூர்மைப்படுத்திக்கொள்வதும், கட்சிகளின் செயல்பாடுகள் பன்பரிமாணம் அடைவதும் முக்கியம்.  மாறாக, தம்முடைய பலவீனங்களையே சீரமைத்துக்கொள்ளாமல் பாஜக எதிர்ப்பின் பெயரால் கட்சியை நடத்திவிடலாம் என்று எண்ணினால் அது சுய ஏமாற்றாகவே அமையும். சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் இரண்டும் தம்மைச் சீரமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பாக இச்சூழலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மஹாராஷ்டிர அரசியல் சூழலை அனைத்து மாநிலக் கட்சிகளும் தமக்கான செய்தியாகக் கருத வேண்டும்!

- ‘குமுதம்’, ஜூலை, 2023

 

தொடர்புடைய கட்டுரைகள்

இந்துத்துவம் ஒரே இந்துத்துவம்தான்
சீரழிவை நோக்கிச் செல்லும் இந்தியக் கட்சிகள்!
திமுகவுக்கு உதயநிதி செய்ய வேண்டியது என்ன?
மக்களாட்சிக்கு நன்மை உதயநிதிகளின் தலைமை

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

3

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சென்னை கோட்டைஉகந்த நேரம்வெஸ்ட்மினிஸ்டர்மின்னணு சாதனங்கள்தலைமைச் செயலகம்கட்டுமானத்தில் நீராற்றுரோஹித் குமார் கட்டுரைஇலங்கை தேசியம்பெரும்பான்மையினம்திட்ட அனுமதிவாரிசுஎழுத்தாளர் பேட்டிசித்தப்பாநடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: நாகூர்இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது:சமையல் எண்ணெய்சத்தியாகிரகம்மூலிகைகள்மிகைப்புகழ்ச்சிக்கும் அப்பால்இந்தியன் எக்ஸ்பிரஸ்விற்கன்ஸ்ரைன் - நூல் விமர்சனம்இந்திய தேசியவாதிதேசியப் பங்குச் சந்தைப்ராஸ்டேட் வீக்கம்இந்திய விடுதலைஅரசமைப்புச் சட்டசார்லி சாப்ளின் பேட்டிமோடி குஜராத்தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா சமஸ் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!