பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி

சமஸ்
19 Feb 2023, 5:00 am
5

படம்: பிரபு காளிதாஸ்

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

தமிழ் இலக்கியத்துக்குள் நுழையும் ஒருவர் வெகுசீக்கிரம் எழுத்தாளர் சம்பந்தமான மிகை மதிப்பீட்டு பிம்பங்களுக்கும், உள்ளே பெரிய தாழ்வுணர்வுக்கும் படிப்படியாக ஆளாவதைப் பலரிடம் பார்த்திருக்கிறேன். இந்தச் சிக்கல் தமிழ் இலக்கியத்திலேயே இருக்கிறதா? தன்னை இந்தச் சமூகம் ஏந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு தமிழ் எழுத்தாளர்களிடம் பெரும்பான்மையாக இருக்கிறது. பொதுமேடைகளுக்கான இடம் தங்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ் எழுத்தாளர்களிடம் துலக்கமாக இருக்கிறது. ஆனால், இந்தச் சமூகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளோடு அவர்களுக்கு எந்த உறவும் இல்லை. இந்திய அரசியல் வரலாற்றிலேயே தமிழ்நாட்டின் தனித்துவமான சில விஷயங்களை நாம் எடுத்துக்கொள்வோம். ரத்தம் தோய்ந்த மொழிப் போராட்டம். நம்முடைய இலக்கியங்களில் என்னவாக அது பதிவாகி இருக்கிறது? எத்தனை நவீன எழுத்தாளர்கள் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்கள்? மொழி அடிப்படையில் அவர்களுடைய முதன்மை உரிமை எல்லைக்கு உட்பட்டதல்லவா? நம்முடைய இலக்கிய முன்னோடிகள் பலர் முற்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள். பிராமண சமூகத்திலும், பிராமணரல்லாத சமூகத்திலும்! யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற ஓர் ஆளுமை இங்கே ஏன் தோன்றவில்லை? ஏன் ‘சம்ஸ்காரா’ போன்று சாதியைத் தீவிரமான சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கும் ஒரு படைப்பு இங்கு தோன்றவில்லை? அனந்தமூர்த்திக்கு கன்னட அரசியல் தலைவர்கள் பலருடனும் நல்லுறவு இருந்திருக்கிறது. கன்னட தேசியர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். தலித் - பழங்குடி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். சர்வதேச மேடைகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அஷிஸ் நந்தி போன்ற கோட்பாட்டாளர்களுடனும் அவருக்கு நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. உலகளாவிய விரிந்த பார்வையை அவருடைய உரையாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. இங்கே உள்ள உரையாடல்களில் குறைகளும் கசப்பும்தான் வெளிப்படுகின்றன. இதுதான் நம்முடைய எல்லையா?

உங்களுடைய அவதானமும், அதை அடிப்படையாக வைத்து எழும் கேள்விகளும் நான் பல காலமாக எதிர்கொண்டு வருபவைதான். எல்லாம் ஒரு பெரும் ஆய்வை நோக்கிய கேள்விகள். இந்த உரையாடலிலேயே எனக்கு ஆகப் பிடித்த பெரும் கேள்வியாகவும் இதைக் கொள்ளலாம். 

என்னை ஓர் உதாரணமாக வைத்துக்கொண்டு வாசகர்களின் முன்னே தமிழ் எழுத்தாளனின் தரப்பு நியாயங்களை எடுத்து வைக்கிறேன். ‘மாத்யமம்’, ‘கலா கௌமுதி’, ‘மாத்ருபூமி’ ஆகியவை கேரளத்தின் மிக முக்கியமான இலக்கிய வாரப் பத்திரிகைகள். இவை போல சுமார் 25 பத்திரிகைகள் வருகின்றன. நான் சொன்ன மூன்றுமே வாரப் பத்திரிகைகள் என்பது முக்கியம். ‘மாத்யமம்’ பத்திரிகையை நடத்துவது ஓர் அகில இந்திய இஸ்லாமிய கலாச்சார அமைப்பு. ‘மாத்யமம்’ இதழில் சர்வதேச இலக்கியம் பற்றியும், ‘மாத்ருபூமி’யில் சர்வதேச இசை பற்றியும், ‘கலா கௌமுதி’யில் ‘ராஸ லீலா’ நாவலையும் தொடர்ந்து வாராவாரம் எழுதினேன். ஒரே சமயத்தில் மூன்று இலக்கிய வாரப் பத்திரிகைகளில் என் படைப்புகள் வந்தன என்பது இங்கே முக்கியம். ‘ராஸ லீலா’ இரண்டு ஆண்டுகள் தொடராக வந்தது. அதாவது, தமிழில் எழுதி மொழிபெயர்ப்பாளருக்கு அனுப்புவேன். அவர் அதை மொழிபெயர்த்து ‘கலா கௌமுதி’க்கு அனுப்புவார். ‘கலா கௌமுதி’யில் தொடர் முடிந்த பிறகுதான் இங்கே என் தாய்மொழியான தமிழில் அந்த நாவல் வெளிவந்தது. அந்த நாவல் தமிழில் எந்தப் பத்திரிகையிலும் வருவதற்கான இலக்கியச் சூழல் என் மண்ணில் இல்லை.

இதனால் என்னை மலையாளிகள் ஒரு மலையாள எழுத்தாளராகவே கருதினார்கள். மலையாளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஸக்கரியா ஒருமுறை ‘காலச்சுவடு’ பத்திரிகையில் அவர் எழுதிவந்த கட்டுரைத் தொடரில் “சாரு நிவேதிதாவை மலையாளிகள் தத்து எடுத்துக்கொண்டுவிட்டார்கள்” என்று எழுதினார். இதைக் கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்த்ததும் ‘காலச்சுவடு’வில் வெளிவந்ததும் சற்று ஆச்சரியமான விஷயம். 

சுமார் பதினைந்து ஆண்டுகள் மாதம் ஒருமுறை கேரளம் சென்றுவருவது வழக்கமாக இருந்தது. புத்தக வெளியீட்டு விழா, அரசியல் கூட்டங்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் ஆகிய மூன்று நிகழ்வுகளே அதிகம். தவிர, கேரளத்தில் நான் பேசாத கல்லூரிகளே இல்லை என்ற அளவுக்கு மாணவர்கள் இடையே பேசியிருக்கிறேன். அரசியல் கூட்டம் என்றால் மாற்று அரசியல். ‘பகுஜன் சமாஜ் கட்சி’யின் பல கூட்டங்களில் கேரளத்தில் பேசியிருக்கிறேன். மாதம் ஒரு நிகழ்வு என்று பதினைந்து ஆண்டுகள். 

சின்ன கூட்டங்களில்கூட பேச்சு...

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எல்லாவற்றிலுமே நான்தான் சிறப்புப் பேச்சாளன். ஒரு கூட்டத்தில்கூட பத்தோடு பதினொன்றாக இருந்ததில்லை. தமிழ்நாட்டில் எப்படியென்றால், நண்பர்கள் அழைப்பார்கள். போவேன். பார்த்தால் ஒரு பெரிய பட்டியல் இருக்கும். அதில் பத்தோடு பதினொன்றாக நம்முடைய பெயரும் இருக்கும். கடைசியாக நம் பெயரைக் கூப்பிடுவதற்குள் வாசகர்கள் களைத்து கலைந்துவிடுவார்கள். பிறகு நாம் பாதி நாற்காலிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்க வேண்டி வரும். 

தமிழ்நாட்டில் சிறப்புப் பேச்சாளர்தான் கடைசியில் பேசுவார். ஆனால்,  கேரளத்தில் நேர் எதிர். சிறப்புப் பேச்சாளர்தான் முதலில் பேசுவார். அவர் பேசுவதோடு கூட்டத்தில் பாதி கலைந்துவிடும். ஆனாலும், கவலைப்பட மாட்டார்கள். ஏன் இப்படி என்று கேட்டேன். முக்கியஸ்தர்களை நீண்ட நேரம் மேடையில் காக்க வைக்கக் கூடாது என்பது எங்கள் மரபு என்றார்கள். பல கூட்டங்களில் நான் கவனித்திருக்கிறேன், நான் பேசி முடித்ததும் கூட்டம் கலைந்துவிடும். அது எனக்குச் சங்கடமாக இருந்ததால், நாலு பேர் பேசிய பிறகு நான் பேசுகிறேனே என்று பேசுவேன். பேசி முடித்தவுடனே கிளம்பாமல் இன்னும் ஓரிருவர் பேசும் வரை மேடையில் அமர்ந்திருப்பேன். 

இத்தனைக்கும் எனக்கு ஒரு வார்த்தை மலையாளம் தெரியாது. தமிழில்தான் பேசுவேன். அதிலும் மலபார் பக்கமெல்லாம் யாருக்கும் ஒரு வார்த்தை தமிழ் தெரியாது. ஆனாலும், நான் பேசுவதை உன்னிப்பாகக் கேட்பார்கள். 

அது ஒரு பேருந்து நிலையக் கூட்டம். கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் என் பேச்சைக் கேட்டார்கள். இடம் இல்லாததால் பலரும் பேருந்து நிலையக் கட்டிடத்தின் மொட்டை மாடியிலும், பலர் மரக்கிளைகளிலும் அமர்ந்து அவர்களுக்குப் புரியவே புரியாத என் தமிழ்ப் பேச்சை சன்னமான குரலில்  கேட்டார்கள்; ஆனால், மலையாளிகளோ ஒவ்வொருத்தருமே நம்முடைய சீமான் மாதிரி நரம்பு புடைக்கப் பேசுவார்கள் என்பதால், ஒருமுறை கூட்டத்தை ஏற்பாடு செய்தவரிடம் கேட்டே விட்டேன். “நான் பேசுவது என்ன புரிகிறது என்று என்னை அழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள்?” 

நான் கேட்ட கேள்விக்கு நண்பர் பதில் சொன்னார். “நாங்கள் ஆவேசமாகப் பேசுவதையெல்லாம் மக்கள் கரகோஷம் எழுப்பிய அடுத்த நிமிடம் மறந்துவிடுவார்கள். ஆனால், நீங்கள் இதயத்திலிருந்து பேசுகிறீர்கள். நீங்கள் பேசுவது புரியவில்லைதான். ஆனால், எங்கள் வலியை சொஸ்தப்படுத்துகின்றன உங்கள் சொற்கள். நீங்கள் எங்கள் பலம்!”  

ஒருமுறை ‘கோகோ கோலா’வை எதிர்த்து பிளாச்சிமடாவில் தெருமுனைப் போராட்டம். போராட்டக்காரர்கள் நூறு பேர். போலீஸ் முந்நூறு பேர். நான்தான் முதல் ஆளாக நிற்கிறேன். பெரிய தடியடி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. காரணம், ஒரு பெரிய எழுத்தாளனின் மீது கை வைப்பது அவர்கள் சிந்தனையிலேயே இல்லை. “இன்று நீங்கள்தான் எங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக இருந்தீர்கள், நீங்கள் மட்டும் வந்திருக்காவிட்டால் எங்கள் மண்டை உடைந்திருக்கும்” என்றார் போராட்டக் குழுத் தலைவர். 

சாம்பவா பழங்குடியினர் சாலக்குடியில் ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். கொல்லம் அருகே உள்ள வெளிச்சிக்கலாவில் உள்ள சாம்பவா இன மக்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கே ஒரு சுரங்கத் தொழிற்சாலை வர இருப்பதை எதிர்த்து அவர்கள் நடத்திய போராட்டம் இது. அங்கே பங்கேற்றுப் பேசினேன். அது ஒரு தொடர் உண்ணாவிரதப் போராட்டம். மாறி மாறி உண்ணாவிரதம் இருந்துகொண்டே இருப்பார்கள். அது நூறாவது நாள். ஒரு ஆயிரம் ஆதிவாசிகள். மலைகளில் ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் என்னை இயக்கியதும் பேச வைத்ததும் அந்த மக்களின் போராட்ட உணர்வுதான். என்ன பேசுவது என்று ஒரு நொடிகூட யோசித்திருக்க மாட்டேன். அந்தக் கணத்தில் மடை திறந்த வெள்ளமாகக் கொட்டும். 

ஒலிபெருக்கிகூட இல்லாத இடத்தில் பழங்குடியினர் மத்தியில் பேச்சு 

சில சமயங்களில் நான் பேசி முடித்ததும் மொழிபெயர்ப்பாளரைக் கொண்டு நான் பேசியதை விளக்குவார்கள். அந்தப் பழங்குடிகள் கூட்டத்தில் அப்படித்தான் நடந்தது. ஏனென்றால், அவர்களுக்கு நகர்புறத்து மலையாளமே சற்று அந்நியமாக இருந்தது.

இது எல்லாம் இங்கே உள்ள நண்பர்களுக்கு நம்ப முடியாததாக இருக்கும். எல்லாவற்றுக்கும் புகைப்பட ஆதாரங்கள் என்னுடைய விக்கிப்பீடியா பக்கத்தில் உள்ளன. மறுநாள் தினசரிகளில் புகைப்படம் எப்படி வரும் தெரியுமா? அவ்வளவு பெரிதாகப் போடுவார்கள்!

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

என்னுடைய கூட்டங்கள் எந்த அளவுக்குப் பிரசித்திபெற்றிருந்தன என்பதற்கு ஓர் உதாரணம் தருகிறேன். இந்தியாவில் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கும் மலையாள எழுத்தாளர் பென்யாமினின் ‘ஆடு ஜீவிதம்’ நாவலில் ஓர் இடத்தில் “சுகுமார் கிரிக்கெட் மட்டையோடு வீட்டை விட்டு வெளியே வந்தபோது மழை தூற ஆரம்பித்தது” என்று வர்ணிப்பார்கள் இல்லையா, அப்படி வர்ணனையோடு வர்ணனையாக ‘தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதா போராட்டக்காரர்களின் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்’ என்று வரும்.

இதோடு நிறுத்திக்கொள்கிறேன். தயவுசெய்து இதைச் சரியான அர்த்தத்தில் புரிந்துகொள்ளும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். கேரளத்தில் அருந்ததி ராயையும் என்னையும்தான் இணையாக அழைப்பார்கள். அவர் போராட்டத்தை ஆரம்பித்து வைப்பார்; நான் முடித்து வைப்பேன் அல்லது மாறி நடக்கும். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி

சமஸ் 25 Dec 2022

ஒரு கூட்டத்தில் – திருவனந்தபுரம் – உள்துறை அமைச்சர் நான் பேசிய பிறகு பேச இருந்தார். அவர்களின் வழக்கப்படி நான் பேசியதும் கூட்டம் கலைய ஆரம்பித்தது. மந்திரியாக இருந்தாலும் எழுத்தாளருக்குத்தான் முதல் மரியாதை. ஒருமுறை முஹம்மது பஷீருக்கு ஏதோ ஒரு விருது கிடைத்தது. அந்த விருதை எடுத்துக்கொண்டு பஷீரின் கிராமத்துக்குச் சென்றார் முதல்வர். பஷீர் வீட்டின் முன்னே பஷீரை வாழ்த்துவதற்காக மக்கள் கூட்டம் வரிசையில் நிற்கிறது. முதல்வரும் அந்த வரிசையிலேயே நின்றார்.

இப்படியெல்லாம்கூட மரியாதை செய்ய வேண்டாம், எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் எழுத்தாளன் என்ற அடையாளம் கிடைத்தால்கூடப் போதும். நான் எழுத்தாளன் என்று சொன்னால் யாருக்காவது புரியுமா? “எந்த சினிமாவுக்கு சார் எழுதுறீங்க?” என்று கேட்கிறார்கள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கரை எழுத்தாளர் ஷங்கர் என்று ஒன்றுக்கு இரண்டு முறை குறிப்பிட்டார் கமல்ஹாசன். இத்தனைக்கும் உலக இலக்கியம் எல்லாம் கற்றவர் கமல். அவரே இப்படி என்றால், சாமான்ய மனிதர்கள் ஏன் அப்படிக் கேட்க மாட்டார்கள்?

தமிழ்ச் சமூகம் சினிமாவைச் சுற்றித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இலங்கைப் பிரச்சினை இங்கே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தபோது அமீர் ஏதோ பிரச்சினையாக சொல்ல அவரை சிறையில் அடைத்தது அரசு. உடனே பாரதிராஜா “அமீர் விடுதலை ஆவதற்குள் ஈழம் மலர்ந்துவிடும்” என்கிறார். தமிழ்நாட்டில் எல்லாமே ஒரு கேலிக்கூத்தாக (farse) நடந்துகொண்டிருக்கிறது. இதே போராட்டம், விவாதம் எல்லாம் ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டில் எழுத்தாளர்களை முன்வைத்து நடக்கும். கேரளத்திலும் கர்நாடகத்திலும் அப்படித்தான் நடக்கிறது. சினிமா நடிகர்கள் வெறும் கேளிக்கையாளர்கள் (entertainers). அவர்களை மையப்படுத்தித் தனது கலாச்சார அரசியலை அமைத்துக்கொள்ளும் சமூகம் உருப்பட முடியுமா?

நீங்கள் யு.ஆர்.அனந்தமூர்த்தி பற்றிக் குறிப்பிட்டீர்கள். மெத்த சரி. கன்னட சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக விளங்கியர் அவர். அவர் மறைந்தபோது கர்நாடக அரசு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டித்தது. ஒரு வாரம் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. ஒருநாள் அரசு விடுமுறை. சவ அடக்கத்துக்கு ராணுவ பீரங்கி குண்டுகளுடன் அரசு மரியாதை. இப்படி கர்நாடக மாநிலமே அனந்தமூர்த்தியின் மரணத்தைக் கொண்டாடியது. அதேபோல் தாகூரின் மரணத்தின்போது பத்திரிகைகள் என்ன எழுதின தெரியுமா? வங்காளத்தின் ரயில்கள் பேருந்துகள் எல்லாமே கல்கத்தாவை நோக்கிப் பயணித்தன என்று எழுதின. இங்கே அண்ணாவுக்கும் எம்ஜியாருக்கும் கூடிய கூட்டம் அங்கே தாகூரின் இறுதி ஊர்வலத்தில் கூடியது. இங்கே பாரதியின் இறுதி ஊர்வலத்தில் எட்டு பேர். நூறு ஆண்டுகள் சென்று அதே திருவல்லிக்கேணியில் பாரதி வசித்த அதே தெருவில் ஞானக்கூத்தனுக்கு 16 பேர். அசோகமித்திரனுக்கு 25 பேர்.

இப்படி எந்தவித அடையாளமும் இல்லாமல் வாழும் தமிழ் எழுத்தாளன் சமூக நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் எப்படி கலந்துகொள்வது? நீங்கள் குறிப்பிட்ட அனந்தமூர்த்தியையே எடுத்துக்கொள்வோம். முந்தைய தேர்தலின்போது அவர் சொன்னார்: “மோடி பிரதமரானால் நான் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன்.” இந்தச் செய்தி சென்னையில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் வந்தது. இத்தனைக்கும் அனந்தமூர்த்தி கன்னட எழுத்தாளர். அவரைவிட சிறந்த எழுத்தாளர்களான அசோகமித்திரனோ, இந்திரா பார்த்தசாரதியோ இப்படிச் சொன்னால் அது பத்திரிகையில் வருமா? வராது. ஏனென்றால், அவர்களின் பெயரே தமிழ்ச் சமூகத்துக்குத் தெரியாது. ஆனால், ஒரே ஒரு படம் இயக்கிய இயக்குநரோ, ஒரே ஒரு படத்தில் நடித்த நடிகரோ சொன்னால் அது தமிழ்ச் சமூகத்தில் ஒரு கொந்தளிப்பை உருவாக்குகிறது. இதைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் தனுஷ் ஒரு விழாவில் உளறியதை எதிர்த்து சமூக வலைத்தளங்களே பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தினமுமே ஒரு பற்றி எரியும் பிரச்சினை பற்றி, பற்றி எரியக்கூடிய கருத்துகளை என் இணையதளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதைப் பற்றி யாருக்குக் கவலை?

தமிழ்ச் சமூகம் மட்டும் இலக்கிய சுரணையுணர்வு கொண்டதாக இருந்திருந்தால் பெருமாள்முருகனுக்கு நடந்தது எனக்கு எப்போதோ நடந்திருக்கும். உதாரணமாக, நான் எழுதிய ‘காமரூப கதைகள்’ என்ற நாவல். நல்ல காலம், சமூகம் படிக்கவில்லை. நான் தப்பினேன். சவூதி அரேபியாவைப் பற்றி உலகம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறது என்று நமக்குத் தெரியும். அங்கே அப்துர்ரஹ்மான் முனிஃப் என்று ஒருவர் இருந்தார். சென்ற நூற்றாண்டின் தஸ்தயேவ்ஸ்கியோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு மகத்தான எழுத்தாளர். அவர் எழுதிய ‘சிட்டிஸ் ஆஃப் சாண்ட்’ (Cities of Sand) நாவலுக்காக அவர் சவூதியிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதைச் செய்தது அந்நாட்டு மன்னர். பின்னர் முனிஃப் சர்வதேச அளவில் பிரபலம் ஆன பிறகு மன்னர் அவரை சவூதிக்கு அழைத்தார். முனிஃப் அதை மறுத்துவிட்டார். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி

சமஸ் 29 Jan 2023

தென்னமெரிக்க நாடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 103 வயது வரை வாழ்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நிகானோர் பார்ரா சீலேயின் அதிபரைவிடப் பிரபலமானவர். அவரைச் சந்திப்பதற்காக தேதி கேட்டு மாதக்கணக்கில் காத்திருந்தார்கள் தென்னமெரிக்க அதிபர்கள். அவர் தலைகாட்டும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு அவர் ஹாலிவுட் நடிகைகள் அளவுக்குக் கட்டணம் வசூலித்தார். பாப்லோ நெரூதாவின் மூன்று வீடுகளையும் பார்த்தேன். அரண்மனையைவிடப் பெரிதாகவும், கிட்டத்தட்ட மியூசியங்களைப் போலவும் இருந்தன. ஓர் அறையில் உலகின் முதல் நீராவி எஞ்ஜின் இருந்தது. நெரூதாவுக்கு இப்படிச் சேகரிப்பது ஒரு ஷோக்காம். இதற்கெல்லாம் காசு? நெரூதா தன் வாழ்நாளெல்லாம் வெளிநாடுகளில் தூதராக இருந்தார். இல்லாதபோது நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்தார். 

நான் சீலேயில் இறங்கிய தினம் சாந்த்தியாகோவின் பிரபலமான ‘எல் மெர்க்கூரியோ’ என்ற ஸ்பானிஷ் தினசரியை வாங்கிப் படித்தேன். சீலே அதிபர் செபஸ்தியான் பிஞேராவை சீலேயின் பிரபல எழுத்தாளர் அந்தோனியோ ஸ்கார்மேத்தா சந்தித்ததை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாகப் போட்டிருந்தார்கள். இங்கே என்ன நடக்கும் சொல்லுங்கள்? ரஜினிகாந்த் நம் முதல்வரைச் சந்தித்தால் மட்டுமே அப்படி ஒரு முக்கியத்துவம் கிடைக்கும். இல்லையா?  

இவ்வளவு நேரம் நான் பேசிவந்ததெல்லாம் ஒரு சமூகத்தில் எழுத்தாளனின் இடம் என்ன என்பதைப் பற்றியது. நேருவும் தாகூரும், காந்தியும் தாகூரும் அமர்ந்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள்.  

காந்தியும் தாகூரும்

 

நேருவும் தாகூரும்

என்னதான் தாகூரைவிட நேரு 28 ஆண்டு, காந்தி 8 ஆண்டு சிறியவர்கள் என்றாலும் அந்த இரண்டு புகைப்படங்களிலும் தெரியும் உடல்மொழியைக் கவனியுங்கள். 

கேரளத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மம்முட்டி என்னைப் பார்த்தபோது ஆர்வத்தோடு வந்து பேசினார். அப்போது அவருடைய உடல்மொழி ஒரு மாணவர் ஆசிரியரிடம் பேசுவது போன்று அவர் உடல்மொழி இருந்ததை உடனிருந்த நண்பர் சுட்டிக்காட்டினார். ‘மாத்யமம்’ பத்திரிகையில் நான் எழுதிவந்த ‘தப்புத் தாளங்கள்’ தொடரைப் பற்றி என்னிடம் பேசினார் மம்மூட்டி. இங்கே என்னுடைய மண்ணில் நான்தான் சினிமா நடிகருக்கு முன்னே கைகட்டி நிற்க வேண்டும். அப்படித்தான் இருக்கிறது சமூகச் சூழல். இன்னமும் இங்கே ஒரு சினிமா பிரபலத்தைப் பார்க்க வேண்டியிருந்தால் எழுத்தாளன்தானே அவரைத் தேடிச் செல்ல வேண்டி இருக்கிறது? 

ஜெயகாந்தனைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். உண்மைதான். ஆனால், அவர் இலக்கியத்திலும் சேராமல், ஜனரஞ்சகத்திலும் சேராமல் நடுவாந்திரமாக வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதியவர். அவரை சமூகம் தனக்குத் தெரிந்த வகையில் கொண்டாடியது. ஆனால், இன்னொருவர் இருந்தார். பாரதிக்குப் பிறகு தமிழை நவீனப்படுத்தியவர்களில் அவரே முதன்மையானவர். ஆனால், பட்டினி கிடந்து செத்தார். சாகும்போது 42 வயது. சாகின்ற வயதா அது? காச நோய் வந்து அதற்கு மருந்து வாங்கவும் காசு இல்லை. நண்பரைவிட்டுக் கடிதம் எழுதச் சொல்கிறார். யாருக்கு? தமிழ்ச் சமூகத்துக்கு. “நான் தமிழுக்கு சேவை செய்திருக்கிறேன். என்னை கவனித்துக்கொள்ள வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை. எனக்கு மருந்து வாங்க நிதி தாருங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடு, என் கைப்பட எழுத எனக்குத் தெம்பு இல்லை” என்று சொல்கிறார். மறுநாளே செத்தும் போனார். பாரதிக்குப் பிறகு தமிழை நவீனப்படுத்தியவர்களில் முதன்மையான புதுமைப்பித்தனே அவர். ஜெயகாந்தன் வெகுஜன எழுத்தாளர். தலைவர்களும் சினிமா உலகத்தினரும் மக்களும் ரசித்தார்கள். மற்றபடி இலக்கியவாதிகளைத் தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மதித்ததில்லை. புதுமைப்பித்தனையும் க.நா.சு.வையும் ராஜாஜி அவமதித்த கதையெல்லாம் நிறைய இருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி

சமஸ் 05 Feb 2023

சோற்றுக்கே சிங்கியடித்துக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளன் எங்கே போய் போராடுவான் சொல்லுங்கள்? இன்றைய இளம் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் சினிமாவில் வசனம் எழுத வாய்ப்புக் கிடைத்தால் போதும், வாழ்வின் இலக்கை எட்டியாயிற்று என்று நினைக்கிறார்கள். அவர்களைக் குற்றம் சொல்ல மாட்டேன். சமூகம் அவர்களை அந்த இடத்துக்குத் தள்ளியிருக்கிறது.  

என்னிடம் சுமார் 20,000 புத்தகங்கள் உள்ளன. சொந்த வீடுகூட இல்லாமல் எல்லாவற்றையும் பொதிமாடு மாதிரி சுமந்துகொண்டே ஒவ்வொரு வீடாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். க.நா.சு. வைத்திருந்த புத்தகங்கள் இதுபோல் நான்கு மடங்கு. எல்லாமே இப்போது இருந்த இடம் தெரியவில்லை. அசோகமித்திரன் தன் நூலகத்திலிருந்த புத்தகங்களையெல்லாம் நண்பர்களிடம் கொடுத்துவிட்டார். 

ஒரு கணக்குப் போடுவோம். சமீபத்தில் ‘அன்பு: ஒரு பின்நவீனத்துவ்வாதியின் மறு சீராய்வு மனு’ என்று ஒரு நாவல் எழுதினேன். என் உயிரையும் வாழ்வையும் பணயம் வைத்து எழுதிய நாவல் என்று படிக்கின்ற யாவரும் உணர்வார்கள். ஒரே வாரத்தில் 500 பிரதிகள் விற்றது என்றாலும், காலப்போக்கில் அதிகபட்சம் 1,000 பிரதி விற்கும். அவ்வளவுதான் ஒரு நாவலின் வீச்சு. ஒரு பிரதி முந்நூறு என்றால், 30,000 ரூபாய் என்றால், அதில் எனக்கு 3,000 ரூபாய் ராயல்டி. இந்த மண் உருப்படுமா? என் உயிரின் விலை 3,000 ரூபாய். எட்டரை கோடி பேர் வாழும் தமிழ்நாட்டில் ஒரு இரண்டு லட்சம் பிரதிகளாவது விற்க வேண்டாமா? 

தமிழ்ச் சமூகம் ஒரு எழுத்தாளனை எப்படி நடத்துகிறது என்பதற்கு ஓர் உதாரணம். ஃப்ரான்சிஸ் கிருபா என்று ஒரு கவிஞர். கோயம்பேடு பக்கம் போய்க்கொண்டிருந்தபோது சாலையில் ஒரு ஆள் வலிப்பு வந்து துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் சென்று உதவுகிறார். வலிப்பு வந்த ஆள் செத்துவிட்டார். பக்கத்திலேயே காவல் நிலையம். போலீஸ் வந்து ஃப்ரான்சிஸைக் கைதுசெய்து கொலை கேஸ் பதிவுசெய்துவிட்டது. மூன்று நாள் லாக்கப்பில் இருந்த அவரை காவல் துறையில் இருந்த எழுத்தாளர் ஒருவர் முயற்சிசெய்து விடுதலை செய்தார். 

பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தில் வரும் பிச்சைக்காரக் கூட்டத்தைப் போல் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களை வீதியில் போய் போராடச் சொன்னால் அவர்கள் நிலை இப்படித்தான் ஆகும்.  

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு

சமஸ் 12 Feb 2023

மட்டுமல்லாமல் எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான் என்பது என் கட்சி. ‘அம்மா வந்தாள்’ நாவலுக்காக தி.ஜானகிராமனை அவரைச் சார்ந்தாரே ஒதுக்கினர் இல்லையா? 

மேலும், சென்ற தலைமுறை எழுத்தாளர்களின் காலத்தில்தான் சுதந்திரப் போராட்டம் அதன் தீவிர நிலையில் இருந்தது. பாரதிக்குப் பிறகு சி.சு.செல்லப்பா மட்டுமே அதுபற்றி எழுதினார். வேறு ஒருவர்கூட எழுதவில்லை. எழுத வேண்டிய அவசியமும் இல்லை என்றே நினைக்கிறேன். ஞானி தியாகராஜரின் காலத்தில் முகலாயரும் மராட்டியரும் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்கார்களும் தஞ்சை மண்ணில் சண்டையிட்டு அதை ரத்த பூமியாக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், தியாகராஜரோ ராமரின் நாமத்தை ஜெபித்தபடி தெருக்களில் உஞ்ச விருத்தி செய்து பாடிக்கொண்டு போனார். ஆனால், அவரால் சமூகத்திற்கு எந்தப் பயன்பாடும் இல்லையா என்ன? அவரால்தான் கர்னாடக இசை புத்துயிர் பெற்றது. 

இது எப்படி என்றால், பறவை தன் இயல்பாக வானில் பறந்துகொண்டிருக்கிறது. அது இட்ட எச்சத்தினால் ஒரு வனமே உருவாகிறது. அவ்வாறாக ஒரு தேசத்தின், பண்பாட்டின், கலாச்சாரத்தின், மொழியின் அடையாளமாகத் திகழ்பவன் எழுத்தாளன். அவனால்தான் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பண்பாட்டின் சீர்மை இந்த உலகத்துக்கு அறியத் தெரிந்திருக்கிறது. 2,000 அல்ல, 4,000 ஆண்டுகளாக அந்த ஒளியைத் தொடர்ந்து எடுத்துவந்துகொண்டிருப்பவன் எழுத்தாளன். 

மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகரர் சொல்கிறார்: “ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும் அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஒரு இருதய ஸ்தானம் இருக்கிறதா? இருக்கிறது. ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது; மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன; ஆங்காங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அந்த தேசத்து மகாகவிகளின் (இலக்கியக் கர்த்தாக்களின்) வாக்கே ஆதாரமாகும். ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது அந்த நாட்டு மகாகவியின் வாக்குதான்! 

தனது என்று எதையும் பிடித்துக்கொள்ளாமல் விஷயத்தை உள்ளபடி பார்த்து objective-ஆக, பேதமில்லாமல் நடுநிலையோடு, சர்வ சுதந்திரமாக, திறந்த மனதோடு உள்ளதை உள்ளபடி சொல்வான். உலகம் முழுவதையும் இப்படியே படம்பிடித்துக் காட்டுவான். அதை உலகம் எடுத்துக்கொண்டாலும் சரி, தள்ளிவிட்டாலும் சரி, அதைப் பற்றியும் இலக்கியக் கர்த்தாவுக்குக் கவலை இல்லை. பயனை எதிர்பார்க்காதவன் அவன். ஒரு விஷயம் ஒரு நாட்டின் பண்புக்கு உகந்ததுதான் என்று அறிய வேண்டுமானால் அந்தப் பிரமாண வாக்கு (authority) அந்தத் தேசத்தின் மகாகவியின் வாக்குதான்!” 

எங்கோ விஷயத்தை நீங்கள் பொதுமைப்படுத்த முற்படுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். எழுத்தாளர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதிலோ, தமிழ்ச் சமூகம் இந்த விஷயத்தில் மோசமான இடத்தில் இருக்கிறது என்பதிலோ எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், நான் வாசகர்களால் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றால், அவர்களுடைய உலகத்துக்குள் இவர்கள் இருக்க வேண்டும். ஜெயகாந்தன் போன்ற ஒருவரின் எழுத்துகள் - பேச்சுகளையும் அவருக்குக் கிடைத்த சமூக அங்கீகாரத்தையும் ‘வெகுஜன எழுத்தாளர்’ என்ற சிமிழுக்குள் அவரை அடைத்துக் கடந்துவிட முடியுமா? இதே சொற்களைக் கேரளத்தில் யாரோ ஒருவர் உங்களை நோக்கிக் குறிப்பிடலாம்தானே? தமிழ்நாட்டில் இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணக்கு; சினிமா அடைந்த பெரும் செல்வாக்கு இரண்டுமே திராவிட இயக்க எழுச்சியோடும் பிணைந்திருக்கிறது. நான் இந்த விஷயத்தில் எந்த ஒரு தரப்பையும் சார்ந்தோ, குற்றஞ்சாட்டியோ பேசவில்லை. இதில் இரு தரப்புத் தவறுகளும் பேசப்பட வேண்டும்; ஆக்கபூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். நீங்கள் முற்றுமுதலாக இந்த விஷயத்தைப் புறக்கணிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. ஞானி தியாகராஜர் தான் உண்டு; தன்னுடைய இசை உண்டு என்று செல்வதை எவரும் குறை கூற முடியாது. ஆனால், ‘என்னை ஏன் ஒட்டுமொத்த சமூகமும் கொண்டாடவில்லை?’ என்று அவர் அரற்றவும் இல்லை என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். யாரையெல்லாம் கர்நாடக இசை அறிவு எட்டியதோ, எட்டுகிறதோ அவர்கள் எல்லாம் அவரைக் கொண்டாடுவார்கள்; அவ்வளவுதானே! மேலும், நீங்கள் தமிழ் சினிமாவின் சமூகத் தாக்கத்தைத் துளியும் அங்கீகரிக்க மறுக்கிறீர்களோ என்றும் தோன்றுகிறது. எல்லாக் காலகட்டங்களின் ஏக்கங்கள் அபிலாஷைகளையும் தமிழில் சினிமாவால் மக்களிடம் கொண்டுசேர்க்க முடிந்திருக்கிறது. ஆச்சர்யமூட்டும் வகையில் அரசியலோடு சினிமா இங்கே இணைந்து பங்காற்றியும் இருக்கிறது. நாம் இதை விவாதத்துக்கு அப்பாற்பட்ட உரையாடலாக முன்னெடுத்துச் செல்வோம். சொல்லுங்கள், கேரளத்தில் இதுபோன்ற போராட்டங்களில் நீங்கள் பங்கெடுத்த காலங்களில் இதற்கு உங்கள் சக எழுத்தாள நண்பர்களிடம் எத்தகைய வரவேற்பு இருந்தது? அவர்கள் எந்த அளவுக்கு இதையெல்லாம் முக்கியத்துவத்துடன் பார்த்தார்கள்? 

(உரையாடல் தொடர்கிறது, அடுத்த வாரம்…)

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

தொடர்புடைய பேட்டிகள் 

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு
சர்தாஜிக்களின் கைகளில் இரண்டு கோப்பைகள்: சாரு பேட்டி
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

1

பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Sundararajan Lakshminarasimhan   1 year ago

எதே! 1000X300 = 30000மா? விளங்கிடும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Lakshmi narayanan   1 year ago

It's a very cordial interview

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

SUNDARAN M   1 year ago

தமிழ்ச் சமூகத்தில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதில்லை என்கின்ற இந்த வாதம் ஆண்டாண்டு காலமாக எழுத்தாளர்கள் பலரால் முன்வைக்கப்படுகிறது. அந்த வாதத்தை வைப்பவர்கள் மறக்காமல் கேரளத்தையும் கர்நாடகத்தையும் மேற்கு வங்கத்தையும் சுட்டிக் காட்டி அங்குள்ள எழுத்தாளர்களை, கலைஞர்களை அம்மக்கள் எவ்வாறு போற்றுகிறார்கள் பாருங்கள் என்பது எடுத்தாளப்பட்டு வருகிறது. ஆனால்,, அதே மாநிலங்களில் அந்த மக்களின் பிரச்சனைக்கு அந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்ன பங்கு பணியாற்றுகிறார்கள் என்பதை மிகக் கவனமாக மறைத்து விடுகிறார்கள். இதே சாரு நிவேதிதா கேரளத்தில் அத்தனை போராட்டங்களுக்கு பக்க பலமாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறார். நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டிய செயல். ஆனால் இவர் தமிழகத்தில் நடந்த பெரும்பாலும் பொது பிரச்சனையான ஸ்டெர்லைட்,, கூடங்குளம், ஜல்லிக்கட்டு போன்றவற்றில் என்ன பங்காற்றினார் என்பதையும் நம் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?. இவற்றையெல்லாம் குறிப்பிட்டால் "கலைஞர்கள் என்பவர்கள் எப்படியெனில்...." என்று கூறித் தியாகப்பிரமத்தை எடுத்துக்காட்டுக்காக இழுப்பார்கள். அப்படி எனில் தியாக பிரம்மத்தைப் போல எதிர்பார்ப்பின்றி இருக்க வேண்டும். சமூகத்தின் மதிப்பு பெற வேண்டும் எனில்..... எழுத்தாளர்கள் கலைஞர்கள் இலக்கியவாதிகள் முதலில் அம்மாநில கலைஞர்களைப் போல் பங்கு பெறுவோம் பிறகு மதிப்புகளை எதிர்பார்ப்போம் அதுதான் சரியானதாக இருக்கும். ஓஹோ அப்படி எனில் எங்களுக்கு மதிப்பு கிடைத்து விடுமா? என அவசரக் கேள்வி வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள். நல்லக்கண்ணு, சங்கரய்யா போன்றவர்களே வரிசையில் நிற்கிறார்கள். 😔

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Kumaravelan    1 year ago

சாரு அவர்களின் ஆதங்கம் நியாயம்தான். ஆனால் இன்றைய சூழலில் எந்த ஒரு பொருளுக்கும் மார்க்கெட்டிங் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது .அது எழுத்துக்கும் சேர்த்துத்தான்.நமது பெரும்பாலான எழுத்தாளர்கள் இந்த விஷயத்தில் கோட்டை விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.இந்த விஷயத்தில் அருஞ்சொல் எடுத்திருக்கும் முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. வாழ்த்துகள் .

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

BABUJI S   1 year ago

அறிவார்ந்த கேள்விகளும் சாருவின் தனது விரிவான பதில்களும் அருமை. சாருவின் பதில்கள் அவரை நன்கு அறிந்து கொள்ள ஏதுவாகின்றது. அவரைப் பற்றி நன்கு அறிந்த எனக்கு அவரைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. சமஸ் அவர்களுக்கு நன்றி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பழங்குடி மக்கள்சமூக வலைதளம்உழைப்பின் கருவிஎஸ்.சந்திரசேகர் கட்டுரைஅணைப் பாதுகாப்பு மசோதாஅரசியல் ஸ்திரமின்மைமுற்பட்ட சாதியினர்குஜராத்: பின்பற்றக் கூடாத முன்மாதிரிசாத் மொஹ்சேனிஒரு முன்னோடி முயற்சியூரிகேஸ்கோவை ஞானிவினோத் துவாசமூக உறவுடெல்லி வழக்குஅரசமைப்புச் சட்டப் பிரிவு 370கடவுளின் விரல்பால் ஆஸ்டர் கட்டுரைசிந்திக்கச் சொன்னவர் பெரியார்இரு உலகங்கள்தும்மல்ஜெர்மனி தேர்தல் முறைகா.ராஜன்மஹிந்த ராஜபக்‌ஷமண்புழு நம் தாத்தாஎல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன் அனைவரும் பொறுப்புதான்: ஆசிரியரின் எதிர்வினைஅமெரிக்க நாடளுமன்றம்சர்வதேச வர்த்தகம்காந்தியின் வர்ணாசிரம தர்மம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!