கட்டுரை, பொருளாதாரம், தொழில் 5 நிமிட வாசிப்பு
மகளிர் சுய உதவிக் குழுக்கள் சாதிப்பது என்ன?
தையல் வகுப்பு என்றாலே குஷ்பு தேவிக்குச் சிறுவயது முதலே வேப்பங்காயாகக் கசக்கும், பயிற்சிக்குப் போகச் சொல்லி பெற்றோர் மிரட்டியும் கெஞ்சியும் அனுப்பி வைப்பார்கள். திருமணமான பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட அந்தத் தையல் கலைதான் அவருக்கு உதவுகிறது. 34 வயதாகும் குஷ்பு தேவி, பிஹார் மாநிலத்தின் முசாஃபர்பூர் மாவட்டத்து ரசூல்பூர் கிராமத்தில் வசிக்கிறார். இப்போது ஆண்டுக்கு ரூ.12 லட்சம் விற்றுமுதல் உள்ள, கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர், அது மட்டுமல்ல 62 பெண்களுக்கு இத்தொழிலில் வேலைவாய்ப்பும் அளிக்கிறார்.
“தையல் கலையில் பயிற்சி பெற்றேன், ஆனால் துணிகளைத் தைத்ததில்லை. 2009இல் திருமணம் ஆன பிறகு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க, தையல் வேலை செய்துதான் தீர வேண்டிய தேவை ஏற்பட்டது. நானும் துணி தைக்கத் தொடங்கியதால் தங்களுக்கு வேலையும் வருமானமும் குறைந்துவிட்டதாக கிராமத்தில் மற்ற பெண்கள் என்னிடமே குறைப்பட்டுக்கொண்டார்கள். இப்படி தனித்தனியாக துயரப்படாமல், நாம் ஏன் ஒன்றாகச் சேர்ந்து ஒரு தையல் நிறுவனத்தைத் தொடங்கக் கூடாது என்று அவர்களிடம் கேட்டேன். மிகச் சிலரே முன்வந்தனர். உள்ளூர் சந்தையில் கொசுவலைக்கு அதிக கிராக்கி இருப்பதாக அறிந்ததால் முதலில் அதைத் தயாரிக்கத் தொடங்கினோம். சந்தையில் அவை தொடர்ந்து விலைபோகத் தொடங்கியதால் அந்த வேலை குறைவில்லாமல் வளர்ந்துகொண்டேவருகிறது” என்கிறார் குஷ்பு தேவி.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
450 மகளிர் சுய உதவி நிறுவனங்கள்
ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை குஷ்பு தேவியின் தையல் நிறுவனத்தைப் போல 450 நிறுவனங்களை அசாம், பிஹார், மேற்கு வங்க மாநிலங்களில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வளர்த்துவருகிறது. தேசிய ஊரக பொருளாதார மாற்ற திட்டம் (என்ஆர்இடிபி) என்ற பெயரில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதில் இறங்கியிருக்கிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் அதிகமாக விற்றுமுதல் ஏற்பட, தொழில் செய்வதற்கான தொழில்நுட்ப - நிதி ஆலோசனைகளை வழங்குவதுடன், புதிய பிராண்டு பெயர்களில் தயாரிக்கவும் சந்தைப்படுத்தவும் இதர உதவிகளையும் செய்கிறது. 2022 செப்டம்பரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
முதலில் 150 நிறுவனங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 132 நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டன. சில நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சவால்கள் அதிகம் இருந்ததால் அவற்றுக்கு வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோக 18 நிறுவனங்களுக்கு முழுக்க முழுக்க மானியமாகவே உதவிகள் செய்தது அரசு.
இந்தத் திட்டத்துக்குக் கொல்கத்தாவில் உள்ள ‘இந்திய நிர்வாகவியல் கழகம்’ (ஐஐஎம்) நடத்திவரும், ‘புதிய தொழில் கண்டுபிடிப்புகள் பூங்கா’ உதவி நாடப்பட்டது. இந்தப் பூங்கா லாப – நஷ்ட நோக்கமின்றி நடத்தப்படுவது. அரசின் திட்டத்துக்குத் தகுதியானவர்களைத் தேர்வுசெய்வது, அவர்களுக்குத் தொழில் செய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவது, தேவைப்படும் இயந்திரங்கள் – சாதனங்களைக் குறைந்த விலையில் வாங்கவும் நிறுவவும் உதவுவது, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய தயாரிப்புகளை மேற்கொள்ள, தொடக்க காலத்திலிருந்து உடனிருந்து எல்லா உதவிகளையும் செய்து அவர்களைச் சுயமாக காலில் நிற்க வைப்பது என்று இந்த நிறுவனம் செயல்படுகிறது. ‘தீனதயாள் அந்தியோத்யா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்’ (என்ஆர்எல்எம்) என்பது இந்தத் திட்டத்தின் பெயர்.
3 கோடி மகளிர் இலக்கு
நாடு முழுவதும் 3 கோடி ‘லட்சாதிபதி அக்கா’ உருவாக இப்படிச் சுய உதவிக் குழுக்களுக்கு உதவ, ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. கிராமப்புற பெண்கள் தங்களுக்குத் தெரிந்த கைத் தொழில்களையும் அரசு பயிற்சி தரும் தொழில்களையும் கற்றுத் தேர்ந்து இந்தச் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கின்றனர் என்பது சிறப்பு. அத்துடன் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் மேல் விற்றுமுதலில் ஈடுபடும் இந்த நிறுவனங்கள் தோராயமாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் ரூ.3 லட்சம் வரையில் லாபமும் ஈட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மகளிரிடையே ஆர்வம்
அரசின் இந்தத் திட்டத்துக்கு மகளிரிடையே ஆர்வம் பெருகிவருகிறது. இதுவரை 65,000 விண்ணப்பங்கள் ஒன்றிய அரசிடம் குவிந்துள்ளன, இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருகிறது. ஏதேனும் ஒரு பொருள் உற்பத்தியிலும் சேவையிலும் ஈடுபடும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், அரசு எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன. இவை சுயசார்புடன் செயல்பட்டு லாபம் ஈட்டுவதுடன், கிராமங்களில் வேலைவாய்ப்புகளையும் அதிகப்படுத்துகின்றன என்கிறார் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலர் சரண்ஜீத் சிங்.
இந்தத் திட்டம் தொடங்கி ஜூன் மாதத்துடன் முடிந்துவிட்டதால் அடுத்த திட்டத்தை நாட்டின் பிற மாநிலங்களிலும் இனி தொடர அமைச்சகம் முடிவுசெய்திருக்கிறது. என்ஆர்எல்எம், கொல்கத்தா ஐஐஎம் போல நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தொழில்நுட்ப, மேலாண்மை கல்விக்கழகங்களின் உதவியுடன் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அரசு தீர்மானித்திருக்கிறது. கேரளத்தின் கோழிக்கோட்டில் உள்ள ஐஐஎம் நிறுவனத்துடன் அரசு இது தொடர்பாக சமீபத்தில் உடன்படிக்கை செய்துகொண்டிருக்கிறது.
தேர்வு பெறுவது கடினம்
அரசின் நிதி – ஆலோசனை உதவிகளைப் பெற தேர்வாவது மிகவும் கடினம் என்றாலும் அந்த நடைமுறையே தங்களுக்குப் புதிய அனுபவமாகவும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது என்று மகளிர் குழு உறுப்பினர்கள் கூறுகின்றனர். அரசின் நிதியுதவியைப் பெற 450 குழுக்களிடையே கடும் போட்டி. சரியான திட்டம், தொழில் தேர்ச்சி அடிப்படையில் மட்டுமே குழுக்கள் தேர்வுசெய்யப்பட்டன. இந்தத் திட்டம் என்ன, இதில் சேரத் தகுதிகள் என்ன, அரசு என்ன எதிர்பார்க்கிறது என்ற விவரங்களைக் கிராமங்கள்தோறும் மகளிரிடம் கொண்டுசெல்ல அதிகாரிகள் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசிடம் இப்போது குவிந்துள்ள 65,000 மனுக்களில் 29,500 மேற்கு வங்கத்திலிருந்தும் 26,500 பிஹாரிலிருந்தும் 9,600 அசாமிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. “எல்லா மாநிலங்களிலிருந்தும் அதிகபட்சமாக 5,000 மனுக்கள்தான் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், மூன்றே மாநிலங்களில் 65,000 மனுக்கள் குவிந்ததால் திகைத்துப்போயிருக்கிறோம்” என்கின்றனர் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்.
“முறையான தொழில் பயிற்சியோ, பட்டமோ இல்லாமலேயே ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கும் மேல் விற்றுமுதல் உள்ள உற்பத்திப் பிரிவுகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் நிறுவிவிட்டன என்பது எங்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது, இதில் குறிப்பிடத்தக்க அம்சம் 10% உற்பத்திப் பிரிவுகள் எளிதில் செல்ல முடியாத போக்குவரத்து – தகவல் தொடர்வு வசதிகள் அதிகம் இல்லாத தொலைதூரப் பகுதிகளாகும்” என்று பூரிக்கிறார் கௌரவ் கபூர். இவர் முதன்மை வர்த்தக அதிகாரியாக ஐஐஎம்சிஐபியில் பொறுப்பு வகிக்கிறார்.
65,000 வடிகட்டியது எப்படி?
65,000 மனுக்களைக் கொல்கத்தா இந்திய நிர்வாகவியல் கழகம் (ஐஐஎம்) முதலில் பரிசீலித்து 450 குழுக்களை முதல் கட்டத்தில் தேர்வுசெய்தது. பிறகு கள ஆய்வு நடத்திவிட்டு மாநிலத்துக்கு 250 உற்பத்திப் பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தங்களுடைய தொழில் திட்டம் குறித்து, விவரமாகப் பேசுமாறு குழுக்கள் அழைக்கப்பட்டன. அதற்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 150 மகளிர் தேர்வுசெய்யப்பட்டனர்.
மண்புழு உர தயாரிப்பு
மகளிர் சுய உதவிக் குழுக்கள் உதவியுடன் மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் அசாமின் நல்பாரி மாவட்டத்து கணிகா தலுக்தார் (45). “இந்தத் திட்டத்தில் நிதி – தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற தேர்ந்தெடுக்க அவர்கள் கடைப்பிடித்த ஒவ்வொரு நடைமுறையுமே எங்களுக்குப் பெரிய பாடமாக இருந்தது. எங்களுடைய வரவு – செலவு பதிவேடுகளை முதலில் பார்வையிட்டனர், எங்களுடைய உற்பத்தி அலகுகளையும் ஆராய்ந்தனர். எங்களுடைய தொழில் எப்படிப்பட்டது, அதில் எவ்வளவு முதலீடு தேவைப்படுகிறது, எந்த விலைக்கு விற்க முடியும், எவ்வளவு லாபம் எங்களுக்குக் கிடைக்கும், பயனாளிகள் பெறுவது என்ன என்று எல்லாவற்றையும் விவரித்தோம். இப்போது எப்படித் தயாரிக்கிறோம், விற்கிறோம் என்பதையும் கூறினோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தேர்வுசெய்தனர், பிறகு உற்பத்தி, விற்பனையை மேம்படுத்த பயனுள்ள புதிய யோசனைகளைத் தெரிவித்தனர்” என்கிறார் கணிகா.
நிபுணர்கள் ஒதுக்கீடு
மகளிர் சுய உதவிக் குழுக்களின் 45 விதமான உற்பத்தி அலகுகளுக்கு, அலகுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் ஐஐஎம்மில் படித்த முன்னாள் மாணவர் அல்லது தொழில்முனைவோர் ஒருவரை ஆலோசகராக நியமித்தனர். அவர் மாதந்தோறும் இந்த அலகுகளுக்குச் சென்று உற்பத்தி, விற்பனை தொடர்பான விவரங்களைக் கேட்டு அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்குத் தீர்வு என்ன என்றும் கூறுவார். இப்படி நியமிக்கப்படும் தொழில்முனைவோர் அந்தந்தத் துறைகளில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் அவரவர் போக்கில் உற்பத்தியை கண்காணித்தவர்கள், பிறகு அந்தத் தொழிலை விரிவுபடுத்தவும் ஆலோசனைகளை வழங்கினர். தயாரிப்புகளை நல்ல முறையில் அட்டையில் அல்லது பொதியில் அடைத்து விற்பது, தயாரிப்புக்கு ஒரு அடையாளமாக விற்பனைப் பெயரைச் சூட்டுவது, அதிக எண்ணிக்கையில் தயாரிக்க உள்ளூரிலேயே கிடைக்கும் உகந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது என்று கூறி அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றனர்.
சாப்பாட்டு இலையாக சால்
வட இந்தியாவில் சால் என்றொரு மர வகை உண்டு. அதன் இலை மிகவும் அகலமாக பாக்கு, பாதா மர இலைகளைப் போலவே இருக்கும். அதை மந்தார இலையைப் போல சாப்பாட்டு இலையாகப் பயன்படுத்துவார்கள். அதை அப்படியே வைத்துக்கொள்ளாமல் ஓரங்களை விளிம்புபோல மடித்து சாப்பாட்டு இலைகளாக்கி விற்றுவந்தார் மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா மாவட்டத்தின் ஜன்பாரா ஊரைச் சேர்ந்த பர்ணாளி தே(வ்) (37). 2012 முதல் இந்தத் தொழில் செய்துவருகிறார். அரசின் நிதி – தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்ற பிறகு இப்போது மாதம்தோறும் 1.5 லட்சம் சாப்பாட்டு இலைகளைத் தயாரித்து சந்தைக்கு அனுப்புகிறார். இதன் மூலம் கிராமத்தில் 22 பெண்களுக்கு அவர் தினமும் வேலையும் தருகிறார்.
சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துவருவதால் பிளாஸ்டிக் மற்றும் காகித தட்டுகளுக்குப் பதிலாக எளிதில் மக்கிவிடும் இயற்கைத் தட்டுகளுக்குக் கேட்பு அதிகரித்துவருவது. பர்ணாளி தே(வ்) சாதாரணமாக விற்ற சால் இலைத் தட்டுகளை இப்போது ‘மா மானசா’ என்ற பிராண்டு பெயரில் சந்தைப்படுத்துகிறார். எண்ணிக்கையையும் தயாரிப்பு வேகத்தையும் அதிகப்படுத்த நவீன இயந்திரத்துக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். ஆன்-லைன் என்று அழைக்கப்படும் இணையதள வர்த்தகத்திலும் ஈடுபடப்போகிறார்.
இந்த உற்பத்தி, விற்பனை ஆகியவற்றைவிட கடந்த ஓராண்டில், தான் கற்றதிலேயே முக்கியமானது வரவு – செலவு கணக்குகளை முறையாக எழுதி, அதிலிருந்து தொழிலின் போக்கைக் கணிப்பதுதான் என்கிறார். அதற்கும் முன்னால் வரவையும் எழுதமாட்டோம், செலவையும் கணக்கில் வைக்க மாட்டோம் ஏனோ-தானோவென்று இருந்தோம். இப்போது வருவாய் வரும் இனங்களையும் செலவு செய்யும் இனங்களையும் துல்லியமாகத் தெரிந்து செலவைக் குறைத்து வருவாயைப் பெருக்கும் வழியைக் கண்டுவிட்டோம் என்கிறார்.
அசாமின் நகாவோன் மாவட்டம் ஹேமபோரி கிராமத்தைச் சேர்ந்த ரேணு மகந்தாவும் மகளிர் சுய உதவி குழுத் தயாரிப்புகளை பிராண்டு பெயரில் சந்தைப்படுத்தி விற்பனையை வளர்த்துக்கொண்டுவிட்டார். ஊறுகாய், வடகம், சமையலுக்குத் தேவையான பருப்புப்பொடி உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் வேலையை 2011 முதல் வீட்டிலேயே செய்யத் தொடங்கினார். இப்போது சிறிய அளவிலான உற்பத்தி அலகை நிறுவியிருப்பதுடன், தயாரிப்புகளில் சிலவற்றை விற்க ஊரிலேயே சிறிய சிற்றுண்டியகத்தையும் தொடங்கியிருக்கிறார். 2014இல் அரசின் கடனுதவியுடன் உற்பத்தி அலகை ஊரில் தொடங்கியிருந்தார். கடந்த 13 ஆண்டுகளில் அவருடைய தொழில், வளர்ச்சி கண்டுள்ளது. தொடக்க காலத்தில் 3 விதமான ஊறுகாய்கள் மட்டும் தயாரித்தவர் இப்போது 25 வகை ஊறுகாய்களையும் 50 வகை தேயிலைத் தூள்களையும் தயாரிக்கிறார். அதுபோக உடனே சாப்பிடும் தயார் தீனி ரகங்கள் 12உம் அவரால் தயாரித்து விற்கப்படுகிறது.
இந்தத் தயாரிப்பு வேலைகளைவிட சவாலானது வரவு – செலவு கணக்கு எழுதுவது, இதன் முக்கியத்துவத்தை இப்போது அரசின் நிதி- நுட்ப ஆலோசகர்கள் உதவியால் தெரிந்துகொண்டுவிட்டேன் என்கிறார். எங்கள் நிறுவனத்துக்கு நிதி உதவி அளிக்கத் தயாரானபோது வரவு – செலவு கணக்கு எங்கே என்று கேட்டபோதுதான், நேரமில்லாததால் அதை எழுதுவதே இல்லை என்றேன். அதை எப்படி எளிதாகச் செய்யலாம் என்று கற்றுத் தந்ததுடன் அது எவ்வளவு முக்கியமானது என்பதையும் புரியவைத்தனர் என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.
வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன் தொழிலை விரிவுபடுத்தவும் மேலும் பெரிதாக வளர்க்கவும் ஆலோசகர்கள் உதவுகின்றனர். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் பெருகி மேலும் மேலும் பெண்கள் வேலையில் சேர்கின்றனர்.
குஷ்பு தேவி சுமார் பத்தாண்டுகளாக கொசுவலை தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டுவந்தார். ஒரேயொரு பொருளைத் தயாரிப்பதில் பெரிய ஆபத்து இருக்கிறது, அதற்குச் சந்தை திடீரென இல்லாமல் போனால் அல்லது தயாரிக்க முடியாமல் தாற்காலிகமாக இடையூறு ஏற்பட்டால் தொழில் பிரிவே முடங்கிவிடும், அதற்குப் பதிலாக அதே தொழிலில் வெவ்வேறு தயாரிப்புகளையும் மேற்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினர். அந்த அடிப்படையில் பெண்களுக்கான குர்தா, சுடிதார், குழந்தைகளுக்கு கவுன் போன்ற பல ஆடைகளைத் தயாரிக்கவும் தொடங்கினார் குஷ்பு தேவி. அதனால் தொழிலும் வளர்ந்து விரிவடைந்துள்ளது.
இப்போது மொத்தவிலை சந்தையிலிருந்தே நேரடியாக வாங்குகின்றனர், நான் இப்போது உற்பத்தி, விற்பனை, கணக்குப்பதிவு என்று எல்லாவற்றிலும் ஈடுபடுகிறேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார் குஷ்பு தேவி.
தொடர்புடைய கட்டுரைகள்
வேலைவாய்ப்பு பெருக என்ன செய்யலாம்?
முட்டத்தில் ஒரு கூட்டம்
அமைதியாக ஒரு பாய்ச்சல்
தமிழில்: வ.ரங்காசாரி
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.