கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

‘வலிய’ தலைவர் பொய் சொல்வது ஏன்?

ப.சிதம்பரம்
13 May 2024, 5:00 am
1

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி, சுயமாக அறிவித்துக்கொண்ட ‘வலிமை’யான தலைவர். தன்னுடைய மார்பளவு 56 அங்குலம் என்று அடிக்கடி கர்வப்பட்டுப் பேசுபவர்.

தில்லியின் கான் மார்க்கெட் குழுவை (இடதுசாரி சிந்தனையாளர்கள்) செல்வாக்கில்லாமல் அடக்கியது, நகர்வாழ் நக்ஸல்களை ஒடுக்கியது, நாட்டைத் துண்டு துண்டாக பிரிக்க வேண்டும் என்று கொக்கரித்த பிரிவினைவாத குழுக்களை அழித்தது, பயங்கரவாதத்துக்குத் துணை போகக் கூடாது என்று பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பித்தது, அரசு நிர்வாகத்தில் இணைமொழியாக இருந்த ஆங்கிலத்தின் நிலையைக் குறைத்தது, பிரதான செய்தி ஊடகங்களை அடிபணிய வைத்தது, இந்தியாவுக்கு விஸ்வகுரு என்ற நிலையைப் பெற்றுத்தந்தது என்று அவருடைய மெய்க்கீர்த்திகளை அடிவருடிகள் தொடர்ந்து விதந்தோதுகின்றனர்.

மக்களவையில் 303 இடங்கள், பிரச்சாரத்துக்கு 12 முதல்வர்கள் என்று பெரும் படையைக் கையில் வைத்திருக்கும் பிரதமருக்கு, 370 என்ற இலக்கை நோக்கிய பயணம் (பாஜகவுக்கு 370, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400+ இலக்கு) வெகு எளிதாக இருந்திருக்க வேண்டும். ‘பாஜகவுக்கு 300 - கூட்டணிக்கு 400’ என்பதெல்லாம் சாத்தியமில்லை, பெரும்பான்மை இடங்களில் கூட்டணி வென்றால் அதுவே பெரிய சாதனை என்று பாஜக தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பேசும்போது ஒப்புக்கொள்கிறார்கள்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பாதை மாறுவது ஏன்?

மோடி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மிகுந்த நம்பிக்கையுடனும் பெரும் பாய்ச்சலுடன்தான் தொடங்கினார். காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 5ஆம் நாள் வெளியிட்டது. அதைப் பொருட்படுத்த விரும்பாமல் முதலில் அலட்சியம் செய்தார் மோடி.

ஏப்ரல் 1ஆம் நாள் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது, அதன் உறுதிமொழிகளை மக்களிடம் எடுத்துரைக்க யாரும் பெரிதும் முயற்சி எடுக்கவில்லை. அந்த அறிக்கைக்கு ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது. அதன் உள்ளிருக்கும் விஷயங்களைப் பெரிதாகப் பேசாமல் தன்னுடைய பிரச்சார உரைகளை முடிக்கும்போது, இது ‘மோடியின் உத்தரவாதம்’ என்று அறிவிப்பதை மோடி வழக்கமாக்கிக்கொண்டார்.

இப்படி எத்தனை உத்தரவாதங்களை அளித்தார் என்பதை என்னால் எண்ணிச் சொல்லவே முடியவில்லை. ஆனால் எது தனித்து தெரிகிறது என்றால், வேலையில்லாதவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றோ விலைவாசியைக் கட்டுப்படுத்திக் குறைப்பேன் என்றோ அவர் உத்தரவாதம் அளிக்கவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு பிரதமர் எதைப் பற்றியெல்லாம் பேச வேண்டுமோ அதைப் பற்றியெல்லாம் அவர் பேசவேயில்லை; வகுப்பு ஒற்றுமை, வளர்ச்சி, வேளாண்மை சந்தித்துவரும் நெருக்கடி, தொழில் துறையில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகள், பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் வறிய நிலை, நிதி நிர்வாக ஸ்திரநிலை, தேசியக் கடன் சுமை, குடும்பங்களை அழுத்தும் கடன் நெருக்கடி, கல்வியின் தரம், சுகாதார வசதிகள், இந்திய நிலப்பரப்பை சீனம் ஆக்கிரமித்திருப்பது, மக்கள் இன்னும் இதுபோல் சந்திக்கும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் குறித்து அவர் பேசுவதே இல்லை.

ஏப்ரல் 19ஆம் நாள் முதல் கட்டத்தில் 109 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தது. அது தொடர்பாக உளவுத் துறை அளித்த தகவல்கள் மோடிக்குக் கிலியை ஏற்படுத்திவிட்டன. அதன் பிறகுதான் ராஜஸ்தானின் ஜலோர், பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பொதுக்கூட்டங்களில் காங்கிரஸுக்கு எதிராக முழு மூச்சான தாக்குதலைத் தொடங்கினார் மோடி.

“காங்கிரஸ் கட்சி இடதுசாரிகள், நகர்ப்புற நக்ஸல்களுடைய பிடியில் சிக்கிக்கொண்டுவிட்டது; காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பவை மிகவும் தீவிரமான தன்மையுள்ளவை, கவலை தருபவை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சொத்துகள் இருக்கின்றன என்று கணக்கெடுப்பார்களாம். நம்முடைய சகோதரிகள் எவ்வளவு நகைகள் வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பார்களாம், அரசு ஊழியர்கள் சேமிப்பு எவ்வளவு என்று ஆராய்வார்களாம். நம்முடைய சகோதரிகள் வைத்திருக்கும் தங்கம் கைப்பற்றப்பட்டு அனைவருக்கும் பிரித்தளிக்கப்படும் என்கிறார்கள். உங்களுடைய சொத்துகளைக் கைப்பற்ற அரசுக்கு உரிமை இருக்கிறதா?” என்று கேட்கிறார் பிரதமர்.

ஏப்ரல் 19க்கும் 21க்கும் இடையில் கிடைத்த ரகசிய உளவுத் தகவல்களை அடுத்தே மோடி தனது பிரச்சாரப் போக்கை மாற்றிக்கொண்டார்.

ஏன் பொய்கள் மேலும் பொய்கள்?

மேலே உள்ள பத்தியில் மோடி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்கள். நாள்கள் செல்லச் செல்ல இந்தப் பொய்களின் வடிவமும் எண்ணிக்கையும் பெரிதானதுடன் மூர்க்கமாகிவிட்டன. மக்களுடைய சொத்துகள், தங்கம், பெண்களின் தாலி (மங்கலசூத்திரம்), திருமணத்தின்போது தரப்பட்ட சீதனம், வீடுகள் என்று அனைத்தையுமே கைப்பற்றிவிடுவார்கள் என்று அச்சத்தைக் கிளப்பினார். அந்தச் சொத்துகளைக் கைப்பற்றி முஸ்லிம்களுக்கு, நாட்டில் ஊடுருவிய அன்னியர்களுக்கு, அதிகமாகக் குழந்தைகளைப் பெறுவோருக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்கள் என்றார்.

இன்னொரு பொதுக்கூட்டத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்தும் வாரிசுரிமை வரி குறித்தும் மக்களை எச்சரித்தார். இப்படிப் பொய்களுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. ஒருவருக்கு இரண்டு எருதுகள் இருந்தால் அதில் ஒன்றை அரசு எடுத்துக்கொண்டுவிடும் என்றுகூட, பொருளாதாரம் சார்ந்த அரிய சமத்துவக் கண்ணோட்ட முத்தொன்றை உதிர்த்தார்.

அந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் தெளிவானது. ஒரு பக்கம் முஸ்லிம்கள் மீது மற்றவர்களுக்கு அச்சமும் வெறுப்பும் ஏற்பட வேண்டும், இந்துக்களின் வாக்குகளைத் தங்களுடைய கூட்டணிக்கு ஆதரவாகக் குவிக்க வேண்டும் என்பது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!

ப.சிதம்பரம் 29 Apr 2024

பிரதமர் பேசிய பொய்கள் மிகவும் முக்கியமானவை, ஆனால் அவர் ஏன் அப்படிப் பேசினார் என்பது அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. கவனியுங்கள் - அவர் ஒரேயொரு பொய்யைச் சொல்லவில்லை, வரிசையாக பொய்யாகவே சொல்லிக்கொண்டு போனார், அந்தப் பொய்கள் நிற்கவில்லை - தொடருகின்றன.

தன்னுடைய கட்சிக்கு 370 இடங்களும் கூட்டணிக்கு 400க்கும் மேற்பட்ட இடங்களும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுள்ள பிரதமர் ஏன் தன்னை எதிர்ப்பவர்கள் குறித்துப் பொறுப்பில்லாமல் பொய்களாகவே பேசிச் செல்ல வேண்டும்? தான் கூறியவை குறித்து விவாதிக்க வாருங்கள் என்றுகூட அவர் அழைப்பு விடுக்கலாம். அவர் எத்தனை பொய்கள் சொன்னார் என்பதில்லை, அவர் சொன்ன பொய்களின் தேர்வு என்பது மர்மமானது, அந்த மர்மத்தை அவிழ்க்க வேண்டும்.

ஏன் சுய சந்தேகம்?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பூட்டப்பட்டுள்ள ரகசியங்களை மோடி அறிந்திருந்தால்… இப்போதுள்ள கள நிலவரம் 2019 போல இல்லை என்பதால் அவர் கவலைப்பட நியாயம் இருக்கிறது. முதலாவதாக, இந்தத் தேர்தலின்போது எதை விவாதிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் மோடி இல்லை; விவாதங்களைத் தொடங்குமிடத்தில் அவர் இல்லை. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் – சிலவற்றை அவராகவே கற்பித்துக்கொண்டாலும் – இருக்கிறார்.

இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சி அளிக்கும் தேர்தல் உறுதிமொழிகளுக்கு ஈடான வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் நிலையில் அவர் இல்லை. மூன்றாவது, பாஜகவின் முழக்கங்களைக் கேட்டு மக்கள் அலுத்துவிட்டார்கள், களைத்துவிட்டார்கள். நல்ல நாள்கள் வந்துகொண்டிருக்கின்றன (அச்சே தின் ஆனேவாலி) என்று முன்னர் கூறியதைப் போன்ற, புதிய முழக்கங்களை அவரால் உருவாக்க முடியவில்லை.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

அடுத்து, வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துவிட்டது என்பது பேரிடியாக அவரைத் தாக்கியிருக்க வேண்டும், காரணம் அவரை ஆதரிக்கக்கூடிய வாக்காளர்கள் சாவடிக்கு வர ஆர்வம் காட்டவில்லை. இறுதியாக வாக்குச் சாவடிகளில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இல்லை என்பதும், ஆர்எஸ்எஸ் தலைமையின் மௌனமும் பாஜக முகாமில் எச்சரிக்கை மணியை ஒலித்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியும் இதர எதிர்க்கட்சிகளும் முன்பைவிட அதிக தொகுதிகளில் வெற்றியைப் பெறப்போகின்றன. அப்படி அவை பெறும் தொகுதிகளால் பாஜகவுக்கு ‘நிகர இழப்பு’ அதிகமாகுமா என்பது பார்க்கப்பட வேண்டும். குஜராத்தைத் தவிர ஏனைய மாநிலங்களில் பாஜகவால் எல்லா தொகுதிகளையும் கைப்பற்றுவது 2024 பொதுத் தேர்தலில் சாத்தியமில்லை என்பது மோடிக்கும் மற்ற தலைவர்களுக்கும் உறைத்திருக்க வேண்டும். கடந்த தேர்தலைவிட அதிகம் எவ்வளவு கிடைக்கும் என்பதைவிட, எவ்வளவு அதிகம் குறையும் என்ற கவலை அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும், அந்தக் கவலைதான் அப்படி அவரை அலையலையாய் பொய்களைப் பேசத் தூண்டியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை என்னால் ஊகித்துக் கூற முடியாது, ஆனால் மோடியின் பொய்களை மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று மட்டும் என்னால் கூற முடியும். அதேசமயம், ‘வலிமையான தலைவர் ஏன் இப்படிப் பொய் சொல்ல வேண்டும்?’ என்று வியப்புடன் கேட்கின்றனர் மக்கள்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

வலிமையான தலைவர் எனும் கட்டுக்கதை ஏன் மக்கள் விரோதமானது?
மோடியைக் கலவரப்படுத்திய காங்கிரஸ் அறிக்கை
காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!
பாஜக: அரசியல் கட்சியா, தனிமனித வழிபாட்டு மன்றமா?
காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
வடக்கு: மோடியை முந்தும் யோகி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4


பகுத்தறிவுச் சிந்தனைதொழில் வளர்ச்சிவிடுதலைப் புலிகள்குடியுரிமைச் சட்டம்காவிரி நீர்அண்ணாமலை அதிரடிபோஃபர்ஸ் பீரங்கிபன்னிரெண்டாம் வகுப்புஆர்எஸ்எஸ் தலைவர் பாகவத்தின் கண்டனம்ஹேக்கர்கள்நவீன எழுத்தாளர்கள்பாசிபுலப்பெயர்வுகாலத்தின் கப்பல்வேலை இழப்புஇணையம்காருண்யம்நவதாராளமயம்முடி உதிரல்சொந்த நாட்டை விமர்சிப்பது அன்பின் வெளிப்பாடுகுடமுருட்டிபசவராஜ் பொம்மைஅனுஷா நாராயண்தங்கச் சுரங்கம்நகர்மயமாக்கல்வளர்ச்சி தொடர்ந்து மறுக்குது அரசாங்கம்மோகன் பகவத்உக்ரைன் தாய்மொழி - ஆனால் படிக்க வேண்டும்!தேச நலன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!