தலையங்கம், அரசியல், கலாச்சாரம் 2 நிமிட வாசிப்பு

அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு

ஆசிரியர்
11 Jan 2024, 5:00 am
3

யோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் பங்கேற்பதில்லை என்று அறிவித்ததன் மூலம் தன்னுடைய வரலாற்றுக் கடமையைச் செய்துள்ளது காங்கிரஸ். நாடு முழுவதையும் மதம்சார் உளவியல் அலையில் தள்ளி, இந்நிகழ்வைத் தாம் கனவு காணும் ‘இந்துத்துவ சாம்ராஜ்யத்துக்கான கால்கோள் விழா’ போன்று முன்னகர்த்திவருகிறது பாஜக; அதன் செயல்திட்டத்துக்கு எதிரே உறுதிபட நிற்கத் துணிந்ததன் மூலம் காந்தி, நேருவை உள்ளடக்கி இந்த நாட்டின் அரசியலுக்கு மத நல்லிணக்கப் பாதையைச் செப்பனிட்டு தந்த தன்னுடைய முன்னோடிகளின் வரலாற்றுப் புகழைக் காத்திருக்கிறது காங்கிரஸ்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நாட்டின் கணிசமான மக்களையும் அரசியல் களத்தையும் மதவாதப் பைத்தியம் பீடித்திருக்கும் நிலையில், இத்தகைய முடிவானது, தேர்தல் களத்தில் கட்சிக்குப் பாரதூர விளைவுகளை உண்டாக்கலாம் என்ற சூழலிலும் அதற்கு காங்கிரஸ் முகம் கொடுத்திருப்பது துணிச்சலானது. கட்சிக்குள் பல தரப்புக் குரல்கள் எழுந்தபோதிலும், உறுதியாக ஒரு முடிவை எடுத்த அளவில் காங்கிரஸ் தலைவர் கார்கேவும் அதன் இன்றைய வழிகாட்டி சோனியாவும் காலமெல்லாம் போற்றப்படுவர். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கை மிகவும் நாசூக்கானது என்றாலும், அதன் எதிரியைத் துல்லியமாகத் தாக்குகிறது. “நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கிவருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலைத் திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குக் கட்டுப்பட்டும், ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்!”

மோடி ஆட்சியின் கீழ் டெல்லி வந்த பிறகான இந்தப் பத்தாண்டுகளில், அரசியலில் மதம் சார்ந்த விவகாரங்களைக் கையாளுவதில் காங்கிரஸ் மிகக் குழப்பமான முடிவுகளை எடுத்தது. கட்சியின் முதல் குடும்பமான சோனியாவும், ராகுலும் மதச்சார்பின்மை விவகாரத்தில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட உறுதியோடு இருந்தார்கள் என்றாலும், கட்சியின் பல முன்னணித் தலைவர்கள் பல விஷயங்களிலும் பாஜகவைப் பின்பற்ற விரும்பினர். பல மாநிலங்களில் மென்போக்கு இந்துத்துவத்தை காங்கிரஸ் கையாண்டது. பல விவகாரங்களில் அது சறுக்கியது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான நிரலாக அயோத்தி ராமர் கோயில் திறப்பைத் திட்டமிட்டு, அதற்கேற்ப காய் நகர்த்திவரும் பாஜகவுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பதில் எதிர்க்கட்சிகள் இடையே ஒரு குழப்பம் நிலவிவந்தது அப்பட்டமாக வெளிப்பட்டது. நிகழ்வைப் புறக்கணிக்கும் முதல் அறிவிப்பை கம்யூனிஸ்ட்டுகள் வெளியிட்டனர். நாட்டின் பழம்பெரும் கட்சியின் முடிவு எல்லோராலும் எதிர்நோக்கப்பட்டது. தாமதமானாலும், சின்ன அளவிலான எதிர்வினைதான் என்றாலும்கூட வரவேற்கத்தக்க முடிவை காங்கிரஸ் இப்போது எடுத்துள்ளது.

அரசியலையும் மதத்தையும் பிரித்து அணுகும் பாதை நோக்கி அடுத்தடுத்து, ஏனைய எதிர்க்கட்சிகளும் உறுதியாகப் பயணப்பட காங்கிரஸின் முடிவு உத்வேகம் தரக் கூடும்.

இந்திய புராண மரபில் ‘ராமர்’ தொன்மம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடு. சகோதரர்கள் இடையேயான பிளவைத் தடுக்கவும், குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும், சமூகத்தின் அமைதிக்காகவும் ஆட்சியதிகாரத்தை மறுத்து வனம் செல்லும்  ராமரைத் தியாகத்துக்கான முன்னுதாரணமாக்கியே கதை கூறுவர். நேர் எதிராக இந்து - முஸ்லிம் சகோதரர்கள் இடையே பிளவை உண்டாக்கி, இந்தியக் குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைத்து, சமூக அமைதியின்மையின் மூலமாக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாறு சங்க பரிவாரத்தினுடையது. இவர்கள் ராமரை இழிவுக்குள்ளாக்கியவர்கள். 

அயோத்தி ராமர் கோயிலுக்கும் ஆன்மிகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முழுக்கவும் சங்க பரிவாரத்தின் அரசியல் பிரகடனச் சின்னம். ஆட்சியைத் தன் வசம் வைத்திருப்பதால், அரசதிகாரங்களை வளைத்து, தனக்கேற்றபடி கட்டுமானத்தை எழுப்பி அதற்கு 'கோயில்' என்று ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் பெயரிடுவதாலேயே அது கோயில் ஆகிவிடாது. அறவுணர்வு கொண்ட இறை நம்பிக்கையாளர்களால் அது, பலருடைய உயிர்களைக் கலவரங்களின் வழி பலி வாங்கிய பாவத்தின் பீடமாகவும், இந்தியாவின் சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்டு வளர்க்கப்பட்ட வெறுப்பின் சின்னமாகவுமே என்றும் பார்க்கப்படும்.

அரசியலில் இன்று உருவாக்கப்பட்டிருக்கும் தற்காலிக மதவாத அலைகளுக்குள் இந்த வரலாற்று உண்மையைப் புதைத்துவிட முடியாது. இந்திய ஜனநாயகத்தின் அத்தனை தூண்களும் பாபர் மசூதியின் இடிப்புக்காகவும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் என்றைக்கும் அவமானத்தைச் சுமந்தே தீர வேண்டும்.

பிரதமர் மோடியும் பாஜகவும் சங்க பரிவாரங்களும் இன்னும் பெரும் சத்தத்தை உருவாக்கலாம்; பேரிரைச்சலின் மத்தியில் இன்னும் வலுவான மத அலைகள் எழலாம். எதுவாயினும் சரி, இந்நாட்டின் குடிமக்கள் நம்முடைய அரசமைப்பு சொல்லும் உயரிய விழுமியங்களை மேலும் இறுகப் பற்றிக்கொள்வோம், மதநல்லிணக்கத்தை மேலும் உரக்கப் பேசுவோம்; பிளவு அரசியலை உறுதிபட எதிர்க்க ஜனநாயக அரசியல் சக்திகளுக்கான தார்மிக பலத்தை அவர்களுக்குத் தருவோம்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

11

4

1
1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

U Lakshmikantan    3 months ago

கட்டுரை சிறப்பு. ஆனால் மதச்சார்பின்மை என்னும் சொல்லாடல் அனைத்து மதத்தினரையும் சமமாக பாவிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு ஒரு குறிப்பிட்ட அல்லது சில மதத்தினரை மட்டும் முக்கியமான குடிமக்களாக மதச்சார்பின்மை என்கிற பெயரில் முன்னிலைப்படுத்துவது இனிமேலாவது மாற வேண்டும். இந்தியாவில் இருக்கும் அனைத்து குடிமக்களையும் ஒரே விதமாக பாவிப்பது அனைத்து கட்சிகளுக்குமான கடமை. இதில் காங்கிரஸோ பாஜகவோ மாற்று நிலைப்பாடு எடுப்பது அர்த்தமற்றது. நான் அறிந்த வரையில் காங்கிரஸின் இந்த நிலைப்பாடு மதச்சார்பின்மையை காட்டுவதாக இல்லை. எப்படியும் இந்து மதமே இல்லை என்று சொல்லியோ அல்லது நடுநிலைமை என்று சொல்லியோ அல்லது ஜாதியாக நீங்கள் பிரிந்து விடுகிறீர்கள் என்று சொல்லியோ அல்லது தமிழ்.... தமிழ்.... என்று முழங்கியோ அல்லது ஆரியர் பார்ப்பனர் அல்லது ஆரியர் திராவிடர் என்ற குழப்பியோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தைச் சொல்லியோ மக்குகளாகிய இந்துக்களின் ஓட்டை பெற்று விட முடியும். ஆனால் முஸ்லிம்களின் ஓட்டை பெற வேண்டுமானால் ராமர் கோயில் திறப்பதை தவிர்ப்பது நல்லது என்று காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் ஒன்றை மறந்து விட்டது, போலி மதச்சார்பின்மை அல்லது பாஜக எதிர்ப்பு என்கிற போர்வையில் ராமரை புறக்கணித்து விட்டது. ராமர் அனைவருக்கும் பொதுவானவர். இன்னும் ஆசிரியர் மட்டுமல்லாது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், மதச்சார்பின்மை என்கிற பெயரில் இந்துக்களை ஆட்டு மந்தைகளாக கருதுவது போல இருக்கிறது.

Reply 8 1

Login / Create an account to add a comment / reply.

அ.பி   3 months ago

திரு. சமஸ் அவர்களே... உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.. மேலே உள்ள கருத்துக்கள் முழுவதும் உங்களுடையது எனில், வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் நடுநிலை தவறவில்லை... நிச்சயம் காங்கிரஸ் சரியான முறையில் ச‌ரியான முடிவை எடுத்து உள்ளது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Sankar   3 months ago

வன்மத்தின் வெளிபாடு.....

Reply 2 2

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வேலையைக் காதலிமேதமைபத்திரிகாதர்மம்நிச்சயமற்ற அதிகாரம்கரோனா வைரஸ்அச்சத்துடனா?இந்தியத்தன்மைசசிகலாமேற்குத் தமிழகம்கே.எஸ்.ஆர்பொதுக்கூட்டம்என்.சி.அஸ்தனாமுத்துசுவாமி தீட்சிதர்மாநிலங்களவையின் சிறப்புஎப்போது கிடைக்கும் உரிய பிரதிநிதித்துவம்?அரசியல் அறிவியல்சமஸ் அருஞ்சொல் தமிழ்நாடு பிரிவினைபாரம்பரிய விவசாயம்விளக்கமாறுஅருஞ்சொல் - மன்னை ப.நாராயணசாமிஆம்ஆத்மி கட்சிஐ.ஏ.எஸ்.சாப்பாட்டுப் புராணம் சமஸ்பள்ளிக்கூடங்கள்சிறப்பு அந்தஸ்துமாயக் குடமுருட்டி: வெற்றிடத்தின் பாடல்கள்சமூக தேசியவாத பேரவைபெருந்தொற்றுகலோரிகாலை உணவு வழங்க நமக்குத் தேவை கண்ணியமான கற்பனை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!