கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

மோடியைக் கலவரப்படுத்திய காங்கிரஸ் அறிக்கை

ப.சிதம்பரம்
06 May 2024, 5:00 am
0

காங்கிரஸ் கட்சி, 2024 மக்களவை பொதுத் தேர்தலுக்காகத் தயாரித்த தேர்தல் அறிக்கைக்கான முன்தயாரிப்புகள் 2019 முதலே தொடங்கிவிட்டன. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை நடந்தே மேற்கொண்ட யாத்திரை வரலாற்றுப் புகழ்பெற்றது; சாமானிய மக்கள் எந்தச் சூழலில் வாழ்கிறார்கள் என்பதை நேரில் பார்த்ததுடன் அவர்களுடைய தேவைகள் என்ன, விருப்பங்கள் என்ன என்பனவற்றையும் அறிந்துகொண்டார்.

உதய்பூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கட்சியின் தலைவர்கள் ஒன்றுகூடி, நாட்டின் முன்னுள்ள பிரச்சினைகள் என்ன, அவற்றை எப்படித் தீர்க்க வேண்டும் என்று மூன்று நாள்கள் விவாதித்தனர்; பிறகு ராய்பூர் நகரில் நடந்த ‘அனைத்திந்திய காங்கிரஸ் பேரவைக் கூட்டம்’ (ஏஐசிசி), பாஜகவை அது ஆளும் மாநிலங்களிலும் தேசிய அளவிலும் எதிர்த்து நிற்க விரிவான – நம்பகமான கொள்கைகளை தயாரித்தது. இவையே தேர்தல் அறிக்கைக்கான அடிப்படைகள், முன்தயாரிப்புகள்.

இதில் ‘நவ சங்கல்ப’ (புதிய உறுதிமொழி) பொருளாதாரக் கொள்கை உதய்பூரில்தான் வகுக்கப்பட்டது. ஏழைகளை முன்னேற்றுவதைப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையாகக் கொண்ட தீர்மானம், அங்கு நிறைவேற்றப்பட்டது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தேர்தலின் கதாநாயகன்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 5இல் வெளியிடப்பட்டது, ‘நியாயப் பத்திரா’ என்று அதற்குப் பெயரிடப்பட்டது. மக்களில் பெரும்பாலானவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியை வழங்கும் நோக்கத்தையே, ஊடு பாவாகக்கொண்டது அந்த 46 பக்க அறிக்கை. ‘நியாய்’ என்ற இந்தி வார்த்தையின் பொருள் - நீதி. சமூக நீதி, இளைஞர்களுக்கான நீதி, மகளிருக்கான நீதி, விவசாயிகளுக்கான நீதி, உழைப்பாளர்களுக்கான நீதி என்று அனைத்துத் தரப்புக்கும் நீதி வழங்குவதே, தேர்தல் அறிக்கையின் நோக்கம்.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவானதோ – மந்தமானதோ – அதில் பயன்பெறும் வாய்ப்பு பெரும்பான்மையான மக்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்படுகிறது, அவர்களுக்குரிய பங்கு கிடைக்காமல் விலக்கி வைக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. ‘சப்கா சாத் – சப்கா விகாஸ்’ என்ற போலி முழுக்கத்தோடு செயல்படும் இன்றைய அரசின் உண்மையான முகத்தை மக்களுக்கு அம்பலப்படுத்தும் வேலையைக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை செய்திருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை

ப.சிதம்பரம் 15 Apr 2024

அனைவருக்கும் உரிய பங்கும், நீதியும் கிடைக்கும் வகையிலான மாற்று வளர்ச்சி - முன்னேற்ற திட்டத்தையும் அது முன்வைத்திருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “காங்கிரஸின் தேர்தல் அறிக்கைதான் 2024 தேர்தலின் கதாநாயகன்” என்று வர்ணித்திருக்கிறார்.

மோடியின் கடுமை

தொடக்கத்தில் மோடியும் பாஜக தலைவர்களும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பற்றிப் பேச வேண்டாம், புறக்கணித்துவிடலாம் என்றுதான் நினைத்தார்கள். நாட்டின் வெகுஜன ஊடகங்களும் அறிக்கை மீது அதிக கவனம் செலுத்தவில்லை. அந்த அறிக்கை எல்லா மாநிலங்களுக்கும் அவரவர் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டதும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களும் கட்சியின் தொண்டர்களும் தலைவர்களும் கிராமங்கள், நகரங்கள் என்று அனைத்துப் பகுதிகளுக்கும் அதைக் கொண்டுபோய்ச் சேர்த்ததால் மக்கள் அனைவரும் அது பற்றியே பேசினர். (கடந்த வாரம் எழுதிய கட்டுரையிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறேன்).

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!

ப.சிதம்பரம் 29 Apr 2024

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையைத் தாக்கல் செய்த 9 நாள்களுக்குப் பிறகு பாஜகவும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதை யாரும் கவனித்ததாகக்கூட காட்டிக்கொள்ளவில்லை. ‘மோடியின் உத்தரவாதம்’ என்று பெயரிடப்பட்ட அந்த வழிபாட்டு அறிக்கை குறித்து மோடிகூட சிலாகித்துப் பேசவில்லை. அதற்கும் ஏழு நாள்களுக்குப் பிறகு ஏப்ரல் 21இல் 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

உளவுப் பிரிவுப் போலீஸார் மத்திய ஆட்சியாளர்களுக்கு அளித்த தகவல் அவர்களுக்குக் கவலையையும் அதிர்ச்சியையும் அளித்தது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளைப் படித்த மக்கள் காங்கிரஸையும் அதன் தோழமைக் கட்சிகளையும்தான் அதிகம் ஆதரித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது; சில மாதங்களுக்கு முன்னால் கர்நாடகம், தெலங்கானா சட்டப்பேரவைகளுக்கு நடந்த பொதுத் தேர்தலின்போது காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை ஆதரித்து எப்படிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றியை அளித்தார்களோ அதேபோலத்தான் 102 தொகுதிகளிலும் நடந்தது.

இது மோடிக்குப் பெருத்த கோபத்தையும் எரிச்சலையும் அளித்தது. எனவே, ஏப்ரல் 21ஆம் நாள் முதல் வழக்கமான பிரச்சார பாணியைக் கைவிட்டு, கடுமையான தாக்குதலில் இறங்கினார்.

பொய்கள் – பொய்கள் – உண்மைகள்

அடுத்து பிரச்சார பொதுக்கூட்டங்களில் எப்படிப் பேச வேண்டும் என்று பாஜக தனது தலைவர்களுக்கும் பிரச்சாரகர்களுக்கும் அளித்த கட்டளையானது, ஜெர்மனியில் நாஜிக்களின் ஆட்சிக்கால பிரச்சாரத்தில் கோலோச்சிய கோயபல்ஸுகளுக்கே பெருமிதத்தை ஊட்டியிருக்கும்: பொய்கள், மேலும் பொய்கள், கணக்கு வழக்கின்றிப் பொய்கள்; அந்தப் பொய்யை ஒரு உண்மை மூலம் மறுத்தால், அந்த உண்மையையும் புறக்கணிக்கும் முடிவை எடுத்தார்கள் பாஜகவினர். கடந்த 14 நாள்களுக்கும் மேலாக அவர்கள் பரப்பிவரும் பொய்யுரைகளில் சான்றுக்கு சில:

பொய்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் ‘முத்திரை’ தெரிகிறது.

உண்மை: காங்கிரஸ் கட்சியின் 46 பக்க தேர்தல் அறிக்கையில் ஒரு இடத்தில்கூட ‘முஸ்லிம்’ என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. சிறுபான்மைச் சமூகத்தைப் பற்றிய இடங்களில்கூட ‘மதச் சிறுபான்மையோர்’, ‘மொழிச் சிறுபான்மையோர்’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மொழிச் சிறுபான்மையினருக்கும் மதச் சிறுபான்மையினருக்கும் அனைத்து மனித உரிமைகளும் சிவில் உரிமைகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும், இதைக் காங்கிரஸ் பாதுகாக்கும்’ என்ற உறுதிமொழிதான் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

பட்டியல் இனத்தவர்கள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்து அறிக்கையில் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தாலும் மதச் சிறுபான்மையோர் குறித்து ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை.

பொய்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் மதச் சட்டங்களை (ஷரியத்) மீண்டும் அமலுக்குக் கொண்டுவந்துவிடும்.

உண்மை: ‘தனிச் சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய ஊக்கம் தருவோம், அத்தகைய சீர்திருத்தங்கள் அந்தந்தச் சமூகங்களின் சம்மதத்துடனும் பங்கேற்புடனும்தான் இருக்க வேண்டும்’ என்றே தேர்தல் அறிக்கை கூறுகிறது.

பொய்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மார்க்ஸிய, மாவோயிஸப் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கே ஆதரவு காட்டப்பட்டுள்ளது.

உண்மை: பொருளாதாரம் தொடர்பான 10 பக்க அறிக்கைக்கான முன்னுரையில் காங்கிரஸ் தெளிவாகக் கூறியிருக்கிறது: “காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் பல ஆண்டுகளாக படிப்படியாக உருவானவை; 1991இல் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாடுகளை விலக்கும் தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடித்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைத்தது காங்கிரஸ் அரசு; அரசின் தெளிவான கட்டுப்பாடுகளுடன் நாட்டின் பொருளாதாரம் உலக அரங்கில் போட்டி போட உதவியாக அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனால் நாடு பெருமளவுக்குப் பலன் அடைந்தது; நாட்டின் செல்வ வளம் பெருகியது, புதிய தொழில்முனைவோரும் தொழிலதிபர்களும் உருவானார்கள், நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியது, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின, கல்வி – சுகாதார நலன் தொடர்பாக அரசு முக்கியமான புது முறைகளைக் கையாண்டது, ஏற்றுமதி பெருகியது. கோடிக்கணக்கான மக்கள் வறிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்றம் அடைந்தனர். சுதந்திரமான – வெளிப்படையான பொருளாதார வளர்ச்சி முறைமையில் எங்களுக்குள்ள நம்பிக்கையை வலியுறுத்துகிறோம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தனியார் துறையும், வலிமையான – வளமான அரசுத் துறையும் இணைந்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்ற எங்களுடைய உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம்.”

பொய்: காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

உண்மை: “பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு அளவு 50% என்ற வரம்பைத் தாண்டக் கூடாது என்று இப்போதுள்ள நிலையை, அரசமைப்புச் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவந்து உயர்த்துவோம். பொருளாதாரரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கு மோடி அரசு அறிவித்துள்ள 10% இடஒதுக்கீட்டை, அனைத்து சாதி - சமுதாயங்களுக்கும் பாரபட்சமின்றி அமல்படுத்துவோம். அரசு வேலைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என்று ஒதுக்கியுள்ள இடங்களை ஓராண்டுக்குள் புதிய நியமனங்கள் மூலம் நிரப்புவோம்” என்கிறது தேர்தல் அறிக்கை. பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை மேம்படுத்த மேலும் பல வாக்குறுதிகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

பொய்: வாரிசுரிமை வரியை காங்கிரஸ் விதிக்கும்.

உண்மை: வரிவிதிப்பு, வரிச் சீர்திருத்தங்கள் என்ற பிரிவில் 12 அம்சங்களைத் தேர்தல் அறிக்கை விவரிக்கிறது. ‘நேரடி வரிகள் சட்டம் தொடர்பாக புதிய தொகுப்பைக் கொண்டுவருவோம், தனிநபர் வருமான வரி விகிதங்கள் ஐந்தாண்டுகளுக்கு நிலையாக இருக்க நடவடிக்கை எடுப்போம், செஸ் – சர்சார்ஜ் ஆகியவை 5%க்கு மிகாமல் வரம்பு விதிப்போம், பொது சரக்கு - சேவை வரியைச் சீர்திருத்தி இரண்டாவது ஜிஎஸ்டியைக் கொண்டுவருவோம், சில்லறை வியாபாரிகள், சிறு – குறு - நடுத்தரத் தொழில் பிரிவுகள் மீதான வரிச் சுமைகளைக் குறைப்போம்’ என்று வாக்குறுதி அளித்திருக்கிறோம். வாரிசுரிமை வரி குறித்து சிறிய கிசுகிசுப்புகூட அதில் இடம்பெறவில்லை.

இவ்வாறாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடர்பாக பல பொய்களை அவிழ்த்துவிட்டு, பிரதான விவாதத்தில் அதை இடம்பெறச் செய்ததுடன், பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து எதுவுமே பேசாமல், ஸ்டாலின் கருத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறார் மோடி. 2024 மக்களவை பொதுத் தேர்தலின் கதாநாயகன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் மோடி.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

காங்கிரஸுக்கு மோடி தந்துள்ள விளம்பரம்!
பாஜக: அரசியல் கட்சியா, தனிமனித வழிபாட்டு மன்றமா?
காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






ஹமால்தேவதத்த சக்ரவர்த்தி கட்டுரைகிராந்திபண்டிதர் 175பொய்மயிர் எனும் ரகசியம்வரும் முன் காக்கஅதிகாரப் பரவலாக்கம்கோபாலபுரம்தஞ்சை பிராந்தியம்முக்கியத்துவம்திறந்த வெளிச் சிறைசமஸ் காமராஜர்ஆயிரமாவது ஆண்டுகுடிமைப் பணித் தேர்வுநரம்புக்குறை சிறுநீர்ப்பைதமிழ்நாடு செய்ய வேண்டியது என்ன?மரணத்தோடு தொடர்புகொண்டவையா மடங்கள்?சியாட்டிகாசெக்ஸை எப்படி அணுகுவது சாரு பேட்டிநடவடிக்கைபெரியார் காந்திவிநாயக் தாமோதர் சதுர்வேதிகோர்பசெவின் கல்லறை வாசகம்வங்க அரசியல் எப்படி இருக்கிறது?உடல்சார் தோற்றவியல்வேள்விகனவுத் தெப்பம்மன்னிப்புமன்னராட்சிஜென்கின்ஸ் சால்ட் ஒர்க்ஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!