பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு
சர்தாஜிக்களின் கைகளில் இரண்டு கோப்பைகள்: சாரு பேட்டி
தமிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.
தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று எண்ணியபோது ஏன் தில்லியைத் தேர்ந்தெடுத்தீர்கள்? தில்லி மீது என்ன பிரேமை?
தமிழ்நாட்டுக்கு வெளியே வேலைவாய்ப்பு என்று யோசித்தபோது தில்லிதான் மனதுக்கு முன் வந்தது. க.நா.சுப்ரமணியம், இந்திரா பார்த்தசாரதி, கி.கஸ்தூரி ரங்கன், தி.ஜானகிராமன், ஆதவன், வெங்கட் சாமிநாதன் என்று நம் எழுத்தாளர்கள் பலர் அன்றைக்கு தில்லியில் இருந்தார்கள். எனக்கு இந்தி தெரியும் என்பது இன்னொரு சௌகரியம். இப்போது இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது என்றாலும், அப்போது இங்கிருந்து தப்பிக்க அது ஒன்றுதான் வழியாகத் தெரிந்தது.
சரி, தில்லியில் யார் முதல் அறிமுகம் ஆனார்கள்? தில்லியில் நீங்கள் பெற்ற முதல் பெரிய அனுபவம் என்ன?
தஞ்சாவூர் தோழி அனு சொன்னேன் இல்லையா, அவளுடைய இன்னொரு மாமா பையன் தில்லியில் இருந்தான். அனு அவனோடு என்னைக் கோர்த்துவிட்டாள். பட்டாபி ராமன். அவன்தான் பஹாட்கஞ்ஜ் ரயில் நிலையம் வந்து என்னை சரோஜினி நகரில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்துப் போனான். நல்ல மனுஷன்.
தில்லி பார்ப்பதற்குப் பரவசமாகத்தான் தெரிந்தது. எனக்கு அது பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய நகரமாக அப்போது தெரிந்தது. பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியை அடுத்து வறிய தோற்றத்துடனான ஒரு சின்ன கிராமம் போன்ற பகுதி இருக்கும். மனிதர்களைவிட பசுக்களும் எருமைகளும் அதிகமாக எல்லா இடங்களிலும் தென்படும். கறந்த பால் கிடைக்கும். கனாட் பிளேஸில் ஒரு மரத்தடியில் ஒரு மர நாற்காலியைப் போட்டு ஒருவர் முடிவெட்டிக் கொண்டிருப்பார். பக்கத்திலேயே ஒருவர் இன்னொருவருக்கு காது குடைந்துகொண்டிருப்பார். கடும் ஜனநெருக்கடி மிகுந்த ஒரு வீதியில் பிரம்மாண்டமான ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார் திணறியபடி நகர்ந்துகொண்டிருக்கும். எனக்கு எல்லாம் வேடிக்கையாக இருந்தன.
பட்டாபி வீட்டில் முதல் நாள் சாப்பிடும்போது, “நீங்களும் சாப்பிட வாங்களேன்” என்று பட்டாபியின் தந்தையை அழைத்தேன்; “நீங்கள்லாம் சாப்பிடுங்கோ, நான் ஷூத்ராளோடு சாப்பிட மாட்டேன், கடைசியா சாப்பிட்டுக்கிறேன்” என்று வெகு சகஜமாக அவர் சொன்னார். தில்லி கொடுத்த முதல் அதிர்ச்சி அதுதான். தமிழ்நாட்டில் அதுநாள் வரை சாதிரீதியாக இப்படி ஒரு தாக்குதலுக்கு நான் ஆளானது இல்லை. தில்லியின் உள்பண்பாக அதை நான் பின்னர் புரிந்துகொண்டேன். இதில் எந்த லஜ்ஜையும் அவர்களுக்கு இருந்ததில்லை. ரொம்ப இயல்பாகவே இருக்கும். பட்டாபி வீட்டார் மற்றபடி நல்லவர்கள். அடுத்த ஒரே மாதத்தில் பட்டாபி எனக்கு ஒரு கட்வாலி வீட்டில் அறை பிடித்துக்கொடுத்தார்.
தில்லியில் நீங்கள் பொது விநியோகத் துறையில் போய் அமர்கிறீர்கள். அங்கே உங்கள் வேலை என்ன?
அது படு லோக்கலான துறை. ஏனென்றால், அப்போது தில்லிக்கு மாநில அந்தஸ்தெல்லாம் வந்திருக்கவில்லை. இங்கே தமிழ்நாட்டின் சிறைத் துறையைக் கொடூரமான சித்ரவதைக் கூடம் என்று சொன்னால், தில்லியின் சிவில் சப்ளைஸ் துறையை சொர்க்கம் என்று சொல்லிவிடலாம். எனக்கு அப்போது அப்படித்தான் இருந்தது.
வேலை என்னவோ ஸ்டெனோ வேலை என்றாலும், தாதா மாதிரித்தான் வாழ்ந்தேன். ஒரே அலுவலகத்தில் பத்தாண்டுக் காலம் இருந்திருக்கிறேன் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். ரேஷன் அட்டை கொடுக்கும் வேலைக்கு அன்றைக்கு அவ்வளவு மரியாதை.
தில்லியில் என்னுடைய நண்பர்கள் அத்தனை பேருக்கும் ரேஷன் அட்டை வழங்கியிருக்கிறேன்; சிபிஐயில் வேலை பார்த்த வெங்கட் சாமிநாதனுக்கு உட்பட. உள்துறை அலுவலகத்தில் பாதுகாவலர்கள் எனக்கு சல்யூட் அடித்து உள்ளே விடுவார்கள். ஏனென்றால், கே.பெண்ணேஸ்வரனுக்கு உள்துறையில்தான் பணி. அவர் என் நெருக்கமான நண்பர். அவர் மூலமாக அங்கே உள்ள நண்பர்களுக்கெல்லாம் ரேஷன் அட்டை.
ஏற்றுமதி இறக்குமதித் துறையிலிருந்து திடீரென்று கபூர் என்ற டெபுடி செக்ரடரி என்னை அழைப்பார். தொலைபேசியை எடுக்கும் காமினி கண்கள் அகன்று விரிய என்னிடம் கொடுப்பாள். நான் பேசி முடித்ததும் “டெபுடி செக்ரடரியையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் ரவிஜி?” என்று ஆச்சரியப்படுவாள். எல்லாம் ரேஷன் அட்டை செய்யும் மாயம். கபூரின் டிரைவருக்கோ, சமையல்காரருக்கோ, மனைவியின் உறவினர்களுக்கோ ரேஷன் அட்டை தேவைப்படும். “நான் உன்னிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டே இருக்கிறேன், நீ என்னிடமிருந்து எதுவுமே கேட்பதில்லை. நான் வேலை செய்யும் துறையின் முக்கியத்துவமாவது உனக்குத் தெரியுமா ரவி?” என்று அடிக்கடி கேட்பார் கபூர்.
மாதம் ஒரு ரேஷன் அட்டையாவது கபூருக்குத் தேவைப்படும். பிரதிபலனாக என்ன கேட்பேன் தெரியுமா? எப்போதாவது சிரி ஃபோர்ட் ஆடிட்டோரியத்தில் நடக்கும் கலை விழாக்களுக்கான அழைப்பிதழ்! அதேபோல், இன்னொருத்தர் கல்வித் துறையில் ஒரு ஜாயின்ட் செக்ரட்டரி. அவரது வரவேற்பறையில் நாலைந்து தலைகள் தென்படும். அதெல்லாம் யார் தெரியுமா என்று கேட்பார். எல்லாம் பெரும் பெரும் மருத்துவக் கல்லூரிகளின் முதலாளிகள். அவரும் நானும் பிரகதி மைதானில் போய் சங்கீதக் கச்சேரி கேட்போம். இந்தியன் காபி ஹவுஸில் காபி குடிப்போம். அதோடு சரி. அவர் ஒரு காந்தியர்!
நம்மூர் எழுத்தாளர்களையெல்லாம் அடிக்கடி பார்க்கலாம் என்ற எண்ணம்தான் தில்லி செல்வதற்கு உத்வேகமாக இருந்தது என்றாலும், அவர்களுடனான சந்திப்பைவிடவும் அங்கே எனக்கு இப்படி அறிமுகமான கலாச்சார இடங்கள்தான் என் இலக்கிய வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன. வெங்கட் சாமிநாதன் வழியே எனக்கு அறிமுகமான மண்டி ஹவுஸ்தான் என்னை உருவாக்கிய களம் என்று சொல்வேன். உலக சினிமா, உலக இசை, நாடகம், நாட்டியம், ஓவியம் என்று பெரிய கலாச்சார இயக்கமே மண்டி ஹவுஸ் வழியாக அறிமுகம் ஆயிற்று.
இலக்கியம் நோக்கி நகர்வதற்குள் அன்றைய பொது விநியோகத் துறை தொடர்பில் இன்னும் கொஞ்சம் பேசிவிடுவோம். அரசில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களே உங்களிடம் ரேஷன் அட்டை வழியே அறிமுகம் ஆகிறார்கள் என்றால், அன்றைக்கு ரேஷன் அட்டையின் முக்கியத்துவம் என்னவாக இருந்தது?
ரேஷன் அட்டைதானே அன்றைக்கு ஒரே உள்நாட்டு பாஸ்போர்ட்? வேறு எந்த அடையாள அட்டை சாமானிய மக்களிடம் இருந்தது? ரேஷன் அட்டைக்கு அப்போது ஏகக் கிராக்கி. அதை வாங்குவதற்கு அத்தனை பிரச்சினைகள் இருந்தன. உதாரணமாக, நீங்கள் ஒரே இடத்தில் ஐந்து ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும். அதற்கான ரசீது வேண்டும். இந்தியாவில் எத்தனை வாடகை வீட்டுக்காரர்கள் ரசீது கொடுப்பார்கள்? ஆனால், என் இன்ஸ்பெக்டர் ஒரு கையெழுத்து போட்டால் ரேஷன் அட்டை கிடைத்துவிடும். சென்னையில் உள்ள பல நண்பர்களுக்குக்கூட தில்லியிலிருந்து ரேஷன் அட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
சென்னையில் இருப்பவர்களுக்கு எப்படி தில்லியிலிருந்து அட்டை வாங்கிக் கொடுப்பீர்கள்?
இந்தியா முழுவதும் ஒரு வழமை இருந்தது. உங்கள் ரேஷன் அட்டையை உங்கள் பகுதியில் சமர்ப்பித்துவிட்டால் சரண்டர் சர்ட்டிஃபிகேட் தருவார்கள். அதை நீங்கள் இந்தியாவில் எங்கே கொடுத்தாலும் உங்களுக்கான ரேஷன் அட்டை எந்தத் தடங்கலும் இல்லாமல் கிடைக்கும். இப்போது உங்களுக்கு சென்னையில் ஒரு ரேஷன் அட்டை வேண்டும். அங்கே கிடைப்பது கஷ்டம் என்று வைத்துக்கொள்ளுங்கள்; நான் தில்லியிலிருந்து என் இன்ஸ்பெக்டர் மூலம் ஒரு சரண்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கி உங்களுக்கு அனுப்புவேன். உங்களுக்குப் புது ரேஷன் அட்டை தயார்.
உங்களுக்குள் இருந்த எழுத்தாளரை டெல்லிதான் வளர்த்தெடுத்தது என்று குறிப்பிட்டீர்கள். நாம் அது நோக்கி நகரலாம். தில்லியில் ஒரு படைப்பாளி வாழ்வதானது ஒரே சமயத்தில் முக்காலங்களுக்கும் இடையில் ஊசலாடுவதற்குச் சமானம். தில்லியின் வரலாறு உங்களை என்ன ஆக்கியது என்று கருதுகிறீர்கள்?
தில்லி அரிதான பல அனுபவங்களைத் தந்தது. மிகப் பெரியதான தில்லி நகரத்தின் நான்கு எல்லைகளிலும் வாழ்ந்திருக்கிறேன். தில்லியைப் பூர்விகமாகக் கொண்ட ஒருவர்கூட அப்படி நான்கு பகுதிகளிலும் வாழ்ந்திருப்பரா என்று எனக்குத் தெரியவில்லை. யமுனை நதியைக் கடந்ததும் வரும் கிழக்கு தில்லிக்கும் அரசு அலுவலர்கள் வசிக்கும் தெற்கு தில்லிக்கும் சம்பந்தம் இருக்காது. அதேபோல் ஜனக் புரி போன்ற மேற்கு தில்லி பகுதிக்கும் அலிப்பூர் போன்ற வடக்கு தில்லி பகுதிக்கும் துளிக்கூட சம்பந்தம் இருக்காது. நான் இங்கேயெல்லாம் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறேன்.
நான் கிழக்கு தில்லியில் உள்ள மயூர் விஹாரில் வசித்தபோதுதான் அதற்கு நேர் எதிரே இருந்த திர்லோக்புரி இருபத்தேழாவது ப்ளாக்கில் இருந்த குருத்வாராவில் வைத்து 2,000 சீக்கிய ஆண்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். கொளுத்தப்பட்டவர்களில் ஒரு பெண்கூட இல்லை என்பது சமூகவியல் ஆய்வுக்குரிய விஷயம். அந்தத் துர்சம்பவத்தை நான் நேரில் பார்க்க நேர்ந்தது.
நீங்கள் வரலாறு பற்றிக் கேட்டீர்கள். தில்லியின் வரலாறு வன்முறையோடுதான் எனக்கு மனதில் பதிந்திருக்கிறது. டெல்லி போன்று சபிக்கப்பட்ட நகரம் இந்த உலகில் எதுவும் இல்லை என்றுகூட நினைக்கிறேன். வரலாறு நெடுகிலும் தில்லியில் மனிதப் படுகொலைகள் தொடர்கின்றன. 17 டிசம்பர் 1398 அன்று தில்லியில் நுழைந்த தைமூரின் ராணுவம் ஒரு லட்சம் இந்துக்களைக் கொன்றது (என்னுடைய ‘ஔரங்ஸேப்’ நாவலில் அதுபற்றிய விவரம் விரிவாக இருக்கிறது). 1739இல் பர்ஷிய மன்னன் நாதிர் ஷா தில்லி நோக்கிப் படையெடுத்து வந்தான். 30,000 தில்லிவாசிகள் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் சிப்பாய்கள் அல்ல. தில்லியில் வசித்த பொதுமக்கள். ஆண் பெண் குழந்தை என்ற பேதமில்லாமல் எல்லோரையும் கொன்று குவித்தான் நாதிர் ஷா. இதோ நம் காலத்திலும் வன்முறைகளைப் பார்க்கிறோம். தில்லி மண்ணில் அப்பாவிகளின் குருதி தோய்ந்திருக்கிறது. தில்லி காற்றில் அந்த அப்பாவிகளின் அலறல் நிரம்பியிருக்கிறது.
இன்று திரும்பிப் பார்க்கும்போது நான் எல்லாவற்றுக்கும் மத்தியில் எல்லாவற்றிலிருந்தும் எடுத்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். எந்த நகரத்தைவிடவும் தில்லிதான் என் எழுத்துக்கு அதிகம் கொடுத்திருக்கிறது.
டெல்லியின் பண்பாட்டுச் சூழல் அன்றைக்கு எப்படி இருந்தது? உங்களுடைய அன்றாடம் எப்படி இருந்தது?
காலை நேரத்தில் வாசிக்க முடியாது. அலுவலகம் கிளம்ப வேண்டும். மாலையில் கொஞ்ச நேரம் வாசிக்கக் கிடைக்கும். அலுவலகத்திலேயே அல்லது சென்ட்ரல் செக்ரடேரியட் நூலகம் சென்று வாசிப்பேன். அப்புறம் ஆறு மணிக்கு மேல் நண்பர்களுடன் கூடுகை. நான், வெங்கட் சாமிநாதன், செ.ரவீந்திரன். மண்டி ஹவுஸில் ஒருநாள் கூபாவிலிருந்து வரும் நவீன நாடகம் அல்லது நவீன நடன நிகழ்ச்சி. மறுநாள் ருஷ்யாவின் பிரபலமான பாலே நிகழ்ச்சி. மறுநாள், ஹங்கேரிய மையத்தில் சினிமா அல்லது மாக்ஸ் ம்யுல்லர் பவனில் சினிமா. மறுநாள் இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் கூட்டம் அல்லது ப்ரகதி மைதானில் உள்ள காதம்பரி தியேட்டரில் டாகர் சகோதரர்களின் த்ருபத் இசை.
இப்படியே வாரம் ஐந்து நாளும் ஏதாவது கலை நிகழ்ச்சிகள் இருந்துகொண்டே இருக்கும். இரவில் வாசிப்பு – எழுத்து. சனிக்கிழமை கரோல் பாக் அஜ்மல் கான் சாலையில் உள்ள செ.ரவீந்திரனின் வீட்டில் மதுபான சந்திப்பு. மாலை ஏழு மணிக்கு சந்தித்தால் நள்ளிரவு வரை பேச்சு ஓடும். பிறகு இரவு பஸ் பிடித்து வீடு போய்ச் சேர்வோம். ஞாயிறு மட்டுமே வீடு தங்கல். கோடை காலத்தில் கலாச்சார நடவடிக்கைகள் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
நான் தில்லியில் இருந்த பத்து ஆண்டுகளும் மதிய உணவு எங்கள் அலுவலகத்தில் இருந்த டோக்ராவின் கேன்டீனில்தான் சாப்பிட்டேன். தந்தூரி ரொட்டியும் தொட்டுக்கொள்ள ஏதாவது சப்ஜி அல்லது கறிக் குழம்பு இருக்கும். காலை உணவுக்கு இந்திர பிரஸ்தா கல்லூரிக்கு அருகே இருந்த சந்தன் சிங் டீக்கடைக்குச் சென்றுவிடுவேன். வெண்ணெய் தடவப்பட்ட பிரெட் டோஸ்ட்டும் தொட்டுக்கொள்ள கொண்டக்கடலைக் கறியும் அங்கே பிரசித்தம். இரவு உணவு ரசம் சாதம். ஆக மொத்தத்தில் தில்லியில் நான் சமைக்கச் செலவிட்ட நேரம் மிகக் குறைவு.
சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்… தில்லியில் நான் மது விடுதிக்கே சென்றது இல்லை. ரவீந்திரன் வீட்டிலும் தூதரகங்களிலும் எனக்கான மது கிடைத்துக்கொண்டிருந்தது. அக்காலத்தில் தூதரகங்களில் சினிமா முடிந்த பிறகு மது வெள்ளமாக ஓடும். சில சர்தார்ஜீக்கள் இரண்டு கையிலும் இரண்டு கோப்பைகளை வைத்திருப்பார்கள். அந்தக் காட்சியே நமக்குப் பல கதைகளைச் சொல்லும். “எவ்வளவு கேட்டாலும்தான் கொடுக்கிறார்களே சர்தார்ஜீ!” என்று கேட்டால், “ஒன்று முடிந்ததும் இன்னொன்றுக்காக அலைய வேண்டாம் இல்லையா பாபுஜீ!” என்பார்கள். இப்போதெல்லாம் அந்தத் தூதரகங்களில் சமோசாவும் டீயும் கொடுக்கிறார்களாம். இந்தியாவுக்கு வந்தால் ஐரோப்பியரும் இந்தியராகிவிடுகிறார்கள்!
தில்லியின் வெப்பமும் குளிரும் வெளியாட்களைப் பிளக்க வல்லவை. நீங்கள் தில்லியை வெப்பத்தோடு இணைத்துப் பார்க்கிறீர்களா, குளிரோடு இணைத்துப் பார்க்கிறீர்களா?
சந்தேகமே இல்லாமல் குளிரோடுதான் இணைத்துப் பார்ப்பேன். சொல்லப்போனால், தில்லியில்தான் பனி அவ்வளவு நெருக்கமாக நான் உள்வாங்கினேன். நான் ஏன் எந்த நிலத்துக்கும், எந்தக் கலாச்சாரத்துக்கும் சொந்தம் இல்லாத, காற்றில் அலையும் சிறகுபோல் வாழ்வதற்கும் எழுதுவதற்குமான சிந்தையிலேயே திரிகிறேன் என்பதற்கான பதிலையும்கூட ஒரு பனி இரவில்தான் உணர்ந்தேன்.
ஒரு குளிர்கால இரவில் ரவீந்திரன் வீட்டில் முதல் முதலாக ருஷ்ய பானமான வோட்கா அறிமுகம் ஆனது. நள்ளிரவில் அஜ்மல்கான் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென்று மண்டியிட்டு அமர்ந்து “தஸ்தயேவ்ஸ்கியையும் வோட்காவையும் கொடுத்த ருஷ்யாவுக்கு வந்தனம்” என்று சொல்லிக்கொண்டே அந்த மண்ணை முத்தமிட்டபடியே இருந்திருக்கிறேன். யாராலும் என்னை எழுப்ப முடியவில்லை என்று சொன்னார்கள். அந்தப் பனியும் குளிரும் வோட்காவும் தில்லியை எனக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆக்கிவிட்டிருக்கின்றன. கூரிய இடத்துக்குப் பனி நம்மைக் கூட்டிச்சென்றுவிடும்.
தில்லியை இவ்வளவு சிலாகித்துப் பேசக்கூட அங்குள்ள சமூகக் கூடுகையுணர்வுதான் காரணமாக இருக்கக் கூடும் என்று எண்ணுகிறேன். எந்த இடத்திலும் நான் அந்நியன்தான். உண்மையிலேயே அலைந்து திரிபவனின் மனோபாவத்திலேயே வாழ்கிறேன்; மூன்றே மூன்று இடங்களைத் தவிர; என் நூலக அறை, மதுபான நடன விடுதி, பயணம்; இந்த மூன்றும் மட்டுமே என்னை இயல்பானவனாக உணர வைக்கின்றன. இதைத் தில்லியில் இருக்கும்போதுதான் ஆழமாக உணர்ந்தேன்.
வெயில், பனி, மழை… இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் பிரத்யேகமான ஓர் உலகுக்குக் கொண்டுசெல்லக் கூடியவை. உங்களுடைய பனிக் கால அனுபவங்களைப் பேசலாமா?
(அடுத்த வாரம் பேசுவோம்…)
தொடர்புடைய கட்டுரைகள்
கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு

2

1





பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Bhu 2 years ago
Charu is the only person who can transcend you to any place or event with his simple and captivating words .
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.