பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு
எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: சாரு
படம்: பிரபு காளிதாஸ்
தமிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.
எழுதுவதற்கு உகந்த நேரம் என்ற ஒன்று இருக்கிறதா? நீங்கள் எழுதும் நேரம் எது?
எழுதுவதற்கு உகந்த நேரம் காலை நான்கு மணியிலிருந்து பத்து வரை என்றே சொல்வேன். ஆனால், மூன்று ஆண்டுகளைத் தவிர மற்றபடி ஒருபோதும் அந்த நேரத்தில் எழுத வாய்த்தது இல்லை. ‘எக்ஸைல்’ என்ற ஆயிரம் பக்க நாவலைத்தான் அப்படி அதிகாலையில் எழுதினேன். அதற்காக நடைப் பயிற்சியை விட்டேன். எழுதி முடித்ததும் ஹார்ட் அட்டாக். அதிலிருந்து எக்காரணம் கொண்டும் ஆரோக்கியத்தை விடக் கூடாது என்று அதிகாலை எழுத்தைத் துறந்துவிட்டேன். பொதுவாக, அதிகாலையிலிருந்து முன்மதியம் வரைதான் மிகவும் சுறுசுறுப்பாகவும் மலர்ச்சியுடனும் இருப்பேன். மதியத்திலிருந்து அலுப்பு தட்டிவிடும். எட்டு மணிக்கே தூக்கக் கலக்கம் வந்து பத்து மணிக்கெல்லாம் படுக்கைக்கு ஓடிவிடுவேன். ஆனால், அதிகாலையில் எழுதுவதற்கான வசதி எனக்கு இல்லை. காலையில் எழும் பழக்கம் உள்ளவர்கள் எல்லோரும் நடைப் பயிற்சி செய்வார்கள், யோகா செய்வார்கள். நான் என் வீட்டிலிருக்கும் பத்து பூனைகளின் மலஜலத்தை சுத்தம் செய்வேன். இருபது நிமிடம் எடுக்கும். பல் துலக்கலே அதற்குப் பிறகுதான். பிறகு நடைப்பயிற்சிக்காக வெளியே போய்விடுவேன். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும்?
எட்டு மணிக்கு வீடு திரும்புவேன். காலை உணவை முடித்துவிட்டு எந்த இடையூறும் இல்லாமல் பன்னிரண்டு வரை எழுதுவேன். அதற்குப் பிறகு சமையல் வேலை ஆரம்பித்துவிடும். பிறகு மூன்று மணியிலிருந்து இரவு பத்து வரை எழுத்தும் படிப்பும்தான்!
அப்படியென்றால், எல்லா நேரங்களிலுமே எழுதுகிறீர்களா?
கிட்டத்தட்ட அப்படித்தான். நாள் முழுவதுமே எழுத்துதான். இடைப்பட்ட நேரத்தில் வீட்டு வேலை என்று சொல்லலாம்.
சரி, இப்படித் தொடர் வாசிப்பு, தொடர் எழுத்துக்கான முக்கியமான பயிற்சி என்ன?
ஈடுபட்டிருக்கும் வேலையில் இடைவிடாது கவனம் செலுத்துவது. இப்படிச் செய்தால், ஒரு சராசரி மனிதருக்கு 24 மணி நேரம் என்றால், உங்களுக்கு 48 மணி நேரம் கிடைக்கும். ஒரே விஷயம், ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
எழுத்துச் செயல்பாடு ஓர் ஒழுக்கம் என்றால், உங்களுடைய ஒழுக்கங்கள் என்னென்ன?
நிறைய உண்டு. ஆரம்பத்திலிருந்தே என் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. உற்றார் உறவினர் வீட்டு விசேஷங்களுக்கோ துக்கத்துக்கோ போக மாட்டேன். என் மனைவி அவந்திகாவுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது என்ற விஷயமும் எனக்கு ஒரு கொடுப்பினை. அவளுக்கு சினிமா, கோவில், கடல்கரை எதுவுமே பிடிக்காது. வெளியூர் செல்வதோ ஓட்டலில் சாப்பிடுவதோ பிடிக்காது. அதாவது, மக்கள் கூடும் இடங்கள் மீது எல்லாமே அவளுக்கு ஒவ்வாமை உண்டு. எனவே, அந்த வகையிலும் எனக்குக் கூடுதல் லாபம். நாங்கள் எங்கள் மணவாழ்வில் இரண்டே இரண்டு சினிமாதான் பார்த்திருக்கிறோம். மின்சாரக் கனவு, பாபா. நானும் அவளும் சேர்ந்து மணமான புதிதில் மூன்று நாள் குற்றாலம் இலக்கியச் சந்திப்புக்குப் போனோம். அதுவே முதலும் கடைசியும். 25 ஆண்டுகளாக எங்கேயும் சேர்ந்து சென்றதில்லை. வீட்டில் நாய்களும் பூனைகளும் இருப்பது ஒரு காரணம். செல்பேசியில் வெட்டிப் பேச்சு அரட்டை எதுவும் கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், காட்டில் தவம் இருக்கும் முனிவனைப் போல்தான் எந்நேரமும் எழுதிக்கொண்டிருப்பேன். அதனால்தான் நூற்றுக்கு மேற்பட்ட அபுனைவு நூல்களையும் எட்டு நாவல்களையும் எழுத முடிந்தது. அதேசமயம், மற்ற எழுத்தாளர்களைப் போல் இரவு கண் விழித்து எழுதுவது என் வாழ்வில் இல்லை.
எழுத்தாளனுக்கு உடல் முக்கியம்; உடல் பயிற்சி முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. அதேசமயம், மருந்துக் கட்டுப்பாடு முதல் மதுக் கட்டுப்பாடு வரை முக்கியம் என்று சமீபத்தில் எனக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார் ஜெயமோகன். நீங்கள் குடிப்பதை ஒரு கொண்டாட்டமாகவே முன்வைப்பவர். இதை எப்படிப் புரிந்துகொள்வது?
எழுத்தாளனுக்கு உடலும் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானவை; இல்லாவிட்டால் எழுத்து என்ற செயல்பாடே சாத்தியம் இல்லை. ஆனால், ஆரோக்கியத்தை எப்படிக் கண்டடைவது, எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதில் ஜெயமோகனோடு நான் பல வகைகளிலும் முரண்படுகிறேன்.
என் அளவுக்கு ஒழுக்கமான (disciplined) ஒரு நபரை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. நான் மது அருந்துவேன். ஆனால், அதில் முக்கியமான விஷயம் நான் அருந்தும் மதுவின் தரம்; இப்போது நான் குடிக்கும் மது சீலேயிலிருந்து தருவிக்கப்பட்டது. தரமான மதுவை அளவாக அருந்துபவர்கள் ஐம்பது வயதில் ஹார்ட் அட்டாக்கில் சாக மாட்டார்கள். மது ஒன்றும் சயனைட் அல்ல, சாப்பிட்டதும் சாவதற்கு. ஆனால், என்ன மாதிரியான மது, அதை எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதைப் பொருத்ததுதான் நம் ஆரோக்கியம்.
சீலேக்காரர்களின் சராசரி வயது 90. ஐரோப்பாவும் அப்படித்தான். சர்வ சாதாரணமாக சதம் அடிக்கிறார்கள். ஐரோப்பாவில் பூங்காக்களில் போய்ப் பார்த்தால் நூறு வயதான கிழவன் கிழவிகளைக் கூட்டம் கூட்டமாகப் பார்க்கலாம். நாம் சாப்பிடுவது மட்டமான மது. அதுதான் உடல் நலத்துக்குக் கேடாகிறது. கள் மிகவும் நல்லது. ஆனால் அதைத் தடை செய்து வைத்திருக்கிறோம். என்ன சொல்ல? ஐரோப்பாவில் மது அருந்தும் பழக்கம் அதிகம். ஆனால் ஐம்பது வயதிலேயே ஹார்ட் அட்டாக்கினால் அதிகம் சாவது அங்கே அகதிகளாக வசிக்கும் இலங்கைத் தமிழர்கள்தான். ஐரோப்பியர் அல்ல. காரணம், ஐரோப்பியர் வைன் அருந்துகிறார்கள். தமிழர்கள் அருந்துவது விஸ்கி. ஐரோப்பியர் மசாலா கலக்காமல் மாமிசம் உண்கிறார்கள். தமிழர்கள் அளவுக்கு அதிகமாக எண்ணெய் சேர்த்து உண்கிறார்கள். இப்படிப் பல காரணங்கள் இருக்கின்றன. எண்ணெயைவிட மது கெடுதல் அல்ல.
நீங்கள் இப்படிப் புரிந்துகொள்ளுங்கள். எனக்கு எல்லாப் பழக்கங்களும் இருந்திருக்கின்றன; ஆனால், எந்தப் பழக்கத்துக்கும் அடிமை இல்லை.
சரிதான், ஆனால் சாமானியர்களுக்கு இப்படியான அணுகுமுறை பொதுவாக சாத்தியமில்லை அல்லவா?
உண்மைதான், மூன்று ஆண்டுகள் கஞ்சாகூட புகைத்திருக்கிறேன். விட்டுவிட்டேன். இதற்காக நீங்கள் கஞ்சா புகைத்து விட்டுவிடலாம் என்று நினைத்தால் மாட்டிக்கொள்வீர்கள். திடீரென்று மது அருந்துவதையே ஐந்து ஆண்டுகள் நிறுத்திவைத்தேன். இப்போதும் இமயம் சென்றால் சந்நியாசிகளிடமிருந்து கஞ்சா வாங்கிப் புகைப்பது உண்டு.
ஒரே வார்த்தையில் சொல்கிறேன். எழுத்தாளர்களை சாமானியர்கள் பின்பற்றக் கூடாது. காரணம், சமூகத்துக்கு செய்தி சொல்வதற்காக சாமானிய மனிதர்களால் செய்ய முடியாத வேலைகளைச் செய்துகொண்டிருப்பவர்கள் எழுத்தாளர்கள். தகப்பனின் மரணத்துக்கு வர இயலாது என்று சொல்லிவிட்டு நான் எழுதிக்கொண்டிருந்தை எதில் சேர்ப்பது? எனக்கு சமூகம்தான் எல்லாமே, மற்றபடி உற்றம் சுற்றம் எதுவுமே கிடையாது. அது மட்டும் அல்ல. எழுத்தாளனைப் பொருத்தவரை அவனுக்கு நேரும் எல்லாமே அனுபவம்தான். என்னைத் தூக்கி சிறையில் போட்டால் ஒரு அற்புதமான நாவலோடு வெளியே வருவேன். மரணத்தைத் தவிர வேறு எல்லாமே என் எழுத்துக்கான கச்சாப் பொருள்தான். சாமானியர்களுக்குச் சாத்தியமா?
புத்தர் ஞானத்தைத் தேடுவதற்காகத் தன் மனைவியையும் அன்றைய தினம்தான் பிறந்த தன் மகனையும் பிரிந்தார். அதைவிட முக்கியம், அவரது உயிருக்கு உயிரான காந்தகா என்ற வெண்புரவியையும் பிரிந்தார். பிரிகின்ற வேளையில் காந்தகா அவர் காலைத் தன் நாசியினால் தொட்டுக் கெஞ்சியது, என்னையும் அழைத்துச் செல் என்று. புத்தர் கேட்கவில்லை. அன்றைய தினமே உயிரைவிட்டது காந்தகா. இப்படிப்பட்ட கொடூரங்களைத் தாண்டித்தான் புத்தர் ஞானம் அடைந்தார். ஆசைதான் மானுட துயரத்துக்குக் காரணம் என்று நம்மிடம் சொன்னார். ஆக, நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது புத்தரின் வாழ்வை அல்ல. அப்படி புத்தரின் வாழ்வை எடுத்துக்கொண்டால், நாம் பிரேதங்களின் மீது நடக்க வேண்டியிருக்கும். மாறாக, நாம் புத்தர் சொன்ன ஞானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தன் வாழ்வையே பணயம் வைத்து, தான் கண்ட உண்மைகளைச் சொல்கிறான் எழுத்தாளன். அந்த உண்மைகளை எடுத்துக்கொள்ளுங்கள். எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள். கண்ணதாசனும் ஜெயகாந்தனுமே அதற்குச் சிறந்த உதாரணங்கள். கண்ணதாசனைப் பற்றி அவரே வேண்டும் அளவுக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் பாடல்கள் சாகாவரம் பெற்றவை அல்லவா? ஜெயகாந்தனுக்கு இரண்டு மனைவியர். கஞ்சா வேறு. ஆனால் அவர் எத்தனையோ பேருக்கு ஆசானாக விளங்கியிருக்கிறாரே? என் சிறுவயதில் நான் ஜெயகாந்தனைப் பற்றிக்கொண்டிருக்காவிட்டால் நானும் ஒரு சராசரியாகத்தான் இருந்திருப்பேன்.
எனவே, நான் மது அருந்துவேன் என்பதைக்கூட இந்த சமூகச் சூழலில் மிகவும் தயக்கமாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், ஒழுக்கமின்மை என்பதே இங்கே நடைமுறையாக ஆகிப் போயிருக்கிறது. நான் தீவிரமாக ஒழுங்கைப் பேணுபவன் என்றேன். மாதம் ஒருமுறைதான் மது அருந்துவேன். அதுவும் பல ஆண்டுகள் ஊறலில் போட்ட திராட்சை ரசம். அதற்குத் தொட்டுக்கொள்ளக்கூட பழங்கள்தானே தவிர எண்ணெய் வழிந்தோடும் சிக்கன் ஃப்ரை அல்ல.
இதை ஏன் இத்தனை விவரமாகச் சொல்கிறேன் என்றால், ‘உடல் வளர்த்தேன்… உயிர் வளர்த்தேனே!’ என்ற சித்தர் வாக்கின்படி வாழ்பவன் நான் என்பதை வலியுறுத்துவதற்காக!
சாப்பாடு விஷயத்தில் நன்கு ரசித்துச் சாப்பிடுவர் என்பது தெரியும். இது கூடாது; அது கூடவே கூடாது என்கிற மாதிரி கட்டுப்பாடுகள் ஏதும் சாப்பாட்டில் உண்டா?
இது ஆகாது, அது ஆகாது என்று ஒருபோதும் சொல்வதில்லை. காபி, ஊறுகாய், அப்பளம், வடை, பஜ்ஜி, ஹல்வா, ஜிலேபி எதற்குமே தடை இல்லை. ஆனால் சாயுங்காலம் ஒரு வடை, ரெண்டு மிளகாய் பஜ்ஜி, ரெண்டு ஜிலேபி சாப்பிட்டுவிட்டு இரவில் சிக்கன் பிரியாணி சாப்பிட மாட்டேன். ஒருவேளை தின்பண்டம் என்றால், அடுத்த வேளை பட்டினி. காலையில் அரசனைப் போலவும், மதியம் மத்தியமாகவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் உண்கிறேன்.
இருபது ஆண்டுகளுக்கு முன் ஹார்ட் அட்டாக் வந்தபோது மருத்துவர் “உங்களுக்கு ஷுகர், ரத்த அழுத்தம் எல்லாம் உண்டா?” என்றார். ”நான் இதுவரை மருத்துவரிடமே போனதில்லை டாக்டர்” என்றேன். காரணம், 50 வயது வரை எனக்கு தலைவலி, ஜுரம், வயிற்று வலி என்று எந்த உடல் உபாதையும் வந்ததில்லை. மாத்திரையே போட்டதில்லை. அது மட்டுமல்ல. கடந்த 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இதுவரை எனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி, நான் தர வேண்டிய எதையும் பத்திரிகைகளுக்குத் தராமல் இருந்ததில்லை. மூன்று முறை ஹார்ட் அட்டாக் வந்தது. அப்போதும்கூட என் எழுத்து பத்திரிகைக்குப் போவது சுணங்கியதில்லை. இப்போதும்கூட கடந்த 20 ஆண்டுகளாக எந்த உடல் உபாதையும் வந்ததில்லை. ஒருநாள்கூட, ‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று சொல்லி என் காரியத்தை நான் ஒத்தி வைத்தது இல்லை. ஆனால் நான் பார்க்கும் அத்தனை பேருமே “உடம்பு சரியில்லை” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பதை கவனிக்கிறேன். அவர்களில் பலர் இளைஞர்கள்.
உடல் பயிற்சி என்று வரும்போது அதில் ஏதேனும் குறிப்பிட்ட பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா?
நான் என்னுடைய அனுபவத்தினால் கண்ட ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். இன்றே, இப்போதே, நடைப் பயிற்சி செல்வதை நிறுத்துங்கள்; பதிலாக யோகா செய்யுங்கள்; சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். நூறு வயது வரை மருத்துவரிடம் செல்லாமல் வாழலாம். முடியாதே என்று சொன்னால், இன்னொரு வழி சொல்கிறேன்.
குஷ்வந்த் சிங் 100 ஆண்டுகள் வாழ்ந்தார். தினமுமே விஸ்கி குடிப்பார். தினமும். நூறாவது வயதில் சாகின்ற அன்றுகூட இரண்டு பெக் விஸ்கி அருந்தி விட்டுத்தான் உறங்கச் சென்றார். இருந்தும் எப்படி 100 ஆண்டுகள் வாழ்ந்தார்? அவரைப் போல் ஒழுக்கமாக வாழ்ந்த ஆளைப் பார்ப்பது அரிது. பத்து மணிக்கெல்லாம் படுக்கப் போய்விடுவார். நான்கு மணிக்கு எழுந்துகொள்வார். தினமும் இரண்டு மணி நேரம் நீச்சல் அடிப்பார். இந்த நீச்சல் எழுபது வயது வரை தொடர்ந்தது. நீச்சல் ஒரு நாள் கூடத் தவறியது இல்லை என்பது முக்கியம். எல்லோருக்கும் அவர் தினமும் குடிப்பார் என்று தெரியும். ஆனால், தினமும் இரண்டு மணி நேரம் நீச்சல் அடிப்பார் என்று தெரியாது. எழுபது வயது வரை நாலு பெக். அதற்குப் பிறகு மூன்று. 90 வயதிலிருந்து இரண்டு பெக். இத்தனை ஒழுங்காக வேறு யாராலும் வாழ முடியுமா?
இன்னொரு மிக முக்கியமான விஷயத்தைச் சொல்கிறேன். அநேகமாக பலருக்கும் தெரியாத விஷயம். சுவாமி விவேகானந்தர் சிகரெட் புகைப்பார். அவர் மாட்டுக் கறி சாப்பிடுகிறார் என்று ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சிலர் புகார் சொன்னபோது, ‘விவேகானந்தர் எதை வேண்டுமானாலும் செய்யலாம், அவர் எல்லாவற்றையும் கடந்தவர்’ என்றார். ஒரு சந்நியாசி (பெயர் வேண்டாம்) தாகத்தினால் மதுவை அருந்திவிட்டார். அப்போது ஒரு சீடர் அதை ஆட்சேபிக்கவே பக்கத்தில் இருந்த நெருப்புத் துண்டங்களை எடுத்து உண்டார். உண்டுவிட்டு ‘இதைச் செய்ய முடிந்தவர்கள் மதுவை அருந்தலாம்’ என்றார். அப்படித்தான் விவேகானந்தரும்!
மருத்துவச் சிகிச்சை முறையில் ஏதேனும் தனிப் பழக்கம் வைத்திருக்கிறீர்களா?
கூடுமானவரை ஆயுர்வேதத்தையே பின்பற்றுகிறேன். அதற்காக ஹார்ட் அட்டாக் வந்தால் ஆயுர்வேதம் பக்கம் போக மாட்டேன். அதற்கு அலோபதிதான். மற்றபடி வாரம் ஒருமுறை, இரண்டு முறை கஷாயம். தினமும் அப்யங்கம் (எண்ணெய்க் குளி). இது எல்லோராலும் முடியாது. வாரம் ஒருமுறை செய்யலாம். செய்ய வேண்டும். முடிந்த வரை மூலிகைகளை எடுத்துக்கொள்கிறேன். கொரோனா காலத்தில் எனக்குக் கொரோனா வரவில்லை. காரணம், முன்னெச்சரிக்கையாக மூலிகைகளை உட்கொண்டேன்.
இன்றைய இளைஞர்களுக்கு ஆரோக்கியத்தின் மந்திரமாக நான் சொல்வது, காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரம் யோகா செய்யுங்கள், பிராணாயாமம் செய்யுங்கள், சூர்ய நமஸ்காரம் செய்யுங்கள். இதில் ஒன்று செய்தால்கூட போதும்.
சரி, ஒரு நாளைக்கு எத்தனை சொற்கள் எழுதுகிறீர்கள்?
அபுனைவு 2,000 வார்த்தைகள், புனைவில் 1,000 வார்த்தைகள். வெளியூர் செல்லும் நாள்களில் எழுதுவதில்லை. வைனும் இசையும்தான். மாதத்தில் அப்படி ஒரு நான்கு நாட்கள் போகும்.
ஜெயமோகன் எழுத்து ஒரு கனவு மாதிரி என்கிறார். எழுதி முடித்ததில் திருத்த பெரிதாக ஏதும் இல்லை என்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஜெயமோகனும் நானும் எல்லா விஷயத்திலுமே துருவ வித்தியாசம் உள்ளவர்கள். எழுத்து கனவு மாதிரிதான். அந்தக் கனவை பொருண்மையாக ஒரு மொழியில், எழுத்தில் கொண்டு வரும்போது அங்கே ஏகப்பட்ட செயல்பாடுகள் நடக்கின்றன. நம் மனதில் உள்ள மொழிக் கிடங்கு 2000 ஆண்டு சிந்தனை மரபையும் மொழி வரலாற்றையும் கொண்டது. அதைக் கொண்டுதான் சிந்திக்கிறோம். அதைக் கொண்டுதான் சிந்தனையை மொழிப்படுத்துகிறோம்.
இங்கே என்னுடைய ஆளுமை என்பதோடுகூட மொழியின் மானுடவியல் வரலாறும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு சொல் இரண்டாயிரம் ஆண்டு மானுடவியல் சரித்திரத்தைக் கருவில் வைத்துக் கொண்டுதான் என் மனதில் அமர்ந்திருக்கிறது. எனவே எழுத்தாளனின் ஆளுமையும் மொழியின் மானுடவியல் வரலாறும் சேர்ந்த ஒரு கூட்டுச் செயல்பாடுதான் (praxis) எழுத்தாக மாறுகிறது. அதனால்தான், ஒரு படைப்பில் ஏகப்பட்ட திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது!
ஒரு பிரதியை எத்தனை முறை திருத்துவீர்கள்?
கணக்கே இல்லை. பலமுறை திருத்துவேன். இரண்டு மூன்று நண்பர்களிடமும் கொடுத்து படிக்கச் சொல்வேன். பதிப்பகத்துக்குப் போவதற்கு முன்னால் இறுதியாகத் திருத்துவேன். பத்துப் பன்னிரண்டு முறை என்று சொல்லலாம். செப்பனிட்டுக்கொண்டே இருப்பேன். வாய்விட்டுப் படித்துப் பார்ப்பேன். எழுத்தில் எனக்கு ஒரு இசை லயம் வர வேண்டும். அது வரும் வரை திருத்துவேன்.
இவ்வளவு வேலைகளை எழுத்தாளர் செய்த பின்னரும் ஒரு பிரதியில் எடிட்டர் ஒருவர் பார்க்க வேலை இருக்கிறதா?
நிச்சயமாக. எடிட்டிங் என்பதே இப்போது தமிழ் இலக்கியத்தில் இல்லாமல் போய்விட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜி.சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல் உமாபதி நடத்திய ‘தெறிகள்’ இதழில் வந்தபோது மிகவும் கச்சாவாக இருந்தது. அதை சி.மோகன்தான் பிரமாதமாக எடிட் செய்து க்ரியாவிடம் கொடுத்தார். க்ரியா ராமகிருஷ்ணன் ஒரு அற்புதமான எடிட்டர். அதேபோல் பெருமாள் முருகன், கவிஞர் சுகுமாரன் போன்றவர்களும் மிகச் சிறந்த எடிட்டர்கள். ‘பேட்டை’ நாவலை சுகுமாரன் எடிட் செய்த பிறகுதான் அது அந்த அளவு வெற்றியைப் பெற்றது. என்னுடைய ‘ராஸ லீலா’ நாவலை வரிவரியாகப் படித்து எடிட் செய்தவர் ‘தினமலர்’ ரமேஷ். இப்போதும் எனக்கு இரண்டு மூன்று நண்பர்கள் எடிட் செய்து கொடுக்கிறார்கள். கடைசியாக நானும் ஒருமுறை எடிட் செய்வேன். ஆங்கிலத்தில் இந்தப் பிரச்சினை இல்லை. பதிப்பகங்களில் இதற்கென்றே ஒரு குழு இருப்பதால் அந்த வேலை சுலபமாக நடந்துவிடுகிறது.
புனைவுக்கு என்று தனித்தும், அபுனைவுக்கு என்று தனித்தும் ஏதேனும் எழுத்து ஒழுங்கைப் பராமரிக்கிறீர்களா?
இல்லை. என் எழுத்து புனைவு மற்றும் அபுனைவு என்ற இரு நிலைகளுக்கும் நடுவில் பயணம் செய்கிறது. இப்போது நம்முடைய இந்த உரையாடலையே எடுத்துக்கொண்டால், இதை என்னால் ஒரு நாவலின் இடையே இரண்டு நண்பர்கள் உரையாடுவதைப் போல் செருகிவிட முடியும். இல்லையா?
எழுத்து சார்ந்து உங்களுக்கு மூத்த எழுத்தாளர்களிடமிருந்து கிடைத்த மிகச் சிறந்த அறிவுரைகள் என்று எவற்றையெல்லாம் சொல்வீர்கள்?
நான் அசோகமித்திரனைத் தவிர வேறு யாருடனும் நெருக்கமாகப் பழகியதில்லை. சார்வாகன், ஞானக்கூத்தன், அ.மாதவன், நகுலன், க.நா.சு., தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா, தர்மு சிவராமு போன்றவர்களை ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். சார்வாகனோடு மட்டும் உணர்வுபூர்வமான நட்பு இருந்தது. ஆனால் எழுத்தாளர்கள் யாருமே யாருக்கும் அறிவுரைகளோ யோசனைகளோ சொல்வதில்லை என்பதால் எனக்கும் எதுவும் அப்படி நேரடியாகக் கிடைத்ததில்லை. ஆனால் என் மூத்தோர் அனைவரிடமிருந்தும் நான் கற்றது இரண்டு விஷயங்கள். ஒன்று, போராட்ட குணம். அதற்கு எனக்கு உதாரண புருஷர் அசோகமித்திரன். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அசோகமித்திரன் ஒரு பிராமண, மத்தியதர வர்க்கத்து வாழ்வை வாழ்ந்தவர். எந்தப் போராட்டத்திலும் கலந்துகொண்டதில்லை. ஆனாலும் அவரை நான் ஒரு போராளி என்றுதான் சொல்வேன். வாழ்வில் ஒருபோதும் அவர் சமரசம் செய்துகொண்டதில்லை. ஆஸ்துமாவினால் மூச்சுவிட சிரமப்படுவார். மருந்து வாங்கக் காசு இருக்காது. பிள்ளைகள் இரண்டும் படித்துக்கொண்டிருக்கும் சூழல். ஆங்கிலப் பத்திரிகையில் எழுதியதற்கு மணியார்டர் வருமா என்றுதான் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பாரே தவிர பணத்துக்கு வேறு எந்த வழியையும் அவர் யோசித்தது இல்லை. சமரசமும் செய்ததில்லை.
அடுத்து, அச்சமின்மை. யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்ற நிலை. இதைக் கற்றது சுந்தர ராமசாமியிடமிருந்து. சு.ரா. அப்போது ஒரு கனவான் என்ற நிலையில் வாழ்ந்தவர். அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததும் தன் அந்தஸ்தைக்கூட புறக்கணித்து விட்டு, “அகிலன் மலக்கிடங்கு” என்று எழுதினார் சு.ரா.
ஓர் இளம் எழுத்தாளர் தன்னுடைய பயிற்சிக்காக உங்களிடம் பரிந்துரை கேட்டால், இந்தப் புத்தகங்களை எல்லாம் வாசிக்க வேண்டும் என்று எவற்றைச் சொல்வீர்கள்; தமிழில் 10 புத்தகங்கள், ஆங்கிலத்தில் 10 புத்தகங்கள்?
புத்தகங்கள் என்று சொல்வதைவிட ஒரு பாடத்திட்டத்தைத்தான் கொடுப்பேன். சங்க இலக்கியம் பூராவையும் படித்துவிட வேண்டும். அடுத்து, ராமாயணம், மகாபாரதம். அடுத்து, பக்தி இலக்கியம். குறிப்பாக நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். பிறகு, பாரதியிலிருந்து தொடங்கி புதுமைப்பித்தன், ஆ. மாதவன், தஞ்சை ப்ரகாஷ், ஆதவன், அசோகமித்திரன் வரை அனைவரையும் படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில், கிரேக்க நாடகங்கள், ஷேக்ஸ்பியர், ஜான் ஜெனே, மிலன் குந்தேரா, கஸான்ஸாகிஸ். இது தவிர, ஐரோப்பிய சினிமாக்கள்.
மனநிலை உங்களுடைய எழுத்தில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும்? உதாரணமாக, இன்று அனுப்ப வேண்டிய பத்தியை முதல் நாள் மகிழ்ச்சிகரமான ஒன்றாகத் திட்டமிட்டுள்ளீர்கள்; இடையே துயரமான ஒரு மனநிலை உண்டாகிவிடுகிறது. என்ன செய்வீர்கள்?
இதற்கு நான் சொல்லப் போகும் பதிலை நம்புவதற்குக் கடினமாக இருக்கும். நான் ஒரு குழந்தை அல்லது ஞானியைப் போன்ற மனநிலை கொண்டவன். அது எனக்குப் பயிற்சியினால் வந்ததல்ல. சுகம் துக்கம் எல்லாமே அனுபவம்தான் என்ற நிலையை இலக்கியத்தின் மூலமே அடைந்தேன்.
எனக்குத் துயரமான மனநிலை என்ற ஒன்றே இருந்தது இல்லை. மரணத்தைவிட துயரம் வேறு ஏதேனும் உண்டா? ஒருநாள் காலை ஆறு மணிக்கு வியர்த்துக் கொட்டியது. தாடையிலும் கையிலும் கொடூரமாக வலித்தது. கடுமையான ஹார்ட் அட்டாக் என்று தெரிந்துவிட்டது. அவந்திகாவை எழுப்பி ‘செக்கப்புக்காக மருத்துவமனை செல்கிறேன்’ என்று பொய் சொல்லிவிட்டு, கழிப்பறை சென்றேன். மருத்துவமனையில் படுக்கையிலேயே பெட்பேன் கொடுத்து மலம் கழிக்கச் சொல்வார்கள். அதைவிடக் கொடுமை வேறு எதுவும் இல்லை. கழிப்பறைக் கதவை உள்ளே தாளிடவில்லை. ஹார்ட் அட்டாக் அதிகமாகி இறந்து போனால் பிரேதத்தை எடுக்க கதவை உடைக்கும் சிரமம் ஏற்படும். காலைக்கடன்களை முடித்துவிட்டு நிதானமாக வெளியே வந்து ஆட்டோ பிடித்து நண்பரின் வீட்டுக்குப் போய் அவருடன் மருத்துவமனைக்குப் போனேன். போகும்போது நான் இறந்து போனால் உடனடியாக என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே போனேன். சடங்குகள் அல்ல. மொழிபெயர்ப்புப் பணிகள். இவையெல்லாம் கிறுக்குத்தனம்தான் இல்லையா? இப்படித்தான் இருக்கிறேன், என்ன செய்ய?
மரணமும் என்னைப் பாதிப்பதில்லை. ஏனென்றால், உயிரானது தான் தங்கியிருந்த கூட்டை விட்டுவிட்டு வேறு இடம் செல்கிறது, அவ்வளவுதான் என்ற எண்ணம். இந்த பதிலைத் தட்டச்சு செய்து கொண்டிருந்தபோது அவந்திகா ஸோரோவின் புகைப்படத்தைக் காண்பித்தாள். கண்கள் கலங்கி அழுதுவிட்டேன். ஸோரோ நான் வளர்த்த பல நாய்களில் ஒன்று. கிரேட் டேன். அதன் மீது மட்டும் எனக்கு அளவு கடந்த அன்பு. ஐந்து ஆண்டுகள் ஆகியும் அதன் மரணத்தை என்னால் தாங்க முடிந்ததில்லை. ஆனாலும் ஒரு கணம்தான். துடைத்துவிட்டு எழுத ஆரம்பித்துவிட்டேன். மேலும், ஸோரோ என்னைப் பிரியவில்லை, வேறு வேறு ரூபங்களில் என்னோடுதான் இருக்கிறது என்ற ஞானம் வேறு சேர்ந்துகொண்டது.
மரணத்தின் பிடியில் நெஞ்சைப் பிடித்தபடி மருத்துவமனைக்குச் செல்லும்போது, இந்த க்ஷணத்தில் உயிர் பிரிந்தால் இந்த உலகிலேயே அதிசந்தோஷமான மனிதனாக வாழ்ந்தேன் என்ற திருப்தியோடு செல்வேன் என்று சொன்னேன். இப்போதும் அதையேதான் சொல்கிறேன். எனக்கு துக்கமே இல்லை. எப்போதும் சந்தோஷம்தான்.
சரி, பணத்தை எடுத்துக்கொள்வோம். பங்குச் சந்தையில் என்னுடைய மொத்த சேமிப்பும் போய் விட்டது என்றால், சரி பரவாயில்லை என்று போய் விடுவேன். ஏனென்றால், போயும் போயும் ஒரு காகிதம் நம்முடைய மனநிலையை நிர்ணயம் செய்வதாக இருந்து விடக் கூடாது.
மேலும் சமஸ், துயரமான மனநிலை ஏன் ஏற்படுகிறது? நாம் ஒன்றின் மீது கொண்ட பற்றின் காரணமாகத்தானே? எதன் மீதும் யார் மீதும் பற்று இல்லையென்றால் துயரமும் இல்லைதானே? என் வாழ்க்கையின் அடிநாதமே இந்தக் குறள்தான்.
‘யாதெனின் யாதெனின் நீங்குவான் நோதல்
அதனின் அதனின் இலன்.’
ஒற்றை வாக்கியத்தில் சொன்னால், நான் ஒரு துறவியின் மனநிலையில் வாழ்பவன். என்னை எதுவும் துயரத்தில் ஆழ்த்துவதில்லை. ஆனால், எனக்கும் ஆசைகள் உண்டு. ஒன்று, பயணம். இன்னொன்று, என் எழுத்து இந்திய எல்லையைத் தாண்டி பலராலும் வாசிக்கப்பட வேண்டும். ஏனென்றால், என் எழுத்தின் பண்பு சர்வதேச வாசகர்களை நோக்கியதாக இருக்கிறது!
செக்ஸை எப்படி அணுகுவது?
(உரையாடல் தொடர்கிறது, அடுத்த வாரமும்…)
தொடர்புடைய பேட்டிகள்
கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி
ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: சாரு
எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி
தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: சாரு
5
2
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Lakshmi narayanan 2 years ago
சாரு நிவேதிதா - நரை வந்த இளைஞன்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
BABUJI S 2 years ago
சாருவுடன் சமஸின் உரையாடலை தொடர்ந்து வாசிக்கிறேன். சமஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக. அருமையான கேள்விகள். அறிவார்ந்த பதில்கள். சாரு போன்ற ஆளுமையின் பரந்துபட்ட வாசிப்பும் அனுபவங்களும் நிறைந்த எழுத்தாளரை இதுவரை படிக்காதது எனது துரதிருஷ்டம். அவரை அறிந்திருந்த போதும் இதுகாறும் படிக்காதது தவறு. சாருவுக்கு எனது வணங்கங்களும் வாழ்த்துக்களும்.
Reply 4 0
Tamilnadan 7 months ago
<<சீலேக்காரர்களின் சராசரி வயது 90>> "Google, Wikipedia" இருப்பதெல்லாம் யாருக்கும் தெரியாது என்ற 'நெனப்பு' இந்த ஆளுக்கு!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.