பேட்டி, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி

25 Apr 2024, 5:00 am
0
நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். அந்த வகையில் ‘ஆகாயம் தமிழ்’ யூடியூப் சேனலுக்கு, அதன் செய்தியாசிரியர் திரு.நிஜந்தன் அவர்களுக்கு அளித்த பேட்டியின் எழுத்து வடிவத்தை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது. 

மக்களவைத் தேர்தலை ஒட்டி இந்தியா முழுவதும் பயணித்துவருகிறீர்கள். இந்த முறை சுமார் 370 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று பாஜக ஆருடம் தெரிவித்துள்ளது. ஆனால், 370 இடங்களில் நிச்சயம் வெற்றிபெறாது, சொல்லப்போனால் 272 இடங்களே வராது, கிட்டத்தட்ட தோல்வி அடையும் நிலையில் இருக்கிறது எனத் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த பலகீனமான நிலையை மோடியும் அமித் ஷாவும் உணர்ந்திருக்கிறார்களா? 

ஆம், இதுதான் வெளிப்படையாகவே தெரிகிறதே! அன்றாடம் வரக்கூடிய செய்திகளைப் பாருங்கள். நாம் ஒரு கணக்குக்காக எடுத்துக்கொள்வோம், ஜனவரி மாதத்திலிருந்து காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேரை பாஜக தன் பக்கம் இழுத்திருக்கிறது. இந்தச் செய்திகளெல்லாம் அந்தந்த மாலங்களின், உள்ளூர் ஊடகங்களில் இன்றைக்கு நூறு பேர் அன்றைக்கு நூறு பேர் என்று சென்றுகொண்டிருப்பதனால் நமக்குச் சரியாக கணக்கு தெரியவில்லை. இப்படி ஏரளமாக ஆட்களைக் கட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது நமக்குச் சொல்லும் செய்தி என்ன? 

ஆக, இந்த முறை தங்களுடைய இடங்கள் குறையப்போகிறது என்று மோடிக்கும் அமித் ஷாவுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். அதாவது, பாஜக ஒரு துடிப்பான தேர்தல் எந்திரம் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. தேர்தல் எந்திரத்தை வடிவமைப்பதிலும் அதைச் செயலூக்கத்தோடு செயல்படுத்தக்கூடிய ஆற்றலும் இன்று பாஜகவோடு ஒப்பிடுகையில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. அதனால் அவர்களுக்கு இதெல்லாம் மிகத் துல்லியமாகவே தெரியும். அதாவது, வடக்கில் நீங்கள் இழக்குறீர்கள் என்பதால்தான் ஏற்கெனவே வெற்றி பெற்ற இடங்கள் இல்லாமல், வெற்றி பெறாத இடங்களிலும் ஓர் இடத்துக்காவது முயற்சி செய்வோம் என்று இத்தனை முறை தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் வந்தார் மோடி. ஏதாவது ஓரிடம், இரண்டு அல்லது நான்கு இடங்கள் கிடைக்காதா என்று செய்யக்கூடிய முயற்சியே அந்தத் தோல்வி பதட்டத்தைக் காட்டுகிறதுதானே!

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

காரணம், காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் ஒரு மாறுபாடு உண்டு. இரண்டு தேர்தல்களை ராகுல் இழந்துவிட்டார். தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் சொல்லிவிட்டார். அறிவித்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் பொறுப்பை ஏற்க வேண்டி கட்சி வலியுறுத்துகிறது. இன்று கார்கே தலைவர் பதவிக்கு வந்துவிட்டாலும்கூட ராகுலைத்தான் தலைவராக பார்க்கிறார்கள். இந்த வசதி மோடிக்கோ அமித் ஷாவுக்கோ பாஜகவில் கிடையாது.

பாஜக, வெற்றி இல்லை என்று சொன்ன ஆட்களை இரக்கமில்லாமல் தூக்கிவிடும். அத்வானி எவ்வளவு பெரிய மனிதர். 2009 தேர்தலுக்குப் பிறகு அவர் என்ன நிலைமைக்கு வந்தார். 2014 தேர்தலில் ஏன் அவர் கொண்டுவரப்படவில்லை என்பது நமக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்ததுதான். இதேதான், மோடியால் அந்த வெற்றியைக் கொடுக்க முடியவில்லை என்றால், அந்த இடத்தில் நீடிக்க முடியாது என்பது மோடி – ஷா இருவருக்கும் தெரியும். ஏனென்றால், கட்சிக்குள்ளேயே அவர்களுக்கு ஏராளமான கசப்பு இருக்கிறது. 2014இல் அவர்கள் வரும்போது யாரெல்லாம் அவர்களுடன் கூட நின்றார்களோ, குறிப்பாக மாநிலங்களில் – ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌஹான், உத்தர பிரதேசத்தில் ராஜ்நாத் சிங், மஹாராஷ்ட்டித்தில் நிதின் கட்கரி என மூத்த தலைவர்கள் பலரும் - தங்களது இடத்தை தற்போது இழந்திருக்கிறார்கள். ஆக, உள்ளே அந்தத் தணல் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் வெற்றியோடு சென்றால் உங்களை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது, ஆனால் தோல்வியைத் தழுவினால், அவ்வளவும் சக்தியும் திருப்பி அடிக்கும் என்பது இருவருக்கும் தெரியும். 

சென்ற தேர்தலிலேயே நிதின் கட்கரியை ஆர்எஸ்எஸ் பி அணியாக தயார்செய்துகொண்டிருந்தது. ஒருவேளை மோடியின் எண்ணிக்கை குறையும் என்றால், மொத்தம் 200 இடங்கள் வந்து, கூட்டணியாகத்தான் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் மோடியுடன் வருவதற்குக் கூட்டணிக் கட்சிகள் தயங்குவார்கள், அப்போது நிதின் கட்கரியை வைத்து முயற்சி செய்வோம் என்பதாகத் திட்டமிட்டார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாக பேசப்பட்ட ஒன்று. இப்போதும் அந்தப் பேச்சு சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை எண்ணிக்கை குறைந்தால் சங்க பரிவாரங்கள் நிதின் கட்கரியைத்தான் முன்னிறுத்துவார்கள். இது தற்போது வெளிப்படையாக இல்லையென்றாலும் கட்சிக்குள் இந்தப் பேச்சு இருக்கத்தான் செய்கிறது. 

இப்போது கட்சிக்குள் எடுத்துக்கொண்டால், விட்டுக்கோ பறித்துக்கோ எனும் நிலையில்தான் எல்லா மாநிலத்திலும் இருக்கிறது. நீங்கள் ராஜஸ்தானை எடுத்துக்கொண்டால், அங்கு வசுந்தரா ராஜே ஜெயலலிதா மாதிரி, அசோக் கெலாட் கலைஞர் மாதிரி என்று  வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு செல்வாக்கான தலைவர் வசுந்தரா. அங்கு அவரை விட்டுவிட்டு வேறொருவரை முதல்வராக அமர்த்தும்போது அவர் எந்தச் செல்வாக்குமே இல்லாமல் இருக்கிறார். புதியவர் ஏதோ இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவராகக்கூட இருந்தவர் கிடையாது. திடீரென எங்கிருந்தோ அவரைக்  கொண்டுவந்து அமர்த்துகிறீர்கள். மத்திய பிரதேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள், சிவராஜ் சௌஹான் மோடிக்கு இணையாக அவர் காலகட்டத்தில் வளர்ந்துவந்தவர். அத்வானி ஒருகட்டத்தில் சொன்னார், 'குஜராத் மாதிரி வளர்ச்சியைவிட மத்திய பிரதேச மாதிரி வளர்ச்சி பாஜக ஆட்சிக்கு மிகவும் முக்கியம்' என்று. ஏனென்றால், குஜராத் வளர்ந்த மாநிலம், மத்திய பிரதேசம் தொழில் வளர்ச்சி இல்லாமல் மிகவும் பின்தங்கியிருந்தது. அதைக் கொஞ்சம்போல மேலே வளர்த்தெடுத்தற்கு சிவராஜ் சௌகான் ஆட்சி பங்களித்தது. அப்படியிருக்க, அவரெல்லாம் தேர்தல் வெற்றியைக் கொடுத்தும்கூட அவரை முதல்வர் ஆக்காமல், வேறு யாரையோ கொண்டுவருகிறீர்கள். மேலும், சௌஹானுக்கு இன்னும் வயது இருக்கிறது. மோடிக்கு 75 என்றால் சௌஹானுக்கு 66 வயதுதான் ஆகிறது. ஆக, அதிகாரம் உங்களிடம் இருக்கும் வரையில் சுமுகமாக போய்க்கொண்டிருக்கும். அது இல்லையென்றால் எல்லாம் கேள்விக்குறிதான். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

ஆகையால், 250 இடங்களை வென்றால்கூட மோடி மீண்டும் பிரதமர் ஆவது சவால்தான் என்பது மோடி – ஷா இருவருக்கும் தெரியும். இது கூட்டணி சேர்ந்தாலுமே சிக்கல்தான். மோடியே என்ன சொல்கிறார், ‘370 நான் வெல்வேன்’ என்று, கூட்டணிக்கே 30 இடங்கள்தானே கொடுக்கிறார்? அவரே 30 என்று சொல்லும்போது உண்மையில் அந்தக் கூட்டணி எத்தனை இடங்களை எடுத்துவிட முடியும். அவர்கள் கூட்டணியில் இருக்கும் வலுவான ஒரே கட்சி என்பது தெலுங்கு தேசம் கட்சி மட்டும்தான். அதுவே வெற்றி பெறுமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். ஒருவேளை தெலுங்கு தேசம் வென்று, பாஜக 220க்கு கீழே போய்விட்டால் அவர்களே  கூட்டணியில் இருப்பார்களா என்பது தெரியாது.  அப்படியே இந்தப் பக்கம் வரவும் வாய்ப்புண்டு. ஏனென்றால், ஆந்திராவில் காங்கிரஸ் அவ்வளவு வலுவான கட்சி கிடையாது. ஜெகன் மோகன் ரெட்டிக்கும் காங்கிரஸுக்குமே ஒன்றும் நல்லுறவு கிடையாது. மேலும், சந்திர பாபு நாயுடு கட்சியை பாஜக உடைக்கத்தான் செய்ததது. இப்போது பாஜக அல்லாத ஏனைய கட்சிகளுக்கான பயமே என்னவென்றால் கூட்டணியாகச் சென்றாலுமே பாஜக தம் கழுத்தை அறுத்துவிடுவார்கள் என்பதுதான்.

தமிழ்நாட்டுக்கு வெளியெ ஒருகாலத்தில் திமுக அதன் பேச்சுகளுக்காகவோ நடவடிக்கைகளுக்காகவோ பிரபலமாக இருக்கும், ஆனால், இன்று அதிமுகவும் பிரபலமாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு கூட்டணிக் கட்சியை எவ்வளவு தூரம் பாஜகவால்  நசுக்க முடியும் என்பதற்கு அதிமுகவை வைத்து எல்லோரும் ஓர் உதாரணத்தைப் புரிந்துகொண்டார்கள்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

ஆக, பாஜக 225-250 எண்ணிக்கை வருவதற்கே கடினமாகத்தான் இருக்கும். அப்படியே வந்தாலும் கூட்டணி என்பதைக் கட்டமைப்பது அவர்களுக்குச் சவாலாகத்தான் இருக்கும். இதில் பாஜக இவ்வளவு வரும் என்று நான் வரையறுக்கவில்லை. 225 – 250 வரைதான் சாத்தியக்கூறு இருக்கிறதென்று நான் சொல்கிறேன். காரணம், இந்தியாவின் வாக்குக் களங்கள், ஓரிடத்தில் 10 லட்சம், இன்னொரு இடத்தில் 5 லட்சம் என இப்படி இருக்கும் தொகுதிகளில் நீங்கள் 3 லட்சம் வாக்குகள் பெறுகிறீர்கள் என்றால் உங்கள் கட்சி பலமாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

கடந்த முறை 303 தொகுதிகளைப் பெற்றதில் வெறும் 100 தொகுதிகளில்தான் 3 லட்சம் வாக்குகள் என்ற நிலையில் இருக்கிறது. மீதமுள்ளதெல்லாம் அதற்குக் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறது. அதெல்லாம் முடிவுகளை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை மிக்கதுதான். அதனால், முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் போகலாம்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

4






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ப.சிதம்பரம்கட்டுப்பாடு இல்லையா?இந்திய விவசாயிகள்இரு வல்லரசு துருவங்கள்உணவு தானியம்சாரு நிவேதிதாகட்டணக் கொள்ளை ஜெய்லரும்: வெகுஜன ரசனையின் சீரழிவுஅம்பேத்கரை அறிய புதிய நூல்மாட்டுப் பால்பேரிசிடினிப்ஜி.யு.போப்உமர் காலித்பின்லாந்து கல்வித் துறையின் வரலாற்றுப் பின்னணிகீழ் முதுகு வலிகச்சேரிகள்அபர்ணா கார்த்திகேயன்ஊடக ஆசிரியர்கள்துணை முதல்வர்கள்குஜராத் முதல்வர் மாற்றம்திருமஞ்சன தரிசனம்வைக்கம் வீரர்ஜெய்சால்மர்ஆசிய உற்பத்தி முறைசாலிகிராம்அறிவியலுக்கு பாரத ரத்னாபேரூட் டு வாஷிங்டன்கெளதம் அதானிநட்சத்திரப் பேச்சாளர்கம்பராமாயணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!