பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

அதிசாகச நாவலுக்கானது கருணாநிதியின் வாழ்க்கை: சாரு

சமஸ்
02 Apr 2023, 5:00 am
1

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

இலக்கியம் என்பது மெய்யான உலகைச் சார்ந்திருந்தாலும், அது மெய்யான உலகத்தைக் கடந்து இயங்குவதாலும் கால வெளிக்கு உட்பட்டு இருக்க வேண்டி இருப்பதாலும், பொதுவாக நாம் பேசுவதுபோலப் பல வகைமையாக இலக்கியத்தைப் பிரிக்க முடியுமா? அல்லது அவை வெறும் உத்திதானா? அதேபோல, வாழும்போது சிந்தனை கிடையாது; சிந்திக்கும்போது வாழ்வது கிடையாது என்கிறார்களே, நீங்கள் வாழ்வதாகவும் சொல்லிக்கொள்கிறீர்கள்; சிந்திப்பதாகவும் சொல்லிக்கொள்கிறீர்கள். எனில், உங்கள் அனுபவத்தில் இவை இரண்டுக்குமான உறவு என்ன?

நம்முடைய நேர்காணல் மிகவும் சுவாரஸ்யமாகத்தானே சென்றுகொண்டிருந்தது; ஏன் இலக்கியம் என்றதும் இப்படித் தடை ஓட்டம் மாதிரி தடுமாற்றம் கண்டுவிட்டது சமஸ்? பொதுவாக இம்மாதிரி கேள்விகளை என்னை மேடையில் வைத்துக் கேட்டால் கேள்வி புரியவில்லை என்று சொல்லித் தப்பிவிடுவேன். சமீபத்தில் கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விழாவில் என்னிடம் இப்படியான கேள்விகள் கேட்கப்பட்டபோதும், ‘கேள்வி புரியவில்லை’ என்று சொல்லித்தான் தப்பினேன். ஆனால், எழுத்து என்பது என்னுடைய ‘இடம்’. வேறு வழியில்லை. புகுந்து விளாச வேண்டியதுதான்! 

இம்மாதிரி கேள்விகளெல்லாம் ‘மணல் மகுடி’, ‘கல்குதிரை’  கோஷ்டிகளிடம் கேட்கப்பட வேண்டியவை. ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளனான என்னிடம் இல்லை. இப்படி நான் சொல்வதற்குப் பின் பெரிய இலக்கிய வரலாறு இருக்கிறது. சுருக்கமாகச் சொல்கிறேன். 

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, க.நா.சு., கு.ப.ராஜகோபாலன், எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ், ஆதவன், அசோகமித்திரன் என்று நான் பெரிதும் மதிக்கும் பெரிய பட்டாளமே இருக்கிறது. ஆனால் அவர்கள் எவராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை சுந்தர ராமசாமி செய்தார். அதுதான் போலியான ஒரு சிந்தனைப் பள்ளியை – ஸாரி, எழுத்துப் பாணியை உருவாக்கியது. அந்தப் பாணி சு.ரா.வின் காலத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. முடித்து வைத்தது அடியேன்தான். அதற்காக நான் ‘ஒன் மேன் ஆர்மி’யாகச் செயல்பட வேண்டியிருந்தது. உதாரணமாக, ‘ஜேஜே: சில குறிப்புகள்’ நாவலை தமிழ் இலக்கிய உலகமே கொண்டாடிக்கொண்டிருந்த போது நான் மட்டுமே ”அது ஒரு போலியான நாவல்” என்று நீண்ட கட்டுரை எழுதினேன். அதை இலக்கிய வெளிவட்டம், படிகள் உட்பட என்னை ஆதரித்த இலக்கியச் சிறுபத்திரிகைகளே வெளியிடவில்லை. அதனால் அப்போது தில்லியில் இருந்த நான் கரோல்பாகில் கல்யாணப் பத்திரிகை அடிக்கும் ஒரு குடிசை மாதிரியான டிரெடில் பிரஸ்ஸிலிருந்து அந்தக் கட்டுரையை சிறு நூலாகக் கொண்டுவந்தேன். அதுவே என் இலக்கிய உலகின் நல்வாழ்வுக்கு நான் போட்டுக்கொண்ட சமாதிக் கல்லும் ஆயிற்று. ஆம், தமிழ் இலக்கியவாதிகளின் வழிபாட்டு பிம்பத்தை நான் பிறந்த உடனேயே அடித்து உடைத்தேன் (என் முதல் புத்தகமே அந்த விமர்சனம்தான்!) பிறகு என்னை வாழ வைப்பார்களா? இன்னமும், இப்போதும் அதன் விளைவை நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். 

அது போகட்டும். ‘காட்ஃபாதர்’ மாதிரியான மாஃபியா படங்களில் பார்த்திருப்பீர்கள். ஒரு தாதா இன்னொரு தாதா கூட்டத்தை அழிப்பதற்காக அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பச்சிளம் சிசுவைக்கூட கொன்று போடுவான். அந்த மாதிரி நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக சுந்தர ராமசாமி தொடங்கி வைத்த போலியான சிந்தனை மரபைக் காலி பண்ணிக்கொண்டே வந்தேன். தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்று நான் கிண்டல் செய்ததெல்லாம் அந்தப் போலிச் சிந்தனையைத்தான். ஆனால் இப்போதுதான் தெரிகிறது, எங்கேயோ ஒரு சிசு உயிரோடு இருந்திருக்கிறது. அதுதான் இப்படியான கேள்விகளைக் கேட்டிருக்கிறது! 

நாற்பது ஆண்டு காலமாக இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எதிராக நான் எழுதிவருகிறேன். உதாரணமாக, ‘மெதூஸாவின் மதுக்கோப்பை’ என்ற என்னுடைய ஒரே ஒரு சிறிய நூலை உங்கள் முன்வைக்கிறேன். ஒட்டு மொத்த ஃப்ரெஞ்ச் சிந்தனையையே அந்த நூலில் நீங்கள் காணலாம். பாடப்புத்தகம் மாதிரி அல்ல, இந்தியச் சூழலில் – முக்கியமாக காந்தியை முன்வைத்து – அதை எழுதியிருக்கிறேன். அந்த நூலில் ‘மெய்யான உலகம்’ என்பது போன்ற இம்மாதிரியான கேள்விகளே போலியானவை என்று நிறுவியிருக்கிறேன்.  

காரணம், எதார்த்தமோ, தத்துவமோ, வாழ்வியலோ எதுவுமே மெய் பொய் என்ற இரட்டை எதிர்வுகளால் கட்டமைக்கப்பட்டதல்ல. சிலந்தி வலையைப் போல் எண்ணற்ற நுண்மைத் திசுக்களால் உருவானது நம் மொழியும் சிந்தனையும். மானுடவியலின் ஆரம்ப நூலைப் படித்தாலே இம்மாதிரியான கேள்விகள் அடிபட்டுப் போய்விடும். 

அதேபோல் அடுத்த கேள்விக்கு வருவோம். “வாழும்போது சிந்தனை கிடையாது; சிந்திக்கும்போது வாழ்வது கிடையாது” என்று யார் சொன்னது? இளையராஜாவா? அவர்தானே ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து உனக்கு அறிவு இருக்கிறதா என்று கேட்டு, பத்திரிகையாளர் அறிவு இருக்கிறது என்று சொன்னதும், எந்த அறிவை வைத்து உனக்கு அறிவு இருக்கிறது என்று கண்டு பிடித்தாய் என்று கேட்டார்? மேலும், இப்படிச் சொன்னவர் “வாழும் போது சொன்னாரா? சிந்திக்கும் போது சொன்னாரா?” என்ற கேள்வியும் எழுகிறது. 

படம்: பிரபு காளிதாஸ்

எப்படி திடீர் என்று வரலாறு நோக்கிச் சென்றீர்கள்? ஏன் அது அவசியம் ஆனது? வரலாற்றில் எவ்வளவோ பேர் இருக்க ஔரங்ஸேப்பைக் கையில் எடுக்கக் காரணம் என்ன?  மேலும், சமகாலத்தைப் பேச கடந்த காலத்தில் நுழைய வேண்டியிருப்பதன் நிர்ப்பந்தம் என்ன? அதில் உள்ள வசதியும் சங்கடமும் என்ன?

புனைவில் நான் வரலாற்றை நோக்கிச் சென்றதன் காரணம், திடீரென்று என் மீது புகழ் வெளிச்சம் பட ஆரம்பித்துவிட்டதுதான். அது என் எழுத்துச் சுதந்திரத்தை முழுமையாகப் பறித்துவிட்டது. இனிமேல் என்னால் என்னை வைத்து ஆட்டோஃபிக்‌ஷன் நாவல்களை எழுத முடியாது. நான் எல்லோருக்கும் தெரிந்தவனாகிவிட்டேன். என் குடும்பத்தினர் என் எழுத்தைப் படிக்காவிட்டாலும் அறிந்தவர் தெரிந்தவரெல்லாம் படித்து அதுபற்றிக் குடும்பத்தில் போட்டுக்கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. நானோ திருவள்ளுவரின் அறத்துப் பால் மாதிரியெல்லாம் எழுதுபவன் அல்ல. நான் எழுதுவது ட்ரான்ஸ்கிரெஸிவ் எழுத்து. அதை இலக்கியம் தெரியாதவர்கள் படித்தால் ஆபத்து. அதனால்தான் வரலாற்றை நோக்கிச் சென்றேன். 

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

டி20, ரீல்ஸ் மாதிரி எழுத்திலும் வரும்: சாரு

சமஸ் 26 Mar 2023

எல்லோருக்கும் பிடித்த மாதிரி தியாகராஜரின் வாழ்வைத்தான் எழுதத் தொடங்கினேன். அங்கே பார்த்தால் மராட்டிய மன்னர்களைப் பற்றி எழுத வேண்டியிருந்தது. அங்கே பார்த்தால் சிவாஜி குறுக்கிட்டார். சிவாஜியைப் படிக்கும்போது ஔரங்ஸேப் வராமல் இருப்பாரா? அப்போதுதான் ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஔரங்ஸேபின் கடிதங்கள் படிக்கக் கிடைத்தன. அதைப் படித்தபோது பல இடங்களில் ஔரங்ஸேபை என்னோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள நேர்ந்தது. 

நானோ வாழ்வைக் கொண்டாடும் ஹெடோனிஸ்ட். ஔரங்ஸேபோ ஒழுக்கவாதி. ஹெடோனிஸத்துக்கு எதிரானவர். அப்படிப்பட்ட ஒருவரிடம் நான் எப்படி என்னைக் கண்டேன்? 

காரணம், ஔரங்ஸேப் எல்லோராலும் வெறுக்கப்பட்டவர். ஆனால் மக்களை நேசித்தவர். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று பாடுபட்டவர். அதனால்தான் பலராலும் வெறுக்கப்படும் நான் ஔரங்ஸேபை என் பிம்பமாகக் கண்டேன். சென்ற ஆண்டுகூட ஒரு இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர் என்னைத் திருடன் என்று எழுதியிருந்தார். ஜெயமோகனும் பலரால் திட்டப்படுகிறார் என்றாலும் என் மீதான வசை மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. 

ஔரங்ஸேப்பைப் பற்றி உலக வரலாற்றை நன்கு கற்றறிந்த நேருவே தவறாக எழுதியிருக்கிறார். இங்கே உள்ளவர்களுக்கு ஒரு வில்லன் தேவைப்படுகிறார். ஒரு ஹீரோவும் தேவைப்படுகிறார். ஹீரோவுக்கு வில்லனையும் வில்லனுக்கு ஹீரோவையும் எடுத்துக் கொள்கிறார்கள். உண்மையில் வரலாற்றில் அசோகனும் ஷாஜஹானும்தான் வில்லனுக்கான தகுதி கொண்டவர்கள். 

இதுதான் ஔரங்ஸேபை நான் தேர்ந்தெடுத்ததன் காரணம். இன்னும் சொல்லப்போனால், கருணாநிதியை வைத்துக்கூட ஒரு நாவல் எழுத வேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை உண்டு. (என் நண்பர் ஆலன் ஸீலி ஹீரோ என்ற பெயரில் எம்ஜிஆரை வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.) 

ஓர் அதிசாகச நாவலுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் நிறைந்தது கருணாநிதியின் வாழ்க்கை. பல ஆண்டுகள் தமிழ்நாட்டு அரசியலை நிர்ணயிக்கும் இடத்தில் இருந்தவர் என்றாலும் பலராலும் வெறுக்கப்பட்டராகவும் இருந்தார் கருணாநிதி. அவருடைய கட்சிக்காரர்கள் அவரைக் கடவுள் ஸ்தானத்தில் வைத்திருந்தாலும் அவரை ‘அன்புடன்’ திட்டுவதையும் பார்த்திருக்கிறேன். அது தவிர, ஓர் இனமே கூட்டமாகச் சேர்ந்து அவரை வெறுத்தது. உங்களுக்கு அவர் கொடுத்த இறுதிப் பேட்டியில்கூட அவர் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் இல்லையா? அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்த என் மாமனார் என்னை எங்கே கண்டாலும் நிற்க வைத்து அரை மணி நேரம் கருணாநிதியைத் திட்டுவார்.  

என்னுடைய 35 ஆண்டு கால நண்பர் ஒருவர் – அவரும் அய்யங்கார் – கருணாநிதியைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் “ஒங்க ஆளு…” என்றே ஆரம்பிப்பார். ஒருநாள் மிகவும் கோபப்பட்டு “இனிமேல் அவரை இப்படிப் பேசினால் உம்மை அடித்துவிடுவேன்” என்று சொன்ன பிறகுதான் நிறுத்தினார். எம்ஜிஆரை அப்படி யாரும் வெறுப்பாகப் பேசி நான் கண்டதில்லை. இத்தனைக்கும் ஜெயலலிதாதான் ஜகத்குரு என்று அழைக்கப்பட்ட சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்தார். அதுவும் கொலைக் குற்றம்! அப்படியும் பிராமணர்கள் ஜெயலலிதாவை வெறுக்கவில்லை. கருணாநிதி மீதுதான் வெறுப்பை உமிழ்ந்தார்கள். 

அதனால்தான் கருணாநிதியைப் பற்றி நாவல் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனாலும் தமிழ்ச் சூழல் என்னை அதற்கு அனுமதிக்காது. ஏதாவது ஓர் ஐரோப்பிய நாட்டில் நான் வாழ நேர்ந்தால் அது சாத்தியமாகலாம். 

நான்தான் ஔரங்ஸேப் நாவலில் உங்களைக் கட்டியங்காரராக வைத்துக்கொள்கிறீர்கள். வரலாற்றை சமகாலத்துக்கு இப்படிக் கட்டி இழுக்கும்போது, அந்த உறவு எப்படி இருந்தது? வரலாற்று / புராணப் பாத்திரங்களைக் கட்டியக்காரன் உடைப்பதுபோல் உங்கள் படைப்பைப் பார்த்துக்கொள்ளும் எண்ணம் எப்படி உருவானது?  

உண்மையில் பார்க்கப் போனால் எனக்குக் கடந்த காலம், நிகழ் காலம் என்ற இரண்டுக்குமே வித்தியாசம் தெரியவில்லை. நான் ஒரு பறவையைப் போல் பறந்துகொண்டிருப்பவன். எனக்கென்று ஒரு தேசம் கிடையாது. மொழி கிடையாது. மதம் கிடையாது. ஆனால் பறவைகளால்தான் விருட்சங்களும் வனங்களும் உருவாகின்றன என்பதுபோல்தான் எழுத்தாளனின் செயல்பாடுகளும் இருந்துகொண்டிருக்கின்றன. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

செக்ஸை எப்படி அணுகுவது? சாரு பேட்டி

சமஸ் 12 Mar 2023

நீங்கள் மேலேயிருந்து பறவைப் பார்வையாகப் பார்க்கும்போது பதினேழாம் நூற்றாண்டும் இருபத்தோராம் நூற்றாண்டும் அருகருகேதான் தென்படும். பத்தொன்பது ஒரு இடம். இருபத்தொன்று ஒரு இடம். அவ்வளவுதான். மேலும், மனிதர்கள் வரலாற்றிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இப்போதும் ஒரு இயேசு வந்தால் அவரை சிலுவையில்தான் அறைவார்கள். இப்போதும் ஒரு காந்தி வந்தால் சுட்டுத்தான் கொல்வார்கள். எந்த மாற்றமும் இல்லை. அப்போது படைகள் பொருதின. இப்போது ரயில் நிலையத்திலும் கல்விக் கூடங்களிலும் வெடிகுண்டு வெடிக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். போர்களின் முறைமைதான் மாறியிருக்கிறதே ஒழிய மனித வாழ்வின் அர்த்தத்தில், மதிப்பீடுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. எனவே, கடந்த காலத்தை எழுதும்போதும் எனக்கு நிகழ்காலத்தை எழுதுவதுபோல்தான் இருந்தது. அதனால் வரலாற்றை சமகாலத்துக்குக் கட்டி இழுப்பது போலவே எனக்குத் தோன்றவில்லை. ஆனால், கதை கொரோனாவுக்கு முன்னே நடப்பதாக நான் திட்டமிட்டிருந்ததால் அதில் மட்டும் பிழை ஏற்படாத வண்ணம் கவனம் செலுத்தினேன். ஏனென்றால், 2019இல் சீலேயில் ஒரு மக்கள் புரட்சி நடந்தது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் நான் சீலே சென்று வந்திருந்தேன். அந்தப் புரட்சியே ஔரங்ஸேப் செய்த ஒரு காரியத்தினால்தான் வந்தது என்று கதையை மாற்றிவிட்டேன். நாவலில் நானும் ஔரங்ஸேபும் கொக்கரக்கோ என்ற நண்பனும் சீலேயில் புரட்சி நடந்தபோது அங்கே இருக்கிறோம். 

கடந்த காலத்தைப் பேசும்போது உள்ள வசதி என்று எதுவும் கிடையாது. நடந்த கதை, அதுவும் எழுதப்பட்ட கதை என்கிறபோது அது ஒருவித சட்டகத்துக்கு உள்ளே விளையாடுவதைப் போன்றதுதான். சட்டகத்தை உடைத்துக்கொண்டு வெளியே போக முடியாது. புதினம் என்ற உரிமை எடுத்துக்கொண்டு ஔரங்ஸேப் தற்கொலை செய்துகொண்டார் என்று வேண்டுமானால் மாற்றி எழுதலாம். அது கற்பனை. ஆனால் ஔரங்ஸேபுக்கு ஏராளமான வைப்பாட்டிகள் இருந்தார்கள் என்று எழுத முடியாது. அது பொய். இப்படியான வரையறைகளுக்குள் நின்றுகொண்டு எழுத வேண்டும். அது எனக்கு சுவாரசியமான சவாலாகவே இருந்தது. 

மட்டுமல்லாமல் ஒரு நல்ல எழுத்தாளன் என்பவன் எந்த ஒரு கதாபாத்திரத்தை எழுதினாலும் அந்தப் பாத்திரமாகவே மாற வேண்டும். மரியோ பர்கஸ் யோஸா ஒரு வலதுசாரி. ஆனால் அவருடைய தெ ரியல் லைஃப் ஆஃப் அலெஹாந்த்ரோ மாய்த்தா (The Real Life of Alejandro Majta) என்ற நாவலைப் படித்தால் அதைப் படிக்கும் ஒருவரே தீவிர இடதுசாரியாக மாறிவிடுவார். இதை கூடு விட்டுக் கூடு பாய்தல் என்று சொல்லலாம். அதேபோல் மகாத்மாக்களின் கதைகளை எழுத ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் மனித இருண்மைகளை எழுத போதுமான ஆட்கள் இல்லை. தில்லியில் ஒரு பஸ்ஸில் ஒரு பெண்ணை ஐந்து பேர் வல்லுறவு செய்து சிதைத்த கதை நமக்குத் தெரியும். இந்தியாவே அதைக் கண்டு வெகுண்டு எழுந்தது. அதேசமயம், அந்த ஐந்து பேரும் என்ன நரகத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களா? அவர்களை அவ்விதமாக உருவாக்கியது யார்? சமூகம்தானே? என்னைக் கேட்டால், அந்த ஐந்து பேரும் வாழ்ந்து வந்த சூழலில் ஒரு மகாத்மா இருந்திருந்தால் அந்த மகாத்மாவும் அப்படித்தான் கீழ்மனிதனாக ஆகியிருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் அந்த ஐந்து பேரில் ஒருவனின் கதையை என்னுடைய ஔரங்ஸேப் நாவலில் எழுதினேன். எழுதிவிட்டு இரண்டு மிகத் தீவிரமான பெண்ணியவாதிகளிடம் காண்பித்தேன். ஏனென்றால், அந்த ஐந்து பேரையும் இந்தச் சமூகம் எப்படி உருவாக்கியது என்றுதான் எனக்குச் சொல்ல வேண்டியிருந்ததே தவிர, அவர்களை நியாயப்படுத்துவது என் நோக்கம் அல்ல. அந்த இரண்டு பெண்ணியவாதிகளுமே அந்த அத்தியாயம் சரியாக வந்திருப்பதாகவும், அதைப் படித்தபோதுதான் சமூகத்தில் அப்படிப்பட்ட குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள் என்று தெரிந்துகொண்டதாகவும் சொன்னார்கள். 

இவ்வாறாகத்தான் கல் மரம் புல் பூண்டிலிருந்தும், ஆதிகால மனிதனிலிருந்தும் தொடங்கி இன்றைய தமிழ் சினிமா நாயகர்களின் கட்டவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்யும் தொண்டன் வரை அவர்களின் இதயத்துக்குள் ஊடுருவல் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அதுதான் ஒரு எழுத்தாளனின் வேலை. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: சாரு

சமஸ் 05 Mar 2023

சாருவைக் கவர்ந்த பத்து ஆளுமைகள்… அதற்குக் காரணம்?

1. காந்தி 

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 
நன்னயம் செய்து விடல்’

என்ற குறளைத் தெரியாத ஒரு தமிழரைப் பார்க்க முடியாது. அதேசமயம் அதைப் பின்பற்றுகின்ற ஒருவரைக்கூட நாம் பார்த்தது இல்லை. இப்படி யோசித்துப் பாருங்கள். என் பத்து வயது மகளை அல்லது பேத்தியை ஒருவன் வன்கலவி செய்து கொன்றுவிட்டான். அவனை நான் என்ன செய்வேன்? சட்டத்தின் முன்னால் நிறுத்துவேன் என்று பதில் சொல்லலாம். சட்டம் என்ற ஒன்றே இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். மதக் கலவரங்களின்போது சட்டம் இல்லாமல் போவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அந்த நிலையில் சொல்கிறேன். அப்போது நான் ஒரு மகாத்மாவாகவே இருந்தாலும் என் மகளுக்கு / பேத்திக்கு அந்தக் கொடூரத்தைச் செய்தவனை என்னால் மன்னிக்க முடியாது. அவனைத் தண்டித்துவிடுவேன். ஆனால் திருவள்ளுவரோ அவனை மன்னிப்பது மட்டும் அல்ல, அவனுக்கு நன்மை வேறு செய்ய வேண்டும் என்கிறார். 

அப்படி நம் காலத்தில் வாழ்ந்து காட்டியவர் காந்தி. அதை ஒரு தத்துவமாகவே மனித குலத்துக்கு வழங்கினார். மார்க்சீயம்கூட மானுட விடுதலை குறித்துப் பேசியதுதான். ஆனால், அதற்கான வழிமுறையாக வன்முறையைத் தேர்ந்தெடுத்தது. காந்தி மட்டுமே அகிம்சையை ஓர் அரசியல் தத்துவமாக மட்டுமல்லாது சராசரி மனிதனின் அன்றாட வாழ்விலும்கூடப் பின்பற்றக் கூடிய மானுட வழிமுறையாக மாற்றிக் காட்டினார். 

2. மைக்கேல் ஜாக்ஸன் 

என்னோடு நெருங்கிப் பழகிய அத்தனை பேரும் நான் ஒரு குழந்தைபோலவே இருப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். லூசிஃபர் என்ற வெப்சீரீஸில் வரும் நரகத்தின் காவலனான லூசிஃபர் பூமிக்கு வந்து வாழ்வதுதான் கதை. அந்தத் தொடரைப் பார்த்தபோது லூசிஃபர் என்னைப் போலவே இருப்பதாகக் கண்டேன். அதனால்தான் அடிக்கடி என்னை நான் வேற்றுக்கிரகவாசி என்று சொல்வதுண்டு. மைக்கேல் ஜாக்ஸனும் அப்படி வாழ்ந்தவர்தான். இறக்கும் வரை குழந்தையாகவே வாழ்ந்த ஒரு அற்புதமான ஆத்மா. 

தன் உடலையே தன் கலையின் பரிசோதனைக் களமாக அமைத்துக்கொண்டு அதனாலேயே பாதி ஆயுளில் இறந்து போனார். அவர் என் ஆராதனைக்கு உரியவர். 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: சாரு

சமஸ் 26 Feb 2023

3. விக்தர் ஹாரா 

நம் எல்லோருக்கும் சே குவேராவைத் தெரியும். அவரைப் போன்ற மற்றொரு போராளி விக்தர் ஹாரா. சீலேவைச் சேர்ந்த பாடகர். கவிஞர். இசையமைப்பாளர். உலகம் எங்கும் செப்டம்பர் 11 என்றால் அது இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட துயர நாள் என்று தெரியும். ஆனால் சீலேயில் செப்டம்பர் 11 என்றால் அது வேறொரு துக்க தினத்தைக் குறிக்கும். 1973இல் செப்டம்பர் 11 அன்றுதான் பினோசெத்தின் ராணுவம் சி.ஐ.ஏ.யின் உதவியுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அயெந்தேயின் ஆட்சியைக் கவிழ்த்தது. மொனேதா அதிபர் மாளிகையில் அயெந்தே தன்னை சுட்டுக்கொண்டு இறந்தார். 

பினோசெத் பதவிக்கு வந்த ஐந்தே நாட்களில் செப்டம்பர் 16 அன்று அப்போது சீலேயில் மக்கள் பாடகனாகத் திகழ்ந்த விக்தர் ஹாரா பினோசெத்தின் ராணுவத்தால் கொல்லப்பட்டார். அது பினோசெத்தின் ராணுவத்தினால் ஒரு குரூர நாடகத்தைப் போல் அரங்கேற்றப்பட்டது. 

சாந்த்தியாகோ நகரில் அதே பெயரில் ஒரு ஸ்டேடியம் இருந்தது. அங்கே டாக்டர் அயெந்தேவின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட 5,000 பேர் - மாணவர்கள், பேராசிரியர்கள், இடதுசாரிகள் அனைவரும் - கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டார்கள். அவர்களில் யாரோ ஒரு ராணுவ அதிகாரிக்கு விக்தர் ஹாராவை அடையாளம் தெரிந்துவிட்டது. விக்தர் ஹாரா மட்டும் அந்தக் கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு எல்லோருக்கும் முன்னால் துன்புறுத்தப்பட்டார். அந்த நிலையிலும் விக்தர் ஹாரா சற்றும் கலங்காமல் சிரித்துக்கொண்டே இருந்ததைப் பார்த்த ஒரு அதிகாரி ஹாராவின் கரங்களை கோடரியால் வெட்டினான். “இப்போது கித்தார் வாசி, வேசி மகனே!” என்றான். அப்போதும் இடது கரத்தினால் கித்தாரை எடுத்து, மணிக்கட்டிலிருந்து துண்டாகிப்போன தன் வலது கரத்தினால் சிரித்துக்கொண்டே பாடலைப் பாடி கித்தார் வாசித்தார் விக்தர் ஹாரா. 

வாசிக்கச் சொன்ன அதிகாரிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. வெறி பிடித்தவனைப் போல் ஹாராவின் உடம்பு பூராவும் துப்பாக்கியால் சுட்டான். அவனை மிகச் சமீபத்தில் அமெரிக்காவில் கைதுசெய்து தண்டனை அளித்தார்கள். விக்தர் ஹாராவைப் போன்ற ஒருவரை நாம் புராணக் கதைகளில் மட்டுமே பார்க்க முடியும். அப்படி ஒரு மகத்தான மனிதன் விக்தர் ஹாரா. 

4. விமலானந்தா

எத்தனையோ ஆனந்தாக்களை நாம் பார்த்துவிட்டோம். அவர்களில் பாதி போலி. மீதிப் பேர் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான ஆனந்தாக்களில் ஒருவர்தான் இந்த விமலானந்தா. 

ஆனால் மற்ற ஆனந்தாக்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் என்றால், இவர் யார் என்று ஒரே ஒருவருக்குத்தான் தெரியும். தன்னுடைய பத்து சீடர்களில் டாக்டர் ராபர்ட் ஸ்வபோதா என்ற அமெரிக்கருக்கு மட்டுமே தன்னைப் பற்றி எழுதும் உரிமையைத் தந்தார் விமலானந்தா. ராபர்ட்டும் விமலானந்தாவின் கதையை ‘அகோரா’ என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக எழுதியிருக்கிறார். அந்த நூலில் வரும் எதையுமே உங்களால் நம்ப முடியாது. 

விமலானந்தா தனக்கென்று ஆசிரமம் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. மும்பையில் ரேஸ் குதிரை வளர்ப்பவராக மட்டுமே அவரது குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் ஒரு அகோரி. 

விமலானந்தாவின் புகைப்படமும் கிடையாது. அவர் யார் என்று யாருக்குமே தெரியாது. தெரிந்த ராபர்ட்டும் அந்த மூன்று நூலிலும் அடையாளம் காண்பிக்கவில்லை. அதை நீங்கள் படித்தால் அது ஒரு நாவல் என்றுதான் சொல்வீர்கள். அதில் வரும் ஒரு வாக்கியத்தைக்கூட உங்களால் நம்ப முடியாது. ஆனால், அப்படி ஒரு அகோரி வாழ்ந்திருக்கிறார். 

ஏன் நீங்கள் உங்களை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை என்று ஒருமுறை ராபர்ட் அவரிடம் கேட்கும்போது, வெளிப்படுத்திக்கொண்டால் மனிதர்கள் அனைவரும் என்னிடம் ஆசி கேட்டு வருவார்கள். நான் ஆசி வழங்கினால் நிச்சயம் பலிக்கும். ஆனால், அதற்கு மனிதர்கள் தகுதியானவர்கள் இல்லை. இவர்களிடம் நான் என்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டேன் என்றார் விமலானந்தா. அவருடைய அடையாளம் என்று இன்று எதுவுமே இல்லை. அவர் யார் என்றோ, அவருடைய உண்மையான பெயர் எது என்றோ ராபர்ட்டைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ராபர்ட்டும் அவர் பற்றி அதிகம் பேசுவதில்லை. அகோரா என்ற பெயரில் கிடைக்கும் மூன்று தொகுதிகள் தவிர விமலானந்தா பற்றி எதுவும் கிடையாது. 

ராபர்ட் எழுதிய அந்த மூன்று நூல்களும் மானுட வாழ்வு பற்றிய, பிரபஞ்ச ரகசியங்கள் பற்றிய என்னுடைய எண்ணற்ற சந்தேகங்களைத் தீர்த்துவைத்தன.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி

சமஸ் 19 Feb 2023

5. தியாகராஜர்

ஏற்கெனவே நிறைய பேசியிருக்கிறோம். ஸ்ரீராமனை நேரில் தரிசிக்க வேண்டும் என்று சுமார் 25 ஆண்டுகள் ராம ஜெபம் செய்து, தான் நினைத்ததை சாதித்தவர். பக்தியின் குறியீடு. 

6. மஹா பெரியவர்

என்னுடைய மானசீக குரு. ஞானக் கடல். 

7. பீத்தோவன்

இந்த உலகமே அழிந்தாலும் பீத்தோவனின் இசை அழியாது என்று சொன்னார் கார்ல் மார்க்ஸ். இலக்கியமும் ஓவியமும் மட்டுமே கலையின் உச்சங்களாகக் கருதப்பட்ட காலத்தில் இசையையும் அந்த இடத்துக்குக் கொண்டு சேர்த்தவர் பீத்தோவன். பீத்தோவன் ஓர் இசை அதிசயம். 28 வயதிலிருந்தே காது கேட்காமல் போன நிலையில் அவர் உருவாக்கிய சிம்ஃபனிகளும் மற்ற ஏராளமான படைப்புகளும் அந்த அதிசயத்துக்குச் சான்றுகளாக நிற்கின்றன.

8. ஜெனே

ஒரு பாலியல் தொழிலாளியின் மகன். தந்தை யார் என்று தெரியாது. சிறு சிறு திருட்டுகள். அந்தக் கீழ்மையான வாழ்க்கைக்கு உண்டான பழக்க வழக்கங்கள். அதில் ஒன்று, சிறுவர்களுடனான பாலுறவு (பீடஃபைல்). அதேசமயம் அந்த அனுபவங்களையெல்லாம் வைத்து நாவல் எழுதி உலகப் புகழ். இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். அசாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் அதைக் கதையாக எழுதி புகழ் அடைவார்கள். ஜெனேயின் நாவல்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவருடைய மொழி அதுவரையில் பிரெஞ்சில் யாருமே பயன்படுத்தியிராத அளவுக்குக் கவித்துவம் மிகுந்திருந்தது. இத்தனைக்கும் பள்ளிப் படிப்பை முடிக்காதவர் ஜெனே. 

ஆனால், இதனாலெல்லாம் அவர் என்னைக் கவர்ந்த ஆளுமையாக இல்லை. அவர் செய்த திருட்டுகளுக்கும், பீடஃபைல் குற்றங்களுக்கும் ஃப்ரான்ஸில் அவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்திருக்கும். சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு நடந்துகொண்டிருந்தது. அப்போது சார்த்தர், பிக்காஸோ போன்ற பிரான்ஸின் பெருந்தலைகள் பிரெஞ்ச் அதிபரிடம் பேசி ஜெனேவுக்குப் பொது மன்னிப்பு பெற்று அவருக்கு விடுதலை வாங்கித் தந்தார்கள்.

இதுவே ஒரு தமிழ் எழுத்தாளருக்கு நடந்திருந்தால் அவர் வாழ்நாள் முழுவதும் அதிகாரத்துக்கும் தனக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த புத்திஜீவிகளுக்கும் அடிமையாக இருந்திருப்பார். ஆனால், ஜெனே சொன்னார், “என்னைக் குற்றவாளியாகக் கருதிய பிரான்ஸை நான் வெறுக்கிறேன். நான் இறந்துபோனால் என் உடம்புகூட இந்த மண்ணில் புதையக் கூடாது.” சொன்னதோடு மட்டுமல்ல, பிரான்ஸைப் புறக்கணித்துவிட்டு மொராக்கோவில் வாழ ஆரம்பித்தார். அவருக்குத் தெரியாத மொழி அரபி. தெரியாத மதம் இஸ்லாம். இத்தனைக்கும் இஸ்லாம் பாலியல் மீறல்களை வெகுவாகக் கண்டிக்கும் மதம். ஆனாலும் மானுட வாழ்வின் மீறல்களையும் மொராக்கோவின் இஸ்லாமியர் அனுதாபத்தோடு அணுகினார்கள். ஜெனேவுக்கு மொராக்கோ தன்னுடைய தேசத்தில் வாழ்வதுபோல் இருந்தது. இங்கேதான் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். இஸ்லாம்தான் அடிப்படைவாதத்தைப் பின்பற்றுகிறது என உலகம் பூராவும் நம்புகிறது. ஆனால் ஜெனேவினால் அவருடைய தாய்நாடான பிரான்ஸில் வாழவே முடியவில்லை. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு

சமஸ் 12 Feb 2023

தன் புத்தகங்களின் பதிப்பாளரைப் பார்த்துப் பேசுவதற்காக ஒருமுறை பாரிஸ் சென்றிருந்தார் ஜெனே. சொந்த நாட்டில் வீடு கிடையாது. ஓட்டலில் தங்கியிருந்தார். இறந்துவிட்டார். அப்போதும் அவர் உடலை பிரான்ஸில் புதைக்காமல் பெருத்த சிரமங்களுக்கு இடையில் மொராக்கோவுக்குக் கொண்டுவந்தார்கள் ஜெனேயின் நண்பர்கள். இறந்த பிறகுகூட ஜெனேயின் வார்த்தைகள் அந்த அளவுக்கு மதிக்கப்பட்டன. 

இங்கே பிரான்ஸையும் நாம் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி ஒரு எழுத்தாளன் இந்தியாவில் செய்திருந்தால் அவனை தேசத் துரோகி என்றுதானே தூற்றியிருப்பார்கள்? ஆனால், என் உடம்புகூட பிரான்ஸில் புதைக்கப்படக் கூடாது என்று சொன்ன ஜெனேயை பிரான்ஸ் தங்கள் பெருமைகளில் ஒன்றாகவே கருதிக் கொண்டாடுகிறது. 

மொராக்கோவில் லராச்சே என்ற ஊரில் இருக்கும் ஜான் ஜெனேயின் கல்லறையைப் பார்க்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. 

ஜெனே மட்டுமல்லாமல் வில்லியம் பர்ரோஸ் போன்ற அமெரிக்க எழுத்தாளர்களும் மொராக்காவில் உள்ள தாஞ்ஜியர் என்ற நகரையே தங்கள் வாழ்விடமாகக் கொண்டார்கள்.  

ஆனால் ரான்ஸை எடுத்துக்கொண்டால், ஜெனேவை மட்டுமல்ல, அந்த்தோனின் ஆர்த்தோவையும் பைத்தியம் என்று சொல்லி மனநோய் விடுதியில் தள்ளியது பிரெஞ்சு சமூகம். இத்தனைக்கும் அந்த மனநோய் விடுதியின் இயக்குநராக இருந்தவர் உலகப் புகழ்பெற்ற உளவியலாளரும் அமைப்பியல்வாதத்தின் பிதாமகர்களில் ஒருவருமான ஜாக் லக்கான் (Jacques Lacan). (மற்ற மூவர்: மிஷல் ஃபூக்கோ, ஜாக் தெரிதா, ரொலாந் பார்த்). ஆர்த்தோவை மனநோயாளி என்று சான்றிதழ் கொடுத்து பாரிஸின் மனநோய் இல்லத்தில் தள்ளியதற்குக் காரணமாக இருந்தவர் லக்கான். அதனால் ஆர்த்தோ லக்கானை வேசி மகன் என்று திட்டி எழுதியிருக்கிறார். 

எதற்குச் சொல்கிறேன் என்றால், ஐரோப்பாதான் அடிப்படைவாதக் குண்டாந்தடியால் கலைஞர்களைத் தாக்கிக் கொன்றிருக்கிறது. ஆஸ்கார் வைல்ட் மற்றோர் உதாரணம்.   

9. அலஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி 

சினிமாவில் புதியதொரு மொழியை உருவாக்கியவர் என்பதற்காக மட்டும் அல்ல; இந்திய மரபின் வழியாக ஒரு புதிய வாழ்வியல் தத்துவத்தை உருவாக்கியதற்காகவும் அலஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி என்னைக் கவர்ந்த ஓர் ஆளுமை.

10. பாணினி

கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மொழியியலாளர். அவர் சம்ஸ்கிருதத்துக்கு உருவாக்கிய இலக்கணம் மனித மூளையால் சாத்தியமாகாத ஒன்று என்கிறார்கள் இன்றைய மொழியியல் வல்லுநர்கள். 

ஒரு மொழியியலாளரைப் போய் என்னைக் கவர்ந்த பத்து ஆளுமைகளில் ஏன் சொல்கிறேன்? ஃபெர்தினாந் தெ சசூர் நவீன மொழியியலின் பிதாமகர்களில் முதன்மையானவர். இவரும் அமைப்பியல்வாத்தின் முன்னோடி சிந்தனையாளர்களில் ஒருவருமான லியொனார்ட் ப்ளூம்ஃபீல்ட் போன்றவர்களும் சம்ஸ்கிருதத்தில் பெரும் அறிஞர்கள். நாம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு சம்ஸ்கிருதம் செத்துப் போன மொழி என்று சொல்லியபடி நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால், மேற்கண்ட அமைப்பியல்வாத அறிஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பாணினியின் இலக்கணத்திலிருந்துதான் பெற்றுக்கொண்டதாக சொல்கிறார்கள். ஆக, இன்றைய அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் ஆகிய இரண்டு சிந்தனைப் போக்குகளுக்கும் அடிப்படையே பாணினியின் சம்ஸ்கிருத இலக்கண நூலான அஷ்டாத்யாயிதான்!

(இன்னும் பேச்சு முடியவில்லை, அடுத்த வாரம்…)

 

தொடர்புடைய பேட்டிகள் 

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு
எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி
தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: சாரு
எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: சாரு
செக்ஸை எப்படி அணுகுவது? சாரு பேட்டி
டி20, ரீல்ஸ் மாதிரி எழுத்திலும் வரும்: சாரு

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   2 months ago

வாலறுந்த நரி மற்ற நரிகளையும் வாலறுந்து இருப்பதுதான் அழகு எனத் தன் சொற் திறமையால் நம்ப வைத்து அறுக்க வைத்த கதைதான் சாரு நிவேதிதா செய்வது. தன்னுடைய அனைத்து அறம் தவறிய செயல்களையும் சாமர்த்தியகரமாக நியாயப்படுத்துகிறார். பல நாடுகளின் அதே போன்றவர்களைப் போற்றுவது மற்றவர் வாலறுக்கும் தூண்டுதல் தான்.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

கலைஞர் சண்முகநாதன் பேட்டிபாதுகாக்கப்பட்ட பகுதிநல்ல வாசகர்நுழைவுத் தேர்வுகள்கொள்கைகள்சூத்திரர்மல்லிகார்ஜுன கார்கேதந்தை பெரியார்எதிர்வினைக்கு எதிர்வினைசு.ராஜகோபாலன் பேட்டிடீம்வியூவர் க்யுக் சப்போர்ட்மடாதிபதிஷெர்மன் சட்டம்ஜான் பெர்க்கின்ஸ் கட்டுரைமேலாளர் ஊழியர் பிரச்சினைh.v.handeமருத்துவம்நிதான வாசிப்புபுலம்பெயர் தொழிலாளர்கள்தொழில் நுட்பம்சுயகல்விசிறப்புக் கூடுதல் உற்பத்தி வரிபிரதீப்செவிப்பறைசர்வாதிகாரம்ஏக்நாத் ஷிண்டேபஞ்சாப் புதிய முதல்வர்பாலு மகேந்திரா சமஸ்தைவானை ஏன் இணைத்துக்கொள்ள துடிக்கிறது சீனா?காஷ்மீர் இந்துக்கள் படுகொலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!