பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: சாரு

சமஸ்
09 Apr 2023, 5:00 am
1

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு. அடுத்த அத்தியாயத்துடன் இந்த உரையாடல் நிறைவு பெறும் சூழலில் இந்த வாரக் கேள்விகளை அவருடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த காயத்ரி, அராத்து, ஸ்ரீராம் ஆகியோர் கேட்கின்றனர். அடுத்த வாரம் நம் வாசகர்களும் கேட்கலாம்.

உங்களுக்கு சகிப்புத்தன்மை குறைவு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற பழமொழியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அடுத்த மனிதர்களை இம்சிப்பதில் முதல் இடத்தை வகிப்பது இந்தியர்கள்தான். மற்றவர்கள் அப்படி நம்மை இம்சிப்பதை சுயமரியாதையின் எந்த சுவடும் இன்றிப் பொறுத்துக்கொள்வதையே எல்லோரும் இங்கே சகிப்புத்தன்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்த மனிதரும் மற்றவர்கள் நம் சுதந்திரத்திலோ அந்தரங்கத்திலோ அத்துமீறுவதை, அவமதிப்பதை சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். என்னிடம் நீங்கள் ஒரு கோடி ரூபாயைக் கொடுத்தாலும் உங்கள் படைப்பு எனக்குப் பிடிக்கவில்லையெனில் அதை நான் சகிப்புத்தன்மையோடு அணுகி நன்றாக இருக்கிறது என்று பொய் கூற மாட்டேன். இதன் காரணமாகவே என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அழைத்தாலும் நான் சினிமா ப்ரீவ்யூ காட்சிகளுக்குச் செல்வதில்லை. எனக்கு ஒரு படம் சகிக்க முடியாதபடி இருந்தால் பத்தே நிமிடங்களில் வெளியே வந்துவிடுவேன். ஆனால், ப்ரீவ்யூ காட்சியில் நீங்கள் அப்படிச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது அவர்களை அவமதிப்பதுபோல் ஆகும். அந்த மோசமான படத்தை சகித்துக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் படம் நன்றாக இருந்தது என்று பொய் வேறு சொல்ல வேண்டும். 

நமக்கு ஒவ்வாத விஷயங்களை நாம் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும், சொல்லுங்கள்?

சகிப்புத்தன்மை என்று சொல்லிக்கொண்டு எல்லா மனிதர்களும் தங்கள் சுயத்தை இழந்து அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை சகித்துக்கொள்ள முடியாமலே சகித்துக்கொண்டு மனநோயாளிகளைப் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

நம்முடைய மகிழ்ச்சிக்காக அடுத்த மனிதரை இம்சிப்பது தொடர்பில் நாம் கவலையே கொள்வதில்லை. அதைவிடக் கொடுமை, அந்த இம்சையை அன்பு என்ற பெயரில் எல்லோரும் சகித்துக்கொண்டிருப்பது. குடும்பங்களில்தான் இந்த சகிப்புத்தன்மை என்ற கொடூரத்தை அதிகமாகக் காண்கிறேன். அடித்தட்டு மக்கள் மத்தியில் பெண்கள் தம் மீதான ஆண்களின் வன்முறையை சகித்துக்கொள்ளும் நிலை இருக்கிறது. மத்தியதர வர்க்கத்தில் ஆண்கள் தம் மீது பெண்கள் செலுத்தும் வன்முறையை சகித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இரண்டுமே சம அளவில் நடந்துகொண்டிருக்கிறது. 

பதின்பருவத்துச் சிறார் செய்யும் கொடுமைகளையெல்லாம் பெற்றோர் அன்பு என்ற பெயரால் சகித்துக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள் அதை அச்சம் கருதி சகித்துக்கொள்கிறார்கள். சகித்துக்கொள்ளாவிட்டால் வேலை போய்விடும்.

குடும்பங்களை அடுத்து, அலுவலகங்களில் காணப்படும் சகிப்புத்தன்மையும் அருவருப்பாக இருக்கிறது. பெண்களுக்கு ஆண்களின் பாலியல் அத்துமீறல்களையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மீறினால் பொருளாதாரரீதியாக இழப்பு ஏற்படும். ஆண்களுக்கு வேறு மாதிரியான பிரச்சினைகள். என் அலுவலகத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்னை இடியட் என்று திட்டியபோது அதை என்னால் சகித்துக்கொள்ள முடியாமல் என் வேலையை அன்றைய தினமே ராஜினாமா செய்தேன். வேறொரு அதிகாரிதான் என் எதிர்கால நலன் கருதி அதை விருப்ப ஓய்வாக (வாலண்டரி ரிடையர்மெண்ட்) மாற்றிக் கொடுத்தார். 

சுருக்கமாகச் சொல்கிறேன். சகிப்புத்தன்மை என்பதன் மறுபெயர் அடிமைத்தனம். பிரிட்டிஷ்காரர்களின் ஏகாதிபத்தியத்தை காந்தி சகித்துக்கொண்டாரா? பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போராளிகளைப் பார்த்தோ, தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தலித்தைப் பார்த்தோ நாம் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்று சொல்ல முடியுமா? 

அடிமைத்தனத்தில் ஊறிய மனங்கள்தான் சகிப்புத்தன்மையை வியந்தோதிப் பேசும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற பழமொழியும் அடிமைகள் மத்தியில் எழுந்ததுதான். 

ஆனால் வேறோர் விதமான சகிப்புத்தன்மை இருக்கிறது. அதை நாம் பிரபஞ்ச ஓர்மைக்கு நம்மை சரணாகதி செய்துகொள்வதன் மூலம் அடைய முடியும். மதர் தெரஸா தொழுநோயாளிகளுக்கு செய்தது சகிப்புத்தன்மை. அந்த விதத்தில் நானுமே நம்ப முடியாத அளவுக்கு சகிப்புத்தன்மை கொண்டவன்தான். காலையில் எழுந்ததும் எல்லோரும் நடைப் பயிற்சியோ தியானமோ யோகாவோ செய்வார்கள். ஆனால், நான் என் பூனைகளின் மலஜலத்தை சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன். குடலைப் பிடுங்கும் நாற்றம் எடுக்கும். அதை நான் ஒரு சேவையாகக் கருதி சகிப்புத்தன்மையோடுதான் செய்கிறேன். ஆனால், ஓர் இலக்கியக் கூட்டத்தில் என்னை ஒருவர் செக்ஸ் ரைட்டர் என்று திட்டியபோது கையில் மைக்கைப் பிடித்தபடியே “செருப்பால் அடிப்பேன்” என்று சொன்னேன். தொடர்ந்தது ஒரு கலவரம். அந்த இடத்தில் நான் சகிப்புத்தன்மை பேண முடியாது. அது என் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய இடம். ஒரு பெண்ணின் பிருஷ்டத்தை ஒருவன் தட்டிவிட்டுப் போனால் அவனைத் தாக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள் அவள். 

சகிப்புத்தன்மை என்ற விஷயத்தினால்தான் இந்தியர்கள் உலக அளவில் சகிக்கவே முடியாத அளவுக்கு அநாகரீக மனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். ஐரோப்பா அல்லது ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் அங்கே உள்ள சக மாணவர்களால் தாக்கப்படும் செய்தியை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதற்குக் காரணம், நம் இந்தியர்களின் மனோதர்மத்தின்படி, ‘இரவில் நான் செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு சப்தமாகப் பாட்டு கேட்பேன், நீ சகித்துக்கொள்’ என்ற மனோபாவம்தான். மற்ற வெள்ளை இனத்தவர் அதை ஆட்சேபிக்கும்போது இந்தியர்களுக்கு அதன் காரணமே புரிவதில்லை. மற்றவர்களை நாம் இம்சித்தால் அதை சகித்துக்கொள்வது அவர்களுடைய கடமை என்று சொல்லியே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். குடும்பங்களில் சிறார் செய்யும் அராஜகங்களை பெற்றோர் பொறுத்துக் கொள்கிறார்கள். கணவன் செய்யும் அக்கிரமங்களை மனைவியும் மனைவி செய்யும் அக்கிரமங்களை கணவனும் பொறுத்துக்கொள்கிறார்கள். இதைப் பார்த்து வளரும் இந்திய மாணவர்கள் வெளியே போய் உதை வாங்குகிறார்கள். 

என் வீட்டுக்கு எதிரே புதிதாக வீடு கட்டினார்கள். தினமும் இரவு பூராவும் கட்டிடப் பணி. பகலில் வீடு கட்டுங்கள், இரவு பத்து மணிக்கு மேலாவது என்னைத் தூங்கவிடுங்கள் என்று அவர்களிடம் கெஞ்சினேன். அவர்கள் அத்தனை பேரும் என்னைப் பைத்தியக்காரனைப் போல் விசித்திரமாகப் பார்த்தார்கள். இரவில் வீடு கட்டும் வேலையால் பாதிக்கப்பட்டிருந்த என் பக்கத்து வீட்டுக்காரர்களும்கூட யார் இவன் என்பதுபோல் என்னை விசித்திரமாகவே பார்த்தார்கள். 

தொடர்ந்து பல நாட்கள் தூங்க முடியாமல் போகவே, காவல் துறையில் புகார் செய்தேன். அவர்களுமே என்னை விசித்திரமாகத்தான் பார்த்தார்கள். அந்த லாரியெல்லாம் பகலில் வர அனுமதி இல்லை சார், இரவில்தான் வேலை செய்ய முடியும் என்று போலீஸ்காரர்கள் எனக்குத்தான் சமாதானம் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாகப் போயிற்று, எதிர்வீட்டுக்காரர் வீடு கட்டுவதற்காக நான் ஆறு மாத காலம் உறங்காமல் இருக்க வேண்டுமா? ஒட்டுமொத்தச் சமூகமும் இந்த அராஜகத்தை சகித்துக்கொண்டுதான் போகிறது. நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தேன். சட்டப்படி இரவில் வீடு கட்ட அனுமதி இல்லை என்று தெரிந்தது. அதற்குப் பிறகுதான் அவர்கள் பகலில் கட்ட ஆரம்பித்தார்கள். 

இந்தப் பிரச்சினையில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், போலீஸ் வந்து விசாரித்தபோது என் அண்டை அயலார் எல்லோரும் சேர்ந்து, நான்தான் சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்துவதாகப் புகார் செய்தார்கள். அவர்களுடைய ஒரே பிராது என்னவென்றால், ‘நாங்களெல்லாம் சகித்துக்கொள்ளும்போது உன்னால் ஏன் சகித்துக்கொள்ள முடியவில்லை?’ 

சகிப்புத்தன்மை என்று சொல்லிச் சொல்லி சின்ன வயதிலேயே நம் நுண்ணுணர்வு, சுரணையுணர்வு அனைத்தையும் காயடித்துவிட்டார்கள். அதனால்தான் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு எருமைகளைப் போல் அடுத்தவர் மீது மூத்திரம் பெய்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட சகிப்புத்தன்மையோ அடிமைத்தனமோ கிடையாது. அடுத்த வீட்டு ஆடவன் தன் மனைவியை அடித்தால் அந்தப் பெண் அல்ல, அண்டை அயலாரே போலீஸில் புகார் கொடுத்துவிடுவார்கள். சகித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். 

நண்பர்கள் இடையேயும் எனக்குப் போதுமான அளவு சகிப்புத்தன்மை இல்லை என்ற புகார் உண்டு. நேற்று நடந்த ஒரு சம்பவம். ஒரு நெருங்கிய நண்பர் காலை எட்டரை மணிக்கு ஒரு இடத்துக்கு வரச் சொல்லியிருந்தார். நான் ஐந்து நிமிடம் முன்னாலேயே போனேன். நண்பரோ சாவகாசமாக ஒன்பது மணிக்கு வந்தார். பத்து வருடம் முன்பாக இருந்தால் பத்து நிமிடம் பார்த்துவிட்டுக் கிளம்பிப் போயிருப்பேன். ஆனால் இப்போது என் போக்கை மாற்றிக்கொண்டு விட்டேன். நேற்று அவரிடம் நான் எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் இனிமேல் அவரைச் சந்திக்க மாட்டேன். அந்தக் காலத்துப் பேனா நட்பு மாதிரி போன் நட்பாக மட்டுமே வைத்துக்கொள்வேன்.  

ஆனால் மனிதர்கள் எங்கே சகிப்புத்தன்மையோடு வாழ வேண்டுமோ அங்கே கொஞ்சமும் சகிப்புத்தன்மையில்லாமல் நடந்துகொள்கிறார்கள். அந்த இடம், மதம்! 

ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கிறார், ‘எனக்கு நாலு கேர்ள் ஃப்ரண்ட்ஸ்’ என்று கிழட்டு எழுத்தாளர்கள் மார் தட்டும்போது பாவமாக இருக்கிறது. பெண்களையே அறியாதவர்கள் அவர்கள். பெண்களின் அருகாமையும் அன்பும் ஆதரவும் அனுபவிக்காததால் மட்டுமே இப்படி நாலு பேருக்கு முன் வழிகிறார்கள்!’ இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

யார் பாவம் என்று அறிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும். இது கயிற்றின் மேல் நடப்பது போன்ற ஒரு விஷயம். ‘இதோ பார் என்னுடைய நாலு தோழிகளையும்’ என்று அந்தக் ‘கிழட்டு எழுத்தாளர்’ புகைப்படங்களைத் தர முடியாது. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி அவரைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திவிடுவார்கள். இந்தியச் சமூகத்தில் யாரையும் உயிரோடு குழி தோண்டிப் புதைப்பதற்கு மிக எளிதான உபாயம், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்துவதுதான். அத்தனை ஊடகங்களும் ஒன்றாகச் சேர்ந்து அவரை அழித்துவிடும். அதனால் இது போன்ற ஏளனங்களை அப்படியே கடந்து விட வேண்டியதுதான், வேறு வழியில்லை.

ஆனால், இப்படி ஒரு கேள்வி வந்துவிட்டதால், இதுகுறித்து சில அவதானங்களைச் சொல்கிறேன். மேற்கண்ட குற்றச்சாட்டைச் சொல்லும் எழுத்தாளர் அநேகமாக மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார். நிச்சயமாக அவருக்குத் தஞ்சாவூரின் வாழ்க்கை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. தஞ்சாவூர்க்காரர்கள் எழுபது வயதிலும் திருமணம் செய்துகொள்வார்கள். அந்த ஊர் மண் அப்படி. தஞ்சைப் பிரகாஷின் கதைகளைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.  

கிழட்டுத்தனம் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். இந்திய சராசரி மனிதன் நாற்பது வயதிலேயே கிழட்டுத்தனத்தை அடைந்துவிடுகிறான். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் வாழ்வை ஆய்வு செய்தாலே இது தெரிந்துவிடும். பெரிய அளவில் வேண்டாம். ஒரு நூறு பேரிடம் கேட்டுப் பாருங்கள். குட்டு வெளுத்துவிடும். ஆனால் நல்ல முறையில் உடல் நலம் பேணுபவர்களால் எண்பது வயதில்கூட ஒரு பெண்ணோடு கூட முடியும். 

கமல்ஹாசனுக்கு இப்போது வயது 68. என்னைவிட ஒரு வயது சிறியவர். ஆனால், இன்னமும் பெண்களோடு கிசுகிசுக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். அவர் வெளிநாடு செல்லும்போது யாராவது ஒரு பெண்ணோடு கை கோர்த்தாலே கைபேசியில் படம் எடுத்துப் போட்டு கிசுகிசு எழுதிவிடுகிறார்கள். அப்படியிருக்கும்போது ஒரு எழுத்தாளன் சொன்னால் மட்டும் ஏன் ஐயா வயிற்றில் அடித்துக்கொண்டு அழுகிறீர்கள்? 

பொறாமைதான் காரணம். மேற்கத்திய நாடுகளில் இப்படி யாரும் பொறாமை கொள்வது கிடையாது. சல்மான் ருஷ்டிக்கு இப்போதைய வயது 75. அவருடைய கேர்ள் ஃப்ரெண்ட் ரஷேல் எலிஸா க்ரிஃபித்ஸின் வயது 45. பார்க்க 25 மாதிரி இருப்பார். ரஷேல் அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர். தமிழ்நாட்டில்தான் இதையெல்லாம் ஒரு பிரச்சினையாகச் சொல்லி வயிறு எரிகிறார்கள், நாற்பதிலேயே கிழடாகிவிட்ட எழுத்தாளர்கள்.  

ஃபூக்கோ தன் தத்துவத்தின் படியே தன் வாழ்வையும் அமைத்துக்கொண்டவர் மற்றும் வாழ்ந்து காட்டியவர் என்று சொல்லி இருக்கிறீர்கள்... நீங்கள் நம்பும் தத்துவங்கள் அல்லது நீங்கள் உங்கள் எழுத்தில் எழுதிய வாழ்க்கை முறைப்படிதான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?

ஃபூக்கோவை நமக்கு அநேகமாக அவரது எழுத்து மூலமாக மட்டுமே தெரியும். அவரது வாழ்க்கை பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஃபூக்கோ மேட்டுக்குடியில் பிறந்தவர். அவரது தத்துவ ஆசிரியர் உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளரான லூயி அல்த்தூஸ்ஸர். தத்துவம், உளவியல் ஆகிய துறைகளில் ஃபூக்கோ முதுகலைப் பட்டம் வாங்கியது உலகின் முதன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸோர்போனில். படித்து முடித்த கையோடு பல வெளிநாடுகளில் கலாச்சாரத் தூதராக இருந்தார். திரும்பி பிரான்ஸ் வந்து பிரபலமான ஒரு பல்கலைக்கழகத்தில் ஏழு ஆண்டுகள் பேராசிரியர் பணி. பிறகு மூன்று ஆண்டுகள் துனீஷியாவில் பேராசிரியர். பிறகு 1970இல் – அப்போது அவர் வயது 43 – 1984இல் அவர் மரணம் அடையும் வரை காலேஜ் த பிரான்ஸ் என்ற ஆய்வு நிறுவனத்தில் உறுப்பினர் பதவி. அது ஒரு கௌரவப் பதவி என்பதால் இங்கே உள்ள பேராசிரியர்களைப் போல் தினமும் மாணவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

அதாவது, கிட்டத்தட்ட இங்கே தமிழ்நாட்டில் ஒரு சினிமா சூப்பர் ஸ்டார் எப்படியோ அவரைப் போல் வாழ்ந்தவர் ஃபூக்கோ. பிரெஞ்ச் அதிபரைவிட ஃபூக்கோ பிரான்ஸில் பிரசித்தி பெற்றவராக வாழ்ந்தார். பிரான்ஸ் மட்டுமல்லாமல், உலகம் பூராவும் ஃபூக்கோவைக் கொண்டாடியது. 

எனவே, எந்த ஒரு பிரெஞ்ச் எழுத்தாளரையும் தமிழ்நாட்டு எழுத்தாளரோடு ஒப்பிடுவது சாத்தியமே இல்லை. நான் ஒரு சேரியில் பன்றிகளிடையே வாழ்ந்தவன். சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களின் சேரி அது. அங்கே இருந்தவர்கள் ஊரில் எடுப்பு கக்கூஸ்களில் மலம் அள்ளிக்கொண்டிருந்தார்கள். பன்னிரண்டாம் வகுப்பு என்று கருதத்தக்க புகுமுக வகுப்பில் எல்லா பாடங்களிலும் – தமிழ் உட்பட - தோல்வியடைந்தவன் நான். டிகிரி முடிக்கவில்லை. வீட்டில் பட்டினி. தந்தை ஒன்றாம் வகுப்பு ஆசிரியர். அம்மா சேரியில் வசிக்கும் ஏழைபாழைகளுக்கு இட்லி சுட்டு விற்று ஜீவனம் பண்ணினார்கள். 

வீட்டில் எட்டு உருப்படிகள். ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்தால்தான் எல்லோரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வதிலிருந்தும் தப்ப முடியும். ஒரு அரசு வேலையில் ஸ்டேனோவாகச் சேர்ந்தேன். ஒழிந்த நேரத்தில் படித்தேன். ஒழிந்த நேரத்தில் எழுதினேன். புத்தகங்களை வைக்க இடமில்லாமல் கட்டிலுக்கு அடியில் திணித்து வைத்தேன். எந்தப் புத்தகத்தையும் எடுக்கக்கூட முடியாது. எல்லாமே ஒரு மூட்டையாகக் கட்டப்பட்டு கட்டிலுக்கு அடியில் கிடந்தது. அதில் ஃபூக்கோ எழுதிய புத்தகங்களும் அடக்கம்.  

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் – அப்போது என் வயது 67 – சென்ற ஆண்டும் கிடைத்த விருது தவிர வேறு எந்த ஓர்  அங்கீகாரமும் எனக்குக் கிடைத்ததில்லை. கிடைத்தது எல்லாம் செக்ஸ் ரைட்டர் என்ற அவப்பெயரும் குடிகாரன் என்ற பட்டமும்தான். ஆனால் இதுவரை நான் நூறு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அதில் எட்டு நாவல்கள். என் வாசகர்கள் என் மீது அன்பு கொண்டு தரும் பணத்தில்தான் நான் வாழ்கிறேன். இதுவரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் கல்லூரியிலும் பேசுவதற்காக நான் அழைக்கப்பட்டதில்லை. ஒரே ஒரு முறை சென்னைப் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்ச் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர் என் வாசகி என்பதால் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 

இன்றளவும் எனக்கு என்று ஒரு வீடு கிடையாது. என் காலத்துக்குப் பிறகு என் புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளுக்குத்தான் போகும் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. எழுத்தாளர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும் என்று ஒரு பத்திரிகையில் எழுதினேன். தமிழக முதல்வர் அதை நடைமுறையில் கொண்டுவந்தார். உடனே ஒரு பத்திரிகையாளர் “நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது எழுத்தாளர்களுக்கு எதற்கு வீடு? கொடுத்தாலும் 700 சதுர அடி போதும்!” என்று எழுதினார். என் புத்தகங்கள் 200 பிரதிகள்தான் விற்கின்றன. அதிகபட்சம் 500. நாவல் என்றால் 1000. சாலையோரத்தில் இஸ்திரி போடும் தொழிலாளிக்குக் கிடைக்கும் மாத ஊதியத்தில் பாதிதான் என் ராயல்டி தொகை. 

தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனின் நிலை இங்கே உள்ள பிச்சைக்காரனின் நிலையைவிடக் கேவலம். இதிலிருந்து மீள வேண்டுமானால் சினிமாவுக்கு வஜனம் எழுத வேண்டும். அதற்கு நான் ஏராளமான சமரசங்கள் செய்ய வேண்டும். அதில் எனக்கு இஷ்டம் இல்லை. 

இதுதான் பிரெஞ்ச் எழுத்தாளருக்கும் தமிழ் எழுத்தாளருக்கும் உள்ள வித்தியாசம். 

கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் பிரெஞ்சு தத்துவம் மற்றும் பிரெஞ்சு இலக்கியம் பற்றி எழுதிவருகிறேன். எந்த அளவுக்கு என்றால், “ஃபூக்கோவின் பிரேதத்தைத் தமிழ்நாட்டுத் தெருக்களிலே இழுத்துக்கொண்டு போகிறார் சாரு நிவேதிதா” என்று சக எழுத்தாளர்கள் கிண்டல் செய்து எழுதும் அளவுக்கு. ஆனால் பிரான்ஸ் போவதற்கு வீசா கேட்டால் “உங்கள் கணக்கில் போதுமான பணம் இல்லை” என்று சொல்லி வீசா மறுக்கப்படுகிறது. இப்படி எனக்கு அமெரிக்க வீசா நான்கு முறை மறுக்கப்பட்டிருக்கிறது. இதே காரணத்தினால் ஒரு முறை கனடா வீசாவும், ஒரு முறை ஜெர்மன் வீசாவும் மறுக்கப்பட்டது. உண்மையில் பிரெஞ்சு சிந்தனை உலகுக்கு நான் செய்திருக்கும் பணிக்காக எனக்கு பிரெஞ்சு குடியுரிமையே தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், யார் போய் என்னைப் பற்றி பிரெஞ்சுக்காரர்களிடம் சொல்வது? ஒரு முறை சென்னையில் உள்ள அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸ் மையத்துக்குச் சென்றேன். அங்கே கமல்ஹாசன், வைரமுத்து ஆகிய இரண்டு கவிஞர்களின் கவிதைகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்கள். நான் திரும்பிவிட்டேன். 

இப்படிப்பட்டதொரு கலாச்சார சூழலில், நான் நம்பும் தத்துவத்துக்கு நேர் எதிராக வாழ்வதற்கு மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறது. என் தத்துவம் சுதந்திரம். ஒரு துறவி அளவுக்கு சுதந்திரமாக வாழ்வதே என் கனவு. என் லட்சியம். சுதந்திரமே என் எழுத்தின் ஆதார சுருதி. ஆனால், நானோ ஒரு அடிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதுபற்றி ‘அன்பு: ஓர் பின்நவீனத்துவ்வாதியின் மறுசீராய்வு மனு’ என்ற நாவலில் விரிவாகவே எழுதியிருக்கிறேன். ஒரு ஹிப்பியைப் போன்ற மனநிலையைக் கொண்ட நான் இருபது ஆண்டுகள் ஒரு அரசுத் துறையில் ஸ்டெனோவாக வாழ்வதெல்லாம் கற்பனை செய்யக் கூடியதா என்ன?

வேண்டுமானால் என் வாழ்வை மார்க்கி தெ ஸாத்-இன் (Marquis de Sade) வாழ்க்கையோடு ஒப்பிடலாம். ஸாத்-இன் எழுத்துக்கள் முழுவதும் ஸேடிஸம் என்று சொல்லப்படும் மானுட நிலை குறித்த விவரணங்கள்தான். ஆனால் அவரோ வாழ்நாளில் பெரும்பகுதியைத் தனிமைச் சிறையில் கழித்தவர். சிறைகளில் அவர் எழுதுவதற்குக் காகிதமோ எழுதுகோலோ கூடத் தர மாட்டார்கள். அதனால் அவர் எழுதுகோலை மட்டும் எப்படியோ கடத்திக்கொண்டு, கக்கூஸில் மலம் துடைக்கத் தரப்படும் டிஷ்யூ பேப்பரில் தன் நாவல்களை எழுதினார். அதையும்கூடக் கண்டுபிடித்து மூட்டை மூட்டையாக எரித்தார்கள். இதையெல்லாம் மீறித்தான் அவரது ஏராளமான நாவல்கள் வெளியாயின. அவரது நாவல்கள் ஃப்ரான்ஸில் தடை செய்யப்பட்டிருந்ததால் அவர் டிஷ்யூ பேப்பரில் எழுதிய மூட்டைகள் சுவிட்ஸர்லாந்துக்குக் கடத்தப்பட்டு அங்கிருந்துதான் வெளியிடப்பட்டன.

அந்த அளவுக்கு எனக்குப் பிரச்சினை இல்லை என்றாலும், நான் எழுதத் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் என் நூல்களைப் பிரசுரிக்க யாருமே முன்வரவில்லை. தமிழின் 2000 ஆண்டு சரித்திரத்தில், எல்லாப் பிரசுர நிலையங்களாலும் கைவிடப்பட்ட நிலையில் தன்னுடைய நூல்களைத் தானே வெளியிட்டுக்கொண்ட ஒரே எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன். 

ஆனால், இத்தனை நெருக்கடிகளுக்கு இடையிலும் நான் ஒரு ஐரோப்பிய எழுத்தாளனைப் போலத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அதை ஒரு ஐரோப்பிய மனநிலை என்று கூறலாம். தவிரவும், எனக்கென்று ஒரு ரகசிய வாழ்க்கை இருக்கிறது. அது என்னுடைய வாசகர் வட்டத்தினர் மட்டுமே அறியக் கூடியது. 

உங்களுக்கு மீண்டும் 30 வயதாகிவிடுகிறது. நீங்கள் விரும்பும் விதமான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளலாம் என்றால்... தற்போது இருக்கும் உலகச் சூழலில் என்ன மாதிரியான வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொள்வீர்கள்? எந்த நாட்டில் வாழ்வதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? யாரை இணையாகக் கொள்வீர்கள்?

யாருமற்ற அனாதையாய் தெருவில் விழுந்து கிடக்க நேர்ந்தாலும் சரி, நிச்சயமாகத் திருமணம், குடும்பம் என்ற சிறைக்குள் நுழையவே மாட்டேன். யாரையும் இணையாகக் கொள்ளவும் மாட்டேன். எழுத்தாளர்களுக்குக் குடும்பம் என்ற அமைப்பு ஒத்து வராது. 

முப்பது வயதுக்குள் செல்ல முடிந்தால் முதல் வேலையாக ஸ்பானிஷ் கற்றுக்கொண்டு ஸ்பெய்னில் போய் தங்கி விடுவேன். அப்போதுதான் ஐரோப்பா முழுவதும் சுற்றிக்கொண்டிருக்க முடியும். இதே கேள்வியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தால் யோசிக்கவே இல்லாமல் சட்டென்று பாரிஸ் என்று சொல்லியிருப்பேன். ஆனால், அப்போது இருந்த பாரிஸ் இப்போது இல்லை. ஸ்பெய்னையும் நிரந்தர வாழ்விடமாகக் கொள்ளாமல் கொஞ்ச காலம் சீலே, கொஞ்ச காலம் தாய்லாந்து, மீதிக் காலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று சுற்றிக்கொண்டே இருப்பேன். ஸ்பெய்ன்தான் தலைமை இருப்பிடம். தமிழ்நாட்டுப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன். ஆனால், தமிழில்தான் எழுதுவேன். ஏனென்றால், என்னதான் முயன்று கற்றுக்கொண்டாலும் முப்பது வயதில் கற்றுக்கொள்ளும் மொழியை நம்முடைய எழுத்து மொழியாகக் கொள்வது கடினம். 

ஜோக்கர் வாஸ் ஹியர், நேநோ, நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டுவந்தவர்களும் பிணந்தின்னிகளும், கர்நாடக முரசும் நவீன தமிழிலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் போன்ற பல பரிசோதனை முயற்சிகளான கதைகளை எழுதியுள்ளீர்கள். சமீபமாக அப்படி எதுவும் நீங்கள் எழுதியதாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் எழுதுவதற்குத் திட்டம் இருக்கிறதா? 

என் வாழ்வில் அது ஒரு காலகட்டம். குடும்ப அமைப்பிலிருந்து முற்றாக விலகி ஒரு நாடோடியாக வாழ்ந்த காலகட்டம். இப்போதும் குடும்பத்திலிருந்து விலகி ஏதோ ஒரு தொலைதூர இடத்தில் வாழ நேர்ந்தால் அப்படி எழுத முடியும். அதாவது, சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் முழுசாகத் துண்டித்துக்கொள்ள வேண்டும். ஒரு வருட காலம் போதும். அப்படி ஒரு பத்து கதைகளை எழுதிவிட முடியும். இப்போது எப்படியென்றால், ஒரு வாக்கியத்தை எழுதுவேன். மனைவியிடமிருந்து அழைப்பு வரும். போய் அந்த வேலையைச் செய்துவிட்டு வருவேன். அடுத்த வாக்கியத்தை எழுதுவேன். அடுத்த அழைப்பு. அடுத்து ஒரு பத்தியை முடிப்பேன். அழைப்பு. சில சமயங்களில் “என்னம்மா இது, பைடக்ஸ் பண்ணுவதுபோல் இருக்கிறது? இனிமேல் கூப்பிட்டால் ஐந்து நிமிடத்துக்கு வர மாட்டேன்” என்று சொல்லுவேன். இதோ இந்தப் பேட்டியைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதுகூட சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட அழைப்புகள் வந்திருக்கும். (கடைசி அழைப்பு: “பால் காய்ச்சிக் கொடு.” பத்து நிமிடம் அடுப்படியில் நின்று பாலைக் காய்ச்சிக் கொடுத்துவிட்டுத்தான் இந்தப் பத்தியைத் தொடர்கிறேன்). 

இங்கே இருந்துகொண்டுதான் ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், ஒருபோதும் நேநோ போன்ற கதைகளை இந்தச் சூழலில் வாழ்ந்துகொண்டு எழுத முடியாது. அது சாத்தியமே இல்லை. 

இரவு பத்து மணிக்கு உறங்கும் பழக்கம் உள்ளவன் என்பதால் இரவிலும் எழுத முடியாது. இந்தப் பைத்தியக்கார விடுதியிலிருந்து வெளியேறினால் நீங்கள் குறிப்பிடும் கதைகளைப் போல் மீண்டும் எழுத முடியும். போர்ஹேஸ் அப்படியான தனிமையிலிருந்துதான் தன்னுடைய தனித்துவமிக்க கதைகளை எழுதினார். அவர் ஏன் தெருவுக்கு வந்து போராடவில்லை என்று ஹூலியோ கொர்த்தஸாரும் மற்ற அர்ஜெண்டீனிய எழுத்தாளர்களும் குற்றம் சாட்டியபோது அது பற்றி போர்ஹேஸ் கவலையேபடவில்லை. பிரெஞ்சில் எழுந்த அமைப்பியல்வாதத் தத்துவப் போக்குக்கு போர்ஹேஸின் கதைகள் மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன என்பதுதான் வரலாற்றில் அவரது இடம். 

உலக அளவில் இப்போது உயிருடன் இருக்கும் எழுத்தாளர்களில் நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?

எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்கலாம். ஆனால் ஒரு எழுத்தாளரை இன்னொரு எழுத்தாளர் ஒருபோதும் சந்தித்துவிடக் கூடாது. ஏனென்றால், ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னை இந்த உலகின் தலைசிறந்த எழுத்தாளர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார். நான் உட்பட. அவர்களைப் பொருத்தவரை அவர்களே நம்பர் ஒன். எனவே, நான் ஒரு எழுத்தாளரைச் சந்தித்தால் மரியாதைக் குறைவு ஏற்படும். மேலும், என்னை வாசிக்காத யாரையும் நான் சந்திக்க விரும்புவதில்லை. அவர் சமூகத்தில் எத்தனை மேன்மையான இடத்தில் இருந்தாலும் சரி. நான் சந்திக்க விரும்பிய ஒரே நபர் மைக்கேல் ஜாக்ஸன். ஆனால், அவர்கூட என்னை வாசித்திருந்தால்தான் சந்திப்பேன். இப்போதைய நிலையில் என் ஈர்த்த ஆளுமைகள் என்று வேண்டுமானால் சிலரைச் சொல்லலாம். ஜெர்மானிய இயக்குனர் வெர்னர் ஹெர்ஸாக் (வயது 80), மிலன் குந்தேரா (வயது 94), பாடகர் எல்ட்டன் ஜான் (76), சீலே அதிபர் காப்ரியேல் போரிச் (வயது 37). இப்படி ஒரு பத்து இருபது பேரைச் சொல்ல முடியும்.  இவர்களில் வெர்னர் ஹெர்ஸாக் மட்டுமே எனக்குச் சமமான சாதனையாளர் என்று கருதுகிறேன். 

நீங்கள் ஆணாக இருப்பதாலா என்று தெரியவில்லை... இளைஞர்களுக்குத்தான் நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று பெரும்பாலான நேரங்களில் சொல்வதுபோல் தோன்றுகிறது. யுவதிகளுக்கு எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? 

நான் பொதுவாக பாலின வேறுபாடு பார்ப்பதில்லை. சொல்லப்போனால், எழுதும்போது நான் வாசகர் பற்றியே நினைப்பதில்லை. ஆனாலும் பெண்களுக்காகவே ‘அன்பு: ஓர் பின்நவீனத்துவ்வாதியின் மறுசீராய்வு மனு’ என்ற நாவலை எழுதியிருக்கிறேன். அதைப் படித்த பல பெண்கள் வாழ்க்கை பற்றிய தங்கள் பார்வையே மாறிவிட்டதாக எழுதினார்கள். அந்த நாவலே பெண் இனத்துக்கு நான் கொடுத்த பெரிய பரிசு.  

அதிகாரத்தின் வாயில் வரை செல்ல முடிந்த உங்களால் எது அதிகாரத்தின் உள்ளே செல்லத் தடுத்தது?

என் முன்னோடிகளின் வாழ்க்கையும் தரிசனமும். ஒரே வார்த்தையில் சொன்னால் பாரதி. அதன் பிறகு க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் என்று ஏராளமான பேர். அரசர்களின் வாயிலைத் தட்டி உள்ளே போய் அரசனை வியந்து பாடி, பரிசு பெற்ற கூட்டம்தான் எழுத்தாளர் கூட்டம் என்றாலும், நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்று பாடியதும் எழுத்தாளன்தான். நான் பின்னதை எடுத்துக்கொண்டேன். சுதந்திரமே என் எழுத்தின் ஆதார சுருதி என்று குறிப்பிட்டேன். அதிகார வாயிலைத் தாண்டி உள்ளே போனால் சுதந்திரத்தை வாயிலுக்கு வெளியே கழற்றி வைக்க வேண்டியிருக்கும். அந்த சமரசத்தை என் உயிரே போனாலும் செய்ய மாட்டேன். அதிகாரத்தினால் கிடைக்கும் வசதி வாய்ப்புகளைவிட, புகழைவிட, சுதந்திர உணர்வு மேலானது. இந்திரா காந்தியின் தனிப்பிரிவில் ஸ்டெனோவாகப் பணியாற்ற தில்லி கவர்னர் என்னை அழைத்த போது நான் அதை மறுத்ததன் காரணம், பொருளியல் ஆதாயங்களைவிட சுதந்திரமே முக்கியம் என்று கருதியதுதான். ஒப்புக்கொண்டிருந்தால் நான் ஒரு மத்திய மந்திரியாகக்கூட ஆகியிருக்கலாம்!

(அடுத்த வாரம் வாசகர்கள் கேள்விகளுடன் நிறைகிறது சாருவுடனான உரையாடல்.  வாசகர்கள் தங்கள் கேள்விகளை aruncholeditorial@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம்.)

 

தொடர்புடைய பேட்டிகள் 

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு
எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி
தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: சாரு

எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: சாரு
செக்ஸை எப்படி அணுகுவது? சாரு பேட்டி
டி20, ரீல்ஸ் மாதிரி எழுத்திலும் வரும்: சாரு
அதிசாகச நாவலுக்கானது கருணாநிதியின் வாழ்க்கை: சாரு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

BABUJI S   1 year ago

சாரு அவர்களின் பேட்டியை தொடர்ந்து படிக்கிறேன். அவரை நெடுங்காலமாக அறிபவன். அவரது உரைகள் சிலவற்றை, விஷ்ணுபுரம் பரிசு ஏற்புரை சேர்த்து கேட்டுள்ளேன். அவரது புத்தகங்களை படிக்க விரும்புகிறேன். நான் ஓய்வுபெற்ற வங்கி ஊழியன். இலக்கிய ஆர்வமும் வாசிப்பு பழக்கமும் உள்ளவன். என்னைப் போன்ற வாசகர்களுக்கு பரிந்துரைக்கும் அவரது புத்தகங்களை அறிய விரும்புகிறேன்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நிதித்துறைவின்னி: இணையற்ற இணையர்!இயக்கக் கோட்பாடுகாலம்தோறும் கற்றல்இந்தியத் தொலைக்காட்சிகள்டி.வி.பரத்வாஜ்அரசியல் ஆலோசகர்கள்இலக்கிய வட்டம்காலவெளிமுகத்துக்குப் ‘பரு’ பாரமா?மகாராஜா ஹரி சிங்சாதிரீதியிலான அவமதிப்புதேர்தல் வாக்குறுதிகளில் ‘இலவசம்’ கூடாதா?கல்சுரல் காபிடல்பிடிஆர்ஜெயமோகன் உரையாடு உலகாளு பேட்டிசுந்தர ராமசாமி: தந்தை கூற்றுக் கவிதைசர்வாதிகார நாடுகள்வலுவான கட்டமைப்புஅசோகர் அருஞ்சொல் மருதன்ashok selvan keerthi pandian marriageபாசிஸம் - நாசிஸம்ஸரமாகோவின் உலகில் ஒரு வழிகாட்டிராஜராஜனும் வெற்றிமாறனும்: யார் இந்து?உறவுகள்நிர்வாகக் கலாச்சாரம்ரத்னகிரிவெறுப்பரசியல் 2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுகுறை தைராய்டு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!