பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 7 நிமிட வாசிப்பு

ஒரே பண்பாடு என்று ஒன்று இல்லை: சாரு பேட்டி

சமஸ் | Samas
05 Feb 2023, 5:00 am
4

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது. இதுவரை பேசாத வகையில் விரிவாக இந்தப் பேட்டியில் பேசுகிறார் சாரு.

சரி, ஏன் டெல்லியிலிருந்து சென்னைக்குத் திரும்பினீர்கள்? புதிதாக இங்கு நீங்கள் சேர்ந்த அஞ்சல் துறை அனுபவங்கள் எப்படி இருந்தன?

தில்லியிலிருந்து சென்னைக்கு ஏன் திரும்பினேன் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். அது என் கதை மட்டும் அல்ல என்பதால்; அதை விட்டுவிடலாம்.

அஞ்சல் துறை அனுபவங்கள் அனைத்தையும் ‘ராஸ லீலா’ நாவலில் பதிவு செய்திருக்கிறேன். ஒரே வாக்கியத்தில் சொன்னால், சொர்க்கத்திலிருந்து நரகத்தில் விழுந்ததுபோல் இருந்தது. அஞ்சல் துறை என்னவோ மத்திய அரசு சார்ந்த துறை என்றாலும், ஊருக்கு ஊர் அதன் கலாச்சாரம் வேறுபட்டுதான் இருக்கிறது. இங்கே தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் கொடி கட்டிப் பறக்கும் அடிமைத்தனம் அஞ்சல் துறையிலும் பிரதிபலித்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு போஸ்ட் மாஸ்டர் ஜெனரலின் சேம்பருக்கு வெளியே பார்த்தால் வரிசையாகக் காலணிகள் கிடக்கும். சேம்பருக்குள் செருப்பு அணிந்து போக முடியாது. கூடாது என்பது எழுதப்படாத விதி. என்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி இடியட் என்று திட்டியிருக்கிறார். எதிர்த்துப் பேச முடியாது. குமாஸ்தாவாக இருந்தால் கேட்கலாம். யூனியன் உண்டு. ஸ்டெனோக்களுக்கு யூனியன் கிடையாது. என் வாழ்வின் மோசமான காலகட்டம் அஞ்சல் துறையில் இருந்த பத்து ஆண்டுகள். ஆனால், ஒரு எழுத்தாளனுக்கு நரகம்தான் சொர்க்கம். சொர்க்கத்தில் இருந்தால் எழுத முடியாது. சொர்க்கத்தில் எழுத விஷயங்கள் இல்லை. தில்லியிலிருந்து ஏன் திரும்பினோம் என்று பல சமயங்களில் வருத்தம் வரும்போதெல்லாம் இப்படி எண்ணித்தான் மனதைத் தேற்றிக்கொள்வேன்.

டெல்லி வாழ்க்கையில் நீங்கள் பெரிதாக இழந்த ஒன்று என எதைச் சொல்வீர்கள்?

பனிக் குளிர். தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை குளிர் என்றால் அது மார்கழி, தை மட்டும்தான். அதையே நம்மூரில் விஷப் பனி என்பார்கள். ஆனால், தில்லிக்குச் சென்ற பிறகுதான் உண்மையான பனி, குளிர் என்றால் அவற்றின் அர்த்தம் என்னவென்று புரிந்தது.

இங்கே என் ஆன்மாவுடன் கலந்துபோன ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டும். கோடைக் காலமான மூன்று மாதங்களைத் தவிர்த்து பன்னிரண்டு ஆண்டுகள் வாரத்துக்கு மூன்று திரைப்படங்கள் என உலக சினிமா பார்த்திருக்கிறேன். அதில் தொண்ணூறு சதவிகிதம் ஐரோப்பிய சினிமா. நான் என் நண்பர்களிடம் எப்போதும் சொல்வது உண்டு, என்னை உருவாக்கியது ஐரோப்பிய சினிமா என. நாம் இங்கே அதற்குள் போக வேண்டாம். ஆனால், அதை எதற்கு இங்கே சொல்லப் புகுந்தேன் என்றால், சுமார் பன்னிரண்டு ஆண்டுக் காலம் நான் ஐரோப்பாவில்தான் வாழ்ந்தேன். இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். அல்லது, ஒரு தமிழ் வாசகருக்கு இது அந்நியமாகத் தோன்றும்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி

சமஸ் | Samas 25 Dec 2022

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் வசிக்கச் செல்பவர்களால் அந்த நாடுகளுடன் தங்களைப் பிணைத்துக்கொள்ள முடியாமல் போவதற்குக் காரணமாக அமைவது அந்நாடுகளின் குளிர். ஆனால், எனக்கு அந்தக் குளிர் மிக இயல்பாக இருந்தது. பருவ காலம் என்றால் ஐரோப்பியக் குளிர் என்னுடைய மரபணுவில் வந்துள்ளதோ என்ற அளவுக்குப் பிடிக்கும். இரண்டு ஐரோப்பியப் பயணங்கள். ஒரு தென்னமெரிக்கப் பயணம். மூன்றுமே கடும் குளிர் காலத்தில் சென்றதுதான். 2006 கிறிஸ்துமஸ் அன்று பாரிஸிலிருந்து 850 கி.மீ. தூரத்தில் உள்ள லூர்து மாதா ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். மாதாவே என்னை அழைத்திருந்தார் என்றுதான் சொல்வேன். நானும் நண்பரும் கிறிஸ்துமஸ் அன்று சென்னை திரும்ப வேண்டும். அப்படித்தான் டிக்கட் போட்டிருந்தோம். கையில் இருந்த பணமும் காலி. அப்போது கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் ஒரு நண்பர் சொன்னார், “அடுத்த முறை பிரான்ஸ் வரும்போது லூர்து சென்று வாருங்கள். அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ஆனால், மாதா உங்களை அழைக்க வேண்டும்.”

அன்றைய தினம் லா சப்பல் என்ற பகுதியில் உள்ள அறிவாலயம் என்ற புத்தகக் கடையில் ஒரு நண்பர் சந்தித்தார். தான் துலூஸ் என்ற ஊரில் வசிப்பதாகவும், நானும் நண்பரும் அவர் வீட்டுக்கு வர வேண்டும் என்றும் சொன்னார். டிக்கட் தேதியை மாற்றிவிடலாம் என்றார். இன்னொரு விசேஷம். “நான் நாத்திகன். ஆனாலும் துலூஸுக்கு அருகில் உள்ள லூர்து மாதா ஆலயத்துக்குப் போனால் அது ஒரு அனுபவம். நீங்கள் வர விரும்பினால் அங்கே அழைத்துச் செல்கிறேன்.”

லூர்து மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் அன்று கூட்டமே இல்லை. நானும் நண்பரும் ஒரு பிரெஞ்ச் பெண்ணும்தான். ஏன் கூட்டம் இல்லை என்றேன். “ஐரோப்பா கடவுளை இழந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்துக்கு எல்லோரும் மது விடுதியில்தான் இருப்பார்கள்” என்றவர் நாங்கள் இந்தியா என்று சொன்னதும் சொன்ன வார்த்தைகளை ஒருபோதும் மறக்க இயலாது. “உங்கள் நாட்டில் இந்த நேரத்தில் 30 டிகிரி செல்ஷியஸ் இருக்கும் அல்லவா, ஆஹா, உடம்பில் ஆடையே அணிந்துகொள்ள வேண்டாம்!” இரண்டு கைகளையும் விரித்தபடி உற்சாகமாகச் சொன்னார். மேற்கத்தியர்கள் இங்கே வந்தால் மிகக் குறைந்த ஆடையுடன் இருப்பதற்கு அதுதான் காரணம்.

லூர்துவில் அன்றைய தினம் பனி பொழிந்தது.  ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் அன்று பனிப் பொழிவை எதிர்பார்க்கும் பிரான்ஸ். சில ஆண்டுகளில் பனிப் பொழிவு இருக்காது. ஆனால் ஜெர்மனியில் குளிர்காலத்தில் பனிப்பொழிவு எப்போதும் உண்டு.

அந்தப் பெண் அப்படிச் சொன்னதற்குக் காரணம், கடைக்குப் போய் ஒரு சிகரெட் வாங்கி வர வேண்டும் என்றால்கூட உடம்பில் இருபது கிலோ அளவு ஆடை அணிய வேண்டும். பேண்டுக்குள்ளேயே இன்னொரு பேண்ட், ஸ்வெட்டர், மஃப்ளர், கோட், கையுறை, தொப்பி என்று டஜனுக்கு மேற்பட்ட கம்பளி ஆடைகள்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் பாரிஸில் தங்கியிருந்த மூன்று மாத காலமும் – ஸீரோ டிகிரி செல்ஷியஸில் – எனக்கு வேர்த்தது. உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். வேர்த்துக் கொட்டுவதை கண்கள் பிதுங்கப் பார்ப்பார்கள் பிரெஞ்சுக்கார்ர்கள். ஒருத்தர் இன்னொருத்தரிடம் சொல்லி வந்து வந்து பார்க்காததுபோல் பார்த்துவிட்டுப் போவார்கள். என் நண்பர்களோ “உங்களுக்குக் கனடாதான் லாயக்கு” என்று சொல்லி சிரிப்பார்கள் (கனடாவில் மைனஸ் இருபதுக்கு மேலே போகும்).

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு

சமஸ் | Samas 01 Jan 2023

மேற்கத்தியர் பனிப் பொழிவை ரசிப்பார்கள் என்றாலும் குளிர் என்பது அவர்களுக்கு மரணத்தின் குறியீடு. அவர்களுக்குக் கோடைதான் (15 - 20 டிகிரி) கொண்டாட்டம். அதனால்தான் ‘வார்ம் வெல்கம்’ என்று வரவேற்கிறார்கள். ஹிட்லரின் வதைக் கூடங்களைப் பற்றி நூற்றுக்கணக்கான ஹோலகாஸ்ட் படங்கள் வந்துள்ளன. எல்லாமே குளிர்காலத்தோடு சம்பந்தப்பட்டவை. என்னுடைய ஜெர்மன் நண்பன் ஒருவன் அவனுடைய தாத்தா பாட்டி சொன்ன ஒரு செய்தியைச் சொல்லுவான். அவர்கள் ரயிலிலேயே ஏறியதில்லையாம். ஏனென்றால், யூதர்களை வதைக்கூடத்துக்கு ஏற்றிச் சென்றது ரயில்தான். நான் பார்த்த அத்தனை ஹோலகாஸ்ட் படங்களிலும் அம்மாதிரி ரயில் காட்சிகள் உண்டு.  

குளிரில் நதிகளெல்லாம் உறைந்து கிடக்கும். அதில் குண்டு போட்டால் கொஞ்சம் பனி உடைந்து உள்ளே நதி தெரியும். அதில்தான் நூற்றுக்கணக்கான யூதர்களை உயிரோடு போட்டிருக்கிறார்கள் நாஜிகள். குளிர்காலத்தில் தண்ணீரில் விழுந்தாலே உடல் விறைத்து மரணம் நேர்ந்துவிடும்.

மேற்கத்தியருக்குக் குளிர் பிடிக்காது, கோடை பிடிக்கும். உங்களுக்குக் கோடையைவிட குளிர் பிடிக்கும். இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று சொல்லலாமா?

முடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், நான் இமயத்தின் புதல்வன். அதனால் ஐரோப்பியப் பனி எவ்வளவு கொடூரமான மரணங்களின் கதையைக் கொண்டிருந்தாலும் எனக்குப் பனி என்பது இமயத்தையே நினைவூட்டிக்கொண்டிருந்தது. சிலுவை என்ற கொலை ஆயுதம் தியாகத்தின் குறியீடாக ஆனதுபோல பனி என்பது இமயத்தில் ஆன்மீகத்தின் குறியீடு. தனிமையின் குறியீடு. மானுட வாழ்வின் கீழ்மைகள் எதுவுமே அண்டாத மேன்மையின் குறியீடு. மனிதத்துக்கும் இறை சக்திக்கும் இடையில் வசிக்கும் அதிமானுடர்களின் குறியீடு (நம் இலக்கியம் அவர்களை தேவர்கள் என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் அதற்குத் தெளிவான குறிப்பு உண்டு).

பலரும் என்னிடம் கேட்பார்கள். இங்கே இமயத்தில் தனியாக தவம் செய்பவர்களால் உலகத்துக்கு என்ன பயன்? இவர்கள் செய்வது சுயநலம் இல்லையா? தவத்தின் மூலமாக இவர்கள்தானே முக்தி அடைகிறார்கள்?

நான் சொல்வேன், இவர்களால்தான் மலைகள் உயர்ந்து வளர்கின்றன. அந்த மலைகள் மேகங்களைத் தடுத்து மழையை அருள்வித்து வனங்கள் உருவாகின்றன. இவர்கள் இல்லாவிட்டால் பூமி வெறும் பாலைவனமாகக் கிடக்கும். ஆஸ்திரேலியப் பாலைவனத்துக்கும் தென்னமெரிக்கப் பெருங்காடுகளுக்குமான வித்தியாசம் இது. இதையெல்லாம் மனித விஞ்ஞானத்தால் விளக்க முடியாவிட்டாலும் இதுதான் இமயம் சொல்லும் செய்தி.

எனக்குத் தனிப்பட்ட முறையில் பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளில் போய் வசிப்பதைவிடவும் க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் வசிப்பதுதான் பிடிக்கும். க்ரீன்லாந்தில் ஒரு கிராமம் இருக்கிறது. அதன் பெயர் Ittoqqortoormiit. (உலகிலேயே கடினமான மொழி இன்யூட் என்பார்கள்!) 450 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். ஜூலை, ஆகஸ்டில்தான் மக்களுக்குத் தேவையான பொருட்கள் நகரத்திலிருந்து வரும். கடலே உறைந்துவிடும் என்பதால் இந்த ஊருக்கு விமானத்திலோ அல்லது ஸ்லெட்ஜிலோதான் வர முடியும். பத்துப் பதினைந்து நாய்கள் இழுக்கும் ஸ்லெட்ஜ். இரண்டு மாதங்கள்தான் குளிர் ப்ளஸ் 5க்குப் போகும். மற்றபடி எப்போதுமே மைனஸ் 20 மற்றும் அதற்குக் கீழேதான்.

இந்தக் கிராமத்தில் போய் சில ஆண்டுகள் வசிக்க வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. இங்கே உள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். பொய் புரட்டு, சூது வாது, ஆதிக்கம், போட்டி, பொறாமை என்று மானுட குலத்தில் என்னவெல்லாம் கீழ்மைகள் உள்ளனவோ அது எதுவுமே இல்லாத மனிதக் கூட்டம்தான் இந்தப் பனிப்பாலைகளில் வசிக்கின்றன. வேட்டையாடுவதையும், மீன் பிடிப்பதையும் தவிர வேறு எதுவுமே அறியாதவர்கள் இந்த மனிதர்கள். இவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் சொல்லிவந்த கதைகளை நான் தொகுத்து வைத்திருக்கிறேன்.

இந்த அர்த்தத்தில்தான் சொல்கிறேன், பனி மனிதனின் கசடுகளையும் கீழ்மைகளையும் அகற்றிவிடுகிறது. உதாரணமாக, ஸ்காண்டிநேவியன் நாடுகளில் கிராம வாழ்க்கை என்பது எப்படி இருக்கிறது? ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடையில் இருபது முப்பது கிலோ மீட்டர் இருக்கும். ஒரு வீட்டில் மனைவியை இழந்த எண்பது வயது கிழவரோ அல்லது அந்த வயதுள்ள தம்பதியோ இருப்பார்கள்.  இன்னும் அவர்கள் பதினைந்து ஆண்டுகளை வாழ்ந்தாக வேண்டும். (அங்கேயெல்லாம் 95 வயது பொதுவான ஆயுள்). மாட்டுப் பண்ணை இருக்கும். எல்லா வேலையையும் எந்திரம் செய்துவிடும். பால் வாங்கிச் செல்வதற்காக தினமும் வரும் ஒரே ஒருவரைத் தவிர வேறு மனித முகத்தையே காண முடியாது. அங்கே போய் நிற்கும் ஒரு மனிதனை அவர்கள் கடவுளே வந்தது போல் கொண்டாடுவார்கள் அல்லவா? குளிர் அந்த அளவுக்கு மானுடத்தை மேன்மைப்படுத்த வல்லது.

பாரிஸிலிருந்து நான் ரயிலில் துலூஸ் செல்லும் வழியெங்கும் பார்த்த பனி போர்த்திய கிறிஸ்துமஸ் மரங்களை என் ஆயுளில் ஒருபோதும் மறக்க இயலாது.

நான் ஐரோப்பாவில் வாழவில்லை என்றாலும் தில்லியில் இருந்தபோது ஐரோப்பிய சினிமாவின் மூலம் என்னை ஐரோப்பாவுடன் இணைத்துக்கொண்டு வாழ முடிந்தது. ஆனால், சென்னை வந்த பிறகு அந்தத் தொடர்பு அறுந்துபோயிற்று.

வழமையான எழுத்துமுறைக்கு மாறாகக் கலைத்துப்போடும் எழுத்துமுறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?   

ஐரோப்பிய சினிமாதான் காரணம். உலக அளவில் மூன்று வகையான சினிமாக்கள் உள்ளன. ஹாலிவுட் மற்றும் ஆசியாவின் பொழுதுபோக்கு சினிமா. ஐரோப்பாவின் கலை சினிமா. தென்னமெரிக்காவின் மூன்றாவது சினிமா. மூன்றாவது சினிமா என்பது அரசியல் சினிமா (உ-ம். Battle of Chile). ஐரோப்பிய சினிமா மானுடத்தின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைவிட அதன் அடிப்படையான தத்துவக் கேள்விகளை முன்வைக்கிறது. விடைகளைத் தருவதில்லை. ஆனால், கேள்விகளைக் கண்டடைகிறது. அதுவும் தவிர, கதை சொல்லல் முறையிலும் புதுப் புது வகைமைகளைத் தேடியபடியே செல்கிறது. ஒரு படத்துக்கு ஏன் ஆரம்பம் முடிவு என்றெல்லாம் இருக்க வேண்டும்? அதேபோல் ஒரு கதைக்கும் ஏன் ஆரம்பம் முடிவு எல்லாம் இருக்க வேண்டும்?

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி

சமஸ் | Samas 29 Jan 2023

ஐரோப்பிய சினிமாவில் என்னை வெகுவாக பாதித்தவர்கள் அலா(ங்) ரெனே (Alain Resnais) மற்றும் ஜான் லுச் கொதார் (Jean-Luc Godard). அலா(ங்) ரெனேயுடன் இணைந்தவர் ஆலன் ராப் க்ரியே (Alain Robbe-Grillet) என்ற எழுத்தாளர். அறுபதுகளில் இவர்களெல்லாம் ஓர் இயக்கமாகச் செயல்பட்டவர்கள். என் எழுத்து ஏன் தமிழ்ச் சூழலுக்கு சற்று அந்நியமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒருவர் ஆலன் ராப் க்ரியே எழுதிய கடற்கரை என்ற ஒரே ஒரு கதையைப் படித்தால் போதும்.

சுருக்கமாகச் சொன்னால், எதையுமே முழுமைப்படுத்துவது என்ற செயல் ஒற்றை உண்மையில் (Absolute Truth) கொண்டுபோய் நிறுத்தும். அது இந்தியப் பன்மைத்துவத்துக்கே எதிரானது. அதனால்தான் கலைத்துப் போடும் எழுத்து முறை எனக்கு வாய்த்தது. தேர்ந்தெடுத்தேன் என்று சொல்வது தவறு. அதுவாகவே நடந்தது. அது ஒரு உள்ளார்ந்த செயல்பாடு.

பிரெஞ்சு / லத்தீன் அமெரிக்க இலக்கியம் போன்ற ஒரு வகைமையைக் கையில் எடுக்கும்போது அதற்கேற்ற பண்பாட்டுப் பின்புலமும் எழுத்துக்கு முக்கியம் இல்லையா? ஒரு சமூகத்தின் பண்பாட்டில் இல்லாத பண்பையும் இயல்பையும் எழுத்தில் பிரதிபலிக்க முடியுமா? அங்குள்ள சுதந்திர, தாராளச் சூழலை இங்கே எப்படி அடையாளம் கண்டீர்கள்?

பண்பாட்டுப் பின்புலம் பற்றி நான் கவலைப்படவே இல்லை. ஏனென்றால், பண்பாடு என்ற காரணத்தை வைத்துத்தான் நான் ஆரம்பத்தில் தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரையும் நிராகரித்தேன். குறிப்பாக புதுமைப்பித்தன், ஜானகிராமன். நான் வளர்ந்த, நான் அனுபவித்த, நான் பார்த்த பண்பாட்டுக்கும் மேற்கூறியவர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. உதாரணமாக, நான் தமிழ் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகின்ற தஞ்சை ப்ரகாஷின் ‘பொறா ஷோக்கு’ சிறுகதையும், ‘கரமுண்டார் வூடு’ நாவலும் இங்கே பலருக்கும் பாலியல் கதைகளாக மட்டுமே அர்த்தமாகின்றன. ஆனால், எனக்கு அது நான் பார்த்த, நான் அனுபவித்த, நான் வாழ்ந்த வாழ்க்கை. என் வாழ்க்கை ஒருவருக்குப் பாலியல் கதை என்று தோன்றினால் அது அவர் பிரச்சினை. ஒரு நாளில் பத்து மாடுகளை அறுக்கும் தொழிலாளிக்கும் அதே மாட்டை தெய்வமாக வணங்கும் ஒரு புரோகிதருக்கும் எப்படி ஒரே பண்பாடு இருக்க முடியும்?

நவீன மனம், தாராள சுதந்திரப் பொதுவாழ்வைப் பற்றி யோசிப்போம். எனக்குத் தெரிந்து மகாபாரதத்தைப் போன்ற ஒரு ட்ரான்ஸ்கிரஸிவ் பிரதி எங்கேயும் இருக்க முடியுமா என்றே தெரியவில்லை.

உதத்யாவின் மனைவி மமதா. உதத்யாவின் தம்பி பிரஹஸ்பதி ஒருநாள் மமதாவை அணுகினான். அப்போது மமதா கர்ப்பமாக இருந்தாள். அப்போதெல்லாம் பெண்கள் தங்கள் விருப்பம்போல் யாருடனும் உறவு கொள்ளலாம். ஆனாலும் அவள் தன் கர்ப்பத்தைக் காரணம் காட்டித் தவிர்த்தாள். உங்கள் தமையனால் கருவுற்றிருக்கிறேன், ஒரே சமயத்தில் என் கருவறை இரு உயிர்களைத் தாங்காது, வேண்டாம் என்கிறாள். பிரஹஸ்பதி அவள் பேச்சைக் கேட்காமல் உறவு கொள்கிறான். கருவில் இருக்கும் சிசு பிரஹஸ்பதியைத் தன் காலால் உதைக்கிறது. அதனால் தன் ஜன்னேந்திரியத்தில் அடி வாங்கிய பிரஹஸ்பதி கருவில் இருக்கும் சிசுவுக்கு சாபம் கொடுக்கிறான்.

பாரதத்தில் இன்னும் இதையெல்லாம்விட பயங்கரமான பகுதிகள் நிறைய உண்டு.

அதனால் நவீன மனம் என்றெல்லாம் ஒரு படைப்பாளி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப்போனால் கிரேக்க நாடகாசிரியர்கள் எழுதிய நாடகங்கள் எல்லாமே இன்று தினசரிகளில் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. கள்ளக் காதலனுக்காகத் தன் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய் ஒரு உதாரணம். எதையும் புனிதப்படுத்தலாகாது என்பதே ஒரு பின்நவீனத்துவவாதி கவனம் கொள்ள வேண்டிய விஷயம்.

ஆலன் ராப் க்ரியேவின் கடற்கரை கதையையே எடுத்துக் கொள்வோம். மூன்று சிறுவர்கள் கடற்கரையில் நடந்து செல்கிறார்கள். அவ்வளவுதான் கதை. கடல் அலை பற்றிய வர்ணனை. மலை பற்றிய வர்ணனை. கடல் பறவை பற்றி வர்ணனை. அந்தக் கதை எனக்கு சங்கரரின் பிரம்ம தத்துவத்தையும் வேதத்தையும் ஞாபகப்படுத்தியது. பாரதியும் வேதத்தின் அந்தப் பகுதியை வசன கவிதையாக தமிழ்ப்படுத்தியிருக்கிறார் அல்லவா? எல்லா உயிர்களிடத்திலும் பிரம்மம் இருக்கிறது. 

எழுத்தாளன் என்பவன் தரையில் பயணிப்பவன் அல்ல, பட்சிகளைப் போல ஆகாயத்தில் செல்பவன் என்பதால் அவனுக்குக் காலம் என்பது நேர்க்கோட்டில் இல்லை. எனவே, வேதகாலக் கவியொருவன் எழுதியதைத்தான் ஆலன் ராப் க்ரியேவும் எழுதினார் என்று பொருள் கொள்ளவும் இடம் இருக்கிறது.

இன்னொரு உதாரணமாக போர்ஹேஸைச் சொல்லலாம். பின்நவீனத்துவ சிந்தனையாளர்களுக்கு போர்ஹேஸ் ஒரு ஆதர்சம். ஆனால், போர்ஹேஸ் தன் எழுத்துக்கான மூலகங்களை மகாபாரத்த்திலிருந்து எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அவருடைய அலெஃப் என்ற கதையில் வரும் அலெஃப் (அகரம்) என்பது ஒரு புள்ளி. அந்தப் புள்ளியின் மூலம் ஒருவன் அண்ட சராசரத்தையே காண்கிறான். விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆரம்பத்தில் தமிழ் முன்னோடிகளை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். பிற்பாடு நீங்களே ‘பழுப்பு நிறப் பக்கங்கள்’ என்று அவர்களைப் போற்றி எழுதினீர்கள். இந்த மாற்றம் எந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தது? ஆரம்ப கால நிராகரிப்பு உங்களுடைய போதாமையின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?

(அடுத்த வாரம் பேசுவோம்…)

 

தொடர்புடைய பேட்டிகள்

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி
அப்போதே பாய் பெஸ்டியாக இருந்தேன்: சாரு
சர்தாஜிக்களின் கைகளில் இரண்டு கோப்பைகள்: சாரு பேட்டி
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: சாரு பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1

1





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Krishnan R   1 year ago

சாரு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே சொல்லாதீங்க. ஏதாச்சு புதுசா வாழ்வியல் அனுபவங்கள் அல்லது வாழ்வியல் நுட்பங்கள் பத்தி பேசுங்க.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJA   1 year ago

எழுத்தாளர் சாருவை தொடர்ந்து வாசிப்பவர் கொண்டாட்டமான வாழ்க்கைையைப் பெறலாம். அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் அவருடையது. நெல்லிக்காய் போல இனிக்கும். தொடர்ந்து வாசித்தால் உடல் மனம் நலம் பெரும். அவர் சுட்டிக்காட்டும் புத்தகங்கள் , படங்கள் , உணவு முறை அனைத்தும் அவ்வளவு சுவாரசியமாக அவரைத் தவிர வேறு யாரும் சொல்வாரில்லை. படிக்க ஆயுட்காலம் முழுதும். ஆசிரியருக்கு நன்றி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   1 year ago

இதுவரை இவரைப் படித்ததுல்லை இனியும் படிக்க போவதில்லை… ஆனபோதிலும், இந்த பேட்டி நல்ல உணர்வைத் தருகின்றது…

Reply 0 0

Krishnan R   1 year ago

நல்ல முடிவு

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிவங்கதேச வளர்ச்சிஅர்த்தம்ஏவுதளம்தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு இரண்டாயிரம் வயததென் இந்திய மாநிலங்கள்அரசு நடவடிக்கைபொதுவான சித்திரம்தாமஸ் பெய்ன்பெருநிறுவனம்இதழியல்குவாண்டம் இயற்பியல்வெற்றி எளிதா?விரிவாக்கம்மறுவாழ்வுஜி.குப்புசாமி கட்டுரைசத்யஜித் ரே அருஞ்சொல்கோம்பை அன்வர் கட்டுரைஅரசு இயந்திரம்காவல் துறைநகராட்சிகள்அமுல் 75சமஸ் - கி.ராஜநாராயணன்ரசிகர்கள்மகாராஷ்டிர அரசியல்கருத்தியல்கர்நாடக இசைதூசு வால்7.5% ஜிடிபி வளர்ச்சி முடியுமாஉலகம் சுற்றும் வாலிபன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!