பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி

சமஸ் | Samas
29 Jan 2023, 5:00 am
1

படம்: சுபான் பீர் முஹம்மது

தமிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

வெயில், பனி, மழை… இவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் உணர்வுலகில் தள்ளிவிடக் கூடியவை. படைப்பாளிகள் தங்களை ஏதோ ஒன்றுடன் மிக நெருக்கமாகப் பொருத்திக்கொள்கிறார்கள். நீங்கள் எந்தப் பருவத்துடன் நெருக்கமாக உணர்கிறீர்கள்?

உண்மைதான். பருவ காலம் என்பது துறவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் அவர்களது ஆழ்நிலை இருப்போடு பிணைந்தது. நாகூரில் இருந்த வரை – என் வாழ்வின் முதல் இருபத்தைந்து ஆண்டுகள் – வெயில் மற்றும் மழை ஆகிய இரண்டு பருவங்கள்தான் பரிச்சயமாகி இருந்தன. அதிலும் நாகூர் மழை பற்றி உலகமே அறியும். நாகூரில் பெரும்பாலும் புயலைக் கூட்டிக்கொண்டுதான் மழை வரும். அதனால் இன்றளவும்கூட மழை என்றால் ஒருவித கசப்புணர்வுதான் உண்டாகிறது எனக்கு. மழையைப் பற்றி மிக நெகிழ்வாக தமிழ்க் கவிகள் பலர் எழுதியிருக்கிறார்கள். அதையெல்லாம் படித்தால் எனக்கு எரிச்சலே ஏற்படும். எனக்கு மழை பிடிக்காது. ஆனால் கடும் கோடை, கடும் பனி என்ற இரண்டு உச்சங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

பருவங்களை நேசிப்பதற்கும், வெறுப்பதற்கும் பிரத்யேகமான அனுபவங்கள்கூட சமயங்களில் காரணம் ஆகின்றன. உங்களுக்கு மழை பிடிக்காமல் போனதற்கு அப்படி ஏதும் காரணங்கள் இருக்கின்றனவா?

மழையை ரசிக்கக்கூடிய வாழ்க்கை எனக்கு அமையவில்லை. இன்று நான் மழையில் நனையாத வசதியில் இருந்தாலும், என்னைச் சுற்றி வாழும் நாய் - பூனைகளுக்காக மனம் படாத பாடுபடும். நான் அவற்றோடு என்னை இணைத்துப் பார்க்கிறேன் என்றும்கூட சொல்லலாம். எந்த தேசத்தில் நாய்களும் பூனைகளும் தெருக்களில் அனாதையாக அலைகின்றனவோ அந்த தேசம் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்றே அர்த்தம். பிரான்ஸிலோ ஜெர்மனியிலோ அல்லது வளர்ச்சி அடைந்த எந்த ஒரு மேற்கு ஐரோப்பிய தேசத்திலோ நான் தெருக்களில் திரியும் பிராணிகளைப் பார்த்ததில்லை. இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்று நினைப்பது எத்தனை பெரிய சுயநலம்? நாய்களும் பூனைகளும் வனத்தில் வாழ படைக்கப்படவில்லை. அவை மனித வர்க்கத்தின் நட்பில் வாழ வேண்டியவை. அவற்றை இந்தியர்கள் இப்படி அனாதைகளாகத் தெருவில் திரிய விட்டிருப்பதும், சகல விதமான சித்ரவதைகளைக் கொடுப்பதும் மிகவும் கொடுமையான விஷயம்.

செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், நம்முடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே அக்கறையில் பெரிய வேறுபாடு தெரியவில்லை. சமூக அளவில் பெரிய வேறுபாடு தெரிகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சமூகமாக நாம் ஒரு பெரிய மரபை இழந்துவிட்டதாகப் பார்க்கிறேன். போன வாரம் நடந்த ஒரு சம்பவம். இன்றோ நாளையோ குட்டிகளை ஈன்றுவிடும் நிலையில் உள்ள ஒரு கர்ப்பிணி ஆடு சாந்தோம் நெடுஞ்சாலையின் குறுக்கே மாட்டிக்கொண்டது. காலை எட்டரை மணி. இந்த நெடுஞ்சாலை சென்னையின் பிஸியான சாலைகளில் முதன்மையானது. இதுவே ஒரு ஐரோப்பிய நாட்டில் நடந்திருந்தால் யாரும் எதுவும் செய்யாமலேயே வாகனங்கள் ஆங்காங்கே சாலையில் நின்றிருக்கும். ஆடு சாலையைக் கடந்த பிறகுதான் வாகனங்களை எடுப்பார்கள். ஆனால் இங்கே யாருக்கும் அந்த ஆடு பற்றிய கவலையே இல்லை. வாகன்ங்கள் சர் சர் என்று சீறிப் பாய்ந்தபடி இருக்கின்றன. பக்கத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள டிரைவர்கள் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

என் மனைவி அவந்திகா சாலையின் குறுக்கே புகுந்து வாகனங்களை நிறுத்தி ஆட்டை எங்கள் அடுக்ககக் குடியிருப்பின் பக்கம் போகச் செய்தாள். ஆனால், எங்கள் குடியிருப்பின் செக்யூரிட்டி என்ன செய்தார் தெரியுமா? கேட்டில் நின்றுகொண்டு ஆட்டை உள்ளே விடாமல் மறித்தார். ஏற்கெனவே உயிருக்குப் பயந்து அல்லாடிக்கொண்டிருந்த ஆடு மீண்டும் ரோட்டில் பாய்ந்துவிட்டது. மீண்டும் தன் உயிரைத் துச்சமாகக் கொண்டு அவந்திகா ரோட்டின் குறுக்கே நின்று வாகனங்களை நிறுத்தி ஆட்டை பக்கத்தில் இருந்த டுமீங் சந்துக்குள் விட்டாள்.

இதே மண்ணில்தான் எல்லா உயிர்களிடத்திலும் இருப்பது பிரம்மம்தான்; எல்லா உயிர்களும் சமம்தான்; அண்டம்தான் பிண்டம் என்றெல்லாம் தத்துவங்கள் தோன்றின. பிராணிகள்கூட இல்லை, ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!’ என்று சொன்ன மரபும் நம்முடையது. இதை எங்கோ இழந்துவிட்டோம். நான் ஒரு எழுத்தாளன் என்பதால் அப்படி இருக்க முடியாது என்று நினைக்கிறேன். என்னதான் நான் ஃபூக்கோ, தெரிதா, ரொலான் பார்த் என்று பிரெஞ்ச் சிந்தனையாளர்களின் மாணவனாக இங்கே இயங்கினாலும் சித்தர் மரபின் வாரிசாகவும்தான் என்னை நான் உணர்கிறேன். ஒருசமயம் இங்கே சென்னையில் ஒரு வார காலம் பெருமழை பெய்து நகரமே வெள்ளத்தில் மிதந்தபோது கையில் நாய் பூனைகளுக்கான உணவோடு தெருத் தெருவாக நான் அலைந்தேன்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி

சமஸ் | Samas 25 Dec 2022

காருண்யம் என்று பேசும்போது அதை சைவம் – அசைவத்துடன் இணைத்து ஓர் எல்லைக்குள் பேசும் அபத்தம் இங்கே இருக்கிறதே?

என்னுடைய மனைவி அவந்திகாவை சாலையைக் கடக்கும் ஒரு ஆட்டின் அவஸ்தை எவ்வளவு துன்புறுத்தக் கூடியது என்பதைச் சற்று முன் சொன்னேன். அடிப்படையில் ஒரு வைஷ்ணவர். ஆனால் எனக்காக நண்டு, திருக்கை, வாத்து, பன்றி எல்லாம் சமைப்பாள். கருவாடுகூட போடுவாள். இரண்டுமே காருண்யத்தின் வெளிப்பாடுகள் என்றே அவள் பார்க்கிறாள்.

மரபார்ந்து சைவ உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பவர்களைவிடவும் புதிதாக வசதி நிலைக்கு உயர்பவர்கள் சைவத்துக்கும், சடங்குகளுக்கும் மாறும்போது அவர்களுடைய கூச்சல் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அமைப்புடன் அனுசரிக்காமல் ஒருவரால் பெரிய வசதியை அடைய முடிவதில்லை. அப்படியென்றால், நம்மைச் சுற்றியுள்ள அநீதிகளுக்கு முகம் கொடுப்பதைவிடவும் காருண்ய உணர்வை நிறைத்துக்கொள்ள ஒருவேளை சைவம் எளிய வழிமுறையாக இருக்கிறதா?

அப்படியும் பார்க்கலாம். ‘மேற்கத்தியர்கள்தான் சக உயிர்கள் மீது கருணையில்லாமல் எல்லாவற்றையும் அடித்துத் தின்கிறார்கள்; பன்றியையும் மாட்டையும் தின்கிறார்கள்; நான் வெங்காயம் பூண்டுகூட சாப்பிட மாட்டேன்’ என்பது காருண்யம் இல்லை. சக உயிர்களுக்கான இடம் அவர்களுடைய சமூகத்தில் என்னவாக இருக்கிறது, நம்முடைய சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்று நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டால், இவ்வளவு ஏற்றத்தாழ்வு உள்ள சமூகமாக இருக்க மாட்டோம் இல்லையா?

மோசம்… சரி, பருவத்துக்கு நாம் திரும்புவோம். கோடையை எந்த நிலத்தோடு உங்கள் மனம் தொடர்புபடுத்தும்; பனிக் குளிரை எந்த நிலத்தோடு தொடர்புபடுத்தும்?

இரண்டுமே டெல்லியோடுதான். எனக்கு உச்சம் அல்லவா பிடிக்கும்? டெல்லிதான் அந்த உச்சத்தை நமக்குக் காட்டும். தில்லி வெய்யில் மிக உக்கிரமானது. தில்லியில் வசிக்கும் மேற்கத்தியர் எல்லோரும் கோடைக்குப் பயந்து தத்தம் ஊருக்குப் போய்விடுவார்கள். கோடையில் தில்லியில் எந்தக் கலாச்சார நடவடிக்கையும் இருக்காது. குளிர்காலத்தில் கோலாகலமாக இருக்கும் தூதரகங்கள் கோடையில் வெறிச்சோ எனக் கிடக்கும். பலருக்கு கோடையில் சன் ஸ்ட்ரோக் வந்து பாதிக்கப்படுவார்கள். சிலர் இறந்துபோவதும் உண்டு. ஆனால், என் உடல் அமைப்பின் விசித்திரமோ என்னவோ கோடை என்னை ஒன்றுமே செய்யாது. கோடையை நன்கு அனுபவிக்கவும் செய்வேன். பனியும் அப்படித்தான். ஏற்கெனவே சொல்லிவிட்டேன். அதீத கோடையும் அதீத பனியும் டெல்லியை நினைவூட்டுவதுபோலவே சில விஷயங்களைப் பார்த்தாலே டெல்லியோடும், கோடை – குளிரோடும் என் மனம் தொடர்புபடுத்தும்.

நாம் உணவுகள் தொடர்பாகப் பேசுவோம். உங்கள் எழுத்துகளில் உணவுக்கு முக்கியமான இடம் இருக்கிறது. எதாவது விசேஷ காரணம் உண்டா?

உணவு எனக்கு மதம். பேச்சு வழக்கில் ஃபுட்டி (foodie) என்று சொல்கிறோம் இல்லையா, அதை சுத்த ஆங்கிலத்தில் ‘கேஸ்ட்ரொனொம்’ (gastronome) என்று சொல்வார்கள். நான் ஒரு கேஸ்ட்ரொனொம் ஆசாமி. உலகம் பூராவும் உள்ள உணவு வகைகளை ருசித்து ருசித்து உண்பவன்.

உணவு பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். எனக்குப் பருவ காலம் என்றாலே அது உணவோடுதான் சம்பந்தப்பட்டிருக்கிறது. நான் ஒரு ‘ஹெடேனிஸ்ட்’ (hedonist) இல்லையா? நான் மட்டும் இல்லை. தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் அனைவருமே ஹெடேனிஸ்டுகள்தான்!

தில்லியில் எல்லாப் பருவநிலைகளும் மிகத் துல்லியமாகத் தெரியவரும். பச்சை முள்ளங்கி கண்ணில் பட்டால் குளிர்காலம் தொடங்கிவிட்டது என்று பொருள். சந்தடி மிகுந்த கனாட் ப்ளேஸில் கோட்டும் சூட்டுமாக கையில் பச்சை முள்ளங்கியை வைத்துக் கடித்துக்கொண்டு போகும் கனவான்களை நீங்கள் இந்தியாவில் வேறு எந்த நகரிலாவது காண முடியுமா என்று தெரியவில்லை. முள்ளங்கியின் மேல் தோலை சீவிவிட்டு செடியோடு கொடுப்பார்கள். செடிப் பகுதியைக் கையில் பிடித்துக்கொண்டு முள்ளங்கியைச் சாப்பிட வேண்டும். இதை ருசித்திருக்காத ஒருவர் தில்லி கலாச்சாரத்தை ஸ்பரிசித்துப் பார்க்கவே இல்லை என்றுதான் சொல்வேன்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு

சமஸ் | Samas 01 Jan 2023

தந்தூரி ரொட்டி ரொம்பவும் எனக்குப் பிடிக்கும்; தொட்டுக்கொள்ள டால் ஃப்ரை (வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பருப்பு), பேங்கன் பர்த்தா (கத்தரிக்காயில் செய்வது), மேத்தி (கீரை), கோஃப்தா (இங்கே செய்யும் பருப்பு உருண்டைபோல) அல்லது மட்டன் கறி, கூட வெங்காயம். இந்த வெங்காயமும்கூட டெல்லியில் ஓர் அறிவிப்பான்தான்; கோடையா குளிர்காலமா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். வெங்காயம் என்றால் கோடை. முள்ளங்கி என்றால் குளிர்.

தந்தூரி ரொட்டி, சப்ஜி, கடித்துக்கொள்ள பச்சை முள்ளங்கி மூன்றும் இருந்தால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். முள்ளங்கியை வெட்டி அதில் எலுமிச்சையைப் பிழிந்து சாப்பிட வேண்டும். அந்த முள்ளங்கிக்காகவே நான் குளிர்காலம் எப்போது வரும் என்று ஏங்கிக்கொண்டிருப்பேன். கூடவே பச்சை மிளகாயும் இருக்கும். வட இந்தியர்கள் பச்சை மிளகாய் தொட்டுக்கொள்ளாமல் ரொட்டி சாப்பிட மாட்டார்கள். அந்தப் பச்சை மிளகாய்ப் பழக்கம் இன்னமும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

நாம் பருவங்களை உணவோடுதான் கொண்டாட முடியும் என்று தோன்றுகிறது. பருவங்களுக்கு இனிமை சேர்ப்பது அல்லது பருவங்கள் வழி இனிமை சேர்ப்பது என்று அதைச் சொல்லலாம். கோடையில் ‘நிம்பு பானி’ குடிப்பது ஓர் இனிமை (குளிர்ந்த நீரில் அல்லது சோடாவில் எலுமிச்சையும் உப்பும் கலந்த பானம்). கோடையில்தான் தர்பூசணி கிடைக்கும். அது ஓர் இனிமை. நல்ல வெய்யிலில் அலைந்துவிட்டு சுடச் சுட இஞ்சித் தேநீர் அருந்துவது ஓர் இனிமை. கோடையின் இரவில் குல்ஃபி சாப்பிடுவது இன்னோர் இனிமை. கோடையில் தமிழ்நாடு வந்தால் இங்கே கிடைக்கும் இளநீரும் நுங்கும் இனிமை. இப்படி கோடைக்குப் பலவிதமான இனிமைகள் உண்டு; பனிக்கும் பலவிதமான இனிமைகள் உண்டு.

பல நாட்டு உணவையும் தேடிச் சாப்பிடும் வழக்கம் உங்களுக்கு உண்டு என்பது தெரியும். அப்படி என்னவெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும்?

உலகிலேயே எனக்குப் பிடித்த சில உணவு வகைகள், தாய்லாந்தின் தோம் யாம் சூப், சீனாவின் ஃபிஷ் பால் சூப் (சிங்கப்பூரில் உள்ள தெக்காவில் உள்ள பள்ளம் என்ற இடத்தில் ஒரு சீனர் கடையில் புதிதாகச் செய்த ஃபிஷ் பால் சூப் உலகத் தரமாக இருக்கும்), பெரூவின் புகழ் பெற்ற செவிச்சே (Ceviche), தமிழ்நாட்டு இட்லி, ஜப்பானின் சஷீமி… இப்படி  எனக்குப் பிடித்தமான நூற்றுக்கணக்கான உணவு வகைகள் உண்டு.

கேஸ்ட்ரநாம் ஆசாமிகளின் சொர்க்கம் என்று பெரூவைச் சொல்வார்கள். சஷீமி என்பது பச்சையான சமைக்காத மீன். தோம் யாம், இட்லி, சஷீமி ஆகிய மூன்றும்தான் உலகின் சிறந்த உணவு வகைகள் என்பது என் கட்சி.

சஷீமி ஜப்பானில் கிடைக்கும் தரத்தில் சென்னையில் கிடைக்கிறது. சஷீமி மீன் கொஞ்சம், ஒரு கவளம் சோறு, இரண்டையும் வாயில் போட்டுக்கொண்டு வஸாபி துகையலைத் தொட்டுக்கொண்டால் அது சொர்க்கம். வஸாபி துகையல்போல் காரமான ஒரு உணவு வகை உலகிலேயே கிடையாது. பச்சைக் கடுகையும் பச்சை முள்ளங்கியையும் அம்மியில் அரைத்தால் அதுதான் வஸாபி துகையல். நம்மில் பலருக்குக் கடுகு காரமாக இருக்கும் என்பதே தெரியாது. நாம் அதை எண்ணெயில் போட்டு வறுத்து அதன் காரத்தைப் போக்கிவிட்டு உண்கிறோம். ஆனால், பழமொழியில் மட்டும் காரத்தை வைத்திருக்கிறோம். எனக்குத் தமிழ்நாட்டு வைன் ஷாப்புகள் ஞாபகம் வருகிறது. பெயரில்தான் வைன் இருக்கும், கடையில் பிராந்தி, விஸ்கி, ரம், வோட்காதான் இருக்கும். வைன் இருக்காது. வஸாபியின் காரம் மூச்சுவிட முடியாமல் செய்துவிடும். கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒரு கலாச்சாரத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் அவர்களின் உணவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஸ்ரீவைஷ்ணவ கலாச்சாரத்தை அறிய வேண்டுமா? அக்கார அடிசலை நீங்கள் ருசி பார்த்திருக்காவிட்டால் நீங்கள் அந்தக் கலாச்சாரத்தைத் தொடவே இல்லை என்று பொருள். ஆனால், இக்காலத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே அக்கார அடிசல் தெரியாது. இங்கே ஓட்டல்களில் கொடுக்கும் அக்கார அடிசல் அக்கார அடிசலே கிடையாது. நான் சொல்லும் அக்கார அடிசலை வெண்கலப் பானையில்தான் செய்ய வேண்டும். அக்கார அடிசல் உண்டால் நெய் முழங்கை வரை வழியும் என்று ஆண்டாள் பாடியிருக்கிறாள். அவந்திகா எனக்குக் கருவாடு எல்லாம் செய்து தருகிறாள். அக்கார அடிசல் செய்து தரவில்லை. கேட்டால் அவர்கள் குடும்பத்திற்கே தெரியாதாம்.

அடிப்படையில் நீங்கள் ஒரு கடலோர ஊரில் பிறந்தவர். நீண்ட காலமாக வசிக்கும் சென்னையிலும் கடலுக்குக் கூப்பிடு தொலைவில்தான் இருக்கிறீர்கள். கடலைப் பற்றி இன்னும் நாம் பேசவே இல்லை?

கடல் அருகேதான் வாழ்ந்தேன், வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றாலும்,  கடல் எனக்கு ஒருவித பயத்தையே அளிக்கிறது; மழையைப் போலத்தான் கடலும் எனக்கு ஓர் அசூயையே தருகிறது.

கடல் நம்மை வனத்தைப் போல், மலையைப் போல் அரவணைத்துக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். வனமும் மலையும் ஒன்றோடு ஒன்று கலந்தது. அதனால்தான் துறவிகள் வனங்களை நோக்கிச் சென்றார்கள். ஏன் சித்தார்த்தன் தன் அரண்மனையில் இருந்தபடியே ஞானத்தைத் தேடியிருக்க முடியாதா? இப்போதும் பல மேற்கத்திய எழுத்தாளர்கள் மிகவும் தனிமையான இடங்களில் இருந்துகொண்டுதான் எழுதுகிறார்கள்.

இருபது வயது வரை நான் வனத்தையோ மலையையோ பார்த்ததே இல்லை. பொன்மலை என்ற ஒரு குன்றுதான் நான் பார்த்த மலை. இருபத்தைந்து வயதுக்கு மேல் என் வாழ்க்கை முழுவதும் வனங்களும் மலைகளுமே தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

கூடவே பனியும் சேரும்போது அசாதாரண சூழலாக அது உருவெடுத்துவிடுகிறது. இமயமலை என்னை ஈர்த்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம் இதுதான். வனமும் மலையும் பனியும் இணைந்து நம்மை ஒரு தாயைப் போல் அள்ளி அரவணைத்துக்கொள்கின்றன.

சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் ஒரு பெருவெள்ளம் வந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். ஜூலை முதல் வாரம் வெள்ளம். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான பாலங்களும் சாலைகளும் கோவில்களும் மாபெரும் சிலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. நானும் இன்னும் பத்து நண்பர்களும் ஜூலை இறுதி வாரம் இமயம் செல்வதாக ஜூனிலேயே திட்டமிட்டிருந்தோம். ஜூலை முதல் இரண்டு வாரம் வெள்ளம். வெள்ளம் வடிவதற்குள் நாங்கள் செல்கிறோம். மறுபடியும்கூட வெள்ளம் வரலாம். நாங்கள் ஷிம்லாவிலிருந்து லே வரை மோட்டார் பைக்கில் செல்வதாகத் திட்டம். எனக்கு சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. அதனால் நண்பர்களின் பைக்கின் பின்னால் உட்கார்ந்து செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

லேயிலிருந்து வேனில் பாங்கோங் ஏரி செல்ல வேண்டும். பாங்கோங் ஏரி 14,000 அடி உயரம். அதற்குக் கொஞ்சம் முன்னால்தான் எனக்கு ஒரு ஹார்ட் அட்டாக் வந்திருந்தது. உயரமெல்லாம் போகவே கூடாது என்று அறிவுறுத்தினார் மருத்துவர். மட்டுமல்லாமல் பாங்கோங் ஏரியில் மனிதர்களுக்குத் தேவையான அளவு பிராண வாயு இல்லாமல் அவ்வப்போது அங்கே போகும் சுற்றுலாப் பயணிகள் மரணம் அடைவதும் உண்டு.

நான் நண்பர்களிடம் சொன்னேன், நாம் பதினோரு பேர் அல்ல, பன்னிரண்டு பேர் என்று. முழித்தார்கள். சிவனும் நம் கூடவே வருகிறார், கவலை வேண்டாம் என்று தைரியம் சொன்னேன்.

ஷிம்லாவிலிருந்து பைக்கில் சென்றபோது பாதையெல்லாம் சேறும் சகதியும் வெள்ளமுமாக இருந்தது. ஒரு அடி தப்பினால் எலும்புகூட கிடைக்காத அளவுக்கு அதல பாதாளம். லே செல்லும் வழியில் சார்ச்சு என்ற ஊரில் குழுவில் சிலருக்கு பிரக்ஞை தவறிவிட்டது. சிலர் தொடர்ந்து வாந்தி எடுத்தார்கள். எனக்கு மூக்கிலிருந்து குருதி கொட்டியது. ஆனாலும் அந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. பாங்கோங் ஏரியில் ஒன்றரை நாள் இருந்தோம். மறக்க முடியாத அனுபவம்.

மலையும் வனமும்தான் எனக்கான உலகமாகத் தோன்றுகின்றன. கூடவே பனியும் சேரும் இடத்தில் நான் அப்படியே அந்த உலகத்தோடு கலந்துவிடுகிறேன்!

சரி, ஏன் டெல்லியிலிருந்து சென்னைக்குத் திரும்பினீர்கள்? புதிதாக இங்கு நீங்கள் சேர்ந்த அஞ்சல் துறை அனுபவங்கள் எப்படி இருந்தன? ‘ஸீரோ டிகிரி’ போன்ற எழுத்துமுறை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்?  

(அடுத்த ஞாயிறு பேசுவோம்…)

 

தொடர்புடைய பேட்டிகள்

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு
சர்தாஜிக்களின் கைகளில் இரண்டு கோப்பைகள்: சாரு பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1

1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Samuvel Raj    1 year ago

"நாய்களும் பூனைகளும் வனத்தில் வாழ படைக்கப்படவில்லை. அவை மனித வர்க்கத்தின் நட்பில் வாழ வேண்டியவை." மேற்கூறிய சொற்றொடரில் இரு பிழைகளை (errors) சுட்டிக்காட்டலாம்: 1. அறிவியல் வழியாக சிந்திப்போமானால், "வனத்தில் வாழ படைக்கப்படவில்லை" என்ற சொற்றொடர் முற்றிலும் தவறு. எவ்வாறு? நாய்களும் பூனைகளும் (தாவரங்கள் உட்பட) மனிதனுடன் வாழ அல்லது மனிதனுக்காக "பழக்கப்பட்டவை" (ஆங்கிலத்தில்: domesticated or tamed). 2. "அருஞ்சொல்" போன்ற தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள்/நேர்காணலில் காணப்படும் பிழைகளை திருத்தும் அமைப்பு (ஆங்கிலத்தில்: Fact Checking Team) இல்லை என்று தெரிகிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

உள்ளூர் நிர்வாகம்வாக்குரிமையும் சமத்துவமும்பிராமண அடையாளம்ஊடகம்இம்பால் பள்ளத்தாக்குபிரதமர் நரேந்திர மோடிபன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுஎளிமைகருத்துதாய்லாந்துநீராருங் கடலுடுத்தசதைகள்1232 கி.மீ. அருஞ்சொல்சோஷலிஸ்ட் இயக்கத் தலைவர்ஜி20 உச்சி மாநாடுஒன்றிய - மாநில அரசுகளின் கூட்டுசக்திநுழைவுத் தேர்வுகள்குபெங்க்கியான் விருதின் முக்கியத்துவம் என்ன?ஒரு பயணம்இந்த வேலையும் சம்பளமும் நிச்சயம்தானா?லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரிசட்டக்கூறுகள் இடமாற்றம்கல்விச் சீர்த்திருத்தங்கள்காலநிலை மாற்றம்தமிழ் மரபில் கலக இலக்கியம்வீரப்பன் சகோதரர்கொர்பசெவ்: “நாங்கள் முயற்சி செய்தோம்!”இறையாண்மைஅடிமைத்தனம்ஏழைகளே இல்லை - இந்தியாவில்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!