பேட்டி, கலை, சமஸ் கட்டுரை, இலக்கியம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

கலை ஒரு நல்ல தப்பித்தல்: சாரு பேட்டி

சமஸ்
25 Dec 2022, 5:00 am
3

மிழ் ஆளுமைகளுடனான உரையாடல்களை ஞாயிறுதோறும் ‘தமிழ் உரையாடல்’ பகுதியில் வெளியிடுகிறது ‘அருஞ்சொல்’. தமிழின் தாராள இலக்கியரான சாரு நிவேதிதாவிடமிருந்து இந்த உரையாடல் ஆரம்பமாகிறது.

கொண்டாட்டத்தில் இருக்கிறார் சாரு நிவேதிதா. எப்போதுமே அப்படித்தான் என்றாலும், சமீபத்திய இரட்டை சந்தோஷங்கள் அவருடைய உற்சாகத்தை மேலும் கூட்டியிருக்கின்றன. சாருவின் சமீபத்திய நாவலான ‘நான்தான் ஔரங்கசீப்’ பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது; அவருடைய போட்டியாளராகக் கருதப்படும் ஜெயமோகனுடைய வாசகர்களால் வழங்கப்படும் ‘விஷ்ணுபுரம்’ விருது இந்த ஆண்டு சாருவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சாருவின் வாசகர்கள் இந்த இரு சந்தோஷங்களையும் தங்கள் சந்தோஷமாக்கிக்கொண்டனர். கோவையில் ஒரு தென்னந்தோப்பில் நள்ளிரவில் சாருவோடு இலக்கியம் பேசி, ஆடிப் பாடி, கூத்துகள் கும்மாளத்தோடு குதூகலித்திருக்கிறார்கள். அரை நூற்றாண்டு காலமாக எழுதிக்கொண்டிருக்கும் சாருவின் எழுத்துகளையும் அவருடைய வாழ்வையும் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தானே? ஆக, ஒரு நீண்ட உரையாடலுக்கு நாங்கள் தயாரானோம்.

நாகூரிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். நாகூர் என்றவுடன் இன்றைக்குச் சட்டென நினைவுக்கு வரும் ஐந்து விஷயங்கள் என்னென்ன?

நாகூர் ஹனீஃபா. அவரைப் போன்ற குரல் படைத்தவர் அவருக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. அதேபோல், அவருடைய பாடல்களில் ஒன்றுகூட சோடை போனது இல்லை. எல்லாமே ரசிக்கத் தகுந்தவை. அது, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…’ பாடலாக இருந்தாலும் சரி,  ‘ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?’ பாடலாக இருந்தாலும் சரி; ஹனிஃபாவின் பல பாடல்கள் கண்களில் கண்ணீரை வரவழைப்பவை.

சில்லடி. எங்கள் ஊர் கடற்கரை. என் காலத்தில் அங்கே பாலைவனத்தில் உள்ளதுபோல் பெரும் மணல் மேடுகள் இருந்தன. அந்த மணல் மேடுகளின் உச்சியில் ஏறி அங்கிருந்து சறுக்கிக் கீழே இறங்குவது எங்கள் அப்போதைய விளையாட்டு. இப்போது அந்த மணல் மேடுகளின் தடயம் எதுவும் இல்லை. அந்த இடங்களில் பெருமளவு பிளாஸ்டிக் கழிவுகளே நிரம்பியுள்ளன. சில்லடியில் உள்ள ஈச்சந்தோப்புகள் மட்டும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. அந்த ஈச்சந்தோப்பில்தான் தனியாக அமர்ந்து படிப்பேன். சமயங்களில் சுயமைதுனம் செய்ததும் உண்டு.

தர்ஹா. இதைத்தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும். எஜமான் அடங்கின இடம். ஆயிரக்கணக்கான புறாக்கள் வசிக்கும் இடம். மனித மனதின் நோய்மைகளைப் போக்கும் இடம். எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை, ஹரிக்கேன் விளக்கில் படிப்பதற்கு மண்ணெண்ணெய் வாங்கவும் காசு இருக்காது என்பதால், இரவில் தர்ஹாவில்தான் படிப்பேன். தர்ஹா என் தாய் வீடு.

நஹரா. எனக்கு இலக்கியம் எப்படியோ, பயணம் எப்படியோ, அதே அளவுக்குத் தீவிரமான உந்துவிசையாய் இருப்பது இசை. அதற்கு ஆதாரமாக இருந்தது காலை ஆறு மணிக்கு தர்ஹாவின் அலங்கார வாசலுக்கு எதிரே இருக்கும் மனாராவிலிருந்து கேட்கும் நஹரா இசை. இந்த நஹரா இசையை நீங்கள் இந்தியாவில் வேறு எங்குமே கேட்க முடியாது என்று நினைக்கிறேன். நான் கேட்டதில்லை. நஹரா இசையே முதல் முதலாக இசை உலகில் என்னை அழைத்துச் சென்ற இசைக் கருவி. நஹரா ஒரு தோல் கருவி. மத்திய கிழக்கு நாடுகளிலிலிருந்து நாகூருக்கு வந்தது. அந்த நாடுகளில் அவர்கள் நகரா என்கிறார்கள். நாகூரில் நாங்கள் எல்லாவற்றுக்கும் ‘ஹ’ போடுவோம். ‘என்ன, வாப்பா சப்ர்லேந்து வந்துட்டாஹாளா?’

பன்மைத்துவம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது கிட்டத்தட்ட இன்று தேய்வழக்காகிவிட்ட ஒரு வாக்கியம் என்றாலும், என் வாழ்வில் நான் அப்படித்தான் இருக்கிறேன். இந்த மனோபாவத்தை எனக்குக் கொடுத்தது நாகூரின் நிலம். ஊரின் கிழக்குப் பகுதி இஸ்லாமிய கலாச்சாரம். மேற்கில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலுமான ஹிந்து கலாச்சாரம். தெற்கே வெட்டாற்றைத் தாண்டினால் வாஞ்சூர். வெட்டாறு என்ன, ஒரு ஃபர்லாங் அகலம். வாஞ்சூரில் கால் வைத்ததும் பத்துப் பதினைந்து வைன் ஷாப்புகளும் கள்ளுக்கடைகளும் சாராயக் கடை ஒன்றும் கண்கொள்ளாக் காட்சியாய் மிளிரும். என்னவென்று புரிந்துகொள்வான் ஒரு பதின்பருவத்து இளைஞன்? ஒரு பாலத்தைத் தாண்டினால் ஐரோப்பா! வாஞ்சூரைத் தாண்டினால் காரைக்கால். குட்டி பாரிஸ். மேற்கத்திய சங்கீதமும் கிறித்தவக் கலாச்சாரமும் காரைக்காலில் கொடி கட்டிப் பறக்கும். ஆக, இந்த மூன்று கலாச்சாரங்களும் என்னுள் ஒன்றேபோல் இறங்கியதற்குக் காரணம், நாகூரின் நிலவியல் அமைப்பு.

நாகூர் இவ்வளவு உங்களுக்குள் ஆழ இறங்கியிருக்கிறது. ஆனால், சொந்த ஊராக அதை உணர்வதான வெளிப்பாட்டை உங்களுடைய எழுத்துகளோ, பேச்சோ அளிப்பது இல்லை. சொல்லப்போனால் சொந்த ஊரிலிருந்து உங்களைத் துண்டித்துக்கொண்டவராகவே பல சமயங்களிலும் நீங்கள் பேசுகிறீர்கள். என்ன காரணம்?  

என்னிடம் நீங்கள் உலகிலேயே சிறந்த மொழி எது என்று கேட்டால், தமிழ் என்று நான் பாரதி சொன்னதுபோல் சொல்ல மாட்டேன். எல்லா மொழிகளுக்குமே அவ்வவற்றுக்கான சிறப்புத் தன்மைகள் உண்டு என்பேன். இனிமையான மொழி என்றால் அரபி. ஆழமான மொழி என்றால் சம்ஸ்கிருதம். இசைக்கு ஸ்பானிஷும் தெலுங்கும். மென்மைக்கு ஃப்ரெஞ்ச். பழமைக்குத் தமிழ். அது போலவேதான் இனம், தேசம் எல்லாமே. எனக்கென்று தாய் நாடோ, சொந்த இனமோ கிடையாது. பெரியார் மூன்று கூடாதுகளைச் சொன்னார். குலாபிமானம், பாஷாபிமானம், தேசாபிமானம். இந்த மூன்றுமே இல்லாதவனாகத்தான் நான் இருக்கிறேன். ஆனால், இப்படிப்பட்ட உணர்வுக்கான அடித்தளம் நாகூரிலிருந்தே உருவானது.

நான் நாகூரில் இருந்துகொண்டு ஃப்ரெஞ்ச் இலக்கியத்தைப் படிக்கிறேன்; மாலி, பாலச்சந்தர், பிஸ்மில்லா கான், அல்லா ரக்கா என்று கேட்கிறேன். அதேசமயம், நான் வசித்த சேரியில் என்னைக் கல்லால் அடிக்கிறார்கள். சும்மாவேனும் இந்த நேர்காணலுக்காக இதைச் சொல்லவில்லை. கித்தாரைத் தூக்கிக்கொண்டு நான் என் தெருவில் நடக்கும்போது சிறு கற்களால் அடித்திருக்கிறார்கள் (ஹனீஃபாவின் மகன் நௌஷாதின் கித்தார் அது).

நான் பேசும் மொழியைத்தான் பேசுகிறார்கள். நான் வாழும் நிலத்தில்தான் வாழ்கிறார்கள். எனக்குள்ளும் அதெல்லாம் இருக்கிறது. ஆனால், என்னால் அவர்களோடு ஆறு வயதிலிருந்தே ஒட்டி வாழ முடியவில்லை. ஊரும் அப்படித்தான்.

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா? எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. ஒரு சிறுவன் எப்படி சைக்கிள் விடுவதற்குக் கற்றுக்கொள்கிறான்? அவனுடைய நண்பர்கள் அவனுக்குக் கற்றுக்கொடுப்பார்கள். நானோ எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே என் வயதை ஒத்த சிறுவர்களோடு இணைய முடியாத சூழலில் இருந்தேன். பெண்களை ஒத்த நளினமான என்னுடைய உடல்வாகு இதற்கு ஒரு காரணம். கொஞ்சம் வளர்ந்தபோது கிடைத்த நண்பர்களை சராசரிகள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். பெரும்பாலும் புத்தகங்களும் முன்னிரவில் பெண்களும்தான். பகலில் பெண்கள் வீட்டு வேலைகளில் மூழ்கியிருப்பார்கள். முன்னிரவில்தான் அவர்களோடு பல்லாங்குழி, தாயம் என்று ஆடுவது; கதை பேசுவது. சமயங்களில் அந்த ஆட்டம் நள்ளிரவு வரைகூடப் போகும். பெண்களின் உலகம் எனக்கு சுவாரஸ்யமானதாக இருந்தது. பதின்பருவத்தில்தான் ஓரளவுக்கு ஆண் நண்பர்களோடும் கலந்தேன். அதற்கு இசை ஒரு பாலமாக இருந்தது.

வினோதமான கலவை நான். அதனால்தான் ஒன்ற முடியவில்லை என்று நினைக்கிறேன்.  என்னுடைய ரசனையிலும் உள்ள இந்தக் கலவையை நாகூர் சூழலே உருவாக்கியது என்று எண்ணுகிறேன். சிறுவயதிலேயே எனக்கு சாஸ்தீரிய இசை அறிமுகமாகிவிட்டது. என் ரசனை உலகில் சாஸ்த்ரீய சங்கீதத்துக்கே முதலிடம் கொடுப்பவன் என்றாலும், ஜனரஞ்சக இசையையும் தீவிரமாக ரசிப்பேன். நாகூர் ஹனிஃபாவை அப்படித்தான் நேசித்தேன். இன்று ஹனிஃபாவை நாட்டுப்புற இசையின் ஒரு பகுதியாகப் பார்க்கும் பார்வையை நாகூரிலிருந்தே பெற்றேன்.     

உங்களுடைய எந்தப் பருவத்தில் சாஸ்தீரிய இசை உங்களுக்குப் பரிச்சயம் ஆனது? நாகூரில் இதற்கான பின்னணி எப்படி அமைந்தது?

நாகூர் ஒரு சிற்றூர் என்றாலும், கவ்வாலி, டப்பா போன்ற செமி-க்ளாஸிகல் ரக இசைக்குப் பழகியிருந்த ஊர் அது. என்னுடைய பதின்பருவத்தில் சாஸ்த்ரீய சங்கீதத்தை ரசித்து அதுபற்றி விவாதிக்கும் கல்லூரி மாணவர்கள் பட்டாளமே அங்கு இருந்தது. சாஸ்த்ரீய சங்கீதம் என் பதின்பருவத்தில் ஆழ இறங்கியது. பிஸ்மில்லா கான், அல்லா ரக்கா, நஸீர் அமீனுத்தீன் (டாகர் மற்றும் பல டாகர் சகோதரர்கள்), ரவி ஷங்கர், ஷிவ் ஷங்கர் ஷர்மா, அம்ஜத் அலி கான், மாலி, லால்குடி ஜெயராமன், எஸ்.பாலசந்தர், எஸ்.ராமநாதன்… இப்படி இந்தப் பட்டியல் மிக நீளமானது. இவர்களையெல்லாம் ரசிக்கும் அதே தீவிரத்துடன்தான் ஹனீஃபாவையும் ரசிப்பேன். இது காலம் பூராவும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இப்போதுகூட, ‘ரஞ்சிதமே…’ பாடலைக் கேட்டு ரசித்து நான் எழுதியதும் கிண்டல் எழுந்ததை நீங்கள் சமூகவலைதளங்களில் பார்த்திருக்கலாம். என்னைப் பொருத்த அளவில் ஹனீஃபாவை நாட்டுப்புற இசையில் நான் சேர்ப்பேன். என்னுடைய வீடும் நான் வாழ்ந்த பகுதியும் மிக மோசமான சூழலில் இருந்தாலும், இப்படி ஒரு பகுதியும் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்தது. எனக்குள் இருந்த கலைஞனை அதுதான் போஷித்தது என்றும் சொல்லலாம்.

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

எழுத்துக் கலை: ஆர்வெல்லின் ஆறு விதிகள்

மு.இராமநாதன் 03 Nov 2022

கலை ஒரு தப்பிக்கும் வழியும்கூட, இல்லையா?

சந்தேகமே இல்லை. என்னுடைய இருபத்து மூன்று வயது வரை நாகூரில் நான் வாழ்ந்த கொசத்தெரு, கொசமேட்டுத் தெரு, தொம்பத் தெரு ஆகிய மூன்றும் சேர்ந்த ஊர்க்கோடி பகுதியில் மனிதர்களைவிட கருப்புப் பன்றிகள்தான் அதிகம். அந்த மொத்தப் பகுதியிலுமே எந்த வீட்டிலும் எந்தக் குடிசையிலும் கழிப்பறை கிடையாது. அப்படியெல்லாம் வீட்டிலேயே கழிப்பறை இருக்கும் என்ற விஷயம்கூட எனக்கும் அங்கே இருந்தவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் குளத்தாங்கரையில் உள்ள கருவேல மரங்களின் அடியில்தான் மலம் கழிப்பது வழக்கம். மலம் கழிப்பதே அப்போதெல்லாம் ஒரு பெரிய சாகசமாக இருந்தது.  மனித நரகலையே உணவாகக் கொண்ட அந்தக் கருப்புப் பன்றிகளும் பெரும் பசியுடனேயே திரிந்துகொண்டிருந்தன என்பதால் பிருஷ்டங்களில் பன்றிக் கடி படாத மனிதர்களையே அந்தப் பகுதியில் காண்பது கடினம்.  நானும் அப்படிப் பன்றிக் கடி பட்டிருக்கிறேன். இத்தனை வயதிலும் எனக்கு அந்த அனுபவம் கொடும் கனவுகளாக துரத்திக்கொண்டே இருக்கின்றன.    

திரும்பின இடமெல்லாம் குளங்கள் உண்டு என்பதால் ‘கால்’ கழுவிக்கொள்வதில் பிரச்சினை இல்லை. நான் கொஞ்சம் அதீதமான கூச்ச சுபாவம் உள்ளவன் என்பதால், வீட்டுக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் இருந்த சுடுகாட்டு பக்கம் போய்விடுவேன். அங்கே பன்றிகள் இல்லை என்றாலும், உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனும் மனநிலை. ஒன்று, பேய் பயம்.  நானோ தலைச்சன் பிள்ளை. இரண்டு, பூச்சிப்பொட்டு பயம். சுடுகாட்டுக்குப் பக்கத்திலேயே ஓடும் வெட்டாற்றில் ‘கால்’ கழுவும்போது பலர் வாளக்கடியான் கடித்து செத்திருக்கிறார்கள். 

அங்கே உள்ள தொம்பர் இன மக்களின் பிழைப்பு என்னவென்றால், ஆண்களில் ஒருசிலர் துப்புரவுத் தொழிலாளர்கள்.  மற்றவர்கள் பன்றிப் பீயை சேகரித்து உரமாக்கி விற்பார்கள்.  பெண்கள் எடுப்பு கக்கூஸ் அள்ளுவார்கள். கூலியெல்லாம் கிடையாது. ஒவ்வொரு வீடாகப் போய் வெளியே நின்று ‘யமோவ்’ என்று குரல் கொடுத்து அவர்கள் போடுவதை வாங்கிச் சாப்பிட வேண்டும். ஆனால், அதைப் பிச்சை என்று யாரும் கருத மாட்டார்கள். பெண்கள் என்றாலே, எனக்கு நினைவுக்கு வரும் பிம்பம், அவர்கள் இடுப்பில் உள்ள பிரப்பங்கூடையும் கையில் உள்ள கட்டை விளக்குமாறும்தான். கட்டை விளக்குமாறு என்றால் இரண்டு சாண் நீளம் இருக்கும். அதுதான் எடுப்பு கக்கூஸ்களில் மனித நரகலை எடுக்க வசதியாக இருக்கும். தொம்பர் இன மக்கள் தெலுங்கு பேசுபவர்கள். காட்டுநாய்க்கன் என்ற தெலுங்கர் இனமும் அங்கே உண்டு. காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த அவர்கள் நகரத்துக்கு வந்ததும் துப்புரவுத் தொழிலாளர்களாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாறினார்கள். என் நைனாவின் குடும்பமும் அவர்களைப் போலவே ஆந்திரத்திலிருந்து வந்திருந்தாலும், அவர்கள் சற்று படித்திருந்ததால் ஓரளவு பிழைத்துக்கொண்டார்கள். ஆனால், இவ்வளவுக்கும் நடுவில்தான் எங்கள் வாழ்க்கையும் இருந்தது. இப்படிப்பட்ட வாழ்க்கையை யார் தக்கவைத்துக்கொள்ள விரும்புவார்கள்?

சுமார் ஏழெட்டு வயதிலேயே நான் வித்தியாசமானவன் என்றும், படிப்புதான் (பள்ளிப் படிப்பும் அதற்கு அப்பாற்பட்டும்) என்னுடைய விடுதலை என்றும் தோன்ற ஆரம்பித்துவிட்டது.  தஞ்சாவூரில் என் பெரியம்மா வீட்டில் தங்கிப் படித்தேன். (காசிக்கடைத் தெருவுக்கு எதிரே நாலுகால் மண்டபம் அருகில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் சந்து).  வீட்டில் ஏழ்மை தாண்டவம் ஆடியது. 

என் நைனா ஒண்ணாங்கிளாஸ் ஆசிரியர். வீட்டில் ஆறு குழந்தைகள். சமாளிக்க முடியவில்லை.  நாங்கள் வளர்ந்த பிறகு அடிக்கடி பட்டினியும் கிடக்க நேரிட்டிருக்கிறது. அம்மா இட்லி சுட்டு விற்றார்கள். ராட்டி (வறட்டி) தட்டி விற்றார்கள்.  அதையெல்லாம் என்னுடைய ‘அவ்வா’ என்ற கதையில் எழுதியிருக்கிறேன். 

நாங்கள் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கேட்டு தினசரி அபீன் கடைக்காரரின் காரியதரிசி காலை நேரத்தில் வீட்டு வாசலில் வந்து நின்று சத்தமாகக் குரல் கொடுப்பார். குடியானவர்களுக்காக அம்மா இட்லி சுட்டு விற்க ஆரம்பித்தார்கள். பல சமயங்களில் ஒருவேளை உணவுதான். கல்லூரிக் காலத்தில் தஞ்சாவூரில் பெரியம்மா வீட்டில் இருந்து படித்தபோதும் நிலைமை ரொம்ப மேம்பட்டது என்று சொல்லிட முடியாது.

இப்படிப்பட்ட ஒரு கொடூரமான சூழலில் என்னால் நாகூரிலோ தஞ்சாவூரிலோ நிலைகொள்ள முடியவில்லை. ஒரு குரூரமான உதாரணம் சொல்கிறேன். ஒரு பாலியல் தொழிலாளியின் வீடு. ஒரு சின்ன அறைதான் வீடு. அன்னையைத் தேடி வரும் வாடிக்கையாளரும் அந்த அறையில்தான் படுக்க வேண்டும். பதின்பருவத்து மகளும் அங்கேதான் படுக்க வேண்டும். மகள் இன்னும் வயதுக்கு வராததால் அவள் அப்போதைக்குத் தப்பினாள். தஞ்சாவூரில் அந்தப் பதின்மூன்று வயது சிறுமி தன் கதையைச் சொல்ல நான் கேட்டபோது என் வயது பதினாறு. அந்தச் சிறுமி போன்ற நிலைமை இல்லாவிட்டாலும் இருபத்து இரண்டு வயது வரை என்னால் மூச்சுவிடவே முடியாத சூழலில்தான் இருந்தேன். அந்தச் சிறையை உடைத்துக்கொண்டு வெளியே போக வேண்டும் என்பதைத் தவிர அப்போது வேறு சிந்தனையே இல்லை. ஒவ்வொருவரும் ஏதேதோ வழிகளை நம்பினார்கள். எனக்குக் கலை.

நாகூர் தனித்த பண்பாட்டைக் கொண்டிருந்தாலும், காவிரிப் படுகையின் முக்கியமான பண்பாட்டுக் கண்ணிகளில் ஒன்றும் அது. பல வீடுகளில் இந்துக்களின் சாமி அலமாரியில் வேளாங்கண்ணி மாதா சிலையும், நாகூர் தர்கா படமும் இருப்பது இயல்பு என்பதோடு, குடும்பத்தோடு இந்த இரு ஊர்களுக்கும் ஒன்றுசேரப் போய்வரும் வழக்கமும் இருக்கும். வேளாங்கண்ணி கடற்கரைக்குக் கூடுதலாக பொழுதுபோக்கு அம்சமும் உண்டு. நாகூரில் இருந்த உங்களுக்கு வேளாங்கண்ணி என்னவாக இருந்தது?

நாகூருக்கு நாகப்பட்டினம் எவ்வளவு நெருக்கம்? நாகப்பட்டினத்துக்கே நாங்கள் சினிமா பார்ப்பதற்காக மட்டுமே செல்வோம். நாகூரில் அப்போது சினிமா தியேட்டர் இல்லை. நாகூரிலிருந்து நடந்து போய் வெளிப்பாளையத்தில் உள்ள ஸ்டார் தியேட்டரில் படம் பார்ப்போம். பாண்டியன் தியேட்டர் நாகப்பட்டினம் டவுனில் இருந்தது. மற்றபடி நாகப்பட்டினத்துடனேயே எனக்கு எந்தச் சம்பந்தமும் இருந்ததில்லை. அப்படி இருக்க நாகப்பட்டினத்தைத் தாண்டி போக வேண்டிய வேளாங்கண்ணியைப் பற்றி என்ன பேசுவது? நாங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு வேளாங்கண்ணி என்பதெல்லாம் ஒரு பெரிய லக்ஸுரி என்றே சொல்வேன். வேளாங்கண்ணியை எல்லாம் கேள்விப்பட்டதோடு சரி. என்னுடைய ஐம்பதாவது வயதில்தான் ஒரு சுற்றுலாப் பயணியாக வேளாங்கண்ணி போய் வந்தேன்.

நான் கூடுதலாக எல்லாம் எதுவும் சொல்லவில்லை. நான் வசித்த பகுதியை நீங்கள் பார்த்தால், அதோடு ஒப்பிட்டால் மும்பை தாராவியையே சென்னையின் போட் கிளப் என்று சொல்லிவிடுவீர்கள். எனக்கு தாராவியைப் பார்க்கும்போதெல்லாம் எங்கள் பகுதியின் கீழ்மை ஞாபகத்துக்கு வரும். நாகூரில் உள்ள அந்தப் பகுதிக்கு இணையான சேரிகளை பெரூவிலும் ஆஃப்ரிக்காவிலும்கூட பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஒரே விஷயம் சேரி என்ற வார்த்தையால் அது அழைக்கப்படுவது இல்லை.

என்னைப் போல இசைப் பைத்தியம் பிடித்த ஒருவனுக்குத் தஞ்சாவூரில் வாழும் வாய்ப்பு கிடைத்தால் அடுத்து எங்கே செல்ல வேண்டும் என்று நினைப்பான்? திருவையாறு, தியாகராஜ ஆராதனை இவையெல்லாம் என் உலகத்துக்குள் நுழையவே இல்லை. இன்னமும்கூட நான் திருவையாற்றைப் பார்த்ததில்லை.

சரி, பொதுவில் நிறுவப்பட்டிருக்கும் காவிரிப் படுகையின் சேர்க்கை உணர்வானது தலைமடையில் இருப்பவர்களுக்கு இருப்பதைப் போலத்தான் கடைமடையில் இருப்பவர்களுக்கும் இருக்கிறதா? காவிரிப் பண்பாடு என்று பேசப்பட்டும், எழுதப்பட்டும் வந்த விஷயங்கள் மீது உங்கள் பார்வை என்னவாக இருந்தது? முக்கியமாக, நாகூரை, முஸ்லிம்களை அது உள்ளடக்கி இருப்பதாக நீங்கள் உணர்ந்தீர்களா? ஏன் இதைக் கேட்கிறேன் என்றால், நீங்கள் காவிரி பிராந்தியத்திலிருந்து வருகிறீர்கள். ஆனால், அதன் சுவட்டைக்கூட உங்களிடம் கண்டது இல்லை?

என் இலக்கிய வாழ்வில் நான் சந்தித்த மிக முக்கியமான கேள்வி இது. காவிரிக் கரையிலேயே இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த நான் – தஞ்சாவூரில் மூன்று ஆண்டுகள் இருந்த நான் – திருவையாற்றைக்கூட பார்த்தது இல்லை. இருபத்தைந்து ஆண்டுகளில் நான் காவிரி என்ற வார்த்தையையே ஒருமுறைகூடப் பிரயோகித்தது இல்லை. ஏனென்றால், நம்முடைய எழுத்தாளர்கள் சித்திரிக்கும் தஞ்சாவூர் மண்ணில் நாகூர் ஒரு தனித் தீவு. நாகூருக்கென்று ஓர் உணவு, ஒரு பேச்சு மொழி, ஒரு கலாச்சாரம் எல்லாம் இருந்தது. அதற்கும் காவிரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அந்த நாகூரிலும் நான் ஒரு அந்நியனாகவே இருந்தேன். ஏனென்றால், அங்கு நான் மதத்தால் வேறுபட்டிருந்தேன். 

பக்கத்தில் இருந்த கும்பகோணத்தில்தான் தி.ஜானகிராமன், தி.ஜ.ரங்கநாதன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, சிதம்பரத்தில் மௌனி என்று பெரும் கூட்டமே வசித்தது. நான் கும்பகோணம் பக்கமே போனது இல்லை.

காவிரி கலாச்சாரம் முஸ்லிம்களை உள்ளடக்கவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நான் முஸ்லிம் இல்லை என்றாலும் நானுமே காவிரி கலாச்சாரத்தில் இல்லாமல் இருந்தேன். தஞ்சை ப்ரகாஷ் விதிவிலக்கு. அவர் ஒரு கிறிஸ்தவர். கிழக்கு வாசல் முஸ்லிம்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அவர் தன் கதைகளில் தஞ்சை முஸ்லிம்களைப் பற்றி எழுதியிருக்கிறார். தஞ்சை ப்ரகாஷின் ‘பொறா ஷோக்கு’ என்ற கதையை வேற்று மாவட்டத்துக்காரர்களால் வாசிக்கவே முடியாது. வட்டார மொழி அல்ல; அது சொல்லும் கலாச்சாரம் அவர்களை ஜன்னிகொள்ள வைத்துவிடும். 

எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, கு.ப.ராஜகோபாலன் தவிர காவிரி கலாச்சாரத்திலிருந்து வந்தவர்கள் என்று அறியப்பட்ட பெரும்பாலானோரை நான் அக்காலத்தில் நிராகரித்தே வளர்ந்திருக்கிறேன் எனவும், ஐம்பது வயதில்தான் நான் அவர்களிடமும் காவிரியிடமும் சென்றேன் எனவும் இப்போது நான் என்னை அவதானிக்கிறேன்.  

சரி, காவிரிப் பிராந்தியத்தைச் சேர்ந்தவராக என்றேனும் உணர்ந்திருக்கிறீர்களா?

துரதிர்ஷ்டவசமாக ஒருபோதும் உணர்ந்ததில்லை. இப்படிக் கற்பனை செய்து பாருங்கள்.  ஈழத்தைச் சேர்ந்த ஒருவர் தன் பதின்பருவத்தில் ஒரு ஐரோப்பிய நாட்டுக்குச் சென்றுவிட்டார்.  இப்போது அவருக்கு ஐம்பது வயது.  அவரால் ஒருபோதும் அந்த ஐரோப்பிய தேசத்தோடு கலந்துவிடவும் முடியாது; இலங்கையோடு பொருத்திக்கொள்ளவும் முடியாது. எப்போதுமே அவர் ஒரு அந்நியராகத்தான் இருப்பார். இன்னொரு உதாரணமாக, மெக்ரிப் நாடுகள் என்று அழைக்கப்படும் மொராக்கோ, அல்ஜீரியா, மாலி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாரிஸில் வசிக்கிறார்கள்.  அவர்களின் இரண்டாவது மொழி ஃப்ரெஞ்ச். ஆனால், தாய்மொழி போலவே ஃப்ரெஞ்ச் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். இருந்தாலும் அவர்களால் ஃப்ரான்ஸைத் தங்களின் தாய் தேசமாக ஏற்க முடியவில்லை. அதேசமயம் அவர்களால் தங்களின் சொந்த பூமியிலும் போய் இருக்க முடியாது. அவர்களின் மூதாதையரின் தேசம் அவர்களுக்கு முற்றிலும் அந்நியமாகி இருக்கும். இப்படி எந்த நாட்டிலும் தன் இருப்பை உணர முடியாத ஆயிரக்கணக்கான பேர் ஐரோப்பாவில் வாழ்கிறார்கள்.

எனக்கும் காவிரி மண்ணுக்குமான உறவு அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த ஈழத் தமிழர்களுக்கும் மெக்ரிப் இளைஞர்களுக்குமாவது தங்கள் தாய்தேசம் என்றோர் உணர்வு இருக்கும். எனக்கு அதுவும் இல்லை. ஏன் இப்படி நான் பிறந்து வளர்ந்த மண்ணையே அந்நியமாகக் காண்கிறேன் என்றும் இன்று வரை தெரியவில்லை. அதற்கான பதிலைத்தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதன் மூலமாகத் தேடுகிறேன்.

நான் காவிரி மண்ணில் வாழ்ந்தபோது என்னைக் காவிரியோ என் கூடவே இருந்த கடலோ கவரவில்லை. என்னைக் கவர்ந்தது எங்கள் மாவட்டத்திலேயே இல்லாத மலைகள்தான். தி.ஜானகிராமனை அப்போது எனக்குப் பிடிக்கவில்லை. அவர் எழுதிய காதல் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. ஒரு பெரிய சுற்று சுற்றிவிட்டு ஐம்பது வயதில்தான் தி.ஜானகிராமனிடமும் காவிரியிடமும் திரும்பினேன். தி.ஜா. எழுதியிருந்த காவிரியை அப்போதுதான் அனுபவித்தேன். ஆனால், ஒரு பார்வையாளனாக, ஒரு சுற்றுலாப் பயணியாக.  ஆம், ஐம்பது வயதில் என் மண்ணுக்கு நான் முற்றிலும் அந்நியனாகி இருந்தேன்.

இங்கே அசோகமித்திரனைப் பற்றிக் குறிப்பிட வேண்டும் என்று எண்ணுகிறேன். அசோகமித்திரனும் தஞ்சாவூர்க்காரர்தான். ஆனால், அதுபற்றி அவ்வளவாக யாருக்கும் தெரியாது.  காரணத்தை அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தஞ்சை மண்ணில் அவரது இளம்பருவத்தில் மிகக் கொடுமையான துன்பத்தையும் துயரத்தையும் பார்த்திருக்கிறார். அதனால் தஞ்சாவூரை நினைத்தாலே மனம் பீதி கொள்கிறது என்பதுபோல் சொல்கிறார். அவருடைய ‘இருவர்’ கதையைப் படித்தால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். 

நாகூரிலிருந்து சென்னைக்கு வேலை கிடைத்துக் கிளம்பும் வரை என் வீட்டில் வெளிச்சத்தையே பார்த்ததில்லை.  முடி பொசுக்கும் சிம்னி விளக்குகள்தான். எனக்காக விசேஷமாக மண்ணெண்ணெய் வாங்க காசு இருந்தால், சில தினங்களில் ஹரிக்கேன் லைட்டைக் கொடுப்பார்கள் அம்மா. வீட்டில் எட்டு உருப்படிகள். அத்தனை பேருக்குமான தண்ணீருக்காக அம்மா தெருக்கோடியில் இருந்த குழாயடியில் சக பெண்மணிகளோடு தரையில் உருண்டு புரண்டு சண்டை போடுவார்கள். மற்றவர்கள் கேட்டால் பயந்துவிடக் கூடிய அளவுக்கு நான் கெட்ட வார்த்தை பேசுவது அந்தக் குழாயடிச் சண்டையில் கிடைத்த பயிற்சியாக இருக்கலாம்.

என்னால் தஞ்சை மாவட்டத்துக்காரனாக எப்போதுமே உணர முடிந்ததில்லை. அந்த மண்தான் எனக்கு இசையையும் வாழ்வின் கொண்டாட்டத்தையும் கொடுத்தது என்றாலும் நான் உணர்ந்த உண்மையைச் சொல்ல வேண்டும் அல்லவா? அந்த இடத்திலிருந்தும் மண்ணிலிருந்தும் ஓடிவிட வேண்டும் என்ற உணர்வே எப்போதும் இருந்தது. இருபத்திரண்டு வயதுக்கு மேல் இருபத்தைந்து வரை தபால்காரர்தான் எனக்குக் கடவுளாகத் தெரிந்தார். வேலைக்கான உத்தரவைக் கொண்டுவரும் கடவுள். அல்லது, கடவுளின் தூதர். அதேபோல் ஒருநாள் கொண்டும் வந்தார்.  ஓடியே போய்விட்டேன் தில்லிக்கு!

ஏழ்மை, வறுமை, ஒதுக்குதல் இதையெல்லாம் தனிப்பட்ட கஷ்டங்களாக அல்லது வீட்டு கஷ்டங்களாகப் பார்ப்பதைத் தாண்டி எங்கோ சமூகரீதியான நிராகரிப்பையோ, அழுத்தத்தையோ எதிர்கொள்வோம் இல்லையா, அப்படியான தருணம் ஏதும் நினைவில் உள்ளதா?

நாகூருக்கு ஒருமுறை வந்த சங்கராச்சாரியார் எங்கள் தெருவுக்கு வரவில்லை. அது எனக்கு மிக ஆழமாக ஞாபகத்தில் இருக்கிறது. அது என்னை மிகவும் பாதித்த சம்பவமாகவும் இருந்தது.

(அடுத்த ஞாயிறு அன்று தொடர்ந்து பேசுவோம்...)

 

தொடர்புடைய கட்டுரைகள்

எழுத்தாளராவேன் என்று நினைத்ததே இல்லை: நோபல் விருதாளர் குர்னா பேட்டி
எழுத்துக் கலை: ஆர்வெல்லின் ஆறு விதிகள் 
கதையைக் கச்சிதமாக முடிக்க வேண்டிய தேவை இல்லை: லிடியா டேவிஸ் பேட்டி
சிறைகளில் ஏன் இவ்வளவு கைதிகள்? - பைப்பெர் கெர்மன் பேட்டி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


8

3





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Raja Narmi   1 year ago

சாரு என்ற எழுத்தாளன் எப்படி உருவானான், எப்படி வளர்ந்தான், ஒரு எழுத்தாளனாக அவன் பிடித்தங்களும், வெறுப்புகளும் என்னென்ன? ஒரு வட்டத்திற்குள் அடங்காமல் பரவலான தேடலோடு அவருடைய எழுத்துகளும், சிந்தனைகளும் வேகமாக, இளமையாக சுழன்று கொண்டே இருப்பது எப்படி? இது எல்லாவற்றிற்கும் பூரணமான விடைகளாக இந்த நேர்காணல் அமைந்திருக்கிறது. மிக மிக நேர்த்தியான, மனதிற்கு நெருக்கமான நேர்காணல். 💚

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    1 year ago

கேள்வி பதில் இரண்டுமே தீவிரமாக இருப்பதாகப் படுகிறது ... உண்மை தீவிரமாகத்தானே இருக்கும்..படிக்கிறவர் மனப்பான்மை விரிய வாய்ப்பிருக்கிறது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

K SERALATHAN    1 year ago

அருமை சாரு நிவேதிதா சார்

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வினோத் அதானிகாஷ்மீர் இந்துக்கள் படுகொலை‘சிப்கோ’ 50ஆம் ஆண்டு: தூற்றப்பட்ட பாரம்பரியம்பஞ்சாங்கக் கணிப்பு கல்லூரிகள்வேலை மாற்றம்வர்த்தகப் பற்றாக்குறைமஹாராஷ்டிரம்மொரொக்கோசமஸ் - விஜயகாந்த்கீர்த்தனைகால்சியம் சத்துபணமதிப்பு நீக்கம்கேப்டன் பிரபாகரன்சுற்றியடித்த வழக்குஅபத்த நாயகன்பாஇணையச் சேவைசெமி கன்டக்டர் தட்டுப்பாடுஆர்எஸ்எஸ்ஹிண்டென்பர்க் அறிக்கைமுகமது பின் பக்தியார் கில்ஜிநேரு கட்டுரைத் தொடர்வேலையில்லா பிரச்சினைதேர்தல் பத்திரங்கள்ஏஞ்சலா மெர்க்கல்வி.பி.சிங்: காலம் போடும் கோல்சத்துணவுசெந்தில் முருகன்ஓவியப் பாரம்பரியம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!