பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள், புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு

ஔரங்கஸேப்பும் எனக்கு ஒரு குருதான்: சாரு பேட்டி

சமஸ் | Samas
26 Jan 2024, 5:00 am
4

மோடியின் காலகட்டத்தில் எழுதப்பட்ட முக்கியமான இலக்கிய பிரதிகளில் ஒன்று என்று ‘நான்தான் ஔரங்கஸேப்’ நாவலைக் குறிப்பிடலாம். சாரு நிவேதிதாவின் பயணத்தில் இது ஒரு பெரும் தாவல். பேரரசருக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான உரையாடலாக இந்த நாவலைக் கட்டமைத்துள்ளவர்,  வரலாற்றுக் காலம் நோக்கி தான் செல்லாமல் தன்னுடைய பேட்டை நோக்கிப் பேரரசரை இழுத்து வந்துள்ளார். படுசுவாரஸ்யமான அவருடைய மொழியும் காலத்தை முன்னும் பின்னும் நகர்த்திப் போட்டு விளையாடும் அவருடைய லாவகமும் 900 பக்க நாவலை அதிவேகத்தில் கொண்டுசெல்கின்றன. ஆங்கிலத்தில் இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டதன் வழி இப்போது மேலும் விரிந்த வட்டத்துக்கு சாரு நிவேதிதா சென்றிருக்கும் சூழலில், ‘நான்தான் ஔரங்கஸேப்’ தொடர்பாக இருவரும் கலந்துரையாடினோம். 

உங்களுடைய இயல்பான களத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட களம் வரலாறு. எப்படி அல்லது ஏன் வரலாறு நோக்கிச் சென்றீர்கள்? சமகாலம் எழுதுவதற்குத் தோதாக இல்லாத சூழலில், கடந்த காலம் நோக்கி பயணப்படுவது எழுத்தாளர்களின் இயல்பு. இதை அப்படிப் பார்க்கலாமா? மேலும், உங்களுடைய போட்டியாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரும் வரலாற்றில் கால் பதித்து நிற்பதும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாமா?

நான் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதுகிறேன். என்றாலும் என் எழுத்து தமிழர்களுக்கு மட்டுமானதல்ல, உலகளாவிய மானுட குலத்தை முன்வைத்தே நான் உரையாடுகிறேன். என் எழுத்தை அறிந்தவர்கள் அதில் எந்தவித கலாச்சார வேர்களும் இல்லை என்பதை அறிவார்கள். அதன் காரணமாகவே இந்திய வேர்களைத் தேடி வரும் மேற்கத்தியர்களுக்கு என் எழுத்து ஈர்ப்பதாக இல்லை. மார்க்கி தெ ஸாத், வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், வ்ளதிமீர் நபகோவ், ஜார்ஜ் பத்தாய் போன்றவர்களின் தொடர்ச்சியாகவே நான் இயங்கி வருகிறேன். ‘ஸீரோ டிகிரி’, ‘ராஸ லீலா’ போன்ற நாவல்கள் அதற்கு சாட்சி. 

தமிழில் என் சக எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ரா. ஆகியோரை நான் ஒருபோதும் போட்டியாளர்களாக நினைத்தது இல்லை. அவர்களின் உலகம் வேறு. என் உலகம் வேறு. சர்வதேச இலக்கியத்தில் நான் என்னுடைய போட்டியாளர்களாக நினைப்பது என் மூத்தோனாகிய ஜேம்ஸ் ஜாய்ஸையும், சமகாலத்தவராகிய ரியூ முராகாமியையும். முராகாமியைத் தாண்டிவிட்டேன். ஜாய்ஸைத் தாண்ட முயற்சி செய்கிறேன். இதற்குள்ளாகவே என்னை ‘இந்திய ஜாய்ஸ்’ என்று அமெரிக்க விமர்சகர்களும் சிங்கள எழுத்தாளர்களும் அடையாளப்படுத்துவதை எனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். ஆயினும் நான் ஜாய்ஸை இனிதான் தாண்ட வேண்டும்.

வரலாறு என்பதை நான் வேறு விதமாகக் காண்கிறேன். பூமியிலிருந்து மேலே பறந்துகொண்டிருக்கும் பட்சியைப் போல் நான் வரலாற்றை நோக்குகிறேன். ஆகவே என்னைப் பொருத்தவரை பதினைந்தாம் நூற்றாண்டும் நாம் வாழும் இருபத்தியோராம் நூற்றாண்டும் ஒரே விதமாகத்தான் தெரிகின்றன. காலம் அல்லது கால வேறுபாடு என்பது எனக்கு ஒரு நேர்க்கோட்டின் பல புள்ளிகள், அவ்வளவுதான். 

நேற்று என்பதே ஒரு வரலாறுதான். 2024 என்பது ஒரு புள்ளி. 2124 என்பதும் ஒரு புள்ளி. நான் 2124ஐ எழுதினால் அறிவியல் புனைவு என்றும், 1594ஐ எழுதினால் வரலாற்றுப் புனைவு என்றும் நீங்கள் வரையறுக்கலாம். எனக்கு இது எல்லாமே ஒன்றுதான். மென்பொருள் துறையில் பணிபுரியும் இன்றைய இளைஞனின் கதையும் ஔரங்ஸேபின் கதையும் எனக்கு ஒன்றுபோலத்தான் தோன்றுகின்றன.  

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நாவலுக்கு நீங்கள் எழுதிய முன்னுரையில், நீங்கள் ஏன் ஔரங்கஸேப் நோக்கிச் சென்றீர்கள் என்கிற விவரணை ஏதும் இல்லை. நாவலில் முன்னதாக வரும் முன்கதைகளில், இந்த நாவலை எழுதும் எழுத்தாளர் பாத்திரம் நாவலை எழுதுவதற்குச் சொல்லும் காரணமும் இயல்பாக எடுத்துக்கொள்ளத் தக்கதாக இல்லை. இந்திய வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய பேரரசர் ஔரங்கஸேப். சொல்லப்போனால் இன்றைய இந்தியாவின் ஆட்சியதிகாரத்திலும் அரசியலிலும் வேறு எவரையும்விட தாக்கம் செலுத்தக் கூடியவர். எனில் ஔரங்கஸேப்பை நீங்கள் திட்டமிட்டுதான் கையில் எடுத்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். சரியா? ஔரங்கசேப் உள்ளபடி உங்களை நோக்கி எப்படி வந்தார்?

தொடக்கத்திலிருந்தே நான் என்னுடைய வாழ்க்கையையே புனைவாக மாற்றிக்கொண்டிருந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் வாழ்க்கை, சம்பவங்களே அற்று வறண்டு போய் இருந்தது. கான்பூரில் 1857இல் பீபிகர் என்ற வீட்டில் ஒளிந்துகொண்டிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் பெண்களும் குழந்தைகளும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவமும், தியாகராஜரின் வாழ்க்கையும் அந்த சமயத்தில் என் மனதுக்குள் மாறி மாறி வந்து சென்றன. இந்த இரண்டு விஷயங்களையும் வைத்து இரண்டு நாவல்களை ஒரே சமயத்தில் எழுதலானேன். 

தியாகராஜருக்காக தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களைக் குறித்து ஆய்வுசெய்துகொண்டிருந்தபோது அது என்னை சிவாஜி நோக்கி இழுத்துச் சென்றது. ஔரங்ஸேப் இல்லாமல் சிவாஜியின் கதை இல்லை அல்லவா? அப்போது தற்செயலாக ஔரங்ஸேப் தன் கடைசி காலத்தில் அவருடைய புதல்வர்களுக்கு எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்களைப் படிக்க நேர்ந்தது. உடனே நான் எழுதிக்கொண்டிருந்த எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு ஔரங்ஸேபின் கதையை எழுத ஆரம்பித்து ஆறே மாதத்தில் முடித்தேன்.

சாரு நிவேதிதா

நம்ப முடியாவிட்டாலும் நாவலின் முன்பகுதியில் எழுத்தாளன் சொல்லியிருக்கும் காரணம் உண்மைதான். தியாகராஜர் வழியாக சிவாஜி, சிவாஜி வழியாக ஔரங்ஸேப் என்று வந்தபோது எனக்குத் தெரிந்த ஒரு அகோரி அக்பரின் ஆவியுடன் பேசுவது பற்றி அறிந்துகொண்டேன். அதுவே ஔரங்ஸேபின் ஆவியுடன் பேசுவதான சாத்தியத்தை அளித்தது.

எழுதத் தொடங்கிய பிறகு ஔரங்ஸேபை சமகால இந்திய அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்த என்னுடைய விமர்சனமாகவும், எதிர்ப்புக் குரலாகவும் மாற்றினேன். 1930களின் ஜெர்மனியையும் அதன் தேசியவாதத்தையும் அது முழுமையான ஃபாசிஸத்தைக் கொண்டுவந்ததையும் நாம் அறிவோம். இப்போதிய இந்தியாவின் ஹிந்துத்துவாவின் அரசியல் எழுச்சி எனக்கு அதைத்தான் நினைவுபடுத்துகிறது. எனவே, ஔரங்ஸேப் நாவல் இன்றைய ஹிந்துத்துவாவுக்கு என் நேரடியான எச்சரிக்கை மணி. வரலாற்றிலிருந்து பாடம் கற்காவிட்டால் என்ன நடக்கும் என்பது ஔரங்ஸேப் நாவலில் இருக்கிறது.

நாவலில் மன்னருக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான உரையாடல் வாயிலாக, ஔரங்கஸேப் கால இந்தியாவும் சாருநிவேதிதா காலத் தமிழ்நாடும் இணைக்கோடுகளாகச் செல்கின்றன. நாவல் எடுத்துக்கொண்டுள்ள களத்துக்கு இது இயல்பானது. ஆனால், ஊடுபாவு போன்று மஹாபாரதம் வருகிறது. தருமன் வருகிறான். இதன் பின்னணி என்ன? அதேசமயம், இன்னொரு பெரும் கதையும் சமகால சர்ச்சைகளின் நாயகனுமான ராமாயணமும் ராமனும் ஒரு இடத்தில்கூட வரவே இல்லை. ஏன்?

ராமனைப் பற்றி எழுத முடியாது. எழுதினால் என் தலை என் உடலில் இருக்காது. அதனால்தான் ராமாயணமும் ராமனும் இல்லை. ஆனால், ராமனைப் பற்றி எதிர்காலத்தில் எழுதும் எண்ணம் உண்டு. எனக்கு ராமன் மீது பச்சாதாபம் உண்டு. கிருஷ்ணனுக்குத் தான் ஒரு அவதாரம் என்று தெரியும். ராமனுக்குத் தெரியாது. ஏகபத்தினி விரதன். அதிலும் தன் ஒரே மனைவியை மற்றொருவனிடம் பறிகொடுத்துவிட்டுத் தனித்திருந்தவன். அவளைத் திரும்பக் கொண்டுவருவதற்காகப் போரிட்டவன். ஒருநாள் நாளை நீ அரசன் என்று அறிவிக்கப்படுகிறான். மறுநாள் காலையில் நீ காட்டுக்குப் போ என விரட்டப்படுகிறான். எப்பேர்ப்பட்ட துயரம்! இந்த உலகத்திலேயே ராமனைப் போல் பரிதாபத்துக்குரிய ஒரு அரசன் யாரும் இல்லை. ஒரு அரசனாக இருந்தும் ஏகபத்தினி விரதனாக வாழ நேர்ந்ததைவிடக் கொடுமை வேறு ஏதாவது இருக்க முடியுமா? (சிரிக்கிறார்…)

ராமனை ஷாஜஹானைப் போல் ஒரு ஹெடோனிஸ்டாக மாற்றி அவன் கதையை என் பாணியில் எழுதும் ஒரு திட்டம் இருக்கிறது. கடுமையான ட்ரான்ஸ்கிரசிவ் நாவலாக இருக்கும். நார்வே போன்ற ஒரு நாட்டில் ஒளிந்துகொண்டுதான் அதை எழுத வேண்டும். பார்ப்போம். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி

சமஸ் | Samas 29 Jan 2023

கிருஷ்ணனையும் சகுனியையும் நீங்கள் இந்த நாவலில் விசேஷமாக அணுகுகிறீர்கள். நாவலுக்கு வெளியே கொஞ்சம் விவரிக்கலாமா?

எழுத்தாளர்களுக்குத் தத்துவம் தேவையில்லை என்று பலரும் கருதுகிறார்கள். என் எழுத்து பின்நவீனத்துவம் சார்ந்து இருப்பதற்குக் காரணமே தத்துவம்தான். நான் எல்லா விதமான அதிகாரங்களுக்கும் எதிரானவன். அதனால்தான் எழுத்தாளன் என்ற அதிகாரத்தையும் புறக்கணிக்கிறேன். அதனால்தான் என் புதினங்கள் எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் திறந்த பிரதிகளாக இருக்கின்றன.

ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் ஜாக் தெரிதா ‘தெ அதர்’ என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். கிருஷ்ணனுக்கு சகுனிதான் மாற்றான். பேட்மேனுக்கு ஜோக்கர் மாதிரி. ஔரங்ஸேபுக்கு சிவாஜி. ஔரங்ஸேப் சிவாஜியைத் தன் ‘அதர்’ என்று காண்கிறார். அதனால்தான் அவர் வழக்கப்படி தன் எதிரிகளைக் கொல்வதைப் போல் சிவாஜியைப் பிடித்த பிறகும் கொல்லவில்லை. கொன்றிருந்தால் மொகலாய சரித்திரமே வேறு மாதிரி இருந்திருக்கும். கொல்லாமல் சிறை வைத்ததால்தான் சிவாஜி சிறையிலிருந்து தப்பினார். 

ஔரங்கசேப்பின் தனிப்பட்ட வாழ்வின் பல நியாயங்களை இந்த நாவல் பேசுகிறது. அதேசமயம், பொது வாழ்வில் அவருடைய பல தவறுகளுக்கு அவர் வாயிலாகவே ஒப்புதல் வாக்குமூலமும் பெறுகிறது. கூட்டிக் கழித்து பார்க்கும்போது, ஔரங்கசேப்பைப் பற்றி நாவலில் வரும் எழுத்தாளர் என்ன மதிப்பீட்டுக்கு வருகிறார், நீங்கள் என்ன மதிப்பீட்டுக்கு வருகிறீர்கள்?

என்னதான் இது ஒரு வரலாற்று நாவல் என்றாலும், என் எழுத்து எல்லாமே பின்நவீனத்துவ நோக்கில் எழுதப்படுவதுதான். எனவே என் எந்த எழுத்திலும் எழுத்தாளனின் மதிப்பீடுகள் இருக்காது. ரொலாந் பார்த் சொல்லும் எழுத்தாளன் இறந்துவிட்டான் என்பது இதுதான். நான் உங்களுக்குக் கச்சாப் பொருட்களையே தருகிறேன். நீங்கள்தான் இதை உங்களுடைய வாசிப்புக்கு ஏற்ப சிருஷ்டித்துக்கொள்ள வேண்டும். எழுத்தாளனின் மதிப்பீடு என்று எதுவுமே இல்லை. அகிரா குரசவாவின் ரஷோமான் படம் மாதிரிதான். அதில் ஒரு கொலை நடக்கும். அதைப் பார்த்த நான்கு பேர் நான்கு விதமான சாட்சியங்களைச் சொல்வார்கள். 

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

அசோகரும் அக்பரும் உங்கள் கணக்கில் இருக்கிறார்களா? ஏன் உங்களுக்கு இவர்களைக் காட்டிலும் ஔரங்கஸேப் ஈர்ப்பவராக இருந்தார் என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது?

அக்பரும் அசோகரும் இந்தியாவின் நாயகர்கள். எனக்கு நாயகர்களைவிட வில்லன்களாக சித்தரிக்கப்படுபவர்களின் மீதே ஈர்ப்பு அதிகம். ஔரங்ஸேப் வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டவர். தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர். நானுமே தமிழ் இலக்கியத்தில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவன். அதனால் இயல்பாகவே ஔரங்ஸேபிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால், இருவரும் கணக்கில் இருக்கிறார்கள். அடுத்து நான் எழுதிக்கொண்டிருக்கும் ‘அசோகா’ நாவலில் அசோகரின் மறைக்கப்பட்ட வாழ்க்கை வெளியே வரும். இந்த நாவலில் அவர் ஓர் எதிர்மறை நாயகன். 

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அயோத்தி: தேசத்தின் சரிவு

ஆசிரியர் 22 Jan 2024

இந்திய வரலாற்றில், ஏன் மொகலாய வரலாற்றிலேயேகூட பல அரசர்கள் இருக்கும்போது, ஔரங்கசேப் எப்படி எதிர்மறைப் பேசுபொருள் ஆக்கப்பட்டார்? அவருடைய வரலாற்றின் அல்லது நம்முடைய சமகால சமூகத்தின் எந்தக் காரணிகள் இதற்கான சாத்தியப்பாட்டை உருவாக்கித் தருவதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

அரசியலை நடத்திச் செல்வதற்கு மக்களை மந்தை ஆடுகளாக மாற்ற வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டு அரசியலர்களுக்கு ஒரு ஹீரோவும் வில்லனும் தேவைப்படுகிறார்கள். ஹீரோ அசோகன். வில்லன் ஔரங்ஸேப். அதனால் மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் நடந்த அத்தனை அநீதிகளையும் ஔரங்ஸேபின் தலையில் கட்டினார்கள். அதற்கான வாய்ப்புகளையும் ஔரங்ஸேப் கொடுத்தார். ஔரங்ஸேபின் பெரும்பாலான அரசியல் முடிவுகள் பொதுமக்களின் கருத்துக்கு எதிராகவே இருந்தன என்பதைக் கவனியுங்கள். தினந்தோறும் மக்களுக்கு முன் தோன்றி கை அசைத்து வாழ்த்து சொல்லும் அரச தரிசனத்தை அவர் நிறுத்தினார். இதுபோல் நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லலாம்.

இதுபோன்ற புத்தகங்கள் - அது புனைவானாலும் சரி, அபுனைவானாலும் சரி - எழுதும்போது, சம்பந்தப்பட்ட வரலாற்றில் இருந்து சமகாலத்தைப் புரிந்துகொள்ள சில கம்பிகள் கிடைக்கும். உங்களுக்கு அப்படிக் கிடைத்த முக்கியமான கம்பி என்ன?

அரசன் எப்படி இருந்தால் அந்த அரசு எப்படிப்பட்ட முடிவுக்கு வரும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர் ஔரங்ஸேப். அதை அவர் கடைசி காலத்தில் புரிந்துகொண்டதால்தான் அத்தனை கடிதங்களைப் புதல்வர்களுக்கு எழுதினார். ஆனால், அவர்கள் அதைக் கேட்காமல் தன் தகப்பனார் தோண்டிய குழியில் மொகலாய சாம்ராஜ்ஜியத்தைப் புதைத்தார்கள். இப்போது இந்திய அரசியலிலும் சமூகத்திலும் நடந்துகொண்டிருப்பது அதுதான். வெறுப்பின் அரசியல் என்பதுதான் அந்தக் கம்பி.

இதையும் வாசியுங்கள்... 2 நிமிட வாசிப்பு

மோடி மந்திர்

சீனிவாச ராமாநுஜம் 15 Jan 2024

இயல்பில் உங்களுக்கு நேர் முரணானவர் ஔரங்கஸேப். அவருடனான சினேகிதம் வழியே எதையேனும் மாற்றிக்கொண்டீர்களா?

எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ள ஔரங்ஸேப் எனக்குக் கிடைத்த குரு. 

உலகிலேயே துரதிஷ்டவசமானவன் என்று பேரரசனை நீங்கள் இந்த நாவலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நாவலுக்கு வெளியே பேசுவோம். உலகிலேயே துரதிருஷ்டவசமானவன் எழுத்தாளனா, பேரரசனா?

சந்தேகமே இல்லாமல் பேரரசன்தான். யார் யாரால் ஒரு டீக்கடைக்குச் சென்று ஹாய்யாக ஒரு டீ குடிக்க முடியவில்லையோ அவர்கள் அத்தனை பேருமே துரதிர்ஷ்டசாலிகள்தான். எழுத்தாளனைப் போல் சுதந்திரமான பிறவி இந்த உலகிலேயே யாரும் இல்லை. அவன் ஒரு பறவையைப் போன்றவன். 

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட ராமருக்கு கோயிலுக்கு உயிர் கொடுத்திருப்பதன் மூலம் ‘ராம ராஜ்ய’த்துக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது நரேந்திர மோடி அரசு. நீங்கள் இப்போது ஔரங்கஸேப் ஆவியுடன் உரையாடினால், இதுகுறித்து அவருடைய கருத்து என்னவாக இருந்திருக்கும்?

நாவலுக்குள் அது இருக்கிறதுதானே! நீங்கள் ஏன் என்னைக் கொலையில் இழுத்துவிடுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்?

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு உங்களுடைய நாவல்கள் செல்லும்போது அங்கு கிடைக்கும் வரவேற்பு எப்படி இருக்கிறது? என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?

தமிழில் என்ன எழுதினாலும் அதுகுறித்த விமர்சனமோ ஆதரவான கருத்தோ வருவதில்லை. எல்லாமே கிணற்றில் போட்ட கல்தான். ஆனால், ‘நான்தான் ஔரங்ஸேப்’ (Conversations with Aurangzeb: A Novel) ஆங்கில மொழிபெயர்ப்பு வந்தவுடன் கோழிக்கோடு இலக்கிய விழா, மாத்ருபூமி இலக்கிய விழா, தி இந்து இலக்கிய விழா, ஜெய்ப்பூர் இலக்கிய விழா என்று நான்கு பெரும் விழாக்களில் பேசுவதற்கு நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்!

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
சர்தாஜிக்களின் கைகளில் இரண்டு கோப்பைகள்: சாரு பேட்டி
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி
எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி
கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: சாரு
அதிசாகச நாவலுக்கானது கருணாநிதியின் வாழ்க்கை: சாரு
எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: சாரு
அயோத்தி: தேசத்தின் சரிவு
மோடி மந்திர்
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

1





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Sam   11 months ago

ஏன் சமஸ் நீங்கள் கண்டபடி "உள்ளபடி" என்ற சொல்லை எல்லா இடங்களிலும் தேவையே இல்லாமல் பயன்படுத்துகிறீர்கள்? உங்கள் பேச்சிலும், எழுத்திலும் இந்த வார்த்தை அடிக்கடி வருகிறது. இந்த வார்த்தையை நீங்கள் சொன்னாலும் சொல்லாவிடினும் நீங்கள் கூற வருவதில் ஒரு மாற்றமும் வர போவதில்லை, பிறகு ஏன் மிக அதிகமாக இந்த சொல்லை பயன்படுத்துகிறீர்கள் என்று புரியவில்லை!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJA   11 months ago

ஒவ்வொரு அத்தியாயமும் ஆர்வம் குறையாமல் செல்லும். சாரு இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் bynge app ல் (One day after another ) எழுதும் போது படித்தேன். உண்மையில் பேயாடியது ரைட்டர்தான். பேயாட்டம் ஆடிய எழுத்து வேகம் . சாதனை. படித்ததோடு மட்டுமல்லாமல் அவுரங்கசீப் அடக்கமாகி உள்ள குல்தாபாத் சென்று பார்த்தேன். மற்றும் அதில் வரும் பஞ்சகி, அவருடைய தாஜ்மகால் போன்ற கட்டிடம் அதில் அவரது மனைவி அடங்கிய இடம், என அந்தப் பயணம் இருந்தது. படு ஸ்வாரசியமான நடை . கிட்டத்தட்ட ஒரு மாய உலகில் இருந்தது போன்ற அனுபவம். இவருடய இந்த படைப்பு மிகப் பெரிய சாதனை. பாபர் உரை பரவசத்தின் உச்சம். அவர் இரண்டாவாது தம்பியின் புலம்பல் படித்தால் நீங்கள் கண்ணீர் வடிப்பீர்கள். இன்னும் அதில் வரும் கதாப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் நம்மைக் கவர்ந்து கொள்ளும் . உண்மையில் சாரு தன் எழுத்தின் மூலம் வாசகனை புதுப் புது தளத்தில் நிறுத்தி வியப்பில் ஆழ்த்துகிறார். வழி காட்டுகிறார். சமசுக்கு நன்றி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   11 months ago

'நான்தான் ஔரங்ஸேப்' நாவலில் ஒரு பழமொழி வரும். ஒட்டகம் குசுவிட்டால் ஆகாசத்துக்கும் போகாது தரைக்கும் போகாது என்று. சுவாரசியத்துக்குக் குறைவில்லாத உத்தியும், நடையும். தைமூரிய சாம்ராஜ்யம் தொடங்கி தமிழீழம் வரை பேசும் படைப்பு. அசோகரின் சத்ரப்புகள் செய்த அட்டூழியமெல்லாம் வேறெங்கும் படித்ததில்லை. கவிதாயினி ஸெபுன்னிசா, துர்கவதி, சூஃபி சர்மத் ஷாஹித் என்று எத்தனையெத்தனை உபகதைகள்! அசகாய சாதனை

Reply 2 0

Tamilnadan   10 months ago

கதைக்கு சம்பந்தமே இல்லாமல் 'அங்கே இங்கே' "சுட்டு" கையில் கிடைச்சதை எழுதுவதால் அனாவசிய உப கதைகள் தொல்லை அதிகம். கேட்டால் "பின் நவீனம், transgressive writing, பிறழ்வெழுத்து' என்று ஏதாவது சொல்ல வேண்டியது....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பெரும்பான்மை சமூகம்புத்தக அட்டைமக்கள்தொகை கணக்கெடுப்புஎம்.ஐ.டி.எஸ்.தீண்டாமைமன்னார்குடி ஸ்ரீநிவாசன்முதல்வர் ஸ்டாலின்கோல்வால்கர்டி.எம்.கிருஷ்ணா சமஸ்2018 சட்ட ஆணையம்சீனா பறக்கவிடும் இந்தியக் கொடி!ஹார்மோனியத்துக்குத் தடைசாதிப் பெயர்புஜ எலும்பு முனைகள்கூட்டணி முறிவுவசுந்தரா ராஜ சிந்தியாஅசல் அரசமைப்புச் சட்டம்பிரபாத் பட்நாயக் கட்டுரைஆவின் ப்ரீமியம்நிராகரிப்புஅதிக மழைபாரதிய ஜனதா கட்சிசஞ்சய் மிஸ்ரா: வெட்கமற்ற முன்னெடுப்புதேச மாதாபத்திரிகையாளர் கலைஞர்தலித் இளைஞரின் தன்வரலாறுயு.ஆர்.அனந்தமூர்த்திஇந்திய ஊடகங்கள்எருமை வளர்ப்புதமிழர் மருத்துவம் ஒரு வரலாற்றுப் பார்வை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!