பேட்டி, கலை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு

சமஸ்
12 Feb 2023, 5:00 am
2

படம்: பிரபு காளிதாஸ்

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

டெல்லியில் கணிசமான காலம் வாழ்ந்திருப்பதால் கேட்கிறேன், பலமொழிக்காரர்களும் வாழும் நிலமாக இருந்தாலும் ஏன் அங்கே நவீன தமிழுக்கு என்று ஓர் இலக்கிய வட்டத்தை உருவாக்க முடியவில்லை?

எந்த ஊரில்தான் உருவாக்கியிருக்கிறார்கள்? அமெரிக்காவில் இல்லாத தமிழர்களா? ஐக்கிய அரபு நாடுகளில் இல்லாத தமிழர்களா? ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள மலையாளிகள் இலக்கியரீதியாக மிகச் சிறந்த முறையில் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். கேரளத்துக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இலக்கியரீதியாக எத்தனையோ பர்வர்த்தனைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் ஒவ்வொரு பெருநகரிலும் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. ஆண்டு தோறும் பொங்கல், தீபாவளிப் பண்டிகைகள் கொண்டாடுவதுதான் அவர்களின் கலாச்சாரச் செயல்பாடு. இல்லாவிட்டால் தமிழ் சினிமா மிமிக்ரி ஆட்களை அழைத்து ஸ்டார் நைட் நடத்துகிறார்கள். மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர்களை அழைப்பார்கள். மற்றபடி அங்கே உள்ள தமிழர்களும், இந்தியர்களும் ஈடுபடும் கலாச்சாரச் செயல்பாடு, கோவில் கட்டுவதுதான். இப்போது கார்ப்பரேட் சாமியார்களை வரவழைத்து தியானம், யோகா என்றெல்லாம் கற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழிக்கிறார்கள். பொதுவாக வெளிநாட்டில் வாழ்பவர்கள் – குறிப்பாக மேற்கத்திய நாடுகள் – தாம் இந்தியாவில் விட்டுவிட்டு வந்த இந்துத்துவ அடையாளத்தை விரும்பி அணிந்துகொள்வதைப் பார்க்கிறேன். ஆனால் பாவம், அவர்கள் அணிந்துகொள்வது அரசியல் ஹிந்துத்துவமே ஒழிய இந்தியாவின் மரபோ மதிப்பீடுகளோ அல்ல. குறிப்பாக, இந்திய மரபின் சிறப்பு அதன் பன்மைத்துவம். அதுபற்றிய பிரக்ஞையே வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களிடம் இருப்பதில்லை. 

எட்டரைக் கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனின் புத்தகம் 200 பிரதிகள் விற்கிறது. இப்படிப்பட்டவர்கள்தானே அமெரிக்காவுக்கும் தில்லிக்கும் போகிறார்கள்? சுந்தர் பிச்சை நம் ஸ்ரீரங்கத்துக்காரர். அவருக்கு வள்ளுவரையும் பாரதியையும் தவிர வேறு ஓர் எழுத்தாளர் பெயர் தெரியுமா? ஏன், இந்தியாவே கொண்டாடிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் நினைத்திருந்தால் தமிழின் சமகால இலக்கியத்துக்கு எவ்வளவு செய்திருக்கலாம்? ஆனால் அவருக்குத் தெரிந்த இரண்டு எழுத்தாளர்கள், ஒருவர் வைரமுத்து. இன்னொருவர், கமல்ஹாசன். எப்படி தில்லியிலோ நியூயார்க்கிலோ தமிழ் இலக்கிய வட்டத்தை உருவாக்க முடியும்?

ஒட்டுமொத்தமான ஒரு ஃபிலிஸ்டைன் சமூகத்தினர் வேறு ஒரு மாநிலத்தில் அல்லது தேசத்தில் சென்று மட்டும் என்ன செய்துவிடப் போகிறார்கள்? அதுவும் தவிர, தில்லித் தமிழர்கள் பெரியாரின் இயக்கத்தினால் வெறுப்புற்று தில்லியில் குடியேறியவர்கள். அதனால் அவர்கள் தமிழையே துறக்கப் பழகினார்கள். இந்திக்காரர்களும் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால் பாவம் ரெண்டும் கெட்டானாக வாழ்கிறார்கள்; பெயருக்குப் பின்னே தம் ஜாதிப் பெயரைப் போட்டுக்கொண்டு நிற்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், உலகமெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் சமகால இலக்கியத்துக்கும் தொடர்பே இல்லை. சிங்கப்பூர், மலேஷியா கொஞ்சம் தேவலாம். ஆனால், அங்கே தெருவுக்கு ஒரு கோஷ்டி. கோஷ்டிகளுக்குள் கடும் சண்டை. அதனால் அந்த ஊர்களுக்கு என்னால் ஒரு இலக்கியப் பயணம்கூட செய்ய முடியவில்லை.

இத்தனைக்கு இடையிலும் ஒரே ஒரு நல்ல விஷயம். ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் சிலர் சமகால இலக்கியத்தின் சிறந்த வாசகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் திகழ்கிறார்கள்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி

சமஸ் 25 Dec 2022

ஆரம்பத்தில் தமிழ் முன்னோடிகளை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். பிற்பாடு நீங்களே ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ என்று அவர்களைப் போற்றி எழுதினீர்கள். இந்த மாற்றம் எந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தது? ஆரம்பக் கால நிராகரிப்பு உங்களுடைய போதாமையின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?

முன்னோடிகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன் என்றாலும், எல்லோரையும் இல்லை. க.நா.சு., தி.ஜ.ரங்கநாதன், கு.ப.ராஜகோபாலன், கரிச்சான் குஞ்சு, நகுலன், அசோகமித்திரன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி, எம்.வி.வெங்கட்ராம், லா.ச.ரா., கவிஞர்களில் ஞானக்கூத்தன், தேவதேவன், தேவதச்சன் என்று பலரையும் கொண்டாடியிருக்கிறேன். நான் கடுமையாக விமர்சித்தது புதுமைப்பித்தனையும், தி.ஜானகிராமனையும் மட்டுமே. இருவரும் நவீன தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என்பதால் அவர்களை விமர்சித்தது எல்லா முன்னோடிகளையும் விமர்சித்ததான ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டது. அதுபற்றி எனக்கு இப்போது எந்த வருத்தமும் இல்லை. அது என்னுடைய போதாமையும் இல்லை. அர்த்தமற்ற விமர்சனம் இல்லையே அது! புதுமைப்பித்தனை ஏன் விமர்சித்தேன்? அவருடைய புனைவெழுத்தில் தெரிந்த சாதியக் கண்ணோட்டத்தினால். அப்போதைய என் விமர்சனம் ஓர் அரசியல் நிலைப்பாடு. இப்போது அந்த இடத்திலிருந்து நான் வேறு இடத்துக்கு வந்துவிட்டேன். ஒருகாலத்தில் கம்யூனிஸ அனுதாபியாக இருந்து பிறகு அதிலிருந்து விலகியது போன்றது அது!

அப்படியென்றால், சாதியம் மீதான உங்களுடைய பார்வை மாறிவிட்டிருக்கிறதா?

இல்லை. சித்தாந்தங்கள், நெறிமுறைகள் சார்ந்து மட்டுமே எதையும் அணுக முடியாது என்ற இடத்துக்கு நகர்ந்தேன். அதை இடமாற்றம் என்று சொல்லலாம். உதாரணமாக, பெண்களைப் பற்றிய வள்ளுவரின் பல கருத்துகள் மிகவும் பிற்போக்காக இருக்கின்றன; அதற்காக வள்ளுவரைப் புறக்கணிக்க முடியுமா? அப்படியான ஒரு நிலைப்பாட்டுக்கு நகர்ந்தேன். இந்த மாற்றத்தை இலக்கியத்தில் அல்லது அரசியல் நோக்கில் என்னுள் நிகழ்ந்த மாற்றம் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. என்னுடைய ஆளுமையிலேயே நிகழ்ந்த ஒரு மகத்தான குவாண்டம் ஜம்ப் என்று சொல்லலாம். யோசித்துப் பார்த்தால் அதை ஜம்ப் என்றும் சொல்ல முடியாதுபோல் இருக்கிறது. வேர்கள் அறுந்துவிடாமல், நான் ஒரு புதிய மனிதனாகப் பிறந்தேன் என்பதுதான் சரி. உருமாற்றம். இந்த மாற்றம் எனக்குள் ஓர் ஆன்மிக அனுபவமாக மலர்ந்தது. நான் ஒன்றும் விவேகானந்தரைப் போல் கடவுளைக் கண்டுவிடவில்லை அல்லது எனக்குக் குருநாதர்கள் யாரும் கிடைத்துவிடவும் இல்லை. எந்தவித மிஸ்டிக் அனுபவமும் இல்லாமல் வெறும் அன்றாட வாழ்வின் மிக எளிய சம்பவங்களிலிருந்தே மகத்தான அற்புதங்களையும் பேருண்மைகளையும் தரிசித்தேன்.

எப்போது இந்த மாற்றம் நிகழ்ந்தது; அப்படி என்ன சம்பவம் அது?

தொடர் நிகழ்வுகளாக நடந்தன. முக்கியமான சம்பவம், 22 ஆண்டுகளுக்கு முன்பு என் இதய நோய்க்கான அறுவை சிகிச்சை தருணம். அப்போது இரண்டு லட்சம் ரூபாய் எனக்குத் தேவைப்பட்டது. என் கையில் ஒரு பைசா கிடையாது. லௌகீக நண்பர்களும் உதவவில்லை. அப்போது இலக்கிய நண்பர்கள் யாரும் இல்லை. திடீரென்று எனக்கு யாரென்றே தெரியாத வாசகர் ஒருவர் வந்து அந்தப் பணத்தைக் கொடுத்தார். நான் மீண்டு எழுந்துவந்து அவருக்கு நன்றி சொல்லப்போனபோது அவர் உயிரோடு இல்லை. அவர் வயது அப்போது ஐம்பது. நானும் ஐம்பதுகளில்தான் இருந்தேன். என்னை அந்தத் தருணம் திருப்பிப்போட்டது.

தாஹர் பென் ஜெலோன் எழுதிய ‘The Blinding Absence of Light’ நாவலை அந்த சமயத்தில்தான் வாசித்தேன். அதோடு என் சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்தன. நான் அவநம்பிக்கை என்ற இடத்திலிருந்து நம்பிக்கை என்ற இடத்துக்குப் பெயர்ந்தேன்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு

சமஸ் 01 Jan 2023

நம் சமகாலக் கவிதையின் அதிசயங்களில் ஒருவரான தேவதேவனின் இந்தக் கவிதையை நான் என்னுடைய வாழ்வில் அனுபவம் கொண்டேன் என்று சொல்லலாம்.

உயிர் வாழ்விற்கான
ஆகக் குறைந்த எண்ணங்களுடன்
முயற்சிகளுடன்
எல்லா உயிர்களும் பொருட்களும்
தனிமை என்பதே இன்றி
துயரம் என்பதே இன்றி
எத்துணை ஒருமையுடன் வாழ்கின்றன
மனிதனைத் தவிர?

விலங்குகள் மீதான கரிசனம் எல்லாம் அப்போதுதான் உருவானதா?

உள்ளே எல்லாமே இருந்திருக்க வேண்டும். படிப்படியாக நமக்குள்ளிருந்து அவை வெளிப்படுகின்றன. உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், என்னுடைய நாவல் ‘எக்ஸைல்’ வெளிவந்தபோது உங்களிடம் சொன்னேன், ‘இயற்கையும் விலங்குகளும்தான் அந்நாவலின் பிரதான இடம் வகிப்பவை.’ குறிப்பாக அதன் முதல் அத்தியாயத்தை முடித்தபோது நான் பழைய சாருவிலிருந்து புதிய சாருவாக முழுமையாக மாறி இருந்தேன். குருவாயூரில் இருந்த கேசவன் என்ற யானை தொடர்பான கதை அது. கதை அல்ல, நிஜம். என் மனைவி அவந்திகா வளர்த்த ஃப்ளோரான் மீன்களும் என் மாற்றத்துக்கு ஒரு காரணம். நான் வளர்த்த பப்பு, ஸோரோ என்ற இரண்டு நாய்களும் காரணம். மீன்கள் நம்முடைய உணவுப் பொருள். அதிலும் நான் மீன் இல்லாமல் சாப்பிடவே மாட்டேன். குறிப்பாகக் கருவாடு. இட்லிக்குக்கூட சென்னாங்குன்னி வேண்டும் எனக்கு. அப்படிப்பட்ட எனக்கு அவந்திகா வளர்த்த ஃப்ளோரான் மீன்கள் ஞானத்தை அளித்தன. அந்த ஃப்ளோரான் மீன்கள் அவள் உணவு கொடுத்தால் மட்டுமே சாப்பிடும். நான் கொடுத்தால் சாப்பிடாமல் பட்டினி கிடக்கும். எத்தனை நாட்கள் ஆனாலும் சரி. ஒருமுறை அவள் ஒரு வார காலம் வெளியூர் சென்றிருந்தபோது ஒரு வாரமும் அவை பட்டினி கிடந்தன. இன்னும் பட்டினி கிடந்தால் இறந்துவிடும் என்று சொல்லி அவசரமாக அவளை வரவழைத்தேன்.

இரண்டு தொட்டிகளில் தனித்தனியே இரண்டு ஃப்ளோரான்களை வைத்திருப்போம். ஏனென்றால், ஒரே தொட்டியில் அவை இருக்காது. ஒன்றையொன்று கடித்துக் குதறிக்கொண்டு செத்துவிடும். அப்படியும் ஒரு குணாதிசயம். அவந்திகா வருகிறாள். அவளைப் பார்த்ததும் அவை குதித்த குதி இருக்கிறதே, என் வாழ்நாளில் மறக்க முடியாது. குதித்த குதியில் ஒரு ஃப்ளோரான் நீர்த் தொட்டியிலிருந்தே வெளியே வந்து விழுந்துவிட்டது. அப்படி ஓர் ஆவேசமான மகிழ்ச்சி. இப்படியும் ஒரு குணாதிசயம். எனக்கு இதெல்லாம் ஒரு தரிசனம்போல இருந்தது. இது எல்லாம்தான் என் மாற்றத்துக்குக் காரணம்.

உங்களுடைய பல கருத்துகள் இங்கே சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன. கவன ஈர்ப்புக்காக அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காகப் பேசுவது சாருவுக்கு வழக்கம் என்ற பேச்சு எப்போதுமே இங்கே இருக்கிறது. அது அப்படித்தானா?

காந்தி உங்களுடைய ஆதர்சம் என்று எனக்குத் தெரியும். காந்தியைப் பற்றி நீங்கள் நிறையவே எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து அவரை நீங்கள் மேற்கோள் காட்டுவதையும் நான் கவனிக்கிறேன். காந்தி செய்த ஒவ்வொரு விஷயமும் சராசரி மக்களுக்கும், அவருடன் கூடவே இருந்த நேரு போன்றவர்களுக்கும்கூட அதிர்ச்சியாகத்தான் இருந்தது, இல்லையா?

செப்டம்பர் 22, 1921 அன்றுதான் மதுரையில் காந்தி லங்கோடுக்கும் துண்டுக்குமாக மாறினார். அதற்கு முன்பு வரை குஜராத்திகளின் கத்தியாவாடி உடுப்பில் இருந்தவர் சடாரென்று ஒருநாள் லங்கோடுக்கு மாறினார். ராஜாஜி போன்ற தலைவர்களுக்கு அது பிடிக்கவில்லை. உலகத் தலைவர்கள் அவரைப் பைத்தியக்காரன் என்று சொல்லிவிடுவார்கள் என்று பயந்தார் ராஜாஜி. ஆனால், லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கே காந்தி அந்த லங்கோடுடன்தான் சென்றார். பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசரைப் பார்ப்பதற்கு உரிய டிரஸ்கோட்கூட காந்திக்காகத் தளர்த்தப்பட்டது என்பது வரலாறு.

ஆடை மட்டும் அல்ல, காந்தி செய்த அத்தனை காரியங்களும் பொதுப்புத்திக்கு எதிராகவே இருந்தன. அத்தனை பெரிய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் சுதந்திரம் கிடைத்ததும் எனக்குப் பதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

காந்தியை ஏன் குறிப்பிட்டேன் என்றால், பொதுப்புத்திக்கு எதிராகப் பேச அவர் தயங்கியதே இல்லை. ஆனால், கவன ஈர்ப்புக்காகவோ, அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவோ பேசப்பட்டதாக நாம் சொல்ல முடியுமா?

சமூகத்தின் இயல்பு அது. 1978இல் நான் தில்லி போய்ச் சேர்ந்தபோது அங்கே எழுத்தாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் என்றால் தாடியும், குர்த்தாவும், ஜோல்னா பையும்தான் அடையாளம். நான் அப்போதே டீ ஷர்ட் ஜீன்ஸுடன்தான் இருப்பேன். தாடியையும் குர்த்தாவையும் பார்த்து என் ஆடை அலங்காரத்தை மாற்றவில்லை. ஏற்கெனவே அப்படித்தான் நான் இருந்தேன். 

இது எல்லாமே சமூகத்துக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக வேண்டும் என்றே செய்வதாகத்தான் தோன்றும். ஆனால், உண்மை அது இல்லை. நான் என்னுடைய இயல்பு என்னவோ அப்படித்தான் இருக்கிறேன். இன்னோர் உதாரணமாக, ஓஷோவை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ஆன்மீகவாதிக்கான அடையாளங்களுடனா வாழ்ந்தார் அவர்? நான் அடிப்படையில் ஒரு dandy. ஒரு ஹெடோனிஸ்ட். தஞ்சாவூர்க்காரன். ஷோக்குப் பேர்வழி. எனவே இப்படி இருப்பதுதான் என்னுடைய இயல்பு. மற்றவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருப்பது பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி

சமஸ் 29 Jan 2023

ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொல்கிறேன். ஏதாவது ஒரு இலக்கியச் சந்திப்பு என்றால், பகல் சந்திப்பு முடிந்த பிறகு நடக்கும் இரவுச் சந்திப்புதான் முக்கியமானதாக இருக்கும். இரவு முழுவதும் பேசிக்கொண்டிருப்போம். குடிப்பழக்கம் இருப்பவர்கள் குடிப்பார்கள். குடி என்பது இரண்டாம்பட்சம். பேச்சுதான் முதல். பெரும்பான்மையான எழுத்தாளர்கள் ஜீவனோபாயத்துக்காக ஏதாவது அரசு வேலையில் இருப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட இலக்கியச் சந்திப்புக்காக வந்திருப்பார்கள். கேட்க ஆள் இல்லாத சுதந்திரமும் சேர்ந்துகொள்ளும். பகல் சந்திப்பைவிட இரவுச் சந்திப்புதான் பல நேரங்களில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அந்தச் சந்திப்புகளில் பல சந்தர்ப்பங்களில் கவிஞர் விக்ரமாதித்யன் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்தும் புராண இதிகாசங்கள் குறித்தும் பல மணி நேரம் பேசிய பேச்சுகளால் பயன் அடைந்திருக்கிறேன். ஆனால், அப்போது குறுக்கே ஒருத்தர் புகுந்து அந்த சபையை இளையராஜா பாடல்களால் நிரப்பிவிடுவார். நான் போய்த் தூங்கிவிடுவேன். என்னால் அந்த இசையை ரசிக்க முடியாமல் போய்விடும். காரணம், நான் சாஸ்த்ரீய சங்கீத ரசிகன். கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி, மேற்கத்திய சாஸ்த்ரீய இசை ஆகிய மூன்றும்தான் என் ரசனைக்கு உகந்தவை. சினிமா என்றால் அது எம்.கே.டி., சின்னப்பா மாதிரியான செமி க்ளாஸிகல்தான் பிடிக்கும். அதிலிருந்தும் வெளியே வந்தால் பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா போன்றவர்களோடு சரி. அதற்குப் பிறகு வர மாட்டேன். இல்லாவிட்டால் மேற்கத்திய பாப் பாடல்கள். ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு பாடல்கள். இது எல்லாமே கட்டுப்பெட்டியான தமிழ் எழுத்தாளர்களுக்கு அதிர்ச்சியாகவும் அந்நியமாகவும்தானே தோன்றும்? அவர்களும் சேர்ந்துதான் என் மீது இப்படியான ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.

தனிப்பட்ட வகையில் சக எழுத்தாளர்கள் உங்களிடம் இந்த நடத்தை தொடர்பில் பேசியிருக்கிறார்களா? நீங்கள் குறிப்பிடும் கட்டுப்பெட்டித்தனம் தொடர்பில் விவாதித்திருக்கிறார்களா?

என் எழுத்து எல்லாக் கட்டுப்பெட்டித்தனங்களுக்கும் எதிரானது என்றால், எழுத்தாளர்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? என் ஆர்வம் எல்லாம் இளைஞர்களுடன் உரையாடுவதிலேயே இருந்தது. வெகுஜன இசையில் எனக்கு அரபி இசையும் ஸ்பானிஷ் பாடல்களும்தான் அதிவிருப்பம். சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் என்னுடைய ஒரு தோழியும் தோழியின் புதல்வனும் காரில் சென்றுகொண்டிருந்தோம். காரை தோழியின் மகன்தான் ஓட்டிக்கொண்டிருந்தான். தோழியை அவர் பணிபுரியும் கல்லூரியில் விட்டுவிட்டு அவர் மகனும் நானும் காலை உணவுக்காகச் செல்ல வேண்டும். பையன் கல்லூரியில் படிக்கிறான். தோழி கல்லூரி வாசலில் இறங்கின அடுத்த நிமிடம் பையன் காரில் ஒரு பாட்டை சத்தமாகப் போட்டான். அந்தப் பாடலை சத்தமாகத்தான் கேட்க வேண்டும். அப்போது அந்தப் பாடல் அத்தனை பிரபலம் இல்லை. “கேட்டுப் பாருங்கள் அங்கிள், உங்களுக்குப் பிடிக்கும்” என்றான். Despacito என்ற பாடல். பாடியது யார் என்று கேட்டேன். லூயிஸ் ஃபோன்ஸி என்றான். எந்த நாடு என்றேன். ஏதோ ஒரு தென்னமெரிக்க நாடு, சரியாகத் தெரியவில்லை என்றான். புவெர்த்தோ ரீக்கோ என்று சொன்ன நான் லூயிஸ் ஃபோன்ஸி பற்றியும் தெஸ்பாஸீத்தோ என்ற அந்தப் பாடலைப் பற்றியும் என் இணைய தளத்தில் எழுதியிருந்த நீண்ட கட்டுரையையும் காண்பித்தேன். காரை நிறுத்திவிட்டான் பையன்.

அது மட்டுமல்ல. புவெர்த்தோ ரீக்கோவின் சேரிகளைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் எழுதப்பட்ட லா வீதா (La vida – வாழ்க்கை) என்ற பிரம்மாண்டமான புத்தகத்திலிருந்து நான் சில பகுதிகளை மொழிபெயர்த்தும் இருந்தேன். அதை நான் அந்த இளைஞனிடம் சொல்லவில்லை.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி

சமஸ் 05 Feb 2023

எதற்காகச் சொல்கிறேன் என்றால், என்னால் ஏனைய சமகாலத் தமிழ் எழுத்தாளர்களைவிட இன்றைய இளைஞர்களோடு நல்ல முறையில் உரையாட முடிகிறது. இணைந்து போக முடிகிறது. இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் பூமர்களாக இருக்கிறார்கள். நவீன வாழ்க்கையோடு அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. இதை நான் நாற்பது ஆண்டுக் காலமாக உணர்ந்தும் அனுபவித்தும்வருகிறேன்.

சொல்லப்போனால் முந்தைய தலைமுறை பெருமளவில் இப்படி இல்லை. தி.ஜானகிராமனோடும், க.நா.சு.வோடும், இந்திரா பார்த்தசாரதியோடும், ந.முத்துசாமியோடும், கட்டுக்குடுமியும் பஞ்சகச்சமுமாக வாழ்ந்த கரிச்சான் குஞ்சுவோடும் எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்தது இல்லை. தாம் வாழ்ந்த காலத்தைவிடவும் அவர்கள் முன்னோக்கிய பாய்ச்சலில் இருந்தார்கள்.

கரிச்சான் குஞ்சு கும்பகோணத்தில் ஒரு நக்ஸலைட் ஆதரவு ஊர்வலத்தில் முன்வரிசையில் கொடி பிடித்தபடி கோஷமிட்டுக்கொண்டு போனவர். அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். அத்தனை முற்போக்கான உங்களுக்கு எதற்கு இந்த உடை கரிச்சான் குஞ்சு என்று கேட்டேன். அப்போதெல்லாம் யாரும் யாரையும் சார் போட்டுப் பேச மாட்டோம். எல்லாம் பெயரிட்டு அழைப்பதுதான். வயிற்றுப்பாட்டுக்கான வேஷம் என்றார். முதல் சந்திப்பில் கரிச்சான் குஞ்சு என்னைக் கட்டி அணைத்துக்கொண்டார். எதற்கு இத்தனை அன்பு என்று கேட்டேன். இலக்கிய வெளிவட்டத்தில் நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்காக என்றார்.

இப்படி ஒரு வெளிப்படைத்தன்மையை நான் தற்கால எழுத்தாளர்களிடம் கண்டதில்லை. எல்லா வகையிலும் தற்கால எழுத்தாளர்கள் கட்டுப்பெட்டியாக இருக்கிறார்கள். உள்ளுக்குள் சுருங்கிப் போயிருக்கிறார்கள். அதனால்தான் நான் செய்வது எல்லாமே இவர்களுக்கு அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகச் செய்வதுபோல் தோன்றுகிறது.

அப்படியென்றால், நீங்கள் குறிப்பிடும் கட்டுப்பெட்டித்தனம் யாரிடமிருந்து ஒரு போக்காக ஆரம்பித்தது என்கிறீர்கள்?

சுந்தர ராமசாமியிடமிருந்துதான் இந்தக் கட்டுப்பெட்டித்தனம் எல்லாம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன். ஒரு உதாரணம் தருகிறேன். சுந்தர ராமசாமியின் நாவல் ஒன்றில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் வருகிறது. அதில் பார்வையாளர்களுக்கான படிக்கட்டுகள் இருக்கும் அல்லவா? அதில் ஒரு படிக்கட்டில் சிமென்ட் போடும்போது எழுதப்பட்ட ஒரு கெட்ட வார்த்தை இருந்தது என்று எழுதுகிறார் சு.ரா. அதைப் படித்தபோது எனக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அடப்பத்தாம்பசலிகளா என்று நினைத்துக்கொண்டேன். வார்த்தையில் என்னய்யா நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை? அது என்ன வார்த்தை என்றுதான் எழுதுங்களேன், தமிழின் கற்பு கெட்டுவிடுமா?

மரபுரீதியாகப் பார்த்தால் ரஷ்ய இலக்கியம் ஏற்படுத்திய தாக்கமாக இதைச் சொல்லலாம். இவர்கள் அனைவருமே ருஷ்ய இலக்கியத்திலிருந்து பிறந்தவர்கள். நானோ தஸ்தயேவ்ஸ்கியைத் தவிர வேறு எந்த ருஷ்ய எழுத்தாளரையும் படித்ததில்லை. என் வாசிப்பெல்லாம் ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு. அதற்குப் பிறகு அரபி. எப்படி ஒத்துப்போகும்?

சக தமிழ் எழுத்தாளர்களுடன் உங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள தொடர்ந்து முற்படுகிறீர்கள். அப்படி என்ன வேறுபாட்டை உங்களில் ஆழமாக உணர்கிறீர்கள்? இந்தப் பேச்சுக்கான அடிப்படை என்ன?

எனக்கும் இங்கே உள்ள மற்றவர்களுக்குமான வித்தியாசங்கள் அனைத்துமே கலாச்சாரம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு வைதீக இந்துவுக்கும் இயல்பான பழங்குடிக்குமான கலாச்சார வித்தியாசம் எத்தனை ஆழமானதோ அத்தனை ஆழமானது எனக்கும் தமிழ்ச் சூழலுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்குமான வித்தியாசம் என்று எண்ணுகிறேன். அதனால்தானே நான் செய்யும் / பேசுதும் எதுவும் இங்கே அவர்களால் அதிர்ச்சியோடு எதிர்கொள்ளப்படுகிறது? அதிர்ச்சிக்காக நான் எதையுமே செய்யவில்லையே!

நான் கேட்கிறேன், சல்மான் ருஷ்டியைப் போல், ஓர்ஹான் பாமுக்கைப் போல் நான் இருபது வயதுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு தாங்குமா? அட, இவர்கள் தாங்குவார்களா?

ஒன்று சொல்கிறேன், என்னைப் பொருத்தவரை என் வாழ்வில் அடுத்தவர் என்பதே இல்லை. Others don’t exist in my life. என் வாழ்வில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் என் நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டுமே இடம் உண்டு. என்னைக் கண்டு அதிர்ச்சி அடையும் ஒரு மனிதரைக்கூட நான் சந்திக்க விரும்ப மாட்டேன். அதன் காரணமாகவே அந்நியர்கள் முன் நான் குடிப்பதுகூட இல்லை. நல்லவேளையாக நாய்களும் பூனைகளும் என்னைக் கண்டு அதிர்ச்சி அடைவதில்லை. தங்களுடைய சஹ்ருதயனாக அவை என்னை ஏற்றுக்கொள்கின்றன!

பிரெஞ்சு சூழலிலோ, லத்தீன் அமெரிக்கச் சூழலிலோ அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் ஒட்டியும் வெட்டியும் அவ்வளவு நெருக்கமாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இங்கேயும் ஒரு சின்ன அளவில் அப்படி இருந்திருக்கிறது. காமராஜர் – ஜெயகாந்தன் இடையிலான நெருக்கமான உறவை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்; அதே ஜெயகாந்தன் திராவிட இயக்கம் மீது முன்வைத்த தொடர் விமர்சனங்களையும் சொல்லலாம். இது ஒருகட்டத்தில் வழக்கொழிந்தது. காரணம் என்ன?

(அடுத்த வாரம் பேசுவோம்…)

 

தொடர்புடைய பேட்டிகள்

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு
சர்தாஜிக்களின் கைகளில் இரண்டு கோப்பைகள்: சாரு பேட்டி
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1

3

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Rajendra Prasad Pandurangan    29 days ago

சு.ரா.வின் “கெட்ட வார்த்தை”க்காக இவ்வளவு அசூசையடையும் சாரு, ஒரு முந்தைய நேர்காணலில் தன் வாயில் “ கெட்ட வார்த்தை” புழங்க தன் இளமைச் சூழலை காரணம் என குறிப்பிட்டது முரணல்லவா?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Philip Sudhakar    1 month ago

சமஸ் கேள்விகள் நேருக்கு நேரானவை. நாம் யாருக்கு யாராக இருக்கிறோம் என்பதே அவரின் தேடல். சாருவின் பதில் அவர் யாருக்கும் யாராகவும் இருக்க விரும்பவில்லை என்பதை புலப்படுத்துகிறது. சகமனிதனின் மீதான அக்கறை தனக்குத் தேவையில்லை என்று அவர் கூறுவது தன்னலம். மமதை. மனிதனோடு வாழ்வது கடினம். எனவே நாய்களோடும் பூனைகளோடும் தப்பித்து ஓடுகிறார். சாதியம் குறித்த சமஸ் கேள்விக்கு அவர் பதில் மழுப்பலே. அவரின் போதாமைக்கும் இயலாமைக்கும் சப்பைக்கட்டு கட்டுகிறார். இவருக்கு ஒரு நியாயம் மற்றவர்க்கு ஒரு நியாயம் ப்ளோரிடான் மீனுக்கொரு நியாயம் என்று பேசுகிறவர் அந்நியப்படுவதைத் தனித்துவம் என்று சாதிக்கிறார். அனைத்துயிர்களிடமும் நேயமோடும் பரிவோடும் தன்னால் இருக்க முடியாது என்று கூறுகிறார். ஒரு எழுத்தாளனுக்கு இது தற்கொலை முயற்சி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

மின்வெட்டுபொருளியல்கோம்பை அன்வர் அருஞ்சொல்வாக்குரிமையும் சமத்துவமும்செயற்கை நுண்ணறிவு ஏன்?writer samas thirumaமுடிவுக்காலம்கலாச்சாரப் புரட்சிகூகுள் ப்ளேஸ்டார் கலைஞர்இயற்கைப் பேரழிவுசுதந்திரா கட்சிகன்னட இலக்கியம்காட்சி ஊடகம்c.p.krishnanஅ.முத்துலிங்கம் கட்டுரைகாந்திஞானவேல் சூர்யாஅருஞ்சொல் ஸ்ரீதர் சுப்ரமணியம்முதியவர்கள்சுவாமிநாத உடையார்நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?வட மாநிலங்கள்ஸ்டாலின் ராஜாங்கம் தொகுப்புகலைப் படைப்புநெருக்கடி நிலைசமூகப் பாதுகாப்புநாடுஅண்ணாவின் ஃபார்முலா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!