கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
வலிமையான தலைவர் எனும் கட்டுக்கதை ஏன் மக்கள் விரோதமானது?
2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களில், பாஜக ஒரு முக்கியமான வாதத்தை முன்வைக்கிறது. நரேந்திர மோடி ஒரு வலிமையான தலைவர். அவரால்தான் வலுவான, தீர்க்கமான கொள்கை முடிவுகளை முன்னெடுக்க முடியும். மாறாக எதிர்த் தரப்பு என்பது ஒரு பலவீனமான தேசியக் கட்சியை மையமாக வைத்து, பிராந்தியக் கட்சிகளின் ஆதரவோடு உருவாக்கப்படும் கூட்டணி. அதனால், கடின சித்தத்துடன் உறுதியான முடிவுகளை ஒருபோதும் எடுக்க முடியாது என்பதே அது.
பாஜகவின் வாதமும் அதன் மீதான் கேள்விகளும்
இந்த வாதத்தின் மீது இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதல் கேள்வி – இது உண்மைதானா? உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், இது விரும்பத்தக்கதுதானா? முதலாவது கேள்வியான, யார் வலுவான தலைவர் என்பது ஒரு அரசியல் தீர்ப்பு. அரசியல் சார்புடையவர்கள், தங்கள் மனச்சாய்வை, சரி எனச் சொல்வார்கள். அத்தகைய வாதங்களுக்குத் தொலைக்காட்சி விவாத அரங்குகளைத் தாண்டி எந்த மதிப்புமில்லை.
இரண்டாவது கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது. நம்மை வழிநடத்திச் செல்ல அது உதவும். வலுவான தலைமை சமூகத்திற்கு எதைத் தருகிறது? மக்களாட்சிக்குத் தேவை பணிவும், ஒருமித்த கருத்துக்களை உருவாக்கும் பண்புகளும் இணைந்து செயலாற்றும் திறன். அவை தவிர்த்து யதேச்சதிகாரமாக, ஒருதலைப்பட்சமாக எடுக்கப்படும் முடிவுகளுக்கு மக்களாட்சியில் இடம் இருக்கிறதா என்ன? இடம் இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், அவ்வகை முடிவுகள் செயல்திறன் மிக்கவைதானா?
கடந்த 10 ஆண்டுகளில், இதுபோன்ற வலிமையான அரசியல் தலைமையினால் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பல கொள்கை முடிவுகள் – பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கம், திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள், ஓரிரவில் கொண்டுவரப்பட்ட கரோனா காலத்துப் பொது முடக்கம் – இவை அனைத்துமே பெரும் சீரழிவுகள் அல்லது குழப்பமானவை என்னும் வரையறைக்குள் வருபவை.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
அவை உருவாக்கிய விளைவுகளை ஆராய்ந்து பின்னோக்கிப் பார்த்தால், இந்த முடிவுகளை இன்று எடுக்க வேண்டியிருந்தால், அவசரப்பட மாட்டேன் என்று மோடியேகூடச் சொல்லக்கூடும். அவற்றில் பலவற்றின் நடைமுறைப் பயன்பாடு என்பது அவை ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் உருவாகவில்லை அல்லது அரசியல் நிலை மாறினால் மாறக்கூடும் என்னும் சந்தேகங்களின் அடிப்படையில், சுத்தமாக இல்லாமல் போகின்றன.
இங்கே நாம் உண்மையிலேயே கேட்க வேண்டிய கேள்வி: மக்களாட்சியில் நமக்கு வேண்டியது என்ன? ஒருமித்த கருத்துகள் உருவாக்க நேரமில்லாமல் எடுக்கப்படும் தடாலடி முடிவுகளா அல்லது நீண்ட கால அவகாசத்தில் எடுக்கப்படும், நீடித்து நிலைக்கும் தீர்வுகளா?
வலிமையான தலைவர் – மக்களாட்சிக்கு எதிரான ஒன்று
மக்களாட்சியின் முதன்மை இலக்கு என்பது, நாம் சற்று பின்னே திரும்பிப் பார்த்தால் தெளிவாகும். அது, சமூகத்தில் மெல்ல உருவாகிவரும் ஒருமித்தத்தன்மை. ஏனெனில், மக்களாட்சியின் இலக்கு என்பது அந்த அரசியல் அமைப்பு நிலையாக இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, அவசரமாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதல்ல.
மறைமுகமாகத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற நடைமுறை நம்மிடையே இருப்பதன் காரணமே, இங்கே ஒருபோதும் நாட்டின் பிரதமரை, ப்ளேட்டோ சொன்னதுபோல ‘ஞானியான அரச’னாகவோ அல்லது வேறெந்த வகை அரசனாகவோ ஆக அனுமதிப்பதல்ல. கால அவகாசம் எடுத்துக்கொண்டு உருவாக்கப்படும் ஒருமித்த முடிவுகள் என்னும் அரசியல் வழிகளைவிட, வலிமையான தலைவர்கள் நிர்வகித்த அரசியல் வழிகள் மேலானவையாக இருந்திருந்தால், சோவியத் யூனியன் இன்றும் உயிருடன் இருந்திருக்கும்.
நவீன காலகட்டத்தில் ஞானியான அரசர்கள் அல்லது ஸ்டாலின் வழி சர்வாதிகாரிகளைவிட, நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது செயல்திறன் மிக்கதாகவும், நியாயமானதாகவும் (just) இருப்பதைக் காண்கிறோம். ஒரு சமூகமாக, நாம் ஏன் ‘வலிமையான அரசன்’ என்னும் கட்டுக்கதையை உடைக்க விரும்புகிறோம் என்பதை மீண்டும் இங்கே வலியுறுத்துவது மிகவும் அவசியமாகிறது. இதனால், நமக்கு அரசனையோ ஞானியையோ பிடிக்கவில்லை என்று அர்த்தமல்ல. நாம் உருவாக்க விரும்பும் சமூகத்தில் மக்கள் அனைவருமே சமம்.
அரசு என்பது நமது பிரதிநிதியாகவும், நமது தேவைகளுக்குச் செவி கொடுப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதால்தான். இந்த அமைப்பே செயல்திறன் மிக்க சமூக விளைவுகளை உருவாக்குகிறது என்பதால், மக்கள் திரளின் அறிவுடைமை நீண்ட கால நோக்கில் மேம்பட்ட சமூக விளைவுகளை உருவாக்க வல்லது எனப் புரிந்துகொள்கிறோம்.
இந்த வாதம் உள்ளுணர்வுக்கு எதிரானது எனத் தோன்றினாலும், மக்கள் திரளின் அறிவுடைமை, நிபுணர்கள், ஞானியான அரசர்கள் மற்றும் அதீத சம்பளம் பெறும் நிதி மேலாண் நிபுணர்கள் இவர்கள் அனைவரையும் ஒவ்வொரு முறையும் தோற்கடித்திருக்கிறது. இந்த அனுமானத்தின் மீதுதான் நவீனகால முதலாளித்துவத்தின் நிதிநிலை அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
உயர்ந்த சக்தி எது?
மக்கள் திரளின் அறிவுடைமை மேம்பட்டது என்னும் கருதுகோள் உண்மையில்லை என்றாலும்கூட, நாம், ஞானியான அரசர்கள் இல்லாத ஒரு சமூக அமைப்பைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்காலத்தில் இது ஒரு பெரும்பிரச்சினையாக இருந்தாலும்கூட, இந்தப் பிரச்சினை நம் சமூக மேம்பாட்டிற்குத் தேவையான ஒரு பிரச்சினை என்றே கருத வேண்டும். இதை விலக்கிச் செல்ல உதவும் தீர்வுகள் எளிதாக அல்லது நேர்த்தியாக இல்லாமல் இருந்தாலும்கூட.
நாம் நம் மக்கள் அனைவரும் சமம் எனக் கருதுவதால், நமது அரசு என்பது நம்மை முடிந்தவரையில் உண்மையாகப் பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அந்தப் பிரதிபலிப்பு உண்மையாக இல்லாதபட்சத்தில், நாம் நம்மைத்தான் மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, அந்தப் பிரதிபலிப்பை அல்ல. மிக முக்கியமாக, அப்படி ஒரு மாற்றம், நமக்கு மேலே அமர்ந்திருக்கும் ஒரு ஞானியான அரசன் வழியே வர வேண்டியதில்லை. எனவே, நமது அரசியல் அமைப்பில், நாடாளுமன்றம்தான் மிக உயர்ந்த சக்தி. பிரதமர் அல்ல.
எனவேதான், நாம் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அதன் வழியே அரசைத் தேர்ந்தெடுக்கிறோம். நாம் பிரதமரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. அரசு என்பது நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்னும் நல்லெண்ணத்தினால்தான் நாம் இதையெல்லாம் செய்கிறோம். வலிமையான தலைவர் என்பது, இந்த வழிக்கு முற்றிலும் எதிரான ஒரு கருதுகோள்.
இந்திய நாட்டின் மிகச் சிக்கலான பிரச்சினை
மக்களாட்சி என்பது கடினமான ஒன்று. மக்களின் விருப்பத்தை மிகச் சரியாகப் பிரதிபலிக்கும் ஒரு அரசைத் தேர்ந்தெடுக்க மிகச் சிறந்த வழி என்று ஒன்று கிடையாது. ஒரே மொழி, ஒரே இன மக்கள் என இருக்கும் மிகச் சிறிய நாடுகள்கூட இதில் தடுமாறுகின்றன.
இந்தியா போன்ற பன்மைத்துவமும், பெரும் மக்கள்தொகையும் நிறைந்த நாடுகளில் இந்தப் பிரச்சினை, அதன் நம்பகத்தன்மையின் எல்லையையே பல முறை சோதித்துவிடுகிறது. காலனிய நாடுகளின் எல்லைகள் அந்த நாடுகளின் இயல்பான நாகரிகத்தின் எல்லைகளாக இருப்பதில்லை. அவை அரசின், நிர்வாகத்தின் லட்சியங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளன என்பது கூடுதல் பிரச்சினை.
சுமார் 130 கோடி மக்கள்தொகையில் பல்வேறு இனம், மதம், மொழி, வளர்ச்சிநிலை வேறுபாடுகள், வரலாற்று மோதல்கள் என்று இந்தியாவின் கையில் பெரும் சிக்கலான பிரச்சினைகள் உள்ளன. இப்படிப் பரந்துபட்ட நாட்டின் நிர்வாக அமைப்பு என்பது ஒற்றைத்தன்மை கொண்டதாக இருக்க முடியாது.
அதன் தொடர்ச்சியாக, நிர்வாக அமைப்பில் அப்படி ஒரு ஒற்றைத்தன்மை இல்லாமல் இருப்பது நாட்டின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும். இந்த இடத்தில்தான், தன்னை வலிமையானவர்களாக முன்னிறுத்திக்கொள்ளும் தலைவர்கள் உள்ளே வருகிறார்கள். பன்மைத்துவம் உருவாக்கும் சிக்கலான பிரச்சினைகளுக்கு தங்களைத் தீர்வாக முன்வைக்கிறார்கள். திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அந்தச் சிக்கலான நிர்வாகத்தின் வேகமற்றத்தன்மை, அது உருவாக்கும் விரக்தி, இவை இரண்டும் வலிமையான தலைவன் சொல்வது நியாயம்தான் என்று எண்ண வைக்கின்றன.
இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
20 Apr 2024
அரசு என்பது என்ன?
அடிப்படைகளை நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொள்வது எப்போதுமே நல்லது. அரசு என்பது அதைத் தேர்ந்தெடுத்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு கருவியே தவிர, அதுவே தன்னளவில் ஒரு முற்றதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல. பன்மைத்துவம் கொண்ட, முக்கியமான சதவீத சிறுபான்மையினர் வாழும் பெரும் நாடுகளில், துரதிருஷ்டவசமாக அரசுகள் அப்படி மாறிவிடுகின்றன.
அதன் பின்னர், அவை மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் அமைப்புகளாகவோ அல்லது நிறைவேற்றுவதாகச் சொன்ன மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் அமைப்புகளாகவோ ஆவதில்லை. சாத்தானிடம் வெற்றுப் பேரம் பேசியதுபோல ஆகிவிடுகிறது.
கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண் துறைகளில் இந்தியா எதிர்கொள்ளும் சிக்கலான, தீர்க்க முடியாத பிரச்சினைகள் ஒரு சிறந்த உதாரணம். உதாரணமாக கேரள மாநிலத்தின் சுகாதாரக் குறியீடுகள், உலகின் மிக வளர்ந்த நாடுகளோட ஒப்பிடத்தக்கவை. அதன் இப்போதைய தேவை விளைவுகளை நிர்வகித்தலும் (Managing Output metrics), உயர் மருத்துவச் சேவைகளை மேம்படுத்தலுமாகும்.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட கங்கைச் சமவெளி மாநிலங்களின் சுகாதாரக் குறியீடுகள், பின் தங்கிய ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதாரக் குறியீடுகளுடன் ஒப்பிடத்தக்கவை. அம்மாநிலங்கள், தங்களது முதலீடுகளை (Managing input metrics) திறம்படச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இதுபோன்ற பல வேற்றுமைகளை உள்ளடக்கிய நாட்டுக்கு, தில்லியில் அமர்ந்திருக்கும் ஒரு வலிமையான தலைவர், பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் ஒரே காரணத்தால், ஒரே தீர்வை முன்வைக்கிறார் எனில், அவர் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறார் என அர்த்தம். அப்படியான முடிவின் மூலம் எட்டப்போவதாகச் சொல்லும் இலக்குகளை அடைவது ஒருபோதும் சாத்தியம் இல்லை.
இதற்குத் தீர்வு என்ன?
கல்வியில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவ - மாணவியரின் சதவீதமானது (Gross Enrolment Ratio) தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் மிக அதிகம். இந்த மாநிலங்கள், இனிமேல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், கங்கைச் சமவெளி மாநிலங்களில் பள்ளி, கல்லூரி சேரும் மாணவ மாணவியர் சதவீதம் குறைவு.
அவர்கள், முதலில் அந்தச் சதவீதத்தை உயர்த்த வேண்டும். தங்கள் குழந்தைகளைப் பள்ளி, கல்லூரிகளுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டும். தரத்தை உயர்த்துவது அடுத்த படி. இங்கே ‘ஒரே நாடு, ஒரே கொள்கை’ எனச் சொல்லி, ஒரே கல்விக் கொள்கையைத் தீர்வாக வைக்கும் வலிமையான தலைவர், இரு வேறுபட்ட சூழல்களில் இருக்கும் மாநிலங்களுக்கும் அநீதி இழைக்கிறார்.
இதுபோன்ற சூழல்களில், மக்கள் நலன்களுக்குச் செவிசாய்க்கும் அரசை உருவாக்கத் தேவையான நிபந்தனை இதுதான். மக்களிடம் நெருக்கமாக, அண்மையில் இருக்கும் அரசுகளைவிட, தொலைவில் இருக்கும் அரசுகள் செயல்திறனற்றவையாகவும், சரியான முடிவுகளை எடுக்க முடியாதவைகளாகும் இருக்கும். எனவே மாநில, உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, ஒன்றிய அரசின் அதிகாரத்தையும், செல்வாக்கையும் குறைப்பதே சரியான வழி.
‘வலிமையான பிரதமர்’ அவ்வழியின் மிகப் பெரும் தடைக்கல்.
தொடர்புடைய கட்டுரைகள்
ராஜஸ்தான் முன்னேறுகிறது, குஜராத் பின்தங்குகிறது
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
சமூகத்தின் முன்னத்தி ஏர் பிரதமர்: சமஸ் பேட்டி
தமிழில்:
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

2






பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.
Ramasubbu 9 months ago
மோடி வலிமை அற்ற தலைவர் என்றே வைத்து கொள்வோம். வலிமையான தலைவர் இங்கே யார் இருக்கிறார்? ராகுலை வலிமையான தலைவர் என்று காங்கிரஸ் காரர்களே ஒத்துக்கொள்ளமாட்டார்கள். இந்த நாட்டை 50ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு ஒப்பேற்றிவிட்டு சென்றவர்கலள்தான் இவர்கள். காங்கிரஸ் சில் ஒருவர் ஒரு பதவியில் இருக்கிறார் என்றால் தன்னுடைய வாரிசுகளை தன்னுடைய இடத்துக்கு கொண்டுவரும் வேலையை தீவிரமாக செய்வதுதான் இவருடைய முதல் தலையாய பணி. நாடு எல்லாம் இரண்டாம், மூன்றாம் பட்சமதான். மீண்டும் ஆட்சிக்கு வரபோவதில்லை. ஏன், எதிர் கட்சி நிலையை கூட எட்டுவதற்கு வாய்ப்பில்லை. இந்த பலகீனமான நிலையிலும் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலம் இந்திய அளவில் பிரிண்ட் மீடியா, விசுல மீடியா களை கையில் வைத்து ஆதாரமாற்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பரப்புவதுதான்.
Reply 0 1
varadachari rangachari 9 months ago
உண்மைதான், திரு. ராமசுப்பு, புத்திசாலியான தலைவர் என்று மோடியைக் கூறினால் நாட்டுக்கு புத்திசாலியான தலைவர் அவசியமே இல்லை என்றும் வாதிடுவார்கள்!
Reply 0 1
அருள் 9 months ago
கட்டுரையின் சாரத்தைப் புரிந்து கொள்ளாத கருத்து. வலிமையான மாற்றுத் தலைவர் யார் என்பதல்ல...வலிமையான தலைவர் என்பதே இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த நாட்டுக்குத் தேவையில்லை என்பது தான் இந்த கட்டுரை. மீண்டும் ஒருமுறை கட்டுரையை கருத்தூன்றிப் படித்தால் இது விளங்கும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 9 months ago
கொரோனா, சுனாமி போன்ற வார்த்தைகள் ஒரேமாதிரியான ஒலியை ஏற்படுத்துபவை. அதாவது கொரோனா பொதுமுடக்கம் ஒரு psychological error.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 9 months ago
தற்பெருமை அடிப்பதுகூட தவறில்லை, உண்மையாக இருக்கும்பட்சத்தில்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 9 months ago
பொறுப்பை தட்டிக்கழிக்க நினைப்பவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டதுதான் வலிமையான தலைவர்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.